கடவுளுடைய வார்த்தையில் நீங்கள் எந்தளவு பிரியமாயிருக்கிறீர்கள்?
“உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள்முழுதும் அது என் தியானம்.”—சங்கீதம் 119:97.
1. கடவுளுடைய வார்த்தையில் தங்களுக்கிருக்கும் பிரியத்தை கடவுள் பயமுள்ள நபர்கள் வெளிப்படுத்திக் காட்டும் ஒரு வழி எது?
கோடிக்கணக்கான ஆடவரும் பெண்டிரும் தங்களுக்கென்று சொந்தமாக ஒரு பைபிள் பிரதியை வைத்திருக்கிறார்கள். ஆனால், வெறுமனே பைபிளை வைத்திருப்பதற்கும் கடவுளுடைய வார்த்தையில் பிரியமாயிருப்பதற்கும் இடையே அதிக வேறுபாடு உள்ளது. கடவுளுடைய வார்த்தையை ஒருவர் எப்போதாவது மட்டுமே வாசிக்கிறார். இதனால் அவர் அதில் பிரியமாயிருப்பதாய் சொல்ல முடியுமா? நிச்சயமாகவே முடியாது! அதற்கு மாறாக, முன்பு பைபிளில் ஆர்வம் காட்டாத சிலரும் இப்போது ஒவ்வொரு நாளும் அதை வாசிக்கிறார்கள். சங்கீதக்காரனைப்போல், கடவுளுடைய வார்த்தையில் பிரியமாயிருக்க கற்றுக்கொண்டு, அதை “நாள்முழுவதும்” தியானிக்கிறார்கள்.—சங்கீதம் 119:97.
2. இக்கட்டான நிலைமைகளில், ஒரு யெகோவாவின் சாட்சியினுடைய விசுவாசம் தளராமல் நிலைத்திருக்க எது உதவியது?
2 கடவுளுடைய வார்த்தையில் பிரியமாயிருக்க கற்றுக்கொண்டவர்களில் ஒருவர் நாஷோ டோரி. இவர் பிறந்த ஊர் அல்பேனியா. அங்கு அவர் அநேக ஆண்டுகளாக தன் உடன் விசுவாசிகளோடு யெகோவாவை சேவித்து வந்தார். அக்காலத்தில் பெரும்பாலும் யெகோவாவின் சாட்சிகள் தடையுத்தரவின்கீழ் இருந்தார்கள். உண்மை கிறிஸ்தவர்களாகிய இவர்களுக்கு பைபிள் பிரசுரங்கள் கிடைப்பது அரிதாக இருந்தது. என்றபோதிலும், சகோதரர் டோரி விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திருந்தார். எப்படி அவரால் உறுதியாய் நிலைத்திருக்க முடிந்தது? அவர் சொன்னார்: “ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு மணிநேரமாவது பைபிளை வாசிப்பது என் இலக்காக இருந்தது. என் கண் பார்வை மங்குவதற்கு முன்பு ஏறக்குறைய 60 ஆண்டுகள் இதைச் செய்தேன்.” சிறிது காலத்திற்கு முன்பு வரையில் பைபிள் முழுமையாக அல்பேனிய மொழியில் கிடைக்கவில்லை. ஆனால் சகோதரர் டோரி, சிறுவயதில் கிரேக்கு படித்திருந்தார், ஆகையால் பைபிளை அந்த மொழியில் வாசித்தார். சகோதரர் டோரி நாள் தவறாமல் பைபிள் வாசித்தது, பல சோதனைகளின் மத்தியிலும் தளராது நிலைத்திருக்க அவருக்கு உதவியது. அது நமக்கும் உதவலாம்.
கடவுளுடைய வார்த்தையில் “வாஞ்சையாயிருங்கள்”
3. கடவுளுடைய வார்த்தையின்மீது என்ன மனப்பான்மையை கிறிஸ்தவர்கள் வளர்க்க வேண்டும்?
3 “புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்” என்று அப்போஸ்தலன் பேதுரு எழுதினார். (1 பேதுரு 2:3) தாய்ப்பால்மீது குழந்தை வாஞ்சையாக இருப்பதுபோல், ஆவிக்குரிய தேவையைக் குறித்து உணர்வுள்ள கிறிஸ்தவர்கள், கடவுளுடைய வார்த்தையை வாசிப்பதில் பெரும் மகிழ்ச்சி காண்கிறார்கள். நீங்களும் அவ்வாறுதான் உணருகிறீர்களா? இல்லையெனில், நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். நீங்களும் கடவுளுடைய வார்த்தையின்மீது வாஞ்சையை வளர்க்க முடியும்.
4. பைபிள் வாசிப்பை அன்றாட பழக்கமாக்குவதில் என்ன உட்பட்டிருக்கிறது?
4 அவ்வாறு செய்வதற்கு, முதலாவதாக தவறாமல் பைபிள் வாசிப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். முடிந்தால் தினந்தோறும் வாசிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டுக்குள் உங்களை நீங்களே கொண்டுவர வேண்டும். (அப்போஸ்தலர் 17:11) நாஷோ டோரி செய்ததுபோல், பைபிள் வாசிக்க ஒவ்வொரு நாளும் ஒரு மணிநேரம் செலவிட உங்களால் ஒருவேளை முடியாது. ஆனால் கடவுளுடைய வார்த்தையை சிந்திப்பதற்கு நீங்கள் ஒவ்வொரு நாளும் கொஞ்சம் நேரத்தை ஒதுக்க முடியும். கிறிஸ்தவர்கள் பலர், பைபிள் பகுதியை ஆழ்ந்து சிந்திப்பதற்கு காலையில் கொஞ்சம் முன்னதாகவே எழுந்திருக்கிறார்கள். ஒரு நாளை தொடங்குவதற்கு இதைவிட மேம்பட்ட வழி வேறு என்ன இருக்க முடியும்? மற்றவர்கள் தூங்கப் போவதற்கு முன் பைபிளை வாசித்து அந்த நாளை முடிக்க விரும்புகிறார்கள். இன்னும் சிலர், வசதியான வேறு ஏதாவது நேரத்தில் பைபிளை வாசிக்கிறார்கள். தவறாமல் பைபிளை வாசிப்பதே முக்கியம். பின்பு, நீங்கள் வாசித்ததை தியானிப்பதற்கு சில நிமிடங்கள் செலவிடுங்கள். கடவுளுடைய வார்த்தையை வாசித்து, தியானித்ததால் பயனடைந்த சிலரின் முன்மாதிரியை நாம் சிந்திக்கலாம்.
கடவுளுடைய வார்த்தையில் பிரியமாயிருந்த சங்கீதக்காரர்
5, 6. 119-வது சங்கீதத்தை எழுதியவரின் பெயர் நமக்கு தெரியாவிடினும், அவர் எழுதியதை வாசித்து தியானிக்கையில் அவரைப் பற்றி நாம் என்ன தெரிந்துகொள்ளலாம்?
5 119-வது சங்கீதத்தை எழுதியவர் மெய்யாகவே கடவுளுடைய வார்த்தையின்மீது ஆழ்ந்த மதிப்புடையவர். அந்தச் சங்கீதத்தை யார் எழுதினார்? அதன் எழுத்தாளரைப் பற்றி பைபிள் குறிப்பிடுகிறதில்லை. எனினும், அதன் சூழமைவு அவரைப் பற்றி சில நுட்பவிவரங்களை அளிக்கிறது. அவரது வாழ்க்கை பிரச்சினையில்லாத வாழ்க்கையாக இல்லை. யெகோவாவை வணங்குவோர் சிலர் அவருக்கு பரிச்சயமானவர்களாக இருந்தாலும், அவரைப்போல பைபிள் நியமங்களை அவர்கள் நேசிக்கவில்லை. இருப்பினும், அவர்களுடைய மனப்பான்மை, சரியானதை செய்வதிலிருந்து தன்னை தடுக்க அந்தச் சங்கீதக்காரர் அனுமதிக்கவில்லை. (சங்கீதம் 119:23) பைபிள் தராதரங்களை மதிக்காத ஒருவருடன் நீங்கள் வாழ்ந்தால் அல்லது வேலைசெய்தால், இந்தச் சங்கீதக்காரரின் சூழ்நிலைக்கும் உங்களுடையதற்கும் இடையேயுள்ள ஒற்றுமையை நீங்கள் காணலாம்.
6 இந்தச் சங்கீதக்காரர் தேவபக்தியுள்ளவராக இருந்தபோதிலும், எந்த விதத்திலும் சுயநீதிக்காரராக இல்லை. தன் சொந்த குறைபாடுகளை ஒளிவுமறைவு இல்லாமல் ஒப்புக்கொண்டார். (சங்கீதம் 119:5, 6, 67) எனினும், தன் பாவம் தன்னை அடக்கியாளுவதற்கு அவர் அனுமதிக்கவில்லை. “வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம் பண்ணுவான்?” என்று அவர் கேட்டார். அவருடைய பதில்: “உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே.” (சங்கீதம் 119:9) பின்பு, கடவுளுடைய வார்த்தை எவ்வளவு வல்லமை வாய்ந்தது என்பதை அறிவுறுத்திக் கூறுபவராய், அந்தச் சங்கீதக்காரர் மேலும் சொன்னார்: “நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்துவைத்தேன்.” (சங்கீதம் 119:11) கடவுளுக்கு விரோதமாக பாவம் செய்வதைத் தவிர்க்க நமக்கு உதவும் சக்தி நிச்சயமாகவே வல்லமை வாய்ந்தது!
7. முக்கியமாய், தினந்தோறும் தவறாமல் பைபிள் வாசிப்பதன் அவசியத்தைப் பற்றி இளைஞர்கள் ஏன் உணர்வுள்ளவர்களாக இருக்க வேண்டும்?
7 கிறிஸ்தவ இளைஞர்கள் இந்தச் சங்கீதக்காரரின் வார்த்தைகளுக்குக் கவனம் செலுத்துவது நல்லது. இன்று கிறிஸ்தவ இளைஞர்கள் தாக்கப்படுகின்றனர். யெகோவாவை வணங்கும் இளைஞர்களின் மனதைக் கெடுப்பதில் பிசாசானவனுக்கு நாட்டம் அதிகம். கிறிஸ்தவ இளைஞர்களை வசீகரித்து, சரீர இச்சைகளுக்கு இணங்கவும் கடவுளுடைய சட்டங்களை மீறவும் செய்விப்பதே சாத்தானின் இலக்கு. திரைப் படங்களும் டெலிவிஷன் நிகழ்ச்சிகளும் பெரும்பாலும் பிசாசானவனின் சிந்தனையையே ஒளிபரப்புகின்றன. அத்தகைய நிகழ்ச்சிகளில் வரும் நடிகர்கள் கவர்ச்சிகரமாகவும் விரும்பத்தக்கவர்களாகவும் காணப்படுகிறார்கள்; அவர்களுடைய ஒழுக்கக்கேடான உறவுகள் இயல்பானவை போல சித்தரிக்கப்படுகின்றன. அவர்கள் எப்படிப்பட்ட எண்ணத்தை உண்டாக்குகிறார்கள்? ‘மணமாகாதவர்கள் ஒருவரையொருவர் உண்மையில் நேசிக்கையில், பாலுறவில் ஈடுபடுவது சகஜம்தான்’ என்பதே. ஒவ்வொரு வருடமும் கிறிஸ்தவ இளைஞர்கள் பலர் இத்தகைய சிந்தனைக்கு பலியாவது வருந்தத்தக்க விஷயம். சிலருக்கு விசுவாச கப்பற்சேதமே ஏற்படுகிறது. உண்மையிலேயே பலமான எதிர்ப்புதான்! ஆனால், இளைஞராகிய நீங்கள் சமாளிக்க முடியாத அளவுக்கு அந்த அழுத்தம் அவ்வளவு கடுமையானதா? இல்லவே இல்லை! தகாத இச்சைகளை அடக்கியாள கிறிஸ்தவ இளைஞர்களுக்கு யெகோவா ஒரு வழியை ஏற்படுத்தியிருக்கிறார். ‘கடவுளுடைய வசனத்தின்படி தங்களைக் காத்துக்கொண்டு, கடவுளுடைய வாக்குகளைத் தங்கள் இருதயத்தில் வைப்பதன்’ மூலம் பிசாசானவனின் எந்தச் சூழ்ச்சியையும் அவர்கள் எதிர்த்து வெல்ல முடியும். நீங்கள் தவறாமல் பைபிள் வாசிப்பதற்கும் அதைப் பற்றி தியானிப்பதற்கும் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்?
8. இந்தப் பத்தியில் குறிப்பிட்டுள்ள உதாரணங்கள், மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கான மதித்துணர்வு பெருக உங்களுக்கு எவ்வாறு உதவி செய்யலாம்?
8 119-வது சங்கீதத்தை எழுதினவர் ஆர்வத்துடன் இவ்வாறு சொன்னார்: “உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்!” (சங்கீதம் 119:97) எந்தப் பிரமாணத்தைக் குறித்து அவ்வாறு சொன்னார்? மோசேயின் நியாயப்பிரமாண தொகுப்பு உட்பட, யெகோவாவின் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தையைக் குறித்தே சொன்னார். எடுத்த எடுப்பிலேயே சிலர், இந்த நியாயப்பிரமாண தொகுப்பு காலத்துக்குப் பொருந்தாதது என்று ஒதுக்கிவிட்டு, இதில் பிரியமாயிருக்க யாரால் முடியும் என்று யோசிக்கலாம். எனினும், சங்கீதக்காரர் செய்ததுபோல், மோசேயின் நியாயப்பிரமாணத்தின் பல்வேறு அம்சங்களை நாம் ஆழ்ந்து சிந்திக்கையில், அந்த நியாயப்பிரமாணத்தில் அடங்கியுள்ள ஞானத்தை நாம் மதித்துப் போற்ற முடியும். பல தீர்க்கதரிசன அம்சங்கள் மட்டுமல்லாமல், சுத்தத்தையும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும் முன்னேற்றுவித்த சுகாதார மற்றும் உணவுதிட்ட விதிமுறைகளும் நியாயப்பிரமாணத்தில் அடங்கியிருக்கின்றன. (லேவியராகமம் 7:23, 24, 26; 11:2-8) வியாபார நடவடிக்கைகளில் நேர்மையாயிருக்க நியாயப்பிரமாணம் ஊக்குவித்தது; தேவையில் இருக்கும் உடன் வணக்கத்தாரின் நிலையில் தங்களை வைத்துப் பார்த்து, அவர்களுக்கு தயவுகாட்டும்படி இஸ்ரவேலரை அறிவுறுத்தியது. (யாத்திராகமம் 22:26, 27; 23:6; லேவியராகமம் 19:35, 36; உபாகமம் 24:17-21) பாரபட்சமின்றி நியாயத்தீர்ப்பு வழங்க வேண்டியிருந்தது. (உபாகமம் 16:19; 19:15) 119-வது சங்கீதத்தை எழுதியவர் வாழ்க்கையின் அனுபவத்திலிருந்து பார்க்கையில், கடவுளுடைய நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டவர்களுக்கு பிரச்சினைகள் சுமூகமாக கையாள முடிந்ததைக் கண்டு, கடவுளின் வார்த்தைமீது அவருடைய ஆர்வம் மிகுந்து உறுதிப்பட்டது என்பதில் சந்தேகமில்லை. அவ்வாறே இன்று, பைபிள் நியமங்களைப் பொருத்திப் பிரயோகித்து கிறிஸ்தவர்கள் வெற்றி காண்கையில், கடவுளுடைய வார்த்தையின்மீது அவர்களுடைய பற்றுதலும் மதித்துணர்வும் பெருகி உறுதிப்படுகிறது.
வேறுபட்டிருந்த தைரியமான ஓர் இளவரசர்
9. கடவுளுடைய வார்த்தையின்மீது என்ன மனப்பான்மையை அரசன் எசேக்கியா வளர்த்தார்?
9 எசேக்கியா இளவரசனாக இருந்தபோது அவருக்கு ஏற்பட்ட நிலைமையும் 119-வது சங்கீதத்தின் பொருளடக்கமும் நன்றாய் ஒத்திருக்கிறது. இந்தச் சங்கீதத்தின் எழுத்தாளர் எசேக்கியா என்று பைபிள் கல்விமான்கள் சிலர் கருத்துத் தெரிவிக்கிறார்கள். இதை உறுதியாய் சொல்ல முடியாதபோதிலும், கடவுளுடைய வார்த்தையின்மீது எசேக்கியா அதிக மதிப்பு வைத்திருந்தார் என்பதை நாம் நிச்சயமாய் அறிந்திருக்கிறோம். சங்கீதம் 119:97-ல் உள்ள வார்த்தைகளை இதயப்பூர்வமாய் ஏற்றுக்கொண்டிருந்ததை வாழ்க்கையில் காட்டினார். எசேக்கியாவைப் பற்றி பைபிள் இவ்வாறு சொல்கிறது: “அவன் யெகோவாவைவிட்டுப் பின்வாங்காமல் அவரையே பற்றியிருந்தான்; யெகோவா மோசேக்கு இட்ட கட்டளைகளைக் கைக்கொண்டு நடந்தான்.”—2 இராஜாக்கள் 18:6, தி.மொ.
10. தேவபக்தியுள்ள பெற்றோரால் வளர்க்கப்படாத கிறிஸ்தவர்களை எசேக்கியாவின் முன்மாதிரி எப்படி ஊக்குவிக்கிறது?
10 உண்மையில், தேவபக்தியுள்ள ஒரு குடும்பத்தில் எசேக்கியா வளரவில்லை. அவருடைய தகப்பனாகிய ஆகாஸ் ராஜா உண்மைத்தன்மையற்றவன், விக்கிரகாராதனைக்காரன்; தன் குமாரர்களிலேயே ஒருவரை—எசேக்கியாவின் சொந்த சகோதரனையே—பொய் தெய்வத்திற்குப் பலியாக உயிரோடு எரித்திருந்தான்! (2 இராஜாக்கள் 16:3) அவனுடைய கெட்ட முன்மாதிரியின் மத்தியிலும், எசேக்கியா, கடவுளுடைய வார்த்தையைப் படித்தறிவதன்மூலம் புறமத பாதிப்புகளிலிருந்து தன் வழியை ‘செம்மையாக்கிக்கொள்ள’ முடிந்தது.—2 நாளாகமம் 29:2.
11. உண்மையற்ற அவருடைய தகப்பனுக்கு என்ன நடந்ததை எசேக்கியா கவனித்தார்?
11 எசேக்கியா வளர்ந்துவருகையில், விக்கிரகாராதனையில் ஈடுபட்டிருந்த தன் தகப்பனார் நாட்டின் விவகாரங்களை எவ்வாறு கையாண்டார் என்பதைக் கண்ணார கண்டார். சத்துருக்களால் யூதா சூழப்பட்டிருந்தது. எருசலேமை முற்றுகையிடுவதில் இஸ்ரவேலின் அரசனாகிய பெக்காவுடன் சீரியாவின் அரசன் ரேத்சீன் சேர்ந்துகொண்டான். (2 இராஜாக்கள் 16:5, 6) யூதாவை தாக்கி, யூதேய பட்டணங்கள் சிலவற்றை ஏதோமியரும் பெலிஸ்தரும் வெற்றிகரமாய் கைப்பற்றியிருந்தார்கள். (2 நாளாகமம் 28:16-19) இந்த நெருக்கடி நிலைகளை ஆகாஸ் எவ்வாறு சமாளித்தான்? சீரியாவை எதிர்க்க யெகோவாவின் உதவியை ஆகாஸ் நாடாமல், அசீரிய அரசனிடம் திரும்பினான்; ஆலய பொக்கிஷத்திலிருந்தவை உட்பட, பொன்னையும் வெள்ளியையும் இலஞ்சமாக அவனுக்குக் கொடுத்தான். ஆனால், இது நிலையான சமாதானத்தை யூதாவுக்குப் பெற்றுத் தரவில்லை.—2 இராஜாக்கள் 16:6, 8.
12. எசேக்கியா தன் தகப்பனின் தவறுகளைத் தானும் செய்யாமல் தவிர்க்க உதவியது எது?
12 கடைசியாக, ஆகாஸ் மரித்தான். 25 வயதில் எசேக்கியா அரசரானார். (2 நாளாகமம் 29:1) அவரோ ஓர் இளைஞர், ஆனாலும் வெற்றிகரமாய் அரசாள அது தடையாயில்லை. அவருடைய தகப்பனின் உண்மையற்ற நடத்தையைப் பின்பற்றுவதற்கு பதிலாக, யெகோவாவின் நியாயப்பிரமாணத்தை உறுதியாக கடைப்பிடித்தார். அரசர்களுக்குரிய ஒரு விசேஷ கட்டளையையும் இது உட்படுத்தியது: “அவன் ராஜாவாகும்போது லேவியரான ஆசாரியரிடத்திலிருந்து நியாயப்பிரமாண நூலைப் பார்த்துத் தனக்காக ஒரு பிரதியை எழுதித் தன்னிடம் வைத்துக்கொண்டு தன் ஜீவனுள்ள நாளெல்லாம் அதை ஆராய்ந்து வாசிக்க வேண்டும். அப்பொழுது இந்த நியாயப்பிரமாணத்தின் எல்லா வார்த்தைகளையும் இந்த நியமங்களையும் கைக்கொண்டு இவைகளின்படிச் செய்வதற்குத் தன் கடவுளாகிய யெகோவாவுக்குப் பயந்திருக்கும்படி கற்றுக்கொள்வான்.” (உபாகமம் 17:18, 19, தி.மொ.) கடவுளுடைய வார்த்தையைத் தினந்தோறும் வாசிப்பதன்மூலம் யெகோவாவுக்குப் பயந்து நடப்பதை எசேக்கியா கற்றுக்கொண்டிருந்திருப்பார், தேவபக்தியற்ற தன் தகப்பன் செய்த தவறுகளைத் தானும் செய்யாமல் தவிர்த்திருந்திருப்பார்.
13. ஆவிக்குரிய கருத்தில், தான் செய்வதெல்லாம் வாய்க்கும் என ஒரு கிறிஸ்தவன் எவ்வாறு நிச்சயமாயிருக்கலாம்?
13 இஸ்ரவேலின் ராஜாக்கள் மட்டுமே கடவுளுடைய வார்த்தைக்கு இடைவிடாமல் கவனம் செலுத்த ஊக்குவிக்கப்படவில்லை, கடவுள் பயமுள்ள இஸ்ரவேலர் எல்லாருமே அவ்வாறு செய்ய வேண்டியதாயிருந்தது. உண்மையான சந்தோஷத்தை அனுபவிக்கும் மனிதனை குறித்து முதலாம் சங்கீதம் இவ்வாறு விவரிக்கிறது: “யெகோவாவின் பிரமாணத்திலே பிரியமாகி இரவும் பகலும் அவர் பிரமாணத்தைத் தியானஞ்செய்கிற மனிதன் பாக்கியவான் [சந்தோஷமுள்ளவன்,” NW].” (சங்கீதம் 1:1, 2, தி.மொ.) அப்படிப்பட்ட ஒரு மனிதனைக் குறித்து, “அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்” என சங்கீதக்காரன் சொல்கிறார். (சங்கீதம் 1:3) அதற்கு மாறாக, யெகோவா தேவனில் விசுவாசக் குறைவுள்ளவனை குறித்து பைபிள் சொல்வதாவது: “இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்.” (யாக்கோபு 1:8) சந்தோஷத்தில் திளைக்கவும் வாழ்க்கையில் வெற்றி காணவுமே நாம் அனைவரும் விரும்புகிறோம். ஒழுங்காக கருத்தோடு பைபிளை வாசிப்பது, நம்முடைய சந்தோஷத்திற்கு கைகொடுத்து உதவும்.
தளராதபடி இயேசுவை தாங்கியது கடவுளின் வார்த்தை
14. கடவுளுடைய வார்த்தையின்மீது தமக்கிருந்த உள்ளார்ந்த பற்றுதலை இயேசு எவ்வாறு வெளிக்காட்டினார்?
14 ஒரு சந்தர்ப்பத்தில், எருசலேம் ஆலயத்தில் போதகர்களின் மத்தியில் இயேசு உட்கார்ந்திருப்பதை அவருடைய பெற்றோர் கண்டார்கள். கடவுளுடைய நியாயப்பிரமாணத்தில் தேறிய அந்தப் போதகர்கள் “அவர் அறிவையும் அவர் பகர்ந்த விடைகளையும் பார்த்துப் பிரமித்தார்கள்”! (லூக்கா 2:46, 47, தி.மொ.) அது, இயேசு 12 வயதாக இருக்கையில் நடந்தது. ஆம், இளம் வயதிலேயும் கடவுளுடைய வார்த்தையின்மீது அவருக்கு உள்ளார்ந்த பற்று இருந்தது. பின்பு ஒரு சமயம், பிசாசானவனை கண்டிக்க இயேசு வேதவசனங்களைப் பயன்படுத்தி சொன்னதாவது: “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.” (மத்தேயு 4:3-10) அதன்பின் சீக்கிரத்திலேயே, வேதவசனங்களை உபயோகித்து தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்தில் உள்ளவர்களுக்கு இயேசு பிரசங்கித்தார்.—லூக்கா 4:16-21.
15. மற்றவர்களுக்குப் பிரசங்கிக்கையில் இயேசு எப்படி முன்மாதிரி வைத்தார்?
15 இயேசு தம்முடைய போதகங்களுக்கு ஆதாரமாக கடவுளுடைய வார்த்தையிலிருந்து அடிக்கடி மேற்கோள் காட்டி பேசினார். அவர் பேசியதைக் கேட்டவர்கள். “அவருடைய போதக முறையைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள்” (மத்தேயு 7:29, NW) சந்தேகமில்லாமல், இயேசுவின் போதகங்கள் யெகோவா தேவனிடமிருந்தே வந்ததுதான்! இயேசுதாமே சொன்னார்: “என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது. சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுயமகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை.”—யோவான் 7:16, 18.
16. கடவுளுடைய வார்த்தையின்மீது தம்முடைய பற்றார்வத்தை இயேசு எந்தளவு வெளிப்படுத்திக் காட்டினார்?
16 119-வது சங்கீதத்தின் எழுத்தாளரைப்போல் இல்லாமல், இயேசுவில் “அநீதியில்லை.” அவர் பாவமற்றவர், கடவுளுடைய குமாரனாக ‘மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினவர்.’ (பிலிப்பியர் 2:8; எபிரெயர் 7:26) இயேசு பரிபூரணராக இருந்தபோதிலும், கடவுளுடைய நியாயப்பிரமாணத்தைப் படித்து, அதற்கு கீழ்ப்படிந்தார். அவர் தம்முடைய உத்தமத்தைக் காத்துக்கொள்ள முக்கிய காரணம் இதுவே. தன் எஜமானர் கைதுசெய்யப்படுவதைத் தடுப்பதற்கு பேதுரு ஒரு பட்டயத்தைப் பயன்படுத்தியபோது, இயேசு அந்த அப்போஸ்தலனை கடிந்துகொண்டு இவ்வாறு கேட்டார்: “நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா? அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேத வாக்கியங்கள் எப்படி நிறைவேறும்.” (மத்தேயு 26:53, 54) ஆம், அவமதிப்பான கொடூர மரணத்திலிருந்து தப்பித்துக்கொள்வதைப் பார்க்கிலும், வேதவாக்கியங்கள் நிறைவேறுவதிலேயே இயேசு அதிக ஆர்வமுள்ளவராய் இருந்தார். கடவுளுடைய வார்த்தையின்மீது எப்பேர்ப்பட்ட நிகரற்ற பற்றார்வம்!
கிறிஸ்துவின் மாதிரியைப் பின்பற்றிய மற்றவர்கள்
17. அப்போஸ்தலன் பவுலுக்கு கடவுளுடைய வார்த்தை எந்தளவு முக்கியமாயிருந்தது?
17 உடன் கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்.” (1 கொரிந்தியர் 11:1) தன் எஜமானரைப்போல் பவுல், வேதவாக்கியங்களின்மீது அதிக பற்றுதலை வளர்த்திருந்தார். “உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன்” என்று அவர் சொன்னார். (ரோமர் 7:22) கடவுளுடைய வார்த்தையை பவுல் அடிக்கடி மேற்கோள் காட்டி பேசினார். (அப்போஸ்தலர் 13:32-41; 17:2, 3; 28:23) மிகவும் பிரியமுள்ள உடன் ஊழியனாகிய தீமோத்தேயுவுக்கு இறுதி போதனைகளை பவுல் கொடுக்கையில், “தேவனுடைய மனுஷன்” ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கையில் கடவுளுடைய வார்த்தை செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை அறிவுறுத்தினார்.—2 தீமோத்தேயு 3:15-17.
18. தற்காலங்களில், கடவுளுடைய வார்த்தைக்குப் போற்றுதலை காண்பித்த ஒருவரின் முன்மாதிரியைக் குறிப்பிடுங்கள்.
18 தற்காலங்களில் யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்கள் பலர், கடவுளுடைய வார்த்தையின்மீது இயேசுவுக்கு இருந்த பற்றுதலின் மாதிரியை அப்படியே பின்பற்றியிருக்கிறார்கள். இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், இளைஞர் ஒருவர் தன் நண்பரிடமிருந்து பைபிள் ஒன்றைப் பெற்றிருந்தார். இந்த மிக அருமையான பரிசு, தன்னில் செல்வாக்கு செலுத்திய விதத்தை அவர் இவ்வாறு விவரித்தார்: “பைபிளின் ஒரு பாகத்தை ஒவ்வொரு நாளும் தவறாமல் வாசிப்பதை என் வாழ்க்கையில் கட்டாயம் பின்பற்ற வேண்டுமென தீர்மானித்தேன்.” அந்த இளைஞர்தான் ஃபிரெட்ரிக் ஃபிரான்ஸ். பைபிளில் அவருக்கிருந்த பற்றார்வம், யெகோவாவின் சேவையில் நீண்ட காலம் வெற்றிகரமான வாழ்க்கையை அனுபவித்து மகிழும்படி அவரை வழிநடத்தியது. அவருக்கிருந்த மிகுந்த பற்றுதல் காரணமாக பைபிளின் சில அதிகாரங்கள் முழுவதையும் பாராமல் சொல்லும் அவருடைய திறமைக்காக அவர் அன்பாக நினைவுகூரப்படுகிறார்.
19. தேவராஜ்ய ஊழியப் பள்ளியின் வாராந்தர பைபிள் வாசிப்பு பகுதியை வாசிக்க சிலர் எவ்வாறு திட்டமிடுகிறார்கள்?
19 தவறாமல் பைபிள் வாசிப்பதற்கு யெகோவாவின் சாட்சிகள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஒவ்வொரு வாரமும் தங்கள் கிறிஸ்தவக் கூட்டங்களில் ஒன்றான தேவராஜ்ய ஊழியப் பள்ளிக்குத் தயாரிக்கையில் பைபிளின் பல அதிகாரங்களை வாசிக்கிறார்கள். நியமிக்கப்பட்ட பைபிள் வாசிப்புப் பகுதியின் முக்கிய குறிப்புகள் அந்தக் கூட்டத்தின்போது கலந்தாலோசிக்கப்படுகின்றன. ஒரு வாரத்திற்குரிய பைபிள் வாசிப்பு பகுதியை ஏழு சிறிய பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு நாளும் ஒரு பகுதியை வாசிப்பதை சில சாட்சிகள் வசதியாக காண்கிறார்கள். அவர்கள் வாசிக்கையில், அதன் பொருளைப் பற்றி சிந்திக்கிறார்கள். முடிந்தபோது, பைபிள் சார்ந்த பிரசுரங்களின் உதவியோடு அவர்கள் கூடுதல் ஆராய்ச்சி செய்கிறார்கள்.
20. தவறாமல் பைபிள் வாசிப்பதற்கு நேரத்தைக் கண்டடைய எது அவசியம்?
20 பைபிளை தவறாமல் வாசிப்பதற்கு, மற்ற வேலைகளிலிருந்து நீங்கள் ‘நேரத்தை விலைக்கு வாங்க’ வேண்டியிருக்கலாம். (எபேசியர் 5:16, NW) எனினும், அதன் பலன்கள் எந்தத் தியாகங்களுக்கும் மிக மேம்பட்டவை. தினந்தோறும் பைபிள் வாசிக்கும் பழக்கத்தை நீங்கள் வளர்த்துக்கொள்கையில், கடவுளுடைய வார்த்தையின் மீதுள்ள உங்கள் பிரியம் பெருகும். சீக்கிரத்தில், நீங்கள் சங்கீதக்காரரோடு சேர்ந்து இவ்வாறு சொல்லும்படி உந்துவிக்கப்படுவீர்கள்: “உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள் முழுவதும் அது என் தியானம்.” (சங்கீதம் 119:97) அடுத்தக் கட்டுரை விளக்கவிருக்கிறபடி, இத்தகைய மனப்பான்மை இப்பொழுதும் எதிர்காலத்திலும் ஏராளமான நன்மைகளை அள்ளி வழங்கும்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ சங்கீதம் 119-ஐ எழுதியவர், கடவுளுடைய வார்த்தையில் ஆழ்ந்த பற்றார்வத்தை எவ்வாறு வெளிக்காட்டினார்?
◻ இயேசு மற்றும் பவுலின் முன்மாதிரிகளிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
◻ கடவுளுடைய வார்த்தை மீதுள்ள நம் பற்றார்வத்தில் நாம் ஒவ்வொருவரும் எவ்வாறு பெருகலாம்?
[பக்கம் 10-ன் படங்கள்]
நேர்மையான அரசர்கள் கடவுளுடைய வார்த்தையை தவறாமல் வாசிக்க வேண்டியிருந்தது. நீங்கள் அவ்வாறு வாசிக்கிறீர்களா?
[பக்கம் 12-ன் படம்]
சிறுவயதிலேயே கடவுளுடைய வார்த்தையில் இயேசு பிரியமுள்ளவராக இருந்தார்