எதிர்மறையான உணர்ச்சிகளை சமாளிப்பது எப்படி
● “நான் குற்றமின்றி என் உள்ளத்தை காத்தது வீண்தானோ? மாசின்றி என் கைகளைக் கழுவியது பயனற்றதோ? ஏனெனில் எந்நாளும் நான் வேதனையுறுகிறேன்; நாடோறும் துன்பத்திற்குள்ளாகிறேன்” என்று குமுறினார் ஆசாப்.—சங்கீதங்கள் 72:13, 14, தமிழ் கத்தோலிக்க பைபிள்.
● “எனக்கு ஐயோ கேடு! ஏனெனில், ஆண்டவர் எனக்குத் துன்பத்திற்குமேல் துன்பத்தை அனுப்பியுள்ளார்; நான் கடுந்துயரில் ஆழ்ந்து தளர்வுற்றுப் போனேன். எனக்கு நிம்மதியே கிடையாது” என முனகினார் பாரூக்.—எரேமியா 45:3, பொ.மொ.
● “சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார். நான் நிறைவுள்ளவளாய்ப் போனேன்; கர்த்தர் என்னை வெறுமையாய்த் திரும்பி வரப்பண்ணினார்; கர்த்தர் என்னைச் சிறுமைப்படுத்தி, சர்வவல்லவர் என்னைக் கிலேசப்படுத்தியிருக்கையில், நீங்கள் என்னை நகோமி என்பானேன்” என புலம்பினாள் நகோமி.—ரூத் 1:20, 21.
யெகோவாவை வணங்கும் உண்மையுள்ள ஆட்களையும் சில சமயங்களில் மனச்சோர்வு ஆட்கொள்ளலாம். இவர்களைப் பற்றிய எண்ணிலடங்கா உதாரணங்கள் பைபிளில் உள்ளன. அபூரண மானிடராகிய நம் அனைவரையுமே இப்படிப்பட்ட உணர்ச்சிகள் அவ்வப்போது அலைக்கழிக்கின்றன. வாழ்க்கையில் எதிர்ப்பட்ட சோகமான அனுபவங்களால் நம்மில் சிலர் மற்றவர்களைவிட எளிதில் உற்சாகமிழந்துவிடலாம், ஒருவேளை நம்மீதே ஓரளவு பரிதாபப்பட்டுக் கொள்ளலாம்.
இருந்தாலும், இப்படிப்பட்ட உணர்ச்சிகள் பெருக்கெடுத்து வருகையில் அணைபோடவில்லை என்றால், பிறரிடமும் யெகோவா தேவனிடமும் நீங்கள் வைத்திருக்கும் உறவை இவை பாழக்கிவிடலாம். எதற்கெடுத்தாலும் தன்மீதே பரிதாபப்பட்டுக்கொள்ளும் இயல்புடைய ஒரு கிறிஸ்தவ பெண் இவ்வாறு ஒப்புக்கொள்கிறாள்: “என்னை யாராவது விருந்துக்கோ பொழுது போக்குவதற்கோ கூப்பிட்டா நான் மறுத்துவிடுவேன், ஏன்னா அங்கு வந்திருக்கிறவங்களோடு பழக நான் லாயக்கற்றவளா உணர்ந்தேன்.” இப்படிப்பட்ட உணர்ச்சிகள் ஒருவருடைய வாழ்க்கையை சின்னாபின்னமாக்கிவிடலாம்! இவற்றை முறியடிக்க நீங்கள் என்ன செய்யலாம்?
யெகோவாவிடம் அண்டி வாருங்கள்
சங்கீதம் 73-ல் ஆசாப் தனக்கு ஏற்பட்ட குழப்பத்தை ஒளிவுமறைவின்றி எழுதினார். துன்மார்க்கன் தன்னைவிட சுகபோகமாக வாழ்வதைக் கண்டு பொறாமை கொண்டார். மனமேட்டிமையும் மூர்க்கத்தனமும் நிறைந்த தெய்வ பக்தியற்றவர்கள் தண்டனையினின்று தப்பிவிடுவதை கவனித்தார். ஆகவே, நேர்மையாக வாழ்ந்துதான் என்ன பயன் என்ற சந்தேக கீற்றுகள் அவருடைய மனதில் மின்னலாக வெட்டின.—சங்கீதம் 73:3-9, 13, 14.
தங்களுடைய தப்பிதங்களைக் குறித்து தம்பட்டம் அடிப்பவர்கள் செழித்து வாழ்வதை ஆசாபைப் போல நீங்களும் கவனித்திருக்கிறீர்களா? தன்னுடைய எதிர்மறையான உணர்ச்சிகளை ஆசாப் எப்படி மேற்கொண்டார்? அவர் தொடர்ந்து சொல்கிறார்: “இதை அறியும்படிக்கு யோசித்துப் பார்த்தேன்; நான் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து, அவர்கள் முடிவைக் கவனித்து உணருமளவும், அது என் பார்வைக்கு விசனமாயிருந்தது.” (சங்கீதம் 73:16, 17) ஆசாப் தகுந்த நடவடிக்கைகள் எடுத்தார், முதற்படியாக யெகோவாவிடம் ஜெபம் செய்தார். அப்போஸ்தலன் பவுல் பிற்பாடு எழுதிய நடையில் சொன்னால், ஆசாப் தன்னுள் இருக்கும் “ஆவிக்குரிய மனிதனை” எழுப்பி, “சரீரப்பிரகாரமான மனிதனை” கீழடக்கினார். அவர் ஆவிக்குரிய விதத்தில் புதிய கண்ணோட்டம் பெற்று, யெகோவா உண்மையில் பொல்லாங்கை வெறுத்தார் என்பதையும், தக்க தருணத்தில் பொல்லாதவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பதையும் புரிந்துகொண்டார்.—1 கொரிந்தியர் 2:14, 15, NW.
வாழ்க்கையின் யதார்த்தத்தைப் புரிந்துகொள்வதற்கு நீங்கள் பைபிளின் உதவியை நாடுவது எவ்வளவு முக்கியம்! தாம் பொல்லாதவர்களின் செயலை காணாமல் கண்மூடிக்கொள்பவர் அல்ல என யெகோவா நமக்கு நினைப்பூட்டுகிறார். பைபிள் இவ்வாறு கற்பிக்கிறது: “மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். . . . நன்மை செய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக.” (கலாத்தியர் 6:7-9) யெகோவா துன்மார்க்கரை “சறுக்கலான இடங்களில்” வைத்து, அவர்களை “விழத்தட்டி அழிவுக்கு உள்ளாக்கு[வார்].” (சங்கீதம் [திருப்பாடல்கள்] 73:18, பொ.மொ.) முடிவில் தெய்வீக நீதியே எப்போதும் வெற்றிபெறும்.
யெகோவாவின் மேசையிலிருந்து தொடர்ந்து கிடைக்கும் ஆவிக்குரிய உணவும் கடவுளுடைய ஜனங்களுடன் வைத்திருக்கும் ஆரோக்கியமான கூட்டுறவும் உங்கள் விசுவாசத்தை பலப்படுத்தவும் சோர்வை அல்லது மற்ற எதிர்மறையான உணர்ச்சிகளை சமாளிக்கவும் உதவும். (எபிரெயர் 10:25) ஆசாபைப் போல் கடவுளிடம் அண்டியிருப்பதன் மூலம் நீங்களும் அவருடைய அன்பான ஆதரவை அனுபவிக்கலாம். ஆசாப் தொடர்ந்து சொல்கிறார்: “நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்; என் வலது கையைப் பிடித்துத் தாங்குகிறீர். உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.” (சங்கீதம் 73:23, 24) குழந்தையாக இருக்கையில் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட ஒரு கிறிஸ்தவ பெண் இந்த வார்த்தைகளில் பொதிந்துள்ள ஞானத்தைக் கற்றுக்கொண்டாள். “சபையோடு நெருங்கிய கூட்டுறவை வைத்திருந்ததால், வாழ்க்கையின் மறுபக்கத்தை நான் காண முடிந்தது. கிறிஸ்தவ மூப்பர்கள் அன்புள்ளவர்கள், அவர்கள் போலீஸ்காரர் அல்ல, மேய்ப்பர்கள் என்பதை நான் தெளிவாக கண்டு கொண்டேன்.” ஆம், தீங்கிழைக்கும் உணர்ச்சிகளை விரட்டுவதில் பரிவிரக்கமுள்ள கிறிஸ்தவ மூப்பர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.—ஏசாயா 32:1, 2; 1 தெசலோனிக்கேயர் 2:7, 8.
யெகோவாவின் அறிவுரையை ஏற்றுக்கொள்ளுங்கள்
எரேமியா தீர்க்கதரிசியின் செயலர் பாரூக், தன்னுடைய வேலையின் நிமித்தம் ஏற்பட்ட உணர்ச்சிப்பூர்வ அழுத்தத்தால் பெருமூச்சு விட்டார். இருந்தாலும், யெகோவா தயவோடு எதார்த்தத்தின் மீது பாரூக்கின் கவனத்தை ஒருமுகப்படுத்தினார். “நீ மகத்தானவற்றை உனக்கெனத் தேடுகிறாயா? அவ்வாறு தேடாதே; ஏனெனில் எல்லா மனிதர்க்கும் நான் தண்டனை அளிக்கப்போகிறேன் என்கிறார் ஆண்டவர். ஆனால் நீ எங்குச் சென்றாலும், அங்கெல்லாம் நான் உன் உயிரைக் கொள்ளைப் பொருளாகக் கொடுப்பேன்.”—எரேமியா 45:2-5.
பாரூக்கின் தன்னல நாட்டங்களே அவர் திருப்தியை இழந்து சோர்வடைந்ததற்குக் காரணம் என யெகோவா வெளிப்படையாக கூறினார். பாரூக் தனக்கென மகத்தானவற்றை தேடிக்கொண்டே கடவுள் கொடுத்த வேலையில் சந்தோஷத்தை கண்டடைய முடியவில்லை. கவனச்சிதறல்களைத் தவிர்ப்பதும், தெய்வீக மனநிறைவால் வரும் நிம்மதியை தழுவிக்கொள்வதுமே மனச்சோர்வை வெல்ல பலன்தரும் வழி என்பதை நீங்களும்கூட காணலாம்.—பிலிப்பியர் 4:6, 7.
தன்னுடைய கணவனும் இரண்டு குமாரர்களும் இறந்தபோது, விதவை கோலத்திற்கு தள்ளப்பட்ட நகோமி வேதனையால் அப்படியே மோவாபிலேயே இருந்துவிடவில்லை. சில நாட்களுக்கு தன்னைப் பற்றியும், இரண்டு மருமக்களைப் பற்றியும் கசப்பான உணர்ச்சிகள் அவளுக்கு இருக்கத்தான் செய்தன. மருமக்களை அனுப்பிவிடுகையில் நகோமி இவ்வாறு சொன்னாள்: “கர்த்தருடைய கை எனக்கு விரோதமாயிருக்கிறதினால், உங்கள் நிமித்தம் எனக்கு மிகுந்த விசனம் இருக்கிறது.” பெத்லகேமுக்குச் சென்ற பின்பும் நகோமி மறுபடியும் இதையே சொன்னாள்: “நீங்கள் என்னை நகோமி [“என் இனிமை”] என்று சொல்லாமல், மாராள் [“கசப்பு”] என்று சொல்லுங்கள்; சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார்.”—ரூத் 1:13, 20.
இருந்தாலும், நகோமி துக்கித்துக் கொண்டு யெகோவாவிடமிருந்தும் அவருடைய ஜனங்களிடமிருந்தும் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை. மோவாபில் இருக்கையில், “ஆண்டவர் [“யெகோவா,” NW] தம் மக்களைக் கருணையுடன் கண்ணோக்கி, அவர்களுக்கு உணவு கிடைக்கும்படிச் செய்தார்” என்பதை கேள்விப்பட்டாள். (ரூத்து 1:6, பொ.மொ.) யெகோவாவின் மக்களோடு இருப்பதே மிகச் சிறந்த இடம் என அவள் உணர்ந்தாள். நகோமி தன்னுடைய மருமகளாகிய ரூத்துடன் யூதாவுக்குத் திரும்பி வந்தாள். மேலும் தங்களுடைய உறவினரும் அவளுடைய மீட்பருமான போவாஸிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் ரூத்திற்கு நகோமி திறமையுடன் சொல்லிக் கொடுத்தாள்.
அதுபோலவே இன்றும், கணவனையோ மனைவியையோ இழந்த உண்மையுள்ள ஆட்கள் கிறிஸ்தவ சபையோடு தங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வதன்மூலம் உணர்ச்சிப்பூர்வ அழுத்தங்களைச் சமாளிக்கிறார்கள். நகோமியைப் போன்றே அவர்களும் கடவுளுடைய வார்த்தையை தினமும் படித்து ஆவிக்குரிய காரியங்களில் தங்களை ஊக்கமாக ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்.
தெய்வீக ஞானத்தை பின்பற்றுவதால் வரும் நன்மைகள்
எதிர்மறையான உணர்ச்சிகளின் விளைவுகளை ஒருவர் எப்படி சமாளிக்கலாம் என்பதற்கு இந்த பைபிள் பதிவுகள் உட்பார்வையை அளிக்கின்றன. யெகோவாவின் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து ஆசாப் உதவியை நாடினார், யெகோவாவுக்காக பொறுமையோடு காத்திருந்தார். பாரூக்கோ ஆலோசனைக்கு செவிகொடுத்து, பொருளாசையால் வரும் கவனச்சிதறல்களை தவிர்த்தார். நகோமியும் மெய் தேவனை வணங்கும் சிலாக்கியங்களுக்காக இளம் ரூத்தை தயார்படுத்தி, யெகோவாவின் ஜனங்களோடு எப்போதும் தன்னை சுறுசுறுப்பாக வைத்துக் கொண்டாள்.—1 கொரிந்தியர் 4:7; கலாத்தியர் 5:26; 6:4.
யெகோவா தம்முடைய ஜனங்களுக்கு—தனிப்பட்ட விதமாகவோ தொகுதியாகவோ—தந்த தெய்வீக வெற்றிகளைப் பற்றியே எப்போதும் தியானிப்பதன் மூலம் நீங்கள் மனச்சோர்வையும் எதிர்மறையான மற்ற உணர்ச்சிகளையும் சமாளிக்கலாம். உங்களுக்காக மீட்கும் பொருளை அளிப்பதன் மூலம் யெகோவா காண்பித்த மிகப் பெரிய அன்பின் செயலை சிந்தித்துப் பாருங்கள். கிறிஸ்தவ சகோதரத்துவத்தின் உண்மையான அன்பை போற்றுங்கள். உங்கள் முன் இருக்கும் கடவுளுடைய புதிய உலகின் மீது கவனத்தை ஒருமுகப்படுத்துங்கள். ஆசாபைப் போல நீங்களும் இவ்வாறு சொல்வீர்களாக: “எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்; நான் உமது கிரியைகளையெல்லாம் சொல்லிவரும்படி கர்த்தராகிய ஆண்டவர் மேல் [“யெகோவா மேல்,” NW] என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.”—சங்கீதம் 73:28.