தேறினவர்களாயும் முழு நிச்சயமுள்ளவர்களாயும் நிலைத்திருங்கள்
தைரியத்துடன் உத்தமத்தைக் காத்தவர்களுக்கு நாஸி துன்புறுத்தலில் வெற்றி
“என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவுகொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து.” (நீதிமொழிகள் 27:11) இந்த அன்பான வேண்டுகோள், யெகோவாவிடம் உண்மையாகவும் உத்தமமாகவும் இருப்பதால் அவர் படைத்த மனிதர்கள் அவருடைய இருதயத்தை சந்தோஷப்படுத்த முடியும் என்பதை தெரியப்படுத்துகிறது. (செப்பனியா 3:17) ஆனாலும், நிந்திக்கிறவனாகிய சாத்தான், யெகோவாவை சேவிக்கிறவர்களின் உத்தமத்தை முறிப்பதற்குத் தீர்மானத்துடன் இருக்கிறான்.—யோபு 1:10, 11.
குறிப்பாக, 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சாத்தான் பரலோகத்திலிருந்து பூமியின் அருகாமையில் தள்ளப்பட்டதிலிருந்து, யெகோவாவின் மக்களிடம் மிகுந்த கோபத்தை வெளிக்காட்டி வருகிறான். (வெளிப்படுத்துதல் 12:10, 12) இருந்தாலும், உண்மை கிறிஸ்தவர்கள் “தேறினவர்களாயும் முழுநிச்சயமுள்ளவர்களாயும்” நிலைத்திருந்து, கடவுளிடம் தங்கள் உத்தமத்தைக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். (கொலோசெயர் 4:12, தி.மொ.) அவ்வாறு உத்தமத்தைக் காத்துக்கொண்டதில் குறிப்பிடத்தக்க ஒரு உதாரணத்தை சுருக்கமாக கவனிக்கலாம். இரண்டாம் உலகப் போருக்கு முன்னும் அந்த போரின்போதும் ஜெர்மனியிலிருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய உதாரணமே அது.
வைராக்கியமான நடவடிக்கைகளால் உத்தமத்திற்கு வந்த பரீட்சை
1920-களிலும் 1930-களின் ஆரம்பத்திலும், ஜெர்மனியில் அப்போது பீபல்ஃபார்ஷர் என்றறியப்பட்ட யெகோவாவின் சாட்சிகள், ஏராளமான பைபிள் பிரசுரங்களை விநியோகித்து வந்தனர். 1919-க்கும் 1933-க்கும் இடைப்பட்ட காலத்தில், ஜெர்மனியிலுள்ள ஒவ்வொரு குடும்பத்திடமும் சராசரியாக எட்டு புத்தகங்களையோ சிறு புத்தகங்களையோ பத்திரிகைகளையோ அளித்திருந்தனர்.
அப்போது, கிறிஸ்துவைப் பின்பற்றிய அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் அதிகம் பேர் இருந்த ஒரு நாடு ஜெர்மனி. சொல்லப்போனால், 1933-ல் உலகம் முழுவதிலும் கர்த்தருடைய இராப்போஜனத்தில் பங்கெடுத்த 83,941 பேரில் கிட்டத்தட்ட 30 சதவீதத்தினர் ஜெர்மனியில் இருந்தனர். விரைவில், ஜெர்மனியிலிருந்த இந்த சாட்சிகள் உத்தமத்தைக் காக்க கடும் பரீட்சைகளை அனுபவித்தனர். (வெளிப்படுத்துதல் 12:17; 14:12) வேலை நீக்கம் செய்யப்படுதல், வீடுகளில் திடீர் சோதனைகள், பள்ளிகளிலிருந்து நீக்கப்படுதல் ஆகியவற்றில் தொடங்கி அடித்தல், கைது செய்தல், காவலில் வைத்தல் என துன்பங்கள் அதிகரித்தன. (படம் 1) அதன் விளைவாக, இரண்டாம் உலகப் போருக்கு வழிநடத்திய வருடங்களில், சித்திரவதை முகாம்களில் வைக்கப்பட்டிருந்தவர்களில் 5-லிருந்து 10 சதவீதத்தினர் யெகோவாவின் சாட்சிகள்.
நாஸிகள் சாட்சிகளை ஏன் துன்புறுத்தினர்
யெகோவாவின் சாட்சிகள் நாஸி ஆட்சியின் கோபத்தை கிளறியது ஏன்? “நாஸி ஆட்சி வற்புறுத்திக் கேட்ட எவற்றுக்குமே ஒத்திணங்கிப் போக” மறுத்ததன் காரணமாகவே சாட்சிகள் துன்புறுத்தலுக்கு ஆளானதாக ஹிட்லர்—1889-1936: அகம்பாவம் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில் வரலாற்று பேராசிரியர் ஈயன் கெர்ஷா குறிப்பிடுகிறார்.
யெகோவாவின் சாட்சிகள் “வன்முறையிலோ இராணுவத்திலோ ஈடுபட மறுத்துவிட்டார்கள் . . . சாட்சிகள், அரசியலில் நடுநிலை வகிப்பவர்கள், அதாவது ஹிட்லருக்கு ஓட்டு போடவும் மாட்டார்கள், ஹிட்லருக்கு வணக்கத்தை கொடுக்கவும் மாட்டார்கள்” என்று நம்பிக்கை துரோகம்—ஜெர்மன் சர்ச்சுகளும் படுகொலையும் என்ற ஆங்கில புத்தகத்தை பதிப்பித்த வரலாற்று பேராசிரியர் ராபர்ட் பி. எரிக்ஸனும் யூதர்களைப் பற்றிய ஆராய்ச்சியின் பேராசிரியர் சூஸனா ஹெஷலும் விளக்கினர். இது நாஸிகளின் கோபத்தை தூண்டிவிட்டு சாட்சிகளை துன்புறுத்துதலுக்கு ஆளாக்கியது; ஏனென்றால், “தேசிய சோஷியலிஸம் அப்படிப்பட்ட மறுப்பைப் பொறுத்துக் கொள்ளாது” என்பதாக அந்தப் புத்தகம் மேலும் குறிப்பிட்டது.
உலகளாவிய கண்டனமும் தீவிர தாக்குதலும்
அப்போது சாட்சிகளின் வேலையில் முன்னணி வகித்த ஜோஸஃப் எஃப் ரதர்ஃபோர்ட், நாஸிகளின் சகிப்புத்தன்மையற்ற போக்கை கண்டிக்கும் கடிதம் ஒன்றை 1934, பிப்ரவரி 9 அன்று விசேஷ தூதுவர் மூலமாக ஹிட்லருக்கு அனுப்பினார். (படம் 2) ரதர்ஃபோர்ட் கடிதம் அனுப்பிய பின், 1934, அக்டோபர் 7 அன்று, ஜெர்மனி உள்ளிட்ட 50 நாடுகளிலுள்ள யெகோவாவின் சாட்சிகள், சுமார் 20,000 கண்டன கடிதங்களையும் தந்திகளையும் ஹிட்லருக்கு அனுப்பினர்.
அதற்கு பதிலளிக்கும் விதத்தில் நாஸிகள் துன்புறுத்தலை தீவிரப்படுத்தினர். 1935, ஏப்ரல் 1-ம் தேதி, தேசமெங்கும் சாட்சிகளுக்கு தடைவிதிக்கப்பட்டது. 1936-ல் ஆகஸ்ட் 28 அன்று, கெஸ்டாப்போ எனப்பட்ட இரகசிய போலீஸார் அவர்களுக்கு விரோதமாக தீவிர தாக்குதல் நடத்தினர். இந்த சமயத்தில்கூட, சாட்சிகள் “தொடர்ந்து துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தும், மற்ற வழிகளில் தங்கள் விசுவாசத்தை காத்தும் வந்தனர்” என நம்பிக்கை துரோகம்—ஜெர்மன் சர்ச்சுகளும் படுகொலையும் என்ற புத்தகம் குறிப்பிட்டது.
எடுத்துக்காட்டாக, கெஸ்டாப்போ போலீசார் என்ன செய்வார்கள் என்று தெரிந்தும், சாட்சிகள் மோசமாக நடத்தப்பட்டதற்கு எதிரான தீர்மானமொன்றை அச்சடித்து, 1936, டிசம்பர் 12-ம் தேதி பத்தாயிரக்கணக்கான பிரதிகளை சுமார் 3,500 சாட்சிகள் விநியோகித்தனர். இவ்விநியோகத்தைப் பற்றி ஆங்கில காவற்கோபுரம் இவ்வாறு அறிக்கை செய்தது: “இது உண்மையுள்ள ஊழியர்களுக்கு சொல்ல முடியாத சந்தோஷத்தைக் கொடுக்கும் வகையில் மாபெரும் வெற்றியாகவும் எதிரிகளுக்கு பேரடியாகவும் இருந்தது.”—ரோமர் 9:17.
துன்புறுத்தலுக்கு தோல்வி!
நாஸிகள் இன்னும் யெகோவாவின் சாட்சிகளை தேடிவந்தனர். 1939-ற்குள், அவர்களில் ஆறாயிரம் பேர் சிறையில் வைக்கப்பட்டிருந்தனர்; ஆயிரக்கணக்கானோர் சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டிருந்தனர். (படம் 3) இரண்டாம் உலகப் போரின் முடிவில் நிலைமை என்னவாக இருந்தது? சுமார் 2,000 சாட்சிகள் இறந்திருந்தனர்; அதில் 250-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருந்தனர். என்றபோதிலும், “யெகோவாவின் சாட்சிகள் துன்பத்தை எதிர்ப்பட்டபோது பெரும்பாலும் தங்கள் விசுவாசத்தைக் காத்துக்கொண்டனர்” என்பதாக பேராசிரியர்கள் எரிக்ஸனும் ஹெஷலும் எழுதினார்கள். ஹிட்லரின் ஆட்சி வீழ்ச்சி அடைந்தபோது, ஆயிரத்துக்கும் அதிகமான சாட்சிகள் அந்த முகாம்களிலிருந்து வெற்றிகரமாக வெளியேறினர்.—படம் 4; அப்போஸ்தலர் 5:38, 39; ரோமர் 8:35-37.
துன்புறுத்தலை சகிக்க யெகோவாவின் மக்களுக்கு பெலன் எங்கிருந்து கிடைத்தது? சித்திரவதை முகாமிலிருந்து தப்பிப்பிழைத்த அடால்ஃப் ஆர்நால்ட் இவ்வாறு விளக்கினார்: “நீங்கள் மிகவும் சோர்ந்த நிலையில் இருந்தால்கூட, யெகோவா உங்களைப் பார்க்கிறார், என்னென்ன கஷ்டங்களையெல்லாம் நீங்கள் சகிக்கிறீர்கள் என்று அவருக்குத் தெரியும். அந்த நிலைமையை சமாளித்து உண்மையாய் நிலைத்திருப்பதற்கு தேவையான பலத்தை அவர் தருவார். யெகோவாவின் கை அவ்வளவு குறுகினதாக இல்லை.”
உண்மையுள்ள அந்த கிறிஸ்தவர்களுக்கு செப்பனியா தீர்க்கதரிசியின் வார்த்தைகள் எவ்வளவு பொருத்தமாக இருக்கின்றன! அவர் இவ்வாறு அறிவித்தார்: ‘உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்; அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்வார்.’ (செப்பனியா 3:17) இன்று உண்மை கடவுளை வணங்கும் அனைவரும், நாஸி துன்புறுத்தலில் உத்தமத்தைக் காத்துக்கொண்ட அந்த உண்மையுள்ள சாட்சிகளின் விசுவாசத்தை பின்பற்றி, அவர்களைப் போலவே யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்துவார்களாக.—பிலிப்பியர் 1:12-14.
[பக்கம் 8-ன் படத்திற்கான நன்றி]
Państwowe Muzeum Oświȩcim-Brzezinka, courtesy of the USHMM Photo Archives