சந்தோஷமுள்ள கடவுளுடன் மகிழ்ச்சியாயிருங்கள்
“கடைசியாக, சகோதரரே, சந்தோஷமாயிருங்கள், . . . அப்பொழுது அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய தேவன் உங்களோடேகூட இருப்பார்.”—2 கொரிந்தியர் 13:11.
1, 2. (அ) அநேகருக்கு, மகிழ்ச்சியாய் வாழ வழி தெரியாமல் இருக்க காரணம் என்ன? (ஆ) மகிழ்ச்சி என்றால் என்ன, அதை எவ்வாறு பெறலாம்?
இருள் சூழ்ந்துள்ள இன்றைய உலகில் அநேகருக்கு மகிழ்ச்சியாய் வாழ வழி தெரியவில்லை. தங்களுக்கோ தங்கள் நேசத்திற்கும் பாசத்திற்கும் உரியவருக்கோ அவலநிலை ஏற்படுகையில் பூர்வத்தில் வாழ்ந்த யோபுவைப்போல் அவர்கள் நினைக்கலாம். “ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்” என்று அவர் சொன்னார். (யோபு 14:1) ‘கையாளுவதற்குக் கடினமான இந்தக் கொடிய காலங்களில்’ கஷ்டங்களும் கவலைகளும் கிறிஸ்தவர்களைப் பாதிக்காமல் இல்லை. இதனால் யெகோவாவின் உண்மை ஊழியர்கள் சில சமயங்களில் சோர்வடைவதில் ஆச்சரியமேதுமில்லை.—2 தீமோத்தேயு 3:1, NW.
2 இருப்பினும், துன்பத்தை அனுபவிக்கையிலும் கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சியாய் இருக்கலாம். (அப்போஸ்தலர் 5:40, 41) இது எப்படி சாத்தியம் என்பதைப் புரிந்துகொள்ள மகிழ்ச்சி என்றால் என்ன என்பதைக் கவனியுங்கள். மகிழ்ச்சி என்பது, ‘ஒருவருக்கு ஏதோ நன்மை கிடைத்துள்ளதால் அல்லது கிடைக்கவிருப்பதால் எழும் பரவச உணர்வு’ என வரையறுக்கப்படுகிறது.a எனவே, தற்போதைய ஆசீர்வாதங்களை எண்ணிப் பார்க்கையிலும், கடவுளுடைய புதிய உலகில் நமக்குக் காத்திருக்கிற சந்தோஷங்களைப் பற்றி தியானிக்கையிலும் நாம் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
3. மகிழ்ச்சியுடன் இருக்க ஏதோ சில காரணங்களாவது எல்லாருக்கும் இருக்கிறதென்று எப்படி சொல்லலாம்?
3 நன்றியுடன் இருக்க ஏதோ சில ஆசீர்வாதங்களாவது நம் எல்லாருக்கும் உண்டு. ஒரு குடும்பத் தலைவரின் வேலை பறிபோகலாம். அதற்காக அவர் கவலைப்படுவது இயல்பே. காரணம் அவர் தன் அன்பானவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய விரும்புகிறார். இருப்பினும் அவர் திடகாத்திரமாகவும் நல்ல ஆரோக்கியத்துடனும் இருந்தால் அதற்காக நன்றியுடன் இருக்கலாம். அவருக்கு வேலை கிடைக்கையில் அவரால் கடினமாக உழைக்க முடியும். மற்றொரு உதாரணத்திற்கு, ஒரு கிறிஸ்தவ சகோதரியைப் பற்றி சிந்திப்போம். பலவீனப்படுத்தும் நோய் திடீரென அவர்களை தாக்கியிருக்கலாம். எனினும், தன்னுடைய நோயை தைரியத்துடனும் மன உறுதியுடனும் சமாளிப்பதற்கு பிரியமுள்ள நண்பர்களும் குடும்பத்தினரும் அளிக்கும் ஆதரவுக்கு அவர்கள் நன்றியுடன் இருக்கலாம். மேலும், உண்மை கிறிஸ்தவர்கள் அனைவருமே, எப்படிப்பட்ட சூழ்நிலைமைகளில் இருந்தாலும், ‘நித்தியானந்த தேவனாகிய’ யெகோவாவையும், ‘நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதியாகிய’ இயேசு கிறிஸ்துவையும் அறிந்திருக்கும் பாக்கியத்திற்காக சந்தோஷப்படலாம். (1 தீமோத்தேயு 1:11; 6:15) ஆம், யெகோவா தேவனும் இயேசு கிறிஸ்துவும் நிகரற்ற சந்தோஷமுள்ளவர்கள். பூமியின் நிலைமைகள் யெகோவா ஆரம்பத்தில் எண்ணியதற்கு வெகு முற்றிலும் மாறுபட்டு உள்ளன, இருந்தாலும் அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள். மகிழ்ச்சியை நாம் எப்படி காத்துக்கொள்ளலாம் என்பதற்கு அவர்களுடைய முன்மாதிரியிலிருந்து அதிகம் கற்றுக்கொள்ளலாம்.
அவர்கள் மகிழ்ச்சியை இழக்கவே இல்லை
4, 5. (அ) முதல் மனிதர்கள் கலகம் செய்தபோது யெகோவா என்ன செய்தார்? (ஆ) எவ்வகையில் யெகோவாவிற்கு மனிதகுலத்திடம் நம்பிக்கையான மனநிலை இருந்தது?
4 ஏதேன் தோட்டத்தில், ஆதாமும் ஏவாளும் பூரண உடல் ஆரோக்கியத்தை அனுபவித்து மகிழ்ந்தார்கள்; அவர்களது மனதும் பரிபூரணமாக இருந்தது. செய்வதற்கு பலனுள்ள வேலையும் அதற்கேற்ற சிறந்த சூழ்நிலையும் இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக யெகோவாவுடன் எப்போதும் பேச்சுத்தொடர்பு கொள்ளும் மிகச் சிறந்த பாக்கியத்தை பெற்றிருந்தனர். அவர்களுக்குச் சந்தோஷமான எதிர்காலத்தை அளிப்பதே கடவுளுடைய நோக்கம். ஆனால் நம்முடைய முதல் பெற்றோர் இத்தனை அநேக பரிசுகளைப் பெற்றிருந்தும் திருப்தியாக இல்லை; தடை செய்யப்பட்ட கனியை, ‘நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்திலிருந்து’ களவாடினார்கள். அவர்களுடைய சந்ததியாராகிய நாம் இன்று மகிழ்ச்சியின்றி தவிப்பதற்குக் காரணம் அவர்களுடைய கீழ்ப்படியாமையே.—ஆதியாகமம் 2:15-17; 3:6; ரோமர் 5:12.
5 எனினும், ஆதாம் ஏவாளின் நன்றிகெட்ட குணம், தம்முடைய சந்தோஷத்தை கெடுத்துப்போட யெகோவா அனுமதிக்கவில்லை. அவர்களுடைய சந்ததியினரில் சிலராவது தம்மைச் சேவிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இருந்தார். சொல்லப்போனால் அவர் அந்தளவுக்கு நம்பிக்கையுடன் இருந்ததால், ஆதாம் ஏவாள் தங்கள் முதல் பிள்ளையைப் பெற்றெடுக்கும் முன்பே, அவர்களுடைய கீழ்ப்படிதலுள்ள எதிர்கால சந்ததியாரை மீட்கும் தம் நோக்கத்தைப் பற்றி அறிவித்தார்! (ஆதியாகமம் 1:31; 3:15) பின்னான நூற்றாண்டுகளில் மனிதகுலத்தில் பெரும்பான்மையோர், ஆதாம் ஏவாளின் அடிச்சுவடுகளிலேயே நடந்தனர். எனினும், கீழ்ப்படியாமை வெகுவாய் பரவினபோதிலும் மனித குடும்பத்தை யெகோவா கைவிடவில்லை. மாறாக, ‘தம்முடைய இருதயத்தைச் சந்தோஷப்படுத்தின’ ஆண்கள், பெண்கள்மீது, அதாவது அவர் மீதிருந்த அன்பால் அவருக்குப் பிரியமானதை செய்ய உண்மையாய் பிரயாசப்பட்டவர்கள்மீது அவர் கவனம் செலுத்தினார்.—நீதிமொழிகள் 27:11; எபிரெயர் 6:10.
6, 7. இயேசு மகிழ்ச்சியைக் காத்துக்கொள்ள உதவிய விஷயங்கள் என்ன?
6 இயேசு எவ்வாறு தம்முடைய சந்தோஷத்தைக் காத்துக்கொண்டார்? பரலோகத்தில் வல்லமைவாய்ந்த ஓர் ஆவி சிருஷ்டியாக இயேசு இருக்கையில் பூமியிலிருந்த ஆண்கள், பெண்களின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்க அவருக்கு வாய்ப்பு இருந்தது. அவர்களுடைய அபூரணங்கள் தெளிவாக தெரிந்தபோதிலும் இயேசு அவர்களை நேசித்தார். (நீதிமொழிகள் 8:31) பின்னர் அவர் பூமியில் மனிதர்களோடு ‘வாசம்பண்ணினபோதும்’ மனிதகுலத்தைப் பற்றிய அவருடைய கருத்து மாறவில்லை. (யோவான் 1:14) அத்தகைய பாவமுள்ள மனித குடும்பத்தைப் பற்றிய நம்பிக்கையான கருத்தைக் காத்துக்கொள்ள கடவுளின் பரிபூரண குமாரனுக்கு எது உதவியது?
7 முதலாவதாக, தம்மிடமும் பிறரிடமும் நியாயமான எதிர்பார்ப்புகள் இயேசுவுக்கு இருந்தது. உலகத்தையே தாம் மாற்றப் போவதில்லை என்பதை அவர் அறிந்திருந்தார். (மத்தேயு 10:32-39) எனவே ஒரேவொருவர் மட்டுமே ராஜ்ய செய்திக்கு உண்மை மனதுடன் செவிசாய்த்தாலும் அவர் மகிழ்ச்சியடைந்தார். சில சமயங்களில், தம்முடைய சீஷர்களின் சிந்தையும் செயலும் திருப்தியளிக்காதபோதிலும், கடவுளுடைய சித்தத்தைச் செய்யவே அவர்கள் மனமார விரும்பியதை இயேசு அறிந்திருந்தார். எனவே அவர்களை நேசித்தார். (லூக்கா 9:46; 22:24, 28-32, 60-62) இயேசு தம்முடைய பரலோக தகப்பனிடம் ஜெபிக்கையில், அந்த சமயம் வரை தம்முடைய சீஷர்கள் நல்ல விதத்தில் நடந்துகொண்டதை சுருக்கமாக இவ்வாறு குறிப்பிட்டது கவனிக்கத்தக்கது: “அவர்கள் உம்முடைய வசனத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள்.”—யோவான் 17:6.
8. மகிழ்ச்சியைக் காத்துக்கொள்வதில் யெகோவாவையும் இயேசுவையும் பின்பற்றுவதற்கு இருக்கும் சில வழிகளைக் குறிப்பிடுங்கள்.
8 இந்த விஷயத்தில் யெகோவா தேவனும் கிறிஸ்து இயேசுவும் வைத்த முன்மாதிரியை கவனமாக சிந்திக்கையில் நாமெல்லாரும் பயனடைவோம். ஒருவேளை நாம் எதிர்பார்த்தவாறு காரியங்கள் நடக்காமலிருக்கையில் ஒரேயடியாக கவலையில் மூழ்கிவிடாதிருப்பதன் மூலம் யெகோவாவின் முன்மாதிரியை இன்னும் முழுமையாகப் பின்பற்ற முடியுமா? நம்முடைய தற்போதைய சூழ்நிலைமையில் நம்பிக்கையான மனநிலையைக் காத்துவருவதன் மூலமும், அதோடுகூட நம்மிடமும் மற்றவர்களிடமும் நாம் எதிர்பார்க்கும் காரியங்களில் நியாயமாய் இருப்பதன் மூலமும், இயேசுவின் அடிச்சுவடுகளை அதிக நெருக்கமாக பின்பற்ற முடியுமா? எங்குமுள்ள ஆர்வமிக்க கிறிஸ்தவர்கள் அருமையானதாக கருதும் வெளி ஊழியத்தில், இந்த நியமங்களில் சிலவற்றை எவ்வாறு நடைமுறையில் பின்பற்றலாம் என்பதை காணலாம்.
ஊழியத்தில் நம்பிக்கையான மனநிலையைக் காத்துக்கொள்ளுங்கள்
9. எரேமியாவின் மகிழ்ச்சி எப்படி புதுப்பிக்கப்பட்டது, அவருடைய முன்மாதிரி நமக்கு எவ்வாறு உதவலாம்?
9 தம்முடைய சேவையில் நாம் மகிழ்ச்சியைக் கண்டடையவே யெகோவா விரும்புகிறார். நம் மகிழ்ச்சி நமக்குக் கிடைக்கும் பலன்களின்மீது சார்ந்திருக்கக் கூடாது. (லூக்கா 10:17, 20) தீர்க்கதரிசியாகிய எரேமியா பலனற்ற ஒரு பிராந்தியத்தில் பல ஆண்டுகள் பிரசங்கித்தார். அந்த ஜனங்களின் நம்பிக்கையற்ற போக்கையே பெரிதுபடுத்த ஆரம்பித்தபோது தன் மகிழ்ச்சியை இழந்தார். (எரேமியா 20:8) ஆனால் அந்த செய்தி எந்த விதத்தில் நற்செய்தி என்பதைக் குறித்து அவர் தியானித்தபோது அவருடைய மகிழ்ச்சியை மீண்டும் புதுப்பித்துக்கொண்டார். யெகோவாவிடம் எரேமியா இவ்வாறு சொன்னார்: “உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது; சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, [“யெகோவாவே,” தி.மொ.] உம்முடைய நாமம் எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது.” (எரேமியா 15:16) ஆம், கடவுளுடைய வார்த்தையைப் பிரசங்கிக்க தனக்குக் கிடைத்த சிலாக்கியத்தை நினைத்து எரேமியா மகிழ்ச்சியடைந்தார். நாமுங்கூட அவ்வாறு மகிழ்ச்சியடையலாம்.
10. தற்போது நம் பிராந்தியம் பலன் தராவிட்டாலும், ஊழியத்தில் நம்முடைய மகிழ்ச்சியை எவ்வாறு காத்துக்கொள்ளலாம்?
10 நற்செய்தியை பலர் காதுகொடுத்து கேட்காவிட்டாலும் நாம் தாராளமாய் வெளி ஊழியத்தில் மகிழ்ச்சியோடு ஈடுபடலாம். சிலராவது தம்மை சேவிப்பார்கள் என்று யெகோவா நிச்சயமாக இருந்ததை சற்று நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். முடிவில், சர்வலோக அரசுரிமையைப் பற்றிய விவாதத்தை சிலராவது புரிந்து, ராஜ்ய செய்தியை ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையான மனநிலை யெகோவாவைப்போல் நமக்கும் இருக்க வேண்டும். ஜனங்களின் சூழ்நிலைமைகள் மாறும் என்பதை நாம் மறந்துவிட வேண்டாம். திடீரென ஏதாவது இழப்பையோ நெருக்கடியையோ எதிர்ப்படுகையில், பரம திருப்தியுடன் வாழுபவரும்கூட, வாழ்க்கையின் அர்த்தத்தைப் பற்றி சிந்திக்க தொடங்கலாம். அப்படி ‘தன் ஆவிக்குரிய தேவையை உணருவோருக்கு’ உதவ நீங்கள் ஊழியத்தில் கலந்துகொள்வீர்களா? (மத்தேயு 5:3, NW) சொல்லப்போனால், அடுத்த முறையே உங்கள் பிராந்தியத்திலுள்ள எவரேனும் நற்செய்திக்கு உடனடியாக செவிசாய்க்கலாம்!
11, 12. ஒரு பட்டணத்தில் என்ன நடந்தது, அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
11 நம்முடைய பிராந்தியத்தின் சூழ்நிலையும் மாறலாம். ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள். ஒரு சிறிய பட்டணத்தில் இளம் தம்பதிகள் தங்கள் பிள்ளைகளோடு குடும்பம் குடும்பமாக மிகவும் அன்னியோன்யமாக வாழ்ந்து வந்தனர். யெகோவாவின் சாட்சிகள் அவர்களைச் சந்தித்தபோது, “எங்களுக்கு விருப்பமில்லை” என்ற பதிலையே ஒவ்வொரு வீட்டிலும் கேட்டனர். அப்படியே தப்பித்தவறி யாராவது ராஜ்ய செய்திக்கு ஆர்வத்துடன் செவிசாய்த்தால், அவர்களிடம் எதையாவது சொல்லி சாட்சிகள் தொடர்ந்து சந்திக்க முடியாதவாறு தடுப்பதற்கு அக்கம்பக்கத்தார் விரைந்து செயல்பட்டனர். எனவே அங்கு பிரசங்கிப்பது சவால்மிக்கதாக இருந்தது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. எனினும் சாட்சிகள் தளர்ந்துவிடாமல் தொடர்ந்து பிரசங்கித்தனர். அதன் பலன்?
12 காலப்போக்கில் அந்தப் பட்டணத்திலிருந்த பிள்ளைகளில் பலர் பெரியவர்களாகி, திருமணம் செய்து, அங்கேயே தனிக்குடித்தனம் நடத்தினர். தங்கள் வாழ்க்கையில் உண்மையான சந்தோஷம் இல்லாததை இந்த வாலிபர்களில் சிலர் உணர்ந்து, சத்தியத்தை தேட தொடங்கினர். சாட்சிகள் அறிவித்து வந்த நற்செய்தியை ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டபோது அந்த சத்தியத்தைக் கண்டடைந்தனர். ஆகவே, பல ஆண்டுகளுக்குப் பின்னால், அந்தச் சிறிய சபை வளர தொடங்கினது. அப்போது, முயற்சியைக் கைவிடாத அந்த ராஜ்ய பிரஸ்தாபிகள் அடைந்த மகிழ்ச்சியைக் கற்பனை செய்து பாருங்கள்! சந்தோஷத்தை அளிக்கும் ராஜ்ய செய்தியை விடாமுயற்சியுடன் தொடர்ந்து அறிவிப்பது நமக்கும் மகிழ்ச்சியைத் தருவதாக!
உடன் விசுவாசிகள் உங்களுக்கு பக்கபலம்
13. நமக்கு சோர்வு ஏற்படுகையில் யாரை நாடலாம்?
13 நெருக்கடிகள் அதிகரிக்கையில் அல்லது வாழ்க்கையில் துன்பம் புயலென வீசுகையில் எங்கே ஆறுதலை நாடலாம்? யெகோவாவுக்கு தங்களை ஒப்புக்கொடுத்த லட்சக்கணக்கான ஊழியர்கள் முதலாவதாக ஜெபத்தில் யெகோவாவை நாடுகிறார்கள், பின்பு தங்கள் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளிடம் செல்கிறார்கள். பூமியிலிருக்கையில், சீஷர்கள் தமக்குப் பக்கபலமாய் இருந்ததை இயேசுவும்கூட போற்றினார். தம்முடைய மரணத்திற்கு முந்தின இரவில், “எனக்கு நேரிட்ட சோதனைகளில் என்னோடேகூட நிலைத்திருந்தவர்கள்” என அவர்களைக் குறித்து சொன்னார். (லூக்கா 22:28) அந்த சீஷர்கள் அபூரணர்கள் என்பது உண்மைதான், ஆனாலும் அவர்களுடைய பற்றுறுதி கடவுளுடைய குமாரனுக்கு ஆறுதலளித்தது. நாமுங்கூட உடன் வணக்கத்தாரிடமிருந்து பலத்தைப் பெறலாம்.
14, 15. தங்கள் மகனின் மரணத்தைத் தாங்கிக்கொள்ள ஒரு தம்பதியினருக்கு எது உதவியது, அவர்களுடைய அனுபவத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?
14 சகோதர சகோதரிகளின் ஆதரவு எந்தளவு மதிப்புமிக்கது என்பதை மீஷல், டயன் என்ற கிறிஸ்தவ தம்பதியினர் தங்களுடைய அனுபவத்தில் கண்டனர். அவர்களுடைய 20 வயது மகன் ஜோனத்தான், உயிர்த்துடிப்புமிக்கவனாய் இருந்தான், அவனுக்கு வளமான எதிர்கால வாய்ப்புகளும் காத்திருந்தன. ஆனால், அவனுக்கு மூளையில் கட்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவனுடைய உயிரை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற மனவுறுதியுடன் மருத்துவர்கள் கடினமாய் போராடினர். ஆனால் ஜோனத்தானின் உடல்நிலை மெல்ல மெல்ல மோசமாகி ஒருநாள் பிற்பகல் உயிர்நீத்தான். மீஷலும் டயனும் தாளா துயரத்தில் மனமுடைந்தனர். அன்றைய மாலைநேர ஊழியக் கூட்டம் இன்னும் சிறிது நேரத்தில் முடிவடையப் போவது அவர்களுக்குத் தெரியும். இருப்பினும், தங்கள் மனவேதனைக்கு உடனடி நிவாரணம் தேடி, எப்படியாவது ராஜ்ய மன்றத்திற்கு தங்களைக் கூட்டிச்செல்லுமாறு தங்களோடிருந்த மூப்பரிடம் சொன்னார்கள். யோனத்தானின் மரணத்தை சபையாருக்கு அறிவிப்பு செய்யும் சமயத்தில் அவர்கள் போய் சேர்ந்தார்கள். கூட்டம் முடிந்தவுடனேயே, கண்ணீரும் கம்பலையுமாக நின்ற அந்தப் பெற்றோரை சகோதர சகோதரிகள் சூழ்ந்துகொண்டு, கட்டியணைத்து ஆறுதல் வார்த்தைகள் சொன்னார்கள். டயன் அதை நினைவுபடுத்தி இவ்வாறு சொல்கிறார்கள்: “ராஜ்ய மன்றத்திற்குப் போய் சேர்ந்த சமயத்தில் நாங்கள் துயரத்தால் மனமுடைந்திருந்தோம். ஆனால், சகோதரர்கள் எந்தளவுக்கு ஆறுதலளித்தனர் என்பதை சொல்லவே முடியாது! எங்களை எவ்வளவாய் ஊக்குவித்தார்கள்! எங்கள் மனவேதனையை அவர்களால் போக்க முடியாதபோதிலும், அந்த கஷ்டமான சூழ்நிலையை சமாளிக்க பக்கபலமாய் இருந்து எங்களுக்கு உதவினார்கள்!”—ரோமர் 1:10, 11; 1 கொரிந்தியர் 12:21-26.
15 துன்பமும் துயரமும், தங்கள் சகோதரர்களிடம் இன்னும் அதிகமாய் நெருங்கிவர மீஷலுக்கும் டயனுக்கும் உதவியது. தங்கள் இருவருக்கு மத்தியிலும் பரஸ்பர உறவின் நெருக்கத்தை அது உணர செய்தது. மீஷல் இவ்வாறு சொல்கிறார்: “என் அருமை மனைவியை இன்னும் அதிகமாக நேசிக்க கற்றுக்கொண்டேன். சோர்வுறும் சமயங்களில், பைபிள் சத்தியத்தையும் யெகோவா தாங்கி பலப்படுத்தும் விதத்தையும் பற்றி நாங்கள் இருவரும் உரையாடுகிறோம்.” “ராஜ்ய நம்பிக்கை எங்களுக்கு இப்போது இன்னுமதிக அர்த்தமுள்ளதாக ஆகியிருக்கிறது” எனவும் டயன் சொன்னார்.
16. நம் தேவைகளை சகோதரர்களிடம் மனந்திறந்து பேச முன்வருவது ஏன் முக்கியம்?
16 வாழ்க்கையின் இக்கட்டான சூழ்நிலைகளில், கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் நமக்கு ‘பக்கபலமாக இருந்து’ சந்தோஷத்தைக் காத்துக்கொள்ள உதவலாம். (கொலோசெயர் 4:11, NW) அவர்களால் நம்முடைய மனதிலுள்ளதை அறிய முடியாது என்பது உண்மைதான். எனவே நமக்கு ஆதரவு தேவைப்படுகையில் மனந்திறந்து அவர்களிடம் சொல்வது நல்லது. பின்பு, நம்முடைய சகோதரர்கள் அளிக்கும் எந்த உதவியும் யெகோவாவிடமிருந்து வருவதாக கருதி இதயப்பூர்வ நன்றியை நாம் தெரிவிக்கலாம்.—நீதிமொழிகள் 12:25; 17:17.
உங்கள் சபையைப் பாருங்கள்
17. தனிமரமான ஒரு தாய் என்ன பிரச்சினைகளை எதிர்ப்படுகிறார்கள், அவர்களைப் போன்றவர்களை நாம் எப்படி கருதுகிறோம்?
17 உங்கள் உடன் விசுவாசிகளை உன்னிப்பாய் நீங்கள் கவனித்தால் அதிகமாய் அவர்களைப் போற்றுவீர்கள், அவர்களுடைய கூட்டுறவில் சந்தோஷத்தைக் காண்பீர்கள். உங்கள் சபையைப் பாருங்கள். யாரையெல்லாம் பார்க்கிறீர்கள்? தகப்பனில்லாமல், சத்தியத்தின் வழியில் தன் பிள்ளைகளை வளர்க்க போராடி வரும் தாய் அங்கு இருக்கிறார்களா? அந்த சகோதரியின் சிறந்த முன்மாதிரிக்கு அதிக சிந்தனை செலுத்தியிருக்கிறீர்களா? அவர்கள் எதிர்ப்படும் பிரச்சினைகள் சிலவற்றை கற்பனை செய்து பார்க்க முயலுங்கள். அவற்றில் சிலவற்றை ஜனீன் என்ற தனிமரமான தாய் குறிப்பிடுகிறார்கள்: தனிமை, ஆபீஸில் கெட்ட எண்ணத்துடன் அணுகும் ஆண்களின் தொல்லை, படுசிக்கனமான வரவுசெலவு திட்டம். ஆனால் இவை எல்லாவற்றிலும் மிகப் பெரும் பிரச்சினை, அவருடைய பிள்ளைகளின் உணர்ச்சி சம்பந்தப்பட்ட தேவைகளைக் கவனிப்பது. காரணம் ஒவ்வொரு பிள்ளைக்கும் அதற்கே உரிய சுபாவம் இருக்கிறது என்று அந்தத் தாய் சொல்கிறார்கள். தனக்கிருந்த மற்றொரு பிரச்சினையையும் குறிப்பிடுகிறார்கள்: “கணவன் வகித்த தலைமைத்துவத்தை ஈடுகட்ட, உங்கள் மகனை குடும்பத்தின் தலைவனாக்கும் போக்கைத் தவிர்ப்பது உண்மையிலேயே சவால்மிக்கது. என் ஒரே மகளிடம் என்னுடைய உள்ளத்தில் குமுறும் கவலையைக் கொட்டித் தீர்த்து பெரும் சுமையை அவள் மனதில் ஏற்றாமலிருக்கும்படி ஜாக்கிரதையாய் இருப்பதும் கடினமாக இருக்கிறது.” கடவுள் பயமுள்ள ஆயிரக்கணக்கான ஒற்றைப் பெற்றோரைப் போல ஜனீன் முழுநேர வேலைக்குப் போய் தன் குடும்பத்தை கவனித்து வருகிறார்கள். மேலும் தன் பிள்ளைகளுக்கு பைபிள் படிப்பு நடத்தி, ஊழியத்தில் அவர்களைப் பயிற்றுவித்து, சபை கூட்டங்களுக்கு அவர்களை அழைத்து வருகிறார்கள். (எபேசியர் 6:4) உத்தமத்தைக் காத்துக்கொள்ள இந்தக் குடும்பம் படும் பிரயாசங்களை தினமும் பார்க்கையில் யெகோவா எவ்வளவு சந்தோஷப்படுவார்! நம் மத்தியில் இப்படிப்பட்டவர்கள் இருப்பது, நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறதல்லவா? ஆம், நிச்சயமாகவே மகிழ்ச்சி அளிக்கிறது.
18, 19. சபையாருக்கான போற்றுதலை நாம் எவ்வாறு அதிகரிக்கலாம் என்பதை விளக்குங்கள்.
18 மறுபடியும் உங்கள் சபையிலுள்ளவர்களைப் பாருங்கள். கணவனையோ மனைவியையோ இழந்த உண்மையுள்ள துணை ‘தவறாமல்’ கூட்டத்திற்கு வருவதை நீங்கள் ஒருவேளை காணலாம். (லூக்கா 2:37, NW) அவர்கள் தங்கள் தனிமையை நினைத்து சிலசமயங்களில் சங்கடப்படுகிறார்களா? ஆம் அதில் சந்தேகமே இல்லை. தங்கள் துணையை இழந்து பெரிதும் தவிக்கவே செய்கிறார்கள்! ஆனால் அவர்கள் யெகோவாவின் சேவையில் சுறுசுறுப்பாக ஈடுபடுகிறார்கள், மற்றவர்களிடம் தனிப்பட்ட அக்கறை காட்டுகிறார்கள். உறுதியும் நம்பிக்கையும் மிக்க அவர்களுடைய மனநிலை, சபையின் மகிழ்ச்சியை இன்னும் அதிகரிக்கிறது! முழுநேர ஊழியத்தில் 30-க்கும் அதிக ஆண்டுகள் சேவித்த ஒரு கிறிஸ்தவ சகோதரி இவ்வாறு கூறினார்: “பல கடுந்துயரங்களை சகித்திருக்கும் வயதான சகோதர சகோதரிகள், இன்னமும் யெகோவாவை உண்மையுடன் சேவிப்பதைக் காண்கிறதே எனக்கு பெரிதும் மகிழ்ச்சியூட்டும் விஷயங்களில் ஒன்று!” ஆம், நம் மத்தியில் இருக்கும் வயதான கிறிஸ்தவர்கள், இளைஞருக்கு பெரும் ஊக்குவிப்பை அளிக்கிறார்கள்.
19 சமீப காலமாக சபையுடன் கூட்டுறவை அனுபவிக்கும் புதியவர்களைப் பற்றி என்ன சொல்லலாம்? கூட்டங்களில் அவர்கள் தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்துகையில் நாம் மகிழ்ச்சியடைகிறோம் அல்லவா? பைபிளைப் படிக்க தொடங்கினதிலிருந்து அவர்கள் செய்திருக்கும் படிப்படியான முன்னேற்றத்தைச் சிந்தித்துப் பாருங்கள். அவர்களைக் கண்டு யெகோவா மிகுந்த மகிழ்ச்சியடைவார். நாம் மகிழ்ச்சியடைகிறோமா? அவர்களுடைய முயற்சிகளைப் பாராட்டி, நாம் அவர்களை ஆதரிக்கிறோம் என்பதைக் காட்டுகிறோமா?
20. சபையிலுள்ள ஒவ்வொருவரும் முக்கியமானவர் என ஏன் சொல்லலாம்?
20 நீங்கள் மணமானவரா, மணமாகாதவரா, அல்லது துணையின்றி வாழும் பெற்றோரா? நீங்கள் தகப்பனையோ தாயையோ இழந்த பையனா அல்லது பெண்ணா? நீங்கள் கணவரையோ மனைவியையோ பறிகொடுத்தவரா? நீங்கள் சபையுடன் பல ஆண்டுகளாக கூட்டுறவு கொள்பவரா அல்லது சமீப காலமாக கூட்டுறவு கொள்ள ஆரம்பித்தவரா? உங்கள் உண்மையுள்ள முன்மாதிரி எங்கள் எல்லாரையும் உண்மையிலேயே ஊக்குவிக்கிறது என்பதில் சந்தேகம் வேண்டாம். ஒன்றாக சேர்ந்து நீங்கள் ராஜ்ய பாட்டு பாடுகையில், பதில் சொல்கையில் அல்லது தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் மாணாக்கர் பேச்சு கொடுக்கையில் எங்கள் சந்தோஷம் இன்னும் அதிகரிக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அது யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்துகிறது.
21. நாம் என்ன செய்வதற்கு பல காரணங்கள் உள்ளன, ஆனால் என்ன கேள்விகள் எழுகின்றன?
21 இந்த இக்கட்டான காலங்களிலும் நம் நித்தியானந்த கடவுளை வணங்குவதில் நாம் சந்தோஷமாயிருக்கலாம். பவுலின் இந்த ஊக்கமூட்டுதலுக்கு ஏற்ப செயல்பட நமக்கு பல காரணங்கள் உள்ளன: “சந்தோஷமாயிருங்கள், . . . அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய தேவன் உங்களோடேகூட இருப்பார்.” (2 கொரிந்தியர் 13:11) எனினும், இயற்கை சேதம், துன்புறுத்துதல், அல்லது கடும் பொருளாதார கஷ்டம் ஆகியவற்றை எதிர்ப்படுகையில் என்ன செய்வது? அப்படிப்பட்ட சூழ்நிலைமைகளிலும் நம் சந்தோஷத்தைக் காத்துக்கொள்ள முடியுமா? அடுத்த கட்டுரையைச் சிந்திக்கையில் அதற்கு பதிலை நீங்களே அறிந்துகொள்வீர்கள்.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட வேதாகமத்தின்பேரில் உட்பார்வை (ஆங்கிலம்) தொகுதி 2, பக்கம் 119-ஐக் காண்க.
உங்களால் பதில் சொல்ல முடியுமா?
• சந்தோஷம் எவ்வாறு விவரிக்கப்படுகிறது?
• எவ்வாறு நம்பிக்கையான மனப்பான்மையைக் காத்துவருவது சந்தோஷமாய் நிலைத்திருக்க நமக்கு உதவலாம்?
• நம்முடைய சபை பிராந்தியத்தைப் பற்றி நம்பிக்கையான மனநிலையுடன் இருக்க எது நமக்கு உதவலாம்?
• உங்கள் சபையிலுள்ள சகோதர சகோதரிகளை எவ்வழிகளில் நீங்கள் போற்றுகிறீர்கள்?
[பக்கம் 10-ன் படங்கள்]
நம் பிராந்தியத்திலுள்ள ஜனங்கள் மாறலாம்
[பக்கம் 12-ன் படம்]
என்ன சவால்களை உங்கள் சபையிலுள்ளவர்கள் எதிர்ப்படுகிறார்கள்?