வாழ்க்கை சரிதை
மத்திய கிழக்கில் ஆவிக்குரிய ஒளி பிரகாசிக்கிறது
நேகிப் ஸாலம் சொன்னபடி
பொ.ச. முதல் நூற்றாண்டில், கடவுளுடைய வார்த்தையின் ஒளி, மத்திய கிழக்கிலிருந்து பூமியின் கடைக்கோடி வரை பிரகாசித்தது. 20-ம் நூற்றாண்டில், அதே ஒளி திரும்பிவந்து உலகின் அப்பகுதியை மீண்டும் ஒளிர வைத்தது. அது எப்படி நடந்ததென்று சொல்கிறேன், கேளுங்கள்.
வடக்கு லெபனானிலுள்ள அம்யூன் நகரில் 1913-ல் நான் பிறந்தேன். உலகநிலை ஓரளவு ஸ்திரமாகவும் அமைதியாகவும் இருந்த கடைசி வருடம் அதுவே, ஏனென்றால் அதற்கடுத்த வருடம் முதல் உலகப் போர் மூண்டது. 1918-ல் போர் முடிந்தபோது, மத்திய கிழக்கின் முத்து என்பதாக அப்போது அழைக்கப்பட்ட லெபனான், பொருளாதாரத்திலும் அரசியலிலும் மிகவும் மோசமான நிலையில் உழன்றது.
1920-ல், தபால் சேவைகள் மீண்டும் லெபனானில் செயல்பட தொடங்கியபோது, வெளி நாடுகளில் வாழ்ந்த லெபனானிய மக்களிடமிருந்து கடிதங்கள் வர தொடங்கின. அப்துல்லா, ஜார்ஜ் கான்டூஸ் ஆகிய என் மாமாக்களின் கடிதங்களும் வந்தன. அவர்களுடைய அப்பாவும் என் தாத்தாவுமான ஹாபிப் கான்டூஸுக்கு கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி அவர்கள் எழுதினார்கள். (மத்தேயு 24:14) தன் மகன்கள் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதை சொன்னதற்கே அந்த ஊர் மக்கள் தாத்தாவை கேலி செய்தார்கள். நிலத்தை விற்றுவிட்டு, ஒரு கழுதையை வாங்கிக்கொண்டு, பிரசங்கிக்க போகும்படி ஹாபிப்பின் மகன்கள் தங்கள் அப்பாவுக்கு எழுதியிருப்பதாக அந்த ஊர் மக்கள் வதந்தியை பரப்பினர்.
ஆரம்ப ஒளி பரவுதல்
அதற்கடுத்த வருடம், 1921-ல், அ.ஐ.மா., நியூ யார்க்கிலுள்ள புரூக்ளினில் வாழ்ந்து வந்த மீஷெல் ஆபூட், லெபனானிலுள்ள ட்ரிபோலிக்கு திரும்பி வந்தார். அவர் ஒரு பைபிள் மாணாக்கர் ஆகியிருந்தார்; யெகோவாவின் சாட்சிகள் அப்போது அப்படித்தான் அழைக்கப்பட்டனர். சகோதரர் ஆபூட்டின் பெரும்பாலான நண்பர்களும் உறவினர்களும் பைபிள் செய்திக்கு செவிசாய்க்கவில்லை. ஆனாலும், பிரபலமான இருவர் செவிசாய்த்தனர். அவர்கள் இப்ராஹிம் ஆட்டயா என்ற பேராசிரியரும் ஹானா ஷம்மஸ் என்ற பல் மருத்துவருமே ஆவர். டாக்டர் ஷம்மஸ் தன் வீட்டையும் க்ளினிக்கையும் கிறிஸ்தவ கூட்டங்கள் நடத்துவதற்காக அளித்தார்.
எங்கள் ஊராகிய அம்யூனுக்கு சகோதரர் ஆபூட்டும் சகோதரர் ஷம்மஸும் வந்தபோது நான் சிறு பையன். அவர்களுடைய வருகை என்னை பெரிதும் பாதித்தது. பிரசங்க வேலையில் சகோதரர் ஆபூட்டுடன் செல்ல ஆரம்பித்தேன். 1963-ல் சகோதரர் ஆபூட் மரிக்கும் வரையாக, நாங்கள் இருவரும் ஊழியத்தில் 40 வருடங்கள் இணைபிரியா கூட்டாளிகளாக இருந்தோம்.
1922-க்கும் 1925-க்கும் மத்தியில், வடக்கு லெபனானின் பல கிராமங்களில் பைபிள் சத்தியத்தின் ஒளி விரிவாக பரவியது. அம்யூனில் எங்கள் வீட்டைப் போல, மற்ற இடங்களிலும் சுமார் 20-லிருந்து 30 பேர் தனிப்பட்டவர்களின் வீடுகளில் கூடிவந்து பைபிளை கலந்தாலோசித்தனர். தகர டப்பாக்களை தட்டி சப்தமெழுப்பி, கத்தி கூச்சலிட்டு எங்கள் கூட்டங்களை கலைக்கும்படி மதக் குருக்கள் பிள்ளைகளை தூண்டிவிட்டார்கள். அதனால் நாங்கள் சில வேளைகள் பைன் மர காடுகளில் ஒன்றுகூடினோம்.
இளைஞனாய் இருந்தபோது, ஊழியத்திலும் கிறிஸ்தவ கூட்டங்களுக்கு தவறாமல் ஆஜராவதிலும் எனக்கிருந்த வைராக்கியத்தினால் தீமோத்தேயு என்ற பட்டப்பெயரை சம்பாதித்துக் கொண்டேன். “அந்த கூட்டங்களுக்கு” போவதை நிறுத்தும்படி பள்ளி இயக்குநர் கட்டளையிட்டார். நான் மறுத்தபோது, பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டேன்.
பைபிள் தேசங்களில் சாட்சிகொடுத்தல்
1933-ல் நான் முழுக்காட்டுதல் எடுத்தவுடன், பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்தேன். முழுநேர ஊழியத்தை யெகோவாவின் சாட்சிகள் அவ்வாறு அழைக்கின்றனர். அப்போது நாங்கள் எண்ணிக்கையில் சொற்ப பேரே இருந்தபோதிலும், லெபனானின் வடக்கிலுள்ள பெரும்பாலான கிராமங்களில் பிரசங்கித்தது மட்டுமல்லாமல் பெய்ரூட்டையும், அதன் புறநகர் பகுதிகளையும் சென்றடைந்து, லெபனானின் தெற்கு வரையாகவும் சென்றோம். அந்த ஆரம்ப காலங்களில், இயேசு கிறிஸ்துவையும் முதல் நூற்றாண்டில் அவரைப் பின்பற்றியவர்களையும் போலவே நாங்களும் வழக்கமாக நடந்தோ கழுதையில் ஏறியோ சென்றோம்.
அநேக ஆண்டுகளாக ஐக்கிய மாகாணங்களில் வாழ்ந்து வந்த லெபனானிய சாட்சியாகிய யூஸெஃப் ராக்கால் 1936-ல் லெபனானுக்கு விஜயம் செய்தார். அப்போது ஒலி கருவியையும் இரு ஃபோனோக்ராஃப்களையும் கொண்டு வந்தார். நாங்கள் அந்த கருவியை 1931 மாடல் ஃபோர்ட் காரில் பொருத்திக்கொண்டு, லெபனான் மற்றும் சிரியாவெங்கும் பயணித்து, ஒதுக்குப்புறமான இடங்களுக்கும் ராஜ்ய செய்தியை கொண்டு சென்றோம். அந்த ஒலிபெருக்கியின் சத்தத்தை 10 கிலோமீட்டருக்கும் அப்பால் கேட்க முடிந்தது. பரலோகத்திலிருந்து வரும் செய்தி என்பதாக சொல்லிக்கொண்டு மக்கள் அதைக் கேட்பதற்காக வீடுகளின் மாடிக்கு சென்றனர். வயல்களில் இருந்தவர்கள் தங்கள் வேலையை அப்படியே போட்டுவிட்டு பக்கத்தில் வந்து இதை கேட்டனர்.
யூஸெஃப் ராக்காலுடன் என் இறுதி பயணங்களில் ஒன்று சிரியாவிலுள்ள அலேப்போவுக்கு 1937-ன் குளிர் காலத்தில் சென்றதே. அவர் மீண்டும் ஐக்கிய மாகாணங்களுக்கு திரும்பி போகுமுன், பலஸ்தீனாவுக்கும் சென்றோம். அங்கு ஹைஃபா, ஜெரூசலம், மற்றும் அந்நாட்டிலுள்ள சில கிராமங்களுக்கும் சென்றோம். இங்கு நாங்கள் சந்தித்த ஒருவர் இப்ராஹிம் ஷிஹாடி. கடித தொடர்பு மூலம் இவர் எனக்கு ஏற்கெனவே அறிமுகமாகியிருந்தார். இவரை நாங்கள் சந்தித்தபோது, எங்களுடன் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பங்கெடுக்க தொடங்கும் அளவுக்கு இவர் பைபிள் அறிவில் முன்னேறியிருந்தார்.—அப்போஸ்தலர் 20:20.
கடிதத் தொடர்பு மூலம் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளை படித்துவந்த பேராசிரியர் காலீல் கோப்ரோஸி என்ற தீவிர கத்தோலிக்கரை சந்திக்கவும் ஆவலாக இருந்தேன். லெபனானிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய விலாசத்தை அவர் எப்படி பெற்றார்? ஹைஃபாவிலுள்ள ஒரு கடைக்காரர், காலீலின் மளிகை சாமான்களை யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரத்திலிருந்து கிழிக்கப்பட்ட பேப்பரில் பொட்டலம் கட்டி கொடுத்திருந்தார். அந்த பேப்பரில் விலாசம் இருந்தது. அவரை சந்தித்ததிலும் மிகவும் சந்தோஷப்பட்டோம். பின்னர், 1939-ல் அவர் முழுக்காட்டுதல் எடுப்பதற்காக ட்ரிபோலிக்கு வந்தார்.
1937-ல், பெட்ராஸ் லகாகாஸும் அவர் மனைவியும் ட்ரிபோலிக்கு வந்தனர். அடுத்த சில வருடங்களில், நாங்கள் மூவரும் சேர்ந்து மக்களை அவரவர் வீடுகளில் சந்தித்து ராஜ்ய செய்தியை சொன்னோம்; இவ்வாறு லெபனானிலும் சிரியாவிலுமுள்ள பெரும்பான்மையான பகுதிகளில் பிரசங்கிக்க முடிந்தது. சகோதரர் லகாகாஸ் 1943-ல் மரித்த சமயத்தில், லெபனான், சிரியா, பலஸ்தீனாவின் பெரும்பாலான நகரங்களிலும் கிராமங்களிலும் சாட்சிகள் ஆவிக்குரிய ஒளியை பிரகாசிக்க செய்திருந்தனர். சில சமயங்களில், ஒதுக்குப்புறமான இடங்களை சென்றெட்டுவதற்காக, விடியற்காலை மூன்று மணியளவில் சுமார் 30 பேர் காரிலோ பஸ்ஸிலோ கிளம்பினோம்.
1940-களில், இப்ராஹிம் ஆட்டயா காவற்கோபுரத்தை அரபிக்கில் மொழிபெயர்த்தார். பிறகு, நான் அந்த பத்திரிகையை நான்கு கையெழுத்து பிரதிகள் எடுத்து, பலஸ்தீனா, சிரியா, எகிப்து ஆகிய இடங்களிலுள்ள சாட்சிகளுக்கு அனுப்புவேன். இரண்டாம் உலகப் போர் நடந்த அந்த நாட்களில் எங்கள் பிரசங்க வேலைக்கு அதிக எதிர்ப்பு இருந்தது. நாங்களோ மத்திய கிழக்கில் பைபிள் சத்தியத்தை நேசித்த அனைவருடனும் தொடர்பு வைத்திருந்தோம். நகரங்கள், அவற்றை சுற்றியிருக்கும் கிராமங்கள் ஆகியவற்றின் மேப்புகளை நானே வரைந்தேன்; எப்படியாவது அவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்பதில் குறியாய் இருந்தோம்.
1944-ல், இரண்டாம் உலகப் போர் தீவிரமாக நடந்துகொண்டிருந்த சமயத்தில், என் பயனியர் கூட்டாளியாக இருந்த மீஷெல் ஆபூட்டின் மகள் ஈவ்லினை மணந்துகொண்டேன். எங்களுக்கு மூன்று பிள்ளைகள் பிறந்தனர், ஒரு மகளும் இரு மகன்களும்.
மிஷனரிகளுடன் ஊழியம்
போர் முடிந்தவுடன், மிஷனரிகளுக்கான கிலியட் பள்ளியின் முதல் பட்டதாரிகள் லெபனானுக்கு வந்துசேர்ந்தனர். அதன் விளைவாக, லெபனானில் முதல் சபை உருவானது. நான் கம்பெனி சர்வன்ட்டாக நியமிக்கப்பட்டேன். பின்பு, 1947-ல், நேதன் ஹெச். நாரும் அவருடைய செயலர் மில்டன் ஜி. ஹென்ஷலும் லெபனானுக்கு விஜயம் செய்து, சகோதரர்களுக்கு அதிக உற்சாகம் அளித்தார்கள். சீக்கிரத்திலேயே இன்னும் அதிக மிஷனரிகள் வந்தனர். எங்கள் ஊழியத்தை ஒழுங்கமைப்பதற்கும் சபை கூட்டங்களை நடத்துவதற்கும் அவர்கள் பேருதவியாக இருந்தனர்.
சிரியாவிலுள்ள ஒதுக்குப்புறமான பகுதிக்கு நாங்கள் மேற்கொண்ட பயணங்களில், ஒருமுறை உள்ளூர் பிஷப்பின் எதிர்ப்பை சந்தித்தோம். சீயோனிய பிரசுரங்களென அவர் அழைத்தவற்றை நாங்கள் விநியோகித்ததாக குற்றஞ்சாட்டினார். இதற்கு நேர்மாறாக 1948-க்கு முன் மத குருமார் எங்களை அடிக்கடி “கம்யூனிஸ்ட்டுகள்” என்று முத்திரை குத்தியிருந்தனர். இந்த முறை, எங்களை கைது செய்து இரண்டு மணிநேரம் விசாரணை நடத்தினார்கள். அப்போது சிறந்த சாட்சி கொடுக்கப்பட்டது.
முடிவில், வழக்கை விசாரித்த நீதிபதி இவ்வாறு தீர்ப்பு வழங்கினார்: “உங்களுக்கு விரோதமாக குற்றஞ்சாட்டிய தாடிக்காரரை [அந்த பிஷப்பை குறிப்பிட பயன்படுத்திய அணிநடை] நான் கண்டித்தாலும், உங்களை சந்திக்கவும் உங்கள் போதனைகளை தெரிந்துகொள்ளவும் வாய்ப்பளித்ததற்காக அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.” எங்களுக்கு தொந்தரவு கொடுத்ததற்காக மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.
பத்து வருடங்கள் கழித்து பெய்ரூட்டுக்கு பயணப்படுகையில், பக்கத்திலிருந்த வேளாண்மை பொறியாளரிடம் பேச தொடங்கினேன். எங்கள் நம்பிக்கைகளைப் பற்றி கேட்ட சில நிமிடங்களில், இதைப் போன்ற விஷயத்தை சிரியாவிலுள்ள ஒரு நண்பர் சொல்ல கேட்டிருப்பதாக சொன்னார். அந்த நண்பர் யார்? பத்து வருடங்களுக்கு முன் எங்கள் வழக்கை விசாரித்த நீதிபதியேதான்!
1950-களில், ஈராக்கிலுள்ள சாட்சிகளை சந்தித்து, அவர்களோடு வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பங்கெடுத்தேன். ஜோர்டானுக்கும் வெஸ்ட் பாங்குக்கும் அநேக முறை பயணம் செய்தேன். 1951-ல் பெத்லேகமுக்கு சென்ற நான்கு சாட்சிகளடங்கிய குழுவில் நானும் ஒருவன். கர்த்தருடைய இராப்போஜனத்தை அங்கு ஆசரித்தோம். அந்த நிகழ்ச்சிக்காக கூடிவந்திருந்த நாங்கள் அனைவரும் அன்று காலை ஒரு பஸ்ஸில் ஜோர்டான் நதிக்கு சென்றோம். யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருப்பதன் அடையாளமாக அங்கு 22 பேர் முழுக்காட்டுதல் பெற்றனர். அந்த பகுதியில் எதிர்ப்பை சந்தித்த போதெல்லாம், “உங்கள் நாட்டைச் சேர்ந்த ஒருவர் பூமி முழுவதற்கும் ராஜாவாக போகிறார் என்பதையே சொல்ல வந்திருக்கிறோம்! நீங்கள் ஏன் கோபப்படுகிறீர்கள்? மகிழ்ச்சியாக அல்லவா இருக்க வேண்டும்!” என்று சொன்னோம்.
கஷ்டங்களின் மத்தியில் பிரசங்கித்தல்
மத்திய கிழக்கிலுள்ள மக்கள் பொதுவாக நல்ல உள்ளம் படைத்தவர்கள், மனத்தாழ்மையுள்ளவர்கள், உபசரிக்கும் குணமுள்ளவர்கள். அநேகர் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய செய்தியை அக்கறையுடன் கேட்கிறார்கள். உண்மையில், இந்த பைபிள் வாக்குறுதி நிறைவேறும் என்பதை அறிவதைவிட அதிக புத்துணர்ச்சியளிக்கும் எதுவும் இருக்க முடியாது: “தேவன்தாமே அவர்களோடேகூட [அவருடைய மக்களோடே] இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.”—வெளிப்படுத்துதல் 21:3, 4.
எங்கள் வேலையை எதிர்க்கும் பலருக்கு எங்கள் ஊழியமும் நாங்கள் சொல்லும் செய்தியும் என்னவென்று உண்மையில் புரியவில்லை என்பதையே நான் தெரிந்துகொண்டேன். கிறிஸ்தவமண்டல குருமார் எங்களைப் பற்றி தவறான கருத்தை பரப்ப என்னென்னவோ செய்திருக்கிறார்கள்! அதனால், லெபனானில் 1975-ல் தொடங்கி 15 வருடங்களுக்கு மேல் நீடித்த உள்நாட்டுப் போரின்போது சாட்சிகள் பல கஷ்டங்களை எதிர்ப்பட்டார்கள்.
சர்ச்சுடன் தீவிர ஈடுபாடு வைத்திருந்த ஒரு குடும்பத்துக்கு ஒரு சமயம் பைபிள் படிப்பு நடத்தினேன். பைபிள் சத்தியங்களை படிப்பதில் அவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காட்டியதால் பாதிரிமாருக்கு எரிச்சல் வந்தது. அதனால், ஓரிரவு அந்த குடும்பத்தாரின் கடையை தாக்கும்படி அந்த ஊரிலுள்ள ஒரு மதத் தொகுதி தன் அங்கத்தினர்களை தூண்டிவிட்டது. குறைந்தது 4,50,000 ரூபாய் மதிப்புள்ள சாமான்களை அவர்கள் எரித்துவிட்டனர். அன்றிரவே, அவர்கள் என்னையும் கடத்தி சென்றனர். ஆனாலும், அவர்களுடைய தலைவனிடம் என்னால் நியாயங்காட்டி பேச முடிந்தது; அவர்கள் உண்மையிலேயே கிறிஸ்தவர்களாய் இருந்தால் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொள்ள மாட்டார்கள் என்று விளக்கினேன். அப்போது, அவன் காரை நிறுத்தி என்னை இறங்கி போய்விடச் சொன்னான்.
வேறொரு முறை, படைத்துறை சார்ந்த நால்வர் என்னை கடத்திச் சென்றனர். பல அச்சுறுத்தல்களுக்குப் பின், என்னை சுடப்போவதாக சொன்ன அவர்களுடைய தலைவன் திடீரென்று தன் மனதை மாற்றிக் கொண்டான்; நான் விடுவிக்கப்பட்டேன். இவர்களில் இருவர் இப்போது கொலை மற்றும் கொள்ளை குற்றத்துக்காக சிறையிலிருக்கின்றனர்; மற்ற இருவர்மீதும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டது.
சாட்சி கொடுக்க வேறு வாய்ப்புகள்
ஒரு நாட்டிலிருந்து மற்றொன்றுக்கு பறந்து செல்லும் வாய்ப்பு எனக்கு அடிக்கடி கிடைத்தது. இப்படி ஒருமுறை பெய்ரூட்டிலிருந்து ஐக்கிய மாகாணங்களுக்கு செல்கையில், லெபனானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் சார்ல்ஸ் மாலெக்கின் அருகே அமர்ந்திருந்தேன். பைபிளிலிருந்து நான் இவருக்கு வாசித்து காட்டிய ஒவ்வொரு வசனத்தையும் போற்றுதலுடன், கவனமாய் கேட்டார். முடிவில், ட்ரிபோலியில் இவர் படித்ததாகவும், இப்ராஹிம் ஆட்டயா இவருடைய ஆசிரியர் என்றும் சொன்னார். என் மாமனார் ஆரம்பத்தில் பைபிள் சத்தியத்தை அறிமுகப்படுத்தி வைத்தாரே, அவரே இவர்! பைபிளை மதிக்கும்படி இப்ராஹிம் இவருக்குக் கற்பித்ததாக திரு. மாலெக் சொன்னார்.
இன்னொரு முறை இப்படி பயணிக்கையில், ஐக்கிய நாடுகள் சபையின் பலஸ்தீனிய பிரதிநிதியாக இருந்தவரின் அருகில் அமர்ந்திருந்தேன். கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை அவருக்கு சொல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. கடைசியில் இவர், நியூ யார்க்கிலிருந்த இவருடைய தம்பியிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். நான் அங்கு அவரை அடிக்கடி சந்தித்தேன். என்னுடைய உறவினர் ஒருவரும் நியூ யார்க்கில் ஐக்கிய நாடுகள் கட்டிடத்தில் வேலை செய்து வந்தார். ஒருமுறை அவருடைய அலுவலகத்தில் மூன்று மணிநேரம் செலவிட்டேன். அப்போது கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி அவருக்கு சாட்சி கொடுக்க முடிந்தது.
இப்போது எனக்கு 88 வயதாகிறது. சபை பொறுப்புகளை என்னால் இன்னும் சுறுசுறுப்பாக கவனிக்க முடிகிறது. என் மனைவி ஈவ்லினும் என்னுடன் சேர்ந்து யெகோவாவை சேவித்து வருகிறாள். என் மகள், யெகோவாவின் சாட்சிகளுடைய பயணக் கண்காணி ஒருவரை மணந்துகொண்டாள்; அவர் தற்போது பெய்ரூட் சபையில் மூப்பராக சேவை செய்கிறார். அவர்கள் மகளும் சாட்சியாக இருக்கிறாள். என் இளைய மகனும் அவன் மனைவியும் சாட்சிகள்; அவர்களுடைய மகளும் சத்தியத்தில் இருக்கிறாள். எங்கள் மூத்த மகனைப் பொறுத்தமட்டில், கிறிஸ்தவ விசுவாசம் அவன் இருதயத்தில் ஆழப் பதிய வைக்கப்பட்டது; காலப்போக்கில் அவன் அதை ஏற்றுக்கொள்வான் என்று நம்புகிறேன்.
1933-ல், ஒரு பயனியராக—மத்திய கிழக்கில் முதல் பயனியராக—நியமிக்கப்பட்டேன். கடந்த 68 வருடங்களாக ஒரு பயனியராக யெகோவாவை சேவிப்பதைவிட சிறந்ததாக வேறு எதையும் வாழ்க்கையில் என்னால் தேர்ந்தெடுத்திருக்க முடியாது. அவர் தரும் ஆவிக்குரிய ஒளியில் தொடர்ந்து நடக்கவே தீர்மானமாய் இருக்கிறேன்.
[பக்கம் 23-ன் படம்]
1935-ல் நேகிப்
[பக்கம் 24-ன் படம்]
1940-ல் லெபனான் மலைகளில் செளண்ட் காருடன்
[பக்கம் 25-ன் படங்கள்]
1952-ல் மேலே இடமிருந்து வலஞ்சுழியாக: நேகிப், ஈவ்லின், அவர்கள் மகள், சகோதரர் ஆபூட் மற்றும் நேகிபின் மூத்த மகன்
கீழே (முன் வரிசை): 1952-ல் ட்ரிபோலியிலுள்ள நேகிபின் வீட்டில் சகோதரர்கள் ஷம்மஸ், நார், ஆபூட், ஹென்ஷல்
[பக்கம் 26-ன் படம்]
நேகிபும் அவரது மனைவி ஈவ்லினும்