பில்லிசூனியம் நீங்கள் அறிய வேண்டியவை
நவீன நாளைய பில்லிசூனியத்திற்கு விளக்கம் கொடுப்பது மிகக் கடினம். ஏனென்றால் ஒவ்வொருவரும் வித்தியாசம் வித்தியாசமாக அதை கடைப்பிடிக்கின்றனர். தங்கள் நம்பிக்கையை ஒருங்கிணைப்பதற்கு எந்த மைய ஆதாரமோ கொள்கையோ புனித புத்தகமோ இல்லை என்பதை அவர்களே ஒப்புக்கொள்கின்றனர். எந்தக் கடவுளை போற்றி வணங்குவது என்பதைக் குறித்ததில் அவர்களுடைய பாரம்பரியம், அமைப்புமுறை, சடங்காச்சாரம், கருத்தும்கூட வித்தியாசப்படுகிறது. ஒரு எழுத்தாளர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “சூனிய வித்தை உலகம், கருத்துக்களை ‘இஷ்டம்போல் அள்ளி வழங்கும் கடைத்தெருவே.’” மற்றொரு நூலாசிரியர் குறிப்பிடுகிறபடி, “பெரும்பாலான புதிய புறமதத்தினர் ஏறக்குறைய எல்லாவற்றிலும் கருத்து வேறுபாடு உடையவர்களே.”
பலருக்கு இந்தக் கருத்து வேறுபாடுகளெல்லாம் ஒரு பெரிய விஷயமே அல்ல. பெருகிவரும் சூனியக்காரிகளுக்காக தயாரிக்கப்பட்ட ஒரு புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “எதிர்மறையானது போல தோன்றும் கருத்துக்களை எதிர்ப்படுகையில் நுணுக்கமாக ஆய்வு செய்து, அதன்பின் எதைப் பின்பற்றுவது என்று முடிவு செய்யுங்கள். உங்கள் மனம் சொல்வதைக் கேளுங்கள். அதாவது, சடங்காச்சார புத்தகங்களிலிருந்து உங்களுக்கு எது சரி என தோன்றுகிறதோ அதை தயங்காமல் தேர்ந்தெடுங்கள்.”
உண்மை என்ன என்பதை அறிந்து கொள்பவர்களுக்கு இப்படிப்பட்ட கருத்து வேறுபாடுகள் ஒரு சிக்கலே. உண்மை என்பது மறுக்க முடியாத மெய்மை. ஒருவர் வெறுமனே சரி என நினைப்பதாலோ நம்புவதாலோ அல்லது ஒப்புக்கொள்வதாலோ மட்டுமே அந்த விஷயம் உண்மையாகிவிடாது. உதாரணமாக, ஒரு காலத்தில் டாக்டர்கள் உயிருள்ள கோழிக்குஞ்சை இரண்டாக வெட்டி அத்துண்டுகளை நிமோனியா நோயாளியின் மார்பில் வைப்பதன்மூலம் அந்நோயாளியை சுகப்படுத்த முடியும் என நம்பினார்கள். பல நோயாளிகளும் இந்த சிகிச்சைமுறையால் தாங்கள் சுகமடைவர் என நம்பினார்கள். ஆனால் அவர்களுடைய நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும், உண்மையின் அடிப்படையில், அதாவது இந்த சிகிச்சைமுறை நிமோனியாவை சுகப்படுத்தாது என்ற உண்மையின் அடிப்படையில் இல்லை. ஆகவே, ஜனங்களாகப் பார்த்து சத்தியத்தை உருவாக்க முடியாது; ஆனால் அதை தெரிந்துகொள்ள மட்டுமே முயற்சி செய்ய முடியும்.
ஆன்மீக விஷயங்களைக் குறித்த உண்மைகள் பைபிளில் உள்ளன. இயேசு கிறிஸ்து பூமியில் இருக்கையில் தமது தகப்பனிடம் இவ்வாறு ஜெபம் செய்தார்: “உம்முடைய வசனமே சத்தியம்.” (யோவான் 17:17) அப்போஸ்தலன் பவுலும் இப்படித்தான் எழுதினார்: “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது.” (2 தீமோத்தேயு 3:16) பில்லிசூனிய பழக்கமுடைய பலர் இதை ஒத்துக்கொள்வதில்லை. மாறாக, தூண்டுதலுக்காகவும் வழிநடத்துதலுக்காகவும் கட்டுக்கதைகளையும் பூர்வ மதங்களையும் விஞ்ஞான புனைக்கதைகளையுமே நம்பியிருக்கிறார்கள். இருந்தாலும், பைபிள் என்னதான் சொல்கிறது என்பதற்கு கொஞ்சம் செவிசாய்ப்பதில் தவறில்லையே! அதுமட்டுமல்ல இப்புத்தகம் உலகமுழுவதிலும் புனித புத்தகம் என்ற அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. இன்றுவரை நிலைத்திருக்கும் பழமையான மத புத்தகங்களில் இதுவும் ஒன்று. பைபிள் 1,600 வருட காலப்பகுதியில் எழுதப்பட்டது. இருந்தாலும், பைபிள் முழுவதிலும் காணப்படும் போதனைகள் ஒன்றுக்கொன்று முரண்பாடின்றி ஒத்துப்போகின்றன. இப்பொழுது, பைபிளின் போதனைகளையும் பில்லிசூனியத்தை ஆதரித்துக் கூறப்படும் பொதுவான நம்பிக்கைகளையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
ஆவி உலகில் வசிப்பது யார்?
ஆன்மீக விஷயங்களைப் புரிந்துகொள்ளுவதற்கான முயற்சியில் முதலாவது கேட்கப்பட வேண்டிய அடிப்படைக் கேள்வி, ஆவி உலகில் வசிப்பது யார்? பெரும்பாலான நவீன நாளைய சூனியக்காரிகள் இயற்கையை வணங்குபவர்களும் பற்பல கடவுட்களில் நம்பிக்கை வைப்பவர்களுமே. சிலர் வாழ்க்கையின் மூன்று அடிப்படை நிலைகளிலுள்ள, அதாவது கன்னி, தாய், கிழவி என்ற இந்த மூன்று பாகங்களை வகிக்கும் தாய்-கடவுளை வணங்குகிறார்கள். கொம்புகளையுடைய கடவுளே அவளுடைய காதலன். மற்ற சூனியக்காரிகள் ஆண் கடவுளையும் பெண் கடவுளையும் வணங்குகிறார்கள். ஒரு எழுத்தாளர் இவ்வாறு சொல்கிறார்: “பெண் கடவுளிலும் ஆண் கடவுளிலும் பெண்ணுக்கும் ஆணுக்குமுரிய இயற்கை சக்திகள் தெளிவாக காணப்படுகின்றன. ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு சிறப்பு குணமுண்டு; இவற்றையெல்லாம் ஒன்றுசேர்க்கையில், உயிர் படைக்கப்படுகிறது.” மற்றொரு நூலாசிரியை இவ்வாறு எழுதுகிறார்: “பில்லிசூனியத்தில் நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான தெரிவு, நீங்கள் தொடர்புகொள்ள விரும்பும் தெய்வங்களை (தேவர்களை/தேவியர்களை) தேர்ந்தெடுப்பதாகும். . . . நீங்கள் எத்தகைய தெய்வீகத்தை வேண்டுமானாலும் தெரிந்து கொள்வதற்கு இந்த வித்தை முழு சுதந்திரத்தையும் தருகிறது. அதற்குப்பின் அதை நீங்கள் போற்றி வணங்கலாம்.”
இப்படிப்பட்ட கருத்துக்கள் எதையுமே பைபிள் ஆதரிக்கிறதில்லை. இயேசு கிறிஸ்து, “ஒன்றான மெய் தேவனாகிய” யெகோவாவைப் பற்றி மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதிலேயே தம்முடைய ஊழியத்தை முழுமையாக அர்ப்பணித்தார். (யோவான் 17:3) பைபிள் இவ்வாறு குறிப்பிடுகிறது: “கர்த்தர் [“யெகோவா,” NW] பெரியவரும் மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே. சகல ஜனங்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே.”—1 நாளாகமம் 16:25, 26.
பிசாசைப் பற்றியென்ன? “பிசாசுடன் தொடர்புகொள்வதே” பில்லிசூனியம் என வெப்ஸ்டர்ஸ் நைன்த் நியூ காலேஜியேட் டிக்ஷ்னரி விளக்கம் தருகிறது. இப்படிப்பட்ட விளக்கத்தை ஒரு சூனியக்காரர் ஒப்புக்கொள்ள மாட்டார். ஏனெனில் பிசாசாகிய சாத்தான் இருக்கிறான் என்ற கருத்தைக்கூட இன்று அநேகர் ஏற்றுக்கொள்வதில்லையே! தி ஐரிஷ் டைம்ஸ் என்ற செய்தித்தாளில், “உயர் அந்தஸ்திலுள்ள சூனியக்காரியும் அயர்லாந்து பில்லிசூனிய கும்பல் ஒன்றின் தலைவியுமாக” விவரிக்கப்பட்டிருந்த ஓர் இளம் பெண் இவ்வாறு விவாதித்தார்: “பிசாசின்மீது நம்பிக்கை வைப்பது கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்வதை சுட்டிக்காட்டுகிறது . . . தெய்வமில்லா உலகில் [பிசாசு] குடியிருக்க முடியாது.”
ஆனால், பிசாசு இருக்கிறான் என்றும் பூமியில் நடக்கும் எல்லாவித துன்பத்திற்கும் கொந்தளிப்புக்கும் அவனே காரணம் என்றும் பைபிள் உறுதியளிக்கிறது. (வெளிப்படுத்துதல் 12:12) பிசாசு என்பவன் இருக்கிறான் என்று மட்டுமல்ல, நம்மை அறியாமலேயே பிசாசின் சித்தத்தைச் செய்யும் வாய்ப்பு உள்ளது என்றும் இயேசு கற்பித்தார். உதாரணமாக, முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சுய நீதியுள்ள மதத் தலைவர்கள், தாங்கள்தான் கடவுளுடைய குமாரர்கள் என்றும், கடவுளுடைய சித்தத்தைச் செய்பவர்கள் என்றும் உறுதியாக நம்பினார்கள். அவர்களுடைய இருதயத்தில் என்ன இருக்கிறது என்பதை இயேசுவால் தெளிவாக உணர முடியுமாதலால், அவர்கள் கடவுளுடைய சித்தத்தைச் செய்பவர்கள் அல்ல என்பதை அறிந்தார். அவர் கொஞ்சமும் தயக்கமின்றி அவர்களிடம் சொன்னார்: “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்.” (யோவான் 8:44) மேலும், அந்தப் பிசாசு “உலகமனைத்தையும் மோசம்போக்குகி[றான்]” என்று பைபிள் புத்தகமாகிய வெளிப்படுத்துதல் குறிப்பிடுகிறது.—வெளிப்படுத்துதல் 12:9.
மாயவித்தைகளிலும் நன்மையா?
மாயவித்தையும் (magic) சூனியத்தோடு (occult) தொடர்புடையதுதான்.a பூர்வ காலங்களிலும் சரி, நவீன காலங்களிலும் சரி சூனியக்காரர்களால் செய்யப்படும் மாயவித்தை மற்றவர்களுக்கு தீங்குவிளைவிக்கும் நோக்குடனே செய்யப்படுகிறது என நம்புகிறார்கள். சூனியக்காரர்கள் நினைத்தால், மந்திரம் போட்டு மற்றவர்களைப் பாடாய் படுத்தி, அவர்களை ஆட்டிவைத்து கொல்லவும் முடியும். நோய்நொடி, மரணம், பயிர்கள் நாசமாதல் உள்ளிட்ட எத்தனையோ இன்னல்களெல்லாம் சூனியக்காரர்கள் செய்த வேலைதான் என்று குற்றஞ்சாட்டுவது வழக்கமாய் இருந்து வந்திருக்கிறது.
இன்று சூனியக்காரர்கள் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். கேடு விளைவிக்கும் வஞ்சக சூனியக்காரர்கள் ஒருசிலர் இருப்பதை ஒத்துக்கொள்கிறபோதிலும் தாங்கள் செய்யும் மாயவித்தைகள் தீங்கை அல்ல நன்மையே விளைவிக்கின்றன என சொல்லிக் கொள்கிறார்கள். மாயவித்தை அதைச் செய்பவருக்கு மூன்று மடங்கு பலன் தருகிறது, இதனாலேயே இதைப் பழித்துக் கூறுவதற்கு எதிராக மிகப் பெரிய தடுப்புச்சுவராக இருக்கிறது என்றும் விக்கன்கள் கற்பிக்கிறார்கள். உதாரணமாக நன்மை பயக்கும் மாயவித்தை என சொல்லப்படுபவற்றில் பின்வருபவையும் அடங்கும். உங்களையே பாதுகாக்க மந்திரம் சொல்லுதல், முன்பு குடியிருந்தோர் விட்டுச் சென்ற தீய சக்திகளிலிருந்து உங்கள் வீட்டைச் சுத்திகரித்தல், ஒருவரை உங்கள் காதல் வலையில் வீழ்த்துதல், நோயிலிருந்து சுகமடைந்து ஆரோக்கியம் பெறுதல், வேலையை தக்கவைத்தல், பணம் சம்பாதித்தல். இவ்வாறு, பற்பல காரியங்களைச் சாதிக்கும் சக்திகளும் பில்லிசூனியத்திற்கு இருப்பதால், இது இந்த அளவிற்கு பிரபலமாயிருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
என்றாலும் மாயவித்தைகளில் இது நல்லது அது கெட்டது என்பதாக பைபிள் வேறுபடுத்திக் காட்டுவதில்லை. மோசேக்குக் கொடுத்த நியாயப்பிரமாணத்தின் மூலம் கடவுள் தம்முடைய நிலைநிற்கையைத் தெளிவுபடுத்தினார். அவர் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் . . . நாள்பாராமலும் இருப்பீர்களாக.” (லேவியராகமம் 19:26) மேலும் இவ்விதமாக வாசிக்கிறோம்: “நாள்பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும், மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம்.”—உபாகமம் 18:10, 11.
கடவுள் ஏன் அவ்விதமாக சொன்னார்? நாம் நன்மையடைவதை தடுக்கும் நோக்குடன் அவ்வாறு சொல்லவில்லை. யெகோவா தம்முடைய ஜனங்களை நேசித்ததாலும் பயமும் மூடநம்பிக்கையும் அவர்களை ஆட்கொள்ளக் கூடாது என்பதாலுமே இந்த சட்டங்களைக் கொடுத்தார். அதுமட்டுமல்ல, தங்களுக்கு என்ன வேண்டுமோ, அதை தம்மிடம் கேட்கும்படி தம் ஊழியர்களை அழைக்கிறார். ‘நன்மையான எந்த ஈவுக்கும் பூரணமான எந்த வரத்திற்கும்’ அவரே ஊற்றுமூலர். (யாக்கோபு 1:17) அப்போஸ்தலனாகிய யோவான் சக விசுவாசிகளுக்கு இவ்வாறு உறுதியளித்தார்: “அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்கு முன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே [கடவுளிடமிருந்து] பெற்றுக்கொள்ளுகிறோம்.”—1 யோவான் 3:22.
பொல்லாத ஆவிகளைப் பற்றியென்ன?
பொல்லாத ஆவிகள் இருக்கின்றன. பைபிளின் இந்தக் குறிப்பை சூனியக்காரர்கள் பலரும் ஒத்துக்கொள்கிறார்கள்: பில்லிசூனியத்தை ஆதரிக்கும் ஒருவர் ஒரு கட்டுரையில் இவ்விதமாக எச்சரிக்கிறார்: “ஆவி உருவங்கள் நடமாடுகின்றன. அவை உயிருள்ள படைப்புகள் அடங்கிய, நாம் வாழும் உலகைப் போன்றே இருக்கும் வேறொரு கண்காணா உலகில் வாழ்கின்றன. . . . ‘குட்டிச்சாத்தான்’, ‘தீய ஆவி’, ‘பேய்’ என்ற வார்த்தைகளெல்லாம் சரிதான். அந்த ஆவிகள் மிகவும் பலமானவை. . . . அவற்றுள் விவரமானவை . . . (கொஞ்சம் இடம் கொடுத்தால் போதும்) நம்மில் புகுந்துகொள்ளும் அளவுக்கு ஆற்றல் வாய்ந்தவை. . . . அவை உங்கள் உடலுக்குள் பிரவேசிக்க முடியும் . . . , உங்களை ஓரளவு அவற்றின் கட்டுப்பாட்டில் வைக்கவும் செய்யும். உண்மையில் இது பேய் பிடித்தவர்களைப் பற்றிய பழங்கதைகளுக்கு ஒப்பாகவே இருக்கிறது.”
பைபிள் காலங்களில், பல்வேறுபட்ட வழிகளில் பேய்பிடித்த ஜனங்கள் அலைக்கழிக்கப்பட்டனர். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் சிலர் ஊமைகளாகிவிட்டனர்; சிலரது கண்கள் குருடாயின; சிலருக்குப் பித்துப்பிடித்தது; இன்னும் சிலருக்கு இயல்புக்கு மிஞ்சின சக்தி கிடைத்தது. (மத்தேயு 9:32; 12:22; 17:15, 18; மாற்கு 5:2-5; லூக்கா 8:29; 9:42; 11:14; அப்போஸ்தலர் 19:16) ஒருசில சமயங்களில் பல பேய்கள் ஒரே சமயத்தில் ஒருவரைப் பிடித்துக்கொண்டபோது அவர்கள் பட்ட வேதனைக்கு அளவே இல்லை. (லூக்கா 8:2, 30) அப்படியானால், பில்லிசூனியத்திலிருந்தும் மற்ற மாய மந்திர பழக்கங்களிலிருந்தும் விலகியிருக்கும்படி யெகோவா எச்சரிப்பது சரியே என புரிந்துகொள்ள முடிகிறது.
சத்தியத்தை அடிப்படையாகக் கொண்ட மதம்
இன்று அநேகரும் பில்லிசூனியத்திடம் இழுக்கப்படுவதற்குக் காரணம், அது நன்மை செய்யும் இயற்கை வழிபாட்டு மதமே என்றும், அதனால் எந்தத் தீங்கும் நேரிடாது என்றும் அவர்களுக்குத் தோன்றுவதால்தான். சில சமுதாயங்களில் இது ஏற்றுக்கொள்ளப்பட்ட மதமாகிவிட்டது. இதற்கு எவரும் பயப்படுவதுமில்லை. மாறாக, இது சகஜமாகிவிட்டது. வினோதமான ஒன்றைக் காண்கையில் அதில் என்னதான் இருக்கிறது என அறிந்துகொண்டு அதைக் கடைப்பிடிக்க அநேகர் முற்படும் மத சகிப்புத்தன்மையுடைய ஓர் சூழலில், பில்லிசூனியம் ஓரளவு நன்மதிப்பை பெற்றுவிட்டது.
தனக்கு ஒரு ஜோடி ஷூக்கள் தேவையென்றால் ஒருவர் கடைக்குப் போய் தனக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுப்பார். இதில் அவருக்கு எவ்வாறு சுதந்திரம் இருக்கிறதோ, அவ்வாறே இவ்வுலக மதங்களெல்லாம் சேர்ந்து ஒரு கடைத்தெருவாகிவிட்டது. அதில் மக்கள் தங்களது தேவைக்கேற்ப, தாங்கள் விரும்பிய மதத்தைத் தேர்ந்தெடுக்கும் நிலைமையே இன்றுள்ளது. இதற்கு நேர்மாறாக, இயேசு இரண்டு தெரிவுகளை மட்டுமே பேசினார். அவர் இவ்விதமாக கூறினார்: “இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.” (மத்தேயு 7:13, 14) எந்தப் பாதையை வேண்டுமானாலும் நாம் தாராளமாக தேர்ந்தெடுக்கலாம். ஆனால் நம்முடைய நித்திய நலம் ஆபத்திலிருப்பதால் நமது தெரிவு முக்கியமானது. ஆவிக்குரிய அறிவொளியைப் பெற நாம் சத்தியப் பாதையில் நடக்க வேண்டும். அந்த வழியை கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் மட்டுமே கண்டடைய முடியும்.
[அடிக்குறிப்புகள்]
a பலதரப்பட்ட சூனியத்தை, மேடையில் காட்டப்படும் மாயாஜாலத்திலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுவதற்காக சிலர் ஆங்கிலத்தில் “magick” என்று எழுத்துக்கூட்டி உச்சரிக்கிறார்கள். செப்டம்பர் 8, 1993, விழித்தெழு! (ஆங்கிலம்) பக்கம் 26-ல் உள்ள “மாயவித்தைகள் செய்வதில் ஆபத்து இருக்கிறதா?” என்ற கட்டுரையைக் காண்க.
[பக்கம் 5-ன் படம்]
பில்லிசூனியம் எந்த தொந்தரவும் செய்யாத, இயற்கை வழிபாட்டு மதம் என இன்று பலரும் கருதுகிறார்கள்
[பக்கம் 6-ன் படம்]
கண்கட்டி வித்தையும் சூனியத்துடன் தொடர்புடையதே
[பக்கம் 6-ன் படம்]
பில்லிசூனியக்காரர்கள் தங்களுக்குத் தெரியாமலேயே பிசாசின் சித்தத்தை செய்கிறார்களா?
[பக்கம் 7-ன் படம்]
பைபிள் சத்திய பாதையைக் காட்டுகிறது