உங்களுடைய ஒப்புக்கொடுத்தலுக்கு இசைவாக வாழ்கிறீர்களா?
“நீங்கள் எதைச் செய்தாலும், மனிதருக்கென்று செய்யாமல், யெகோவாவுக்கென்றே முழு ஆத்துமாவோடு செய்யுங்கள்.”—கொலோசெயர் 3:23, NW.
1. விளையாட்டுக்களில் என்ன விதமான அர்ப்பணித்தல் காணப்படுகிறது?
எவ்வாறு விளையாட்டு வீரர்கள் தங்கள் சாதனையில் தலைசிறந்து விளங்குகிறார்கள்? டென்னிஸ், கால்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், பேஸ்பால், தடகளப்போட்டி, கோல்ஃப் அல்லது வேறு எந்த விளையாட்டாக இருந்தாலும் விளையாட்டு வீரர்கள் முடிந்த மட்டும் திறம்பட்டவர்களாக திகழ தங்கள் உடலையும் மனதையும் பயிற்றுவிப்புக்கு தங்களையே முழுமையாய் அர்ப்பணிப்பதன்மூலம் தலைசிறந்து விளங்குகிறார்கள். அவர்கள் உடலையும் மனதையும் கட்டுப்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். பைபிளின் கருத்தில் ஒப்புக்கொடுத்தலைப் பற்றி சிந்திக்கையில், இப்படிப்பட்ட அர்ப்பணித்தலே நம் மனதில் இருக்க வேண்டுமா?
2. பைபிளில் “ஒப்புக்கொடுத்தல்” எதை அர்த்தப்படுத்துகிறது? உதாரணத்துடன் விளக்குங்கள்.
2 பைபிளின் கருத்தில் “ஒப்புக்கொடுத்தல்” என்றால் என்ன? “ஒப்புக்கொடு” என்பது “ஒதுங்கியிரு; பிரிக்கப்பட்டிரு; விலகிக்கொள்” என்ற அர்த்தத்தைத் தரும் எபிரெய வினைச்சொல்லின் மொழிபெயர்ப்பாகும்.a பூர்வ இஸ்ரவேலில், பிரதான ஆசாரியராகிய ஆரோன் தன்னுடைய தலைப்பாகையில் ‘ஒப்புக்கொடுத்தலின் பரிசுத்த அடையாளத்தைத்’ தரித்திருந்தார். அது பிரகாசிக்கும் பசும் பொன் பட்டையாக இருந்தது. “பரிசுத்தம் யெகோவாவுக்கு உரியது” என்ற எபிரெய சொற்கள் அதில் பொறிக்கப்பட்டிருந்தன. பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்கும் எதையும் அவர் தவிர்க்க வேண்டும் என்பதற்கு அது நினைப்பூட்டுதலாய் விளங்கியது. ஏனெனில், ‘ஒப்புக்கொடுத்தலின் பரிசுத்த அடையாளமாகிய அவனுடைய தேவனின் அபிஷேக தைலம் அவன்மேல் இருந்தது.’—யாத்திராகமம் 29:6; 39:30; லேவியராகமம் 21:12; NW.
3. ஒப்புக்கொடுத்தல் நம் நடத்தையை எவ்வாறு பாதிக்க வேண்டும்?
3 ஒப்புக்கொடுத்தல் எவ்வளவு முக்கியம் என்பதை இந்தச் சூழமைவிலிருந்து நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இது, மனமுவந்து தன்னை கடவுளுடைய ஊழியனாக அடையாளம் காட்டுவதைக் குறிக்கிறது. மேலும், இது சுத்தமான நடத்தையைத் தேவைப்படுத்துகிறது. “நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்” என யெகோவா சொன்னதை அப்போஸ்தலனாகிய பேதுரு மேற்கோள் காட்டியதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது. (1 பேதுரு 1:15, 16) ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்களாக, அதற்கேற்ப முடிவுபரியந்தம் உண்மையாய் நடந்துகொள்ள வேண்டிய பெரும் உத்தரவாதம் நமக்கு இருக்கிறது. ஆனால் கிறிஸ்தவ ஒப்புக்கொடுத்தலில் என்ன உட்பட்டிருக்கிறது?—லேவியராகமம் 19:2; மத்தேயு 24:13.
4. ஒப்புக்கொடுத்தல் என்ற நிலையை நாம் எப்படி அடைகிறோம், அதை எதற்கு ஒப்பிடலாம்?
4 யெகோவா தேவனையும் அவருடைய நோக்கங்களையும், இயேசு கிறிஸ்துவையும், கடவுளுடைய நோக்கங்களில் அவர் வகிக்கும் பாகத்தையும் பற்றிய திருத்தமான அறிவை முதலில் பெற்றோம்; பின்னர், நம் முழு இருதயத்தோடும் மனதோடும் ஆத்துமாவோடும் பலத்தோடும் கடவுளைச் சேவிப்பதற்கு தனிப்பட்ட விதத்தில் தீர்மானித்தோம். (மாற்கு 8:34; 12:30; யோவான் 17:3) எவ்வித நிபந்தனையுமின்றி கடவுளுக்கு முழுமையாய் ஒப்புக்கொடுப்பதாக நாமாகவே முன்வந்து உறுதிமொழி அளித்ததாக அதைக் கருதலாம். நம்முடைய ஒப்புக்கொடுத்தல் உணர்ச்சிவசப்பட்டு செய்த திடீர் தீர்மானமல்ல. இது பகுத்தறிவோடு, கவனத்துடனும் ஜெபத்துடனும் சீர்தூக்கிப் பார்த்து செய்யப்பட்ட தீர்மானம். ஆகவே, அது தற்காலிகமானதல்ல. ஒரு வயலை உழுவதற்கு ஆரம்பித்த பின்பு அது படுகஷ்டமானது என்றோ, அறுப்புக்கு வெகு காலம் எடுக்கும் என்றோ, அந்த அறுப்பும் நிச்சயமில்லை என்றோ கருதி பாதியில் விட்டுவிடுபவரைப் போல் நாம் இருக்க முடியாது. தேவராஜ்ய பொறுப்பு எனும் ‘கலப்பையின்மேல் தங்கள் கைகளை வைத்த’ சிலர் எல்லாவித இக்கட்டையும் இடையூறையும் சகித்து நின்று முன்மாதிரிகளாய் திகழ்ந்ததைக் கவனியுங்கள்.—லூக்கா 9:62; ரோமர் 12:1, 2.
ஒப்புக்கொடுத்தலை விட்டு அவர்கள் விலகவில்லை
5. கடவுளின் ஒப்புக்கொடுத்த ஊழியராக எரேமியா எப்படி மிகச் சிறந்த முன்மாதிரியாக திகழ்ந்தார்?
5 எரேமியா 40 ஆண்டுகளுக்கு மேலாக எருசலேமில் தீர்க்கதரிசனம் உரைத்து வந்தார் (பொ.ச.மு. 647-607). அது எளிதான ஊழியமாக இருக்கவில்லை. தன் வரம்புகளை அவர் நன்கு அறிந்திருந்தார். (எரேமியா 1:2-6) யூதாவிலிருந்த கடின மனமுள்ளவர்களை தினம் தினம் சந்திக்க அவருக்கு தைரியமும் சகிப்புத்தன்மையும் தேவைப்பட்டது. (எரேமியா 18:18; 38:4-6) எனினும், யெகோவா தேவன் மீது எரேமியா நம்பிக்கை வைத்தார். யெகோவா அவரை பலப்படுத்தினார். ஆகவே கடவுளின் ஒப்புக்கொடுத்த உண்மை ஊழியராக அவர் நிரூபித்தார்.—எரேமியா 1:18, 19.
6. அப்போஸ்தலனாகிய யோவான் நமக்கு என்ன முன்மாதிரியை வைத்தார்?
6 “தேவவசனத்தினிமித்தமும், இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சாட்சியினிமித்தமும்” தன்னுடைய தள்ளாத வயதிலும் வறண்ட பத்மு தீவில் நாடுகடத்தப்பட்டிருந்த, உண்மையுள்ள அப்போஸ்தலனாகிய யோவானைப் பற்றியதென்ன? (வெளிப்படுத்துதல் 1:9) ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவராக அவர் உண்மையுடன் ஏறக்குறைய 60 ஆண்டுகள் சகித்திருந்தார். ரோம சேனைகளால் எருசலேம் அழிக்கப்பட்டதற்குப் பின்பும் அவர் உயிரோடிருந்தார். ஒரு சுவிசேஷத்தையும், தேவாவியால் ஏவப்பட்ட மூன்று நிருபங்களையும், வெளிப்படுத்துதல் புத்தகத்தையும் எழுதும் சிலாக்கியம் பெற்றார். வெளிப்படுத்துதலில் அர்மகெதோன் போரை மனக்கண்ணால் முன்னதாகவே கண்டார். தன்னுடைய நாட்களில் அர்மகெதோன் வராது என்பது தெரியவந்தபோது அவர் ஒப்புக்கொடுத்தலை விட்டு விலகினாரா? ஆர்வம் இழந்துவிட்டாரா? இல்லை, ‘குறிக்கப்பட்ட காலம் சமீபமாயிருக்கிறதென’ யோவான் அறிந்திருந்தார்; ஆனால் தான் கண்ட தரிசனங்களின் நிறைவேற்றம் எதிர்காலத்திற்குரியது என்பதை அறிந்த அவர், தன் மரணம் வரை உண்மையாய் நிலைத்திருந்தார்.—வெளிப்படுத்துதல் 1:3, NW; தானியேல் 12:4.
ஒப்புக்கொடுத்தலின் இன்றைய முன்மாதிரிகள்
7. சகோதரர் ஒருவர் எப்படி தன் ஒப்புக்கொடுத்தலுக்கு சிறந்த முன்மாதிரியாக விளங்கினார்?
7 ஆயிரக்கணக்கான உண்மை கிறிஸ்தவர்கள் இன்று அர்மகெதோனை காண உயிரோடிராதபோதிலும் ஆர்வத்துடன் தங்கள் ஒப்புக்கொடுத்தலுக்கு இசைய வாழ்ந்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் இங்கிலாந்தைச் சேர்ந்த எர்னஸ்ட் ஈ. பீவர். 1939-ல் இரண்டாம் உலகப் போர் தொடங்கியபோது அவர் ஒரு சாட்சியானார்; அவர் முழுநேர ஊழியத்தை ஏற்பதற்காக செழிப்பாக நடைபெற்று வந்த அச்சுத் தொழிலை விட்டுவிட்டார். கிறிஸ்தவ நடுநிலைமை வகித்ததால் அவர் இரண்டு ஆண்டுகள் சிறையிலிடப்பட்டார். அவருடைய மனைவியும் பிள்ளைகளும் அவரை உண்மையுடன் ஆதரித்தார்கள். 1950-ல் அவருடைய மூன்று பிள்ளைகள், நியூ யார்க், உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளியில் மிஷனரி பயிற்சி பெற்றார்கள். பிரசங்க ஊழியத்தில் சகோதரர் பீவர் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டதால் நண்பர்கள் அவரை அர்மகெதோன் எர்னீ என்று “செல்லமாக” அழைத்தார்கள். 1986-ல் தன் மரணம் வரை ஒப்புக்கொடுத்தலிலிருந்து அவர் துளியும் விலகாமல், கடவுள் கொண்டுவரும் அர்மகெதோன் போர் சமீபித்திருப்பதை எல்லாருக்கும் அறிவித்து வந்தார். குறிப்பிட்ட காலப்பகுதிக்காக மட்டுமே கடவுளிடம் செய்துகொண்ட ஒப்பந்தமாக தன் ஒப்புக்கொடுத்தலை அவர் கருதவில்லை!b—1 கொரிந்தியர் 15:58.
8, 9. (அ) ஃபிரான்கோவின் சர்வாதிகார ஆட்சியின்போது ஸ்பெய்னில் பல இளைஞர்கள் என்ன முன்மாதிரி வைத்தார்கள்? (ஆ) என்ன கேள்விகள் பொருத்தமாயிருக்கின்றன?
8 ஸ்பெய்னில் சாட்சி கொடுப்பதில் ஆர்வம் குறையாமல் செயல்பட்டவர்களைப் பற்றிய மற்றொரு உதாரணத்தைப் பார்ப்போம். ஃபிரான்கோவின் சர்வாதிகார ஆட்சியின்போது (1939-75), ஒப்புக்கொடுத்திருந்த நூற்றுக்கணக்கான இளம் சாட்சிகள், கிறிஸ்தவர்களாக நடுநிலை வகித்தனர்; அவர்களில் பலர் இராணுவ சிறையில் பத்து அல்லது அதற்கு அதிக ஆண்டுகள் செலவிட்டனர். அவர்களில் கேசூஸ் மார்ட்டின் என்ற சாட்சியும் இருந்தார். அவருக்கு மொத்தமாக 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் வட ஆப்பிரிக்காவில் இராணுவ சிறையில் கடுமையாக அடிக்கப்பட்டார். இதெல்லாம் எளிய தண்டனை இல்லை, எனினும் அவர் விட்டுக்கொடுத்து சமரசமாகவில்லை.
9 சிறைப்பட்ட இந்த இளைஞர்களுக்கு விடுதலை எப்போது என்பது தெரியாதிருந்தது. ஏனெனில், ஒன்றன்பின் ஒன்றாக அவர்களுக்கு பல தீர்ப்புகள் வழங்கப்பட்டன. எனினும், சிறையிருப்பிலும் தங்கள் உத்தமத்தைக் காத்து, ஊழியத்தில் ஆர்வம் குறையாமல் இருந்தார்கள். கடைசியாக 1973-ல் சூழ்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டபோது, இவர்களில் பலருக்கு 30 வயதைத் தாண்டிவிட்டது. இவர்கள் சிறையிலிருந்து விடுதலை பெற்றபோது, உடனடியாக முழுநேர ஊழியத்தில் ஈடுபட ஆரம்பித்தார்கள். சிலர் விசேஷ பயனியர்களாகவும் பயணக் கண்காணிகளாகவும் ஆனார்கள். இவர்கள் சிறையில் இருந்தபோதும் தங்கள் ஒப்புக்கொடுத்தலுக்கு இசைய வாழ்ந்தனர்; விடுதலை செய்யப்பட்ட பின்பும் இவர்களில் பெரும்பான்மையர் தங்கள் ஒப்புக்கொடுத்தலுக்கு இசைவாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.c இன்று நாம் எப்படி? உண்மையுடன் நிலைத்திருந்த இவர்களைப்போல் நாமும் ஒப்புக்கொடுத்தலுக்கு இசைவாக வாழ்கிறோமா?—எபிரெயர் 10:32-34; 13:3.
ஒப்புக்கொடுத்தலைப் பற்றி சரியான கருத்து
10. (அ) நம்முடைய ஒப்புக்கொடுத்தலை நாம் எவ்வாறு கருத வேண்டும்? (ஆ) நம் சேவையை யெகோவா எப்படி கருதுகிறார்?
10 கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்கு நம்மை ஒப்புக்கொடுத்திருப்பதை நாம் எவ்வாறு கருதுகிறோம்? அதற்கு நம் வாழ்க்கையில் முதல் முக்கியத்துவம் கொடுக்கிறோமா? இளைஞர் முதியோர், திருமணமானவர் திருமணமாகாதவர், ஆரோக்கியமானவர் நோய்வாய்ப்பட்டவர் என நாம் எந்த நிலையில் இருந்தாலும் முடிந்தவரை நம் ஒப்புக்கொடுத்தலுக்கு இசைவாக வாழ முயல வேண்டும். முழுநேர ஊழியம் செய்யும் பயனியராக, உவாட்ச் டவர் சொஸைட்டியின் கிளை அலுவலகத்தில் வாலண்டியராக, மிஷனரியாக அல்லது பயண ஊழியராக சேவிப்பதற்கு ஒருவருடைய சூழ்நிலை இடமளிக்கலாம். மறுபட்சத்தில், பெற்றோர்கள் சிலருக்கோ, குடும்பத்தின் பொருளாதார தேவைகளையும் ஆவிக்குரிய தேவைகளையும் கவனிப்பதிலேயே அதிக நேரம் போய்விடலாம். அதன் காரணமாக, இவர்கள் மாதந்தோறும் செலவிடும் சில மணிநேரம், முழுநேர ஊழியர்கள் செலவிடும் அதிக மணிநேரத்தோடு ஒப்பிட யெகோவாவின் பார்வையில் குறைந்த மதிப்புடையதாக உள்ளதா? இல்லவே இல்லை. நம்மால் முடியாததை செய்யும்படி கடவுள் ஒருபோதும் எதிர்பார்ப்பதில்லை. “ஒருவனுக்கு மனவிருப்பமிருந்தால், அவனுக்கு இல்லாததின்படியல்ல, அவனுக்கு உள்ளதின்படியே அங்கிகரிக்கப்படும்” என அப்போஸ்தலனாகிய பவுல் இந்த நியமத்தைக் கூறினார்.—2 கொரிந்தியர் 8:12.
11. நம்முடைய இரட்சிப்பு எதன்பேரில் சார்ந்திருக்கிறது?
11 எவ்வாறாயினும், நம்முடைய இரட்சிப்பு ஏதோ நாம் செய்யும் செயல்களைச் சார்ந்தது அல்ல, நம் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவின் மூலமாக கிடைக்கும் யெகோவாவின் தகுதியற்ற தயவின்பேரிலேயே சார்ந்திருக்கிறது. “எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே [“தகுதியற்ற தயவினாலே,” NW] கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்” என பவுல் தெளிவாக விளக்கினார். எனினும், நம்முடைய செயல்கள், கடவுளுடைய வாக்குறுதிகளின் மீதுள்ள நம் உயிருள்ள விசுவாசத்தை நிரூபிக்கின்றன.—ரோமர் 3:23, 24; யாக்கோபு 2:17, 18, 24.
12. நாம் ஏன் ஒப்பிட்டு பார்க்கக்கூடாது?
12 கடவுளுடைய சேவையில் எவ்வளவு மணிநேரத்தை செலவழிக்கிறோம், எவ்வளவு பைபிள் பிரசுரங்களை அளிக்கிறோம் அல்லது எத்தனை பைபிள் படிப்புகள் நடத்துகிறோம் என்பவற்றை நாம் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டியதில்லை. (கலாத்தியர் 6:3, 4) கிறிஸ்தவ ஊழியத்தில் சாதனைகள் படைத்தாலும் மனத்தாழ்மைக்குரிய இயேசுவின் இவ்வார்த்தைகளை நாம் ஒவ்வொருவரும் மனதில் வைக்க வேண்டும்: “அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்தபின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையை மாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள்.” (லூக்கா 17:10) நமக்கு “கட்டளையிடப்பட்ட யாவற்றையும்” செய்துவிட்டதாக நாம் எப்போதும் சொல்ல முடியுமா? ஆகவே, கடவுளுக்குச் செய்யும் நம் சேவையின் தரம் எத்தகையதாய் இருக்க வேண்டும் என்பதே முக்கியம்.—2 கொரிந்தியர் 10:17, 18.
ஒவ்வொரு நாளையும் மதிப்புமிக்கதாக்குதல்
13. நம் ஒப்புக்கொடுத்தலுக்கு இசைவாக வாழும்போது என்ன மனப்பான்மை நமக்கு தேவை?
13 கணவர்கள், மனைவிகள், பிள்ளைகள், பெற்றோர்கள், அடிமைகள் என பலதரப்பட்டோருக்கு அறிவுரை கூறிய பின்பு பவுல் இவ்வாறு எழுதுகிறார்: “நீங்கள் எதைச் செய்தாலும், மனிதருக்கென்று செய்யாமல், யெகோவாவுக்கென்றே முழு ஆத்துமாவோடு செய்யுங்கள். ஏனெனில் சுதந்தரமாகிய பலனை யெகோவாவினிடமிருந்தே பெறுவீர்களென்று அறிந்திருக்கிறீர்கள். எஜமானராகிய கிறிஸ்துவுக்காக உழையுங்கள்.” (கொலோசெயர் 3:23, 24, NW) யெகோவாவின் சேவையில் நாம் சாதிப்பதை வைத்து மனிதரைக் கவர வேண்டும் என்பதற்காக நாம் சேவை செய்வதில்லை. கடவுளைச் சேவிக்கவே நாம் விரும்புகிறோம்; இவ்விஷயத்தில் இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றுகிறோம். அவர் தம்முடைய குறுகிய கால ஊழியத்தை அவசர உணர்வோடு செய்து முடித்தார்.—1 பேதுரு 2:21.
14. கடைசி நாட்களைக் குறித்து என்ன எச்சரிக்கையை பேதுரு கொடுத்தார்?
14 அப்போஸ்தலனாகிய பேதுருவும் அவசர உணர்வோடு செயல்பட்டார். கடைசி நாட்களில் பரியாசக்காரர், அதாவது விசுவாசதுரோகிகளும் சந்தேகக்காரர்களும் இருப்பார்கள். அவர்கள் மனம்போன போக்கில் வாழ்ந்து கிறிஸ்துவின் வந்திருத்தலைப் பற்றி சந்தேகங்களை எழுப்புவார்கள் என்று தன் இரண்டாவது நிருபத்தில் எச்சரித்தார். எனினும், “தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் [“யெகோவா,” NW] தமது வாக்குத்தத்தத்தைக் குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். கர்த்தருடைய [“யெகோவாவின்,” NW] நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்” என்றும் பேதுரு சொன்னார். ஆம், யெகோவாவின் நாள் நிச்சயமாய் வரும். ஆகையால், கடவுளுடைய வாக்குறுதியில் நம் விசுவாசம் உண்மையில் எந்தளவு நிச்சயமானதாயும் திடமானதாயும் உள்ளது என்பதற்கு நாம் தினமும் கவனம் செலுத்த வேண்டும்.—2 பேதுரு 3:3, 4, 9, 10.
15. நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளையும் எவ்வாறு நோக்க வேண்டும்?
15 நம்முடைய ஒப்புக்கொடுத்தலுக்கு இசைய கவனமாக வாழ்வதற்கு, ஒவ்வொரு நாளையும் யெகோவாவுக்குத் துதியுண்டாகும் விதத்தில் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு நாளின் முடிவிலும், எப்படி அந்த நாளை ஏதோவொரு வகையில் கடவுளின் பெயர் பரிசுத்தப்படுவதற்கும் ராஜ்ய நற்செய்தி அறிவிக்கப்படுவதற்கும் பயன்படுத்தினோம் என்பதை எண்ணிப் பார்க்க முடியுமா? ஒருவேளை நம் சுத்தமான நடத்தையால், உற்சாகமான உரையாடலால் அல்லது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் காட்டும் கரிசனையால் அதை செய்திருக்கலாம். நம் கிறிஸ்தவ நம்பிக்கையை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தினோமா? கடவுளுடைய வாக்குறுதிகளை ஆர்வமாய் சிந்திப்பதற்கு யாருக்காவது உதவினோமா? ஆவிக்குரிய விதத்தில் பயனளிக்கும் ஒன்றை ஒவ்வொரு நாளும் நாம் தவறாமல் செய்துவருகையில் நமது ஆவிக்குரிய வங்கியின் சேமிப்பு நிதி பெருகட்டும்.—மத்தேயு 6:20; 1 பேதுரு 2:12; 3:15; யாக்கோபு 3:13.
பார்வையை தெளிவாக வையுங்கள்
16. கடவுளுக்கு ஒப்புக்கொடுத்திருப்பதில் தளர்ந்துபோக செய்ய என்ன வழிகளில் சாத்தான் முயலுகிறான்?
16 கிறிஸ்தவர்களாகிய நாம் சமாளிப்பதற்கு அதிக கடினமான காலங்களில் வாழ்கிறோம். நல்லதுக்கும் கெட்டதுக்கும், சுத்தமானதுக்கும் அசுத்தமானதுக்கும், ஒழுக்கமானதற்கும் ஒழுக்கங்கெட்டதற்கும் உள்ள வேறுபாடு தெளிவாக தெரியாதபடி செய்ய சாத்தானும் அவனுடைய ஆட்களும் முயலுகிறார்கள். (ரோமர் 1:24-28; 16:17-19) டிவி, இன்டர்நெட் ஆகியவற்றால் வெகு எளிதில் நம் இருதயத்தையும் மனதையும் அசுத்தப்படுத்திக்கொள்ள சாத்தான் வழிசெய்திருக்கிறான். நம்முடைய ஆவிக்குரிய பார்வை மங்கிப்போய், எதுவும் தெளிவாக தெரியாமல் போகையில், எவையெல்லாம் அவனுடைய தந்திரச் செயல்கள் என்றே நம்மால் பகுத்துணர முடியாமல் போய்விடும். நம் ஆவிக்குரிய மதிப்பீடுகளை விட்டுக்கொடுப்போமானால், ஒப்புக்கொடுத்தலுக்கு இசைவாக வாழும் தீர்மானத்தில் பலவீனப்பட்டு, “கலப்பையின்” மேல் வைத்த நம் பிடி தளர்ந்துபோகும்.—லூக்கா 9:62; பிலிப்பியர் 4:8.
17. கடவுளுடன் நம் உறவை காத்துக்கொள்ள பவுலின் அறிவுரை எவ்வாறு உதவலாம்?
17 ஆகையால், தெசலோனிக்கே சபைக்கு பவுல் கூறிய வார்த்தைகள் மிக சமயோசிதமானவை: “நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து, தேவனை அறியாத அஞ்ஞானிகளைப் போல மோக இச்சைக்குட்படாமல், உங்களில் அவனவன் தன்தன் சரீரபாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து . . . இருக்க வேண்டும்.” (1 தெசலோனிக்கேயர் 4:3-5) பாலுறவு ஒழுக்கக்கேட்டால் சிலர் கிறிஸ்தவ சபையிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள், கடவுளுக்கான தங்கள் ஒப்புக்கொடுத்தலுக்கு கவனம் செலுத்த தவறியவர்கள். கடவுளிடம் வைத்திருந்த தங்கள் உறவில் விரிசல் ஏற்பட அனுமதித்தவர்கள். ஆகவே அவர்கள் வாழ்க்கையில் கடவுள் இனிமேலும் முக்கியமானவராக இருக்கவில்லை. எனினும், “தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார். ஆகையால் அசட்டைபண்ணுகிறவன் மனுஷரை அல்ல, தமது பரிசுத்த ஆவியை நமக்குத் தந்தருளின தேவனையே அசட்டைபண்ணுகிறான்” என பவுல் சொன்னார்.—1 தெசலோனிக்கேயர் 4:7, 8.
உங்கள் தீர்மானம் என்ன?
18. என்ன தீர்மானத்துடன் நாம் இருக்க வேண்டும்?
18 யெகோவா தேவனுக்கான நம் ஒப்புக்கொடுத்தலின் முக்கியத்துவத்தை மதித்துணர்ந்தால், என்ன செய்ய தீர்மானமாய் இருக்க வேண்டும்? நம் நடத்தை, ஊழியம் ஆகிய இரண்டிலுமே நல்மனசாட்சியைக் காத்துக்கொள்ள திடத்தீர்மானமாய் இருக்க வேண்டும். “கிறிஸ்துவுக்கேற்ற உங்கள் நல்ல நடக்கையைத் தூஷிக்கிறவர்கள் உங்களை அக்கிரமக்காரரென்று உங்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிற விஷயத்தில் வெட்கப்படும்படிக்கு நல்மனச்சாட்சியுடையவர்களாயிருங்கள்” என பேதுரு அறிவுரை கூறினார். (1 பேதுரு 3:16) நம் கிறிஸ்தவ நடத்தையின் காரணமாக துன்பத்துக்கும் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகலாம். ஏன், கிறிஸ்துவும்கூட, கடவுளிடம் விசுவாசத்தையும் உண்மைத்தவறாமையையும் காத்துக்கொண்டதால் பாடுபட்டாரே! “இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டபடியால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாகத் தரித்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் மாம்சத்தில் பாடுபடுகிறவன் . . . பாவங்களை விட்டோய்ந்திருப்பான்” என பேதுரு சொன்னார்.—1 பேதுரு 4:1, 2.
19. நம்மை பற்றி என்ன சொல்லப்பட நாம் விரும்புவோம்?
19 ஒப்புக்கொடுத்தலுக்கு இசைவாக வாழ வேண்டும் என்ற நம் திடத்தீர்மானம், ஆவிக்குரியப்பிரகாரமாகவும் ஒழுக்கப்பிரகாரமாகவும் சரீரப்பிரகாரமாகவும் நோயுற்றிருக்கிற சாத்தானிய உலகின் வஞ்சக சூழ்ச்சிகளிலிருந்து நம்மை உண்மையிலேயே பாதுகாக்கும். ஆனால், அதற்கும் மேலாக, கடவுளுடைய அங்கீகாரம் நமக்கு உண்டு என்ற நம்பிக்கை நமக்கு கிடைக்கும். இது, சாத்தானும் அவனுடைய பிரதிநிதிகளும் அளிக்க முன்வரும் எதைக் காட்டிலும் மேலானது. ஆகையால், ஆரம்பத்தில் சத்தியத்தின் மீது நமக்கு இருந்த அன்பை இழந்துவிட்டோம் என சொல்லப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்காதிருப்போமாக. மாறாக, முதல் நூற்றாண்டில், தியத்தீரா சபையிலிருந்தவர்களைக் குறித்து இவ்வாறு சொல்லப்பட்டதுபோல் நம்மை குறித்தும் சொல்லப்படுவதாக: “உன் கிரியைகளையும், உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த கிரியைகளிலும் பின்பு செய்த கிரியைகள் அதிகமாயிருக்கிறதையும் அறிந்திருக்கிறேன்.” (வெளிப்படுத்துதல் 2:4, 18, 19) ஆம், நம் ஒப்புக்கொடுத்தலை ஏனோதானோ என எடுத்துக்கொண்டு வெதுவெதுப்பாய் இருப்பதற்கு பதிலாக, ‘ஆவியிலே அனலாயிருந்து’ முடிவுபரியந்தம் ஆர்வத்துடன் செயல்படுவோமாக; முடிவு சமீபமாயிருக்கிறது.—ரோமர் 12:11; வெளிப்படுத்துதல் 3:15, 16.
[அடிக்குறிப்புகள்]
b எர்னஸ்ட் பீவரின் வாழ்க்கை சரிதையை 1980, மார்ச் 15 தேதியிட்ட ஆங்கில காவற்கோபுரத்தில் பக்கங்கள் 8-11-ல் காண்க.
c உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட 1978 யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்தர புத்தகம், (ஆங்கிலம்) பக்கங்கள் 156-8-ஐயும், 201-18-ஐயும் காண்க.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• ஒப்புக்கொடுத்தல் எதை உட்படுத்துகிறது?
• அன்றும் இன்றும் கடவுளின் ஒப்புக்கொடுத்த ஊழியரின் என்ன முன்மாதிரிகள் நாம் பின்பற்றுவதற்கு தகுதியானவை?
• கடவுளுக்கான நம் சேவையை எவ்வாறு கருத வேண்டும்?
• கடவுளுக்கு ஒப்புக்கொடுத்திருப்பதில் நம் தீர்மானம் என்னவாக இருக்க வேண்டும்?
[பக்கம் 15-ன் படம்]
படுமோசமாக நடத்தப்பட்டபோதிலும் எரேமியா உண்மையாக நிலைத்திருந்தார்
[பக்கம் 16-ன் படம்]
வைராக்கியமிக்க கிறிஸ்தவர் என்ற முன்மாதிரியை எர்னஸ்ட் பீவர் தன் பிள்ளைகளுக்கு வைத்தார்
[பக்கம் 17-ன் படம்]
இளைஞர்களாய் இருந்த நூற்றுக்கணக்கான சாட்சிகள் ஸ்பானிய சிறைகளில் உத்தமத்தைக் காத்துக்கொண்டனர்
[பக்கம் 18-ன் படங்கள்]
ஆவிக்குரிய சேமிப்பு நிதி பெருகும் விதத்தில் ஒவ்வொரு நாளும் நடந்துகொள்வோமாக