கடவுளுடைய வார்த்தையின்படி நடப்போர் மகிழ்ச்சியை காண்பர்
“அதிக அளவில் ராஜ்ய நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு நம்மை தயாராக்கும் யெகோவாவின் ஏற்பாடுகளில் இந்த மாநாடும் ஒன்று என நாம் உணர்கிறோம்.” இவ்வாறு “கடவுளுடைய வார்த்தையின்படி நடப்போர்” என்ற யெகோவாவின் சாட்சிகளின் மாவட்ட மாநாட்டு பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து சொன்னார்: “மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையைப் பற்றி போதிக்கப்படவும், யெகோவாவின் அமைப்புடன் நெருங்கியிருக்க உற்சாகம் பெறவும், ராஜ்ய சேவையில் நம் வைராக்கியத்தைக் காத்துக்கொள்ள தூண்டப்படவும், விழித்திருப்பதன் அவசியத்தைக் குறித்து நினைப்பூட்டப்படவும் தயாராக வந்திருக்கிறோம்.”
உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான இடங்களில் மே 2000-த்தின் பிற்பகுதி முதல் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது; கடவுளுடைய வார்த்தையின்படி நடக்கும் லட்சக்கணக்கானோரும் அவர்களுடைய நண்பர்களும் இன்றியமையாத பைபிள் கல்வியைப் பெறுவதற்காக திரண்டு வந்தனர். மூன்று நாள் மாநாட்டில் அவர்கள் என்ன கற்றுக்கொண்டார்கள்?
முதல் நாள்—யெகோவா செய்த எதையும் மறவாதிருத்தல்
அக்கிராசினர் ஆரம்ப பேச்சில், மாநாடுகளில் ஒன்றுபட்டவர்களாய் யெகோவாவை வணங்குவதால் கிடைக்கும் ஆசீர்வாதங்களை இந்த மாநாட்டிலும் அனுபவிக்கும்படி சபையாரிடம் சொன்னார். நிச்சயமாக அவர்கள் விசுவாசம் அதிகரிக்கும் என்றும் யெகோவாவுடன் வைத்திருக்கும் தனிப்பட்ட உறவு பலப்படும் என்றும் வந்திருந்தவர்களுக்கு சொல்லப்பட்டது.
நம் ஒவ்வொருவரின் மகிழ்ச்சிக்கும் என்ன தேவை என்று ‘நித்தியானந்த தேவன்’ அறிந்திருக்கிறார். (1 தீமோத்தேயு 1:11) வாழ்வதற்கான சிறந்த வழியை யெகோவாவின் வார்த்தையாகிய பைபிள் எடுத்துக்கூறுகிறது என்பதை “கடவுளுடைய சித்தத்தை செய்வது சந்தோஷத்தை தருகிறது” என்ற பேச்சு சிறப்பித்துக் காட்டியது. (யோவான் 13:17) மாறிவரும் சூழ்நிலைகளின் மத்தியிலும் கடவுளுடைய சித்தத்தைச் செய்வது எப்படி நம் வாழ்க்கையை அதிக அர்த்தமுடையதாய் ஆக்குகிறது என்பதை நீண்டகாலம் யெகோவாவுக்கு சாட்சிகளாய் இருந்த பலரின் பேட்டிகள் காண்பித்தன. ‘தேவனைப் பின்பற்றுகிறவர்களாக’ கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் ‘சகல நற்குணத்தையும்’ பிறப்பிக்க விரும்புகிறார்கள் என்பதை “யெகோவாவின் நற்குணத்தில் பூரிப்படையுங்கள்” என்ற அடுத்த பேச்சு அழுத்திக் கூறியது. (எபேசியர் 5:1, 9) நற்செய்தியைப் பிரசங்கிப்பதும் சீஷர்களை உண்டாக்குவதும் இதைச் செய்ய ஒரு மிகச் சிறந்த வழியாகும்.—சங்கீதம் 145:7.
காணமுடியாத கடவுளை “காண” பலமான விசுவாசம் எப்படி உதவி செய்கிறது என்பதை “காணமுடியாதவரை காண்பதுபோல் தொடர்ந்து உறுதியாயிருங்கள்” என்ற கலந்தாலோசிப்பு காண்பித்தது. நாம் என்ன நினைக்கிறோம் என்பதைக்கூட அறிந்துகொள்ளும் திறமை கடவுளுக்கு இருக்கிறது என்பதையும், அவருடைய மற்ற குணங்களையும் ஆவிக்குரிய சிந்தனையுள்ள மக்கள் அறிந்திருப்பதை பேச்சாளர் விவரித்தார். (நீதிமொழிகள் 5:21) பலமான விசுவாசத்தை வளர்த்து தங்கள் வாழ்க்கையில் ஆவிக்குரிய அக்கறைகளை முதலில் வைக்க என்னென்ன படிகளை எடுத்தார்கள் என்பதை பேட்டி அளித்தவர்கள் சொன்னார்கள்.
“ஆச்சரியமானவற்றை செய்யும் யெகோவாவை துதியுங்கள்” என்ற முக்கிய பேச்சுடன் காலை நிகழ்ச்சி முடிந்தது. யெகோவாவைப் பற்றி எவ்வளவு அதிகமாக கற்றுக்கொள்கிறோமோ, அவ்வளவு அதிகமாக அவரைத் துதிப்பதற்கு, அதுவும் ஆச்சரியமானவற்றை செய்பவர் என துதிப்பதற்கு காரணங்கள் கிடைக்கும் என்பதை வந்திருந்தோருக்கு இது உணர்த்தியது. பேச்சாளர் சொன்னதாவது: “அவரது உன்னதமான படைப்புகளை ஆழ்ந்து கவனித்து, அவர் இன்று நமக்காக செய்யும் எல்லாவற்றையும் யோசிக்கும்போது நாம் மனமார அவரை துதிப்போம். கடந்த காலங்களில் அவர் தம்முடைய ஜனங்களுக்காக செய்த அற்புதங்களை ஆழ்ந்து கவனிக்கும்போது நாம் அவரை கண்டிப்பாக புகழ்வோம். எதிர்காலத்தில் நமக்காக யெகோவா செய்யவிருக்கும் ஆச்சரியமான காரியங்களை ஆழ்ந்து யோசிக்கும்போது அவரை மனமார புகழ்வதற்கு இன்னும் அதிகமதிகமான வழிகளைக் காண்போம்.”
“நன்மை செய்வதில் தளராதிருங்கள்” என்ற பேச்சோடு மதிய நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த உலகின் அழுத்தங்கள், முடிவு சமீபம் என தெளிவாக காட்டுவதை இந்த பேச்சு கூடிவந்திருந்தோருக்கு நினைப்பூட்டியது. (2 தீமோத்தேயு 3:1) சோர்ந்துபோகாதிருந்தால், ‘ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்கள்’ என நிரூபிக்கலாம்.—எபிரெயர் 10:39.
குடும்ப வாழ்க்கையைப் பற்றி என்ன பைபிள் அறிவுரை கொடுக்கப்பட்டது? “கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியுங்கள்” என்பது மாநாட்டின் முதல் தொடர்பேச்சு. “மணத்துணையைத் தெரிந்தெடுப்பதில்” என்ற பாகத்துடன் இது தொடங்கியது. மக்கள் மிக கவனமாக செய்ய வேண்டிய முக்கிய தீர்மானங்களில் ஒன்றுதான் மணத்துணையைத் தெரிந்தெடுப்பது. எனவே, கிறிஸ்தவர்கள் தாங்கள் முதிர்ச்சி அடையும் வரையிலும் காத்திருக்க வேண்டும்; ‘கர்த்தருக்குள் மாத்திரமே மணம் செய்யவும்’ வேண்டும். (1 கொரிந்தியர் 7:39, NW) எல்லா கிறிஸ்தவ குடும்பங்களும் ஆவிக்குரிய விதத்தில் பலமாக இருக்க வேண்டும் என்று யெகோவா விரும்புவதை தொடர்பேச்சின் அடுத்த பாகம் கலந்தாலோசித்தது. இதற்கு நடைமுறையான ஆலோசனைகளை அளித்தது. முதலாவதாக பெற்றோர் யெகோவாவை நேசிக்கையில்தான் பிள்ளைகளுக்கும் யெகோவாவை நேசிக்க கற்றுக்கொடுக்க முடியும் என்பதை கடைசி பாகம் நினைப்பூட்டியது.
ஆச்சரியமான சம்பவங்கள் நடந்தாலும் நாம் ஞானமாக செயல்பட வேண்டும். பரபரப்பூட்டும் சங்கதிகளைக் கேட்கையில் எளிதில் ஏமாந்துவிடக்கூடாது. “வீண்பேச்சுகளையும் வதந்திகளையும் குறித்து ஜாக்கிரதை!” என்ற பேச்சில் இந்த குறிப்புகள் சொல்லப்பட்டன. உண்மையென அறிந்திருக்கும் ராஜ்ய நற்செய்தியைப் பற்றி பேசுவது கிறிஸ்தவர்களுக்கு மிகவும் நல்லது. “‘மாம்சத்திலுள்ள முள்ளை’ சமாளித்தல்” என்ற அடுத்த பேச்சு அநேகருக்கு ஆறுதலாகவும் கட்டியெழுப்புவதாகவும் இருந்தது. தொடர்ந்து சோதனைகளை எதிர்ப்படுகிறபோதிலும், யெகோவா தம்முடைய பரிசுத்த ஆவியினாலும் தம்முடைய வார்த்தையினாலும் கிறிஸ்தவ சகோதரத்துவத்தினாலும் நம்மை பலப்படுத்த முடியும் என்பதை காண உதவியது. இந்த விஷயத்தில் அப்போஸ்தலன் பவுலின் சொந்த அனுபவத்திலிருந்து நிறைய உற்சாகம் கிடைத்தது.—2 கொரிந்தியர் 12:7-10; பிலிப்பியர் 4:11, 13.
“யெகோவாவின் அமைப்போடு முன்னேறுதல்” என்ற பேச்சோடு முதல் நாள் முடிவுக்கு வந்தது. கடவுளுடைய அமைப்பு குறிப்பாக முன்னேறியிருக்கிற மூன்று அம்சங்கள் சிந்திக்கப்பட்டன: (1) யெகோவாவினுடைய சத்தியத்தின் ஒளியை கூடுதலாக புரிந்துகொள்ளுதல், (2) கடவுள் நம்மிடம் ஒப்படைத்திருக்கிற ஊழியத்தை நிறைவேற்றுதல், (3) அமைப்பின் செயல்முறைகளில் காலத்திற்கேற்ப சரிப்படுத்துதல்களை செய்தல். பின்னர், பேச்சாளர் நம்பிக்கையுடன் இவ்வாறு குறிப்பிட்டார்: “எதிர்காலத்தில் நமக்கு என்ன காத்திருக்கிறது என்பதை குறித்து அதிக ஆவலாக இருக்கிறோம்.” அவர் கேட்டார்: “நாம் ஆரம்பத்தில் கொண்டிருந்த நம்பிக்கையில் இறுதிவரை உறுதியோடு இருப்பதற்கு நமக்கு எல்லா காரணமும் இருக்கிறது என்பதில் ஏதாவது சந்தேகம் இருக்க முடியுமா?” (எபிரெயர் 3:14) நிச்சயமாக இல்லை என்பதே தெளிவான பதிலாக இருந்தது. நீங்கள் கடவுளுடைய நண்பராகலாம்! என்ற புதியதோர் சிற்றேட்டை வெளியிடுவதற்கு அது வழிவகுத்தது. அதிக படிப்பறிவு இல்லாதவர்களுக்கும் நன்கு வாசிக்கும் திறமை இல்லாதவர்களுக்கும் யெகோவாவைப் பற்றி கற்றுக்கொடுக்க இது ஓர் சிறந்த உதவியாக அமையும்.
இரண்டாம் நாள்—கடவுளுடைய அதிசயங்களை தொடர்ந்து அறிவியுங்கள்
தினவசனத்தைக் கலந்தாலோசித்த பிறகு, “கடவுளுடைய வார்த்தையின் ஊழியர்கள்” என்ற தொடர் பேச்சுடன் மாநாட்டின் இரண்டாம் நாள் தொடர்ந்தது. அதன் முதல் பாகம், உலகளாவிய பிரசங்க வேலை தற்காலத்தில் கண்டிருக்கும் வெற்றிக்கு கவனம் செலுத்தியது. என்றாலும், ராஜ்ய செய்தியை பெரும்பாலானோர் ஏற்க மறுப்பதால் ஊழியத்தில் நாம் நிலைத்திருப்பது ஒரு சவாலாக இருக்கிறது. அசட்டை மனப்பான்மையையோ எதிர்ப்பையோ சந்தித்தபோதிலும் தங்கள் மனதையும் இருதயத்தையும் திடப்படுத்தி எப்படி சந்தோஷத்தை காத்துக்கொண்டார்கள் என நீண்டகால பிரஸ்தாபிகள் பலர் விளக்கினர். தொடர்பேச்சின் இரண்டாவது பாகம், திட்டவட்டமான ஊழிய ஏற்பாடுகளில் பங்கெடுத்தும் சந்தர்ப்ப சாட்சி கொடுத்தும் மக்களை எல்லா இடங்களிலும் சந்திக்க யெகோவாவின் சாட்சிகள் முயல்வதை வந்திருந்தவர்களுக்கு நினைவுபடுத்தியது. கிறிஸ்தவர்கள் அனைவரும் தங்கள் தனிப்பட்ட ஊழியத்தை எவ்வாறெல்லாம் விரிவடையச் செய்யலாம் என்பதற்கு பலவகையான வழிகளை கடைசி பாகம் எடுத்துரைத்தது. அசௌகரியமும் சுயதியாகமும் உட்பட்டிருந்தாலும்கூட கடவுளுடைய ராஜ்யத்திற்கு முதலிடம் கொடுத்தால்தான் அவ்வாறு செய்ய முடியும் என்பதை பேச்சாளர் வலியுறுத்தினார்.—மத்தேயு 6:19-21.
தணியாத பொருளாசை கொண்ட தேவபக்தியற்ற உலகில் வாழ்வதால், “போதுமென்ற மனதுடனே கூடிய தேவபக்தி” என்ற பேச்சு மிகவும் சமயோசிதமாக இருந்தது. 1 தீமோத்தேயு 6:6-10, 18, 19-ஐ அடிப்படையாக வைத்து பேச்சாளர் சில குறிப்புகளை சொன்னார். வழிவிலகிச் செல்வதற்கும் மிகுந்த வேதனைப்படுவதற்கும் காரணமான பண ஆசையை தவிர்க்க தேவ பக்தி எப்படி கிறிஸ்தவர்களுக்கு உதவும் என்று காண்பித்தார். நம் பொருளாதார நிலை என்னவாக இருந்தாலும், மகிழ்ச்சி என்பது யெகோவாவுடன் நம் உறவையும் நம் ஆவிக்குரிய நலனையும் சார்ந்ததே ஆகும் என்பதை அழுத்திக் கூறினார். “கடவுளுக்கு அவமானத்தை கொண்டுவராதிருத்தல்” என்ற பேச்சின் குறிப்புகள் அநேகரை நெகிழ வைத்தது. யெகோவா தம்முடைய உண்மையுள்ள ஊழியர்களை ஒருபோதும் மறப்பதில்லை என்ற உண்மை அழுத்திக் கூறப்பட்டது. “நேற்றும் இன்றும் என்றும் மாறாத” இயேசு கிறிஸ்துவின் ஒப்பற்ற முன்மாதிரி, ஜீவனுக்கான ஓட்டத்தில் சகிப்புத்தன்மையுடன் தொடர்ந்து ஓட அநேகருக்கு உதவும்.—எபிரெயர் 13:8.
முழுக்காட்டுதல் பேச்சுடன் காலை நிகழ்ச்சி நிரல் நிறைவடைந்தது. யெகோவாவின் சாட்சிகளது மாநாடுகளில் இது எப்போதுமே ஒரு சிறப்பம்சம். புதிதாக ஒப்புக்கொடுத்தவர்கள் தண்ணீர் முழுக்காட்டுதல் எடுப்பதன் மூலம் இயேசுவின் அடிச்சுவடுகளை பின்பற்றுவதைப் பார்ப்பதில் எவ்வளவு மகிழ்ச்சியடைகிறோம்! (மத்தேயு 3:13-17) இந்த படியை எடுக்கும் அனைவரும் கடவுளுடைய வார்த்தையின்படி நடப்போராக ஏற்கெனவே அதிகத்தை செய்திருக்கின்றனர். மேலும் இவர்கள் முழுக்காட்டப்பட்டதும் நற்செய்தியின் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் ஆகிறார்கள். யெகோவாவின் நாமத்தை பரிசுத்தப்படுத்துவதில் பங்கெடுக்கிறார்கள் என்பதை அறிந்திருப்பதால் அதிக சந்தோஷத்தை பெறுகிறார்கள்.—நீதிமொழிகள் 27:11.
“எது சரி எது தவறு என கண்டுபிடிக்க முதிர்ச்சி அவசியம்” என்ற பேச்சில் குறிப்பான அறிவுரை கொடுக்கப்பட்டது. எது சரி எது தவறு என்பதில் உலக தராதரங்கள் மிகவும் மோசமானவை. ஆகவே நாம் யெகோவாவின் தராதரங்களை சார்ந்திருப்பது அவசியம். (ரோமர் 12:2) கடவுளின் வழிகளை திருத்தமாக புரிந்துகொள்ளவும் முதிர்ச்சி அடையவும் கடினமாக உழைக்கும்படி அனைவருக்கும் உற்சாகம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து பயன்படுத்துவதால் நம் பகுத்தறியும் ஆற்றல் ‘நன்மை தீமையின்னதென்று பகுத்தறிய’ பயிற்றுவிக்கப்படும்.—எபிரெயர் 5:11-14.
அடுத்ததாக “ஆன்மீகத்தை வளர்க்க கடினமாக உழையுங்கள்” என்ற தொடர் பேச்சு. ஆன்மீகத்தை வளர்த்து அதைக் காத்துக்கொள்வதன் முக்கியத்துவத்தை உண்மை கிறிஸ்தவர்கள் உணர்கிறார்கள். இதற்கு கடின உழைப்பு—வாசிப்பது, படிப்பது, தியானிப்பது—அவசியம். (மத்தேயு 7:13, 14; லூக்கா 13:24) ஆன்மீக சிந்தையுள்ள மக்கள் ‘சகலவிதமான விண்ணப்பத்தையும் வேண்டுதலையும்’ செய்கிறார்கள். (எபேசியர் 6:18) நம்முடைய ஜெபங்கள், நம் விசுவாசம் மற்றும் பக்தியின் ஆழத்தையும், நம் ஆவிக்குரிய முதிர்ச்சியின் அளவையும், அவற்றோடுகூட, ‘அதி முக்கிய காரியங்களாக’ எவற்றைக் கருதுகிறோம் என்பதையும் வெளிப்படுத்துகின்றன. (பிலிப்பியர் 1:10, NW) அன்புள்ள தகப்பனிடம் கீழ்ப்படிதலுள்ள பிள்ளை அனுபவிப்பது போன்ற நெருக்கமான அன்பான உறவை யெகோவாவிடம் வளர்ப்பதன் அவசியம் அழுத்திக் கூறப்பட்டது. ஒருவர் உண்மை மதத்தில் இருந்தாலும், அதில் இருப்பது மட்டுமே போதாது; ஆனால், கடவுளைக் “காண்கிறவன் போல்” உறுதியான விசுவாசத்தை வளர்க்க வேண்டும்.—எபிரெயர் 11:6, 27, தி.மொ.
“உங்கள் முன்னேற்றம் யாவருக்கும் தெரியட்டும்” என்ற பேச்சில் ஆவிக்குரிய முன்னேற்றத்தைப் பற்றி மேலுமாக கலந்தாலோசிக்கப்பட்டது. அப்படிப்பட்ட முன்னேற்றம் செய்யத்தக்க மூன்று அம்சங்கள் சிந்திக்கப்பட்டன: (1) அறிவிலும், புரிந்துகொள்ளுதலிலும், ஞானத்திலும் பெருகுவது, (2) கடவுளுடைய ஆவியின் கனிகளைப் பிறப்பிப்பது, (3) குடும்ப உறுப்பினர்களாக நம் பொறுப்புகளை நிறைவேற்றுவது.
இரண்டாம் நாளின் கடைசி பேச்சு, “படிப்படியாக பிரகாசிக்கும் கடவுளுடைய வார்த்தையின் வெளிச்சத்தில் நடத்தல்” என்பதாகும். அந்த பேச்சின்போது, மாநாட்டுக்கு வந்திருந்தவர்கள் ஏசாயா தீர்க்கதரிசனம்—மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு I (ஆங்கிலம்) என்ற புதிய புத்தகத்தை பெறுவதில் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஏசாயா என்ற பைபிள் புத்தகத்தை அதிகாரம் அதிகாரமாக சிந்திக்கும் இரண்டு தொகுதிகளில் முதலாவது இது. “நம்முடைய நாட்களுக்கான செய்தியும் ஏசாயா தீர்க்கதரிசனத்தில் இருக்கிறது” என்பதாக பேச்சாளர் குறிப்பிட்டார். “பெரும்பாலான தீர்க்கதரிசனங்கள் ஏசாயாவின் நாட்களிலேயே நிறைவேறின. . . . இருப்பினும் ஏசாயாவின் அநேக தீர்க்கதரிசனங்கள் நம்முடைய நாட்களிலும் நிறைவேறி வருகின்றன. அது மட்டுமல்ல, சில தீர்க்கதரிசனங்கள் வாக்குப்பண்ணப்பட்ட கடவுளுடைய புதிய உலகிலும் நிறைவேறும்” என்பதாக அவர் தொடர்ந்து சொன்னார்.
மூன்றாம் நாள்—யெகோவாவின் வார்த்தையின்படி நடப்போராய் இருங்கள்
மாநாட்டின் கடைசி நாள், தின வசன கலந்தாலோசிப்புடன் தொடங்கியது. “கடவுளின் சித்தத்தை செய்வோருக்கு செப்பனியாவின் அர்த்தமுள்ள தீர்க்கதரிசனம்” என்ற தொடர் பேச்சு அதைத் தொடர்ந்தது. வழிதவறிப்போன யூதா தேசத்தினரின் நாட்களில் செய்ததுபோலவே, இப்போதும் யெகோவா கொடுக்கும் எச்சரிப்பை கேட்க மறுப்பவர்களை அவர் தண்டிப்பார் என்பதை இந்த தொடர் பேச்சின் மூன்று பாகங்களும் காண்பித்தன. அவர்கள் கடவுளுக்கு எதிராக பாவம் செய்கிறபடியால், கண் தெரியாத குருடரைப் போலவே தப்பிக்க வழியின்றி தடுமாறி இங்குமங்குமாய் அலைவர். ஆனாலும் மெய் கிறிஸ்தவர்கள், யெகோவாவை உண்மையாய் தேடுகிறார்கள்; அவர்கள் கடவுளுடைய கோபத்தின் நாளில் மறைக்கப்படுவார்கள். மேலும் இப்பொழுதே அநேக ஆசீர்வாதங்களை அனுபவிக்கிறார்கள். பைபிள் சத்தியத்தின் “சுத்தமான பாஷை”யை பேசும் ஆசீர்வாதத்தை பெற்றிருக்கின்றனர். (செப்பனியா 3:9) “சுத்தமான பாஷையை பேசுவதற்கு நாம் சத்தியத்தில் நம்பிக்கை வைத்து அதைப் பற்றி மற்றவர்களிடம் பேசினால் மட்டுமே போதாது. கடவுளுடைய சட்டங்களுக்கும் நியமங்களுக்கும் இசைவாக வாழ்வதும் மிக அவசியம்” என்பதாக பேச்சாளர் குறிப்பிட்டார்.
“நம்மை எச்சரிக்கும் உதாரணங்கள்” என்ற நாடகத்திற்காக மாநாட்டுக்கு வந்திருந்தவர்கள் ஆவலோடு காத்திருந்தனர். கதாபாத்திரங்கள் ஒப்பனையுடன் நடித்த நாடகம் இது. யெகோவாவை மறந்து, புறமத பெண்களால் வேசித்தனத்துக்கும் பொய் வணக்கத்துக்கும் இழுத்துச் செல்லப்பட்டதால் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் எல்லையிலேயே ஆயிரக்கணக்கான இஸ்ரவேலர்கள் உயிரிழந்ததை இந்த நாடகம் காண்பித்தது. முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவரான யாமின், முதலில் மோவாபியரின் கவர்ச்சிக்கும் யெகோவாவின் மீதுள்ள பற்றுக்கும் இடையே மனம் குழம்பிய நிலையில் இருந்தார். பினெகாஸின் விசுவாசமும் பக்தியும் தெளிவாக காட்டப்பட்டது போலவே தேவ பக்தியற்ற சிம்ரியின் தவறான வாதமும் வஞ்சகமான சிந்தனையும் தெளிவாக காட்டப்பட்டது. யெகோவாவை நேசிக்காதவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைப்பதன் ஆபத்து தெளிவாக சித்தரிக்கப்பட்டது.
அடுத்ததாக இந்த நாடகத்தின் அடிப்படையில் ஒரு பேச்சு கொடுக்கப்பட்டது. “கேட்பதை மறக்கிறவர்களாக இராதேயுங்கள்” என்பதே அந்த பேச்சின் பொருள். புதிய உலகத்தை சுதந்தரிக்க நாம் தகுதியா என்பதை தீர்மானிக்க யெகோவா நம் கீழ்ப்படிதலை சோதிக்கிறார் என்பது 1 கொரிந்தியர் 10:1-10 கலந்தாலோசிக்கப்பட்டபோது தெளிவானது. சிலருக்கு இப்பொழுதுகூட, அதாவது, புதிய ஒழுங்குமுறைக்குள் நுழையவிருக்கும் தருணத்தில்கூட, மாம்சப்பிரகாரமான இச்சைகள் ஆவிக்குரிய இலக்குகளை நெருக்கித் தள்ளிவிடுகின்றன. ‘யெகோவாவின் இளைப்பாறுதலில் பிரவேசிக்கும்’ வாய்ப்பை இழந்துவிடாதபடி உற்சாகம் அளிக்கப்பட்டது.—எபிரெயர் 4:1.
“கடவுளின் வியத்தகு செயல்களை ஏன் கவனிக்க வேண்டும்” என்பதே பொது பேச்சின் பொருளாக இருந்தது. யெகோவாவின் ‘வியத்தகு செயல்கள்’ அவருடைய ஞானத்தையும் நம்மைச் சுற்றியுள்ள படைப்பின்மீது அவருக்கு எவ்வளவு அதிகாரம் இருக்கிறது என்பதையும் காட்டுகின்றன. (யோபு 37:14, பொ.மொ.) யெகோவா, ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் பல கேள்விகளை யோபுவிடம் கேட்டார். சர்வவல்லமையுள்ள படைப்பாளரின் வல்லமையை யோபின் மனதில் பதியவைப்பதற்கு இவை போதுமானவையாக இருந்தன. யெகோவா தம்முடைய உண்மையுள்ள ஊழியர்களுக்காக எதிர்காலத்திலும் ‘வியத்தகு செயல்களை’ செய்வார். பேச்சாளர் இவ்வாறு சொல்லி முடித்தார்: “யெகோவாவின் வியத்தகு செயல்களை கவனித்தே ஆகவேண்டும் என்பதற்கு ஏராளமான காரணம் இருப்பதை தெளிவாக தெரிந்துகொண்டோம். வியத்தகு செயல்கள் என்று சொல்கையில், கடந்த காலங்களில் அவர் செய்ததையும், நம்மைச் சுற்றியுள்ள படைப்புகள் சம்பந்தமாக அவர் செய்துவருவதையும், அடுத்துவரும் எதிர்காலத்தில் அவர் செய்வதாக வாக்குறுதி அளித்திருப்பதையுமே அர்த்தப்படுத்துகிறோம்.”
அந்த வாரத்திற்குரிய காவற்கோபுர படிப்பு கட்டுரையின் சுருக்கத்துக்குப் பின், மாநாட்டின் கடைசி பேச்சு கொடுக்கப்பட்டது. “கடவுளுடைய வார்த்தையின்படி நடக்கும் உங்கள் சிலாக்கியத்தை உயர்வாய் மதியுங்கள்” என்ற தலைப்பை உடைய உயிர்ப்பூட்டும் பேச்சு, கடவுளுடைய வார்த்தையின்படி நடப்போராய் இருப்பது மதிப்புக்குரியது என்பதை வலியுறுத்தியது. (யாக்கோபு 1:22) கடவுளுடைய வார்த்தையின்படி நடப்போராய் இருப்பது ஒப்பற்ற சிலாக்கியம் என்பது வந்திருந்தவர்களுக்கு நினைப்பூட்டப்பட்டது. நாம் எவ்வளவு அதிக காலமாக அதன்படி நடக்கிறோமோ அவ்வளவு அதிகமாய் அதை உயர்வாக மதிப்போம். முழு அளவில் கடவுளுடைய வார்த்தையின்படி நடப்பதற்காக இந்த மாவட்ட மாநாட்டிலிருந்து கிடைத்த பயனுள்ள ஊக்குவிப்பை சிந்தித்து செயல்படும்படி வந்திருந்தவர்கள் அனைவரும் உற்சாகம் அளிக்கப்பட்டனர். பெரும் மகிழ்ச்சியை அனுபவிப்பதற்கு அதுவே ஒரே வழியாகும்.
[பக்கம் 25-ன் பெட்டி/படங்கள்]
நீங்கள் கடவுளுடைய நண்பராகலாம்!*
நீங்கள் கடவுளுடைய நண்பராகலாம்! என்ற புதிய சிற்றேடு வெள்ளிக்கிழமை மதியம் வெளியிடப்பட்டது. உலகின் பல பாகங்களில், எளிய பைபிள் கல்விக்கான தேவை அதிகமாக இருக்கிறது. இந்தத் தேவையை பூர்த்தி செய்ய இந்த சிற்றேடு பயன்படுத்தப்படும். குறைந்தளவு கல்வி அறிவு அல்லது வாசிக்கும் திறமை உள்ளவர்களுக்கு இது பெரும் ஆசீர்வாதமாக இருக்கும்.
*இந்த சிற்றேடு தற்போது இந்தியாவில் கிடைக்காது
[பக்கம் 26-ன் பெட்டி/படங்கள்]
ஏசாயா தீர்க்கதரிசனம்—மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு
ஏசாயா தீர்க்கதரிசனம்—மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு (ஆங்கிலம்) என்ற இரு தொகுதிகளை உடைய செட்டில் முதல் தொகுதியைப் பெறுவதில் மாநாட்டுக்கு வந்திருந்தவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். நம்முடைய நாளுக்கு ஏசாயாவின் தீர்க்கதரிசனம் எவ்வளவு நடைமுறையான பயனுள்ளது என்பது இந்த பிரசுரத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.