யெகோவாவின் வீடு ‘விரும்பத்தக்கவைகளால்’ நிரம்புகிறது
“நான் [யெகோவா] சகல ஜாதிகளையும் அசையப் பண்ணுவேன், சகல ஜாதிகளாலும் விரும்பத்தக்கவை வரும்; இந்த ஆலயத்தை மகிமையினால் நிறையப் பண்ணுவேன்.”—ஆகாய் 2:7, Nw.
1. ஆபத்தின் சமயத்தில் நாம் ஏன் முதலில் நம் அன்பானவர்களைப் பற்றி யோசிக்கிறோம்?
விரும்பத்தக்க எத்தகைய பொருட்களால் உங்கள் வீடு நிரம்பியிருக்கிறது? உங்கள் வீட்டில் விலையுயர்ந்த சொகுசு பர்னிச்சர்கள், கார், லேட்டஸ்ட் கம்ப்யூட்டர் போன்றவை இருக்கிறதா? இப்படிப்பட்ட ஆடம்பரப் பொருள்கள் ஆயிரம் இருந்தாலும், உங்கள் வீட்டில் உள்ள அன்புள்ள குடும்ப அங்கத்தினர்களை அதைவிட மதிப்புமிக்கவர்களாக ஒப்புக்கொள்வீர்களல்லவா? இதை இவ்வாறு கற்பனை செய்து பாருங்கள். ஒரு நாள் இரவு ஏதோ கருகும் வாடையின் காரணமாக கண்விழித்துவிடுகிறீர்கள். உங்கள் வீடு தீப்பிடித்து எரிகிறது. தப்பி ஓட ஒருசில நிமிடங்களே இருக்கின்றன! இப்போது உங்களுக்கு எது அதிக முக்கியம்? விலையுயர்ந்த பொருட்களா? காரா? கம்ப்யூட்டரா? இவையெல்லாவற்றையும்விட குடும்ப அங்கத்தினர்களை பெரிதாக நினைப்பீர்கள் அல்லவா? அந்த சந்தர்ப்பத்தில் பொருட்களைவிட உயிர்களையே பெருமதிப்போடு கருதுவீர்கள்.
2. யெகோவாவின் படைப்பு எந்தளவுக்கு விரிவானது, படைப்பின் எந்த அம்சத்தில் இயேசு அதிக விருப்பத்தைக் காண்பித்தார்?
2 இப்போது யெகோவா தேவனையும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் பற்றி சிந்தித்துப் பாருங்கள். யெகோவா “வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கினவர்.” (அப்போஸ்தலர் 4:24) “தேர்ச்சிப்பெற்ற வேலையாளனாகிய,” அவருடைய குமாரன் மூலம் மற்ற எல்லாவற்றையும் உண்டாக்கினார். (நீதிமொழிகள் 8:30, 31, NW; யோவான் 1:3; கொலோசெயர் 1:15-17) படைக்கப்பட்ட எல்லாவற்றையும் யெகோவாவும் இயேசுவும் மதிப்புள்ளதாக கருதினார்கள் என்பதில் சந்தேகமில்லை. (ஆதியாகமம் 1:31-ஐ ஒப்பிடுக.) ஆனால் படைப்பில் எது அவர்களுக்கு முக்கியமானதாக இருந்திருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்—மனிதர்களா அல்லது மற்ற படைப்புகளா? ஞானமாக உருவகப்படுத்தப்பட்ட இயேசு குறிப்பிடுகிறார்: “நான் மிகவும் விரும்பியவை மனித குமாரர்களே,” அல்லது வில்லியம் எஃப். பெக் என்பவரின் மொழிபெயர்ப்புப்படி இயேசு “மனிதர்களில் மிகவும் பிரியங்கொண்டார்.”
3. ஆகாய் தீர்க்கதரிசி மூலம் யெகோவா சொன்ன தீர்க்கதரிசனம் என்ன?
3 யெகோவா மனிதரை உயர்வாக மதித்தார் என்பதில் சந்தேகமில்லை. இது, பொ.ச.மு. 520-ல் தீர்க்கதரிசியாகிய ஆகாய் மூலமாக அவர் பேசிய தீர்க்கதரிசன வார்த்தைகளில் தெளிவாக காணப்படுகிறது. யெகோவா அறிவித்தார்: “சகல ஜாதிகளையும் அசையப் பண்ணுவேன், சகல ஜாதிகளாலும் விரும்பத்தக்கவை வரும்; இந்த ஆலயத்தை மகிமையினால் நிறையப் பண்ணுவேன். . . . முந்தின ஆலயத்தின் மகிமையைப் பார்க்கிலும் இந்தப் பிந்தின ஆலயத்தின் மகிமை பெரிதாயிருக்கும்.”—ஆகாய் 2:7 NW, 9.
4, 5. (அ) “விரும்பத்தக்கவைகள்” என்ற பதம், விலையுயர்ந்த பொருட்கள் அழகழகாய் ஜொலிப்பதை அர்த்தப்படுத்தவில்லை என்ற முடிவுக்கு வருவது ஏன் நியாயமானது? (ஆ) “விரும்பத்தக்கவைகள்” என்ற பதத்தை எப்படி விளக்குவீர்கள், ஏன்?
4 ‘விரும்பத்தக்க’ எவை யெகோவாவின் வீட்டை நிரப்பி முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு மகிமையை கொண்டுவரும்? விலையுயர்ந்த பர்னிச்சர்களும் அலங்கார வேலைப்பாடுகளுமா? பொன்னும் வெள்ளியும் விலையேறப்பெற்ற கற்களுமா? நிச்சயமாக இருக்க முடியாது. பலகோடி டாலர் செலவிட்டு கட்டப்பட்ட முந்தின ஆலயம் ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்புதான் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள்! a தாயகம் திரும்பிய சிறுபான்மையான யூதர்கள், சாலொமோனின் ஆலயத்தைவிட மேம்பட்ட நிலையில் விலையுயர்ந்த பொருட்களால் கட்டும்படி யெகோவா எதிர்பார்க்க மாட்டார் என்பது உறுதி!
5 அப்படியானால் “விரும்பத்தக்க” எவற்றால் யெகோவாவின் வீடு நிரப்பப்படும்? அது ஜனங்களால் தான் நிரப்பப்பட வேண்டும். ஏனெனில், யெகோவாவின் இருதயம் பொன்னாலோ வெள்ளியாலோ அல்ல தம்மை அன்புடன் சேவிக்கும் ஜனங்களாலேயே சந்தோஷப்படுகிறது. (நீதிமொழிகள் 27:11; 1 கொரிந்தியர் 10:26) ஆம், உண்மையாய் தொழுதுகொள்ளும் ஆண்களையும் பெண்களையும் குழந்தைகளையும் யெகோவா உயர்வாக மதிக்கிறார். (யோவான் 4:23, 24) இவர்களே “விரும்பத்தக்கவைகள்,” சாலொமோனின் ஆலயத்தை அலங்கரித்த சகல அலங்கார வஸ்துக்களைவிட அவர்கள் யெகோவாவுக்கு அருமையானவர்கள்.
6. கடவுளுடைய பூர்வ ஆலயத்தால் கிடைத்த பலன் என்ன?
6 கடுமையான எதிர்ப்பின் மத்தியிலும் பொ.ச.மு. 515-ல் ஆலயம் கட்டிமுடிக்கப்பட்டது. அப்போதிலிருந்து இயேசுவின் மரணம் வரையாக “விரும்பத்தக்கவை”களாகிய யூதருக்கும் மதம் மாறிய புறஜாதியினருக்கும் எருசலேமிலிருந்த ஆலயம்தான் தூய வணக்கத்தின் மையமாக திகழ்ந்தது. ஆனால், அந்த ஆலயம் அதைவிட மகத்தான ஒரு ஆலயத்தை பிரதிநிதித்துவம் செய்தது. அதைத் தான் நாம் பார்க்கப்போகிறோம்.
முதல் நூற்றாண்டு நிறைவேற்றம்
7. (அ) எருசலேமிலிருந்த கடவுளுடைய பூர்வ ஆலயம் எதற்கு முன்நிழலாக இருந்தது? (ஆ) பாவநிவாரண நாளில் பிரதான ஆசாரியன் செய்தவற்றை விளக்குங்கள்.
7 எருசலேமிலிருந்த ஆலயம் வரவிருக்கும் மகத்தான வணக்க ஏற்பாட்டுக்கு முன்நிழலாக இருந்தது. அதுவே கடவுளுடைய ஆவிக்குரிய ஆலயம். இயேசுவை பிரதான ஆசாரியராகக் கொண்ட இந்த ஆவிக்குரிய ஆலயத்தை யெகோவா பொ.ச. 29-ல் திறந்துவைத்தார். (எபிரெயர் 5:4-10; 9:11, 12) இஸ்ரவேலில் இருந்த பிரதான ஆசாரியனின் கடமைகளுக்கும் இயேசுவின் செயல்களுக்கும் இடையிலான ஒப்புமைகளைப் பாருங்கள். ஒவ்வொரு வருடமும் பாவநிவாரண நாளில், பிரதான ஆசாரியன் ஆலய பிரகாரத்திலிருந்த பலிபீடத்திற்குச் சென்று ஆசாரியர்களின் பாவங்களுக்காக காளையை பலி செலுத்தினார். அதற்குப்பின், பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பிரகாரத்தைப் பிரிக்கும் கதவுகளையும், பரிசுத்த ஸ்தலத்தையும் மகா பரிசுத்த ஸ்தலத்தையும் பிரிக்கும் திரையையும் கடந்து காளையின் இரத்தத்தை ஆலயத்திற்குள் எடுத்துச் சென்றார். பிரதான ஆசாரியன் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் சென்றதும் உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக அந்த இரத்தத்தைத் தெளித்தார். இதே முறையை பின்பற்றி இஸ்ரவேலின் ஆசாரியரல்லாத 12 கோத்திரங்களின் பாவங்களுக்காக வெள்ளாட்டுக்கடாவை பலி செலுத்தினார். (லேவியராகமம் 16:5-15) ஆசாரியர்கள் கைக்கொண்ட இந்த முறை கடவுளுடைய ஆவிக்குரிய ஆலயத்தோடு எவ்வாறு சம்பந்தப்பட்டிருக்கிறது?
8. (அ) பொ.ச. 29-ன் தொடக்கத்தில் என்ன கருத்தில் இயேசு தம்மை அளித்தார்? (ஆ) பூமியில் இயேசு தம் ஊழிய காலத்தின்போது என்ன விசேஷமான உறவை யெகோவாவோடு அனுபவித்து மகிழ்ந்தார்?
8 பொ.ச. 29-ல் இயேசு முழுக்காட்டுதல் பெற்று கடவுளுடைய பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்பட்டபோது கடவுளுடைய சித்தம் என்கிற பலிபீடத்தில் தன்னை அளித்தார். (லூக்கா 3:21, 22) இந்த சம்பவம், மூன்றரை வருடக்காலம் நீடித்த இயேசுவின் தியாக பலிக்குரிய வாழ்க்கைப் போக்கின் ஆரம்பத்தை குறித்துக்காட்டியது. (எபிரெயர் 10:5-10) இந்த காலத்தின்போது, இயேசு கடவுளுடன் ஆவியால் பிறப்பிக்கப்பட்ட உறவை அனுபவித்து மகிழ்ந்தார். பரலோகத் தகப்பனுடன் இயேசு வைத்திருந்த இந்த ஒப்பற்ற உறவை மற்ற மனிதர்களால் முழுமையாக புரிந்துகொள்ள முடியாது. ஏனென்றால், ஆசரிப்புக்கூடாரத்தின் பிரகாரத்தில் நிற்பவர்கள் பரிசுத்த ஸ்தலத்தை காண முடியாதபடி மறைப்பு வைத்து தடுத்திருந்தது போலவே, அவர்களுடைய பகுத்தறியும் கண்களையும் ஒரு திரை தடுத்ததுபோல் இருந்தது.—யாத்திராகமம் 40:28.
9. மனிதனாகவே இயேசுவால் ஏன் பரலோகத்துக்குச் செல்ல முடியவில்லை, இந்தச் சூழ்நிலை எவ்வாறு சரிசெய்யப்பட்டது?
9 ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்ட கடவுளுடைய குமாரனாக இருந்தாலும், மனிதனாகிய இயேசு பரலோகத்திற்குச் செல்ல முடியவில்லை. ஏன்? ஏனென்றால் மாம்சமும் இரத்தமும் பரலோக ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை. (1 கொரிந்தியர் 15:44, 50) பண்டைய ஆலயத்தில் மகா பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பரிசுத்த ஸ்தலத்தை திரை பிரித்துக்காட்டியது. இயேசுவின் மனித சரீரம் தடுப்புச்சுவராக இருந்ததை இது அடையாளப்படுத்தியது. (எபிரெயர் 10:19) ஆனால் இயேசு மரித்து மூன்று நாட்களுக்குப்பின் கடவுளால் ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார். (1 பேதுரு 3:18) அப்போதுதான் கடவுளுடைய ஆவிக்குரிய ஆலயத்தின்—பரலோகத்தின்—மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு அவர் செல்ல முடிந்தது. உண்மையில் நடந்தது இதுதான். பவுல் இவ்வாறு எழுதுகிறார்: “மெய்யான பரிசுத்த ஸ்தலத்துக்கு அடையாளமான கையினால் செய்யப்பட்டதாயிருக்கிற பரிசுத்த ஸ்தலத்திலே கிறிஸ்துவானவர் பிரவேசியாமல், பரலோகத்திலேதானே இப்போழுது நமக்காக தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்திருக்கிறார்.”—எபிரெயர் 9:24.
10. பரலோகத்திற்குத் திரும்பிச் செல்கையில் இயேசு முதலில் என்ன செய்தார்?
10 பரலோகத்திலே, இயேசு தம் ஜீவ இரத்தத்தின் மீட்கும் பொருள் மதிப்பை யெகோவாவிடம் சமர்ப்பிப்பதன்மூலம் தம்முடைய பலியின் ‘இரத்தத்தை தெளித்தார்.’ ஆனாலும் இயேசு அத்துடன் விட்டுவிடவில்லை. தம்முடைய மரணத்திற்கு சற்று முன்பு அவர் தம்முடைய சீஷர்களிடம் இவ்வாறு சொல்லியிருந்தார்: “ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணின பின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.” (யோவான் 14:2, 3) ஆகவே, மகா பரிசுத்த ஸ்தலம் அல்லது பரலோகத்திற்கு சென்றபின்பு, மற்றவர்களும் அங்கு செல்வதற்கான வழியைத் திறந்து வைத்தார். (எபிரெயர் 6:19, 20) இந்த ஆட்களுடைய எண்ணிக்கை 1,44,000 ஆகும். இவர்கள் கடவுளுடைய ஆவிக்குரிய ஆலய ஏற்பாட்டில் உப ஆசாரியர்களாக சேவிப்பர். (வெளிப்படுத்துதல் 7:4; 14:1; 20:6) இஸ்ரவேலில் இருந்த பிரதான ஆசாரியன், ஆசாரியர்களின் பாவ நிவிர்த்திக்காக காளையின் இரத்தத்தை மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு முதலில் கொண்டு செல்வார். அதைப் போலவே இயேசு சிந்தின இரத்தத்தின் மதிப்பு முதலாவது உப ஆசாரியர்களாகிய இந்த 1,44,000 பேருக்கே பொருந்தியது. b
நவீன நாளைய “விரும்பத்தக்கவைகள்”
11. இஸ்ரவேலில் இருந்த பிரதான ஆசாரியன் வெள்ளாட்டுக்கடாவை யார் சார்பாக பலி செலுத்தினார், இது எதற்கு முன்நிழலாக இருந்தது?
11 1935-ல் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களின் கூட்டிச்சேர்ப்பு முடிவடைந்ததாக தோன்றுகிறது. c ஆனால், யெகோவா தம்முடைய வீட்டை மகிமையால் நிரப்புவது முடிவடைந்திருக்கவில்லை. ஏனென்றால், “விரும்பத்தக்கவைகள்” இன்னும் வந்து சேரவேண்டியிருந்தது. இஸ்ரவேலில் இருந்த பிரதான ஆசாரியன் இரண்டு மிருகங்களை பலி செலுத்தினார் என்பதை ஞாபகப்படுத்திப் பாருங்கள்—ஆசாரியர்களின் பாவங்களுக்காக காளையும் ஆசாரியரல்லாத கோத்திரங்களின் பாவங்களுக்காக வெள்ளாட்டுக்கடாவும் பலி செலுத்தப்பட்டன. இந்த ஆசாரியர்கள் பரலோக ராஜ்யத்தில் இயேசுவுடன் இருக்கப்போகும் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களுக்குப் படமாக இருக்கிறார்கள் என்பதை பார்த்தோம். அப்படியானால் ஆசாரியரல்லாத கோத்திரங்கள் யாரை பிரதிநிதித்துவம் செய்தன? இதற்கான விடை யோவான் 10:16-ல் பதிவு செய்யப்பட்டுள்ள இயேசுவின் வார்த்தைகளில் காணப்படுகிறது: “இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவர வேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.” ஆகவே, இயேசு சிந்தின இரத்தத்தால் இரண்டு வகுப்பினர் நன்மை அடைகிறார்கள்—முதலாவதாக நன்மை அடைபவர்கள், இயேசுவுடன் பரலோகத்தில் ஆட்சி செய்யும் நம்பிக்கையுடைய கிறிஸ்தவர்கள்; இரண்டாவதாக நன்மை அடைபவர்கள், பரதீஸிய பூமியில் நித்திய ஜீவனை அடையும் எதிர்பார்ப்பு உடையவர்கள். இந்த இரண்டாவது வகுப்பாரே ஆகாயின் தீர்க்கதரிசனத்தில் “விரும்பத்தக்கவைகள்” என்று படமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.—மீகா 4:1, 2; 1 யோவான் 2:1, 2.
12. இன்று “விரும்பத்தக்கவை”களான அநேகர் எவ்விதமாக கடவுளுடைய வீட்டிற்குள் இழுக்கப்படுகிறார்கள்?
12 இந்த “விரும்பத்தக்கவை”களால் யெகோவாவின் வீடு நிரப்பப்பட்டுக்கொண்டே வருகிறது. சமீப வருடங்களில், கிழக்கு ஐரோப்பா, ஆப்பிரிக்காவின் சில பகுதிகள் மற்றும் பிற தேசங்களில் விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவுகள் நீக்கப்பட்டதால் கடவுளுடைய ஸ்தாபிக்கப்பட்ட ராஜ்யத்தின் நற்செய்தி இதுவரை எட்டப்படாத பிராந்தியங்களிலும் இப்பொழுது தீவிரமாக பிரசங்கிக்கப்பட்டு வருகிறது. கடவுளுடைய ஆலய ஏற்பாட்டுக்குள் விரும்பத்தக்கவை வருவதோடு, அவர்களும் இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து மேலுமான சீஷர்களை உருவாக்க உழைக்கிறார்கள். (மத்தேயு 28:19, 20) இவ்வாறு உழைக்கும்போது, பல இளைஞரையும் முதியோரையும் சந்திக்கிறார்கள். அவர்களும்கூட “விரும்பத்தக்கவை”களாவதற்கு வாய்ப்பு உண்டு. இவ்வாறு யெகோவாவின் வீட்டை மகிமைப்படுத்துகிறார்கள். இந்த கூட்டிச் சேர்க்கும் வேலை எவ்வாறு நடந்தேறி வருகிறது என்பதற்கு சில உதாரணங்களை காணலாம்.
13. பொலிவியாவில் ராஜ்ய செய்தியை பரப்புவதில் ஒரு சிறுமி எவ்வாறு ஆர்வம் காட்டியிருக்கிறாள்?
13 பொலிவியாவில் ஐந்து வயது சிறுமி வட்டார ஊழியரின் சந்திப்பு வாரத்தின்போது, அவளுடைய டீச்சரிடம் விடுப்பு தரும்படி கேட்டாள். ஏன்? அந்த விசேஷ வாரத்தில் ஊழியத்தில் முழுமையாக ஈடுபட விரும்பினாள். அவளுடைய பெற்றோருக்கு ஒரே ஆச்சரியம், அதே சமயத்தில் அவளுடைய இந்த சிறந்த மனப்பான்மையைக் கண்டு சந்தோஷப்பட்டார்கள். இந்த குழந்தை இப்போது ஐந்து பைபிள் படிப்புகளை நடத்துகிறாள். அவள் பைபிள் படிப்பு நடத்துபவர்களில் சிலர் கிறிஸ்தவ கூட்டங்களுக்கு வருகிறார்கள். அவள் தன்னுடைய டீச்சரையும்கூட ராஜ்ய மன்றத்திற்கு அழைத்து வந்திருக்கிறாள். ஒருவேளை சமயம் வரும்போது, அவளுடைய மாணாக்கர்களில் சிலர் தங்களை “விரும்பத்தக்கவை”களாக நிரூபிப்பார்கள். அது யெகோவாவின் ஆலயத்தை மகிமையால் நிரப்ப வழிவகுக்கும்.
14. கொரியாவில் விருப்பமில்லாதவர்போல் தோன்றிய ஒருவரிடம் ஒரு சகோதரியின் விடாமுயற்சி எவ்வாறு பலனளித்தது?
14 கொரியாவில் உள்ள ஒரு கிறிஸ்தவ பெண், ரயில்வே ஸ்டேஷனில் காத்துக்கொண்டிருக்கையில் ஹெட்போன் மூலம் பாட்டு கேட்டுக்கொண்டிருந்த ஒரு மாணவனை அணுகினாள். “நீங்க எந்த மதத்த சேர்ந்தவங்க?” என்பதாக அவள் கேட்டாள். “நான் எந்த மதத்தையும் சேர்ந்தவனல்ல” என்று அந்த மாணவன் பதிலளித்தான். அந்த சகோதரி தயங்கவில்லை. தொடர்ந்து சொன்னாள்: “உங்களைப் போன்றவர்கள்கூட ஒருநாள் இல்லையேல் இன்னொரு நாள் ஏதாவது ஒரு மதத்தை தேர்ந்தெடுக்க விரும்பலாம். ஆனால் அப்போது மதத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாவிட்டால், தவறானதை தேர்ந்தெடுத்துவிட வாய்ப்பிருக்கிறது.” அந்த மாணவனின் முகமே மாறிவிட்டது. அவன் ஆர்வத்தோடு அந்த சகோதரி சொல்வதை கவனிக்க ஆரம்பித்தான். அந்த சகோதரி, உங்கள்மீது அக்கறையுள்ள படைப்பாளர் இருக்கிறாரா? (ஆங்கிலம்) என்ற புத்தகத்தை அவனுக்கு அளித்தாள். ஒரு மதத்தை தெரிந்துகொள்வதற்கான சமயம் வரும்போது இந்த புத்தகம் அவனுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் சொன்னாள். அவன் அந்த புத்தகத்தை உடனே பெற்றுக்கொண்டான். அடுத்த வாரமே அவன் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படிக்க ஆரம்பித்தான். இப்பொழுது அவன் சபை கூட்டங்கள் எல்லாவற்றிலும் கலந்து கொள்கிறான்.
15. ஜப்பானில் ஒரு சிறுமி எப்படி பைபிள் படிப்புகளை ஆரம்பிக்கிறாள், அவளுடைய முயற்சி எவ்வாறு பலனளிக்கப்பட்டுள்ளது?
15 ஜப்பானில் 12 வயது நிரம்பிய மெகூமி பிரசங்கிப்பதற்கும் போதிப்பதற்கும் ஏற்ற இடம் பள்ளிக்கூடம்தான் என்பதாக நினைக்கிறாள். அவள் பல பைபிள் படிப்புகளை துவங்க முடிந்திருக்கிறது. இதை அவள் எவ்வாறு செய்கிறாள்? மதிய உணவு இடைவேளையின்போது அவள் பைபிளை படித்துக்கொண்டோ அல்லது கூட்டங்களுக்கு தயார் செய்துகொண்டோ இருப்பாள். அப்போது இதை கவனிக்கும் உடன் வகுப்பு மாணவிகள் அவள் அப்படி என்னதான் செய்து கொண்டிருக்கிறாள் என்பதாக அடிக்கடி கேட்பார்கள். சில மாணவிகள் அவள் ஏன் சில ஸ்கூல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்று கேட்பார்கள். மெகூமி அவர்களுடைய கேள்விகளுக்கு பதிலளிப்பது மட்டுமல்லாமல் கடவுளுக்கு ஒரு பெயர் இருக்கிறது என்றும் சொல்வாள். இது மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டுகிறது. அதற்குப்பின் அவர்களுடன் பைபிள் படிப்பு நடத்தட்டுமா என்று கேட்பாள். மெகூமி இப்பொழுது 20 பைபிள் படிப்புகள் நடத்துகிறாள், அதில் 18 பேர் அவளுடைய வகுப்பு மாணவிகளே.
16. காமரூனில் பரிகாசக்கார கும்பலில் இருந்த சிலருக்கு ஒரு சகோதரரால் எவ்வாறு பைபிள் படிப்பு ஆரம்பிக்க முடிந்தது?
16 காமரூனில் ஒரு சகோதரர் தெரு ஊழியம் செய்துகொண்டிருந்தார். அங்கே கும்பலாக எட்டு பேர் வேலை செய்துகொண்டிருந்தனர். சகோதரரை கேலி செய்வதற்காக இந்த நபர்கள் அவரை அழைத்தனர். திரித்துவத்தையும் எரிநரகத்தையும் ஆத்துமா அழியாமையையும் அவர் ஏன் நம்புவதில்லை என கிண்டலாக கேட்டனர். நம்முடைய சகோதரரோ, பைபிளை பயன்படுத்தி எல்லா கேள்விகளுக்கும் சிறப்பாக பதிலளித்தார். இதன் விளைவாக அவர்களில் மூவர் பைபிள் படிப்பிற்கு ஒத்துக்கொண்டார்கள். இவர்களில் தானியேல் என்ற பெயரையுடையவர், கூட்டங்களில் கலந்து கொள்ள ஆரம்பித்தார். தான் வைத்திருந்த ஆவியுலக தொடர்புடைய எல்லா பொருட்களையும் கூட அழித்துவிட்டார். (வெளிப்படுத்துதல் 21:8) ஒரு வருடத்திற்குள்ளாக முழுக்காட்டுதலும் பெற்றார்.
17. எல் சால்வடாரில் சில சகோதரர்கள் முதலில் ராஜ்ய செய்தியை கேட்க விருப்பமில்லாதிருந்த ஒருவருக்கு எவ்வாறு திறமையான அணுகுமுறையை பயன்படுத்தி பிரசங்கித்தனர்?
17 எல் சால்வடாரில், சாட்சிகள் வருகிறார்கள் என்று தெரிந்தாலே போதும், ஒருவர் தன்னுடைய வீட்டு வாசலில் கடிநாயைக் கட்டி விடுவார். தனது வீட்டை சாட்சிகள் கடந்து சென்று விட்டார்களா என்பதை பார்த்துக்கொண்டே இருப்பார். அவர்கள் சென்ற பிறகு நாயை பழையபடி வீட்டின் பின்புறத்தில் கட்டிவிடுவார். இவ்வாறு செய்துவந்ததால் சகோதரர்கள் அந்த நபரிடம் ஒருபோதும் பேசமுடியவில்லை. ஆகவே ஒருநாள் சாட்சிகள் வித்தியாசமான அணுகுமுறையை பயன்படுத்தினார்கள். அந்த நாயிடம் பேசுவதற்கு தீர்மானித்தார்கள். அப்படிச் செய்வதால் இந்தச் செய்தி அந்த வீட்டுக்காரருடைய காதிலும் விழும் என்பது சாட்சிகளுக்கு நன்றாகவே தெரியும். ஆகவே அந்த வீட்டிற்கு வந்த சாட்சிகள் நாயிடம் வணக்கம் தெரிவித்தனர். அதனிடம் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்ததால் தங்களுக்கு அதிக மகிழ்ச்சி என்று சொன்னார்கள். இந்த உலகம் அழகிய நந்தவனமாக மாறும்; அந்த சமயத்தில் யாருமே கோபப்பட மாட்டார்கள்; ஏன், மிருகங்கள்கூட சமாதானமாக இருக்கும் என்பதாக அந்த நாயிடம் சொன்னார்கள். பிறகு அந்த நாய்க்கு குட்-பை சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தார்கள். அப்போதுதான் ஆச்சரியமான ஒன்று நடந்தது. அந்த வீட்டுக்காரர் வெளியே வந்து சாட்சிகளிடம் மன்னிப்பு கேட்டார். சாட்சிகள் தன்னோடு பேசுவதற்கு ஒருபோதும் வாய்ப்பளிக்காமல் இருந்த தவற்றை ஒப்புக்கொண்டார். பிறகு அவர் சாட்சிகளிடமிருந்து பத்திரிகைகளை வாங்கிக்கொண்டார். ஒரு பைபிள் படிப்பும் ஆரம்பிக்கப்பட்டது. இப்போது அவர் நம்முடைய சகோதரராக—“விரும்பத்தக்கவை”களில் ஒருவராக இருக்கிறார்!
“பயப்படாதேயுங்கள்”
18. எப்படிப்பட்ட பிரச்சினைகளை பல கிறிஸ்தவர்கள் எதிர்ப்படுகிறார்கள், ஆனால் தம்மை வணங்குபவர்களை யெகோவா எவ்வாறு கருதுகிறார்?
18 இந்த இன்றியமையாத ராஜ்ய பிரசங்க வேலையிலும் சீஷராக்கும் வேலையிலும் நீங்கள் பங்கு கொள்கிறீர்களா? அப்படியானால், நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். இந்த வேலையின் மூலமாக மட்டுமே “விரும்பத்தக்கவை”களை யெகோவா தம்முடைய வீட்டிற்குள் இழுத்துக்கொள்கிறார். (யோவான் 6:44) சில சமயங்களில் நீங்கள் சோர்ந்துவிடலாம் அல்லது ஊக்கமிழந்துவிடலாம் என்பது உண்மையே. யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்களில் சிலரும்கூட தான் ஒன்றுக்கும் உதவாதவன் என்ற எண்ணத்திற்கு எதிராக போராடுகிறார்கள். ஆகவே மனம் தளர்ந்துவிட வேண்டாம்! யெகோவாவை வணங்கும் ஒவ்வொருவரையும் அவர் விரும்பத்தக்கவராக கருதுகிறார். உங்கள் இரட்சிப்பிலும் ஆழ்ந்த அக்கறை உடையவராக இருக்கிறார்.—2 பேதுரு 3:9.
19. ஆகாய் மூலம் என்ன ஊக்குவிப்பை யெகோவா அளித்தார், மேலும் இந்த வார்த்தைகள் நம்மை எவ்வாறு பலப்படுத்துகின்றன?
19 எதிர்ப்பின் காரணமாகவோ அல்லது மனதுக்கு விருப்பமில்லாத சூழ்நிலைகளின் காரணமாகவோ ஊக்கமிழந்தவர்களாக நாம் உணரும்போது, தாயகம் திரும்பிய யூதர்களுக்கு யெகோவா சொன்ன வார்த்தைகள் நம்மை பலப்படுத்தும். ஆகாய் 2:4-6-ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “ஆனாலும் செருபாபேலே, நீ திடன்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனே, நீ திடன்கொள்; தேசத்தின் எல்லா ஜனங்களே, நீங்கள் திடன்கொள்ளுங்கள், வேலையை நடத்துங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்களுடனே இருக்கிறேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். நீங்கள் எகிப்திலிருந்து புறப்படுகிறபோது நான் உங்களோடே உடன்படிக்கை பண்ணின வார்த்தையின்படியே, என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார்; பயப்படாதேயுங்கள். சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: கொஞ்சக்காலத்துக்குள்ளே இன்னும் ஒருதரம் நான் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் வெட்டாந்தரையையும் அசையப்பண்ணுவேன்.” நாம் பலமுள்ளவர்களாயிருப்பதற்கு அறிவுரை கொடுப்பது மட்டுமல்லாமல் பலமடைவதற்கான வழியையும் யெகோவா அளிக்கிறார் என்பதை கவனியுங்கள். எப்படி? அவருடைய உறுதியளிக்கும் வார்த்தைகளை கவனியுங்கள்: “நான் உங்களுடனே இருக்கிறேன்.” எப்படிப்பட்ட இடையூறுகளை எதிர்ப்பட்டாலும் யெகோவா நம்மோடு இருக்கிறார் என்பதை அறிவது நம் விசுவாசத்தை எவ்வளவாக பலப்படுத்துகிறது!—ரோமர் 8:31.
20. இப்போது எந்தவிதத்தில் யெகோவாவின் வீடு முன்னொருபோதும் இல்லாத அளவில் மகிமையால் நிரப்பப்படுகிறது?
20 யெகோவா தம்முடைய ஜனங்களோடு இருக்கிறார் என்பதை நிரூபித்திருக்கிறார். தீர்க்கதரிசியாகிய ஆகாய் மூலமாக அவர் குறிப்பிட்ட வார்த்தைகளிலிருந்து அதை அறிய முடியும்: “முந்தின ஆலயத்தின் மகிமையைப் பார்க்கிலும், இந்தப் பிந்தின ஆலயத்தின் மகிமை பெரிதாயிருக்கும். . . . இவ்விடத்திலே சமாதானத்தைக் கட்டளையிடுவேன்.” (ஆகாய் 2:9) உண்மையில், இன்று யெகோவாவின் ஆவிக்குரிய ஆலயத்தில் முன்னொருபோதும் இல்லாத அளவில் மகிமை காணப்படுகிறது. ஏன், ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான மக்கள் உண்மை வணக்கத்திடம் வந்துகொண்டிருக்கிறார்கள். இந்த மக்களுக்கு ஆவிக்குரிய உணவு ஏராளமாக அளிக்கப்படுகிறது. இந்த கொந்தளிப்பான உலகிலும் அவர்கள் சமாதானத்தை அனுபவித்து மகிழ்கிறார்கள். கடவுளுடைய புதிய உலகிலோ இந்த சமாதானத்தை முழுமையாக அனுபவித்து மகிழ்வார்கள்.—ஏசாயா 9:6, 7; லூக்கா 12:42.
21 யெகோவா அர்மகெதோனில் தேசங்களை அசைவிக்கும் காலம் நெருங்கிவிட்டது. (வெளிப்படுத்துதல் 16:14, 16) ஆகவே, எஞ்சியிருக்கும் காலத்தை இன்னும் அநேக ஜனங்களை பாதுகாக்க உதவுவதில் பயன்படுத்துவோமாக. அப்படியானால், நாம் பலமுள்ளவர்களாயும் முற்றிலும் யெகோவாவில் நம்பிக்கை வைத்தவர்களாயும் இருப்போமாக! ஆகவே, அவருடைய பெரிய ஆவிக்குரிய ஆலயத்தில் தொடர்ந்து வணங்குவதும், வேலை முடிந்தது என்று யெகோவா சொல்லும்வரை அந்த ஆலயத்தை இன்னும் அநேக “விரும்பத்தக்கவை”களால் நிரப்புவதுமே நம் தீர்மானமாக இருக்கட்டும்.
[அடிக்குறிப்புகள்]
a சாலொமோனின் ஆலயத்தைக் கட்டுவதற்கு, தற்போதைய மதிப்புப்படி 4,000 கோடி டாலர் நன்கொடையாக அளிக்கப்பட்டது. கட்டிட வேலைக்கு பயன்படுத்தாத பொருட்கள் ஆலயத்தின் பொக்கிஷங்களில் வைக்கப்பட்டன.—1 இராஜாக்கள் 7:51.
b இஸ்ரவேலில் இருந்த பிரதான ஆசாரியர்கள் தங்கள் பாவங்களுக்காக பாவநிவர்த்தி செய்ய வேண்டியதைப்போல் இயேசுவுக்கு பாவநிவர்த்தி செய்ய வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் அவர் பாவம் எதுவும் செய்யவில்லை. என்றாலும், அவருடைய உடன் ஆசாரியர்கள் பாவமுள்ள மனிதரிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டபடியால் அவர்கள் பாவிகளாகவே இருந்தனர்.—வெளிப்படுத்துதல் 5:9, 10.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• விலையுயர்ந்த பொருட்களைவிட எதை அதிக மதிப்புள்ளதாக யெகோவா கருதுகிறார்?
• இயேசு சிந்திய இரத்தத்தினால் எந்த இரண்டு வகுப்பார் நன்மையடைகிறார்கள்?
• யெகோவாவின் வீட்டை மகிமையால் நிரப்பும் அந்த “விரும்பத்தக்கவைகள்” யார்?
• ஆகாயின் தீர்க்கதரிசனம் நிறைவேறி வருகிறது என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?
21. நம்முடைய தீர்மானம் என்னவாக இருக்க வேண்டும்?
[பக்கம் 16-ன் படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
யெகோவாவுடைய பூர்வ ஆலயத்தின் அடையாளப்பூர்வ முக்கியத்துவம் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?
திரை
பரிசுத்த ஸ்தலம்
பலிபீடம்
மகா பரிசுத்த ஸ்தலம்
மண்டபம்
பிரகாரம்
[பக்கம் 17-ன் படம்]
பிரதான ஆசாரியன் லேவியரின் பாவங்களுக்காக ஒரு காளையையும் இஸ்ரவேலின் ஆசாரியரல்லாத கோத்திரங்களின் பாவங்களுக்காக ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் பலி செலுத்தினான்
[பக்கம் 18-ன் படம்]
உலகளாவிய ராஜ்ய பிரசங்கிப்பு வேலை திரளான ஜனங்களை யெகோவாவின் வீட்டிற்குள் இழுக்கிறது