மரணமில்லாத பூமி—மலர்வது சாத்தியமா?
மரணத்தை வேட்டையாடி ஒரேடியாக ஒழித்துக்கட்ட மனிதன் எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சிகள் என்றாவது வெற்றிபெற்று, மரண வாசமில்லாத புதிய ஆயிரமாண்டில் கால்பதிக்க நம்பிக்கையோடு சிலர் காத்திருக்கின்றனர். அப்படி காத்திருப்பவர்களில் டாக்டர் ரோனால்ட் க்ளாட்ஸும் ஒருவர். இவர் முதுமை தடுப்பு மருத்துவத்தின் அமெரிக்க அகாடமி பிரெஸிடென்ட். இந்த அகாடமி மனிதனுடைய ஆயுட்காலத்தை அதிகரிப்பதற்காக தங்களையே அர்ப்பணித்திருக்கும் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் அமைப்பு. அவரும் அவருடன் பணிபுரிபவர்களும் நீண்ட காலம் வாழ திட்டமிடுகிறார்கள். “நான் குறைந்தபட்சம் 130 வருடங்கள் வாழ வேண்டும் என எதிர்பார்க்கிறேன். முதுமை தவிர்க்க முடியாததல்ல என நாங்கள் நம்புகிறோம். உடல் நலிவுறுதல் மற்றும் வியாதியின் காரணமாக இயற்கையாக முதுமையடைதல் என அழைக்கப்படுவதையும் இப்போது இருக்கும் விஞ்ஞான தொழில்நுட்பம் மெது மெதுவாக குறைத்து, கடைசியில் அதை நிறுத்திவிடும், பிறகு அது இருந்த இடமே தெரியாமல் செய்துவிடும்” என டாக்டர் கிளாட்ஸ் கூறுகிறார். ஆயுசுநாட்களை நீட்டிக்கும் பேராவலில் டாக்டர் கிளாட்ஸ் தாமே ஒவ்வொரு நாளும் சளைக்காமல் சுமார் 60 மாத்திரைகளை விழுங்குகிறார்.
ஹார்மோன் மருத்துவமும் மரபியலும்—நம்பிக்கையளிக்கிறதா?
ஹார்மோன் மருத்துவம் என்பது நம்பிக்கையை தூண்டும் ஒரு துறை. DHEA (dehydroepiandrosterone) என்ற ஹார்மோனை வைத்து ஆய்வுக்கூட விலங்கினங்களை பரிசோதனை செய்ததில் அவை முதுமையடைவது தாமதமாவதாக தோன்றுகிறதென கண்டறியப்பட்டுள்ளது.
கைனடீன் என்பது தாவர ஹார்மோன். இது சம்பந்தமாக, டென்மார்க்கிலுள்ள ஆர்ஹூஸ் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் சுரேஷ் ராத்தான் பின்வருமாறு சொன்னதாக ஆஃப்டான்பிளாடெட் என்ற ஸ்வீடன் நாட்டு செய்தித்தாள் குறிப்பிட்டது: “கைனடீனில் விருத்தி செய்யப்படும் மனித தோல் செல்கள் வயதிற்கேற்றவாறு மாறுவதில்லை என்பதை எங்களுடைய ஆய்வுக்கூட பரிசோதனைகள் காட்டுகின்றன. அவை வாழ்நாள் முழுவதும் அப்படியே இளமையாகவே இருக்கின்றன.” இவ்வகை ஹார்மோன்களால் பரிசோதனை செய்யப்பட்ட பூச்சிகள் 30-லிருந்து 45 சதவீதம் எப்போதையும்விட கூடுதலாக வாழ்வதாக சொல்லப்படுகிறது.
மெலடோனின் சிகிச்சை முறைகளால் எலிகளின் ஆயுட்காலம் 25 சதவீதம் கூடியுள்ளதென சொல்லப்படுகிறது. மேலும், அந்த எலிகள் இளமையோடு ஆரோக்கியமாக துறுதுறுவென்று துள்ளிக்கொண்டிருந்தன.
இது பளபளப்பான மேனியையும் கட்டுடலையும் வீரியத்தையும் உற்சாகத்தையும் அறிவுக்கூர்மையையும் இளமைத் துடிப்பையும் அள்ளி வழங்குகிறது என மனித வளர்ச்சிக்கான ஹார்மோனை (hGH) பரிந்துரைப்பவர்கள் கூறுகிறார்கள்.
அநேகர் மரபியலையும் எதிர்நோக்கியிருக்கிறார்கள். ஜீன்களை திறம்பட கையாளுவதன்மூலம் நெமட்டோட் அல்லது உருண்டை புழுவின் ஆயுட்காலத்தை அவர்களால் கட்டுப்படுத்த முடியும் என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உண்மையிலேயே அவற்றின் சராசரி ஆயுசு காலத்தைவிட ஆறு மடங்கு அதிகரித்து வெற்றிக்களிப்பில் ஆர்ப்பரித்திருக்கின்றனர். இது மனிதர்களிலும் அதே ஜீன்களை கண்டுபிடித்து திறம்பட மாற்றியமைப்பதற்கான நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது. மான்ட்ரியலிலுள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஸிக்ஃபிரீட் ஹெமீகீ இவ்வாறு கூறுவதாக டைம் பத்திரிகை குறிப்பிட்டது: “மனிதனின் ஆயுள் சக்கரத்தை தீர்மானிக்கும் எல்லா ஜீன்களையும் நாங்கள் கண்டுபிடிப்போமானால், ஒருவேளை அந்த ஜீன்களின் செயல்பாட்டை தாமதப்படுத்தி எங்களால் மனிதர்களின் வாழ்நாட்களையும் கூட்ட முடியும்.”
குரோமசோம்களின் கடைசி பாகம் டெலோமியர் என அழைக்கப்படுகிறது. இது ஒவ்வொரு முறையும் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்கையில் இப்பாகம் குறுகுகிறது என்பது உயிரியலாளர்கள் வெகு நாட்களாக அறிந்ததே. இப்படியாக, டெலோமியர் தன் நீளத்தில் சுமார் 20 சதவீதத்தை இழக்கையில் செல்லின் புதுப்பிக்கும் திறமை முடிந்து இறந்துவிடுகிறது. டெலோமியரேஸ் என அழைக்கப்படும் ஒரு குறிப்பிட்ட என்ஸைம், டெலோமியரை அதன் முழு அளவிற்கு புதுப்பித்து, அது தொடர்ந்து பிரிவதை சாத்தியமாக்குகிறது. பெரும்பாலான செல்களில் இந்த என்ஸைம் அடங்கி ஒடுங்கி செயலிழந்து காணப்படுகிறது. ஆனால் சில செல்களில் செயல்திறமிக்க டெலோமியரேஸ் வெற்றிகரமாக உட்புகுத்தப்பட்டு அவை வளரவும் வழக்கமான எண்ணிக்கையைவிட அதிகமாக பிரிவுறவும் செய்யப்பட்டிருக்கிறது.
முதுமையில் ஏற்படும் நோய்களை ஒழித்துக்கட்டுவதற்கான சாத்தியங்களுக்கு இது வழிவகுத்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். செயல்திறமிக்க டெலோமியரேஸால் “சிரஞ்சீவியாக” ஆக்கப்பட்டிருக்கும் ஸ்டெம் செல்கள் (உடலில் திசுக்களை உற்பத்தி செய்ய உதவும் செல்கள்) உடலின் மற்ற ஸ்டெம் செல்களால் மாற்றீடு செய்யப்படுவதைப் பற்றியென்ன? டாக்டர் வில்லியம் ஏ. ஹாஸல்டின் கூறுகிறார்: “இது மனித சாவாமைக்கு அளிக்கப்பட்ட தெளிவான கருத்து. அடுத்த 50 வருடங்களில் மெதுவாக இது அறிமுகப்படுத்தப்படும்.”—த நியூ யார்க் டைம்ஸ்.
நானோடெக்னாலஜி, க்ரையானிக்ஸ் பதிலளிக்குமா?
நானோடெக்னாலஜியும் நம்பிக்கையை தூண்டுகிறது. இது, நானோமீட்டர் அல்லது நீள அளவை முறையை (அதாவது, ஒரு மீட்டரில் நூறு கோடியில் ஒரு பங்கு) பயன்படுத்தும் பொறியியல் விஞ்ஞானம். கம்பியூட்டர்களால் இயக்கப்படும் மூலக்கூறு மெஷின்கள் வருங்காலத்தில் வடிவமைக்கப்படலாம் என அதிக கனவுகளுடன் இத்துறையில் ஈடுபடுவோர் கூறுகிறார்கள். செல்களைவிட மிகவும் சிறிய இந்த மெஷின்கள், முதுமையடையும் செல்களையும் திசுக்களையும் உடலுறுப்புகளையும் மூலக்கூறு நிலையிலேயே பழுதுபார்த்து மறுபடியும் செயல்பட வைக்கும் என நம்புகிறார்கள். மனிதன் உடல்ரீதியில் சாவாமை அடைவதை சாத்தியமாக்க 21-ம் நூற்றாண்டு மருத்துவர்கள் நானோடெக்னாலஜியை பயன்படுத்தக்கூடும் என்று முதுமை ஒழிப்பு மாநாட்டில் ஆராய்ச்சியாளர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.
க்ரையானிக்ஸ் என்பது இறந்த செல்களை புதுப்பித்து மறுபடியும் உயிரடையச் செய்வதை விஞ்ஞானம் சாத்தியமாக்கும் என்ற நம்பிக்கையில் மனித உடல்களை உறைய வைக்கும் ஒரு முறை. முழு உடலை அல்லது மூளையை மட்டும் உறைய வைக்கலாம். ஒரு மனிதன் ஒரு போர்வையை உறைய வைக்கக் கொடுத்தார். ஏன் போர்வையை? அது காணாமல் போன நண்பனுடையது, அதில் அந்த நண்பனுடைய சில தோல் செல்களும் முடிகளும் இருந்தன. சில செல்களை அல்லது ஒரேவொரு செல்லை வைத்தே மனிதரை திரும்பவும் வடிவமைக்கும் நிலையை விஞ்ஞானம் அடைந்தால், தன் நண்பனை மறுபடியும் உயிருக்குக் கொண்டுவரும் நோக்கத்தோடு அவற்றை உறைய வைக்க அவர் விரும்பினார்!
நாம் எதில் நம்பிக்கை வைக்க வேண்டும்?
இயல்பாகவே, மனிதன் சாவதற்கல்ல வாழ்வதற்கே ஆசைப்படுகிறான். ஆகவே, இந்தத் துறையில் விஞ்ஞான முன்னேற்றம் உடனடியாக வரவேற்கப்படுகிறது, அதோடு அதிக எதிர்பார்ப்புகளுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. ஆனால், DHEA, கைனடீன், மெலடோனின், hGH, அல்லது வேறெந்த பொருளோ மனிதர்கள் முதுமையடைவதை உண்மையிலேயே தடை செய்ய முடியும் என்பதற்கு இதுவரை நம்பத்தக்க அத்தாட்சி எதுவுமே இல்லை. செல்களில் டெலோமியரேஸை மாற்றியமைப்பது நன்மையளிப்பதற்கு பதிலாக புற்றுநோய் செல்களை உருவாக்கும் வாய்ப்பிருப்பதாக சந்தேகவாதிகள் பயப்படுகிறார்கள். நானோடெக்னாலஜியும் க்ரையானிக்ஸின் உபயோகமும் மெய்மைக்கு மாறாக ஒரு விஞ்ஞான கட்டுக்கதையாகவே இன்னும் இருக்கிறது.
விஞ்ஞானம் சிலருக்கு நீடித்த, ஆரோக்கியமான வாழ்வையும் அளித்திருக்கிறது, இன்னும் அளிக்கலாம். ஆனால் எவருக்குமே மரணமில்லாத வாழ்வை அளிக்க முடியாது. ஏன்? சுருக்கமாக சொல்லப்போனால், முதுமைக்கும் மரணத்திற்கும் மூலகாரணம் மனித விஞ்ஞான அறிவுக்கு அப்பாற்பட்டது.
முதுமைக்கும் மரணத்திற்கும் மூலகாரணம்
முதுமையும் மரணமும் நம்முடைய ஜீன்களில் எப்படியோ திட்டமிடப்பட்டுள்ளதுபோல் தோன்றுவதை பெரும்பாலான விஞ்ஞானிகள் ஒத்துக்கொள்கிறார்கள். கேள்வியானது: எப்பொழுது, எப்படி, ஏன் அவை நம்முடைய மரபு குறியீட்டிற்குள் நுழைந்தன?
மரபியல் அல்லது டிஎன்ஏ என்ற சொற்களில் குறிப்பிடப்படவில்லை என்றாலும், பைபிள் நமக்கு எளிய விடையை தருகிறது. ரோமர் 5:12 இவ்வாறு வாசிக்கிறது: “இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது போலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்தது போலவும் இதுவுமாயிற்று.”
முதல் மனிதனாகிய ஆதாம் என்றென்றும் வாழும் எதிர்பார்ப்பை பெற்றிருந்தான். நித்திய காலமாக வாழ்ந்து ஜீவனை மகிழ்ந்து அனுபவிப்பதற்கு தேவையான நுட்பத் திறமைகளோடு அவனுடைய உடல் வடிவமைக்கப்பட்டது. இருந்தாலும் நித்திய ஜீவன் நிபந்தனைக்குட்பட்டதாய் இருந்தது. ஆதாம் தன் ஜீவனை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள ஜீவ ஊற்றாகிய படைப்பாளருக்குக் கீழ்ப்படிந்து உடன் ஒத்துழைக்க வேண்டியிருந்தது.—ஆதியாகமம் 1:31; 2:15- 17.
ஆதாம் படைப்பாளருக்கு கீழ்ப்படியாமற்போவதை தெரிந்து கொண்டான். சொல்லப்போனால், கடவுளுடைய உதவியின்றி தானாகவே மேம்பட்ட முறையில் ஆண்டுகொள்ள முடியும் என ஆதாம் உரிமைபாராட்டினான். இவ்வாறாக அவன் பாவம் செய்தான். அதுமுதற்கொண்டு அவனுடைய மரபுக் குறியீடு மாற்றப்பட்டது போலாயிற்று. என்றென்றும் வாழும் வாய்ப்பை தன் சந்ததியினருக்குக் கடத்துவதற்குப் பதிலாக ஆதாம் பாவத்தையும் மரணத்தையும் கடத்தினான்.—ஆதியாகமம் 3:6, 19; ரோமர் 6:23.
உண்மையான நம்பிக்கை
என்றாலும், இந்தச் சூழ்நிலை நிரந்தரமானதல்ல. ரோமர் 8:20, 21 சொல்கிறது: “நம்பிக்கையோடே, அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.” தமக்கு எதிராக பாவம் செய்ததால் படைப்பாளராகிய யெகோவா தேவன் மனிதரை மரணத்திற்கு அடிமையாக ஒப்புக்கொடுத்தார். ஆனால் இப்படி செய்கையில் அதிலிருந்து வெளியேறும் நம்பிக்கைக்கான ஆதாரத்தையும் திறந்துவைத்தார்.
இயேசு பூமிக்கு வந்தபோது இந்த ஆதாரம் தெளிவாக அடையாளம் கண்டுகொள்ளப்பட்டது. யோவான் 3:16 இவ்வாறு கூறுகிறது: “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” இருப்பினும், இயேசுவில் விசுவாசம் வைப்பது எப்படி நம்மை மரணத்திலிருந்து பாதுகாக்க முடியும்?
பாவமே மரணத்திற்குக் காரணமாயிருந்தால், மரணம் ஒழிக்கப்படுவதற்கு முன்னால் பாவம் நீக்கப்பட வேண்டும். இயேசுவினுடைய ஊழியத்தின் ஆரம்பத்தில் முழுக்காட்டுபவனாகிய யோவான் இவ்வாறு சொன்னார்: “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி!” (யோவான் 1:29) இயேசு முழுமையாக பாவமற்றவராக இருந்தார். ஆகவே, பாவத்திற்கு தண்டனையான மரணத்திற்கு அவர் கீழ்ப்பட்டவரல்ல. இருந்தாலும், மற்றவர்கள் தம்மை கொலை செய்ய அனுமதித்தார். ஏன்? ஏனென்றால் அப்படி செய்ததால் நம்முடைய பாவங்களுக்கான விலையை செலுத்தினார்.—மத்தேயு 20:28; 1 பேதுரு 3:18.
அவர் அந்த விலையை செலுத்தியதால், ஒருபோதும் மரிக்காமல் வாழும் சாத்தியம் இயேசுவில் விசுவாசம் வைக்கும் அனைவருக்கும் முன்பாக நீட்டப்பட்டது. விஞ்ஞானம் நம்முடைய வாழ்க்கையை சொற்ப காலத்திற்கு மட்டுமே நீடிக்கச் செய்யலாம், ஆனால் இயேசுவில் விசுவாசம் வைப்பதே என்றென்றும் வாழ்வதற்கான மெய்யான வழி. பரலோகத்தில் அப்படிப்பட்ட வாழ்க்கையை இயேசு பெற்றார். உண்மையுள்ள அப்போஸ்தலரும் வேறு சிலரும்கூட அதை பெறுவார்கள். இருந்தாலும், இயேசுவில் விசுவாசம் வைக்கும் நம்மில் அநேகருக்கு, யெகோவா தேவன் பூமிக்குரிய பரதீஸை திரும்ப நிலைநாட்டுகையில் நித்திய ஜீவன் பூமியில் கிடைக்கும்.—ஏசாயா 25:8; 1 கொரிந்தியர் 15:48, 49; 2 கொரிந்தியர் 5:1.
பரதீஸிய பூமியில் என்றென்றும் வாழ்க்கை
ஒருவர் இவ்வாறு கேட்டார்: “இனி சாகவே வேண்டாம் என்றால் எத்தனை பேர் வாழ்க்கையை மதிப்புள்ளதாக கருதுவார்கள்?” மரணமில்லா வாழ்க்கை சலிப்பூட்டுமா? அப்படி இருக்காது என பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது. “அவர் சகலத்தையும் அதினதன் காலத்திலே நேர்த்தியாக செய்திருக்கிறார்; நித்தியகால நினைவையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் கடவுள் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனிதன் கண்டுபிடியான்.” (பிரசங்கி 3:11, NW) யெகோவா தேவனுடைய படைப்புகள் ஏராளம், சிக்கலானவை, அறிய வேண்டுமென்ற நம் ஆவலை அது தொடர்ந்து தூண்டும், நம்மை கிளர்ச்சியூட்டும், நாம் வாழும்வரை—ஆம், என்றென்றும்—நம்மை மகிழ்ச்சியடையச் செய்யும்.
சைபீரியன் ஜேய் என அறியப்படும் பறவையைப் பற்றி ஆராய்ந்த ஒருவர் அதை “நன்கு அறிமுகமான, மிகவும் மகிழ்ச்சியூட்டும் தனித்தன்மைமிக்க ஓர் பறவை” என அழைத்தார். மேலும், அந்தப் பறவையின் ஒவ்வொரு அசைவையும் ஆராய்வது அவருடைய வாழ்க்கையின் மிக சந்தோஷமான அனுபவங்களில் ஒன்று என்பதாக கூறினார். அந்தப் பறவையைப் பற்றி எந்தளவுக்கு ஆராய்ந்தாரோ அந்தளவுக்கு அதிகமாக அறிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவலையும் தூண்டுவதை கண்டார். 18 வருடங்களுக்குப் பின்பும்கூட அவருடைய ஆராய்ச்சி முடிவடையாத ஒன்றாகவே இருக்கிறதென அவர் சொன்னார். ஆயிரக்கணக்கான பறவை இனங்களில் ஓர் இனத்தை ஆராய்ந்ததே மேலும் அறியவேண்டுமென்ற ஆவலை தூண்டியது. அந்த 18 வருடகால ஆராய்ச்சியின்போது புத்திக்கூர்மையுள்ள ஒரு மனிதனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறதென்றால், பூமிக்குரிய எல்லா படைப்புகளையும் ஆராய்வதில் கிடைக்கும் ஆனந்தத்தையும் திருப்தியையும் சற்று கற்பனை செய்து பாருங்கள்.
காலத்தால் கட்டுப்படுத்தப்படாத ஒருவருக்கு அக்கறையைத் தூண்டும் எல்லா துறைகளையும் ஆராய விஞ்ஞானம் திறந்து வைக்கும் வாய்ப்பை மனக்கண்முன் கொண்டுவாருங்கள். மனதைக் கவரும் இடங்களுக்கு ஆய்வுப் பயணம் மேற்கொள்வதையும் வித்தியாசமான மக்கள் அனைவரையும் சந்திக்கப் போவதையும் சிந்தித்துப் பாருங்கள். உங்கள் கற்பனா சக்தியை பயன்படுத்தி, அநேக காரியங்களை உருவாக்குவதற்கும் நிர்மாணிப்பதற்கும் இருக்கும் முடிவில்லா சாத்தியங்களை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். நம்முடைய கற்பனை வளத்தை விருத்தி செய்வதற்கும் நன்கு பயன்படுத்திக்கொள்வதற்கும் இருக்கும் சந்தர்ப்பங்களுக்கு எல்லையே இல்லை. பரந்து விரிந்து காணப்படும் படைப்பு கடலில் மூழ்கி ஆராய்கையில் நித்தியத்துவம் என்பது வாழ்க்கையில் செய்யமுடிகிற எல்லாவற்றையும் நிறைவேற்றுவதற்கு அளிக்கப்படும் போதுமான காலப்பகுதியே என்பதும் தெளிவாகும்.
மாண்டுகிடக்கும் மனிதவர்க்கம் மறுபடியும் எழ உயிர்த்தெழுதல் கைகொடுக்கும் என பைபிள் காட்டுகிறது. (யோவான் 5:28, 29) சரித்திரத்தின் புலப்படாத அநேக புதிர்களுக்கான விடைகளை அறிந்தவர்கள் அவற்றை நமக்கு விலாவாரியாக விளக்குகையில், அவை அனைத்தும் தெள்ளத் தெளிவாகும். அதோடு, நம் கேள்விகள் அனைத்திற்கும் பதிலும் கிடைக்கும். சரித்திரத்தின் வித்தியாசப்பட்ட காலப்பகுதியைப் பற்றிய தகவல்களை உயிர்த்தெழுந்தவர்களோடு உரையாடுவதை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.—அப்போஸ்தலர் 24:15
அந்தக் காலத்தை ஆழ்ந்து சிந்திக்கையில், யோபு 14:1-ல் (பொ.மொ.) காணப்படும் கூற்றை உயிர்த்தெழுப்பப்பட்ட யோபு திருத்தியமைக்க விரும்புவதை நீங்கள் புரிந்துகொள்ளலாம். ஒருவேளை அதற்கு பதிலாக அவர் இவ்வாறு கருத்து சொல்லலாம்: ‘பெண்ணிடம் பிறந்த மனிதருக்கு இப்போது வாழ்நாளோ நித்தியம்; மனநிறைவோ மிகுதி.’
யெகோவாவில் நம்பிக்கை வைத்து இயேசுவில் விசுவாசம் காட்டுவோருக்கு காலத்தின் எல்லைகளைக் கடந்து நீண்ட காலம் வாழ்வது வெறும் கலைந்துபோன ஒரு கனவாக இராது. அது சீக்கிரத்தில் நிறைவேற்றமடையும். முதுமையும் மரணமும் ஒழிந்துவிடும். இது சங்கீதம் 68:20-க்கு (திருத்திய மொழிபெயர்ப்பு) ஒப்பாக இருக்கிறது, அது இவ்வாறு வாசிக்கிறது: “மரணத்திற்குத் தப்புவிக்கிற வழிகள் ஆண்டவராகிய யெகோவாவில் உண்டு.”—வெளிப்படுத்துதல் 21:3, 4.
[பக்கம் 4, 5-ன் படங்கள்]
விஞ்ஞான முன்னேற்றம் மரணத்தை கொஞ்சம் ஒத்திவைக்கிறது
[பக்கம் 7-ன் படம்]
வாழ்க்கையில் அனைத்தையும் சாதிக்க அளிக்கப்படும் போதுமான காலப்பகுதியே நித்தியத்துவம்