எத்தனை எத்தனை ஊனங்கள்!
கிறிஸ்சன் என்பவர் ஆப்பிரிக்காவில் வாழ்ந்து வருகிறார். ஒருநாள் இராணுவ வீரர்கள் அவரை கடத்திச் சென்று, இராணுவத்தில் சேரும்படி கட்டாயப்படுத்தினார்கள். ஆனால் அவரோ மசியவில்லை. காரணம்? பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சி. அவர்கள் அவரை அப்படியே விட்டுவிட்டார்களா? இல்லை, இராணுவ முகாமிற்கு இழுத்துச் சென்றார்கள். அங்கே நான்கு நாட்கள் அவரை அடித்து நொறுக்கினார்கள். பிறகு ஓர் இராணுவ வீரன் அவருடைய காலில் துப்பாக்கியால் சுட்டான். இந்த நிலையில், கிறிஸ்சன் எப்படியோ கஷ்டப்பட்டு ஆஸ்பத்திரிக்குப் போய் சேர்ந்தார். ஆனால், அவருடைய முழங்காலை வெட்ட வேண்டியதாயிற்று. இதே ஆப்பிரிக்காவில் வேறொரு நாட்டில், ஆயுதம் ஏந்திய கலகக்கூட்டத்தார், சிறுவர் சிறுமியர் என்ற தயவுதாட்சண்யம் பாராமல் அவர்களுடைய கை, கால்களை வெட்டினார்கள். கம்போடியா முதல் பால்கன் நாடுகள் வரை, ஆப்கானிஸ்தான் முதல் அங்கோலா வரை, சிறியவர் பெரியவர் என்ற பாகுபாடின்றி அனைவரையும் கண்ணி வெடிகள் ஊனமாக்கியும் உருக்குலைத்தும் வருகின்றன.
விபத்துக்களும் சர்க்கரை வியாதி போன்ற நோய்களும் உடல் ஊனத்திற்குக் காரணமாக இருக்கின்றன. சுற்றுப்புற சூழலில் உள்ள நச்சுக்களும்கூட ஊனம் உண்டாக்கலாம். உதாரணத்திற்கு, கிழக்கு ஐரோப்பிய நகரம் ஒன்றின் சுற்றுவட்டார ஊர்களில் எண்ணற்ற குழந்தைகள் ஒரு முழங்கையின்றி பிறக்கிறார்கள். அவர்களுடைய கைமுட்டுக்கு கீழே பயனற்றதோர் சிறிய சதைப் பகுதி மட்டுமே இருக்கிறது. இரசாயன தூய்மைக்கேட்டினால் மரபியல் சேதம் ஏற்பட்டிருப்பதே இதற்கு காரணம் என அத்தாட்சி காண்பிக்கிறது. பலருக்கு கை, கால்கள் இருந்தாலும் எந்தப் பிரயோஜனமுமில்லை; முடக்குவாதமோ வேறுசில பிரச்சினைகளோ அவற்றின் இயக்கத்தை முடக்கிவிடுகின்றன. உண்மையிலேயே, எத்தனை எத்தனை ஊனங்கள்!
காரணம் எதுவாக இருந்தாலும் உடல் ஊனங்கள் உள்ளத்தையும் ஊனப்படுத்துகின்றன. ஜூன்யர் 20-ம் வயதில் தன் இடது முழங்காலை இழந்தார். அவர் பிற்பாடு சொன்னதாவது: “உணர்ச்சி ரீதியில் நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. போன கால் இனி எனக்குத் திரும்ப கிடைக்காதே என எண்ணி கதறி அழுதேன். என்ன செய்வதென்றே புரியவில்லை. குழம்பிப் போய்விட்டேன்.” இருந்தாலும், போகப்போக ஜூன்யரின் மனதில் இருந்த இருள் நீங்கி ஒளிவீச ஆரம்பித்தது. பைபிளை படித்து அதிலுள்ள விஷயங்களை கற்றுக்கொள்ள ஆரம்பித்தார்; அது ஊனத்தை சமாளிக்க உதவியதோடு, இதே பூமியில் மகிழ்ச்சியோடு வாழும் அருமையான எதிர்கால நம்பிக்கையையும் அவருக்கு அளித்திருக்கிறது. நீங்கள் ஊனமுற்றவரானால், இதே நம்பிக்கையை பெற விரும்புகிறீர்களா?
அப்படியானால், தயவுசெய்து பின்வரும் கட்டுரையை வாசியுங்கள். அங்கு கொடுக்கப்பட்டுள்ள வேத வசனங்களை உங்களுடைய சொந்த பைபிளில் எடுத்துப் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். படைப்பாளரின் நோக்கத்தை கற்று, அதற்கேற்ப வாழ்க்கையை மாற்றிக்கொள்கிறவர்களுக்கு எதிர்காலத்தில் அவர் என்ன செய்வார் என்பதை நீங்களே தெரிந்துகொள்ளலாம்.