ஆயிரவருட ஆட்சிக்கு ஆயத்தமாகுங்கள்!
கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சி மனித குலத்தின்மீது சொல்லொண்ணா ஆசீர்வாதங்களைப் பொழியும். இயேசுவின் அன்பான வழிநடத்துதல், மனிதவர்க்கத்தின் தற்போதைய வருந்தத்தக்க நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து, மகத்தான பரிபூரண நிலைக்கு கதவை திறந்து வைக்கும். அங்கு உங்களை ஆரத்தழுவி வரவேற்கவிருக்கும் ஆனந்த பூங்காற்றை ஒருகணம் சிந்தித்துப் பாருங்கள். ஆரோக்கிய சாம்ராஜ்யத்தில்! எங்கும் ஆரோக்கியம் எதிலும் ஆரோக்கியம் என ஆரோக்கியத்தின் ஊற்று பெருக்கெடுத்து ஓட, ஒவ்வொரு நாளும் முந்தைய நாளைவிட புத்துணர்ச்சி பொங்கும் மனநிலை உங்களை தட்டியெழுப்புவதை யோசித்துப் பாருங்கள். லட்சக்கணக்கான ஆடவரும் பெண்டிரும் சிறுவர் சிறுமியரும் அந்த மகிழ்ச்சியான சாம்ராஜ்யத்தில் வாழப் போகும் பொன்னாளுக்காக காத்திருக்கிறார்கள். ஆவலோடு காத்திருக்கும் இவர்கள் அதில் கால்பதிக்க ஏங்கி கடவுளிடம் கரம் குவித்து நிற்கிறார்கள். இந்த ஆவலை அவர்கள் மனதில் ஆழமாக விதைத்தது வேதப்படிப்பாகும்.
ஆனால், ஆயிர வருட ஆட்சியை துவங்குவதற்குமுன் தம்முடைய ஆட்சிக்கு தடங்கலாக இருக்கும் எதையும் இயேசு தவிடு பொடியாக்கிவிடுவார். இதை அர்மகெதோன் என பைபிள் அழைக்கும் யுத்தத்தின் மூலம் செய்வார். (வெளிப்படுத்துதல் 16:16) பூமியில் வாழும் உண்மை மனமுள்ள கிறிஸ்தவர்கள் இந்தப் போரில் சண்டையிட மாட்டார்கள். ஏனென்றால் இது கடவுளுடைய யுத்தம். இது ஒரு குறிப்பிட்ட பூகோள பிராந்தியத்தில் மாத்திரமல்ல, பூமியின் ஒருமுனை முதல் மறுமுனை வரை நடைபெறும் என பைபிள் கூறுகிறது. கிறிஸ்துவின் ஆட்சி முறைக்கு எதிராக செயல்படும் சதிகாரர்கள் அனைவரும் சங்கரிக்கப்படுவார்கள். ஒருவரும் தப்ப முடியாது!—எரேமியா 25:33.
அதற்குப்பின் இயேசு தம்முடைய கவனத்தை பிசாசாகிய சாத்தானிடமும் அவனுடைய பேய்களிடமுமாக திருப்புவார். வெளிப்படுத்துதல் புத்தகத்தின் எழுத்தாளர் கண்ட காட்சியை மனக்கண் முன் கொண்டுவாருங்கள்: ‘ஒரு தூதன் [இயேசு கிறிஸ்து] பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்திறங்கி வரக்கண்டேன். பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிர வருஷமளவும் கட்டி வைத்தான்.’ (வெளிப்படுத்துதல் 20:1, 2) அதன்பின் சாத்தானும் அவனுடைய பேய்களும் என்றென்றைக்குமாக அழிக்கப்படுவார்கள்.—மத்தேயு 25:41.
‘ஒருவரும் எண்ணக்கூடாத திரளான கூட்டம்’ அர்மகெதோனை தப்பிப் பிழைக்கும். (வெளிப்படுத்துதல் 7:9) மேய்ப்பன் ஆடுகளை உயிர்க்காக்கும் தண்ணீரிடம் வழிநடத்துவதுபோல இவர்களும் முழுமையாக பயனடைய கிறிஸ்து “ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு” வழிநடத்துவார். (வெளிப்படுத்துதல் 7:17) அவர்களுடைய ஆவிக்குரிய முன்னேற்றத்திற்கு சாத்தான் மற்றும் அவனுடைய பேய்களால் எவ்வித தடைகளும் இரா. அர்மகெதோனை தப்பிப் பிழைக்கும் இவர்கள் பரிபூரணத்தை அடையும்வரை தங்களுடைய பாவ மனச்சாய்வுகளை மேற்கொள்ள படிப்படியாக உதவப்படுவர்!
கிறிஸ்துவின் அன்பான ஆட்சியில் வாழ்க்கை சூழ்நிலைமைகள் சீராக முன்னேற்றமடையும். வேதனைக்கும் துயரத்துக்கும் காரணமானவற்றை இயேசு கிறிஸ்து மூலம் யெகோவா தேவன் நீக்குவார். ‘அவர்களுடைய கண்ணீர் யாவையும் [தேவன்] துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை.’ (வெளிப்படுத்துதல் 21:4) தீர்க்கதரிசியாகிய ஏசாயா இந்தக் காட்சியை முழுமையாக கூறுகிறார்: “அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம். அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்.” (ஏசாயா 35:5, 6) ‘மரித்தோராகிய சிறியோரும் பெரியோரும்’ உயிரடைந்து மீண்டும் மரிக்காமல் வாழும் எதிர்பார்ப்பை அடைவர்!—வெளிப்படுத்துதல் 20:12.
ஆயிரவருட ஆட்சியில் அடியெடுத்து வைக்கப்போகும் பிரஜைகள் ஆயத்தப்படுத்தப்பட்டு வருகிறார்கள். அர்மகெதோனை தப்பி பிழைக்கவிருக்கும் பெரும் ‘திரள் கூட்டமாகிய’ இவர்கள் இப்போதே கூட்டிச் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அந்த ஆட்சி எப்போது ஆரம்பிக்கும் என அவர்களுக்குத் தெரியாதபோதிலும், கடவுளுடைய குறித்த காலத்தில் அதற்குள் கொண்டு செல்லப்படுவார்கள் என்பதை உறுதியாக நம்புகிறார்கள். அவர்கள் மத்தியில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். ஆனால் நீங்கள் அதற்குத் தயாராக வேண்டும்—உங்கள் உடைமைகளை விற்றோ அல்லது பூமியில் குறிப்பிட்ட ஒரு பகுதிக்கு சென்றோ அல்ல—ஆனால் பைபிளை படிப்பதன் மூலமும் யெகோவா தேவனைப் பற்றியும் அவருடைய நோக்கங்களைப் பற்றியும் திருத்தமான அறிவை வளர்த்துக் கொள்வதன் மூலமும் தயாராக வேண்டும். நீங்களும் உங்கள் குடும்பமும் பைபிள் படிப்பின்மூலம் பயனடைவது எப்படி என்பதை இலவசமாகவும் யாருடைய வற்புறுத்தலுமின்றி யெகோவாவின் சாட்சிகள் மகிழ்ச்சியுடன் உங்களுக்குக் காண்பிப்பார்கள். இந்தப் பத்திரிகையை பிரசுரிப்போர் கூடுதலான தகவல்களை அளிக்க சந்தோஷமுள்ளவர்களாக இருப்பார்கள்.
[பக்கம் 7-ன் பெட்டி]
ஆயிரம் வருடங்கள்—சொல்லர்த்தமானதா அடையாளப்பூர்வமானதா?
வெளிப்படுத்துதல் புத்தகத்தின் அநேக பகுதிகள் அடையாள அர்த்தத்தில் எழுதப்பட்டுள்ளதால் இந்தக் கேள்வி எழும்புகிறது. வெளிப்படுத்துதலில் குறிப்பிடப்பட்டுள்ள கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியைப் பற்றியென்ன? இது சொல்லர்த்தமான காலப்பகுதியா அல்லது அடையாளப்பூர்வமான காலப்பகுதியா?
குறிப்பிட்டுக் காட்டியிருக்கும் ஒவ்வொரு இடத்திலும் சொல்லர்த்தமான ஆயிர வருட காலப்பகுதியையே அர்த்தப்படுத்துகிறது. கவனியுங்கள்: மனிதவர்க்கம் நியாயந்தீர்க்கப்படும் கிறிஸ்துவின் ஆயிரவருட ஆட்சியை ஒரு நாளாக அப்போஸ்தலன் பவுல் குறிப்பிடுகிறார். (அப்போஸ்தலர் 17:31; வெளிப்படுத்துதல் 20:4) யெகோவாவுக்கு ஆயிரம் ஆண்டுகள் ஒரு நாள் (24 மணி நேரம்) போல இருக்கிறதென அப்போஸ்தலன் பேதுரு எழுதினார். அது, இந்த நியாயத்தீர்ப்பு “நாள்” சொல்லர்த்தமாகவே ஆயிரம் வருடங்களைக் கொண்டது என்பதற்கு காரணத்தை அளிக்கும். கூடுதலாக வெளிப்படுத்துதல் 20:3, 5-7-ல் (NW) நான்கு முறை “ஆயிரம் வருஷங்கள்,” என்றல்ல, ஆனால் “அந்த ஆயிரம் வருஷங்கள்” என்றே மூலமொழியில் நாம் வாசிக்கிறோம். இது ஒரு திட்டவட்டமான காலப்பகுதியை சுட்டிக்காட்டுவதாக தெரிகிறது.