மூப்பர்களே—பொறுப்புகளை ஏற்க மற்றவர்களை பயிற்றுவியுங்கள்
உலகம் முழுவதிலும் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் கண்காணிகளாக சேவிக்க அநேக ஆண்கள் தேவைப்படுகின்றனர். இதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன.
முதலாவதாக, “சிறியவன் பலத்த ஜாதி”யாவான் என்ற வாக்குறுதியை யெகோவா நிறைவேற்றி வருகிறார். (ஏசாயா 60:22) அவருடைய தகுதியற்ற தயவின் காரணமாகவே, கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் பத்து லட்சம் புதிய சீஷர்கள் யெகோவாவின் சாட்சிகளாக முழுக்காட்டப்பட்டுள்ளனர். புதிதாக முழுக்காட்டுதல் பெற்றவர்கள் கிறிஸ்தவ முதிர்ச்சியை நோக்கி முன்னேறுவதற்கு உதவிக்கரம் நீட்ட பொறுப்புள்ள ஆண்கள் தேவை.—எபிரெயர் 6:1, NW.
இரண்டாவதாக, பல ஆண்டுகள் மூப்பர்களாக சேவித்த சிலர் வயோதிகம் அல்லது சுகவீனம் காரணமாக, சபையில் கவனித்து வந்த சில பொறுப்புகளை இனிமேலும் கவனிக்க முடியாத கட்டாயத்திற்குள்ளாகி இருக்கின்றனர்.
மூன்றாவதாக, வைராக்கியமுள்ள கிறிஸ்தவ மூப்பர்களில் சிலர் இப்போது மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக் குழுக்களில் (HLC), மண்டல கட்டுமான குழுக்களில் அல்லது மாநாட்டு மன்ற குழுக்களில் சேவிக்கின்றனர். சில சந்தர்ப்பங்களில், தங்கள் பல்வேறு பொறுப்புகளை சரிவர நிறைவேற்றுவதற்காக உள்ளூர் சபைகளில் கவனித்து வந்த பொறுப்புகளில் சிலவற்றை அவர்கள் தியாகம் செய்ய நேர்ந்திருக்கிறது.
தகுதி பெற்ற அதிகமான ஆண்கள் தேவை என்பதால் இதை எவ்வாறு பூர்த்தி செய்வது? பயிற்சி அளிப்பதே இதற்கான தீர்வு. “மற்றவர்களுக்குப் போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷர்க”ளை பயிற்றுவிக்கும்படி கிறிஸ்தவ கண்காணிகளை பைபிள் உற்சாகப்படுத்துகிறது. (2 தீமோத்தேயு 2:2) திறமை அல்லது தகுதி பெறும்படி கற்றுக்கொடுப்பதே “பயிற்றுவி” என்ற வினைச்சொல்லின் அர்த்தமாகும். தகுதிவாய்ந்த மற்ற ஆண்களுக்கு மூப்பர்கள் எவ்வாறு பயிற்சியளிக்கலாம் என்பதை இப்போது கவனிப்போம்.
யெகோவாவின் மாதிரியை பின்பற்றுங்கள்
இயேசு கிறிஸ்து அவருடைய வேலையில் திறமையும் தகுதியும் வாய்ந்தவராக இருந்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதில் ஆச்சரியப்படுவதற்கும் ஒன்றுமில்லை, ஏனெனில் அவருக்கு பயிற்சி கொடுத்தது யெகோவா தேவன் ஆயிற்றே! இந்த பயிற்சி அந்தளவுக்கு திறம்பட்டதாக இருக்கக் காரணம் என்ன? யோவான் 5:20-ல் மூன்று காரணங்களை இயேசு குறிப்பிட்டார்: ‘பிதாவானவர் [1] குமாரனிடத்தில் அன்பாயிருந்து, [2] தாம் செய்கிறவைகளையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார்; . . . [3] இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகளையும் அவருக்குக் காண்பிப்பார்.’ இந்த ஒவ்வொரு குறிப்பையும் ஆழமாக ஆராய்ந்தால் பயிற்சியளிப்பது சம்பந்தமாக அநேக விஷயங்களை அறிந்துகொள்ளலாம்.
முதலில், ‘பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருக்கிறார்’ என இயேசு கூறியதை கவனியுங்கள். சிருஷ்டிப்பின் ஆரம்பத்திலிருந்தே யெகோவாவுக்கும் அவருடைய குமாரனுக்கும் மத்தியில் அன்பான பந்தம் நிலவி வந்தது. அந்த உறவை பற்றி நீதிமொழிகள் 8:30 தெளிவாக கூறுகிறது: ‘நான் [இயேசு] அவர் [யெகோவா தேவன்] அருகே செல்லப்பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன்.’ தாம் யெகோவாவின் ‘மனமகிழ்ச்சியாய்’ இருந்ததை பற்றி இயேசுவுக்கு எந்த சந்தேகமும் இருக்கவில்லை. தகப்பன் அருகே வேலை செய்கையில் தாம் பெற்ற சந்தோஷத்தை மறைக்கவும் இயேசு முயலவில்லை. கிறிஸ்தவ மூப்பர்களுக்கும் பயிற்சி பெறுகிறவர்களுக்கும் இடையில் அன்பான, ஒளிவுமறைவற்ற உறவு நிலவினால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்!
பிதாவானவர் ‘தாம் செய்கிறவைகளையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார்’ என்பதே இயேசு கூறிய இரண்டாவது விஷயமாகும். யெகோவா, சர்வலோகத்தை சிருஷ்டிக்கையில் இயேசு அவருக்கு ‘அருகே’ இருந்தார் என நீதிமொழிகள் 8:30 கூறுவதை இந்த வார்த்தைகள் உறுதி செய்கின்றன. (ஆதியாகமம் 1:26) இந்த உன்னத உதாரணத்தை மூப்பர்கள் பின்பற்றலாம், வேலைகளை திறமையாக செய்ய கற்பிக்கையில் அவர்கள் உதவி ஊழியர்களோடு சேர்ந்து நெருக்கமாக வேலை செய்யலாம். என்றாலும், புதிதாக நியமிக்கப்பட்ட உதவி ஊழியர்களுக்கு மட்டுமே தொடர்ச்சியான பயிற்சி தேவை என நினைத்துவிடாதீர்கள். கண்காணியாக சேவை செய்வதற்கு தகுதி பெற பல வருடங்களாக உழைத்து, இன்னமும் நியமிக்கப்படாத உண்மையுள்ள சகோதரர்களை நினைத்து பார்த்தீர்களா? (1 தீமோத்தேயு 3:1) அவர்கள் என்ன வழிகளில் முன்னேற வேண்டும் என்பதை பற்றி மூப்பர்கள் அவர்களுக்கு தெளிவான ஆலோசனையைக் கொடுக்க வேண்டும்.
உதாரணமாக, ஓர் உதவி ஊழியர் நம்பகமானவராக, காலந்தவறாதவராக, நியமிப்புகளை பொறுப்பாக கையாளுபவராக இருக்கலாம். போதிப்பதிலும் அவர் கெட்டிக்காரராக இருக்கலாம். சபையில் அநேக வழிகளில் பாராட்டத்தக்க வேலை செய்யலாம். ஆனால், உடன் கிறிஸ்தவர்களிடம் கொஞ்சம் முரட்டுத்தனமாக நடந்துகொள்வதை அவர் உணராமல் இருக்கலாம். மூப்பர்கள் “ஞானத்திற்குரிய சாந்தத்”தை காண்பிக்க வேண்டும். (யாக்கோபு 3:13) அவருக்கு இருக்கும் பிரச்சினையை தெளிவாக உணர்த்தி, குறிப்பிட்ட உதாரணங்களை சொல்லி, முன்னேற நடைமுறையான ஆலோசனைகளை கொடுத்து அந்த உதவி ஊழியரிடம் ஒரு மூப்பர் பேசுவதே தயவான செயலாக இருக்குமல்லவா? அந்த மூப்பரின் ஆலோசனை ‘உப்பால் சாரமேறினதாக’ இருந்தால் அவர் கூறுபவை உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படலாம். (கொலோசெயர் 4:6) அந்த உதவி ஊழியரும் தனக்கு அளிக்கப்படும் எந்த ஆலோசனையையும் மனப்பூர்வமாக ஏற்று, பின்பற்றினால் மூப்பர் தன் வேலையை அதிக சந்தோஷத்தோடு செய்ய இயலும்.—சங்கீதம் 141:5.
சில சபைகளில், மூப்பர்கள் உதவி ஊழியர்களுக்கு தொடர்ந்து நடைமுறையான உதவி அளித்து வருகிறார்கள். வியாதியாய் இருப்போரை அல்லது வயோதிகரை சந்திக்க செல்கையில் தகுதிவாய்ந்த உதவி ஊழியர்களை தங்களோடு அழைத்து செல்கிறார்கள். இவ்வாறு, மேய்ப்பு சந்திப்புகள் செய்வதில் உதவி ஊழியர்கள் அனுபவம் பெறுகிறார்கள். ஆவிக்குரிய முன்னேற்றம் அடைய ஒரு உதவி ஊழியரே தனிப்பட்ட விதமாக செய்ய முடிந்த அநேக காரியங்களும் உள்ளன.—“உதவி ஊழியர்கள் என்ன செய்யலாம்” என்ற கீழே உள்ள பெட்டியை காண்க.
எதிர்கால வளர்ச்சியை மனதில் வைத்து யெகோவா அவருக்கு பயிற்சியளித்ததே இயேசுவின் பயிற்சி அந்தளவுக்கு திறம்பட்டதாக இருக்க மூன்றாவது காரணமாகும். ‘இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகளை’ குமாரனுக்கு காண்பிப்பார் என பிதாவை பற்றி இயேசு கூறினார். இயேசு பூமியிலிருக்கையில் பெற்ற அனுபவம், எதிர்கால நியமிப்புகளை கையாள தேவைப்படும் குணங்களை வளர்த்துக்கொள்ள அவருக்கு உதவின. (எபிரெயர் 4:15; 5:8, 9) உதாரணமாக, சீக்கிரத்தில் இயேசு எவ்வளவு முக்கியமான பொறுப்பை ஏற்க போகிறார்! இப்போது மரித்திருக்கும் கோடானுகோடி பேரை உயிர்ப்பித்து நியாயந்தீர்ப்பது எளிதான காரியமல்லவே!—யோவான் 5:21, 22.
இன்று மூப்பர்களும் எதிர்கால தேவைகளை மனதில் வைத்தே உதவி ஊழியர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும். தற்போதைய தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான மூப்பர்களும் உதவி ஊழியர்களும் இருப்பதாக தோன்றினாலும், ஒரு புதிய சபை பிறந்தால் போதுமான ஊழியர்கள் இருப்பார்களா? பல சபைகள் உருவாக்கப்பட்டால் என்னவாகும்? கடந்த மூன்று வருடங்களில் உலகம் முழுவதிலும் 6,000-த்திற்கும் அதிகமான புதிய சபைகள் ஏற்படுத்தப்பட்டன. அந்த புதிய சபைகளை கவனித்துக்கொள்ள எத்தனை எத்தனை மூப்பர்களும் உதவி ஊழியர்களும் தேவைப்படுகின்றனர்!
மூப்பர்களே, நீங்கள் பயிற்சி அளிப்பவர்களோடு கனிவான, தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொள்வதன் மூலம் யெகோவாவின் உதாரணத்தை பின்பற்றுகிறீர்களா? தங்கள் வேலையை எவ்வாறு செய்ய வேண்டுமென அவர்களுக்கு காண்பிக்கிறீர்களா? எதிர்கால தேவைகளை மனதில் வைத்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கிறீர்களா? இயேசுவிற்கு பயிற்சி அளித்ததில் யெகோவாவின் முன்மாதிரியை பின்பற்றினால் அநேகருக்கு அபரிமிதமான ஆசீர்வாதங்கள் கிட்டும்.
பகிர்ந்து கொடுக்க பயப்படாதீர்கள்
பல முக்கிய பொறுப்புகளை நல்ல விதத்தில் கையாள பழகியிருக்கும் திறமைவாய்ந்த மூப்பர்கள் அதிகாரத்தை பகிர்ந்து கொடுக்க கொஞ்சம் தயங்கலாம். முன்பு பகிர்ந்து கொடுக்க முயன்றும் நல்ல பலன்கள் கிடைக்காமல் போயிருக்கலாம். ஆகவே, ‘ஒரு வேலையை நல்ல விதமாக செய்ய வேண்டும் என்றால் அதை நீங்களே செய்ய வேண்டும்’ என்ற மனநிலையை அவர்கள் வளர்த்திருக்கலாம். ஆனால் அந்த மனநிலை, பைபிளில் குறிப்பிடப்பட்ட யெகோவாவின் சித்தத்திற்கு இசைவாக இருக்கிறதா? அனுபவசாலிகள் போதிய அனுபவம் இல்லாதவர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும் என்பதே கடவுளுடைய சித்தமல்லவா?—2 தீமோத்தேயு 2:2.
யோவான் மாற்கு, அப்போஸ்தலன் பவுலோடு பயணம் செய்கையில் பம்பிலியாவில் தன் நியமிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு வீடு திரும்பியதால் பவுல் பெரும் ஏமாற்றமடைந்தார். (அப்போஸ்தலர் 15:38, 39) என்றாலும், இப்படி நடந்துவிட்டதே என்பதற்காக மற்றவர்களுக்கு பயிற்சியளிப்பதை பவுல் நிறுத்திவிடவில்லை. மற்றொரு இளம் சகோதரனான தீமோத்தேயுவை தேர்ந்தெடுத்து, மிஷனரி ஊழியத்தில் அவருக்கு பயிற்சியளித்தார்.a (அப்போஸ்தலர் 16:1-3) மிஷனரிகளுக்கு பெரோயாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் பவுல் அங்கே இருப்பதற்கு சாத்தியமில்லாமல் போனது. ஆகவே, அந்த புதிய சபையை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை வயதுவந்த, முதிர்ந்த சகோதரனான சீலாவிடமும் தீமோத்தேயுவிடமும் ஒப்படைத்தார். (அப்போஸ்தலர் 17:13-15) சீலாவிடமிருந்து தீமோத்தேயு பல விஷயங்களை கற்றுக்கொண்டார் என்பதில் சந்தேகமில்லை. கூடுதலான பொறுப்புகளை பெற தீமோத்தேயு தயாரான பிறகு, தெசலோனிக்கேயில் இருந்த சபையை உற்சாகப்படுத்த பவுல் அவரை அனுப்பி வைத்தார்.—1 தெசலோனிக்கேயர் 3:1-3.
பவுலுக்கும் தீமோத்தேயுவிற்கும் இடையிலிருந்த உறவு பாசமற்ற, உணர்ச்சிகளற்ற ஒன்றல்ல. அவர்களிடையே கனிவான உறவு மலர்ந்தது. பவுல், கொரிந்துவிலிருந்த சபைக்கு எழுதுகையில் தீமோத்தேயுவை பற்றி, ‘பிரியமும், கர்த்தருக்குள் உண்மையுமுள்ள குமாரன்’ என குறிப்பிட்டார்; அவரைத்தான் அங்கு அனுப்பவும் தீர்மானித்திருந்தார். மேலுமாக, ‘கிறிஸ்துவுக்குள்ளான என் நடக்கைகளை அவன் [தீமோத்தேயு] உங்களுக்கு ஞாபகப்படுத்துவான்’ என்றும் கூறினார். (1 கொரிந்தியர் 4:17) பவுல் கொடுத்த பயிற்றுவிப்பை தீமோத்தேயு நல்ல விதமாக உபயோகித்துக் கொண்டார், தன் நியமிப்புகளை சரிவர செய்து முடிப்பதில் நல்ல தேர்ச்சியும் பெற்றார். பவுல் தீமோத்தேயுவிற்கு செய்ததை போலவே, கரிசனையுள்ள மூப்பர்கள் உண்மையான அக்கறையுடன் அளித்த பயிற்சியை நன்கு பயன்படுத்திக் கொண்ட அநேக இளம் சகோதரர்கள் இப்போது திறம்பட்ட உதவி ஊழியர்களாக, மூப்பர்களாக, ஏன் பயணக் கண்காணிகளாகக்கூட முன்னேறியிருக்கின்றனர்.
மூப்பர்களே, மற்றவர்களை பயிற்றுவியுங்கள்!
ஏசாயா 60:22-ல் உள்ள தீர்க்கதரிசனம் இன்று நிறைவேறி வருவதில் எந்த சந்தேகமும் இல்லை. யெகோவாவே ‘சிறியவனை பலத்த ஜாதியாக’ ஆக்குகிறார். அந்த ஜாதி தொடர்ந்து ‘பலமுள்ளதாக’ இருக்க வேண்டுமென்றால் அது நன்கு ஒழுங்கமைக்கப்பட்டிருக்க வேண்டும். மூப்பர்களே, அதிக பயிற்சி பெற தகுதியான, ஒப்புக்கொடுத்த சகோதரர்களை பயிற்றுவிக்கும் வழிகளை பற்றி நீங்கள் ஏன் யோசித்துப் பார்க்கக்கூடாது? முன்னேறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொரு உதவி ஊழியரும் தெளிவாக அறிந்துகொள்ளும்படி பார்த்துக் கொள்ளுங்கள். முழுக்காட்டுதல் பெற்ற சகோதரர்களே, தனிப்பட்ட விதமாக உங்களிடம் காட்டப்படும் எந்த அக்கறையையும் நன்றாக உபயோகித்துக் கொள்ளுங்கள். உங்கள் திறமை, அறிவு, அனுபவம் ஆகியவற்றில் முன்னேற உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். அன்புடன் உதவியளிக்கும் இப்படிப்பட்ட ஒரு திட்டத்தை யெகோவா நிச்சயமாக ஆசீர்வதிப்பார்.—ஏசாயா 61:5.
[அடிக்குறிப்பு]
a மற்றொரு சந்தர்ப்பத்தில் பவுல் மறுபடியும் யோவான் மாற்குவோடு ஊழியம் செய்தார்.—கொலோசெயர் 4:10.
[பக்கம் 30-ன் பெட்டி]
உதவி ஊழியர்கள் என்ன செய்யலாம்
மூப்பர்கள் உதவி ஊழியர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும் என்றாலும் தங்களுடைய ஆவிக்குரிய முன்னேற்றத்தை அதிகரிக்க உதவி ஊழியர்களே செய்ய முடிந்த அநேக காரியங்களும் உள்ளன.
—நியமிப்புகளை நிறைவேற்றுவதில் உதவி ஊழியர்கள் சுறுசுறுப்பு மிக்கவர்களாகவும் நம்பத்தக்கவர்களாகவும் இருக்க வேண்டும். நல்ல படிப்பு பழக்கங்களையும் அவர்கள் உருவாக்கிக்கொள்ள வேண்டும். படிப்பிலும் படித்ததை பின்பற்றுவதிலுமே முன்னேற்றம் பெருமளவு சார்ந்துள்ளது.
—ஓர் உதவி ஊழியர், கிறிஸ்தவ கூட்டத்தில் பேச்சு கொடுக்க தயாரிக்கையில் திறம்பட்ட ஒரு மூப்பரை அணுகி அதை நன்கு கொடுப்பதற்கு ஆலோசனைகள் கேட்க தயங்கக்கூடாது.
—ஓர் உதவி ஊழியர், தான் கொடுக்கும் பைபிள் பேச்சை கூர்ந்து கவனித்து, முன்னேறுவதற்கு ஆலோசனை தரும்படி ஒரு மூப்பரிடம் கேட்கலாம்.
உதவி ஊழியர்கள் மூப்பர்களிடமிருந்து ஆலோசனை கேட்டு, ஏற்றுக்கொண்டு, பின்பற்ற வேண்டும். இவ்வாறு செய்யும்போது அவர்களுடைய முன்னேற்றம் “யாவருக்கும் விளங்கும்.”—1 தீமோத்தேயு 4:15.