ஆதி தம்பதியிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ளலாம்
கடவுள் பூமியை பார்வையிட்டார். மனிதன் குடியிருப்பதற்காக அதை ஆயத்தம் செய்துகொண்டிருந்தார். அவர் செய்துகொண்டிருந்த அனைத்தும் நன்றாக இருப்பதை கண்டார். சொல்லப்போனால், இந்த வேலை முடிவடைந்தவுடன், “மிகவும் நன்றாயிருந்தது” என்று அவர் சொன்னார். (ஆதியாகமம் 1:12, 18, 21, 25, 31) ஆனால் அந்த நல்ல முடிவுக்கு வருவதற்கு முன், “நல்லதல்ல” என்று ஒரு விஷயத்தைப் பற்றி கடவுள் பேசினார். எதையோ குறையுடன் படைத்துவிட்டார் என்பதை இது நிச்சயமாகவே அர்த்தப்படுத்தவில்லை. ஆனால் அவருடைய படைப்பு வேலை இன்னும் முற்றுப்பெறவில்லை. “மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்” என்று யெகோவா சொன்னார்.—ஆதியாகமம் 2:18.
மனித சமுதாயம் பூமிக்குரிய பரதீஸில் ஆரோக்கியத்தோடும் ஆனந்தத்தோடும் அபரிமிதத்தோடும் நித்திய வாழ்வை அனுபவிக்க வேண்டும் என்பதுதான் யெகோவாவின் நோக்கம். ஆதாமே மனித குலத்தின் தந்தை. அவனுடைய மனைவி ஏவாளோ “ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள்.” (ஆதியாகமம் 3:20) இன்று அவர்களுடைய கோடிக்கணக்கான பிள்ளைகளால் பூமி நிரம்பி வழிந்தாலும் மனிதர்கள் நிச்சயமாகவே பரிபூரணமாக இல்லை.
ஆதாம் ஏவாள் கதை எல்லாருக்கும் தெரிந்ததே. ஆனால் அதில் நம் வாழ்க்கைக்கு என்ன பயன் இருக்கிறது? ஆதி தம்பதியின் அனுபவத்திலிருந்து நாம் எதை கற்றுக்கொள்ளலாம்?
“ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்”
ஆதாம் மிருகங்களுக்கு பெயர் வைத்தபோது அவற்றுக்கெல்லாம் துணை இருந்ததையும், தானோ துணை இல்லாமல் ஒண்டியாக இருந்ததையும் கண்டான். ஆகவே ஆதாமுடைய விலா எலும்பிலிருந்து யெகோவா உருவாக்கிய அந்த அழகிய பெண்ணைப் பார்த்தபோது அவன் குதூகலமடைந்தான். அவள் தன்னில் ஒரு பாகமாக புதுவிதமாய் இருப்பதை அறிந்தபோது உணர்ச்சிபொங்க இவ்வாறு கூறினான்: “இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாயிருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள்.”—ஆதியாகமம் 2:18-23.
மனுஷனுக்கு ‘ஒரு துணை’ தேவைப்பட்டது. இப்போது பொருத்தமான துணை அவனுக்குக் கிடைத்துவிட்டது. ஆதாமுக்கு இருந்த குறையை நிறைவாக்குவதற்கு ஏவாள் மிகவும் பொருத்தமானவளாக இருந்தாள். தங்கள் தோட்ட வீட்டையும் மிருகங்களையும் கவனித்துக்கொள்வதில், பிள்ளைகளைப் பிறப்பிப்பதில், ஓர் உண்மையான தோழியாக அறிவுப்பூர்வமான தூண்டுதலையும் ஆதரவையும் அளிப்பதில் அவனுக்கு பொருத்தமான துணையாக இருந்தாள்.—ஆதியாகமம் 1:26-30.
நியாயமாக அந்தத் தம்பதி விரும்பும் அனைத்தையும் யெகோவா அவர்களுக்குக் கொடுத்திருந்தார். ஏவாளை அவளுடைய கணவன் முன்பாக கொண்டுவந்து நிறுத்தி, அவர்களை திருமணத்தில் இணைத்தார். இவ்வாறு, சமுதாய ஒழுங்கமைப்பிற்காக திருமணம், குடும்பம் என்ற ஏற்பாடுகளை கடவுள் ஏற்படுத்தினார். ஆதியாகம பதிவு இவ்வாறு சொல்கிறது: “புருஷன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.” யெகோவா ஆதி தம்பதியை ஆசீர்வதித்து அவர்களை பலுகிப் பெருகும்படி சொன்னபோது, ஒவ்வொரு குழந்தையும் தாய் தந்தையின் பாசத்தைப் பெற்று பாதுகாப்பாக உணரும் விதமாக ஒரு குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்பதே அவருடைய நோக்கமாக இருந்தது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.—ஆதியாகமம் 1:28; 2:24.
“தேவ சாயலாக”
கடவுளுடைய ‘சாயலாகவும் ரூபத்தின்படியும்’ சிருஷ்டிக்கப்பட்டிருந்த ஆதாம் அவருடைய பரிபூரண மகனாக இருந்தார். ஆனால் “தேவன் ஆவியாயிருக்கிறார்” என்பதால் இது சரீர சாயலாக இருக்க முடியாது. (ஆதியாகமம் 1:26; யோவான் 4:24) ஆகவே மனிதனை மிருகங்களுக்கு மேலாக உயர்த்திய குணங்களின் சாயலே இது. ஆம், ஆரம்பத்திலிருந்தே அன்பு, ஞானம், வல்லமை, நீதி என்ற குணங்கள் மனிதனில் ஆழமாக பதிய வைக்கப்பட்டிருந்தன. தெரிவு செய்யும் சுயாதீனம் அவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது, ஆன்மீக உணர்வோடு அவன் படைக்கப்பட்டிருந்தான். எது சரி எது தவறு என்பதைப் பிரித்துப் பார்ப்பதற்கு, அவனுக்குள் இயல்பாய் அமைந்திருந்த தார்மீக உணர்வு அல்லது மனசாட்சி அவனுக்கு உதவியது. மனிதனுக்கு அறிவுப்பூர்வமான திறமை இருந்தது, ஆகவே அவனால் வாழ்ந்திருப்பதற்கான காரணத்தைப் பற்றி தியானிக்கவும், தன்னுடைய படைப்பாளரைப் பற்றி அறிவை சேகரிக்கவும், அவரோடு ஒரு நெருக்கத்தை வளர்த்துக்கொள்ளவும் முடிந்தது. இப்படியாக கடவுளுடைய கைவேலைப்பாட்டின் பூமிக்குரிய நிர்வாகியாக தன் பங்கை நிறைவேற்றுவதற்கு தேவையான அனைத்தும் ஆதாமுக்கு இருந்தது.
ஏவாள் மீறிவிடுகிறாள்
கடவுள் அவர்களுக்கு விதித்திருந்த அந்தத் தடையைப் பற்றி ஆதாம் உடனடியாக ஏவாளுக்குத் தெரிவித்திருப்பான் என்பதில் எள்ளளவும் சந்தேகமுமில்லை. இதுவே அந்தத் தடை: தோட்ட வீட்டிலிருந்த சகல மரங்களின் கனிகளையும் புசிக்கலாம். ஆனால் நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியை மாத்திரம் புசிக்கக்கூடாது. அதை புசித்தால் அவர்கள் அந்நாளிலே சாவார்கள்.—ஆதியாகமம் 2:16, 17.
விலக்கப்பட்ட கனியைப் பற்றி சீக்கிரத்திலேயே ஒரு விவாதம் எழும்பியது. ஒரு சர்ப்பம் ஏவாளிடம் அணுகிப் பேசியது. கண்ணுக்குப் புலப்படாத ஒரு ஆவி ஆள் இந்தச் சர்ப்பத்தை ஒரு கருவியாக பயன்படுத்தினான். ஒன்றும் தெரியாததுபோல சர்ப்பம் இவ்வாறு கேட்டது: “நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்க வேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ”? ஒரே ஒரு விருட்சத்தின் கனியைத் தவிர மற்ற எல்லாவற்றின் கனியையும் புசிக்கலாம் என்று ஏவாள் பதிலளித்தாள். ஆனால் சர்ப்பம் கடவுள் சொன்னதை மறுத்து இவ்வாறு அந்த ஸ்திரீயினிடம் சொன்னது: “நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார்.” இப்போது, விலக்கப்பட்ட விருட்சத்தை அந்த ஸ்திரீ வேறு கண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பித்தாள். “அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும் . . . இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய்” இருந்தது. முழுவதுமாக வஞ்சிக்கப்பட்டு ஏவாள் கடவுளுடைய சட்டத்தை மீறிவிட்டாள்.—ஆதியாகமம் 3:1-6; 1 தீமோத்தேயு 2:14.
ஏவாள் செய்த பாவம் தவிர்க்க முடியாத ஒன்றா? இல்லவே இல்லை! அவளுடைய இடத்தில் உங்களை வைத்துப்பாருங்கள். சாத்தான் சொன்னது, கடவுளும் ஆதாமும் சொன்னதற்கு முற்றிலும் முரணாக இருந்தது. உங்களுடைய அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமான ஒருவரை ஏமாற்றுப் பேர்வழி என்று முன்பின் தெரியாத யாரோ ஒருவர் குற்றம்சாட்டினால் உங்களுக்கு எப்படி இருக்கும்? ஆகவே, சர்ப்பம் சொன்னதை ஏவாள் காதுகொடுத்து கேட்டிருக்கக் கூடாது. மாறாக, வெறுப்பையும் கோபத்தையும் காட்டி வித்தியாசமாக பிரதிபலித்திருக்க வேண்டும். என்ன இருந்தாலும், கடவுளுடைய நீதியின் மேலும் அவளுடைய கணவனுடைய வார்த்தையின் மேலும் சந்தேகமெழுப்புவதற்கு சர்ப்பம் யார்? தலைமைத்துவத்தின் நியமத்தை அவள் மதித்திருந்தால், எந்த ஒரு முடிவுக்கும் வருவதற்கு முன் அவனிடம் அவள் ஆலோசனை கேட்டிருக்க வேண்டும். கடவுள் கொடுத்திருக்கும் போதனைகளுக்கு எதிராக எந்த தகவலை நாம் பெற்றுக்கொண்டாலும் இதையே நாம் செய்ய வேண்டும். ஆனால் ஏவாளோ சோதனைக்காரனின் வஞ்சக வார்த்தைகளை அப்படியே நம்பிவிட்டாள், எது சரி எது தவறு என்பதை தானே தீர்மானிக்க வேண்டும் என்று அவள் ஆசைப்பட்டாள். இதை எண்ணிப் பார்க்க பார்க்க அதிக இனிமையாக இருந்தது. அந்த எண்ணத்தை தன் மனதிலிருந்து உடனடியாக உதறிவிட்டிருக்க வேண்டும். அல்லது தன் குடும்ப தலைவனிடம் கலந்து பேசியிருக்க வேண்டும். ஆனால் அவளோ தவறான ஆசையை வளர்த்துக் கொண்டதால் என்னே ஒரு தவறை செய்துவிட்டாள்!—1 கொரிந்தியர் 11:3; யாக்கோபு 1:14, 15.
ஆதாம் மனைவியின் பேச்சை கேட்கிறான்
ஏவாள் ஆதாமை பாவத்தில் தன்னோடு சேர்ந்துகொள்ளும்படி செய்துவிடுகிறாள். மறுத்து பேசாமல் ஆதாம் இதைச் செய்ய ஒப்புக்கொண்டதை நாம் எவ்வாறு விளக்குவோம்? (ஆதியாகமம் 3:6, 17) யாரிடம் உண்மையாக இருப்பது என்பதில் ஆதாமின் மனதில் ஒரு போராட்டம் எழுந்தது. மிகவும் பிரியமான துணைவியையும் தனக்கு தேவையான எல்லாவற்றையும் கொடுத்திருந்த படைப்பாளருக்கு அவன் கீழ்ப்படிவானா? இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்பதை அறிய கடவுளின் உதவியை நாடுவானா? அல்லது வருவது வரட்டும் என்றெண்ணி, ஏவாளுக்கு இணங்கிப்போக தீர்மானிப்பானா? விலக்கப்பட்ட கனியைப் புசித்தால் இப்படியிருக்கலாம், அப்படியிருக்கலாம் என்றெல்லாம் ஏவாள் கண்ட கனவு நனவாகாமல் கானல் நீராகிவிடும் என்பது ஆதாமுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் அவன் தன் மனைவியின் பேச்சையே கேட்கிறான். அதனால்தான் அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு ஏவப்பட்டு எழுதினார்: “ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்.” (1 தீமோத்தேயு 2:14) ஆகவே ஆதாம் வேண்டுமென்றே யெகோவாவை எதிர்க்கத் துணிந்துவிட்டான். இந்த நிலைமைக்குத் தீர்வுகாண கடவுளுக்கிருக்கும் திறமைமீது அவன் விசுவாசம் வைத்திருக்க வேண்டும்; அவனோ எங்கே தன் மனைவியை பிரிந்துவிட வேண்டியிருக்குமோ என்றே அதிகமாய் பயந்ததுபோல் தோன்றுகிறது.
ஆதாம் செய்தது தற்கொலைக்கு சமமாக இருந்தது. அவன் பிறப்பிப்பதற்கு கடவுள் இரக்கத்தோடு அனுமதித்த அவனுடைய எல்லா பிள்ளைகளையும் கொலை செய்ததற்கு சமமாகவும் இது இருந்தது. ஏனென்றால் அனைவருமே பாவத்தின் காரணமாக மரணத்தீர்ப்பை பெறும் நியதியில்தான் பிறந்தார்கள். (ரோமர் 5:12) சுயநலத்தோடு கீழ்ப்படியாமல் போனதற்கு எவ்வளவு பெரிய விலை கொடுக்க வேண்டியதாயிற்று!
பாவத்தின் விளைவுகள்
பாவத்தினால் உடனடியாக ஏற்பட்ட விளைவு வெட்க உணர்வாகும். யெகோவாவிடம் பேசுவதற்காக சந்தோஷத்தோடு துள்ளி ஓடுவதற்கு பதிலாக இந்தத் தம்பதியினர் ஒளிந்துகொண்டார்கள். (ஆதியாகமம் 3:8) கடவுளோடு அவர்களுக்கிருந்த நட்பு சின்னாபின்னமாகியது. கடவுளுடைய சட்டத்தை மீறிவிட்டதை அவர்கள் இருவருமே அறிந்திருந்தபோதிலும், அவர்கள் செய்த தவறை குறித்து கேள்விகேட்டபோது எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை. விலக்கப்பட்ட கனியைப் புசிப்பதன் மூலம் கடவுளுடைய நற்குணத்தை நிராகரித்துவிட்டார்கள்.
இதன் விளைவாக பிள்ளைப்பேற்றின்போது பிரசவ வேதனையை பெருகப்பண்ணுவதாக கடவுள் சொன்னார். ஏவாள் தன் கணவனுக்காக ஏக்கமாயிருப்பாள், அவன் அவளை ஆண்டுகொள்வான். சுதந்திர பறவையாக அவள் பறக்க விரும்பினாள், ஆனால் அதற்காக அவள் எடுத்த முயற்சியால் நேர் மாறானதே சம்பவித்தது. ஆதாம் இப்போது வருத்தத்தோடு நிலத்தின் விளைச்சலை புசிப்பான். ஏதேனில் பாடுபடாமல் தன் பசியை ஆற்றிக்கொள்வதற்கு பதிலாக வாழ்க்கையில் அத்தியாவசியமானவற்றை பெற்றுக்கொள்வதற்காக அவன் போராடித்தான் ஆக வேண்டும். அவன் எடுக்கப்பட்ட அந்த மண்ணுக்குத் திரும்பும் வரை அவன் பாடுபட வேண்டும்.—ஆதியாகமம் 3:16-19.
கடைசியாக ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். யெகோவா இவ்வாறு சொன்னார்: “இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்ய வேண்டும்.” கார்டன் வென்ஹாம் என்ற அறிஞர், “இந்த வாக்கியம் அரைகுறையாக உள்ளது” என்று கூறிவிட்டு கடவுளுடைய எண்ணத்திலிருந்த மீதியை நாமே சொல்லிக்கொள்ள வேண்டும் என்கிறார். ‘அவனை தோட்டத்திலிருந்து வெளியேற்றப் போகிறேன்’ என்று முடித்திருக்கலாம். பொதுவாக ஒரு பைபிள் எழுத்தாளர் கடவுளுடைய எண்ணத்தை முழுமையாக வெளிப்படுத்துகிறார். ஆனால் இங்கே “அரைகுறையாக முடித்திருப்பது கடவுளுடைய நடவடிக்கையின் வேகத்தை காட்டுகிறது. அவர் பேசி முடிப்பதற்கு முன்னே அவர்களை தோட்டத்தை விட்டு வெளியே விரட்டிவிட்டார்” என்று வென்ஹாம் தொடர்ந்து சொல்கிறார். (ஆதியாகமம் 3:22, 23) அதோடு யெகோவாவுடன் அந்த ஆதி தம்பதிக்கு இருந்த பேச்சுத்தொடர்பும் அறுந்துவிட்டது.
ஆதாமும் ஏவாளும், 24 மணிநேரத்தைக் கொண்ட அதே நாளில் சரீரப்பிரகாரமாய் மரித்துவிடவில்லை. ஆனால் ஆவிக்குரிய கருத்தில் அவர்கள் மரித்துப்போனார்கள். உயிரின் ஊற்றுமூலரிடமிருந்து தொடர்பை அறுத்துக்கொண்டு நெருங்கி வரமுடியாதபடி வெகு தூரம் விலகிப்போனபோது இவர்கள் மரணத்தை நோக்கிப் பயணம் செய்ய ஆரம்பித்தனர். மூத்த மகன் காயீன் இரண்டாவது மகன் ஆபேலை கொலை செய்தபோது, மரணத்தை அவர்கள் முதன்முதலாக சந்தித்தது எத்தனை கசப்பான அனுபவமாக இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்துபாருங்கள்!—ஆதியாகமம் 4:1-16.
அதற்குப்பின், முதல் மனித தம்பதியைப் பற்றி நிறைய விஷயங்கள் சொல்லப்படவில்லை. அவர்களுடைய மூன்றாவது மகன் சேத் பிறக்கும்போது ஆதாமுக்கு 130 வயது. ஆதாம் அதற்குப்பின் “குமாரர்களையும் குமாரத்திகளையும் பெற்று” 800 வருடங்கள் கழித்து, 930 வயதில் மரித்துப்போனான்.—ஆதியாகமம் 4:25; 5:3-5.
நமக்கு ஒரு பாடம்
முதல் தம்பதியைப் பற்றிய இந்தப் பதிவு, இன்றைய மனித சமுதாயத்தின் சீர்கெட்ட நிலைமைக்கான காரணத்தை வெளிப்படுத்துவதோடு, முக்கியமான ஒரு பாடத்தையும் நமக்கு புகட்டுகிறது. யெகோவா தேவனிடமிருந்து விலகி வாழ நினைப்பது படுமுட்டாள்தனம். உண்மையிலேயே ஞானமுள்ளவர்கள் யெகோவாவையும் அவருடைய வார்த்தையையும் விசுவாசிப்பார்கள், அவர்களுக்கிருக்கும் அறிவில் திருப்தியடைந்துவிட மாட்டார்கள். எது நன்மை, எது தீமை என்பதை தீர்மானிப்பவர் யெகோவாவே. அவருக்குக் கீழ்ப்படிந்திருக்கும்போது நாம் சரியானதைச் செய்கிறோம். தவறுசெய்வது என்பது அவருடைய கட்டளைகளை மீறி அவருடைய நியமங்களை அசட்டை செய்வதாகும்.
மனிதன் ஆசைப்படும் அனைத்தையும்—நித்திய வாழ்க்கை, சுதந்திரம், மன நிறைவு, மகிழ்ச்சி, ஆரோக்கியம், அமைதி, செழுமை, புதிய கண்டுபிடிப்புகள்—கடவுள் அள்ளித் தந்தார், இன்னும் தருகிறார். ஆனால் இதை எல்லாம் அனுபவிக்க வேண்டுமென்றால், நம்முடைய பரலோக தந்தை யெகோவாமீது நாம் முழுமையாக சார்ந்திருக்க வேண்டும் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.—பிரசங்கி 3:10-13; ஏசாயா 55:6-13.
[பக்கம் 26-ன் பெட்டி/படம்]
ஆதாம், ஏவாள்—கட்டுக் கதையா?
ஆரம்பத்தில் பரதீஸ் இருந்தது, பாவத்தின் காரணமாக அது இழக்கப்பட்டது என்ற நம்பிக்கை பண்டைய பாபிலோனியர்கள், அசீரியர்கள், எகிப்தியர்கள், இன்னும் மற்றவர்கள் மத்தியிலும் பரவலாக இருந்தது. இவர்களுடைய கதைகளில் ஜீவவிருட்சம் பற்றியும் அதைப் புசித்தால் ஒருவருக்கு நித்திய வாழ்க்கை கிடைத்துவிடும் என்பதும் இடம் பெற்றிருந்தது. ஆகவே ஏதேனில் ஏதோ நடக்கக் கூடாதது நடந்தது என்பதை மனிதவர்க்கம் நினைவுகூருகிறது.
இன்று அநேகர் ஆதாம் ஏவாளைப் பற்றிய பதிவு வெறும் கட்டுக் கதையே என்று ஒதுக்கிவிடுகிறார்கள். ஆனால் ஒரே மனித குடும்பத்திலிருந்துதான் எல்லா மனித இனமும் ஆரம்பித்திருக்கின்றன என்பதை பெரும்பாலான விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்கின்றனர். நம் அனைவருக்கும் மூதாதையராயிருந்தவர்கள் செய்த பாவத்தின் விளைவே மனிதவர்க்கம் முழுவதற்கும் கடத்தப்பட்டுள்ளது என்பதை மறுத்துக்கூற முடியாது என இறையியலர் கருத்து தெரிவிக்கின்றனர். ஒன்றுக்கும் மேற்பட்ட ஊற்றுமூலத்திலிருந்து மனிதன் உருவானான் என்று நம்பினால் பல முன்னோர்களால் அந்த முதல் பாவம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு நாம் வரவேண்டியிருக்கும். இதனால், “கடைசி ஆதாம்” எனப்படும் கிறிஸ்து மனிதவர்க்கத்தை மீட்டார் என்பதை மறுதலிக்க வேண்டியிருக்கும். ஆனால் இயேசுவுக்கோ அவருடைய சீஷர்களுக்கோ இப்படி ஒரு சந்தேகம் வரவில்லை. ஆதியாகம பதிவு உண்மை என்று அவர்கள் ஒப்புக்கொண்டார்கள்.—1 கொரிந்தியர் 15:22, 45; ஆதியாகமம் 1:27; 2:24; மத்தேயு 19:4, 5; ரோமர் 5:12-19.