சத்தியத்தை உங்களுக்கு சொந்தமாக்கி கொண்டீர்களா?
“தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.”—ரோமர் 12:2.
1, 2. இன்று உண்மை கிறிஸ்தவராக இருப்பது ஏன் சுலபமல்ல?
இந்தக் ‘கடைசி நாட்களில்’—‘கையாளுவதற்குக் கடினமான இந்தக் கொடிய காலங்களில்’—உண்மை கிறிஸ்தவராக இருப்பது அவ்வளவு சுலபமானதல்ல. (2 தீமோத்தேயு 3:1, NW) ஏனெனில் கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றுவதற்கு ஒருவர் இந்த உலகை ஜெயிக்க வேண்டும். (1 யோவான் 5:4) “இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்” என கிறிஸ்தவ பாதையைக் குறித்து இயேசு சொன்னதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். “ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத்தான் சொந்தம் கைவிட்டு, தன் வாதனையின் கழுமரத்தை நாள்தோறும் எடுத்துக்கொண்டு, விடாமல் தொடர்ந்து என்னைப் பின்பற்றக்கடவன்” என்றும் அவர் சொன்னார்.—மத்தேயு 7:13, 14; லூக்கா 9:23, NW.
2 ஜீவனுக்குப் போகும் இடுக்கமான வழியை ஒரு கிறிஸ்தவர் கண்டுபிடித்த பின்பு அவர் எதிர்ப்படும் மற்றொரு சவால் அதில் நிலைத்திருப்பதாகும். இதை ஏன் சவால் என்கிறோம்? நாம் ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற்றிருப்பதால், சாத்தானின் தந்திர செயல்களுக்கு, அல்லது சூட்சுமமான சதிகளுக்கு ஆளாக வேண்டியுள்ளது. (எபேசியர் 6:11) நம் பலவீனங்களை அவன் கவனிக்கிறான்; நம்முடைய ஆவிக்குரிய குணங்களைக் குலைத்துப் போட அந்தப் பலவீனங்களைப் பயன்படுத்திக்கொள்ள முயலுகிறான். இயேசுவிடமே ஆவிக்குரிய பலப்பரிட்சை செய்துபார்த்தவன் நம்மை சும்மா விடுவான் என எதிர்பார்க்க முடியுமா?—மத்தேயு 4:1-11.
சாத்தானின் சூழ்ச்சிமுறைகள்
3. ஏவாளின் மனதில் சந்தேக விதையை சாத்தான் எவ்வாறு விதைத்தான்?
3 நம்முடைய மனதில் சந்தேக விதைகளை விதைப்பது சாத்தான் பயன்படுத்துகிற ஒரு சூழ்ச்சிமுறை. நம் ஆவிக்குரிய ஆயுதத்தில் எங்கு பலவீனங்கள் இருக்கின்றன என அவன் தேடுகிறான். ஆரம்ப கட்டத்தில் அவன் இந்தச் சூழ்ச்சிமுறையை ஏவாளிடம் பயன்படுத்தி, இவ்வாறு கேட்டான்: “நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்க வேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ”? (ஆதியாகமம் 3:1) சாத்தான் சொன்னதை வேறு விதமாக சொன்னால்: ‘உண்மையிலேயே கடவுள் இத்தகைய ஒரு தடையுத்தரவை உங்கள்மீது சுமத்தியிருக்க முடியுமா? இவ்வளவு நல்லதை அவர் உங்களுக்குக் கொடுக்காமல் தாமே வைத்துக்கொள்வாரா? ஏன், நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்பட்டு, நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்பதும் அவருக்குத் தெரியுமே!’ இவ்வாறுதான் சாத்தான் சந்தேக விதையை ஏவாளின் மனதில் விதைத்தான், அது முளைவிட்டு துளிர்ப்பதற்கு காத்திருந்தான்.—ஆதியாகமம் 3:5.
4. இன்று என்னென்ன சந்தேகங்கள் சிலரை பாதிக்கலாம்?
4 இன்று இந்தச் சூழ்ச்சிமுறையை சாத்தான் எவ்வாறு பயன்படுத்துகிறான்? நம்முடைய பைபிள் வாசிப்பு, தனிப்பட்ட படிப்பு, ஜெபம், கிறிஸ்தவ ஊழியம், கூட்டங்கள் ஆகியவற்றிற்குக் கவனம் செலுத்தாமல் அசட்டையாக இருந்தால், மற்றவர்கள் கிளப்பிவிடும் சந்தேகங்களுக்கு நாம் பலியாகலாம். உதாரணமாக இவ்வாறு சந்தேகங்கள் எழலாம்: “இது, இயேசு போதித்த சத்தியம்தான் என்று நமக்கு எப்படி தெரியும்?” “நாம் ஏற்கெனவே 21-வது நூற்றாண்டில் இருக்கிறோமே, இவை உண்மையிலேயே கடைசி நாட்கள்தானா?” “அர்மகெதோன் சீக்கிரம் வந்துவிடுமா அல்லது அதற்கு இன்னும் வெகுகாலம் ஆகுமா?” இத்தகைய சந்தேகங்கள் தலைதூக்குகையில் அவற்றை மனதிலிருந்து அகற்ற நாம் என்ன செய்யலாம்?
5, 6. சந்தேகங்கள் வந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்?
5 யாக்கோபு நடைமுறையான இந்த ஆலோசனையைக் கொடுத்தார்: “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே [“விடாது தொடர்ந்து,” NW] கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான். அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் [“யெகோவாவினிடமிருந்து,” NW] எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக. இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்.”—யாக்கோபு 1:5-8.
6 அப்படியானால், நாம் என்ன செய்ய வேண்டும்? விசுவாசத்திற்காகவும் புரிந்துகொள்ளுதலுக்காகவும் நாம் ஜெபத்தில் ‘விடாது தொடர்ந்து கேட்க’ வேண்டும்; ஏதாவது கேள்விகளோ சந்தேகங்களோ இருந்தால் கடும் முயற்சியுடன் தனிப்பட்ட படிப்பு படிக்க வேண்டும். யெகோவா நம்மை ஆதரிப்பார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன், விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திருப்போரின் உதவியையும் நாம் நாடலாம். “தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்” என்று யாக்கோபு சொன்னார். எனவே, படிப்பு, ஜெபம் ஆகியவற்றின் வாயிலாக கடவுளிடம் நெருங்கி வருகையில் நம்முடைய சந்தேகங்கள் சுவடு தெரியாமல் மறைந்துபோகும்.—யாக்கோபு 4:7, 8.
7, 8. இயேசு கற்பித்த வணக்க முறையைத் தீர்மானிக்கும் அடிப்படை அம்சங்கள் சில யாவை, இவற்றை கடைப்பிடிக்கிறவர்கள் யார்?
7 உதாரணமாக, பின்வரும் இந்தக் கேள்விக்கு சற்று கவனம் செலுத்துங்கள்: இயேசு கற்பித்த வணக்க முறையை நாம் பின்பற்றுகிறோம் என்பது நமக்கு எப்படித் தெரியும்? இதற்கு விடை காண்பதற்கு, சிந்திக்க வேண்டிய அடிப்படை அம்சங்கள் யாவை? உண்மை கிறிஸ்தவர்கள் ஒருவரையொருவர் நிஜமாய் நேசிக்க வேண்டுமென்று பைபிள் குறிப்பிடுகிறது. (யோவான் 13:34, 35) யெகோவா என்ற கடவுளுடைய பெயரை அவர்கள் பரிசுத்தப்படுத்த வேண்டும். (ஏசாயா 12:4, 5; மத்தேயு 6:9) அத்தோடு, அவர்கள் அந்தப் பெயரை எல்லாரும் அறியும்படி செய்ய வேண்டும்.—யாத்திராகமம் 3:15; யோவான் 17:26.
8 உண்மை வணக்கத்தை அடையாளம் காட்டும் மற்றொரு அம்சம், கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளுக்கு உயர்ந்த மதிப்பு கொடுப்பது. கடவுளுடைய குணங்களையும் நோக்கங்களையும் வெளிப்படுத்துகிற ஒப்பற்ற புத்தகம் அது. (யோவான் 17:17; 2 தீமோத்தேயு 3:16, 17) மேலும், மனிதனுக்கு பரதீஸான பூமியில் நித்திய ஜீவன் என்பதற்கு ஒரே நம்பிக்கையாக விளங்கும் கடவுளுடைய ராஜ்யத்தை உண்மை கிறிஸ்தவர்கள் எல்லாருக்கும் அறிவிக்கிறார்கள். (மாற்கு 13:10; வெளிப்படுத்துதல் 21:1-4) இந்த உலகின் மோசமான அரசியல் விவகாரங்களிலிருந்தும், பாதிப்பேற்படுத்தும் அதன் வாழ்க்கை முறையிலிருந்தும் தங்களை விலக்கி வைத்துக்கொள்கிறார்கள். (யோவான் 15:19; யாக்கோபு 1:27; 4:4) இந்த அடிப்படை அம்சங்களை இன்று உண்மையில் கடைப்பிடிக்கிறவர்கள் யார்? யெகோவாவின் சாட்சிகள்தான் என்பதை உண்மைகள் உறுதிப்படுத்துகின்றன.
சந்தேகங்கள் வட்டமிட்டால் என்ன செய்வது?
9, 10. தொடர்ந்து வட்டமிடும் சந்தேகங்களை வெல்ல நாம் என்ன செய்யலாம்?
9 சந்தேகமெனும் இருண்ட சுரங்கப்பாதையில் நடந்தால் என்ன செய்வது? ஞானியாகிய அரசன் சாலொமோன் பதிலளிக்கிறார்: ‘என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு, நீ என் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி, ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து, அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில், அப்பொழுது கர்த்தருக்குப் [யெகோவாவுக்குப்] பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்.’—நீதிமொழிகள் 2:1-5.
10 இது பிரமாதமான யோசனை அல்லவா? கடவுளுடைய ஞானத்திற்கு ஊக்கமாய் கவனம் செலுத்த மனமிருந்தால், ‘தேவனை அறியும் அறிவை கண்டடைவோம்.’ சர்வலோக பேரரசராகிய கர்த்தர் சொல்பவற்றைக் கேட்கவும், அவற்றை பொக்கிஷமாய் பாதுகாக்கவும் நமக்கு மனமிருந்தால், அந்த அறிவை நாம் அடைய முடியும். இது, ஜெபம், தனிப்பட்ட படிப்பு ஆகியவற்றின் வாயிலாக யெகோவாவிடம் திரும்புவதை அர்த்தப்படுத்துகிறது. அவருடைய வார்த்தையில் புதைந்துள்ள பொக்கிஷம், சந்தேகமெனும் இருண்ட சுரங்கப்பாதையிலிருந்து வெளிவந்து, சத்தியத்தின் ஒளியைத் தெளிவாய் காண நமக்கு உதவும்.
11. எலிசாவின் வேலைக்காரன் எவ்வாறு சந்தேகத்தால் பாதிக்கப்பட்டான்?
11 உதாரணமாக, கடவுளுடைய ஊழியன் ஒருவனுக்கு பயத்தால் சந்தேகம் தலைதூக்கியது. ஜெபம் எப்படி அவனுக்கு உதவியது என்பது 2 இராஜாக்கள் 6:11-18-ல் காணப்படுகிறது. அந்த ஊழியன் எலிசாவின் வேலைக்காரன். அவன் ஆவிக்குரிய பகுத்துணர்வில் குறைவுபட்டான். சீரிய சேனையால் முற்றுகையிடப்பட்ட கடவுளுடைய தீர்க்கதரிசிக்கு பக்கபலமாக பரலோக சேனைகள் அங்கிருந்ததை அவனால் காண முடியவில்லை. பயத்தில் அந்த வேலைக்காரன், “ஐயோ, என் ஆண்டவனே, என்ன செய்வோம்” என கத்தினான். எலிசா என்ன சொன்னார்? “பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்” என்றார். ஆனால் அந்த வேலைக்காரனை எப்படி நம்ப வைப்பது? அவனால்தான் அந்தப் பரலோக சேனைகளை காண முடியவில்லையே.
12. (அ) அந்த வேலைக்காரனின் சந்தேகங்கள் எவ்வாறு தீர்க்கப்பட்டன? (ஆ) நமக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் அவற்றை எவ்வாறு தீர்த்துக் கொள்ளலாம்?
12 அப்போது, “எலிசா விண்ணப்பம்பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்.” இந்தச் சம்பவத்தில், எலிசாவுக்குப் பாதுகாவலாய் நின்ற பரலோக சேனைகளை அந்த வேலைக்காரன் காணும்படி யெகோவா செய்தார். ஆனால், அத்தகைய தெய்வீக உதவியை இன்று நாம் எதிர்பார்க்க முடியாது. தன் விசுவாசத்தைப் பலப்படுத்திக் கொள்வதற்காக படிப்பதற்கு அந்த தீர்க்கதரிசியின் வேலைக்காரனிடம் முழு பைபிளும் அப்போது இல்லை. ஆனால் நம்மிடம் பைபிள் இருக்கிறது. இதை நாம் நன்கு பயன்படுத்தினால், நம் விசுவாசமும் அவ்வாறே பலப்படும். உதாரணமாக, யெகோவா தம்முடைய பரலோக அரசவையில் வீற்றிருப்பதை விவரிக்கும் பல விவரப் பதிவுகளை நாம் சிந்திக்கையில், இன்று உலகளாவிய அறிவு புகட்டும் ஊழியத்தில் தம்முடைய ஊழியர்களை ஆதரிக்கும் பரலோக அமைப்பு ஒன்று யெகோவாவுக்கு இருக்கிறது என்பது உறுதியாகிறது.—ஏசாயா 6:1-4; எசேக்கியேல் 1:4-28; தானியேல் 7:9, 10; வெளிப்படுத்துதல் 4:1-11; 14:6, 7.
சாத்தானின் சூழ்ச்சிமுறைகளுக்கு ஜாக்கிரதை!
13. சத்தியத்தின் பிடியைத் தளர்த்த சாத்தான் எவற்றை பயன்படுத்துகிறான்?
13 நம்முடைய ஆவிக்குரிய குணங்களையும் சத்தியத்தின் மீதுள்ள நம் பிடியையும் தளர்த்துவதற்கு சாத்தான் அணுகும் இன்னும் சில வழிகள் யாவை? பல்வேறு விதமான பாலுறவு ஒழுக்கக்கேடு அவற்றில் ஒன்று. பாலுறவு பைத்தியங்கொண்ட இன்றைய உலகில், எப்படியாகிலும் இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என வெறியுடன் அலையும் சந்ததியினர் “ஓரிரவு சுகத்தை” நாடி ஏதோவொரு வேசித்தனத்தில் ஈடுபடுவது அன்றாட காரியமாகிவிட்டது. திரைப்படங்கள், டிவி, வீடியோக்கள் ஆகியவை இப்படிப்பட்ட வாழ்க்கைமுறையை ஊக்குவிக்கின்றன. ஆபாசம் மீடியாக்களில், முக்கியமாய் இன்டர்நெட்டில் ஊடுருவி பரவியிருக்கிறது. அவற்றை காண ஆசைப்படுவோருக்கு ஆபத்தும் காத்திருக்கிறது.—1 தெசலோனிக்கேயர் 4:3-5; யாக்கோபு 1:13-15.
14. கிறிஸ்தவர்களில் சிலர் ஏன் சாத்தானின் சூட்சும சதிகளுக்கு பலியாகியிருக்கிறார்கள்?
14 அவற்றைத் தெரிந்துகொள்ள துடித்த கிறிஸ்தவர்கள் சிலர், பலவித பாலுறவுகளைச் சித்தரிக்கும் ஓவியங்களை, படுமட்டரகமானவற்றையும்கூட பார்த்து தங்கள் மனதையும் இருதயத்தையும் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கவர்ச்சி காட்டி வசியப்படுத்தும் சாத்தானின் வலையில் வலிய சென்று சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு செய்வது, பெரும்பாலும் ஆவிக்குரிய கப்பற்சேதத்தில் போய் முடிவடைந்திருக்கிறது. இத்தகைய ஆட்கள், ‘துர்க்குணத்தில் குழந்தைகளாகவே’ இருக்க தவறியிருக்கிறார்கள். ‘புரிந்துகொள்ளும் ஆற்றல்களில் முழு வளர்ச்சியடையவில்லை.’ (1 கொரிந்தியர் 14:20, NW) கடவுளுடைய வார்த்தையின் நியமங்களையும் தராதரங்களையும் எப்போதும் பின்பற்ற தவறுவதால் ஏற்படும் பாதிப்புகளுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் பலியாகிறார்கள். ‘தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை’ தரித்துக்கொள்ளவும், அவற்றைக் காத்துக்கொள்ளவும் தவறியிருக்கிறார்கள்.—எபேசியர் 6:10-13; கொலோசெயர் 3:5-10; 1 தீமோத்தேயு 1:18, 19.
நம்மிடமிருப்பதை போற்றுதல்
15. ஆவிக்குரிய ஆஸ்திக்குப் போற்றுதல் காட்டுவது ஏன் சிலருக்கு கடினமாக இருக்கலாம்?
15 “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்று இயேசு சொன்னார். (யோவான் 8:32) பெரும்பாலான சாட்சிகளுக்கு தங்கள் முந்தின வாழ்க்கைமுறையையும் மத கூட்டுறவுகளையும் விட்டு விலகிவர வேண்டி இருந்திருக்கிறது. எனவே சத்தியம் தரும் சுதந்திரத்தை அவர்கள் வெகு விரைவில் போற்ற ஆரம்பிக்கலாம். மறுபட்சத்தில், சத்தியத்திலுள்ள பெற்றோரால் வளர்க்கப்படும் இளைஞர்கள் சிலர், தங்கள் ஆவிக்குரிய ஆஸ்திக்குப் போற்றுதல் காட்ட தவறுகிறார்கள். அவர்கள் ஒருபோதும் பொய் மதத்தின் பாகமாக இருந்திருக்கவில்லை, இன்பத்தை நாடித் தேடுவதற்கே முக்கியத்துவம் கொடுத்தல், போதை பழக்கம், ஒழுக்கக்கேடு ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட இந்த உலகின் பாகமாகவும் இருக்கவில்லை. இதனால், ஆவிக்குரிய பரதீஸுக்கும் சாத்தானின் ஒழுக்கங்கெட்ட உலகிற்கும் இடையே உள்ள திட்டவட்டமான வேறுபாட்டை அவர்கள் புரிந்துகொள்ள தவறுகிறார்கள். சிலர், அனுபவிக்க தவறியதாக நினைக்கும் உலகின் நஞ்சை ருசிக்கும் பரிட்சைக்குள்ளும் சிக்கிக்கொள்ளலாம்!—1 யோவான் 2:15-17; வெளிப்படுத்துதல் 18:1-5.
16. (அ) என்ன கேள்விகளை நாம் கேட்டு கொள்ளலாம்? (ஆ) நாம் என்ன கற்றுக்கொள்கிறோம், என்ன செய்ய உற்சாகப்படுத்தப்படுகிறோம்?
16 வேதனையையும் துன்பத்தையும் அறிய நம் விரல்களை நெருப்பில் சுட்டுப்பார்க்க வேண்டுமா என்ன? மற்றவர்கள் படும் வேதனையிலிருந்து நாம் அனுபவ பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியாதா? நாம் எதையேனும் அனுபவிக்காமல் போய்விட்டோமா என்பதை அறிய இந்த உலகின் ‘சேற்றினிடம்’ திரும்ப வேண்டுமா என்ன? (2 பேதுரு 2:20-22) ஒருகாலத்தில் சாத்தானுடைய உலகின் பாகமாக இருந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு பேதுரு இவ்வாறு நினைப்பூட்டினார்: “சென்ற வாழ்நாட் காலத்திலே நாம் புறஜாதிகளுடைய இஷ்டத்தின்படி நடந்துகொண்டது போதும்; அப்பொழுது நாம் காமவிகாரத்தையும் துர்இச்சைகளையும் நடப்பித்து, மதுபானம்பண்ணி, களியாட்டுச்செய்து, வெறிகொண்டு, அருவருப்பான விக்கிரகாராதனையைச் செய்துவந்தோம்.” வாழ்க்கை எந்தளவுக்கு சீர்கெட்டுப் போகும் என்பதை அறிய இந்த உலகின் ‘துன்மார்க்க உளையை’ நாம் உண்மையிலேயே அனுபவித்துப் பார்க்க வேண்டியதில்லை. (1 பேதுரு 4:3, 4) ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக, பைபிள் பயிற்றுவிப்பை அளிக்கும் முக்கிய இடங்களான நம் ராஜ்ய மன்றங்களில், யெகோவாவின் உயர்ந்த ஒழுக்க தராதரங்களை கற்றுக்கொள்கிறோம். நம் பகுத்தறியும் திறமையை பயன்படுத்தி நம்மிடம் சத்தியம் உள்ளது என்பதை உறுதி செய்துகொள்ளவும், இவ்வாறு சத்தியத்தை நமக்கு சொந்தமாக்கிக் கொள்ளவும் அங்கு நமக்கு உற்சாகம் அளிக்கப்படுகிறது.—யோசுவா 1:8; ரோமர் 12:1, 2; 2 தீமோத்தேயு 3:14-17.
நம் பெயர் வெறும் அடைமொழி அல்ல
17. நாம் எப்போதும் தயாராய் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளாய் எவ்வாறு நிரூபிக்கலாம்?
17 சத்தியத்தை சொந்தமாக்கிக் கொண்டால், பொருத்தமான சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மற்றவர்களுடன் அதை பகிர்ந்துகொள்வோம். அது ஆர்வம் காட்டாதவர்களை வற்புறுத்தி அவர்கள்மீது சத்தியத்தை திணிப்பதை அர்த்தப்படுத்துவதில்லை. (மத்தேயு 7:6) ஆனால், நம்மை யெகோவாவின் சாட்சிகள் என பகிரங்கமாக காட்டிக்கொள்ள தயங்க மாட்டோம். தெரிந்துகொள்ளும் ஆவலில் ஒருவர் கேள்வி கேட்கலாம், அல்லது பைபிள் பிரசுரத்தைப் பெற்றுக்கொள்ளலாம்; இது, அவருக்கு ஆர்வம் இருப்பதை காட்டுகிறது. அப்படிப்பட்டவரிடம் நம் நம்பிக்கையை பகிர்ந்துகொள்ள தயாராக இருப்போம். ஆகவே, நாம் வீட்டில், வேலை செய்யுமிடத்தில், பள்ளியில், கடையில், பொழுதுபோக்கை கழிக்கும் இடத்தில் என எங்கிருந்தாலும் சரி, நம் பிரசுரங்கள் எதையேனும் எப்போதும் கைவசம் வைத்திருப்பது நல்லது.—1 பேதுரு 3:5.
18. கிறிஸ்தவர்களாக நம்மை வெளிப்படுத்திக் காட்டுவது எவ்வாறு நமக்கு உதவலாம்?
18 இப்படி கிறிஸ்தவர்களாக நம்மை தெளிவாக அடையாளம் காட்டுகையில், சாத்தானின் நயவஞ்சக தாக்குதல்களுக்கு எதிராக உறுதியான தற்காப்பைப் பெறுவோம். பிறந்தநாள், கிறிஸ்மஸ் விருந்து, ஆபீஸ் லாட்டரி போன்ற சந்தர்ப்பங்களில், “அவர்களை விட்டுவிடு. அவர்கள் யெகோவாவின் சாட்சிகள்” என்று உடன்வேலை செய்பவர்கள் பெரும்பாலும் சொல்வார்கள். இதன் காரணமாகவே, பாலுறவு சம்பந்தப்பட்ட ஆபாசமான பேச்சுகளை நமக்கு முன்பாக பேச அவர்கள் தயங்கலாம். இவ்வாறு, நம் கிறிஸ்தவ நிலைநிற்கையை வெளிப்படையாய் தெரியப்படுத்துவது, நமக்கு பெரிதும் உதவும். “நீங்கள் நன்மையைப் பின்பற்றுகிறவர்களானால், உங்களுக்குத் தீமை செய்கிறவன் யார்? நீதியினிமித்தமாக நீங்கள் பாடுபட்டால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்” என அப்போஸ்தலனாகிய பேதுரு குறிப்பிட்டார்.—1 பேதுரு 3:13, 14.
19. நாம் கடைசி நாட்களின் உச்சக்கட்டத்தை எட்டுகிறோமென்று எவ்வாறு தெரியும்?
19 இந்நாட்கள் இந்த உலகின் கடைசி நாட்கள் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியாய் நம்புகிறோம்; சத்தியத்தை சொந்தமாக ஆக்கிக்கொள்வதால் விளையும் மற்றொரு நன்மை இது. பைபிள் தீர்க்கதரிசனங்கள் பல, நம் நாட்களில் அவற்றின் உச்சக்கட்டத்தை எட்டுவதை அறிவோம்.a “கடைசி நாட்களில், கையாளுவதற்குக் கடினமான கொடிய காலங்கள் இருக்கும்” என்ற பவுலின் எச்சரிக்கையை, கடந்த நூற்றாண்டில் நிகழ்ந்த திகிலூட்டும் சம்பவங்கள் பெருமளவு உறுதிசெய்கின்றன. (2 தீமோத்தேயு 3:1-5, NW; மாற்கு 13:3-37) இருபதாம் நூற்றாண்டைப் பற்றிய சமீப செய்தித்தாள் கட்டுரை ஒன்று, “காட்டுமிராண்டித்தன சகாப்தம் என அது நினைவுகூரப்படும்” என தலைப்பிடப்பட்டிருந்தது. அந்தக் கட்டுரை கூறியதாவது: “மாபெரும் கொலைபாதக நூற்றாண்டின் பிற்பகுதியில், 1999 மாபெரும் கொலைபாதக ஆண்டாக மாறியது.”
20. என்ன செய்வதற்கான காலம் இது?
20 உறுதியாக நிலைநிற்கை எடுக்காமல் அலைபாயும் நேரமல்ல இது. சகல தேசத்தாருக்கும் சாட்சி கொடுப்பதில் முன்னொருபோதும் இராதளவுக்கு உலகெங்கும் பைபிள் கல்வி புகட்டும் ஊழியம் நடைபெறுகிறது. இதில் யெகோவாவின் ஆசீர்வாதம் இருப்பது தெள்ளத் தெளிவாய் உள்ளது. (மத்தேயு 24:14) சத்தியத்தை சொந்தமாக ஆக்கிக்கொண்டு அதை மற்றவர்களுக்கு அறிவியுங்கள். இப்போது நீங்கள் செய்பவற்றின் பேரிலேயே உங்கள் நித்திய எதிர்காலம் சார்ந்திருக்கிறது. கைகளை தளரவிட்டால் யெகோவாவின் ஆசீர்வாதம் கிடைக்காது. (லூக்கா 9:62) மாறாக, “கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும் கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக” என்பதற்கான காலம் இது.—1 கொரிந்தியர் 15:58.
[அடிக்குறிப்பு]
a 2000, ஜனவரி 15, காவற்கோபுரம், பக்கங்கள் 12-13-ஐப் பாருங்கள். 1914 முதற்கொண்டு நாம் கடைசி நாட்களில் வாழ்ந்து வருகிறோம் என்பதற்கு பலமான ஆறு அத்தாட்சிகளை பாராக்கள் 13-18 அளிக்கின்றன.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• சந்தேகங்களை நாம் எவ்வாறு தீர்த்துக்கொள்ளலாம்?
• எலிசாவின் வேலைக்காரனுடைய முன்மாதிரியிலிருந்து நமக்கு என்ன பாடம்?
• ஒழுக்க சம்பந்தமான என்ன சோதனைகளுக்கு எதிராக நாம் இடைவிடாமல் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும்?
• யெகோவாவின் சாட்சிகளாக நம்மை ஏன் தெளிவாக அடையாளம் காட்ட வேண்டும்?
[பக்கம் 10-ன் படங்கள்]
தவறாமல் பைபிள் படிப்பதும் ஜெபிப்பதும் சந்தேகங்களை அகற்ற நமக்கு உதவலாம்
[பக்கம் 11-ன் படம்]
எலிசாவின் வேலைக்காரனுடைய சந்தேகங்கள் ஒரு தரிசனத்தால் தீர்க்கப்பட்டன
[பக்கம் 12-ன் படம்]
பெனினில் உள்ள இதுபோன்ற ராஜ்ய மன்றத்தில் யெகோவாவின் உயர்ந்த ஒழுக்க தராதரங்களை நாம் கற்றுக்கொள்கிறோம்