சோர்வை உங்களால் சமாளிக்க முடியும்!
“ஆபத்துக் காலத்தில் நீ சோர்ந்து போவாயானால், உன் பெலன் குறுகினது” என ஞானி ஒருவர் எழுதினார். (நீதிமொழிகள் 24:10) உங்களுடைய மனம் எப்பொழுதாவது சோர்ந்து போயிருந்தால், இந்தக் கூற்றை ஒருவேளை ஒத்துக்கொள்வீர்கள்.
சோர்வினால் உண்டாகும் வேதனைகளிலிருந்து யாருமே தப்ப முடியாது. வாழ்க்கை வானில் சிறுசிறு சோகம் எனும் மேகங்கள் அவ்வப்பொழுது மூட்டமிடலாம். பின்பு திசை தெரியாமல் கலைந்து சென்றுவிடலாம். ஆனால் புண்படுத்தும் உணர்ச்சிகளோ மனக்கசப்புகளோ உண்டாகும்போது, பிரச்சினை பலநாட்களுக்கு மப்பும் மந்தாரமுமாக இருந்துவிடலாம். பல வருடங்களாக கடவுளை உண்மையோடு சேவித்து வந்த கிறிஸ்தவர்கள் சிலர் மிகவும் மனமொடிந்து போயிருக்கிறார்கள், அதனால் கூட்டங்களுக்கு வருவதையும் வெளி ஊழியத்தில் கலந்துகொள்வதையும் நிறுத்தியிருக்கிறார்கள்.
நீங்கள் சோர்ந்துபோயிருந்தால், தைரியம் கொள்ளுங்கள்! கடந்த காலங்களில் வாழ்ந்த உண்மையுள்ள ஊழியர்கள் கடவுளுடைய உதவியால் சோர்வை வெற்றிகரமாக சமாளித்திருக்கிறார்கள், நீங்களும் சமாளிக்க முடியும்.
பிறர் உங்கள் மனதை புண்படுத்தும்போது
கவனமில்லாமல் சொல்லப்படும் வார்த்தைகளிலிருந்தோ செய்யப்படும் செயல்களிலிருந்தோ யாருமே தப்பிக்க முடியாது. ஆனால், நீங்கள் யெகோவாவுக்கு செய்யும் சேவையை பிறருடைய அபூரணங்கள் குறுக்கிடாதவாறு பார்த்துக்கொள்ள முடியும். யாராவது உங்களுடைய மனதை புண்படுத்தியிருந்தால், சாமுவேலின் தாய் அன்னாள் சோர்வுண்டாக்கும் ஒரு சூழ்நிலைமையை எப்படி சமாளித்தார் என சிந்திப்பது உங்களுக்கு உதவியாக இருக்கலாம்.
அன்னாள் தனக்கு பிள்ளை வேண்டும் என்று மிகவும் ஏங்கினாள், ஆனால் அவள் மலடியாக இருந்தாள். அவளுடைய கணவனின் இரண்டாம் தாரமாகிய பெனின்னாளுக்கு குமாரர்களும் குமாரத்திகளும் இருந்தார்கள். அன்னாள் எவ்வளவு நொந்துபோயிருப்பாள் என்பதை புரிந்து நடந்துகொள்வதற்கு மாறாக, பெனின்னாள் அவளை தனக்கு போட்டியாக நினைத்தாள், அதனால் அன்னாள் ‘உண்ணாமல் அழுவாள்.’—1 சாமுவேல் 1:2, 4-7, பொ.மொ.
ஜெபிப்பதற்காக அன்னாள் ஒருநாள் ஆசரிப்புக் கூடாரத்திற்குச் சென்றாள். இஸ்ரவேலின் பிரதான ஆசாரியனாகிய ஏலி அவளுடைய உதடுகள் அசைவதை கவனித்தார். அன்னாள் ஜெபிப்பதை ஏலி உணராமல், அவள் குடித்து வெறித்திருக்க வேண்டுமென்ற முடிவுக்கு வந்துவிட்டார். “நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய்? உன் குடியை உன்னைவிட்டு விலக்கு” என்று அதிகாரத்தோடு சொன்னார். (1 சாமுவேல் 1:12-14) அன்னாள் எப்படி உணர்ந்திருப்பாள் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? உற்சாகம் பெறவே ஆசரிப்புக் கூடாரத்திற்கு வந்திருந்தாள். இஸ்ரவேலில் செல்வாக்குமிக்க ஒருவர் இப்படியொரு குற்றச்சாட்டை அவள் மீது போடுவதை சற்றும் எதிர்பார்த்திருக்கவே மாட்டாள்!
இந்தச் சந்தர்ப்பம் அன்னாளை இன்னும் அதிகமாய் சோர்வடையச் செய்திருக்கலாம். அவள் விறுட்டென்று ஆசரிப்புக் கூடாரத்தைவிட்டு வெளியே சென்றிருக்கலாம், ஏலி பிரதான ஆசாரியனாக இருக்கும் வரை இனிமேல் இந்தப் பக்கம் தலையே காட்டக் கூடாது என சபதம் எடுத்திருக்கலாம். ஆனால், யெகோவாவுடன் தனக்கிருந்த உறவை அன்னாள் மிகவும் உயர்வாக மதித்தாள். இப்படிப்பட்ட நடவடிக்கை எடுத்தால் அது அவருக்குப் பிடிக்காது என்பதையும் அவள் அறிந்திருந்தாள். ஏனென்றால் ஆசரிப்புக் கூடாரம் மெய் வணக்கத்தின் மையமாக விளங்கியது. யெகோவா தம்முடைய பெயரை அங்கே நிலைநாட்டியிருந்தார். மேலும், ஏலி அபூரணராக இருந்தாலும், யெகோவாவால் தெரிந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி.
ஏலியின் குற்றச்சாட்டிற்கு அன்னாள் அளித்த பயபக்திக்குரிய பதில் நாம் பின்பற்றுவதற்கு சிறந்த முன்மாதிரி. தன்னை தவறாக குற்றஞ்சாட்டுவதற்கு அவள் அனுமதிக்கவில்லை, ஆனால் மிகவும் மரியாதைக்குரிய விதத்தில் பதிலளித்தாள். “அப்படியல்ல, என் ஆண்டவனே, நான் மனக்கிலேசமுள்ள ஸ்திரீ; நான் திராட்சரசமாகிலும் மதுவாகிலும் குடிக்கவில்லை; நான் கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றிவிட்டேன். உம்முடைய அடியாளைப் பேலியாளின் மகளாக எண்ணாதேயும்; மிகுதியான விசாரத்தினாலும் கிலேசத்தினாலும் இந்நேரமட்டும் விண்ணப்பம் பண்ணினேன்.”—1 சாமுவேல் 1:15, 16.
அன்னாள் தான் குடிக்கவில்லை என நிரூபித்தாளா? நிரூபித்தாள். ஆனால், ஏலியிடம் அவள் சாதுரியமாக பேசினாள், அவருடைய பொய் குற்றச்சாட்டைக் குறித்து குறைகூறவில்லை. அதற்குப் பிறகு ஏலியும் அவளிடம் தயவாக பேசினார்: “சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக.” விஷயம் அத்தோடு முடிவடைந்ததும், “புறப்பட்டுப்போய், போஜனஞ்செய்தாள்; அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை.”—1 சாமுவேல் 1:17, 18.
இந்தப் பதிவிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? தவறான எண்ணத்தை சரிப்படுத்துவதற்கு அன்னாள் உடனடியாக செயல்பட்டாள், ஆனால் அதை ஆழ்ந்த மரியாதையுடன் செய்தாள். அதனால், யெகோவாவுடனும் ஏலியுடனும் நல்ல உறவை காத்துக்கொண்டாள். நல்ல பேச்சுத்தொடர்பும் சற்று சாதுரியமாக நடந்துகொள்வதும் கடுகளவான பிரச்சினைகள் கடலளவாக பெரிதாகாமல் தடுக்கலாம்!
மற்றவர்களுடன் கருத்து வேறுபாடுகளை சரிசெய்வதற்கு மனத்தாழ்மையும் இருவருடைய பங்கிலும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் தேவை என்பதை உணர வேண்டும். ஏதாவதொரு பிரச்சினையை தீர்ப்பதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு சக விசுவாசி பிரதிபலிக்கத் தவறினால், நீங்கள் அந்த விஷயத்தை யெகோவாவின் கரங்களில் விட்டுவிடலாம்; அவருடைய நேரத்தில், அவருடைய வழியில் அதை சரிப்படுத்துவார் என்பதில் நம்பிக்கையோடு இருக்கலாம்.
ஏதாவது ஊழிய சிலாக்கியத்தை இழந்துவிட்டீர்களா?
கடவுளுடைய சேவையில் தாங்கள் மிகவும் பொக்கிஷமாக கருதிவந்த சிலாக்கியத்தை துறக்க நேர்ந்ததால், சிலர் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். தங்களுடைய சகோதரர்களுக்கு சேவை செய்வதை அவர்கள் அனுபவித்து மகிழ்ந்தார்கள்; ஆனால் அந்த சிலாக்கியத்தை இழந்தபோது, யெகோவாவுக்கோ அவருடைய அமைப்பிற்கோ சேவைசெய்ய தாங்கள் இனிமேல் லாயக்கில்லை என நினைத்தார்கள். நீங்களும் இதுபோல நினைத்தால், மாற்கு என அழைக்கப்படும்—இவர் யோவான் மாற்கு என்றும் அழைக்கப்படுகிறார்—பைபிள் எழுத்தாளருடைய முன்மாதிரியை சிந்தித்துப் பார்ப்பதன் மூலம் உட்பார்வையை பெறலாம்.—அப்போஸ்தலர் 12:12.
பவுல் மற்றும் பர்னபாவுடன் அவர்களுடைய முதல் மிஷனரி பயணத்தில் மாற்கும் சென்றார், ஆனால் போகும் வழியில் அவர்களை விட்டுவிட்டு எருசலேமுக்குத் திரும்பிவிட்டார். (அப்போஸ்தலர் 13:13) பிற்பாடு, மற்றொரு பயணத்தில் மாற்குவை தங்களுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும் என பர்னபா விரும்பினார். ஆனால், பைபிள் சொல்கிறது: “பவுலோ: அவன் பம்பிலியா நாட்டிலே நம்மை விட்டுப் பிரிந்து நம்மோடேகூட ஊழியத்துக்கு வராததினாலே, அவனை அழைத்துக்கொண்டு போகக்கூடாது என்றான்.” பர்னபா இதை ஒத்துக்கொள்ளவில்லை. “அவர்களுக்குள்ளே கடுங்கோபமூண்டபடியினால் அவர்கள் [பவுலும் பர்னபாவும்] ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்தார்கள். பர்னபா மாற்குவைக் கூட்டிக்கொண்டு கப்பல் ஏறிச் சீப்புரு தீவுக்குப் போனான். பவுலோ சீலாவைத் தெரிந்து கொண்டு, . . . புறப்பட்[டார்].”—அப்போஸ்தலர் 15:36-40.
அப்போஸ்தலன் பவுல் மீது அதிக மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த மாற்கு, பவுல் தன்னை அவருடன் ஊழியம் செய்ய விரும்பாததையும், தன்னுடைய தகுதிகளைக் குறித்து வாக்குவாதம் எழும்பி பவுலுக்கும் பர்னபாவுக்கும் மத்தியில் பிளவு ஏற்பட்டதையும் அறிந்து இடிந்து போயிருக்க வேண்டும். ஆனால் விஷயம் இத்தோடு முடிவடைந்துவிடவில்லை.
பவுலுக்கும் சீலாவுக்கும் இன்னொரு பயணத் தோழர் தேவைப்பட்டார். அவர்கள் லீஸ்திராவுக்கு வந்து சேர்ந்தபோது, மாற்குவிற்கு பதிலாக வேறொருவர் கிடைத்தார், அவர்தான் இளைஞராகிய தீமோத்தேயு. இவர் தெரிந்தெடுக்கப்பட்டபோது முழுக்காட்டுதல் பெற்று இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள்தான் ஆகியிருக்கும். மாற்குவோ கிறிஸ்தவ சபை ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்தே அதனுடன் கூட்டுறவு வைத்துவந்திருந்தார்—சொல்லப்போனால், பவுலைக் காட்டிலும் அதிக காலம் கூட்டுறவு கொண்டு வந்திருந்தார். ஆனால் இந்த ஊழிய சிலாக்கியத்தைப் பெற்றது தீமோத்தேயு.—அப்போஸ்தலர் 16:1-3.
தன்னைவிட வயதிலும் அனுபவத்திலும் குறைந்த ஒருவரை தேர்ந்தெடுத்ததற்கு மாற்கு எப்படி பிரதிபலித்தார்? அதை பைபிள் சொல்வதில்லை. இருப்பினும், யெகோவாவின் சேவையில் மாற்கு தொடர்ந்து சுறுசுறுப்பாக இருந்தார் என்பதை சுட்டிக்காட்டுகிறது. தனக்கு கிடைத்த சிலாக்கியங்களை பயன்படுத்திக் கொண்டார். பவுலுடனும் சீலாவுடனும் சேர்ந்து சேவைசெய்ய முடியாதபோதிலும், பர்னபாவுடன் அவருடைய சொந்த ஊராகிய சீப்புருவுக்கு செல்லும் சிலாக்கியத்தைப் பெற்றார். பாபிலோனில் பேதுருவுடனும் மாற்கு சேவை செய்தார். கடைசியில், ரோமில் பவுலுடனும் தீமோத்தேயுவுடனுமே ஊழியம் செய்யும் வாய்ப்பை பெற்றார். (கொலோசெயர் 1:1; 4:10; 1 பேதுரு 5:13) பிற்பாடு, நான்கு சுவிசேஷங்களில் ஒன்றை ஏவுதலால் எழுதுவதற்கும் மாற்குவிற்கு சிலாக்கியம் கிடைத்தது!
இவையெல்லாவற்றிலும் நமக்கு நல்ல பாடம் இருக்கிறது. யெகோவாவின் சேவையில் தொடர்ந்து தனக்கு கிடைத்த சிலாக்கியங்களைப் போற்ற தவறி, தான் இழந்த சிலாக்கியத்தைக் குறித்தே மாற்கு மிகவும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கவில்லை. யெகோவாவின் சேவையில் மாற்கு சுறுசுறுப்பாக ஈடுபட்டார், அதனால் யெகோவா அவரை ஆசீர்வதித்தார்.
ஆகவே, நீங்கள் ஒரு சிலாக்கியத்தை இழந்துவிட்டால் சோர்வடைந்துவிடாதீர்கள். நீங்கள் நம்பிக்கையான மனநிலையை காத்துக்கொண்டு சுறுசுறுப்பாக செயல்பட்டால் வேறுசில சிலாக்கியங்கள் உங்களுக்கு கனிந்துவரும். கர்த்தருடைய வேலையில் செய்வதற்கு நிறைய வேலைகள் இருக்கின்றன.—1 கொரிந்தியர் 15:58, NW.
உண்மையுள்ள ஓர் ஊழியர் சோர்வடைந்துவிடுகிறார்
விசுவாசத்திற்காக கடினமாக போராடுவது சுலபமல்ல. சிலசமயங்களில், நீங்கள் சோர்வடைந்துவிடலாம். உண்மையுள்ள ஊழியர் ஒருபோதும் இப்படி சோர்வடைந்து விடக்கூடாது என முடிவுபண்ணிவிடலாம், அதனால் சோர்வடைந்ததற்காக குற்றவுணர்வும் ஏற்படலாம். இஸ்ரவேலின் முக்கிய தீர்க்கதரிசிகளில் ஒருவராகிய எலியாவை சிந்தித்துப் பாருங்கள்.
பாகால் வணக்கத்தை வெறியோடு பரப்பிக்கொண்டிருந்த இஸ்ரவேலின் ராணியாகிய யேசபேல், பாகாலின் தீர்க்கதரிசிகள் எலியாவினால் கொலை செய்யப்பட்டதை கேள்விப்பட்டு, அவரை தீர்த்துக்கட்ட சபதம் பூண்டாள். யேசபேலைக் காட்டிலும் பயங்கர விரோதிகளை எலியா எதிர்ப்பட்டார். ஆனால் திடீரென்று, மிகவும் சோர்ந்துவிட்டதால் சாக விரும்பினார். (1 இராஜாக்கள் 19:1-4) அது எப்படி ஏற்பட்டிருக்கலாம்? ஒன்றை அவர் மறந்துவிட்டார்.
தன்னுடைய பலத்திற்கு மூலகாரணராகிய யெகோவாவை சார்ந்திருக்க எலியா மறந்துவிட்டார். மரித்தோரை உயிர்த்தெழுப்புவதற்கும் பாகாலின் தீர்க்கதரிசிகளை எதிர்ப்படுவதற்கும் எலியாவுக்கு வல்லமையைக் கொடுத்திருந்தவர் யார்? யெகோவாவே. யேசபேல் ராணியின் கோபக்கனலை எதிர்ப்படுவதற்கும் நிச்சயமாகவே யெகோவா அவருக்கு பலத்தை கொடுக்க முடியும்.—1 இராஜாக்கள் 17:17-24; 18:21-40; 2 கொரிந்தியர் 4:7, NW.
யெகோவா மீது வைத்திருக்கும் நம்பிக்கையில் எவருமே சில கணப்பொழுது தடுமாறக்கூடும். எலியாவைப் போல, ஒரு பிரச்சினையை தீர்ப்பதற்கு ‘பரத்திலிருந்து வரும் ஞானத்தைப்’ பயன்படுத்துவதற்குப் பதிலாக, நீங்கள் சிலசமயங்களில் மனித கண்ணோட்டத்தில் பார்க்கலாம். (யாக்கோபு 3:17) ஆனால், தற்காலிகமாக நிலை தடுமாறியதற்காக எலியாவை யெகோவா கைவிட்டுவிடவில்லை.
எலியா முதலில் பெயர்செபாவுக்கும், பின்பு ஒருவரும் தன்னை கண்டுபிடிக்க முடியாத வனாந்தரத்திற்கும் ஓடிப்போனார். ஆனால் யெகோவா அவரை கண்டுகொண்டார். அவரை ஆறுதல்படுத்த ஒரு தூதரை அனுப்பினார். சாப்பிடுவதற்கு அப்பமும் குடிப்பதற்கு தண்ணீரும் எலியாவுக்கு அந்தத் தூதர் கிடைக்கச் செய்தார். எலியா ஓய்வெடுத்த பிற்பாடு, சுமார் 300 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஓரேப் மலைக்கு செல்லும்படி அந்தத் தூதர் அவருக்கு வழிகாட்டினார்; அங்கே யெகோவாவால் இன்னும் பலப்படுத்தப்படவிருந்தார்.—1 இராஜாக்கள் 19:5-8.
ஓரேப் மலையில், விசுவாசத்தைப் பலப்படுத்தும் யெகோவாவினுடைய வல்லமையின் வெளிக்காட்டை எலியா கண்ணார கண்டார். அவர் தனிமையில் வாடவேண்டியதில்லை என அமர்ந்த மெல்லிய சத்தத்தில் யெகோவா அவருக்கு சொன்னார். எலியாவுடன் யெகோவா இருந்தார், அதோடு அவருடைய சகோதரர்களில் 7,000 பேரும் அவருடன் இருந்தனர், ஆனால் எலியாவுக்கு இது தெரியாது. கடைசியாக, அவர் செய்ய வேண்டிய வேலையை யெகோவா அவருக்கு நியமித்தார். தீர்க்கதரிசி என்ற சேவையிலிருந்து எலியாவை அவர் தள்ளிவிடவில்லை!—1 இராஜாக்கள் 19:11-18.
உதவி உள்ளது
சோர்வூட்டும் சின்ன சின்ன பிரச்சினைகள் எப்பொழுதாவது உங்களை வாட்டினால், நீங்கள் கூடுதலாக ஓய்வையோ ஊட்டச்சத்துமிக்க உணவையோ எடுத்துக்கொள்வது உங்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கலாம். பிரச்சினைகள் எவ்வளவு பெரியவையாக இருந்தாலும் இரவில் நல்ல உறக்கத்திற்குப் பின்பு சிறியவையாகவே தோன்றுகின்றன என்று 1977-ல் இறக்கும் வரை யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவின் அங்கத்தினராக சேவை செய்த நேதன் எச். நார் ஒருமுறை சொன்னார். ஆனால், அப்படிப்பட்ட பிரச்சினைகள் உடும்புப்பிடியாக உங்களை பிடித்திருந்தால், இந்தப் பரிகாரம் போதாது—கவலையை எதிர்த்துப் போராட உங்களுக்கு உதவி தேவை.
எலியாவை பலப்படுத்த யெகோவா ஒரு தூதனை அனுப்பினார். இன்று, மூப்பர்கள் மற்றும் முதிர்ச்சிவாய்ந்த மற்ற கிறிஸ்தவர்களின் மூலம் கடவுள் உற்சாகமளிக்கிறார். உண்மையிலேயே மூப்பர்கள் “காற்றுக்கு ஒதுக்காக” இருக்க முடியும். (ஏசாயா 32:1, 2) ஆனால் அவர்களிடமிருந்து உதவியைப் பெறுவதற்கு, நீங்கள் முதல்படி எடுக்க வேண்டும். எலியா உற்சாகமிழந்து இருந்தபோது, யெகோவாவிடமிருந்து போதனையைப் பெறுவதற்கு ஓரேப் மலைக்கு பயணம் செய்தார். நாம் கிறிஸ்தவ சபையின் வாயிலாக பலப்படுத்தும் போதனைகளை பெறுகிறோம்.
மனம் புண்படுவது, சிலாக்கியங்கள் எவற்றையாவது இழப்பது போன்ற சோதனைகள் நமக்கு நேரிட்டால், உதவியை நாடி சோதனைகளை தைரியமாய் எதிர்ப்படும்போது, ஒரு முக்கிய விவாதத்தில் நாம் யெகோவாவின் பக்கத்தை ஆதரிக்கிறோம். என்ன விவாதத்தில்? மனிதர்கள் சுய இலாபத்திற்காகவே யெகோவாவுக்கு சேவை செய்கிறார்கள் என சாத்தான் வாதாடினான். நம்முடைய வாழ்க்கையில் எல்லாம் நல்லபடியாக நடக்கும்போது நாம் கடவுளை சேவிப்போம் என்பதை சாத்தான் மறுக்கவில்லை, ஆனால் நாம் பிரச்சினைக்குள் சிக்கும்போது கடவுளை சேவிப்பதை நிறுத்திவிடுவோம் என வாதிடுகிறான். (யோபு, 1, 2 அதிகாரங்கள்) சோர்வுண்டாக்கும் சூழ்நிலைகளின் மத்தியிலும் நிலைதடுமாறாமல் நாம் யெகோவாவின் சேவையை செய்வதன் மூலம், பிசாசினுடைய பழிதூற்றும் குற்றச்சாட்டுக்கு தகுந்த பதிலடி கொடுக்க முடியும்.—நீதிமொழிகள் 27:11.
அன்னாள், மாற்கு, எலியா ஆகிய அனைவருக்கும் பிரச்சினைகள் இருந்தன, அவை அவர்களுடைய சந்தோஷத்தை தற்காலிகமாக பறித்துக்கொண்டன. ஆனால், அவர்கள் தங்களுடைய பிரச்சினைகளை சமாளித்தார்கள், பலன்தரும் வாழ்க்கையை நடத்தினார்கள். யெகோவாவின் உதவியோடு, நீங்களும் சோர்வை சமாளிக்க முடியும்!