தொடர்ந்து நற்குணத்தைக் காட்டுங்கள்
“வெளிச்சத்தின் கனி சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும்.” —எபேசியர் 5:9, தி.மொ.
1. சங்கீதம் 31:19 சொல்வதை தாங்கள் ஒப்புக்கொள்வதாக இப்போது லட்சக்கணக்கானோர் எப்படி காட்டுகிறார்கள்?
யெ கோவாவுக்கு மகிமையைக் கொண்டுவருவதே எந்த மனிதனும் செய்யக்கூடிய மிகச் சிறந்த நற்செயலாகும். கடவுளுடைய நற்குணத்திற்காக அவரைத் துதிப்பதன் மூலம் லட்சக்கணக்கானோர் இன்று அவருக்கு மகிமையைக் கொண்டுவருகின்றனர். யெகோவாவிடம் உண்மைத்தன்மையை வெளிக்காட்டும் சாட்சிகளாக, பின்வருமாறு சங்கீதக்காரன் பாடியதை நாம் முழு மனதுடன் ஒப்புக்கொள்கிறோம்: “உமக்குப் பயந்தவர்களுக்கென்று நீர் வைத்திருக்கிற நன்மை [“நற்குணம்,” NW] எவ்வளவு பெரிது”!—சங்கீதம் 31:19, தி.மொ.
2, 3. பிரசங்கிப்பதோடு நல்நடத்தையும் இல்லையென்றால் என்ன ஏற்படலாம்?
2 யெகோவாவிடம் காட்டும் பயபக்தி, அவருடைய நற்குணத்திற்காக அவரை போற்றிப் புகழ நம்மைத் தூண்டுகிறது. மேலும், ‘யெகோவாவை துதித்து, அவரை ஸ்தோத்திரித்து, அவருடைய ராஜ்யத்தின் சிறந்த மகிமை பிரதாபத்தைத் தெரிவிக்கும்படியும்’ அது நம்மை ஊக்குவிக்கிறது. (சங்கீதம் 145:10-13) இதனிமித்தமே நாம் ராஜ்ய பிரசங்கிப்பிலும் சீஷராக்கும் ஊழியத்திலும் ஆர்வத்துடன் பங்குகொள்கிறோம். (மத்தேயு 24:14; 28:19, 20) நிச்சயமாகவே பிரசங்கிப்பது மட்டும் போதாது, நல்நடத்தையும் தேவை. இல்லாவிட்டால், யெகோவாவின் பரிசுத்த பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவோம்.
3 கடவுளை வணங்குவதாக பலர் சொல்லிக்கொள்கிறார்கள், ஆனால் அவர்களுடைய நடத்தை, தேவாவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட அவருடைய வார்த்தையில் காணப்படும் தராதரங்களோடு ஒத்திருப்பதில்லை. நன்மை செய்வதாக சொல்லிக் கொண்டு அதற்கு இசைய வாழாதிருப்பவர்களைக் குறித்து, அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு எழுதினார்: “மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தானே போதியாமலிருக்கலாமா? களவு செய்யக்கூடாதென்று பிரசங்கிக்கிற நீ களவு செய்யலாமா? விபசாரம் செய்யக்கூடாதென்று சொல்லுகிற நீ விபசாரம் செய்யலாமா? . . . எழுதியிருக்கிறபடி, தேவனுடைய நாமம் புறஜாதிகளுக்குள்ளே உங்கள் மூலமாய்த் தூஷிக்கப்படுகிறதே.”—ரோமர் 2:21, 22, 24.
4. நம்முடைய நல்நடத்தையால் என்ன பயன்?
4 யெகோவாவின் பெயருக்கு களங்கம் உண்டாக்காமல் நம்முடைய நல்நடத்தையால் அதை மகிமைப்படுத்த நாம் கடினமாய் உழைக்க வேண்டும். இது, கிறிஸ்தவ சபையை சேராத மற்றவர்களின்மீது சாதகமான செல்வாக்கை செலுத்துகிறது. முதலாவதாக, இது நம்மை எதிர்ப்போரை வாய்திறக்க முடியாதபடி செய்ய நமக்கு உதவுகிறது. (1 பேதுரு 2:15) அதிலும் முக்கியமாக, நம்முடைய நல்நடத்தை, ஜனங்களை யெகோவாவின் அமைப்பிடம் கவர்ந்திழுக்கிறது, அவருக்கு மகிமையை செலுத்தி, நித்திய ஜீவனைப் பெற அவர்களுக்கு வழிகாட்டுகிறது.—அப்போஸ்தலர் 13:48.
5. என்ன கேள்விகளை நாம் இப்போது கலந்தாலோசிக்க வேண்டும்?
5 நாம் அபூரணராக இருப்பதால், யெகோவாவுக்கு அவமதிப்பு ஏற்படுத்தி, சத்தியத்தை நாடுவோரை இடறலடையச் செய்யும் நடத்தையை எப்படி தவிர்க்கலாம்? நற்குணத்தைக் காட்டுவதில் உண்மையில் நாம் எப்படி வெற்றி பெறலாம்?
வெளிச்சத்தின் ஒரு கனி
6. ‘பயனற்ற இருளின் செயல்கள்’ சில யாவை, ஆனால் கிறிஸ்தவர்களிடம் எப்படிப்பட்ட கனிகள் இருக்க வேண்டும்?
6 ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்களாக, “பயனற்ற இருளின் செயல்களை” தவிர்ப்பதற்கு உதவும் ஒன்றை நாம் அனுபவித்து மகிழ்கிறோம். பொய் சொல்லுதல், திருடுதல், பழித்துப் பேசுதல், செக்ஸ் சம்பந்தப்பட்ட ஆபாச உரையாடல், வெட்கக்கேடான நடத்தை, அசிங்கமான கேலிப் பேச்சு, குடிவெறி போன்ற கடவுளுக்கு அவமரியாதை ஏற்படுத்தும் காரியங்கள் அந்த இருளின் செயல்களில் அடங்கியுள்ளன. (எபேசியர் 4:25, 28, 31; 5:3, 4, 11, 12, 18; பொ.மொ.) இத்தகைய காரியங்களில் பங்குகொள்வதற்கு பதிலாக நாம் ‘வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுகிறோம்.’ “வெளிச்சத்தின் கனி சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும்” என்று அப்போஸ்தலன் பவுல் சொல்லுகிறார். (எபேசியர் 5:8, 9, தி.மொ.) ஆகையால் வெளிச்சத்தில் நடப்பதன் மூலமே எப்போதும் நற்குணத்தை காட்டுபவர்களாக இருக்க முடியும். ஆனால் இது எப்படிப்பட்ட வெளிச்சம்?
7. நற்குணத்தின் கனியைத் தொடர்ந்து வெளிக்காட்ட நாம் என்ன செய்ய வேண்டும்?
7 நாம் அபூரணர்களாக இருந்தாலும் ஆவிக்குரிய வெளிச்சத்தில் நடந்தால் நற்குணத்தை நம்மால் காட்ட முடியும். “உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது” என்று சங்கீதக்காரன் பாடினார். (சங்கீதம் 119:105) “சகல நற்குணத்திலும்” ‘வெளிச்சத்தின் கனியை’ தொடர்ந்து வெளிக்காட்ட வேண்டுமானால் ஆவிக்குரிய வெளிச்சத்தை எப்போதும் பிரயோஜனப்படுத்திக் கொள்ள வேண்டும்; இந்த வெளிச்சம் கடவுளுடைய வார்த்தையில் காணப்படுகிறது, கிறிஸ்தவ பிரசுரங்களில் கவனமாய் ஆராயப்படுகிறது, வணக்கத்திற்காக கூடிவரும் நம்முடைய கூட்டங்களில் தவறாமல் சிந்திக்கப்படுகிறது. (லூக்கா 12:42; ரோமர் 15:4; எபிரெயர் 10:24, 25) மேலும், ‘உலகத்திற்கு ஒளியாகவும்,’ ‘[யெகோவாவுடைய] மகிமையின் பிரகாசமாகவும்’ இருக்கிற இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரிக்கும் போதனைகளுக்கும் நாம் விசேஷ கவனம் செலுத்தவும் வேண்டும்.—யோவான் 8:12; எபிரெயர் 1:1-3.
ஆவியின் ஒரு கனி
8. நற்குணத்தை நம்மால் ஏன் வெளிக்காட்ட முடிகிறது?
8 ஆவிக்குரிய வெளிச்சம், சந்தேகமின்றி நற்குணத்தைக் காட்ட நமக்கு உதவுகிறது. மேலும், கடவுளுடைய பரிசுத்த ஆவியால் அல்லது செயல்படும் சக்தியால் வழிநடத்தப்படுவதால் இந்தப் பண்பை நம்மால் வெளிக்காட்ட முடிகிறது. நற்குணம் ‘ஆவியின் கனியில்’ ஒன்று. (கலாத்தியர் 5:22, 23) யெகோவாவினுடைய பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலுக்கு நாம் கீழ்ப்படிந்தால் அது நம்மில் அதன் அற்புதமான கனியாகிய நற்குணத்தை பிறப்பிக்கும்.
9. லூக்கா 11:9-13-லுள்ள இயேசுவின் வார்த்தைகளுக்கு இசைவாக நாம் எப்படி செயல்படலாம்?
9 ஆவியின் கனியாகிய நற்குணத்தை வெளிக்காட்டுவதன் மூலம் யெகோவாவைப் பிரியப்படுத்த நமக்கிருக்கும் பேரார்வம், இயேசுவின் பின்வரும் வார்த்தைகளுக்கு ஏற்ப நடப்பதற்கு நம்மை தூண்ட வேண்டும்: “[“தொடர்ந்து,” NW] கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; [“தொடர்ந்து,” NW] தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; [“தொடர்ந்து,” NW] தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும். ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பங்கேட்டால், அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா? அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா? [அபூரணர்களாய் இருப்பதால், ஓரளவு] பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா.” (லூக்கா 11:9-13) ஆகவே, யெகோவாவின் ஆவிக்காக ஜெபிப்பதன் மூலம் இயேசுவின் அறிவுரையைப் பின்பற்றுவோமாக; அப்போது, ஆவியின் கனியாகிய நற்குணத்தை நம்மால் தொடர்ந்து வெளிக்காட்ட முடியும்.
‘தொடர்ந்து நன்மை செய்யுங்கள்’
10. யெகோவாவின் நற்குணத்திலுள்ள என்ன அம்சங்கள் யாத்திராகமம் 34:6, 7-ல் குறிப்பிடப்படுகின்றன?
10 கடவுளுடைய வார்த்தையிலிருந்து வரும் ஆவிக்குரிய வெளிச்சத்துடனும் கடவுளுடைய பரிசுத்த ஆவியின் உதவியுடனும் நாம் ‘தொடர்ந்து நன்மை செய்ய’ முடியும். (ரோமர் 13:3, NW) தவறாமல் பைபிளைப் படிப்பதன் மூலம், யெகோவாவின் நற்குணத்தை பின்பற்றி எப்படி நடக்கலாம் என நாம் அதிகமதிகமாக கற்றுக்கொள்கிறோம். யாத்திராகமம் 34:6, 7-ல் (NW) பதிவு செய்யப்பட்டுள்ளபடி மோசேயிடம் அறிவிக்கப்பட்ட கடவுளுடைய நற்குணத்தின் அம்சங்களை முந்திய கட்டுரை கலந்தாலோசித்தது. அந்த வசனங்கள் சொல்வதாவது: “யெகோவா, யெகோவா, இரக்கமும், கருணையும், கோபிக்க தாமதிக்கிற குணமும், மிகுந்த அன்புள்ள தயவும் சத்தியமுமுள்ள கடவுள். ஆயிரம் தலைமுறைகளுக்கு அன்புள்ள தயவை காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்; எந்தக் காரணத்தைக் கொண்டும் தண்டனைக்கு தப்பவிடாமல், . . . விசாரிக்கிறவர்.” யெகோவாவின் நற்குணத்தின் இந்த அம்சங்களுக்கு அதிக கவனம் செலுத்துவது, ‘தொடர்ந்து நன்மை செய்ய’ நமக்கு உதவும்.
11. யெகோவா இரக்கமும் கருணையுமுள்ளவராக இருப்பதை அறிந்திருப்பது நம்மை என்ன செய்ய தூண்ட வேண்டும்?
11 இரக்கமும் கருணையும் காட்டுவதன் மூலம் யெகோவாவின் மாதிரியைப் பின்பற்றுவதன் அவசியத்தை கடவுளுடைய அந்த அறிவிப்பு நமக்கு உணர்த்துகிறது. “இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 5:7; லூக்கா 6:36) யெகோவா கருணையுள்ளவராக இருப்பதை அறிந்திருப்பது, யாரிடம் பிரசங்கிக்கிறோமோ அவர்களிடமும் மற்றவர்களிடமும் கருணையுடனும் இனிமையாகவும் நடந்துகொள்ள நம்மைத் தூண்டுகிறது. இது பவுலின் பின்வரும் அறிவுரையோடு ஒத்திருக்கிறது: “அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்ல வேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.”—கொலோசெயர் 4:6.
12. (அ) கடவுள் கோபிக்க தாமதிக்கிறவராக இருப்பதால், மற்றவர்களிடம் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? (ஆ) யெகோவாவின் அன்புள்ள தயவு என்ன செய்ய நம்மை தூண்டுகிறது?
12 கடவுள் கோபிக்க தாமதிக்கிறவராக இருப்பதால், ‘தொடர்ந்து நன்மை செய்வதற்கான’ நம் ஆவல், உடன் விசுவாசிகளின் சிறு தவறுகளைப் பொறுத்துக்கொள்ளவும் அவர்களுடைய நல்ல குணங்களிடம் கவனம் செலுத்தவும் நம்மை உந்துவிக்கிறது. (மத்தேயு 7:5; யாக்கோபு 1:19) யெகோவாவின் அன்புள்ள தயவு, கடும் சோதனையிலும் பற்றுமாறா அன்பு காட்ட நம்மை தூண்டுகிறது. இது உண்மையிலேயே அதிகம் விரும்பத்தக்கது.—நீதிமொழிகள் 19:22, NW.
13. யெகோவா ‘மிகுந்த சத்தியமுள்ளவர்’ என்பதை காட்டும் விதத்தில் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
13 நம்முடைய பரலோக தகப்பன் ‘மிகுந்த சத்தியமுள்ளவராக’ இருப்பதால், ‘சத்திய வசனத்தில் அவருடைய ஊழியக்காரராக நம்மை விளங்கப்பண்ண’ நாடுகிறோம். (2 கொரிந்தியர் 6:3-7) யெகோவா வெறுக்கிற ஏழு காரியங்களில், ‘பொய் நாவும்,’ ‘அபத்தம் பேசும் பொய்ச்சாட்சியும்’ உள்ளன. (நீதிமொழிகள் 6:16-19) ஆகவே, கடவுளைப் பிரியப்படுத்துவதற்கான நம்முடைய ஆவல், ‘பொய்யைக் களைந்து மெய்யைப் பேச’ நம்மை உந்துவித்திருக்கிறது. (எபேசியர் 4:25) இந்த முக்கியமான வழியில் நற்குணத்தை காட்ட தவறாதிருப்போமாக.
14. நாம் ஏன் மன்னிக்கிறவர்களாக இருக்க வேண்டும்?
14 மோசேயிடம் கடவுள் அறிவித்தது, மன்னிக்கிறவர்களாக இருக்கவும் நம்மை தூண்ட வேண்டும், ஏனெனில் யெகோவா மன்னிப்பதற்கு தயாராயிருக்கிறார். (மத்தேயு 6:14, 15) ஆனால் பாவம் செய்து மனந்திரும்பாதவர்களை யெகோவா நிச்சயம் தண்டிப்பார். ஆகையால், சபையின் ஆவிக்குரிய சுத்தத்தைக் காக்கும் விஷயத்தில் நற்குணத்திற்குரிய அவருடைய தராதரங்களை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.—லேவியராகமம் 5:1; 1 கொரிந்தியர் 5:11, 12; 1 தீமோத்தேயு 5:22.
‘அதிக கவனம் செலுத்துங்கள்’
15, 16. எபேசியர் 5:15-19-லுள்ள பவுலின் அறிவுரை, தொடர்ந்து நற்குணத்தைக் காட்ட நமக்கு எவ்வாறு உதவலாம்?
15 நம்மைச் சுற்றியுள்ள துன்மார்க்கத்தின் மத்தியிலும் தொடர்ந்து நற்குணத்தைக் காட்ட நாம் கடவுளுடைய ஆவியால் நிரப்பப்படுவது அவசியம்; நாம் நடந்துகொள்ளும் விதத்திற்கு கவனம் செலுத்துவதும் அவசியம். எனவே, எபேசுவிலிருந்த கிறிஸ்தவர்களை பவுல் இவ்வாறு ஊக்குவித்தார்: “நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் [“அதிக கவனமாய்,” NW] நடந்து கொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள். ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்து கொள்ளுங்கள். துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப் பாட்டுகளினாலும் [“ஆவிக்குரிய பாட்டுகளினாலும்,”] ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக் கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம் பண்[ணுங்கள்].” (எபேசியர் 5:15-19) இந்தக் கடினமான கடைசி நாட்களில் இந்த அறிவுரை உண்மையிலேயே நமக்குப் பொருத்தமானது.—2 தீமோத்தேயு 3:1.
16 நாம் தொடர்ந்து நற்குணத்தைக் காட்ட வேண்டுமானால், கடவுளுடைய ஞானத்தைப் பின்பற்றுகிறவர்களைப் போல் நடக்க நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். (யாக்கோபு 3:17) பெரும் பாவங்களை நாம் தவிர்க்க வேண்டும்; பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு, அதனால் வழிநடத்தப்படுவதற்கு நம்மை அனுமதிக்க வேண்டும். (கலாத்தியர் 5:19-25) கிறிஸ்தவக் கூட்டங்களிலும், அசெம்பிளிகளிலும், மாநாடுகளிலும் பெறும் ஆவிக்குரிய போதனையைப் பின்பற்றுவதன் மூலம் நாம் தொடர்ந்து நன்மை செய்து வரலாம். வணக்கத்திற்கான நம்முடைய பெரும்பாலான கூட்டங்களில் உள்ளப்பூர்வமாக பாடும் ‘ஆவிக்குரிய பாட்டுகளிலிருந்து’ நாம் பயனடைவதையும் எபேசியருக்கு எழுதின பவுலின் வார்த்தைகள் நமக்கு நினைப்பூட்டலாம். இப்பாடல்கள் பல, நற்குணம் போன்ற ஆவிக்குரிய பண்புகளை அடிப்படையாக கொண்டவை.
17. கூட்டங்களுக்குத் தவறாமல் வர இயலாமல் மிகவும் நோய்வாய்ப்பட்டிருக்கும் கிறிஸ்தவர்கள் எதைக் குறித்து நிச்சயமாயிருக்கலாம்?
17 மிகவும் நோய்வாய்ப்பட்டிருப்பதால் கிறிஸ்தவக் கூட்டங்களுக்குத் தவறாமல் வரமுடியாதிருக்கிற நம் சகவிசுவாசிகளைக் குறித்து என்ன சொல்லலாம்? ஆவிக்குரிய சகோதர சகோதரிகளுடன் சேர்ந்து யெகோவாவை எப்போதும் வணங்க முடியவில்லையே என அவர்கள் மனமுடைந்து போகலாம். ஆனால், அவர்களுடைய சூழ்நிலைகளை யெகோவா புரிந்துகொள்கிறார், அவர்களை வெளிச்சத்தில் வைத்து, தம்முடைய பரிசுத்த ஆவியைத் தந்து, தொடர்ந்து நன்மை செய்வதற்கு உதவுவார் என அவர்கள் நிச்சயமாயிருக்கலாம்.—ஏசாயா 57:15.
18. தொடர்ந்து நற்குணத்தைக் காட்ட எது நமக்கு உதவும்?
18 தொடர்ந்து நற்குணத்தைக் காட்டுவதற்கு, நம் கூட்டுறவுகளைக் காத்துக்கொள்வதும், ‘நன்மையை விரும்பாதவர்களிடமிருந்து’ விலகியிருப்பதும் அவசியம். (2 தீமோத்தேயு 3:2-5, பொ.மொ.; 1 கொரிந்தியர் 15:33) இத்தகைய அறிவுரையைப் பின்பற்றுவது, பரிசுத்த ஆவியின் வழிநடத்துதல்களுக்கு நேர்மாறாக செயல்படுவதன் மூலம் ‘பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்துவதைத்’ தவிர்க்க நமக்கு உதவுகிறது. (எபேசியர் 4:30) மேலும், நற்குணத்தை விரும்புகிறவர்கள் எனவும், யெகோவாவின் பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்படுகிறவர்கள் எனவும் தங்கள் வாழ்க்கையில் அத்தாட்சி அளிப்போருடன் நெருங்கிய கூட்டுறவு வைத்திருந்தால் நாம் நன்மை செய்ய உதவி பெறுவோம்.—ஆமோஸ் 5:15; ரோமர் 8:14; கலாத்தியர் 5:18.
நற்குணம் தரும் சிறந்த பலன்கள்
19-21. நற்குணத்தைக் காட்டுவதால் விளையும் பலனை எடுத்துக்காட்டும் அனுபவங்களைக் கூறுங்கள்.
19 ஆவிக்குரிய வெளிச்சத்தில் நடப்பதும், கடவுளுடைய ஆவியின் வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிவதும், நம் நடத்தைக்குக் கவனம் செலுத்துவதும் தீமையைத் தவிர்த்து, ‘தொடர்ந்து நன்மை செய்ய’ நமக்கு உதவும். இவ்வாறு செய்வது சிறந்த பலன்களைத் தரும். தென் ஆப்பிரிக்காவில் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரான ஸாங்கிஸில்லியின் அனுபவத்தைக் கவனியுங்கள். பள்ளிக்குப் போகும் வழியில் ஒருநாள் காலை, பாங்கில் தன் சிறுசேமிப்பில் எவ்வளவு பணம் இருக்கிறதென அவன் போய் பார்த்தான். பாங்கின் ஆட்டமேட்டிக் மெஷின் தந்த சீட்டு, 42,000 ராண்ட்ஸ் (6,000 அமெரிக்க டாலர்) கூடுதல் தொகை இருப்பதை தவறாக காட்டியது. பாங்க் பாதுகாவலரும் மற்றவர்களும், அந்தப் பணத்தை அங்கிருந்து எடுத்து, வேறொரு பாங்கில் போட்டு வைக்கும்படி அவனை வற்புறுத்தினார்கள். சாட்சிகளாயிருந்த தம்பதியினரோடு அவன் வசித்து வந்தான், அவர்கள் மட்டுமே அந்தப் பணத்தை அவன் எடுக்காதது குறித்து பாராட்டினார்கள்.
20 அடுத்த நாள், ஸாங்கிஸில்லி தவறு நேர்ந்திருப்பதை பாங்கில் தெரிவித்தான். அவனுடைய அக்கௌண்ட் நம்பரைப் போலவே பணக்கார தொழிலதிபர் ஒருவருடைய நம்பர் இருந்ததால் அவர் தவறான அக்கௌண்ட்டில் பணத்தைப் போட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பணம் எதையும் எடுத்து ஸாங்கிஸில்லி செலவழிக்காததைக் கண்டு ஆச்சரியப்பட்ட அந்தத் தொழிலதிபர் “உன்னுடைய மதம் எது?” என்று அவனிடம் கேட்டார். தான் யெகோவாவின் சாட்சி என ஸாங்கிஸில்லி விளக்கினான். “யெகோவாவின் சாட்சிகளைப்போல் எல்லாரும் நேர்மையுள்ளவர்களாய் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்” என்று சொல்லி பாங்க் அதிகாரிகள் அவனை மனமார பாராட்டினார்கள். மெய்யாகவே, நேர்மையும் நற்குணமுமிக்க செயல்கள் யெகோவாவை மகிமைப்படுத்த மற்றவர்களைத் தூண்டலாம்.—எபிரெயர் 13:18.
21 நற்குணமிக்க செயல்களால் சிறந்த பலனைப் பெற அவை அசாதாரணமானவையாக இருக்க வேண்டியதில்லை. உதாரணம்: சமோவா தீவுகள் ஒன்றில் முழுநேர சுவிசேஷகராக ஊழியம் செய்யும் ஓர் இளம் சாட்சி மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருந்தது. மருத்துவரைக் காண ஜனங்கள் காத்திருந்தார்கள். தனக்கு அடுத்து இருந்த வயதான ஓர் அம்மாள் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்ததை அந்த சாட்சி கவனித்தார். அவர்கள் சீக்கிரம் சிகிச்சை பெறுவதற்காக தான் முதலில் செல்லாமல் அவரை அனுப்பி வைத்தார். பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் அந்த சாட்சி, அந்த வயதான அம்மாளை மார்க்கெட்டில் சந்தித்தார். அந்த அம்மாள் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள், மருத்துவமனையில் அவர் செய்த நல்ல காரியத்தையும் நினைத்துக்கொண்டார்கள். “யெகோவாவின் சாட்சிகள் மற்றவர்களை உண்மையிலேயே நேசிக்கிறார்கள் என்பது எனக்கு நன்றாக புரிந்துவிட்டது” என அவர்கள் சொன்னார்கள். முன்பெல்லாம் ராஜ்ய செய்தியை அவர்கள் காதுகொடுத்து கேட்க மாட்டார்கள், ஆனால் அந்த சாட்சியின் நற்குணமிக்க செயலால் நன்மை விளைந்தது. அந்த அம்மாள் பைபிள் படிப்பிற்கு ஒப்புக்கொண்டு கடவுளுடைய வார்த்தையின் அறிவை பெற ஆரம்பித்தார்கள்.
22. ‘தொடர்ந்து நன்மை செய்வதற்குரிய’ ஒரு பிரத்தியேக வழி என்ன?
22 நற்குணத்தின் மதிப்பை காட்டும் அனுபவங்கள் உங்களிடமும் இருக்கலாம். ‘தொடர்ந்து நன்மை செய்வதற்கு’ ஒரு பிரத்தியேக வழி, கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை அறிவிப்பதில் தவறாமல் பங்குகொள்வதாகும். (மத்தேயு 24:14) நன்மை செய்வதற்கு, அதிலும் முக்கியமாய் சாதகமாய் பிரதிபலிப்பவர்களுக்கு நன்மை செய்வதற்கு இதுவே வழி என்பதை உணர்ந்து, இந்த மதிப்புமிக்க வேலையில் தொடர்ந்து ஆர்வத்துடன் பங்குகொள்வோமாக. மிக முக்கியமாக, நம்முடைய ஊழியமும் நல்நடத்தையும், நற்குணத்தின் பிறப்பிடமான யெகோவாவை மகிமைப்படுத்துகின்றன.—மத்தேயு 19:16, 17,
தொடர்ந்து ‘நன்மை செய்யுங்கள்’
23. கிறிஸ்தவ ஊழியம் ஏன் நற்செயலாக உள்ளது?
23 சந்தேகத்திற்கிடமின்றி நம்முடைய ஊழியம் நற்செயலாக உள்ளது. அது நமக்கும் பைபிள் செய்திக்குச் செவிசாய்ப்பவர்களுக்கும் இரட்சிப்பை அளிக்கலாம். இவ்வாறு நித்திய ஜீவனுக்கு செல்லும் பாதையில் வழிநடத்தலாம். (மத்தேயு 7:13, 14; 1 தீமோத்தேயு 4:16) அப்படியானால், தீர்மானங்கள் செய்ய வேண்டிய சமயங்களில் நன்மை செய்வதற்கான நம் ஆவல் நம்மையே இவ்வாறு கேட்டுக்கொள்ளும்படி செய்யலாம்: ‘என்னுடைய ராஜ்ய பிரசங்க ஊழியத்தை இந்தத் தீர்மானம் எவ்வாறு பாதிக்கும்? நான் எடுக்கப்போகும் தீர்மானம் உண்மையில் பயனுள்ளதா? “நித்திய சுவிசேஷத்தை” ஏற்று, யெகோவா தேவனுடன் நெருங்கிய உறவை அனுபவிக்க மற்றவர்களுக்கு வழிசெய்வதில் இது எனக்கு உதவுமா?’ (வெளிப்படுத்துதல் 14:6) ராஜ்யத்திற்காக அதிகத்தை செய்ய நம்மை அனுமதிக்கும் விதத்தில் தீர்மானம் எடுப்பது பெரும் மகிழ்ச்சியைத் தரும்.—மத்தேயு 6:33; அப்போஸ்தலர் 20:35.
24, 25. சபையில் நன்மை செய்வதற்கான சில வழிகள் யாவை, நாம் தொடர்ந்து நற்குணத்தைக் காட்டினால் எதைக் குறித்து நிச்சயமாயிருக்கலாம்?
24 நற்குணத்தின் நன்மையான பயன்களை நாம் ஒருபோதும் குறைவாக மதிப்பிடாதிருப்போமாக. கிறிஸ்தவ சபையை ஆதரிப்பதன் மூலமும், அதன் நலனுக்காக நம்மால் முடிந்ததை செய்வதன் மூலமும் நாம் நற்குணத்தை தொடர்ந்து வெளிக்காட்டலாம். கிறிஸ்தவ கூட்டங்களுக்கு தவறாமல் சென்று, அவற்றில் பங்குகொள்கையில் நிச்சயமாகவே நாம் நன்மை செய்கிறோம். நாம் அங்கிருப்பதுதானே சகவணக்கத்தாரை உற்சாகப்படுத்துகிறது. நன்கு தயாரித்து சொல்லும் நம் பதில்கள் ஆவிக்குரிய விதத்தில் அவர்களைக் கட்டியெழுப்புகின்றன. மேலும், ராஜ்ய மன்றத்தைப் பராமரிக்க பணத்தை செலவழிக்கையிலும் அதை சரிவர பேணுவதற்கு உதவுகையிலும் நாம் நன்மை செய்கிறோம். (2 இராஜாக்கள் 22:3-7; 2 கொரிந்தியர் 9:6, 7) நிச்சயமாகவே, “நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மை செய்யக்கடவோம்.”—கலாத்தியர் 6:10.
25 எந்தெந்த சூழ்நிலைகளில் நற்குணத்தைக் காட்ட வேண்டிய அவசியம் வரும் என முன்னதாகவே நாம் சொல்ல முடியாது. எனவே, புதிய சவால்களை சந்திக்கையில் பைபிளிலிருந்து அறிவொளியை நாடி, யெகோவாவின் பரிசுத்த ஆவிக்காக ஜெபித்து, அவருடைய நன்மையும் பரிபூரணமுமான சித்தத்தை நிறைவேற்றுவதற்கு நம்மாலான மிகச் சிறந்ததைச் செய்வோமாக. (ரோமர் 2:9, 10; 12:2) நாம் தொடர்ந்து நற்குணத்தைக் காட்டுகையில், யெகோவா நம்மை மிகுதியாய் ஆசீர்வதிப்பாரென நாம் உறுதியாய் நம்பலாம்.
நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்?
• மிகச் சிறந்த நன்மையை நாம் எவ்வாறு செய்யலாம்?
• நற்குணம் ஏன் ‘வெளிச்சத்தின் கனி’ என்று அழைக்கப்படுகிறது?
• நற்குணம் ஏன் ‘ஆவியின் கனி’ என்று அழைக்கப்படுகிறது?
• நம்முடைய நல்நடத்தைக்கு என்ன பலன் கிடைக்கிறது?
[பக்கம் 17-ன் படம்]
நற்குணத்தைக் காட்டுவதற்கு கடவுளுடைய வார்த்தையும் அவருடைய பரிசுத்த ஆவியும் நமக்கு உதவுகின்றன
[பக்கம் 18-ன் படங்கள்]
நற்குணத்தைக் காட்டுவது சிறந்த பலன்களைத் தருகிறது