தப்புதண்டா செய்யமாட்டேனு சொல்ல தைரியம் வேணும்
“அப்பொழுது எனக்கு 15 வயதிருக்கும், நான் ஒரு கடையில் வேலை செய்துகொண்டிருந்தேன். என்னுடன் வேலைசெய்த பையன், அவனோட வீட்டுக்கு வரும்படி என்னை கூப்பிட்டான். ‘டேய், வீட்டுல எங்க அப்பா, அம்மா யாரும் இருக்கமாட்டாங்க. பொண்ணுங்க வரப்போராங்க. அவங்களோட ஜாலியா ‘அந்த விளையாட்டு’ விளையாடலாம்’ என்றான்” என்று தன் அனுபவத்தை கூறுகிறார் தீமோத்தேயு. இன்றைய இளைஞர்களுக்கு இதுபோன்ற அழைப்பு வந்த உடனே, சரியென்று தலையாட்டுவார்கள். ஆனால் தீமோத்தேயு ஒத்துக்கொண்டாரா? “ ‘நான் வரமாட்டேனு’ உடனே சொல்லிட்டேன். ‘இந்தமாதிரி நடந்துக்க என் கிறிஸ்தவ மனசாட்சியும் இடம் கொடுக்காது. அதோடு நா கட்டிக்கப்போறவளத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் ஏறெடுத்தும் பார்க்கமாட்டேன்” என்றார்.
தப்பு செய்ய தீமோத்தேயு மறுத்ததை அதே கடையில் வேலைபார்த்த பெண் கேட்டுக்கொண்டிருந்தாள். அதை தீமோத்தேயு அறியவில்லை. அவரது அப்பாவித்தனத்தை கண்டு அவளுக்கு அவர் மேல் ஆசை வந்தது. தன் வலையில் விழவைக்க அவள் எத்தனையோ முறை என்னென்னவோ செய்து பார்த்தாள். ஒரு தடவைக்கூட தீமோத்தேயு அவளது ஆசைக்கு அசைந்து கொடுக்கவே இல்லை. இதை நாம் பிறகு பார்க்கலாம்.
நம் காலத்தில் இதுபோல் ஆசை வார்த்தைகளால் குளிப்பாட்டி தப்புசெய்ய தூண்டுவது சகஜமாகிவிட்டது. சுமார் 3,000 வருடங்களுக்கு முன் சாலொமோன் ராஜா இவ்வாறு எழுதினார்: “பிள்ளாய்! தீயவர்கள் உன்னைக் கவர்ச்சியூட்டி இழுப்பார்கள்; நீ அவர்களுடன் போக இணங்காதே. . . . அவர்கள் செல்லும் பாதையில் அடிவைக்காதே.” (நீதிமொழிகள் 1:10, 15, பொது மொழிபெயர்ப்பு) இஸ்ரவேல் தேசத்தாருக்கு யெகோவா பின்வரும் கட்டளையைக் கொடுத்திருந்தார்: “கெடுமதிகொண்ட கும்பலைப் பின்பற்றாதே.” (யாத்திராகமம் [விடுதலைப் பயணம்] 23:2, பொ.மொ.) தப்புசெய்ய தூண்டும் சந்தர்ப்பங்கள் பல முறை வரலாம்; நாம் தப்பு செய்யாதிருந்தால் நம்மை வேற்று கிரகத்து மனிதர்களைப்போல் சமுதாயம் நோக்கலாம். ஆனாலும் தப்பு செய்ய மாட்டோம் என்று உறுதியாக சொல்வோமாக!
இன்றைய சூழலில் கண்டிப்பாக சொல்ல வேண்டும்
தப்புசெய்யும் சந்தர்ப்பத்தை தவிர்ப்பது அவ்வளவு சுலபம் அல்ல. அதுவும் இன்றைய சூழலில் ரொம்ப கஷ்டம். ஏனென்றால் நாம் வாழ்ந்துகொண்டிருப்பது “கடைசி நாட்கள்” என்று பைபிள் சொல்கிறது. அதாவது, இந்தக் கெட்ட உலகத்திற்கு அழிவு நெருங்கிக்கொண்டிருக்கும் காலத்தில் வாழ்கிறோம். பைபிள் தீர்க்கதரிசனம் ஒருநாளும் பொய்யானதில்லை. அது சொன்னதுபோல் இன்றைய மக்கள் இன்பம், இன்பம் என்று அலைகிறார்கள். வன்முறையைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஆன்மீக நெறிகளையும் ஒழுக்க நெறிகளையும் இவர்கள் சுத்தமாக மதிப்பது கிடையாது. (2 தீமோத்தேயு 3:1-5) “ஒருகாலத்தில் நமக்கென்று பாரம்பரியம், கட்டுப்பாடு எல்லாம் இருந்தன. அவற்றை [இன்று] கேள்வி கேட்கிறார்கள், குறை சொல்கிறார்கள் அல்லது இன்றைய ஃபேஷனுக்கு ஒத்துவராது என்கிறார்கள். இப்போதெல்லாம் ஒழுக்க நெறிகள் இருப்பதாகவே தெரியவில்லை” என்கிறார் ஜெஸுட் பல்கலைக் கழகத்தின் முதல்வர். இவரைப் போலவே சுப்ரீம் கோர்ட் நீதிபதியும் இவ்வாறு கூறினார்: “சரி எது, தப்பு எது என்ற வரம்பெல்லாம் இன்று மலையேறிவிட்டது. நல்லதும் கெட்டதும் கைகோர்த்துள்ளதால் மக்கள் குழம்பி கிடக்கிறார்கள் . . . நல்லதுக்கும் கெட்டதுக்கும் உள்ள வித்தியாசம் ஒருசிலருக்கே தெரிகிறது. இப்பொழுது, யாரும் பாவம் செய்ய பயப்படுவதாக தெரியவில்லை. எங்கே பிடிபட்டு விடுவோமோ என்றுதான் பயப்படுகிறார்கள்.”
இதுபோன்ற மனநிலையுடைய மக்களின் “மனம் இருளடைந்திருக்கிறது. அவர்களது பிடிவாத உள்ளத்தின் விளைவாய் ஏற்பட்ட அறியாமையின் காரணத்தால் அவர்கள் கடவுள் தரும் வாழ்வுக்குப் புறம்பானவர்களாக [விலகியே] இருக்கிறார்கள். அவர்கள் உள்ளம் மரத்துப்போய்ப் பேராசை கொண்டு, ஒழுக்கக்கேடான செயல்களில் எல்லாம் ஈடுபட்டுத் தங்களைக் காமவெறிக்கும் உட்படுத்தினார்கள்” என்று அப்போஸ்தன் பவுல் எழுதினார். (எபேசியர் 4:18, 19, பொ.மொ.) இப்படி ஒழுக்கம் கெட்டு வாழ்வதன் பலன் அவர்கள் கைமேல் காத்திருக்கிறது. ஏசாயா இவ்வாறு அறிவித்தார்: “தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும் சொல்லி, இருளை வெளிச்சமும், வெளிச்சத்தை இருளுமாகப் பாவித்து, . . . சாதிக்கிறவர்களுக்கு ஐயோ!” (ஏசாயா 5:20) வினை விதைத்த இவர்கள் வினையை அறுப்பதோடு, யெகோவாவின் மரணத்தீர்ப்பு—“ஐயோ!”—பேரழிவு காத்திருக்கிறது!—கலாத்தியர் 6:7.
“துன்மார்க்கர் புல்லைப்போலே தழைத்து, அக்கிரமக்காரர் யாவரும் செழிக்கும்போது, அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும்” என்று சங்கீதம் 92:7 சொல்கிறது. இதையே வேறுவிதமாக சொன்னால், அக்கிரமம் என்ற பயிர் இப்போது அமோக மகசூலை கொடுத்துக்கொண்டு, வாழ்க்கையை நாசம் செய்துக்கொண்டிருக்கிறது. ஆனால் அதிக காலம் நீடிக்காது. ஏனென்றால், அக்கிரமங்களை விதைத்துக் கொண்டிருக்கும் இன்றைய ‘சந்ததியை’ ‘மிகுந்த உபத்திரவத்தை’ கொண்டுவந்து கடவுள் அழிக்கப்போகிறார் என்று இயேசு கூறியிருக்கிறார். (மத்தேயு 24:3, 21, 34) அந்த உபத்திரவத்திலிருந்து நாம் தப்பிக்க வேண்டுமென்றால், கடவுளுடைய தராதரங்களின்படி எது சரி, எது தப்பு என்று தெரிந்திருப்பது அவசியம். அதோடு தப்புதண்டா செய்யும் வாய்ப்பு எந்த ரூபத்தில் வந்தாலும்சரி, அதை செய்ய மாட்டோம் என்று சொல்ல ஒழுக்கம் நிறைந்த மனம் வேண்டும். இதை செய்வது கஷ்டம்தான். ஆனால், அந்தக் காலத்திலும்சரி, இந்தக் காலத்திலும்சரி, தப்புதண்டா செய்ய துணியாத யெகோவாவின் ஊழியர்கள் வாழ்ந்திருக்கிறார்கள், வாழ்ந்தும் வருகிறார்கள். அவர்களுடைய முன் உதாரணங்கள் சிலவற்றை நம் முன் வைக்கிறார் நம் கடவுள் யெகோவா.
தப்பு செய்யமாட்டேன் என்ற இளைஞனிடமிருந்து பாடம்
விபச்சாரம், வேசித்தனம் செய்யும் வாய்ப்புகள் வரும்போது, செய்யமாட்டோம் என்று சொல்ல தயங்குகிறார்கள். கிறிஸ்தவ சபையில் இருக்கும் சிலரும் இந்த வலையில் மாட்டிக்கொள்கிறார்கள். இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட தீமோத்தேயு, யோசேப்பு என்ற பைபிள் கதாபாத்திரத்தை அப்படியே பின்பற்றினார். யோசேப்பை பற்றிய பதிவு வேதாகமத்தில் ஆதியாகமம் 39:1-12-ல் உள்ளது. எகிப்திய அதிகாரி போத்திபார். அவருடைய மனைவி யோசேப்பின் மேல் மோகம் கொண்டு, தன் மோகத்தை தணிக்கும்படி நச்சரித்துக் கொண்டிருந்தாள். அதற்கு யோசேப்பு “இணங்காமல், . . . நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி” என்று கேட்டதாக பதிவு சொல்கிறது. இதிலிருந்து அவர் எப்படிப்பட்ட ஒழுக்க சீலர் என்று தெரிகிறதா?
போத்திபாரின் மனைவி, தினம் தினம் நச்சரித்தும், தப்பு செய்ய மாட்டேன் என்று சொல்லும் அளவுக்கு யோசேப்பின் மனதில் ஒழுக்க நெறிகள் குடிகொண்டது எப்படி? முதலாவதாக, அவர் கணநேர சுகத்தை அல்ல. ஆனால் யெகோவாவோடு தனக்கிருக்கும் உறவையே பெரிதும் மதித்தார். அதோடு, கடவுளுடைய சட்டம் என்ற வேலியும் அவருக்கு இல்லை. (ஏனென்றால் அவர் காலத்திற்கு பிறகே மோசே மூலம் சட்டம் கொடுக்கப்பட்டது.) ஆனாலும்கூட ஒழுக்க நெறிகளைப் பற்றி தெளிவாக அறிந்திருந்தார். மோகம் கொண்டு அலைந்த போர்த்திபாரின் மனைவியோடு விபச்சாரம் செய்வது தப்பு; அப்படி செய்வது அவளுடைய கணவனுக்கு துரோகம் செய்வது மட்டுமல்ல, அது கடவுளுக்கே அடுக்காத பாவம் என்று அறிந்திருந்தார்.—ஆதியாகமம் 39:8, 9.
ஆசையை இலேசாக கிளறிவிட்டு வேடிக்கை பார்க்கும் ரகமும் அல்ல யோசேப்பு. காமம் என்ற அடங்காத தீயை கொழுந்துவிட்டு எறிய செய்வது ஆசை என்ற தீ குச்சியே என்பதை யோசேப்பு அறிந்திருந்தார் போலும். யோசேப்பின் உதாரணத்தை கடைபிடிக்கும் கிறிஸ்தவர் உண்மையில் புத்திசாலி! ஜூலை 1, 1957-ம் வருட ஆங்கில காவற்கோபுரம் இவ்வாறு சொன்னது: “ஒருவருக்கு தன் பலவீனங்கள் தெரிந்திருக்க வேண்டும். வேதாகமம் விதிக்கும் கட்டுப்பாட்டு எல்லை வரை, உடல் ‘ஆசைகளை’ வளர்த்துக்கொள்வதில் தப்பில்லை என்று தப்புக்கணக்குப் போடக்கூடாது. ஒருவேளை கொஞ்ச காலத்திற்கு வேண்டுமென்றால் அவர் அந்த எல்லையை மீறாமல் இருக்கலாம். ஆனால் விரைவிலேயே அவர் மெல்ல மெல்ல எல்லைக் கோட்டை தாண்டி, பாவத்தில் விழுந்து கிடப்பார். இது கண்டிப்பாக நடக்கும். ஏனென்றால் மோகம் என்னும் தீயில் மனம் வெந்து வெந்து உருகும். மோகத் தீயில் ஆசை-எண்ணெயை ஊற்றிவந்தால், அவரை சுட்டெரித்துவிடும். எனவே சிறந்த வழி, ஆசை என்ற தீப்பொறியை ஆரம்பத்திலேயே தண்ணீர் ஊற்றி அணைக்க வேண்டும்.”
நல்லதை தழுவிக்கொண்டு, கெட்டதை வெறுத்து ஒதுக்கினால், தப்பை முளையிலேயே கிள்ளியெறிவது சுலபம். (சங்கீதம் 37:27) இதற்காக நாம் முயன்றுகொண்டே இருக்க வேண்டும். மனதை தளரவிடக்கூடாது. இப்படி செய்தால், யெகோவாவின் உதவியால் நல்லதை இன்னும் இறுக்கமாக தழுவிக்கொண்டு, கெட்டதை அறவே வெறுத்து ஒதுக்குவோம். கூடவே, இயேசு சொன்னபடி, விழிப்போடு இருந்து, தப்பு செய்ய சோதனைகள் வந்தால், அதிலிருந்து விடுவிக்க உதவி கேட்டு, தீயோனிடமிருந்து காப்பாற்றச் சொல்லி இடைவிடாமல் ஜெபம் செய்வோமாக!—மத்தேயு 6:13; 1 தெசலோனிக்கேயர் 5:17.
நண்பன் சொன்னாலும் செய்ய மாட்டோம்
நண்பர்களை குஷிப்படுத்த தப்பு செய்ய வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்படுவோம். இளைஞன் ஒருவன் மனந்திறந்து கூறியது: “நான் பள்ளியில் ஒரு வேஷம், வீட்டில் ஒரு வேஷம் போடுகிறேன். இப்படி இரட்டை வாழ்க்கை வாழ்கிறேன். பள்ளிக்கூடத்தில் நான் பழகற பசங்க அவ்வளவு நல்லவங்க கிடையாது. அவர்கள் வாயை திறந்தாலே கெட்ட வார்த்தைகள். நானும் அவர்களை மாதிரியே மாறிக்கிட்டிருக்கிறேன். என்ன செய்யணும்னு தெரியல!” மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக இருக்க துணிவு வேண்டும். இதற்கு நாம், கடவுளுக்கு உண்மையோடு இருந்த யோசேப்பு போன்ற உத்தமர்களின் பதிவுகளை பைபிளில் படித்து, எப்படி அவர்களால் அப்படி நடந்துகொள்ள முடிந்தது என்பதை யோசித்து பார்க்க வேண்டும். தானியேல், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகிய நான்கு இளைஞர்களும் தங்கள் நண்பர்களிடமிருந்து வேறுபட தயங்கவில்லை. நமக்கு நல்ல உதாரணங்களாய் திகழ்கிறார்கள்.
பாபிலோன் அரசவையில் இருந்த மற்ற இளைஞர்களோடு சேர்த்து இவர்களுக்கும் கல்வி புகட்டப்பட்டது. அப்போது ‘அரசன் தான் உண்டுவந்த சிறப்புணவிலிருந்து . . . நாள்தோறும் ஒரு பங்கை’ அந்த நான்கு இஸ்ரவேல இளைஞர்கள் உண்ண வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. ஆனால் மோசேயின் நியாயப்பிரமாணத்தில் கொடுத்திருந்த உணவு கட்டுப்பாடுகளை மீற விரும்பாத அவர்கள், அதை வேண்டாம் என்றார்கள். அந்த உணவை, அதுவும் யாரையும் சுவைக்கத்தூண்டும் ‘அரசனின் சிறப்புணவை’ மறுக்க அவர்களுக்கு எவ்வளவு சுயக்கட்டுப்பாடும், தைரியமும் இருந்திருக்க வேண்டும்! இன்று, அளவுக்கு மீறி குடிக்க சொல்லி அல்லது போதைப் பொருளையோ, புகையிலை வஸ்துக்களையோ சாப்பிட சொல்லி ஆசைக்காட்டும் அல்லது வற்புறுத்தும் நண்பர்களிடம் மாட்டி தவிக்கும் கிறிஸ்தவர்களே கவலை வேண்டாம்! அன்று வாழ்ந்த அந்த நான்கு இளைஞர்களும் உங்களுக்கு சிறந்த உதாரண புருஷர்கள்.—தானியேல் 1:3-17, பொ.மொ.
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ வாழ்ந்த வாழ்க்கையைப் பார்க்கும்போது, “கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான்” என்று அவர்களுக்கு பிறகு வந்த இயேசு கூறிய வார்த்தைகளுக்கு இலக்கணமாய் வாழ்ந்திருப்பது தெரிகிறது. (லூக்கா 16:10) உணவு என்ற சிறிய விஷயத்தில்கூட தவறு செய்ய மாட்டோம் என்ற அவர்களது துணிவை யெகோவா ஆசீர்வதித்தார். அந்த ஆசீர்வாதமே, பிறகு வந்த பெரிய பெரிய சோதனைகளை வெல்ல அவர்களுக்கு மனவலிமையைத் தந்தது. (தானியேல் 1:18-20) உருவ வழிபாட்டு ரூபத்தில் அவர்களுக்கு பெரும் சோதனை வந்தது. தவறினால் தீயில் இட்டு பொசுக்கிட உத்தரவு. ஆனால் அந்த மூன்று இளைஞர்களும் துணிந்து நின்றார்கள். யெகோவாவை மட்டுமே வணங்குவோம் என்று உறுதிப்பூண்டு, முடிவை யெகோவாவின் கையில் விட்டுவிட்டு, அவரையே மனதார நம்பினார்கள். இம்முறை அனல் கக்கிய அக்கினி சூளையில் எறியப்பட்ட அவர்களை அற்புதகரமாக காப்பாற்றி, அவர்களது உத்தமத்தையும், துணிவையும் யெகோவா மறுபடியும் ஆசீர்வதித்தார்.—தானியேல் 3:1-30.
இப்படியாக, தப்புதண்டா செய்ய மாட்டோம் என்று துணிந்து கூறிய பலரின் உதாரணங்கள் பைபிளில் உண்டு. மோசே தன்னை, ‘பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்று’ சொல்ல மறுத்துவிட்டார். அவர் வாயைத்திறந்து, ‘மகன்’ என்று ஒரேயொரு வார்த்தை சொல்லியிருந்தால் போதும், எகிப்தில், “தற்காலிக பாவத்தில் இன்புறும்” வாய்ப்பு ஏராளமாக கிடைத்திருக்கும். ஆனால் அவர் அவ்வாறு சொல்லவில்லை. (எபிரேயர் 11:24-26, NW) சாமுவேல் தீர்க்கதரிசி லஞ்சம் வாங்கி, தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. (1 சாமுவேல் 12:3, 4) பிரசங்கிப்பதை நிறுத்தும்படி இயேசுவின் அப்போஸ்தலர்களுக்கு ஆணையிட்டார்கள். ஆனால் நிறுத்த மாட்டோம் என்று தைரியத்தோடு சொன்னார்கள். (அப்போஸ்தலர் 5:27-29) எந்த வகையான பாவத்தையும் செய்ய மாட்டேன் என்று இயேசு உறுதியோடு சொன்னார். அதை மரணம்வரை நிரூபித்தும் காட்டினார். அவர் சாகும் தருவாயில், “வெள்ளைப்போளம் கலந்த திராட்சரசத்தை” போர்வீரர்கள் குடிக்கக் கொடுத்ததை மறுத்துவிட்டார். மரணம்வரை கடவுளுக்கு தன் உத்தமத்தை நிரூபிக்க கிடைத்த அந்த நெருப்பு நிமிடங்களில், அதை குடித்திருந்தால் நிலைமை என்னவாயிருக்கும்? அவரது திடத்தீர்மானத்தை ஒருவேளை குலைத்திருக்குமே!—மாற்கு 15:23; மத்தேயு 4:1-10.
வாழ்வையும் சாவையும் தீர்மானிக்கும் சொல்—‘மாட்டேன்’
இயேசு கூறினார்: “இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள்; ஏனெனில் அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது; வழியும் விரிவானது; அதன் வழியே செல்வோர் பலர். வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது; வழியும் மிகக் குறுகலானது; இதைக் கண்டுபிடிப்போர் சிலரே.”—மத்தேயு 7:13, 14, பொ.மொ.
அகலமான வழி அதிக பிரபலமானது. ஏனென்றால் அதில் அவர்கள் இஷ்டப்படி செல்லலாம். அதில் பயணிக்கும் பயணிகள், ‘ஜாலி’யான பேர்வழிகள். எந்நாளும் உடல் சுகத்தையே நினைத்து, அதை அடையும் வழிகளை நாடுபவர்கள். சாத்தானுடைய உலகிலிருந்து வேறுபடுவதென்றால் இவர்களுக்கு வேப்பங்காய். ஆனால் அதனோடு ஒட்டி உறவாடுவதென்றால் இவர்களுக்கு கற்கண்டு. கடவுளுடைய சட்டங்களையும், நியமங்களையும் தடையாக கருதுகிறார்கள். அவை அவர்களை ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை வாழவிடாமல் கட்டிப்போடுவதாக நினைக்கிறார்கள். (எபேசியர் 4:17-19) ஆனால், அகலமான வழி “அழிவுக்குச் செல்லும்” என்று இயேசு திட்டவட்டமாய் சொன்னதில் எந்த மாற்றமும் இல்லை.
ஏன் ஒருசிலரே இடுக்கமான, அதாவது குறுகலான வழியில் செல்வர் என்று இயேசு சொன்னார்? ஏனென்றால், கடவுளுடைய சட்டங்களையும், நியமங்களையும் வாழ்க்கையில் பொருத்த ஒருசிலரே முன்வருகிறார்கள். அவற்றையே ஆயுதமாக கொண்டு, தப்பு செய்ய தூண்டுகிற சந்தர்ப்பங்களை தகர்த்தெறிகிறார்கள். மேலும், உடல் ஆசையை தணித்துக்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தால் வேண்டாம் என்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஒழுக்கம் கெட்ட நண்பர்கள் மத்தியில் ஒழுக்கத்தோடு வாழ நினைப்பவர்கள் சொற்பம். மற்றவர்கள் கேலி செய்தாலும் ஒழுக்கம் தவறமாட்டேன் என்போர் குறைவு.—1 பேதுரு 3:16; 4:4.
பாவம் செய்யாமல் இருப்பதென்றால் மனதுக்குள் பெரும் போராட்டமே நடக்கும் என்பதை அனுபவ வாயிலாக உணர்ந்தவர் பவுல். இவ்வுண்மையை இந்த சொற்ப எண்ணிக்கையினரும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். இன்றைய உலகை போலவே, அன்றைய ரோமர்கள் காலத்திலும், கிரேக்கர்கள் காலத்திலும் சர்வ சாதாரணமாக பாவம் செய்ய வாய்ப்புகள் இருந்தன. பாவம் என்ற கதவு எப்போதும் அகலமாக திறந்தே கிடந்தது. நன்மை எது என்பதை பவுல் மனதார அறிந்திருந்தாலும், அவருக்குள் இருந்த பாவச் சட்டத்திற்கு எதிராக ‘போராடிக்கொண்டே’ இருந்தாராம். (ரோமர் 7:21-24, பொ.மொ.) தன்னுடைய சரீரம் நல்ல வேலைக்காரனாக இருக்கும். ஆனால், அதிகாரம் தந்தால் கெட்ட எஜமானாக நிரூபிக்கும் என்பதை அவர் நன்றாக அறிந்துகொண்டார். ஆகவே அந்த எஜமான் இட்ட கட்டளைகளுக்கு, அடிப்பணியக் கூடாது என்பதை கற்றுக்கொண்டார். எனவேதான், “என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்” என்று பவுல் எழுதினார். (1 கொரிந்தியர் 9:27) சரி, அவரால் எப்படி சரீரத்தை ஒடுக்க முடிந்தது? கண்டிப்பாக அவரது சுய பலத்தால் செய்திருக்க முடியாது. ஏனென்றால் அது அவ்வளவு சுலபம் அல்ல. ஆனால் கடவுளுடைய ஆவியின் உதவியால் அதை அடக்கி ஆண்டார்.—ரோமர் 8:9-11.
அதனால்தான் பவுலுக்கு சில பலவீனங்கள் இருந்தாலும், மரணம்வரை யெகோவாவுக்கு உத்தமத்தோடு இருக்க முடிந்தது. மரணத்திற்கு சற்று முன் அவர் மொழிந்த வார்த்தைகள் இதோ: “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது.”—2 தீமோத்தேயு 4:7, 8.
சொந்த பலவீனங்களை எதிர்த்து போராடவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கும் நமக்கு பவுலின் உதாரணம் மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது. பவுலின் உதாரணம் மட்டும் அல்ல, யோசேப்பு, மோசே, தானியேல், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்று உதாரணங்களின் பட்டியல் நீளுகிறது. இந்த உதாரண புருஷர்கள் குறைபாடு உள்ளவர்களாக இருந்தும், தப்பு செய்யவே மாட்டோம் என்று துணிந்து சொன்னதற்கு காரணம் அவர்களது பிடிவாதமோ அகம்பாவமோ அல்ல. ஆனால் கடவுளுடைய ஆவி அவர்களுக்கு தந்த பலத்தால் அவ்வாறு சொன்னார்கள். (கலாத்தியர் 5:22, 23) அவர்கள் ஆன்மீகத்தில் நாட்டம் உள்ளவர்கள். யெகோவாவின் வாயிலிருந்து உதிரும் ஒவ்வொரு வார்த்தைக்காகவும் காத்துக் கிடந்தார்கள். (உபாகமம் 8:3) கடவுளுடைய வார்த்தைகளே அவர்களது உயிர்மூச்சு. (உபாகமம் 32:47) எல்லாவற்றையும்விட, அவர்கள் யெகோவாவை நேசித்தார்கள். தெய்வ பயத்தை காட்டினார்கள். கடவுளுடைய உதவியால், தப்பான செயல்களை மெல்ல மெல்ல வெறுக்க கற்றுக்கொண்டார்கள்.—சங்கீதம் 97:10, நீதிமொழிகள் 1:7.
நாமும் அவர்களைப் போல் இருப்போமாக! தப்பு செய்யும் வாய்ப்பு எந்த ரூபத்தில் வந்தாலும்சரி, அவற்றை செய்ய மாட்டோம் என்று எப்போதும் சொல்வோமாக. இதற்கு யெகோவாவின் ஆவி மிக அவசியம். யெகோவாவின் ஆவியை நாம் உருக்கமாக கேட்டால், அவரும் வஞ்சனையின்றி தாராளமாக அருள்வார். அவருடைய வார்த்தையை படியுங்கள். கிறிஸ்தவ கூட்டங்களுக்கு தொடர்ந்து செல்லுங்கள்.—சங்கீதம் 119.105; லூக்கா 11:13; எபிரெயர் 10:24, 25.
நாம் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட தீமோத்தேயு தன் ஆன்மீக தேவைகளை புறக்கணிக்காததற்காக பெருமைப்படுகிறார். இவருடைய உரையாடலை ஒட்டுக்கேட்ட அந்தப் பெண் ஊழியர், தீமோத்தேயுவின் அப்பாவித்தனத்தைக் கண்டு தவறான ஆசையை வளர்த்துக்கொண்டாள். தன் கணவன் இல்லாத நேரமாக பார்த்து, தீமோத்தேயுவை தன் வீட்டிற்கு நைசாக அழைத்தாள். அதற்கு தீமோத்தேயு சம்மதிக்கவில்லை. பிரச்சினை அதோடு முடிந்துவிடவில்லை. போர்த்திபாரின் மனைவியைப் போலவே இப்பெண்ணும் தீமோத்தேயுவுக்கு அடிக்கடி வலைவீசி பார்த்தாள். அத்தனை முறையும் தப்பே செய்ய மாட்டேன் என்று தீமோத்தேயு உறுதியோடு ஆனால் பணிவோடு சொன்னார். சொன்னது மட்டுமின்றி, அந்தப் பெண்ணுக்கு கடவுளுடைய வார்த்தையிலிருந்து ஏன் அவ்வாறு செய்வது தப்பு என்பதையும் எடுத்துரைத்தார். தப்பு செய்ய மாட்டேன் என்று சொல்லும் அளவுக்கு ஒழுக்கத்தை காத்திடும் மன உறுதியை யெகோவா தீமோத்தேயுவுக்கு தந்தார். அதற்காக தனது ஆழ்ந்த நன்றியை கடவுளுக்கு தெரிவிக்கிறார். இன்று, உடன் கிறிஸ்வ பெண்களில் தன் மனதுக்கு பிடித்த நல்ல பெண்ணை மணம் முடித்து, மகிழ்ச்சியான மணவாழ்க்கையை அனுபவித்து மகிழ்கிறார் தீமோத்தேயு. மறந்துவிடவேண்டாம்! தப்பு செய்ய மறுப்பு தெரிவித்து, தங்கள் கிறிஸ்தவ உத்தமத்தை காத்துக்கொள்ள விரும்பும் எல்லாருக்கும் யெகோவா மன வலிமையை அளிக்கிறார். அவர்களை ஆசீர்வதிக்கிறார்.—சங்கீதம் 1:1-3.