உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w99 10/15 பக். 28-31
  • பைபிள் பிரியரை மகிழ்வித்த சாதனை!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பைபிள் பிரியரை மகிழ்வித்த சாதனை!
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • புதிய மொழிபெயர்ப்பு தேவையா?
  • தனிச் சிறப்பியல்புகள்
  • கடவுளுடைய பெயரை மீண்டும் உபயோகித்தல்
  • ஆங்கிலம் அறியாதோரையும் ஆட்கொள்கிறது
  • புதிய உலக மொழிபெயர்ப்பு உலகெங்கிலும் கோடிக்கணக்கானோரால் பாராட்டப்படுகிறது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • புதிய உலக மொழிபெயர்ப்பு
    வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல்
  • மனதைத் தொடும் ஒரு பைபிள் மொழிபெயர்ப்பு
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
  • ஆராய்ச்சி எண் 8—“புதிய உலக மொழிபெயர்ப்பின்” நற்பயன்கள்
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
w99 10/15 பக். 28-31

பைபிள் பிரியரை மகிழ்வித்த சாதனை!

பைபிள் பிரியர் அனைவரையும் மகிழ்வித்து ஓர் அரிய சாதனை படைத்த வருடம் 1998. பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்) பைபிள் பிரதிகளின் அச்சடிப்பில் 10 கோடி என்ற எண்ணிக்கையைப் பூர்த்தி செய்த பிரதி அந்த வருடத்தில் வெளிவந்தது. இவ்வாறு அது, இந்நூற்றாண்டிலே எங்கும் பெருமளவு விநியோகிக்கப்பட்ட பைபிள்களில் ஒன்று என்ற பெயரைத் தட்டிச்சென்றது!

அது வெளியிடப்பட்டதிலிருந்தே பெரும் எதிர்ப்பை சந்தித்து நிலைநின்றதால் இந்தச் சாதனை முக்கியமாகவே குறிப்பிடத்தக்கது. ஆயினும் அது எதிர்ப்பை சமாளித்ததோடு மளமளவென எண்ணிக்கையில் உயரவும் ஆரம்பித்தது; உலகின் மூலைமுடுக்கிலுள்ள வீடுகளையெல்லாம், சொல்லப்போனால் இருதயங்களையெல்லாம் ஆக்கிரமித்தது! இந்தத் தனிச்சிறப்புமிக்க மொழிபெயர்ப்பு பிறந்த கதை என்ன? அதற்கெல்லாம் பின்னால் இருப்பவர் யார்? அதை உபயோகிப்பதிலிருந்து நீங்கள் எப்படி பயனடையலாம்?

புதிய மொழிபெயர்ப்பு தேவையா?

யெகோவாவின் சாட்சிகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் சட்டப்பூர்வ அமைப்பாகிய உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி நூறு வருடங்களுக்கு மேலாக பைபிள்கள் விநியோகிப்பில் வெற்றி நடைபோட்டு வந்திருக்கிறது. இருப்பினும், கடவுளுடைய வார்த்தையின் மற்றொரு மொழிபெயர்ப்பை பிரசுரிக்க வேண்டியது அவசியம் என யெகோவாவின் சாட்சிகள் ஏன் நினைத்தனர்? சாகாய் குபோ, வால்டர் ஸ்பெக்ட் ஆகியோர் எழுதிய அநேக மொழிபெயர்ப்புகளா? என்ற ஆங்கில புத்தகம் குறிப்பிடுவதாவது: “எந்த பைபிள் மொழிபெயர்ப்பையும் இறுதி வெளியீடாக கருத முடியாது. வேதாகம புலமையிலும் மொழி மாற்றங்களிலும் ஏற்படும் வளர்ச்சிக்கு ஏற்ப மொழிபெயர்ப்புகளின் தரமும் தொடர்ந்து முன்னேற வேண்டும்.”

ஆரம்பத்தில் பைபிள் எழுதப்பட்ட மொழிகளான எபிரெயு, கிரேக்கு, அரமிய மொழிகளைப் புரிந்துகொள்வதில் இந்த நூற்றாண்டு பெருமளவு வளர்ச்சி கண்டிருக்கிறது. மேலும், முன்பு பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் உபயோகித்த கையெழுத்துப் பிரதிகளைக் காட்டிலும் பழமையானதும், வெகு திருத்தமானதுமான பிரதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவே, ஒருபோதுமில்லாத விதத்தில் இன்று வெகு திருத்தமாக கடவுளுடைய வார்த்தையை மொழிபெயர்க்க முடியும்! நல்ல காரணத்துடனேயே நவீன நாளைய மொழிகளில் பைபிளை மொழிபெயர்க்கும் பணியை ஏற்க புதிய உலக பைபிள் மொழிபெயர்ப்பு குழு உருவாக்கப்பட்டது.

கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு என்ற ஆங்கில பதிப்பு 1950-ல் வெளியிடப்பட்டது. பைபிளை “பழைய ஏற்பாடு,” “புதிய ஏற்பாடு” என கூறுபோட்ட பழங்கால பழக்கம் எனும் விலங்கை உடைத்துக்கொண்டு வந்த அதன் பெயரிலேயே அதன் துணிச்சல் வெளிப்பட்டது. அதற்கடுத்த பத்து ஆண்டுகளில் எபிரெய வேதாகமத்தின் பகுதிகள் தொகுதி தொகுதியாக வெளியிடப்பட்டன. முழு பைபிளும் ஒரே தொகுப்பாக 1961-ல் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது.

இந்த அருமை பெருமைக்குரிய பைபிளை மொழிபெயர்த்தது யார்? செப்டம்பர் 15, 1950-ன் ஆங்கில காவற்கோபுரம் சொன்னதாவது: “மொழிபெயர்ப்பு குழுவின் அங்கத்தினர்கள் தங்கள் விருப்பத்தை வெளியிட்டனர், அது . . . தங்களை வெளிப்படுத்தாமல் இருப்பது, அதிலும் முக்கியமாக தங்கள் பெயரை, தாங்கள் உயிரோடிருக்கையில் அல்லது இறந்த பிறகு அறிவிக்காமல் இருப்பது. ஜீவனுள்ள, உண்மையான கடவுளின் பெயருக்குத் துதி சேர்ப்பதே இந்த மொழிபெயர்ப்பின் நோக்கம்.” குற்றம்குறை காண்போர் சிலர் இந்த மொழிபெயர்ப்பை, அனுபவமற்றவர்களின் படைப்பு என குறிப்பிட்டு ஒதுக்கினர்; ஆனால் எல்லாருமே அவர்களின் நியாயமற்ற உணர்ச்சிவயப்பட்ட கருத்தை ஆதரிக்கவில்லை. “ஒரு குறிப்பிட்ட பைபிள் மொழிபெயர்ப்பை, மொழிபெயர்த்தவர்கள் அல்லது பிரசுரித்தவர்கள் யார் என நமக்கு தெரிந்தால், அந்த மொழிபெயர்ப்பு சரியானதா இல்லையா என தீர்மானிக்க அது நமக்கு உதவுமா? உதவும் என முழுமையாக சொல்ல முடியாது. ஒவ்வொரு மொழிபெயர்ப்பின் தனிச்சிறப்பான அம்சங்களையும் ஆராய்வதற்கு மாற்றுவழி ஏதும் இல்லை”a என எழுதுகிறார் ஆலன் எஸ். டத்தி.

தனிச் சிறப்பியல்புகள்

கோடிக்கணக்கான வாசகர்கள் அதைத்தான் செய்திருக்கின்றனர்; புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் வாசிக்க உகந்தது மட்டுமல்ல ஆனால் பிழையற்று திருத்தமாக இருப்பதையும் அவர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். அதன் மொழிபெயர்ப்பாளர்கள், எபிரெயு, அரமிக், கிரேக்க மொழிகளில் கிடைக்கக்கூடிய சிறந்த உரைகளைப் பயன்படுத்தியிருக்கின்றனர்.b மேலும், முடிந்தளவு பூர்வ உரையை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே மொழிபெயர்க்க அசாதாரண கவனம் செலுத்தப்பட்டது; ஆனால் வெகு எளிதில் புரிந்துகொள்ளும் மொழிநடையிலும் எழுதப்பட்டது. எனவேதான் சில அறிஞர்கள் இந்த மொழிபெயர்ப்பின் பற்றுறுதியையும் திருத்தமான தன்மையையும் வெகுவாக பாராட்டினர். உதாரணமாக, “பைபிள் மொழிபெயர்ப்பில் எழும் அநேக பிரச்சினைகளை அறிவுப்பூர்வமாக கையாளும் திறமை பெற்ற கல்விமான்களின் குழு இருப்பதற்கு புதிய ஏற்பாட்டின் மொழிபெயர்ப்பே சான்றளிக்கிறது” என ஜனவரி 1963-ல் வெளிவந்த அண்டோவர் நியூட்டன் குவார்டர்லி பத்திரிகை குறிப்பிட்டது.

பைபிள் சம்பந்தமான காரியங்களை தெளிவாகவும், முழுமையாகவும் புரிந்துகொள்ளும் ஒரு புதிய அத்தியாயத்தை மொழிபெயர்ப்பாளர்கள் ஆரம்பித்து வைத்தனர். முன்பு “மங்கலாக” மட்டுமே புரிந்துகொள்ளப்பட்ட பைபிள் வசனங்கள், தெள்ளத் தெளிவானவையாய் ஒளிவீச ஆரம்பித்தன. மத்தேயு 5:3-ல் உள்ள “ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்” (கிங் ஜேம்ஸ் வர்ஷன்) என்ற குழப்பமூட்டும் வசனம், “ஆவிக்குரிய தேவைகளைக் குறித்து உணர்வுள்ளவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்” (NW) என சரியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளதே இதற்கு ஓர் உதாரணம். புதிய உலக மொழிபெயர்ப்பு முக்கிய வார்த்தைகளை முரண்பாடோ அல்லது மாறுபாடோ இல்லாமல் மொழிபெயர்த்துள்ளது. உதாரணத்திற்கு கிரேக்க வார்த்தையான சைக்கீயை எடுத்துக்கொள்வோம்; இறந்தவர்களுடைய நிலையைக் குறிக்கும் முக்கிய வார்த்தைகளை புதிய உலக மொழிபெயர்ப்பு அது வரும் ஒவ்வொரு இடத்திலும் உபயோகித்துள்ளது; இது குழப்பத்தைத் தவிர்க்க உதவுகிறது. அதன் காரணமாக, மத கோட்பாடுகளுக்கு முரணாக ஆத்துமா அழியாதது அல்ல என்பதை வாசகர்கள் உடனடியாக புரிந்துகொள்ளலாம்!​—மத்தேயு 2:20; மாற்கு 3:4; லூக்கா 6:9; 17:33; NW.

கடவுளுடைய பெயரை மீண்டும் உபயோகித்தல்

யெகோவா என்ற கடவுளுடைய பெயரை மீண்டும் உபயோகிப்பதே புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளின் குறிப்பிடத்தக்க அம்சம். எபிரெய பைபிளின் பண்டைய பிரதிகளில், கடவுளுடைய பெயர் நான்கு மெய்யெழுத்துக்களில் குறிப்பிடப்பட்டிருந்தது; அதை ய்ஹ்வ்ஹ் (YHWH) அல்லது ஜ்ஹ்வ்ஹ் (JHVH) என எழுத்துப்பெயர்ப்பு செய்யலாம். இந்தத் தனிச்சிறப்புமிக்க பெயர் சுமார் 7,000 தடவை பழைய ஏற்பாடு என அழைக்கப்படும் பைபிள் பகுதியில் காணப்படுகிறது. (யாத்திராகமம் 3:15; சங்கீதம் 83:18 (17); திருத்திய மொழிபெயர்ப்பு) தம்முடைய வணக்கத்தார் தம் பெயரை அறிந்திருக்க வேண்டும், அதை உபயோகிக்கவும் வேண்டும் என நம் சிருஷ்டிகர் எதிர்பார்த்தது தெளிவாகத் தெரிகிறதே!

எனினும், மூடநம்பிக்கைகள் சார்ந்த பயங்கள் கடவுளுடைய பெயரை உபயோகிக்கவிடாமல் யூதர்களைத் தடுத்தன. இயேசுவின் அப்போஸ்தலர்களுடைய மரணத்திற்குப்பின் கிரேக்க வேதாகமத்தைப் பிரதியெடுத்தவர்கள் கடவுளுடைய பெயரை நீக்கிவிட்டு அந்த இடத்தில் கிரேக்க வார்த்தைகளான கைரியாஸ் (கர்த்தர்) அல்லது தியாஸ் (கடவுள்) என்ற பதங்களை போட ஆரம்பித்தனர். ஏறக்குறைய எல்லா பைபிள்களிலிருந்தும் கடவுளுடைய பெயரை நீக்கியும் கடவுளுக்கு ஒரு பெயர் இருப்பதையே மறைத்தும்கூட இருக்கின்றனர்; இப்படி கடவுளுக்கு நிந்தையை ஏற்படுத்தும் இந்தப் பாரம்பரிய பழக்கத்தை நவீன மொழிபெயர்ப்பாளர்களும் நிலையாய் தொடர்வது வருந்தத்தக்கது. உதாரணத்திற்கு, “உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன்” என்ற இயேசுவின் வார்த்தைகள் யோவான் 17:6-ல் காணப்படுகின்றன. எனினும் டுடேஸ் இங்லீஷ் வர்ஷன் இதையே, “உம்மை வெளிப்படுத்தினேன்” என மொழிபெயர்க்கிறது.

கடவுளுடைய பெயரின் சரியான உச்சரிப்பு அறியப்படாததைக் காரணம் காட்டி சில அறிஞர்கள் அப்பெயர் நீக்கத்தை ஆதரித்திருக்கின்றனர். எப்படி இருந்தபோதிலும், எரேமியா, ஏசாயா, இயேசு போன்ற பிரபலமான பைபிள் பெயர்களின் உண்மையான எபிரெய உச்சரிப்போடு ஒத்துப்போகாதபோதிலும் அவ்விதமாகவே அவை மொழிபெயர்க்கப்படுகின்றன. கடவுளுடைய பெயரை மொழிபெயர்ப்பதில் யெகோவா என்ற பெயர் வடிவம் பொதுவாக அங்கீகரிக்கப்பட்டதாக, அநேகரால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருந்தும் அதை உபயோகிப்பதற்கு எதிராக எழும் எதிர்ப்புக் குரல் அர்த்தமற்றதாக தொனிக்கிறது.

புதிய உலக பைபிள் மொழிபெயர்ப்புக் குழு எபிரெய, கிரேக்க வேதாகமப் பகுதிகளில் கடவுளுடைய பெயரை உபயோகிக்க துணிந்து இறங்கியது. மத்திய அமெரிக்கா, தென் பசிபிக், கீழைநாடுகளில் இருந்தவர்களுக்காக மிஷனரிகள் செய்த ஆரம்ப கால மொழிபெயர்ப்புகள் இவர்களுக்கு முன்னோடியாய் அமைந்தன. எனினும், கோட்பாட்டளவிலான வாதங்களுக்காக மட்டுமே கடவுளுடைய பெயர் உபயோகிக்கப்படவில்லை. தனிப்பட்டவராக கடவுளை அறிவதற்கு அவருடைய பெயரை தெரிந்திருப்பது மிக முக்கியம். (யாத்திராகமம் 34:6, 7) அவருடைய பெயரை உபயோகிக்கும்படி லட்சக்கணக்கான வாசகர்களுக்கு புதிய உலக மொழிபெயர்ப்பு தூண்டுதல் அளித்திருக்கிறதே!

ஆங்கிலம் அறியாதோரையும் ஆட்கொள்கிறது

1963-க்கும் 1989-க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் முழுமையாகவோ பகுதியாகவோ இன்னும் பத்து மொழிகளில் கிடைத்தன. எனினும் மொழிபெயர்ப்பு வேலை கடினமானதாய் இருந்ததால் சில மொழிகளில் அதற்காக 20 ஆண்டுகளோ அல்லது அதற்கு அதிகமாகவோ செலவிட வேண்டியிருந்தது. 1989-ல் யெகோவாவின் சாட்சிகளுடைய உலக தலைமை காரியாலயத்தில் மொழிபெயர்ப்பு சேவை மையம் நிறுவப்பட்டது. ஆளும் குழுவினுடைய எழுத்து ஆலோசனைக் குழுவின் வழிநடத்துதலுக்கிணங்க பைபிள் மொழிபெயர்ப்பைத் துரிதப்படுத்த இந்த இலாகா ஏற்படுத்தப்பட்டது. பைபிள் வார்த்தைகளைப் பற்றிய ஆய்வையும் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தையும் ஒருங்கிணைத்து மொழிபெயர்ப்பு முறை ஒன்று உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டம் எப்படி செயல்படுகிறது?

பைபிளை புதிய ஒரு மொழியில் மொழிபெயர்க்க எழுத்து ஆலோசனைக் குழு அனுமதியளித்தவுடன், ஒப்புக்கொடுக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் சிலரை மொழிபெயர்ப்பு குழுவாக செயல்படும்படி அது நியமிக்கிறது. தனியாக ஒருவர் மொழிபெயர்ப்பதைவிட அதிக சமநிலையான மொழிபெயர்ப்பை இப்படிப்பட்ட குழுக்கள் கொடுக்க முடியும். (நீதிமொழிகள் 11:14-ஐ ஒப்பிடுக.) பொதுவாக, குழுவிலுள்ள ஒவ்வொரு அங்கத்தினரும் சங்கத்தின் பிரசுரங்களை மொழிபெயர்த்த அனுபவம் பெற்றவர்கள். பிறகு, பைபிள் மொழிபெயர்ப்பின் நியமங்களின் பேரிலும் அதற்காக விசேஷமாக வடிவமைக்கப்பட்ட கம்ப்யூட்டர் புரோகிராம்களின் உபயோகத்தின் பேரிலும் அக்குழுவினருக்கு முழு அளவில் பயிற்சியளிக்கப்படுகிறது. கம்ப்யூட்டரால் மொழிபெயர்க்க முடியாது, ஆனால் குழுவினராக அவர்கள் அனைவரும் முக்கிய தகவலைப் பெறவும், தங்கள் தீர்மானங்களைப் பற்றிய பதிவுகளைப் பாதுகாத்து வைக்கவும் அது உதவும்.

பைபிள் மொழிபெயர்ப்பு செயல்திட்டத்தில் இரண்டு கட்டங்கள் உள்ளன. முதல் கட்டமாக, ஆங்கில புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் உபயோகிக்கப்பட்டிருக்கும் வார்த்தைகளின் மற்றும் சொற்றொடர்களின் பட்டியல் மொழிபெயர்ப்பாளர்களிடம் கொடுக்கப்படும். ஆங்கில வார்த்தைகளான “atone,” “atonement,” “propitiation” போன்ற கிட்டத்தட்ட ஒரே அர்த்தத்தைத் தரும் வார்த்தைகள் ஒன்றாக தொகுக்கப்படும்; இவ்வார்த்தைகள் அளிக்கும் மற்ற அர்த்தங்களையும் தெரிந்துகொள்ள மொழிபெயர்ப்பாளர்களுக்கு இது உதவும். தங்கள் மொழியில் அவற்றிற்கு இணையானவற்றைச் சேகரித்து பட்டியல் தயாரிப்பார்கள். இருப்பினும் சில சமயங்களில், ஒரு வசனத்தை மொழிபெயர்ப்பதில் மொழிபெயர்ப்பாளர் தடுமாறலாம். கம்ப்யூட்டர் ஆய்வுமுறை அமைப்பு, கிரேக்க, எபிரெய வார்த்தைகள் சம்பந்தமான தகவலை அளித்து, உவாட்ச் டவர் பிரசுரங்களில் இருந்தும் தேவையான தகவல்களை தெரிந்துகொள்வதை மொழிபெயர்ப்பாளருக்கு சாத்தியமாக்குகிறது.

இந்தத் திட்டம் அதன் இரண்டாவது கட்டத்தை எட்டுகையில் தெரிந்தெடுக்கப்பட்ட வேற்றுமொழி வார்த்தைகள் தானாகவே அந்தந்த பைபிள் வசனங்களில் சென்று பொருந்தும்படி புகுத்தப்படுகின்றன. அது அதிக திருத்தமான, நிலையான தன்மையை மொழிபெயர்ப்புக்கு அளிக்கிறது. எனினும், இவ்வாறு தானாகவே பொருந்தும் “search and replace” அதாவது “கண்டுபிடித்து மாற்றும்” கம்ப்யூட்டர் முறை வசனத்தை எளிதாக வாசிக்கத்தக்கதாய் ஆக்காது. வாசிப்பதற்கு எளிதாய் இருக்கும்வகையில் பைபிள் வசனங்களை தொகுத்தமைத்தல், வேறொரு சொற்றொடராக மாற்றியமைத்தல் போன்ற ஏகப்பட்ட வேலைகள் செய்யப்படவேண்டும்.

இந்த மொழிபெயர்ப்பு முறை குறிப்பிடத்தக்க விதத்தில் பயனளிப்பதாய் உள்ளது. ஒரு மொழிபெயர்ப்பு குழுவினர் எபிரெய வேதாகமத்தை முழுமையாக இரண்டே வருடங்களில் மொழிபெயர்த்தனர். இதோடு ஒப்பிட, கம்ப்யூட்டரின் உதவியின்றி இது போன்ற ஒரு மொழியில் மொழிபெயர்க்க மற்றொரு குழுவிற்கு 16 வருடங்கள் எடுத்தன. 1989 முதல் தற்சமயம் வரை, கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் மேலும் 18 மொழிகளில் அச்சிடப்பட்டுள்ளது. முழுமையாகவோ பகுதியாகவோ புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் இன்று 34 மொழிகளில் கிடைக்கிறது. இவ்வாறு யெகோவாவின் சாட்சிகளில் 80-க்கும் அதிக சதவீதத்தினர், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தை மட்டுமாவது தங்கள் தாய்மொழியில் பெறும் பாக்கியம் பெற்றிருக்கின்றனர்.

உலகிலுள்ள 6,500 மொழிகளில், பைபிள் பகுதிகள் 2,212 மொழிகளில் மட்டுமே கிடைப்பதாக யுனைட்டெட் பைபிள் சொஸைட்டிஸ் அறிக்கை செய்கிறது.c எனவே, புதிய உலக மொழிபெயர்ப்பில் எபிரெய வேதாகமத்தை 11 மொழிகளிலும் கிரேக்க வேதாகமத்தை 8 மொழிகளிலும் வெளியிட சுமார் 100 மொழிபெயர்ப்பாளர்கள் உழைக்கின்றனர். “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும்” கடவுள் சித்தமுள்ளவராயிருக்கிறார். (1 தீமோத்தேயு 2:4) இதை நிறைவேற்றுவதில் புதிய உலக மொழிபெயர்ப்பு பெரும் பங்கு வகிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

இந்த மொழிபெயர்ப்பு 10 கோடி பிரதிகள் என்ற எண்ணிக்கையைத் தாண்டியதும் இந்தச் சாதனை எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது; எதிர்காலத்தில் இன்னும் அநேக கோடிக்கணக்கான பிரதிகள் அச்சிடப்படும் என நாங்கள் நம்புகிறோம். அதை நீங்களே ஆராய்ந்து பார்க்க வாரீர்!!! அதிலுள்ள இத்தகைய அநேக சிறப்பியல்புகளை கண்டு நீங்களே பூரித்துப் போவீர்கள்: தெளிவாக வாசிக்க முடிதல், பக்கத் தலைப்புகள், நன்கறிந்த வசனங்களைக் கண்டுபிடிப்பதற்கு உதவும் அகரவரிசை அட்டவணை, விலாவாரியான வரைபடங்கள், கருத்தைக் கவரும் பிற்சேர்க்கை குறிப்பு. எல்லாவற்றைக் காட்டிலும் முக்கியமாக கடவுளுடைய வார்த்தை உங்கள் பாஷையில் திருத்தமாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது என்ற நம்பிக்கையோடு இந்தப் பைபிளை நீங்கள் படிக்கலாம்.

[அடிக்குறிப்புகள்]

a நியூ அமெரிக்கன் ஸ்டாண்டர்ட் பைபிள்-ன் 1971-ம் வருட ஓரக் குறிப்புகளடங்கிய பைபிள் பதிப்பின் வண்ண மேலுறையில் இதுவே குறிப்பிடப்பட்டிருந்தது ஆர்வத்திற்குரியது: “பார்வைக் குறிப்புக்காகவோ அல்லது கெளரவிப்புக்காகவோ நாங்கள் எந்த கல்விமானின் பெயரையும் குறிப்பிடவில்லை; காரணம் கடவுளுடைய வார்த்தை அதன் தனிசிறப்புகளாலேயே அதற்கு வெற்றி தேடிக்கொள்ளும் என்பது எங்கள் நம்பிக்கை.”

b கிரேக்க உரைக்கு ஆதாரமாக வெஸ்காட்டும் ஹார்ட்டும் எழுதிய த நியூ டெஸ்டமண்ட் இன் தி ஒரிஜனல் க்ரீக் என்பதும் எபிரெய வேதாகமத்தின் உரைக்கு ஆதாரமாக ஆர். ருடால்ஃப் கிட்டல் எழுதிய பிப்ளியா ஹெப்ராய்கா என்பதும் உபயோகிக்கப்பட்டன.

c அநேகர் இரண்டு மொழிகளை அறிந்திருப்பதால் உலக மக்கள் தொகையில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் வாசிப்பதற்கு போதுமான மொழிகளில், முழுமையாகவோ பகுதியாகவோ பைபிள் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.

[பக்கம் 29-ன் சிறு குறிப்பு]

“பைபிள் மொழிபெயர்ப்பில் எழும் அநேக பிரச்சினைகளை அறிவுப்பூர்வமாக கையாளும் திறமை பெற்ற கல்விமான்களின் குழு இருப்பதற்கு புதிய ஏற்பாட்டின் மொழிபெயர்ப்பே சான்றளிக்கிறது.”—ஜனவரி 1963-ல் வெளிவந்த அண்டோவர் நியூட்டன் குவார்டர்லி

[பக்கம் 30-ன் சிறு குறிப்பு]

“வேதாகம புலமையிலும் மொழி மாற்றங்களிலும் ஏற்படும் வளர்ச்சிக்கு ஏற்ப மொழிபெயர்ப்புகளின் தரமும் தொடர்ந்து முன்னேற வேண்டும்”

[பக்கம் 31-ன் பெட்டி/படம்]

கல்விமான்கள் போற்றும் புதிய உலக மொழிபெயர்ப்பு

கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளைக் குறித்து, டிசம்பர் 8, 1950 என தேதியிடப்பட்ட கடிதத்தில் அன் அமெரிக்கன் டிரான்ஸ்லேஷன் பைபிளில் கிரேக்க “புதிய ஏற்பாடு” பைபிளை மொழிபெயர்த்தவரான எட்கர் குட்ஸ்பீட் எழுதியதாவது: “உங்கள் ஆட்கள் செய்யும் மத ஊழியத்திலும், அதன் உலகளாவிய தன்மையிலும், ஆர்வம் காட்டுபவன் நான்; சரியான, நேர்மையான, தெளிவான உங்கள் மொழிபெயர்ப்பிலும் எனக்குப் பரம திருப்தி. அதைப் பிரசுரிப்பதற்கு ஏகப்பட்ட ஆராய்ச்சி செய்யப்பட்டிருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்; இது எனக்குத் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.”

“கிரேக்க வார்த்தையின் அர்த்தத்தை எந்தளவு சரியாக சொல்ல முடியுமோ அந்தளவு தெளிவாக ஆங்கிலத்தில் சொல்ல முயன்ற திறமைமிக்க, விவேகமுள்ள கல்விமான்களின் படைப்பாக இந்த மொழிபெயர்ப்பு இருக்கிறது” என எபிரெய, கிரேக்க வல்லுனரான அலெக்சாண்டர் தாம்ஸன் எழுதினார்.​—த டிஃபரென்ஷியேட்டர், ஏப்ரல் 1952, பக்கங்கள் 52-7.

இஸ்ரேலைச் சேர்ந்த எபிரெய அறிஞரான பேராசிரியர் பென்ஞ்சமின் காதர் 1989-ல் சொன்னதாவது: “எபிரெய பைபிள் மற்றும் மொழிபெயர்ப்புகள் சம்பந்தப்பட்ட மொழியின் அடிப்படையிலான என் ஆய்வுக்கு நான் எப்போதும் புதிய உலக மொழிபெயர்ப்பு என அறியப்பட்டதன் ஆங்கிலப் பதிப்பையே நாடுகிறேன். இவ்வாறு செய்ததில், எவ்வளவு திருத்தமாக முடியுமோ அவ்வளவு திருத்தமாக உரையைப் புரிந்துகொள்ள நேர்மையாய் பெருமுயற்சி செய்யப்பட்டிருக்கிறது என்பதை அந்த மொழிபெயர்ப்பு திரும்பத் திரும்ப எனக்கு உறுதிப்படுத்துகிறது.”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்