ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
ஸ்வீடனில் சாட்சி பகரும் நவீனகால உயிர்த்தியாகிகள்
கிரேக்க மொழியில் “சாட்சி” என்பதற்குரிய வார்த்தை மார்டிர். இதிலிருந்தே “மார்டிர்” என்ற ஆங்கில வார்த்தை தோன்றியது. இதன் அர்த்தம் “உயிரைக் கொடுத்து சாட்சி கொடுப்பவன்.” முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவர்கள் பலர் தங்கள் விசுவாசத்துக்காக மரிப்பதன் மூலம் யெகோவாவைப் பற்றி சாட்சி பகர்ந்தார்கள்.
அதைப் போலவே, 20-ம் நூற்றாண்டில், ஆயிரக்கணக்கான சாட்சிகள் அரசியல் மற்றும் தேசிய விவாதங்களில் நடுநிலையைக் காத்துக்கொண்டதற்காக ஹிட்லரின் ஆதரவாளர்களால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நவீன நாளைய இந்த உயிர்த்தியாகிகளும் மிகவும் வலிமையோடு சாட்சி பகர்ந்திருக்கின்றனர். இதுதான் சமீபத்தில் ஸ்வீடனிலும் நடந்தது.
இரண்டாம் உலகப் போர் முடிந்து 50 ஆண்டுகள் பூர்த்தியானதை நினைவுகூரும் விதமாக ஸ்வீடன் நாட்டு அரசாங்கம் நாசி படுகொலை பற்றி தேசம் முழுவதிலும் ஒரு கல்வி திட்டம் ஒன்றை துவக்கி வைத்தது. இந்தத் திட்டம் உயிருள்ள சரித்திரம் என்றழைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
படுகொலையில் மறக்கப்பட்டு போன பலியாட்கள் என்ற தலைப்பில் ஒரு கண்காட்சிக்கு சாட்சிகள் ஏற்பாடு செய்தார்கள். இது ஸ்ட்டெரங்நஸ் என்ற இடத்திலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாட்டு மன்றத்தில் நடைபெற்றது. படுகொலையில் தப்பிப்பிழைத்த சாட்சிகள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள அங்கு வந்திருந்தார்கள். முதல் நாள் கண்காட்சிக்கு 8,400 பார்வையாளர்கள் வந்திருந்தனர்! 1999 முடிவதற்குள் ஸ்வீடன் முழுவதிலும் இந்தக் கண்காட்சி 100-க்கும் மேற்பட்ட மியூசியம்களிலும் பொது நூலகங்களிலும் காண்பிக்கப்பட்டது. இதைப் பார்த்தவர்கள் சுமார் 1,50,000 பேர். அரசாங்க அதிகாரிகள் உட்பட இதைப் பார்த்த பார்வையாளர்கள் இந்தக் கண்காட்சி பற்றி நல்லவிதமாக கருத்துக்கள் கூறினர்.
ஸ்வீடனில் யெகோவாவின் சாட்சிகள் சம்பந்தமாக அதுவரை வேறெந்த நடவடிக்கைகளுக்கும் இந்தளவுக்கு வரவேற்பும் சாதகமான விளம்பரமும் கிடைத்ததில்லை. “இந்த படுகொலை பற்றிய உங்களுடைய அனுபவங்களை ஏன் எங்களிடம் முன்னமே சொல்லவில்லை?” என்று அநேக பார்வையாளர்கள் வினவினர்.
கண்காட்சி நடைபெற்ற ஒரு இடத்திலிருந்த சபையில் பைபிள் படிப்புகள் 30 சதவீதம் அதிகரித்ததாக அச்சபை அறிவித்தது! ஒரு சாட்சி தன்னுடன் வேலை செய்பவரை கண்காட்சிக்கு அழைத்தார். அவரும் அழைப்பை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு நண்பர் ஒருவரையும் அங்கு அழைத்து வந்தார். தங்கள் விசுவாசத்தைக் கைவிடுவதாக கூறி ஒரு கையெழுத்துப் போடுவதற்கு பதிலாக சாகவும் துணிந்த அவர்களது உறுதியான விசுவாசத்தை தன்னால் ஜீரணிக்க முடியவில்லை என்று வந்திருந்த நண்பர் கூறினார். இது மேலுமான சம்பாஷணைகளுக்கு வழிநடத்தியது, அவருடன் ஒரு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது.
முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் போலவே, இந்த 20-ம் நூற்றாண்டின் உண்மையுள்ள உயிர்த்தியாகிகளும்கூட யெகோவா மாத்திரமே நம்முடைய அசைக்க முடியாத விசுவாசத்துக்கும் பற்றுறுதிக்கும் பாத்திரமுள்ள ஒரே மெய்க் கடவுள் என்பதற்கு தைரியமாக சாட்சி பகர்ந்துள்ளனர்.—வெளிப்படுத்துதல் 4:11.
[பக்கம் 13-ன் படத்திற்கான நன்றி]
முகாம் கைதி: Państwowe Muzeum Oświęcim-Brzezinka, courtesy of the USHMM Photo Archives