உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w00 1/1 பக். 30-31
  • யெகோவாவின் அமைப்பு நமக்கு தேவை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாவின் அமைப்பு நமக்கு தேவை
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஓர் அமைப்பின் பாகமாக ஆரம்பகால கிறிஸ்தவர்கள் பெற்ற நன்மைகள்
  • இன்று ஓர் அமைப்பு நமக்கு தேவை
  • கடவுளுடைய காணக்கூடிய அமைப்பு
    நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம்
  • தன்னுடைய அமைப்பை யெகோவா வழிநடத்துகிறார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2020
  • சபை பக்திவிருத்தி அடைவதாக
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
  • கடவுளுடைய அமைப்பில் பாதுகாப்பாய் இருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
w00 1/1 பக். 30-31

யெகோவாவின் அமைப்பு நமக்கு தேவை

“கடவுள நம்பறேன். ஆனா, எந்த மதத்தையும் நம்பறதில்ல” என்று யாராவது உங்களிடம் சொல்லியிருக்கிறார்களா? ஒருசமயம், ஏதாவது ஒரு மதத்தை சேர்ந்தவர்களாக இருந்து, ஆனால் தங்களுடைய ஆன்மீகத் தேவைகளை அது பூர்த்தி செய்ய தவறியதால் நம்பிக்கை இழந்த அநேகருடைய கருத்துதான் இது. பொதுவாகவே, பலர் மத அமைப்புகளால் ஏமாற்றம் அடைந்திருக்கின்றனர். என்றபோதிலும், தாங்கள் இன்னமும் கடவுளை வணங்க விரும்புவதாக அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். எனினும், ஏதாவது ஒரு சர்ச் அல்லது மத அமைப்பை சேர்ந்தவர்களாக இருப்பதைவிட, தாங்கள் விரும்பும் விதத்தில் கடவுளை வணங்குவதே மேலாக நினைக்கின்றனர்.

பைபிள் இதைப் பற்றி என்ன சொல்கிறது? கிறிஸ்தவர்கள் ஓர் அமைப்பில் சேர்ந்திருக்க வேண்டுமா? கடவுளின் விருப்பமென்ன?

ஓர் அமைப்பின் பாகமாக ஆரம்பகால கிறிஸ்தவர்கள் பெற்ற நன்மைகள்

பொ.ச. 33-⁠ல், பெந்தெகொஸ்தே நாளன்று யெகோவா தம்முடைய பரிசுத்த ஆவியை ஊற்றினார். விசுவாசிகள் மீது தனித்தனியாக அல்ல. ஆனால், “ஓரிடத்திலே,” அதாவது எருசலேம் நகரத்தில் ஒரு வீட்டின் மேல் அறையில் கூடிவந்த ஆண்கள் மற்றும் பெண்களின் தொகுதிமீதே யெகோவா தம் பரிசுத்த ஆவியைப் பொழிந்தார். (அப்போஸ்தலர் 2:1) அந்த சமயத்தில்தானே, கிறிஸ்தவ சபை ஸ்தாபிக்கப்பட்டது. அதுவே பின்னர் சர்வதேச அமைப்பாக மாறியது. அதுவே அநேக நன்மைகளை ஆரம்பகால சீஷர்களுக்கு அள்ளி வழங்கியது. முதல் நன்மை, அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட முக்கியமான ஒரு பொறுப்பை நிறைவேற்ற உதவியதாகும். “பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும்” கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்கிக்க வேண்டியதே அந்த பொறுப்பாகும். (மத்தேயு 24:14) சபைக்கு புதிதாக வந்தவர்கள், இந்த பிரசங்கிக்கும் வேலையை எப்படி செய்வது என்பதை அனுபவம் மிக்க உடன் விசுவாசிகளிடம் இருந்து கற்றுக்கொள்ள முடிந்தது.

ராஜ்ய செய்தி விரைவிலேயே எருசலேமின் எல்லைகளையும் தாண்டி பல இடங்களுக்கும் பரவியது. பொ.ச. 62 முதல் 64 வரையான காலப்பகுதியில், அப்போஸ்தலனாகிய பேதுரு தன்னுடைய முதல் கடிதத்தை “பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா தேசங்களிலே சிதறியிருக்கிற” கிறிஸ்தவர்களுக்கு எழுதினார். இவை அனைத்தும் இன்றைய துருக்கியில் இருக்கின்றன. (1 பேதுரு 1:1) பலஸ்தீனா, லெபனான், சிரியா, சைப்ரஸ், கிரீஸ், இத்தாலி ஆகிய இடங்களிலும் விசுவாசிகள் இருந்தனர். பொ.ச. 60-61-⁠ல், பவுல் கொலோசெயருக்கு கடிதம் எழுதியபோது, நற்செய்தி “வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டு வருகிறது” என குறிப்பிட்டார்.​—⁠கொலோசெயர் 1:⁠23.

கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் அளித்துக்கொள்ளும் உற்சாகமே, ஓர் அமைப்போடு கூட்டுறவு கொள்வதால் கிடைக்கும் இரண்டாவது நன்மை. சபையோடு கூட்டுறவு கொள்வதால், ஊக்கமளிக்கும் பேச்சுக்களை கேட்கலாம், பரிசுத்த வேதாகமத்தை ஒன்றுசேர்ந்து படிக்கலாம், விசுவாசத்தை பலப்படுத்தும் அனுபவங்களை ஒருவரோடு ஒருவர் பரிமாறிக்கொள்ளலாம், உடன்விசுவாசிகளோடு சேர்ந்து ஜெபிக்கலாம். (1 கொரிந்தியர், அதிகாரம் 14) அனுபவம் மிக்க சகோதரர்கள் ‘கடவுளின் மந்தையை மேய்க்கலாம்.’​—⁠1 பேதுரு 5:2.

சபையின் பாகமாக இருந்தது கிறிஸ்தவர்கள் ஒருவரையொருவர் நன்கு தெரிந்துகொண்டு, நேசிக்க வழிவகுத்தது. சபையோடு கூட்டுறவு கொள்வது பாரமாக இல்லை. அதற்கு மாறாக ஆரம்பகால கிறிஸ்தவர்களுக்கு உற்சாகத்தையும் தைரியத்தையும் கொடுத்தது.​—⁠அப்போஸ்தலர் 2:42; 14:27; 1 கொரிந்தியர் 14:26; கொலோசெயர் 4:15, 16.

ஒன்றுபட்ட, உலகளாவிய சபை அல்லது அமைப்பு தேவை என்பதற்கான மற்றொரு காரணம், ஐக்கியத்தை வளர்க்க. கிறிஸ்தவர்கள் “ஒரே காரியத்தைப் பேச” கற்றுக்கொண்டனர். (1 கொரிந்தியர் 1:10) இது மிக முக்கியம். ஏனெனில், சபை அங்கத்தினர்கள், பலதரப்பட்ட கல்வி, சமூகப் பின்னணியில் இருந்து வந்தவர்கள். வித்தியாசமான பாஷைகளை பேசினார்கள், வித்தியாசமான குணநலன்களை கொண்டிருந்தனர். (அப்போஸ்தலர் 2:1-11) எனவே, சில சமயங்களில், அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் எழுந்தன. எனினும், இதை சபைக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள அவர்களுக்கு உதவி கிடைத்தது.​—⁠அப்போஸ்தலர் 15:1, 2; பிலிப்பியர் 4:2, 3.

உள்ளூர் மூப்பர்களால் தீர்க்க முடியாத முக்கியமான சில பிரச்சினைகள், அப்போஸ்தலனாகிய பவுல் போன்ற அனுபவம் மிக்க பிரயாணக் கண்காணிகளால் கையாளப்பட்டது. மிக முக்கியமான பைபிள் கோட்பாடு சம்பந்தமான விஷயங்கள் எருசலேமில் இருந்த ஆளும் குழுவிடம் கொண்டு செல்லப்பட்டது. ஆரம்பத்தில், இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களே ஆளும் குழுவில் இருந்தனர். ஆனால், எருசலேமில் இருந்த சபையின் மூப்பர்களும் பின்னர் இதில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். ஊழியத்தை ஒழுங்கமைக்கவும், ஊழியத்திற்கு தகுதியானவர்களை நியமிக்கவும், கிறிஸ்தவ கோட்பாடு சம்பந்தமான தீர்மானங்களை எடுக்கவும் ஆளும் குழுவினரும் அதன் பிரதிநிதிகளும் கடவுளால் அளிக்கப்பட்ட அதிகாரத்தை பெற்றிருக்கின்றனர் என ஒவ்வொரு சபையினரும் நம்பினர். ஆளும் குழுவால் ஒரு பிரச்சினை தீர்க்கப்பட்டபோது, அதன் தீர்மானத்தை எல்லா சபைகளும் ஏற்றுக்கொண்டு, அதனால் கிடைத்த ‘உற்சாகத்துக்காக சந்தோஷப்பட்டார்கள்.’​—⁠அப்போஸ்தலர் 15:1, 2, 28, 30, 31.

ஆம், முதல் நூற்றாண்டில் ஓர் அமைப்பை யெகோவா உபயோகித்தார். ஆனால், இன்றைய நாளைப் பற்றியெதன்ன?

இன்று ஓர் அமைப்பு நமக்கு தேவை

தங்களுடைய முதல் நூற்றாண்டு கூட்டாளிகளைப் போன்றே, ராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்கிக்க வேண்டிய தங்கள் வேலையை யெகோவாவின் சாட்சிகளும் இன்று முக்கியமானதாக கருதுகின்றனர். பைபிள், பைபிள் சார்ந்த பிரசுரங்களை விநியோகிப்பதன்மூலம் இந்த வேலையை தொடருகின்றனர். இதற்கு ஓர் அமைப்பு தேவை.

கிறிஸ்தவ பிரசுரங்கள் கவனமாக தயாரிக்கப்பட வேண்டும். திருத்தமாக இருக்கிறதா என சரிபார்த்து அச்சிடப்பட வேண்டும். பின்பு அனைத்து சபைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட வேண்டும். அதே சமயம், இந்தப் பிரசுரங்கள் படிக்க விரும்புபவர்களிடம் போய்சேர ஒவ்வொரு கிறிஸ்தவருமே தாமாக முன்வர வேண்டும். இந்த வகையில்தான், கோடிக்கணக்கானோரை ராஜ்ய செய்தி சென்றெட்டியுள்ளது. ராஜ்ய செய்தியின் அறிவிப்பாளர்கள், தங்கள் பிரசங்க வேலையை ஒழுங்கான முறையில் செய்ய முயலுகின்றனர். இது சில பிராந்தியங்களை அடிக்கடி செய்வதையும், சில பிராந்தியங்கள் விட்டுப்போவதையும் தவிர்க்கிறது. இதை கிரமமாக செய்வதற்கு ஓர் அமைப்பு தேவை.

“தேவன் பட்சபாதமுள்ளவரல்ல.” எனவே, பைபிளும் பைபிள் பிரசுரங்களும் மொழிபெயர்க்கப்பட வேண்டும். (அப்போஸ்தலர் 10:34) தற்போது, நீங்கள் வாசித்துக்கொண்டிருக்கும் இந்த பத்திரிகை 132 மொழிகளிலும் இதன் கூட்டுப் பத்திரிகையாகிய விழித்தெழு! 83 மொழிகளிலும் கிடைக்கின்றன. இதற்கு, உலகம் முழுவதிலும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர் குழுக்கள் அவசியம்.

அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கிறிஸ்தவ கூட்டங்களுக்கும் அசெம்பிளிகளுக்கும் செல்லும்போது, சபையினர் உற்சாகத்தைப் பெறுகின்றனர். ஆர்வத்தை தூண்டும் பைபிள் பேச்சுக்களை கேட்கின்றனர், ஒன்றுசேர்ந்து பைபிள் படிக்கின்றனர், பலப்படுத்தும் அனுபவங்களை பரிமாறிக்கொள்கின்றனர், உடன் வணக்கத்தாரோடு ஜெபத்தில் சேர்ந்துகொள்கின்றனர். மேலும், முதல் நூற்றாண்டில் இருந்த தங்கள் சகோதரர்களைப் போலவே, அன்பான பிரயாணக் கண்காணிகளின் விசுவாசத்தை பலப்படுத்தும் சந்திப்புகளால் மகிழ்ச்சி அடைகின்றனர். இப்படியாக, கிறிஸ்தவர்கள் இன்று “ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனும்” என்ற நிலைக்கு வருகின்றனர்.​—⁠யோவான் 10:⁠16.

முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் போலவே, யெகோவாவின் சாட்சிகளும் பரிபூரணர் அல்ல. இருந்தபோதிலும், அவர்கள் ஐக்கியமாக வேலை செய்ய கடினமாக உழைக்கின்றனர். அதன்விளைவாக, இன்று உலகம் முழுவதும் ராஜ்ய பிரசங்க வேலை நிறைவேற்றப்பட்டு வருகிறது.​—⁠அப்போஸ்தலர் 15:36-40; எபேசியர் 4:⁠13.

[பக்கம் 31-ன் படம்]

கிறிஸ்தவர்கள் இன்று “ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனும்” என்ற நிலைக்கு வருகின்றனர்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்