வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
தானியேல் 9:24-ல் (NW) முன்னறிவிக்கப்பட்டுள்ளபடி, ‘பரிசுத்தத்திலும் பரிசுத்தமானது’ எப்போது அபிஷேகம் பண்ணப்பட்டது?
தானியேல் 9:24-27-ல் “பிரபுவாகிய மேசியா” அல்லது கிறிஸ்து வருவதைப் பற்றிய தீர்க்கதரிசனம் உள்ளது. ஆகவே, முன்னறிவிக்கப்பட்ட ‘பரிசுத்தத்திலும் பரிசுத்தமானதன்’ அபிஷேகம், எருசலேம் ஆலயத்தின் மகா பரிசுத்த ஸ்தலம் அபிஷேகம் பண்ணப்படுவதைக் குறிப்பதில்லை. அதற்கு பதிலாக ‘பரிசுத்தத்திலும் பரிசுத்தமானது,’ கடவுளுடைய பரலோக பரிசுத்த ஸ்தலத்தைக் குறிக்கிறது. அது யெகோவாவுடைய பெரிய ஆவிக்குரிய ஆலயத்தின் மகா பரிசுத்த ஸ்தலமான பரலோகத்தைக் குறிக்கிறது.a—எபிரெயர் 8:1-5; 9:2-10, 23.
கடவுளுடைய ஆவிக்குரிய ஆலயம் எப்போது செயல்பட ஆரம்பித்தது? முதலாவதாக பொ.ச. 29-ல் இயேசு முழுக்காட்டப்பட்ட போது என்ன நடந்தது என்பதை சற்று எண்ணிப்பாருங்கள். அப்போது முதற்கொண்டு இயேசு சங்கீதம் 40:6-8-ன் வார்த்தைகளை நிறைவேற்றி வந்தார். “பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்” என்று இயேசு ஜெபித்ததாக பவுல் பின்னர் கூறுகிறார். (எபிரெயர் 10:5) எருசலேம் ஆலயத்தில் தொடர்ந்து மிருக பலிகள் செலுத்தப்படுவதை கடவுள் “விரும்பவில்லை” என்பது இயேசுவுக்குத் தெரியும். மாறாக, பலி செலுத்த இயேசுவுக்கு ஒரு பரிபூரண மனித உடலை யெகோவா ஆயத்தம் பண்ணியிருந்தார். இயேசு தம்முடைய இருதயப்பூர்வமான ஆசையை வெளிப்படுத்துபவராக, “தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது” என்று தொடர்ந்து சொன்னார். (எபிரெயர் 10:7) இதற்கு யெகோவா எவ்வாறு பதிலளித்தார்? மத்தேயு சுவிசேஷம் கூறுகிறது: “இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.”—மத்தேயு 3:16, 17.
இயேசு தம்முடைய சரீரத்தை பலியாக செலுத்தியதை யெகோவா ஏற்றுக்கொண்டதானது, எருசலேம் ஆலயத்திலிருந்த பலிபீடத்தைக் காட்டிலும் மகத்தான பலிபீடமொன்று ஏற்படுத்தப்பட்டதை அர்த்தப்படுத்தியது. இது கடவுளுடைய “சித்தம்” என்ற பலிபீடம் அல்லது இயேசுவின் மனித உயிரை பலியாக ஏற்றுக்கொள்வதற்கான ஏற்பாடாகும். (எபிரெயர் 10:10) இயேசுவை பரிசுத்த ஆவியால் கடவுள் அபிஷேகம் பண்ணினது, தம்முடைய ஆவிக்குரிய ஆலய ஏற்பாட்டை முழுமையாக செயல்படுத்த ஆரம்பித்துவிட்டதை அர்த்தப்படுத்தியது.b ஆகவே இயேசுவின் முழுக்காட்டுதலின்போது, கடவுளுடைய பரலோக ஸ்தலம் அபிஷேகம் பண்ணப்பட்டது அல்லது பெரிய ஆவிக்குரிய ஆலய ஏற்பாட்டில் ‘பரிசுத்தத்திலும் பரிசுத்தமானதாக’ தனியே பிரித்து வைக்கப்பட்டது.
[அடிக்குறிப்புகள்]
a கடவுளுடைய ஆவிக்குரிய ஆலயத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய கலந்தாலோசிப்புக்கு 1996, ஜூலை 1, காவற்கோபுரம் இதழில் பக்கங்கள் 14-19-ஐக் காண்க.
[பக்கம் 27-ன் படம்]
இயேசு முழுக்காட்டப்பட்டபோது “பரிசுத்தத்திலும் பரிசுத்தம்” அபிஷேகம் செய்யப்பட்டது