வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
இரத்தத்தின் உபயோகம் பற்றிய பைபிளின் கட்டளையை அறிந்த யெகோவாவின் சாட்சிகள், தங்கள் இரத்தத்தையே மீண்டும் உபயோகிக்கும் மருத்துவ முறையை எப்படி கருதுகின்றனர்?
ஒவ்வொரு கிறிஸ்தவரும் தன்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு ஏற்றவாறோ, சிபாரிசு செய்யப்படும் சில மருத்துவ சிகிச்சைக்கு இசைவாகவோ தீர்மானம் செய்யாமல் பைபிளின் கருத்தை கவனமாக ஆராய்வது அவசியம். இது அவருக்கும் யெகோவாவுக்கும் இடைப்பட்ட விஷயம்.
நமக்கு உயிர்கொடுத்த யெகோவா தேவன், இரத்தத்தைப் புசிக்கக்கூடாது என கட்டளையிட்டார். (ஆதியாகமம் 9:3, 4) பூர்வ இஸ்ரவேலருக்குக் கடவுள் கொடுத்த நியாயப்பிரமாண சட்டத்தில், இரத்தம் உயிரைப் பிரதிநிதித்துவம் செய்தது; எனவே அவர் அதன் உபயோகத்தில் கட்டுப்பாடுகளை வைத்தார். “மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்” என்றார். உணவுக்காக மிருகத்தை ஒருவன் கொன்றால்? “அவன் அதின் இரத்தத்தைச் சிந்தப்பண்ணி, மண்ணினால் அதை மூடக்கடவன்” என்று கடவுள் சொன்னார்.a (லேவியராகமம் 17:11, 13) இந்தக் கட்டளையை யெகோவா திரும்ப திரும்ப சொன்னார். (உபாகமம் 12:16, 24; 15:23) யூத சோன்ஸீனோ கூமேஷ் இவ்வாறு குறிப்பிடுகிறது: “இரத்தத்தைச் சேமித்து வைக்கக்கூடாது; அதை ஒருபோதும் உட்கொள்ள முடியாதபடி தரையில் ஊற்றிவிட வேண்டும்.” எந்த இஸ்ரவேலனும் கடவுளுக்குச் சொந்தமான மற்றொரு ஜீவனின் இரத்தத்தைத் தனதாக்கிக் கொள்ளவோ, சேகரித்து வைக்கவோ, பயன்படுத்திக் கொள்ளவோ கூடாது.
மேசியா இறந்தபோது மோசேயின் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிய கட்டாயம் இல்லாமல் போனது. எனினும், இரத்தத்தின் பரிசுத்தத் தன்மையைப் பற்றிய கடவுளுடைய கருத்து மாறவேயில்லை. கடவுளுடைய ஆவியால் வழிநடத்தப்பட்ட அப்போஸ்தலர்கள், ‘இரத்தத்திற்கு விலகியிருக்கும்படி’ கிறிஸ்தவர்களுக்குக் கட்டளையிட்டனர். அந்தக் கட்டளையை ஏனோதானோ என எடுத்துக்கொள்ளக்கூடாது. பாலியல் ஒழுக்கக்கேட்டிலிருந்து அல்லது விக்கிரகாராதனையிலிருந்து விலகியிருப்பது எந்தளவுக்கு முக்கியமோ அந்தளவுக்கு இதுவும் முக்கியமானதாய் இருந்தது. (அப்போஸ்தலர் 15:28, 29; 21:25) இரத்த தானம் செய்வதும், இரத்தமேற்றிக் கொள்வதும் 20-ம் நூற்றாண்டில் சர்வசாதாரணம்; அப்படியிருந்தாலும், இந்தப் பழக்கம் கடவுளுடைய வார்த்தைக்கு எதிர்மாறானது என யெகோவாவின் சாட்சிகளுக்குத் தெரியும்.b
அறுவை சிகிச்சைக்குப் பல வாரங்களுக்கு முன்பு, நோயாளி தன்னுடைய இரத்தத்தையே தானம் செய்து சேமித்து வைக்கும்படி (இது PAD அல்லது அறுவை சிகிச்சைக்கு முன் செய்யப்படும் சுய இரத்த தானம் என அழைக்கப்படுகிறது) சிலசமயங்களில் மருத்துவர் சொல்லலாம். இப்படி சேமித்து வைக்க சொல்வதற்குக் காரணம், ஒருவேளை தேவை ஏற்பட்டால் அந்த இரத்தத்தையே அவருக்கு செலுத்துவதற்குத்தான் என மருத்துவர் சொல்லலாம். எனினும், அவ்வாறு இரத்தத்தை எடுத்து, சேமித்து வைத்து, உடலில் ஏற்றுவது, லேவியராகமத்திலும் உபாகமத்திலும் சொல்லப்பட்டதற்கு எதிர்மாறாக உள்ளது. இரத்தத்தை சேமித்து வைக்கக்கூடாது; அதை கடவுளிடமே திருப்பிக் கொடுக்கும் ‘பாவனையில்’ கீழே ஊற்றிவிட வேண்டும். மோசேயின் நியாயப்பிரமாணம் இன்று புழக்கத்தில் இல்லை என்பது உண்மைதான். எனினும், அதிலுள்ள கடவுளின் நியமங்களை யெகோவாவின் சாட்சிகள் இன்னும் மதிப்பதால், ‘இரத்தத்திற்கு விலகியிருப்பதில்’ உறுதியாய் இருக்கின்றனர். அதன் காரணமாகவே நாம் இரத்த தானமும் செய்வதில்லை, ‘தரையில் ஊற்றிவிட’ வேண்டிய இரத்தத்தை ஏற்றிக் கொள்வதற்காக சேமித்து வைப்பதுமில்லை. அந்தப் பழக்கம் கடவுளுடைய சட்டத்திற்கு விரோதமானது.
ஒருவருடைய இரத்தத்தில் செய்யப்படும் பரிசோதனைகள் பைபிள் நியமங்களுடன் நேரடியாக முரண்படாமல் இருக்கலாம். உதாரணமாக, தங்கள் இரத்தத்தில் கொஞ்சத்தை சோதனைக்கு அல்லது ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ள கிறிஸ்தவர்கள் பலர் அனுமதிக்கின்றனர். அதன்பின் அந்த இரத்தம் களைந்துவிடப்படுகிறது. ஒருவரின் இரத்தத்தை பரிசோதிக்கும் சிக்கலான மற்ற முறைகளையும் மருத்துவர்கள் சிபாரிசு செய்யலாம்.
உதாரணமாக, சில அறுவை சிகிச்சைகளின்போது, இரத்தச் செறிவு (hemodilution) என்ற மருத்துவமுறையின் மூலம் உடலிலிருந்து ஓரளவு இரத்தம் வேறு போக்கில் திருப்பி விடப்படலாம். நோயாளியின் உடலில் இருக்கும் மீதமுள்ள இரத்தத்தின் அடர்த்தியும் அப்போது குறைக்கப்படும். பின்னால், வேறு போக்கில் திருப்பி விடப்பட்ட அவருடைய இரத்தம் மீண்டும் அவருக்குள் செலுத்தப்படும். இவ்வாறு, அவருடைய இரத்த செல்களின் எண்ணிக்கை ஏறக்குறைய இயல்பான அளவுக்கு திரும்பும்படி செய்யப்படுகிறது. இதைப் போல, காயம் பட்ட இடத்திலிருந்து வழியும் இரத்தத்தைச் சேமித்து, வடிகட்டி, அதிலுள்ள சிவப்பணுக்களை மீண்டும் நோயாளியின் உடலுக்குள் செலுத்தலாம். இந்த முறைக்கு இரத்த சுத்திகரிப்பு முறை என்று பெயர். வேறொரு முறையும் உண்டு; அதில் (இருதயம், நுரையீரல்கள் அல்லது சிறுநீரகங்கள் போன்ற) உடல் உறுப்புகளின் இயல்பான செயலை தற்காலிகமாக ஒரு இயந்திரம் செய்யும்படி இரத்தம் அதனுள் செலுத்தப்படலாம். பின்பு, இயந்திரத்திலிருந்து இரத்தம் மீண்டும் நோயாளியின் உடலுக்குள் செலுத்தப்படுகிறது. இன்னும் சில முறைகளில், மையவிலக்கி (centrifuge) எனும் கருவியினுள் இரத்தம் செலுத்தப்படுகிறது. இது, கெட்டுப்போன அல்லது சேதமடைந்த இரத்தத்தின் பாகங்களை நீக்கிவிடுகிறது. அல்லது இரத்தத்தில் உள்ள சில பாகங்களை தனியே பிரித்து, அவற்றை உடலின் வேறு பகுதிகளுக்கு அனுப்புகிறது. இன்னும் சில சோதனை முறைகளும் உள்ளன. அவற்றில், பரிசோதனைக்காக ஓரளவு இரத்தம் எடுக்கப்படுகிறது; அதில் அடையாளச் சீட்டு இணைக்கப்பட்டு வைக்கப்படுகிறது அல்லது மருந்து கலந்து வைக்கப்படுகிறது. பின்னர் அதே இரத்தம் மீண்டும் நோயாளியின் உடலில் ஏற்றப்படுகிறது.
விளக்கங்கள் வேறுபடலாம், புதிய செய்முறைகளிலும், சிகிச்சைகளிலும், சோதனைகளிலும் முன்னேற்றம் ஏற்படலாம். காணப்படும் ஒவ்வொரு வேறுபாட்டையும் நுணுக்கமாக ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டியது நம்முடைய பொறுப்பல்ல. ஆனால், அறுவை சிகிச்சையின் போது, மருத்துவ பரிசோதனையின் போது, அல்லது நவீன சிகிச்சையின் போது தன்னுடைய இரத்தத்தை எவ்வாறு மருத்துவர்கள் கையாள வேண்டும் என்பதை ஒரு கிறிஸ்தவரே சொந்தமாக தீர்மானிக்க வேண்டும். சிகிச்சையின் போது தன்னுடைய இரத்தம் எவ்வாறு உபயோகிக்கப்படும் என்பதைப் பற்றிய மருத்துவ விவரங்களை அவர் முன்னதாகவே மருத்துவரை அல்லது டெக்னிஷியனை கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். பின்பு, தன் மனசாட்சிக்கு இசைய தீர்மானிக்க வேண்டும். (பெட்டியைக் காண்க.)
கடவுளுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்திருப்பதையும், ‘முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு பலத்தோடும், முழு மனதோடும் அவரில் அன்புகூரவேண்டிய’ தங்கள் கடமையையும், கிறிஸ்தவர்கள் எப்போதும் மனதில் வைக்க வேண்டும். (லூக்கா 10:27) இந்த உலகிலுள்ள பெரும்பாலோரைப்போல் இராமல், யெகோவாவின் சாட்சிகள், கடவுளுடன் தங்களுக்குள்ள உறவை பொக்கிஷமாய் மதிக்கின்றனர். “அவருடைய [இயேசு கிறிஸ்துவினுடைய] இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது” என நாம் வாசிக்கிறோம். எனவேதான், இயேசுவின் சிந்தப்பட்ட இரத்தத்தில் நம்பிக்கை வைக்கும்படி நமக்கு உயிரளித்தவர் நம் எல்லாரையும் ஊக்குவிக்கிறார்.—எபேசியர் 1:7.
[அடிக்குறிப்புகள்]
a பேராசிரியர் ஃபிராங்க் எச். கோர்மன் எழுதுகிறதாவது: “இரத்தத்தை உபயோகிக்காமலிருப்பது பயபக்திக்குரிய செயல் என நன்கு புரிந்துகொள்ளப்பட்டுள்ளது; அது, அந்த மிருகத்தின் உயிருக்கு மதிப்பைக் காட்டுவதையும், அதோடு அதற்கு உயிரளித்து, தொடர்ந்து பராமரிக்கும் கடவுளுக்கும் மரியாதை காட்டுவதையும் சுட்டிக்காட்டியது.”
b தானம் செய்யப்பட்ட இரத்தத்தை ஏற்றிக்கொள்வது ஏன் சரியல்ல போன்ற முக்கிய கேள்விகளுக்கு 1951, ஜூலை 1 தேதியிட்ட தி உவாட்ச்டவர் பதிலளித்தது.
[பக்கம் 31-ன் பெட்டி/படங்கள்]
இக்கேள்விகளுக்கு உங்கள் மனசாட்சியின் பதிலென்ன?
என் இரத்தத்தில் கொஞ்சம் ஓர் இயந்திரத்திற்குள் திருப்பிவிடப்படுகையில் ஒருவேளை சிறிது நேரத்திற்கு இரத்த ஓட்டம் தடை செய்யப்படலாம்; அப்படிப்பட்ட இரத்தத்தை ‘தரையிலே ஊற்றி’விடாமல் மீண்டும் என் உடலில் ஏற்றிக்கொள்ள என் மனசாட்சி இடமளிக்குமா?
நோயைக் கண்டுபிடிப்பதற்காக அல்லது மருத்துவப் பரிசோதனைக்காக என் இரத்தத்தில் கொஞ்சம் வெளியெடுக்கப்பட்டு, மாறுதலுக்கு உட்படுத்தப்பட்டு, திரும்பவும் என் உடலுக்குள் செலுத்தப்பட்டால் பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட என் மனசாட்சி உறுத்துமா?