உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w01 11/15 பக். 21-23
  • மாய்மாலம் உங்களை எப்படி பாதிக்கிறது?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மாய்மாலம் உங்களை எப்படி பாதிக்கிறது?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ‘மாயக்காரரே . . . உங்களுக்கு ஐயோ’
  • “எச்சரிக்கையாயிருங்கள்”
  • ‘மற்றவர்களை தீர்க்காதிருங்கள்’
  • “உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக”
  • ‘செயலிலும் உண்மை மனதோடும்’ அன்பு காட்டுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2017
  • ஆலயத்தில் ஊழியம் முடிவடைகிறது
    எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர்
  • வசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
  • எப்போதும் நல்லதையே செய்யுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2008
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
w01 11/15 பக். 21-23

 மாய்மாலம் உங்களை எப்படி பாதிக்கிறது?

கெத்செமனே தோட்டத்தில், யூதாஸ்காரியோத்து இயேசுவிடம் நெருங்கிவந்து “அவரை மிகவும் மென்மையாக முத்தஞ்செய்தான்.” மென்மையான பாச உணர்ச்சிகளை வெளிப்படுத்த முத்தம் செய்வது அந்தக் காலத்தில் பழக்கமாக இருந்தது. ஆனால் யூதாஸ், இரவில் இயேசுவை கைதுசெய்ய வந்தவர்களுக்கு அவரை காட்டிக்கொடுக்கத்தான் போலியாக இப்படி செய்தான். (மத்தேயு 26:48, 49, NW) யூதாஸ் ஒரு மாய்மாலக்காரன்​—⁠கெட்ட உள்நோக்கங்களை நேர்மை எனும் முகமூடியால் மறைத்து நல்லவன் போல பாசாங்கு செய்பவன். “மாய்மாலக்காரர்” என்பதற்குரிய கிரேக்க வார்த்தையின் அர்த்தம் “பதில் சொல்பவர்”; இது மேடை நடிகரையும் குறிக்கிறது. காலப்போக்கில், மற்றவர்களை ஏமாற்றுவதற்காக பாசாங்கு செய்கிற எவரையும் குறிப்பதற்கு இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டது.

மாய்மாலத்திற்கு நீங்கள் எப்படி பிரதிபலிக்கிறீர்கள்? உதாரணமாக, புகைபிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கிறது என்பதற்கு மருத்துவ அத்தாட்சி இருக்கிறபோதிலும், புகைபிடிப்பதை அதன் உற்பத்தியாளர்கள் ஊக்குவிக்கும்போது உங்களுக்கு கோபம் வருகிறதா? காப்பகங்களில் நம்பி ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகளை அவர்கள் கொடுமையாக நடத்தினால் உங்களுக்கு எரிச்சல் வருகிறதா? உண்மை நண்பன் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தவர் உங்களையே ஏமாற்றிவிட்டால் உங்கள் மனம் புண்பட்டுவிடுகிறதா? மத மாய்மாலம் உங்களை எப்படி பாதிக்கிறது?

‘மாயக்காரரே . . . உங்களுக்கு ஐயோ’

இயேசு பூமியில் இருந்தபோது நிலவிய மத சூழலை எண்ணிப் பாருங்கள். வேதபாரகரும் பரிசேயரும் கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை உண்மையுடன் கற்பிக்கிறவர்களாக பாசாங்கு செய்தார்கள். ஆனால் உண்மையில் கடவுளிடமிருந்து கவனத்தைத் திருப்பிய மனித போதனைகளால் மக்கள் மனதை நிரப்பினார்கள். வேதபாரகரும் பரிசேயரும் நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை நுணுக்கமாக பிடித்துக்கொண்டார்கள், ஆனால் அன்பையும் இரக்கத்தையும் பிரதிபலித்த முக்கியமான நியமங்களை அசட்டை செய்தார்கள். பொது இடங்களில் பக்திமான்கள் போல பாசாங்கு செய்தார்கள், ஆனால் தனியாக இருக்கும்போது எல்லா மோசமான காரியங்களையும் செய்தார்கள். அவர்களுடைய செயல்களுக்கும் சொற்களுக்கும் சம்பந்தமே இருக்கவில்லை. ‘மனுஷர் காண வேண்டும் என்பதற்காகவே’ காரியங்களைச் செய்தார்கள். அவர்கள் ‘வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருந்தார்கள், அவை புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும்.’ இயேசு அவர்களுடைய மாய்மாலத்தை தைரியமாய் அம்பலப்படுத்தி, “மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ” என்று திரும்பத் திரும்ப கூறினார்.​—⁠மத்தேயு 23:5, 13-31.

அந்த நாட்களில் நீங்கள் வாழ்ந்திருந்தால், நேர்மையான இருதயமுள்ள மற்றவர்களுக்கு இருந்ததைப் போலவே உங்களுக்கும் இந்த மத மாய்மாலம் அருவருப்பாக இருந்திருக்கும். (ரோமர் 2:21-24; 2 பேதுரு 2:1-3) வேதபாரகர், பரிசேயர் ஆகியோரின் மாய்மாலத்தைப் பார்த்து, மதமே வேண்டாமென்று எல்லாவற்றையும்​—⁠இயேசு கிறிஸ்துவும் அவருடைய சீஷர்களும் கற்பித்து கடைப்பிடித்து வந்த மதத்தையும்கூட​—⁠நிராகரித்துவிடும் அளவுக்கு கசப்படைந்திருப்பீர்களா? அப்படி செய்திருந்தால் உங்களுக்குத்தானே நஷ்டமாகியிருக்கும்?

மதப்பற்று மிக்கவர்களின் மாய்மாலமிக்க நடத்தை நாம் மதத்தையே வெறுக்கும்படி செய்யலாம். ஆனால், இப்படிச் செய்தால் உண்மை வணக்கத்தாரின் நேர்மையான நடத்தையைக் காண முடியாதபடி அது நம் கண்களை மூடிவிடும். சொல்லப்போனால், மாய்மாலத்திலிருந்து நம்மை காத்துக்கொள்ள நாம் அமைக்கும் பாதுகாப்பு வேலிகளே நம்மை உண்மையான நண்பர்களிடமிருந்து தூரப்படுத்தும் தடுப்புச் சுவர்களாக ஆகிவிடலாம். ஆகவே மாய்மாலத்திற்கு நாம் பிரதிபலிக்கும் விதம் நியாயமானதாகவும் சமநிலையானதாகவும் இருத்தல் வேண்டும்.

“எச்சரிக்கையாயிருங்கள்”

முதலில் யார் மாய்மாலக்காரர் என்பதைக் கண்டுபிடிக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இது எப்போதும் சுலபமல்ல. இதை ஒரு குடும்பம் பேரிழப்பின் மூலம் தெரிந்துகொண்டது. மருத்துவமனையின் ஒரு தவறான செயலால் அவர்களின் அம்மா நினைவிழந்து கோமா நிலைக்கு சென்றுவிட்டார்கள். தவறிழைத்த மருத்துவமனைக்கு எதிராக வழக்குத் தொடர ஒரு வழக்கறிஞரை அந்தக் குடும்பத்தார் ஏற்பாடு செய்தார்கள். இவர் அங்கிருந்த ஒரு சர்ச்சில் பிரசங்கியாராகவும் இருந்தார். மருத்துவமனை 34 லட்சம் டாலர்களை நஷ்ட ஈடாக வழங்கியபோதிலும் குடும்பத்தின் துயரநிலை மிகவும் மோசமானது. அந்த அம்மா திவாலான நிலையில் மரித்தார், சவ அடக்கம் செய்யக்கூட பணமில்லை. ஏன்? ஏனென்றால் அந்த வழக்கறிஞர் பெருந்தொகையை தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டார். அவரைப் பற்றி ஒரு சட்ட பத்திரிகை இவ்வாறு கூறியது: “அவர் தன் நடத்தைக்கு ஏற்றாற்போல் பிரசங்கித்திருந்தால் . . . , அடுத்தவனை அடித்துப் பிடுங்கி சாப்பிடுவோம் என்றே பிரசங்கித்திருப்பார்.” இப்படிப்பட்ட ஆட்களிடமிருந்து நாம் எவ்வாறு நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்?

இயேசு தம்முடைய நாளில் மத மாய்மாலத்தை எதிர்ப்பட்டவர்களிடம் ‘எச்சரிக்கையாயிருக்குமாறு’ ஆலோசனை கூறினார். (மத்தேயு 16:6; லூக்கா 12:1) ஆம், நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உயர்ந்த உள்ளம் படைத்தவர்கள் போலும் துளிகூட கள்ளம் கபடமே இல்லாதவர்கள் போலும் சிலர் தோன்றலாம். ஆனால் நாம் நியாயமான அளவு எச்சரிக்கையாயிருக்க வேண்டும், ஒருவரின் வெளித்தோற்றத்தைப் பார்த்து உடனடியாக மயங்கிவிடக் கூடாது. போலி ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பது தெரியவந்தால், நமக்கு கிடைக்கும் நோட்டுகளை நாம் கவனமாக சரி பார்ப்போம் அல்லவா?

மெய்க் கிறிஸ்தவ சபைக்குள்ளும் மாய்மாலக்காரர்கள் நுழைந்திருக்கிறார்கள். சீஷனாகிய யூதா இவர்களைக் குறித்து இவ்வாறு எச்சரித்தார்: “இவர்கள் அச்சமின்றி உங்கள் அன்பின் விருந்துகளில் கூடி உண்டு அவற்றைக் கறைபடுத்துகிறார்கள். இவர்கள் தங்கள் நலனில் மட்டுமே கருத்தாய் இருப்பவர்கள்; காற்றால் அடித்துச் செல்லப்படும் நீரற்ற மேகங்கள்; கனி தரும் காலத்தில் கனி தராமல், பின்னர் வேரோடு பிடுங்கப்படும் மரங்களைப் போல இரு முறை செத்தவர்கள்.”​—⁠யூதா 12, பொ.மொ.

‘எச்சரிக்கையாயிருப்பது’ என்றால், அன்புள்ளவர் போல நடித்துக்கொண்டு ஆனால் உண்மையில் சுயநலவாதியாக கடவுளுடைய வார்த்தையில் இல்லாத கருத்துக்களை பரப்புகிற ஒரு ஆசாமியிடம் ஏமாந்து போவதை தவிர்ப்பதாகும். அமைதியான தண்ணீருக்கு கீழே இருக்கும் ஒரு கூர்மையான பாறையைப் போல, இப்படிப்பட்ட ஓர் ஆள் விழிப்பாயிராதவருக்கு ஆவிக்குரிய கப்பற்சேதத்தை ஏற்படுத்தக்கூடும். (1 தீமோத்தேயு 1:19) மாய்மாலக்காரன் ஆன்மீக புத்துணர்ச்சியை அள்ளித்தருவதாக வாக்கு கொடுக்கலாம், ஆனால் அவன் ‘தண்ணீரற்ற மேகங்களாக’ ஒன்றுமே கொடுக்க முடியாதவனாக நிரூபிக்கலாம். கனியற்ற ஒரு மரத்தைப் போல, ஏமாற்றுக்காரன் உண்மையான கிறிஸ்தவ கனிகளை பிறப்பிக்க மாட்டான். (மத்தேயு 7:15-20; கலாத்தியர் 5:19-21) ஆம், இப்படி ஏமாற்றுகிறவர்களைக் குறித்து நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஆனால் அதே சமயத்தில் எல்லாருடைய உள்ளெண்ணங்களும் தப்பாகவே இருக்கும் என்றும் தப்புக்கணக்குப் போட்டுவிடக் கூடாது.

‘மற்றவர்களை தீர்க்காதிருங்கள்’

அபூரண மனிதர்களுக்கு தங்களுடைய சொந்த தவறுகளை கவனியாமல் மற்றவர்களுடைய குறைகளை சுட்டிக்காட்டுவது எவ்வளவு சுலபமாக உள்ளது! இந்த மனச்சாய்வுதான் மாய்மாலத்திற்கு முக்கிய காரணம். “மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்” என்று இயேசு சொன்னார். அவர் கொடுக்கும் இந்த ஆலோசனைக்கு செவிகொடுப்பது நமக்கு நல்லது: “நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; . . . நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?”​—⁠மத்தேயு 7:1-5.

சில சமயங்களில் மற்றவர்கள் மாய்மாலம் செய்வது போல தோன்றினால், அவசரப்பட்டு அவர்களை மாய்மாலக்காரர் என்று நாம் முத்திரை குத்திவிடாதபடி ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். உதாரணமாக, அப்போஸ்தலன் பேதுரு எருசலேமிலிருந்து அந்தியோகியாவுக்கு வந்த யூதர்களை பிரியப்படுத்துவதற்காக அங்கிருந்த புறஜாதிகளாயிருந்த உடன் விசுவாசிகளிடமிருந்து “விலகிப் பிரி”ந்திருந்தார். ‘மற்ற யூதருடனும் பேதுருவோடும்கூட மாயம்பண்ணுவதில்’ பர்னபாவும் ‘சேர்ந்துகொண்டார்.’ புறஜாதிகள் கிறிஸ்தவ சபையினுள் அனுமதிக்கப்படுவதற்கு வழியை திறந்து வைக்கும் பாக்கியம் பெற்றவராயிருந்தும் பேதுரு இப்படிச் செய்துவிட்டார். (கலாத்தியர் 2:11-14; அப்போஸ்தலர் 10:24-28, 34, 35) ஆனால் பர்னபாவும் பேதுருவும் இப்படி இலேசாக தடுமாறியது அவர்களை வேதபாரகருக்கும் பரிசேயருக்கும் அல்லது யூதாஸ்காரியோத்துக்கும் சமமாக ஆக்கிவிடவில்லை.

“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக”

“நீ தர்மஞ்செய்யும்போது, மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் [“நாடக நடிகர்கள்,” ஃபிலிப்ஸ்] ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதுவியாதே” என்று இயேசு அறிவுரை கூறினார். (மத்தேயு 6:2) “உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (ரோமர் 12:9) ‘சுத்தமான இருதயத்திலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பை’ காட்டும்படி இளைஞனாகிய தீமோத்தேயுவை ஊக்கப்படுத்தினார். (1 தீமோத்தேயு 1:5) நம்முடைய அன்பும் விசுவாசமும், சுயநலத்தாலும் வஞ்சனையாலும் கறைபடுத்தப்படாமல் உண்மையாக இருந்தால், மற்றவர்கள் நம்மை நம்புவார்கள். நம்மை சுற்றியுள்ளவர்கள் நம்மிடமிருந்து உண்மையான பலத்தையும் உற்சாகத்தையும் பெற்றுக்கொள்வார்கள். (பிலிப்பியர் 2:4; 1 யோவான் 3:17, 18; 4:20, 21) விசேஷமாக நமக்கு யெகோவாவின் அங்கீகாரம் இருக்கும்.

மறுபட்சத்தில் மாய்மாலமோ கடைசியாக மரணத்தை கொண்டுவரும். முடிவில் மாய்மாலம் அம்பலமாகிவிடும். “வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை; அறியப்படாத இரகசியமும் இல்லை” என்று இயேசு கிறிஸ்து சொன்னார். (மத்தேயு 10:26; லூக்கா 12:2) ஞானியாகிய சாலொமோன் ராஜா இவ்வாறு அறிவித்தார்: “ஒவ்வொரு கிரியையையும் அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.”​—⁠பிரசங்கி 12:⁠14.

இதற்கிடையில் உண்மையான நண்பர்களின் தூய அன்பை இழந்துவிடும் அளவுக்கு மற்றவர்களின் மாய்மாலத்தால் நாம் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? அளவுக்கு அதிகமாக சந்தேகப்படாமல், அதே சமயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நம்முடைய அன்பையும் விசுவாசத்தையும் மாயமற்றதாக வைத்துக்கொள்ள நாம் கண்டிப்பாக முயற்சி செய்வோமாக.​—⁠யாக்கோபு 3:17; 1 பேதுரு 1:⁠22.

[பக்கம் 22-ன் படங்கள்]

வேதபாரகர், பரிசேயர் ஆகியோரின் மாய்மாலத்தினால், இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் அவருடைய சீஷர்களிடமிருந்தும் நீங்கள் விலகியிருந்திருப்பீர்களா?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்