இயேசுவின் உயிர்த்தெழுதல் குற்றவாளிக் கூண்டில்
“இயேசு இந்த பூமியில் வாழ்ந்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என நம்மால் அடித்துக் கூற முடியும் . . . , ஆனால் அவர் இறந்த பிறகு கடவுள் அவரை உயிர்த் தெழுப்பினார் என அதே உறுதியோடு சொல்ல முடியாது.” சர்ச் ஆஃப் இங்லண்டின் பிரதான மதகுருவான கான்டர்பரியின் தலைமை பிஷப் இவ்வாறு கூறினார்.
ஆனால் கிறிஸ்தவ அப்போஸ்தலனாகிய பவுலுக்கு உயிர்த்தெழுதலைப் பற்றி எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. எனவே, பூர்வ கொரிந்துவிலிருந்த உடன் கிறிஸ்தவர்களுக்கு எழுதிய தன் முதலாம் நிருபத்தின் 15-ம் அதிகாரத்தில் பின்வருமாறு எழுதினார்: “நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்[தார்].”—1 கொரிந்தியர் 15:3, 4.
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்பதை அவருடைய சீஷர்கள் உறுதியாக விசுவாசித்தனர்; அதனால்தான் கிரேக்க-ரோம பகுதிகள் முழுவதிலும் இந்த நற்செய்தியை பிரசங்கித்தனர். உண்மையில், “வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும்” அதைப் பிரசங்கித்தனர். (கொலோசெயர் 1:23) உண்மை என்னவென்றால், கிறிஸ்தவர்களுடைய விசுவாசத்தின் அடித்தளமே இயேசுவின் உயிர்த்தெழுதல்தான்.
ஆனால், ஆரம்பத்திலிருந்தே இயேசுவின் உயிர்த்தெழுதலைப் பலர் சந்தேகித்தனர். முதலாவதாக, கழுமரத்தில் அறையப்பட்ட இவர்தான் மேசியா என அவருடைய சீஷர்கள் கூறியது தேவதூஷணம் என்று யூதர்கள் நினைத்தனர். இரண்டாவதாக, கல்வி பயின்ற அநேக கிரேக்கர்களுக்கு உயிர்த்தெழுதல் என்ற கருத்தே ஒத்துக்கொள்ள முடியாததாக இருந்தது. ஏனென்றால் அழியாத ஆத்துமாவில் அவர்கள் நம்பிக்கை வைத்திருந்தனர்.—அப்போஸ்தலர் 17:32-34.
இன்றைய சந்தேகவாதிகள்
சமீப ஆண்டுகளில் கிறிஸ்தவர்கள் என உரிமைபாராட்டிக் கொள்ளும் அநேக வல்லுனர்கள், இயேசுவின் உயிர்த்தெழுதல் கற்பனையில் உருவான வெறும் கதையே என்ற கருத்தைப் பரப்பும் பல கட்டுரைகளையும் புத்தகங்களையும் வெளியிட்டுள்ளனர். இதன் விளைவாக கடும் சர்ச்சை கிளம்பியுள்ளது. ‘சரித்திரப்பூர்வ இயேசுவை’ தேட முயலும் இவர்கள், இயேசுவின் கல்லறை காலியாக இருந்ததைப் பற்றியும் உயிர்த்தெழுந்த பிறகு அநேகர் அவரை பார்த்ததைப் பற்றியும் கூறும் சுவிசேஷ பதிவுகள் வெறும் கட்டுக்கதைகளே என அடித்துக் கூறுகின்றனர். இவை எல்லாம் அவர் மரித்து வெகு காலத்திற்கு பின்னர், அவருக்கு தெய்வீக வல்லமை இருந்ததென சாதிப்பதற்காகவே ஜோடிக்கப்பட்டவை என்றும் கூறுகின்றனர்.
உதாரணமாக, புதிய ஏற்பாட்டு பேராசிரியரும் இயேசுவுக்கு உண்மையில் என்ன நடந்தது—உயிர்த்தெழுதல் பற்றிய சரித்திரப்பூர்வ கண்ணோட்டம் என்ற ஆங்கில புத்தகத்தின் ஆசிரியருமான ஜெர்மானிய வல்லுனர் கெர்ட் லூட்மென் என்பவரின் கருத்துக்களை கவனியுங்கள். இயேசுவின் உயிர்த்தெழுதல் “ஆதாரமற்ற கூற்று” என்றும் “உலகத்தைப் பற்றிய விஞ்ஞானப்பூர்வ கண்ணோட்டம்” உள்ள எவரும் அதை நிச்சயம் ஒதுக்கித்தள்ள வேண்டும் என்றும் அவர் வாதாடுகிறார்.
அதுமட்டுமா, உயிர்த்தெழுப்பப்பட்ட கிறிஸ்துவை அப்போஸ்தலன் பேதுரு பார்த்ததும் நம்பியதும், அவரை மறுதலித்ததால் ஏற்பட்ட தாங்க முடியாத துக்கத்தாலும் குற்றவுணர்வாலும் தோன்றிய வெறும் மனக்காட்சியே என்று பேராசிரியர் லூட்மென் கூறுகிறார். அதோடு, இயேசு ஒருமுறை 500-க்கும் அதிகமான சீஷர்களுக்கு தோன்றியது ‘கும்பலாக பரவசமடைந்ததன்’ விளைவே என்றும் லூட்மென் சாதிக்கிறார். (1 கொரிந்தியர் 15:5, 6) சுருங்கச்சொன்னால், உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுவைப் பற்றிய பைபிள் விவரங்கள் அனைத்தும், அவருடைய சீஷர்களிடம் ஆன்மீக தன்னம்பிக்கையும் மிஷனரி வைராக்கியமும் மீண்டும் துளிர்விட உதவிய உணர்ச்சிப்பூர்வ அனுபவங்களே என அநேக வல்லுனர்கள் கூறுகின்றனர்.
ஆனால், கல்விமான்களின் சர்ச்சைகளை அநேகர் பொருட்படுத்துவதே இல்லை என்பதுதான் உண்மை. என்றாலும், இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றிய இந்த சர்ச்சை நம் அனைவருக்குமே முக்கியமானது. ஏன்? ஏனென்றால், அவர் உயிர்த்தெழுப்பப்படவில்லை என்றால் கிறிஸ்தவத்தின் அடிப்படையே பொய்யாகிவிடும். மறுபட்சத்தில் இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டது உண்மையானால் கிறிஸ்தவம் சத்தியத்தை அடிப்படையாக கொண்டதாகும். அப்படி கிறிஸ்தவம் உண்மையென்றால், கிறிஸ்துவைப் பற்றிய விவரிப்புகள் மட்டுமல்ல அவருடைய வாக்குறுதிகளும் நம்பகமானவையே. அதுமட்டுமல்ல, உயிர்த்தெழுதல் உண்மையென்றால் மரணம் என்பது வெல்ல முடியாத ஓர் எதிரியல்ல மாறாக அதன்மீது வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையும் நமக்கு பிறக்கும்.—1 கொரிந்தியர் 15:55.
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
From the Self-Pronouncing Edition of the Holy Bible, containing the King James and the Revised versions