உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w99 11/1 பக். 24-28
  • யெகோவா எனக்கு தயவானவர்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவா எனக்கு தயவானவர்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • புதுமண வாழ்வும் சிறைவாசமும்
  • ஒருபோதும் வருத்தப்படாதபடிக்கு எடுத்த முடிவுகள்
  • கஷ்டத்திலும் நஷ்டத்திலும் சேவை
  • ஓர் இன்ப அதிர்ச்சி
  • ‘நோயுற்று படுக்கையில் இருக்கையில்’
  • யெகோவா எங்கள் சகாயர்
  • ‘நான் நம்புகிறேன்’
    இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்
  • ‘நான் நம்புகிறேன்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • உயிர்த்தெழுதல் நம்பிக்கை
    எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர்
  • மார்த்தாளுக்கு புத்திமதியும், ஜெபத்தின் பேரில் அறிவுரையும்
    எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர்
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
w99 11/1 பக். 24-28

யெகோவா எனக்கு தயவானவர்

ஜான் ஆன்ரோனிகோஸ் சொன்னபடி

அது 1956-ம் வருஷம். எனக்கு கல்யாணமாகி ஒன்பதே நாளில் வட கிரீஸிலுள்ள கோமோடினி அப்பீல் கோர்ட்டில் நின்றேன். கடவுளுடைய ராஜ்யத்தைப் பிரசங்கித்ததற்காக கிடைத்த பன்னிரண்டு மாத தண்டனை ரத்து செய்யப்படும் என்று உறுதியாக நம்பினேன். ஆறு மாத சிறை தண்டனை என்ற கோர்ட்டின் தீர்ப்பு என் நம்பிக்கையை சுக்குநூறாக்கியது. அடுக்கடுக்காக அனுபவிக்கப்போகும் சோதனைகளுக்கு அது ஆரம்பமாகத்தான் இருந்தது. ஆனால் இவையெல்லாவற்றிலும் யெகோவாவின் தயவு எனக்கு இருந்தது.

நான் அக்டோபர் 1, 1931-ல் பிறந்தேன். அப்போது என்னுடைய குடும்பத்தார் காவாலா நகரத்தில், அதாவது பவுல் தன்னுடைய இரண்டாம் மிஷனரி பயணத்தின்போது சந்தித்த மாசிதோனியாவிலுள்ள நிக்கொப்போலியில் வசித்து வந்தனர். எனக்கு ஐந்து வயது இருக்கும்போது அம்மா யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரானார். அம்மா அவ்வளவாக படிக்காதவர். இருந்தாலும், தன்னால் முடிந்தவரை எனக்கு தெய்வீக அன்பையும் தேவ பயத்தையும் புகட்டினார். என் அப்பா கிரேக்க ஆர்த்தடாக்ஸ் பாரம்பரியத்தில் ஊறிப் போனவர். அவருக்கு பைபிள் சத்தியத்தில் அக்கறையில்லை. எப்போதும் அம்மாவை கொடுமைப்படுத்திக் கொண்டேயிருந்தார்.

இப்படி அடிதடிகளும் சண்டைகளும் நிறைந்த பிளவுபட்ட ஒரு குடும்ப சூழ்நிலையில் நான் வளர்ந்து வந்தேன். சிறு வயதிலிருந்தே என்னையும் என் தங்கச்சியையும் கிறிஸ்தவ கூட்டங்களுக்கு அம்மா கூட்டிக்கொண்டு போவார்கள். ஆனால், எனக்கு 15 வயசானபோது வாலிபத்தின் ஆசைகளும் மனம்போல் வாழவேண்டும் என்ற மனப்பான்மையும் யெகோவாவின் சாட்சிகளிடமிருந்து என்னை திசைத் திருப்பிவிட்டது. இருந்தாலும், எனக்கு உதவ அம்மா கண்ணீரோடு கடுமையாக பிரயாசப்பட்டார்.

ஏழ்மையாலும் ஒழுக்கங்கெட்ட வாழ்க்கையாலும் நான் மோசமான வியாதிக்குள்ளாகி மூன்று மாதங்களுக்கு மேல் படுக்கையிலே இருக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. அப்போது சத்தியத்தை கற்றுக்கொள்ள அம்மாவுக்கு உதவியாயிருந்த தாழ்மைகுணம் படைத்த சகோதரர் ஒருவர் கடவுளிடம் உண்மையான அன்பு காட்டுவதை எனக்கு உணர்த்தினார். நான் ஆவிக்குரிய விதமாக குணமடைய உதவ முடியும் என அவர் உணர்ந்தார். “ஜானிடம் நேரத்தைச் செலவழிப்பது வீண். அவனை ஒருபோதும் திருத்தவே முடியாது” என மற்றவர்கள் அவரிடம் சொன்னார்கள். ஆனால் அந்த சகோதரரின் பொறுமையும் எனக்கு உதவுவதில் அவருடைய விடாமுயற்சியும் பலன் தந்தது. ஆகஸ்ட் 15, 1952 அன்று 21-வது வயதில் நான் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற்றேன்.

புதுமண வாழ்வும் சிறைவாசமும்

மூன்று வருடங்களுக்குப்பின், ஆவிக்குரிய காரியங்களில் முதிர்ச்சியையும் கிறிஸ்தவ பண்புகளையும் உடைய மார்த்தா என்னும் சகோதரியிடம் நட்புகொண்டேன். சீக்கிரத்திலேயே நாங்கள் திருமண நிச்சயமும் செய்துகொண்டோம். ஒருநாள் மார்த்தா என்னிடம், “இன்றைக்கு நான் வீட்டுக்கு வீடு ஊழியத்திற்குப் போகிறேன். நீங்க என்னோடு வர்றீங்களா?” என்று கேட்டபோது எனக்கு ஒரே ஆச்சரியம். அந்தச் சமயத்தில் கிரீஸில் பிரசங்க வேலை தடை செய்யப்பட்டிருந்தது. ஆகவே எங்களுடைய பிரசங்க வேலையை இரகசியமாக செய்ய வேண்டியிருந்தது. இதற்குமுன் ஒருபோதும் நான் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்ததில்லை. பெரும்பாலும் சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதைத்தான் செய்து வந்தேன். அதனால் நிறைய தடவை கைதானோம், நீதிமன்ற விசாரணைகள் வந்தது, கடுமையான சிறை தண்டனைகளும் கிடைத்தது. இவை அனைத்தின் மத்தியிலும் நிச்சயிக்கப்பட்ட என்னுடைய மனைவியிடம் நான் வரவில்லை என்று என்னால் சொல்ல முடியவில்லை!

1956-ல் மார்த்தா என் மனைவியானாள். அப்போதுதான் மேலே சொன்னபடி எங்களுடைய திருமணம் முடிந்து ஒன்பது நாட்களில் கோமோடினி அப்பீல் கோர்ட் ஆறு மாத சிறை தண்டனை விதித்தது. இது சில நாட்களுக்கு முன்பு என் அம்மாவின் சிநேகிதியாகிய ஒரு சகோதரியிடம் நான் கேட்ட கேள்வியை என் மனதிற்கு கொண்டு வந்தது. அந்தக் கேள்வியானது, “நான் ஒரு உண்மையான யெகோவாவின் சாட்சி என்பதை எப்படி காட்ட முடியும்? என்னுடைய விசுவாசத்தை நிரூபிப்பதற்கு இதுவரை எந்த சந்தர்ப்பமும் அளிக்கப்படவில்லை.” சிறைச்சாலையில் என்னை பார்க்க வந்தபோது அந்தச் சகோதரி அந்தக் கேள்வியை ஞாபகப்படுத்தி இப்படி சொன்னார்கள்: “யெகோவாவை எந்தளவுக்கு நேசிக்கிறீர்கள் என்பதை இப்பொழுது நீங்கள் காட்டலாம். இது உங்களுக்கு ஒப்படைத்துள்ள ஒரு வேலை.”

என்னுடைய வக்கீல் என்னை ஜெயிலிலிருந்து விடுவிப்பதற்காக அதிக பணம் கேட்க முயற்சிப்பதை அறிந்தபோது, நான் என்னுடைய தண்டனை காலத்தை முடிக்கவே விரும்புகிறேன் என்பதாக அவரிடம் சொன்னேன். அந்த ஆறு மாத சிறை தண்டனையின் முடிவில் என்னுடன் சிறையில் இருந்த இருவர் சத்தியத்தை ஏற்றுக் கொண்டதை கண்டபோது நான் எவ்வளவாய் மகிழ்ச்சியடைந்தேன்! தொடர்ந்து வந்த வருடங்களில் நற்செய்தியின் நிமித்தம் நான் எண்ணற்ற வழக்குகளில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

ஒருபோதும் வருத்தப்படாதபடிக்கு எடுத்த முடிவுகள்

நான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட இரண்டு வருஷங்களுக்குப்பின் 1959-ல் சபை ஊழியனாக அல்லது நடத்தும் கண்காணியாக சேவை செய்து கொண்டிருந்தேன். மேலும் சபை மூப்பர்களுக்கான ராஜ்ய ஊழியப் பள்ளி பயிற்சியில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டேன். அதே சமயத்தில் ஒரு பொது மருத்துவமனையில் எனக்கும் என் குடும்பத்திற்கும் வாழ்நாள் முழுவதும் பண உதவியளிக்கும் ஒரு நிரந்தர வேலையும் கிடைத்தது. நான் எதை தேர்ந்தெடுப்பது? நான் ஏற்கனவே அந்த மருத்துவமனையில் மூன்று மாதம் தற்காலிகமாக பணிபுரிந்து வந்தேன். அதன் இயக்குநர் என் வேலையில் அதிக திருப்தி உள்ளவராக இருந்தார். ஆனால் பள்ளி பயிற்சிக்கு அழைப்பு வந்தபோது, சம்பளமில்லா விடுப்புக்குக்கூட அனுமதி தரவில்லை. இவ்விரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதை ஜெபத்தோடு சிந்தித்தபின் ராஜ்ய அக்கறைகளுக்கு முதலிடம் கொடுத்து வேலையை விட்டுவிடுவது என தீர்மானித்தேன்.​—மத்தேயு 6:33.

அந்தச் சந்தர்ப்பத்தில் மாவட்ட மற்றும் வட்டார கண்காணிகள் எங்கள் சபைக்கு வந்தனர். நாங்கள் கூட்டங்களை தனிப்பட்ட வீடுகளில் இரகசியமாக நடத்த வேண்டியிருந்தது. ஏனென்றால் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் மதவகுப்பார் மற்றும் அதிகாரிகளின் பலமான எதிர்ப்பு இருந்தது. ஒரு கூட்டம் முடிந்தபின் மாவட்ட கண்காணி என்னை அணுகி முழுநேர சேவை செய்வதற்கான எண்ணம் இருக்கிறதா என கேட்டார். அவருடைய ஆலோசனை . . . என் இருதய துடிப்பையே தொட்டுவிட்டது. ஏனென்றால் முழுக்காட்டுதல் பெற்றது முதற்கொண்டே இது என் நீண்டநாள் கனவாகவே இருந்தது. “முழுநேர ஊழியனாவதற்கு எனக்கு ரொம்ப விருப்பம்” என பதிலளித்தேன். இருந்தாலும், ஒரு பெண் குழந்தையை வளர்ப்பதற்கான கூடுதல் பொறுப்பும் எனக்கு இருந்தது. அந்தச் சகோதரர் சொன்னார்: “யெகோவாவில் நம்பிக்கை வையுங்கள். உங்களுடைய திட்டங்களை நிறைவேற்ற அவர் உங்களுக்கு உதவுவார்.” இவ்வாறு, எங்களுடைய குடும்ப பொறுப்புகளை தட்டிக்கழிக்காமலேயே நானும் என்னுடைய மனைவியும் எங்களுடைய சூழ்நிலைமைகளை மாற்றி அமைத்துக்கொள்ள முடிந்தது. ஆகவே, டிசம்பர் 1960-ல் கிழக்கு மாசிதோனியாவில் விசேஷித்த பயனியராக சேவை செய்ய ஆரம்பித்தேன்​—அந்த நாட்டிலிருந்த ஐந்தே விசேஷித்த பயனியர்களில் ஒருவராக.

விசேஷித்த பயனியராக ஒரு வருஷம் சேவை செய்த பிறகு ஏதென்ஸ் கிளை அலுவலகம் பிரயாண கண்காணியாக சேவை செய்வதற்கு என்னை அழைத்தது. இந்தச் சேவைக்கான ஒரு மாத பயிற்சி பெற்று வீட்டிற்கு திரும்பி, மார்த்தாவிடம் என்னுடைய அனுபவங்களை விளக்கிக் கொண்டிருக்கையில் பெரிய மாங்கனீஸ் சுரங்கத்தின் இயக்குநர் என்னுடைய வீட்டிற்கு வந்தார். அச்சுரங்கத்தின் சுத்திகரிப்பு பிரிவின் மானேஜராக இருக்கும்படி என்னை அழைத்தார். ஐந்து வருட ஒப்பந்தமும், ஒரு நல்ல வீடும், வாகனமும் அளிப்பதாக கூறினார். என்னுடைய பதிலுக்கு இரண்டு நாட்கள் அவகாசம் கொடுத்தார். திரும்பவும் தயங்காமல் நான் யெகோவாவிடம் ஜெபம் செய்தேன்: “இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்.” (ஏசாயா 6:8) என் மனைவி முழு ஒத்திசைவை காட்டினாள். யெகோவாவில் சார்ந்திருந்து நாங்கள் பிரயாண வேலையை ஆரம்பித்தோம். தயவான யெகோவாவும் ஒருபோதும் எங்களைக் கைவிடவில்லை.

கஷ்டத்திலும் நஷ்டத்திலும் சேவை

பொருளாதார பிரச்சினைகள் இருந்தபோதிலும் நாங்கள் முன்னோக்கி சென்றோம், யெகோவா எங்கள் தேவைகளை நிறைவு செய்தார். ஆரம்பத்தில் 500 கிலோமீட்டர் வரை ஒரு சிறிய மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து சபைகளைச் சந்தித்தேன். அநேக சமயங்களில் கஷ்டங்களும் சில விபத்துக்களும் ஏற்பட்டது. ஒரு பனிக்காலத்தில் சபையிலிருந்து திரும்புகையில் வேகமாக பாய்ந்தோடும் நீரோடையை கடக்க வேண்டியிருந்தது. அப்போது மோட்டார் செயலிழந்து போக, நான் முழங்கால் வரை நனைந்துவிட்டேன். மோட்டார் சைக்கிளின் டயரில் காற்றும் இறங்கிவிட்டது. காற்றடைக்கும் பம்பை வைத்திருந்த ஒருவர் அந்த வழியே சென்றுகொண்டிருந்தார். அவர் உதவியதால் பக்கத்திலுள்ள கிராமம் வரை செல்ல முடிந்தது. அங்கே டயரை ரிப்பேர் செய்துவிட்டு, கடைசியாக விடியற்காலை 3 மணியளவில் கடும் குளிரில் சோர்ந்துபோய் வீடுவந்து சேர்ந்தேன்.

மற்றொரு சந்தர்ப்பத்தில் நான் ஒரு சபையிலிருந்து அடுத்த சபைக்கு சென்றுகொண்டிருக்கையில் மோட்டார் சைக்கிள் சறுக்கி என் கால் மூட்டின்மேல் விழுந்து விட்டது. அதனால் என்னுடைய பேண்ட் கிழிந்து இரத்தத்தில் ஊறிப்போய் விட்டது. என்னிடம் வேறு பேண்ட்டும் இல்லை. ஆகவே மற்றொரு சகோதரருடைய பேண்ட்டை போட்டுக்கொண்டு அன்னைக்கு சாயங்காலம் பேச்சைக் கொடுத்தேன். அந்தப் பேண்ட் எனக்கு தொளதொளவென்று இருந்தது. இருந்தபோதிலும், யெகோவாவையும் அன்பார்ந்த சகோதரர்களையும் சேவிக்கும் என் வாஞ்சையை எந்த இடையூறும் தடுத்து நிறுத்த முடியவில்லை.

மற்றொரு விபத்தின்போது, பலமான காயம் ஏற்பட்டுவிட்டது. என் கை முறிந்து முன் பற்கள் விழுந்து விட்டன. ஐக்கிய மாகாணங்களில் வாழும் என் இளைய தங்கை என்னை பார்க்க அப்போதுதான் வந்திருந்தாள். அவள் ஒரு சாட்சியல்ல. ஒரு மோட்டார் வண்டியை வாங்க அவள் உதவியது எவ்வளவு ஆறுதலாக இருந்தது! ஏதென்ஸ் கிளை அலுவலகத்திலுள்ள சகோதரர்கள் என் விபத்தைப் பற்றிய செய்தியை கேள்விப்பட்டபோது அவர்கள் உற்சாகமூட்டும் கடிதம் ஒன்றை எழுதினார்கள். அதில் ரோமர் 8:28-ன் வார்த்தைகளும் சேர்க்கப்பட்டிருந்தது. அது இவ்வாறு சொல்கிறது: “தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.” மறுபடியும் மறுபடியும் இந்த நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் என் வாழ்க்கையில் உண்மையாக நிரூபித்தன!

ஓர் இன்ப அதிர்ச்சி

1963-ல் நான் விசேஷித்த பயனியர் ஒருவருடன் ஒரு கிராமத்தில் வேலை செய்துகொண்டிருந்தேன். அந்தக் கிராமத்து மக்கள் சரியான பிரதிபலிப்பை காட்டவில்லை. எனவே, ஒவ்வொருவரும் தனித்தனியாக பிரிந்து தெருவின் வெவ்வேறு பகுதியில் வேலை செய்ய தீர்மானித்தோம். ஒரு வீட்டின் கதவை தட்டிய மாத்திரத்தில் ஒரு பெண் வேகமாக வந்து என்னை வீட்டிற்குள் தள்ளி வெளியே கதவை தாழிட்டாள். நான் மனம் குழம்பிப்போய் என்ன நடந்துவிட்டது என யோசித்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்திற்குள் அவள் அந்த விசேஷித்த பயனியரையும் வேகமாக வீட்டிற்குள் அழைத்து வந்தாள். பின் அந்த பெண் எங்களிடம், “உஷ்! இங்கிருந்து அசையாதீர்கள்” என்று சொன்னாள்: கொஞ்ச நேரத்தில் வெளியே மூர்க்கமான கூச்சலை கேட்டோம். ஜனங்கள் எங்களுக்காக வலைவீசி தேடிக்கொண்டிருந்தார்கள். எல்லாம் அமைதியானபின் அந்தப் பெண் சொன்னாள்: “உங்களை காப்பாற்றுவதற்காகத்தான் நான் இப்படி செய்தேன். நான் உங்களை மதிக்கிறேன். ஏனென்றால் நீங்கள் உண்மையான கிறிஸ்தவர்கள் என்பதை நான் நம்புகிறேன்.” நாங்கள் அவளுக்கு அநேக பிரசுரங்களை அளித்து மனதார நன்றிகூறி வீடு திரும்பினோம்.

பதினான்கு வருஷங்களுக்குப்பின் கிரீஸில் நடந்த மாவட்ட மாநாட்டில், ஒரு பெண் என்னை அணுகி சொன்னாள்: “சகோதரரே, என்னை உங்களுக்கு நினைவிருக்கிறதா? எங்கள் கிராமத்தில் சாட்சி கொடுக்க வந்தபோது எதிரிகளிடமிருந்து உங்களை காப்பாற்றிய அந்தப் பெண்தான் நான்.” அவள் ஜெர்மனிக்கு குடிபெயர்ந்து பைபிளை படித்து யெகோவாவின் ஜனங்களோடு கூட்டுறவு கொண்டாள். இப்பொழுது, அவளுடைய முழுக் குடும்பமும் சத்தியத்தில்!

உண்மையிலேயே இந்த எல்லா சமயத்திலும் நாங்கள் அநேக ‘நற்சான்று கடிதங்களால்’ உற்சாகமளிக்கப்பட்டோம். (2 கொரிந்தியர் 3:1, பொ.மொ.) அநேகர் பைபிள் சத்தியத்தை கற்றுக்கொள்ள உதவும் சிலாக்கியத்தை நாங்கள் பெற்றோம். அவர்கள் இப்பொழுது மூப்பர்களாகவும் உதவி ஊழியர்களாகவும் பயனியர்களாகவும் சேவை செய்கிறார்கள். 1960-களின் ஆரம்பத்தில் யெகோவாவை சேவித்த சிறிய எண்ணிக்கையான பிரஸ்தாபிகள் இப்பொழுது 10,000-க்கும் மேலான பிரஸ்தாபிகளாக அதிகரித்திருப்பதை காண்பது இதயத்திற்கு எவ்வளவு இன்பமளிப்பதாய் இருக்கிறது! எல்லா புகழும் நம்மை அவருடைய வழியில் நடத்தும் தயவான கடவுளுக்கே உரியது.

‘நோயுற்று படுக்கையில் இருக்கையில்’

பல வருஷங்களாக செய்துவந்த எங்களுடைய பிரயாண ஊழியத்தின்போது மார்த்தா மிகச் சிறந்த துணையாக இருந்தாள். எப்பொழுதும் மகிழ்ச்சியான மனநிலையோடு இருந்தாள். இருந்தாலும், அக்டோபர் 1976-ல் அவள் ஒரு மோசமான வியாதிக்குள்ளானாள். வேதனைதரும் அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. முடக்குவாதத்தின் காரணமாக சக்கர நாற்காலியிலேயே வாழ்க்கையை போக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. செலவுகளையும் உணர்ச்சி சம்பந்தப்பட்ட வேதனையையும் எங்களால் எப்படி சமாளிக்க முடிந்தது? மறுபடியும் யெகோவாவில் சார்ந்திருப்பதன்மூலம் அவருடைய அன்பான மற்றும் தாராள குணத்தை நாங்கள் உணர்ந்தோம். நான் மாசிதோனியாவில் சேவைசெய்ய புறப்படுகையில் மார்த்தா ஏதென்ஸிலுள்ள ஒரு சகோதரருடைய வீட்டில் மருத்துவ சிகிச்சைக்காக தங்கிவிட்டாள். உற்சாகமூட்டும் வார்த்தைகளால் மார்த்தா போன் செய்வாள்: “நான் சுகமாக இருக்கிறேன். என்னைப் பற்றி அதிகம் கவலைப்படாமல் உங்களுடைய சேவையை தொடர்ந்து செய்யுங்கள். ஓரளவு தேறியதும் சக்கர நாற்காலியிலேயே உங்களுடன் சேவையில் மறுபடியும் கலந்துகொள்வேன்.” அதைத்தான் மார்த்தா செய்தாள். எங்களுடைய அன்பார்ந்த சகோதரர்கள் பெத்தேலிலிருந்து அநேக உற்சாகமூட்டும் கடிதங்களை எழுதினார்கள். மார்த்தா அடிக்கடி சங்கீதம் 41:3-ல் (பொ.மொ.) உள்ள வார்த்தைகளை நினைவுபடுத்திப் பார்ப்பாள்: “படுக்கையில் அவர் நோயுற்று கிடக்கையில் . . . நோய்நீங்கிப் படுக்கையினின்று அவர் எழும்பும்படிச் செய்வார்.”

இந்த மோசமான வியாதியால், நான் என் மகளின் குடும்பத்திற்கு அருகிலுள்ள காவாலாவில் விசேஷ பயனியராக சேவை செய்வது பொருத்தமானதாக இருக்கும் என 1986-ல் தீர்மானித்தேன். முடிவுவரை உண்மையுள்ளவளாக இருந்து கடந்த மார்ச் மாதத்தில் மார்த்தா இறந்து விட்டாள். அவள் மரிப்பதற்கு முன்பாக, சகோதரர்கள் அடிக்கடி வீட்டிற்கு வந்து “எப்படி இருக்கிறீர்கள்?” என்று மார்த்தாவிடம் கேட்கையில் “நான் இன்னும் யெகோவாவிடம் நெருக்கமாக இருக்கிறேன், நான் நன்றாக இருக்கிறேன்!” என்றே பொதுவாக பதிலளிப்பாள். நாங்கள் கூட்டங்களுக்காக தயாரிக்கையில் அல்லது அறுவடை அதிகமாக இருக்கும் இடங்களுக்குச் சென்று சேவை செய்வதற்கான கவர்ச்சியூட்டும் அழைப்பை பெறுகையில் மார்த்தா இவ்வாறு சொல்வாள்: “ஜான், நாம் தேவை அதிகமாக இருக்கும் இடத்திற்குச் சேவை செய்ய போகலாம்.” அவள் தன்னுடைய வைராக்கியத்தை ஒருபோதும் இழந்துவிடவில்லை.

சில வருடங்களுக்குமுன், எனக்கும் உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டது. மார்ச் 1994-ல், உயிருக்கு ஆபத்தான இருதயநோய் இருப்பதாக கண்டறிந்தார்கள், அதனால் உடனடியாக அறுவை சிகிச்சையும் செய்யவேண்டியதாயிற்று. மறுபடியும் அந்தக் கஷ்டமான சூழ்நிலையில் யெகோவாவின் அன்பான கரம் என்னை தாங்குவதை உணர்ந்தேன். நான் அவசர சிகிச்சை பிரிவைவிட்டு வெளியே வந்தபின் என் படுக்கை அருகே வட்டார கண்காணி ஜெபம் செய்ததையும் சத்தியத்தின்பேரில் அக்கறை காட்டிய நான்கு நோயாளிகளுடன் மருத்துவமனையில் நினைவு ஆசரிப்பை நான் நடத்தியதையும் ஒருபோதும் மறக்கமாட்டேன்.

யெகோவா எங்கள் சகாயர்

காலம் பறந்தோடுகிறது, எங்கள் மாமிசம் பலவீனமடைகிறது. ஆனால் எங்கள் ஆவியோ படிப்பினாலும் ஊழியத்தினாலும் புதிதாக்கப்படுகிறது. (2 கொரிந்தியர் 4:16) “இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்” என்று நான் சொன்னதிலிருந்து இப்பொழுது 39 வருடங்கள் கடந்துவிட்டது. இது திருப்தியான, மகிழ்ச்சியான பலன்தரும் வாழ்க்கையாக இருந்திருக்கிறது. ஆம், சில சமயங்களில் ‘நான் சிறுமையும் எளிமையுமானவனாக’ உணருகிறேன். ஆனாலும் நான் உறுதியாக யெகோவாவிடம் சொல்ல முடியும்: “தேவரீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர்.” (சங்கீதம் 40:17) அவர் உண்மையிலேயே எனக்கு தயவுள்ள கடவுள்.

[பக்கம் 25-ன் படம்]

1956-ல் மார்த்தாவுடன்

[பக்கம் 26-ன் படம்]

காவாலாவில் உள்ள துறைமுகம்

[பக்கம் 26-ன் படம்]

1997-ல் மார்த்தாவுடன்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்