உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w01 11/15 பக். 4-6
  • இயேசு இரட்சிக்கிறார்—எப்படி?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இயேசு இரட்சிக்கிறார்—எப்படி?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மனிதகுலம் கடினமான பிரச்சினையை எதிர்ப்படுகிறது
  • கடவுள் பரிபூரணமான ஒரு பரிகாரத்தை அளிக்கிறார்
  • இயேசுவின் மரணம் பெரும் மதிப்புள்ளது
  • இனி மரணம் இருக்காது!
    கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
  • கிறிஸ்துவின் மீட்கும்பொருள் இரட்சிப்புக்கான கடவுளுடைய ஏற்பாடு
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • இயேசு ஏன் அந்தளவு கஷ்டப்பட்டு இறந்தார்?
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2016
  • இயேசு ஏன் இறந்தார்?
    பைபிள் தரும் பதில்கள்
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
w01 11/15 பக். 4-6

இயேசு இரட்சிக்கிறார்​—எப்படி?

“இயேசு இரட்சிக்கிறார்!” “இயேசு நம் இரட்சகர்!” இப்படிப்பட்ட வாசகங்கள் உலகெங்கிலும் பல நாடுகளில் சுவர்களிலும் பொது இடங்களிலும் எழுதி வைக்கப்பட்டுள்ளன. கோடிக்கணக்கானோர் இயேசுவே தங்கள் இரட்சகர் என்பதை உண்மையாக விசுவாசிக்கின்றனர். “இயேசு நம்மை எவ்வாறு இரட்சிக்கிறார்?” என்று நீங்கள் கேட்டால், “இயேசு நமக்காக மரித்தார்” அல்லது “இயேசு நம்முடைய பாவங்களுக்காக ஜீவனை கொடுத்தார்” என்று ஒருவேளை சொல்வார்கள். ஆம், இயேசுவின் மரணம்தான் நம் இரட்சிப்பை சாத்தியமாக்குகிறது. ஆனால் ஒரு மனிதனின் மரணம் எவ்வாறு திரளான ஜனங்களின் பாவங்களுக்கு விலையை செலுத்த முடியும்? “இயேசுவின் மரணம் எவ்வாறு நம்மை இரட்சிக்க முடியும்?” என யாராவது உங்களிடம் கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்?

இந்தக் கேள்விக்கு பைபிள் எளிமையான பதிலை தருகிறது. அதேசமயம் அது தெளிவாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் உள்ளது. ஆனாலும் இதன் முக்கியத்துவத்தை கிரகித்துக்கொள்வதற்கு, இயேசுவின் வாழ்க்கையையும் மரணத்தையும் மிகக் கடினமான ஒரு பிரச்சினைக்குரிய பரிகாரமாக நாம் முதலில் காண வேண்டும். அப்போதுதான் இயேசுவினுடைய மரணத்தின் அளவிட முடியாத மதிப்பை நாம் சரியாக உணர்ந்துகொள்ள முடியும்.

இயேசு தம் உயிரைக் கொடுப்பதற்கு கடவுள் ஏற்பாடு செய்ததன் மூலம், ஆதாம் பாவம் செய்தபோது உருவான நிலைமையை சரிசெய்து கொண்டிருந்தார். அந்தப் பாவம் என்னே ஒரு துயரமான சம்பவம்! முதல் மனிதனும் அவனுடைய மனைவி ஏவாளும் பரிபூரணர். எழில் கொஞ்சும் அந்த ஏதேன் தோட்டம்தான் அவர்களுடைய வீடு. தங்கள் தோட்ட வீட்டைப் பராமரிக்கும் அர்த்தமுள்ள வேலையை கடவுள் அவர்களுக்குத் தந்தார். பூமிலுள்ள பிற உயிரினங்களை அன்புடன் ஆண்டுகொண்டு அவற்றை அவர்கள் கண்காணிக்க வேண்டும். அவர்கள் பலுகிப்பெருகி இப்பூமியை தங்களுடைய இனத்தால் நிரப்பும்போது, பூத்துக்குலுங்கும் பூங்காவனம் போன்ற அந்தப் பரதீஸின் எல்லைகளை பூகோளமெங்கும் விஸ்தரிக்க வேண்டும். (ஆதியாகமம் 1:28) ஆ, அவர்களுக்கு எப்பேர்ப்பட்ட மகிழ்ச்சியான ஒரு வேலை! மேலும், அவர்கள் ஒருவரோடொருவர் அன்பாக தோழமை கொள்ள முடிந்தது. (ஆதியாகமம் 2:18) அவர்களுக்கு எந்தக் குறையுமில்லை. ஆனந்தமாக இருக்கும் எல்லையில்லா வாழ்க்கை அவர்களுக்கு முன்னால் இருந்தது.

ஆதாமும் ஏவாளும் எப்படி பாவம் செய்ய முடிந்தது என்பதை கற்பனை செய்வது கடினமாக இருக்கிறது. ஆனால் தங்களை படைத்த யெகோவா தேவனுக்கு எதிராகவே முதல் மானிட ஜோடியினர் கலகம் செய்தார்கள். ஆவி சிருஷ்டியான பிசாசாகிய சாத்தான் ஒரு சர்ப்பத்தை பயன்படுத்தி, யெகோவாவுக்கு கீழ்ப்படியாமல் போகும்படி ஏவாளை வஞ்சித்துவிட்டான், பிறகு ஆதாமும் அவளைப் போலவே கீழ்ப்படியாமல் போய்விட்டான்.​—⁠ஆதியாகமம் 3:1-6.

ஆதாமையும் ஏவாளையும் அப்போது கடவுள் என்ன செய்யவிருந்தார் என்பதில் சந்தேகமே இருக்கவில்லை. கீழ்ப்படியாமல் போனால் என்ன நடக்கும் என்பதை அவர் ஏற்கெனவே சொல்லியிருந்தார்: “நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்.” (ஆதியாகமம் 2:16, 17) இப்போது இதைவிட அதிக முக்கியத்துவமுள்ள கேள்விக்கு விடை காண்பது அவசியமாக ஆனது.

மனிதகுலம் கடினமான பிரச்சினையை எதிர்ப்படுகிறது

முதல் பாவத்தினால் மனிதகுலத்திற்கு மிகவும் சிக்கலான பிரச்சினை எழுந்தது. ஆதாம் ஒரு பரிபூரண மனிதனாக வாழ்வை ஆரம்பித்தான். ஆகவே அவனுடைய பிள்ளைகள் பரிபூரணத்தோடு நித்திய வாழ்வை அனுபவித்து ஆனந்தமாக இருந்திருக்க முடியும். ஆனால் ஒரு பிள்ளைக்கு தகப்பனாவதற்கு முன்பே ஆதாம் பாவம் செய்துவிட்டான். ஆகவே அவன் இந்தத் தீர்ப்பை பெற்ற சமயத்தில், முழு மனிதகுலமும் இனிதான் அவனிலிருந்து தோன்ற வேண்டியதாக இருந்தது: “நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்.” (ஆதியாகமம் 3:19) ஆகவே ஆதாம் பாவம்செய்த பின்னர் கடவுள் சொன்னபடியே மரிக்க ஆரம்பித்தபோது முழு மனிதகுலமும் அவனோடுகூட மரணத்தீர்ப்பை பெற்றுக்கொண்டுவிட்டது.

அப்போஸ்தலன் பவுல் பின்னால் இவ்வாறு எழுதினது பொருத்தமாகவே இருந்தது: “ஒரே மனுஷனாலே [ஆதாம்] பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது போலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்தது.” (ரோமர் 5:12) ஆம் பரிபூரணமாக முடிவில்லாமல் வாழும் நம்பிக்கையோடு பிறந்திருக்க வேண்டிய பிள்ளைகள், முதல் பாவத்தின் காரணமாக நோயையும் முதுமையையும் மரணத்தையும் அனுபவிக்க வேண்டியவர்களாக பிறந்தனர்.

“இது எப்படி நியாயம்?” என்று யாராவது கேட்கலாம். “ஆதாம்தானே கீழ்ப்படியாமல் போனான், நாமல்லவே. இப்படியிருக்க நாம் ஏன் நித்திய வாழ்க்கையையும் மகிழ்ச்சியையும் இழக்க வேண்டும்?” ஒரு தந்தை காரை திருடியதற்காக அவரது மகனை சிறையில் வைக்க ஒரு நீதிமன்றம் உத்தரவிடுமேயானால், “அது நியாயமில்லை! நான் எந்தத் தவறும் செய்யவில்லை” என அந்த மகன் புகார் செய்வது நியாயம்தான் என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.​—⁠உபாகமம் 24:⁠16.

முதல் மனுஷனையும் மனுஷியையும் பாவம் செய்ய தூண்டிவிடுவதன் மூலம், கடவுளுக்கு ஒரு தர்மசங்கடமான நிலைமையை ஏற்படுத்திவிடுவதாக சாத்தான் நினைத்திருக்கலாம். மனித வரலாற்றின் ஆரம்பத்திலேயே, அவர்களுக்கு பிள்ளைகள் பிறப்பதற்கு முன்பே பிசாசு தன்னுடைய தாக்குதலை ஆரம்பித்துவிட்டான். ஆதாமுக்கும் ஏவாளுக்கும் பிறக்கப்போகும் பிள்ளைகளைக் குறித்து யெகோவா என்ன செய்வார் என்பதே ஆதாம் பாவம் செய்த அந்த கணத்தில் எழுந்த முக்கியமான ஒரு கேள்வி.

யெகோவா தேவன் நீதியாகவும் நியாயமாகவும் செயல்பட்டார். “அக்கிரமம் தேவனுக்கும், அநீதி சர்வவல்லவருக்கும் தூரமாயிருக்கிறது” என்று நீதிமானாகிய எலிகூ கூறினார். (யோபு 34:10) யெகோவாவை குறித்து தீர்க்கதரிசியாகிய மோசே இவ்வாறு எழுதியிருந்தார்: “அவர் கன்மலை; அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்.” (உபாகமம் 32:4) ஆதாமின் பாவத்தால் உண்டான பிரச்சினைக்கு மெய்க் கடவுள் அளித்த பரிகாரம், பரதீஸிய பூமியில் நித்திய ஜீவனைப் பெறும் நம்முடைய வாய்ப்பை பறித்துவிடவில்லை.

கடவுள் பரிபூரணமான ஒரு பரிகாரத்தை அளிக்கிறார்

பிசாசாகிய சாத்தானுக்கு தீர்ப்பு வழங்கியபோது கடவுள் அளித்த பரிகாரத்தைக் கவனியுங்கள். சாத்தானிடம் யெகோவா இவ்வாறு கூறினார்: “உனக்கும் ஸ்திரீக்கும், [கடவுளுடைய பரலோக அமைப்பு] உன் வித்துக்கும் [சாத்தானின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் உலகம்] அவள் வித்துக்கும் [இயேசு கிறிஸ்து] பகை உண்டாக்குவேன்; அவர் உன் [சாத்தான்] தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை [இயேசுவின் மரணம்] நசுக்குவாய்.” (ஆதியாகமம் 3:15) பைபிளின் இந்த முதல் தீர்க்கதரிசனத்தில், யெகோவா தம்முடைய நோக்கத்தை மறைமுகமாக தெரிவித்தார்; அதாவது, பரலோகத்திலுள்ள தம்முடைய ஆவி-குமாரனை பூமிக்கு அனுப்புவார், அவர் பரிபூரணமான மனிதனாகிய இயேசுவாக வாழ்வார், பின்னர் பாவமில்லாத அந்த நிலையிலேயே அவரது குதிங்கால் நசுக்கப்படும், அதாவது அவர் மரிப்பார் என தெரிவித்தார்.

கடவுள் ஏன் பரிபூரணமான ஒரு மனிதனின் மரணத்தைக் கேட்டார்? சரி, ஆதாம் பாவம் செய்தால் அவன் என்ன தண்டனையை அனுபவிப்பான் என்று யெகோவா தேவன் சொல்லியிருந்தார்? மரணம்தானே? (ஆதியாகமம் 2:16, 17) “பாவத்தின் சம்பளம் மரணம்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (ரோமர் 6:23) ஆதாம் மரித்ததன் மூலம் தன் பாவத்திற்குரிய விலையை செலுத்தினான். அவனுக்கு ஜீவன் கொடுக்கப்பட்டும் பாவத்தைத் தெரிந்துகொண்டான், அதற்கு தண்டனையாக அவன் மரித்தான். (ஆதியாகமம் 3:19) அந்தப் பாவத்தின் காரணமாக முழு மனிதகுலமும் அனுபவிக்க வேண்டியிருந்த அந்தத் தண்டனையைப் பற்றி என்ன? அவர்களுடைய பாவத்தை நிவிர்த்தி செய்ய ஒருவர் மரிப்பது தேவைப்பட்டது. ஆனால் எல்லா மனிதகுலத்தின் மீறுதல்களையும் நியாயமாக யாருடைய மரணத்தால் மூட முடியும்?

கடவுள் பண்டைய இஸ்ரவேலருக்குக் கொடுத்திருந்த நியாயப்பிரமாணத்தில் ‘ஜீவனுக்கு ஜீவன்’ தேவைப்பட்டது. (யாத்திராகமம் 21:23) இந்தச் சட்டப்பூர்வ நியமத்தின்படி, மனிதவர்க்கத்தின் மீறுதல்களை மூடும் மரணத்தின் மதிப்பு, ஆதாம் இழந்ததற்கு சமமாக இருக்க வேண்டும். மற்றொரு பரிபூரண மனிதனின் மரணம் மாத்திரமே பாவத்தின் விலையை செலுத்த முடியும். இயேசு அப்படிப்பட்ட ஒரு மனிதராக இருந்தார். ஆம், ஆதாமிலிருந்து வந்த மீட்கப்படத்தக்க மனிதவர்க்கம் முழுவதையும் இரட்சிப்பதற்கு இயேசு ‘இணையான மீட்கும்பொருளாக’ இருந்தார்.​—⁠1 தீமோத்தேயு 2:6, NW; ரோமர் 5:16, 17.

இயேசுவின் மரணம் பெரும் மதிப்புள்ளது

ஆதாமின் மரணத்திற்கு மதிப்பு ஏதுமில்லை; அவனுடைய பாவத்திற்காக அவன் மரித்தே தீர வேண்டியிருந்தது. ஆனால் இயேசுவின் மரணம் பெரும் மதிப்புள்ளது, ஏனென்றால் அவர் பாவமில்லாதவராக மரித்தார். பாவமுள்ள ஆதாமின் கீழ்ப்படிதலுள்ள சந்ததியாருக்காக, இயேசுவின் பரிபூரண உயிரின் மதிப்பை மீட்கும் பொருளாக யெகோவா தேவன் ஏற்றுக்கொள்ள முடிந்தது. இயேசுவினுடைய பலியின் மதிப்பு வெறுமனே நம்முடைய கடந்த கால பாவங்களை ஈடுசெய்வதோடு நின்றுவிடுவதில்லை. அப்படியானால் நமக்கு எந்த எதிர்காலமும் இருக்காது. பாவத்தில் கருத்தரிக்கப்பட்டிருப்பதால், நாம் மறுபடியும் தவறு செய்வோம். (சங்கீதம் 51:5) ஆதாம் ஏவாளின் சந்ததிக்காக ஆதியில் யெகோவா நோக்கங்கொண்டிருந்த பரிபூரணத்தை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு வகை செய்யும் இயேசுவின் மரணத்திற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கலாம்!

நம்மை பெரும் கடன் சுமையில் (பாவத்தில்) விட்டுவிட்டு இறந்துபோன ஒரு தகப்பனுக்கு ஆதாமை ஒப்பிடலாம். இந்தக் கடனிலிருந்து மீண்டுவர நமக்கு வழியே இல்லை. மறுபட்சத்தில், இயேசு நமக்காக நிறைய சொத்துக்களை விட்டுவிட்டு மரித்துப்போன ஒரு நல்ல தகப்பனைப் போல இருக்கிறார். இது, ஆதாம் நமக்கு சுமையாக வைத்துவிட்டுப்போன கடனிலிருந்து நம்மை விடுவிப்பதோடு நித்தியமாக வாழ்வதற்கும் வழிசெய்கிறது. இயேசுவின் மரணம் வெறுமனே நம்முடைய கடந்த கால பாவங்களை ரத்துசெய்வதாக மட்டும் இல்லை; நம்முடைய எதிர்காலத்திற்கு மகத்தான ஓர் ஏற்பாடாகவும் இருக்கிறது.

இயேசு இரட்சிக்கிறார், ஏனென்றால் அவர் நமக்காக மரித்தார். அவருடைய மரணம் என்னே மதிப்புள்ள ஒரு ஏற்பாடு! ஆதாமின் பாவத்தால் ஏற்பட்ட சிக்கலான பிரச்சினைக்கு கடவுள் கொடுத்திருக்கும் பரிகாரத்தின் பாகமாக நாம் அதைக் காண்கையில், யெகோவாவிலும் காரியங்களை அவர் கையாளும் விதத்திலும் நமக்கிருக்கும் விசுவாசம் பலப்படுகிறது. ஆம், இயேசுவின் மரணம் அவரில் ‘விசுவாசிக்கிற எவரையும்’ பாவத்திலிருந்தும் நோயிலிருந்தும் முதுமையிலிருந்தும் மரணத்திலிருந்தும்கூட விடுவிப்பதற்கு வழிவகையாக இருக்கிறது. (யோவான் 3:16) நம்மை இரட்சிப்பதற்கு கடவுள் செய்திருக்கும் இந்த அன்பான ஏற்பாட்டிற்காக அவருக்கு நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறீர்களா?

[பக்கம் 5-ன் படம்]

மனிதவர்க்கத்தின்மீது பாவத்தையும் மரணத்தையும் ஆதாம் கொண்டுவந்தான்

[பக்கம் 6-ன் படம்]

யெகோவா பரிபூரணமான பரிகாரத்தை அளித்துள்ளார்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்