இன்றியமையா கேள்விகளுக்கு பைபிளின் பதில்கள்
பைபிள் இந்தக் காலத்திற்கு ஏற்றதா? ஆம் என்பதே பதிலானால், இந்தப் பண்டைய நூல் இந்தக் காலத்திற்கு ஏற்ற, அக்கறைக்குரிய விஷயங்களின் பேரில் வாசகர்களுக்கு நிச்சயமாகவே வழிநடத்துதலை வழங்க வேண்டும். இன்றைய உலகில் உண்மையிலேயே முக்கியத்துவமுள்ள விஷயங்களுக்கு பயனளிக்கும் அறிவுரையை பைபிள் தருகிறதா?
தற்காலத்தில் எதிர்ப்படும் இரண்டு விவாதங்களை இப்பொழுது ஆராயலாம். அதோடு, இந்த விஷயங்களைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதையும் ஆராயலாம்.
கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார்?
இன்றைய உலக நிலைமைகளை பார்க்கையில், சர்வசாதாரணமாக கேட்கப்படும் ஒரு கேள்வி: அப்பாவி ஜனங்கள் துன்பப்படுவதை ஏன் கடவுள் அனுமதிக்கிறார்? இந்தக் கேள்வி நியாயமானதே. ஏனெனில் கொடூரமான குற்றச்செயல், ஊழல், படுகொலை, வாழ்க்கையின் துயரங்கள், இன்னும் இதுபோன்ற அநேக துன்பங்களால் பெரும்பாலான ஜனங்கள் அவதியுறுகிறார்கள்.
உதாரணமாக, 1998 ஜூன் மாதத்தில், வட ஜெர்மனியில் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று ஒரு பாலத்தில் மோதி நொறுங்கியதால் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் மாண்டனர். இறந்தவர்களையும் காயம்பட்டவர்களையும் மீட்கச் சென்ற அனுபவமிக்க மருத்துவர்களும் தீயணைப்பு துறையினரும்கூட இந்த இரத்தக் களறியைக் கண்டு உறைந்துவிட்டனர். இவான்ஜிலிக்கல் சர்ச் பிஷப் ஒருவர் இவ்வாறு கேட்டார்: “அன்புள்ள ஆண்டவரே, ஏன் இப்படி சம்பவிக்க வேண்டும்?” பிஷப் இதற்கு பதில் சொல்லவில்லை.
அப்பாவி ஜனங்கள் காரணமின்றி துன்பப்படும்போது அவர்கள் மிகவும் மனக்கசப்படைந்து விடுவதை அனுபவங்கள் காட்டுகின்றன. இங்குதான் பைபிள் உதவிக் கரம் நீட்டுகிறது. ஏனெனில் அப்பாவி ஜனங்கள் துன்பப்படுவதற்கான காரணத்தை அது விளக்குகிறது.
யெகோவா இந்தப் பூமியையும் அதிலுள்ள யாவற்றையும் படைத்தபோது, மனிதவர்க்கத்தினர் துன்பப்பட வேண்டுமென்று அவர் துளிகூட நினைக்கவில்லை. நாம் எப்படி உறுதியாக நம்பலாம்? ஏனெனில் அவருடைய படைப்பு வேலையை முடித்தப்பின், “தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது.” (ஆதியாகமம் 1:31) நீங்களே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: “ஏதாவது கெட்ட காரியத்தைப் பார்த்தால், ‘அது மிகவும் நன்றாயிருக்கிறது’ என்று நான் சொல்வேனா?” நிச்சயமாகவே சொல்ல மாட்டீர்கள்! அது போலவே, ‘மிகவும் நன்றாயிருக்கிறது’ என்று கடவுள் சொன்னபோது, பூமியில் துன்மார்க்கத்திற்கான எந்தத் தடயமும் இல்லை. அப்படியானால், எப்போது, எப்படி துன்மார்க்கம் ஆரம்பமானது?
நம்முடைய முதல் பெற்றோராகிய ஆதாம் ஏவாளை படைத்த சில காலத்திற்குப்பின், வல்லமைவாய்ந்த ஓர் ஆவி சிருஷ்டி ஏவாளை அணுகி யெகோவாவின் உண்மைத் தன்மையையும் அவருடைய உன்னத அரசதிகாரத்தின் உரிமையையும் குறித்து சவால்விட்டான். (ஆதியாகமம் 3:1-5) பிசாசாகிய சாத்தான் என்ற இந்த சிருஷ்டி, மனிதர்கள் துன்பப்படும்போது கடவுளுக்கு உண்மைப் பற்றுறுதியுடன் இருக்க மாட்டார்கள் என பிற்பாடு மறைமுகமாக குற்றம்சாட்டினான். (யோபு 2:1-5) இதற்கு யெகோவா எப்படி பிரதிபலித்தார்? அவருடைய உதவியின்றி மனிதர்கள் வெற்றிபெற முடியாது என்பதை நிரூபிக்க சில காலத்தை அனுமதித்தார். (எரேமியா 10:23) கடவுளுடைய சட்டங்களுக்கும் நியமங்களுக்கும் முரணாக அவருடைய சிருஷ்டிகள் செயல்படும்போது அதன் விளைவு பாவமே. அது மோசமான நிலைமைகளில் போய் முடிவடைகிறது. (பிரசங்கி 8:9; 1 யோவான் 3:4) ஆனால் இந்த மோசமான நிலைமைகள் மத்தியிலும், சில மனிதர்கள் தங்களுடைய உத்தமத்தன்மையை காத்துக்கொள்வார்கள் என்பதை யெகோவா அறிந்திருந்தார்.
வருந்தத்தக்க அந்தக் கலகம் ஏதேனில் நடந்தது முதற்கொண்டு, சுமார் 6,000 வருடங்கள் ஓடிவிட்டன. அது மிக நீண்ட காலமா? பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சாத்தானையும் அவனுடைய ஆதரவாளர்களையும் யெகோவா அழித்திருக்க முடியும். ஆனால், யெகோவாவின் உன்னத அரசதிகாரத்தின் உரிமையையும் மனிதர்களுடைய உத்தமத் தன்மையையும் பற்றிய எல்லா சந்தேகமும் தீரும்வரை காத்திருப்பது நல்லது அல்லவா? யார் சரி, யார் தவறு என்பதை நிரூபிக்க இன்று நீதிமன்றத்தில் பல ஆண்டுகள் ஆவது உண்மை அல்லவா?
யெகோவாவும் மனிதவர்க்கத்தினரும் எதிர்ப்படும் விவாதங்களின், அதாவது சர்வலோக உன்னத அரசதிகாரத்தையும் மனிதர்களுடைய உத்தமத் தன்மையையும் பற்றிய விவாதங்களின் முக்கியத்துவத்தைக் கவனிக்கையில், சில காலம் கடந்துசெல்வதற்கு கடவுள் அனுமதிப்பது எவ்வளவு ஞானமான செயல்! கடவுளுடைய சட்டங்களை அசட்டை செய்து, மனிதர் தங்களுடைய சொந்த வழியில் நடக்கும்போது என்ன சம்பவிக்கிறது என்பதை இப்பொழுது நாம் கண்ணார காண்கிறோம். எங்கு பார்த்தாலும் தீமையே அதன் விளைவு. அதனால்தான் இவ்வளவு அநேக ஜனங்கள் இன்றைக்கு அவதியுறுகிறார்கள்.
ஆனால் மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால், துன்மார்க்கம் என்றும் நிலைத்திராது என்பதை கடவுளுடைய வார்த்தை சுட்டிக்காட்டுகிறது. சொல்லப்போனால், தீமையையும் அதற்கு காரணமானவர்களையும் யெகோவா வெகு விரைவில் ஒழித்துக்கட்டுவார். “துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டு போவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்” என்று நீதிமொழிகள் 2:22 சொல்கிறது. மறுபட்சத்தில், சீக்கிரத்தில் வரவிருக்கும் ஒளிமயமான ஒரு காலத்தை, “இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை” என்று சொல்லப்படும் ஒரு காலத்தை கடவுளுக்கு உண்மையாக இருப்போர் எதிர்நோக்கியிருக்கலாம்.—வெளிப்படுத்துதல் 21:4.
ஆகவே, அப்பாவி ஜனங்கள் அவதிப்படுவதற்கான காரணத்தை பைபிள் தெளிவாக விளக்குகிறது. துன்பமும் துயரமும் துடைத்தழிக்கப்படும் என்ற நம்பிக்கையையும் தருகிறது. ஆனால், வாழ்க்கையில் தற்போது அனுபவிக்கும் கஷ்டங்களை பார்க்கையில், மற்றொரு முக்கியமான கேள்விக்கு நமக்கு பதில் தேவை.
வாழ்க்கையின் நோக்கம் என்ன?
மனித சரித்திரத்தில் வேறெந்த காலத்தையும்விட, வாழ்க்கை என்றால் என்ன என்பதைப் பற்றி இப்பொழுது மக்கள் அதிகம் ஆராய ஆரம்பித்திருக்கிறார்கள். ‘நான் ஏன் வாழ்கிறேன்? என்னுடைய வாழ்க்கைக்கான அர்த்தத்தை நான் எப்படி கண்டுபிடிக்க முடியும்?’ என அநேகர் கேட்டுக்கொள்கின்றனர். பல்வேறு சூழ்நிலைமைகள் இந்தக் கேள்விகளை கேட்பதற்கு அவர்களைத் தூண்டுகின்றன.
ஒருவருடைய வாழ்க்கை ஏதாவது துயர சம்பவத்தால் சின்னாபின்னமாகியிருக்கலாம். உதாரணமாக, 1998-ன் ஆரம்பத்தில், ஜெர்மனியிலுள்ள பவரியாவில் வசிக்கும் 12-வயது சிறுமி கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டாள். வாழ்க்கையின் நோக்கத்தை தேடுவதிலேயே ஒவ்வொரு நாளையும் அந்தச் சிறுமியின் தாயார் செலவழித்தாள், ஆனால் எந்தப் பலனுமில்லை என ஒரு வருஷம் கழித்து அவர் சொன்னார். அநேக இளைஞர் வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பாதுகாப்புக்காக தேடியலைகிறார்கள், பாசவுணர்வுக்காக ஏங்குகிறார்கள், சாதனை படைப்பதற்காக துடிக்கிறார்கள். ஆனால் மாய்மாலமும் ஊழலும் நிறைந்த உலகில் மிஞ்சுவதெல்லாம் ஏமாற்றம்தான். சிலருக்கு அவர்கள் செய்யும் தொழிலே வாழ்க்கை. ஆனால் வாழ்க்கைக்கான அர்த்தத்தைக் கண்டுபிடிக்கும் வாஞ்சையை அதிகாரமும் அந்தஸ்தும் ஆஸ்தியும் திருப்திசெய்ய தவறுவதை விரைவிலேயே கண்டுகொள்கிறார்கள்.
வாழ்க்கையின் நோக்கத்தைக் கண்டுபிடிக்க ஒருவரை எது தூண்டினாலும்சரி, இந்தக் கேள்விக்கு கருத்தாழமிக்க, திருப்தியான பதில் தேவை. இந்த விஷயத்திலும் பைபிள் கைகொடுக்கிறது. யெகோவா நோக்கமுள்ள கடவுள் எனவும், அவர் செய்கிற அனைத்திற்கும் நியாயமான காரணங்களைக் கொண்டவர் எனவும் பைபிள் அவரை அடையாளம் காட்டுகிறது. இதற்கு பதில் சொல்லுங்கள்: எந்தக் காரணமுமில்லாமல் நீங்கள் வீடு கட்டுவீர்களா? நிச்சயமாகவே மாட்டீர்கள். ஏனெனில் வீட்டைக் கட்டுவது சாதாரண விஷயம் அல்ல, அதற்கு பெரும் தொகையை முதலீடு செய்ய வேண்டும், பல மாதங்களோ வருடங்களோகூட ஆகலாம். நீங்களோ மற்றவர்களோ குடியிருப்பதற்குத்தான் ஒரு வீட்டை கட்டுகிறீர்கள். இந்த தர்க்கரீதியே யெகோவாவின் விஷயத்திலும் பொருந்தும். இந்தப் பூமியையும் அதிலுள்ள ஜீவராசிகளையும் காரணமின்றியோ நோக்கமின்றியோ படைக்கவில்லை. (எபிரெயர் 3:4-ஐ ஒப்பிடுக.) அப்படியானால், பூமிக்கான கடவுளுடைய நோக்கம் என்ன?
“பூமியை படைத்து அதை உருவாக்கியவராகிய உண்மையான கடவுள்” என்பதாக ஏசாயா தீர்க்கதரிசனம் யெகோவாவை அடையாளம் காட்டுகிறது. உண்மையில், அவரே “[பூமியை] உறுதியாக ஸ்தாபித்தவர். அதை வெறுமையாக படைக்கவில்லை, குடியிருப்புக்காக படைத்தார்.” (ஏசாயா 45:18, NW) ஆம், பூமியை படைத்தது முதற்கொண்டே, அதில் மனிதர் குடியிருக்க வேண்டுமென்பதே யெகோவாவின் நோக்கம். “வானங்கள் கர்த்தருடையவைகள்; பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார்” என சங்கீதம் 115:16 சொல்கிறது. ஆகவே, பூமி முழுவதும் கீழ்ப்படிதலுள்ள மனிதர்கள் வாழ வேண்டும், அதை பராமரித்து காக்க வேண்டும் என்பதற்காகவே யெகோவா அதை படைத்தார் என பைபிள் காட்டுகிறது.—ஆதியாகமம் 1:27, 28.
ஆதாம் ஏவாளின் கலகம் யெகோவாவின் நோக்கத்தை மாற்றிவிட்டதா? இல்லவே இல்லை. நாம் எப்படி உறுதியாக நம்பலாம்? இந்தக் குறிப்பை சிந்தித்துப் பாருங்கள்: ஏதேனில் கலகம் நடந்து ஆயிரக்கணக்கான வருடங்களுக்குப் பிறகே பைபிள் எழுதப்பட்டது. யெகோவா தம்முடைய ஆதி நோக்கத்தை கைவிட்டிருந்தால், ஏன் அது பைபிளில் குறிப்பிடப்படவில்லை? பூமிக்கும் மனிதவர்க்கத்திற்குமான அவருடைய நோக்கம் மாறவே இல்லை என்பதே தெள்ளத் தெளிவான முடிவு.
மேலும், யெகோவாவின் நோக்கம் ஒருபோதும் தோல்வியடையாது. ஏசாயா மூலம் கடவுள் இவ்வாறு உறுதியளிக்கிறார்: “மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச்செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ, அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.”—ஏசாயா 55:10, 11.
கடவுள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்?
கீழ்ப்படிதலுள்ள மனிதர்கள் இந்தப் பூமியில் வாழவேண்டும் என்ற கடவுளுடைய நோக்கம் நிறைவேறும் என்பதை நாம் உறுதியாக நம்பலாம். பூமியில் என்றும் வாழும் பாக்கியம் பெறுபவர்களில் ஒருவராக நா ம் இருக்க வேண்டும் என்றால், ஞானியாகிய சாலொமோன் ராஜா சொன்னதை செய்ய வேண்டும்: “தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.”—பிரசங்கி 12:13; யோவான் 17:3.
மனிதவர்க்கத்திற்கான யெகோவாவின் நோக்கத்திற்கு இசைவாக வாழ்வது எதை அர்த்தப்படுத்துகிறது? மெய்யான தேவனைப் பற்றி அறிவதையும் பரிசுத்த பைபிளில் கொடுக்கப்பட்டுள்ள அவருடைய தராதரங்களின்படி நடப்பதையும் இது அர்த்தப்படுத்துகிறது. இதன்படி நாம் இப்பொழுது நடந்தால், எழில் கொஞ்சும் பரதீஸிய பூமியில் என்றும் வாழும் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளலாம். அங்கே, கடவுளையும் அவருடைய மகத்தான படைப்புகளையும் பற்றி புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டே இருக்கலாம், அதற்கு முடிவே இராது. (லூக்கா 23:43) மெய்சிலிர்க்க வைக்கும் எப்பேர்ப்பட்ட எதிர்பார்ப்பு!
வாழ்க்கையின் நோக்கத்தை தேடி அலையும் அநேகர் பைபிளிடம் திரும்புகின்றனர், அதனால் இப்பொழுதே அதிக சந்தோஷத்தை அனுபவிக்கின்றனர். உதாரணமாக, ஆல்ஃபிரட் என்ற ஓர் இளைஞர் வாழ்க்கையின் நோக்கத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தார். மதம் போரில் ஈடுபடுவது அவருக்கு வெறுப்பூட்டியது, அரசியல் மாய்மாலத்தையும் ஊழலையும் பார்த்து நிலைகுலைந்து போயிருந்தார். வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றிய அறிவொளியைப் பெறும் நம்பிக்கையில் வட அமெரிக்காவிலுள்ள இந்தியர்களை சந்தித்தார். ஆனால் பெருத்த ஏமாற்றத்துடன் ஐரோப்பாவிற்கு திரும்பினார். நம்பிக்கை இழந்த நிலையில், போதை பொருட்களையும் காட்டுக்கத்தலான இசையையும் நாடினார். ஆனால், பிற்பாடு பைபிளை தவறாமல் கவனமாக ஆராய்ந்து பார்த்தார், அது வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தை உணர்ந்துகொள்வதற்கும் திருப்தியை கண்டடைவதற்கும் உதவியது.
நம்முடைய வாழ்க்கைக்கு நம்பகமான வழிகாட்டி
அப்படியானால், பைபிளைப் பற்றி நாம் என்ன முடிவுக்கு வரலாம்? அது இந்தக் காலத்திற்கு ஏற்றதா? ஆம், ஏற்றதே. ஏனெனில் அது இன்று நாம் எதிர்ப்படும் பிரச்சினைகளுக்கு சிறந்த வழிகாட்டியாக திகழ்கிறது. துன்மார்க்கத்திற்கு கடவுள் காரணர் அல்ல என்பதை பைபிள் விளக்குகிறது, வாழ்க்கையில் திருப்திகரமான நோக்கத்தைக் கண்டுபிடிக்கவும் அது நமக்கு உதவுகிறது. மேலும், இன்று அக்கறைக்குரிய அநேக விஷயங்களைப் பற்றி பைபிள் பேசுகிறது. திருமணம், பிள்ளை வளர்ப்பு, மனித உறவுகள், மரித்தோருக்கான நம்பிக்கை ஆகியவை கடவுளுடைய வார்த்தையில் கலந்தாலோசிக்கப்படுகின்றன.
நீங்கள் பைபிளை ஆராய்ந்திருக்கிறீர்களா? இல்லையென்றால், தயவுசெய்து பைபிளிலுள்ள விஷயங்களை கூர்ந்து ஆராயுங்கள். பைபிள் அளிக்கும் வாழ்க்கைக்கான வழிநடத்துதலின் உண்மையான மதிப்பை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். அப்போது, வழிநடத்துதலுக்காக கடவுளையே நோக்கியிருந்த சங்கீதக்காரனாகிய தாவீதைப் போலவே நீங்களும் உணருவீர்கள்: “உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.”—சங்கீதம் 119:105.
[பக்கம் 6-ன் படம்]
அப்பாவி ஜனங்கள் அவதியுறுவதை கடவுள் ஏன் அனுமதிக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
[பக்கம் 7-ன் படம்]
நோக்கமுள்ள வாழ்க்கையை நீங்கள் கண்டுகொள்ளலாம்