வாழ்க்கை சரிதை
யெகோவாவுக்கான அன்பை பிள்ளைகளின் இதயத்தில் பதித்தல்
வெர்னர் மாட்ஸன் சொன்னபடி
என் மூத்த மகன் ஹான்ஸ் வெர்னர் சில வருடங்களுக்கு முன்பு எனக்கு ஒரு பைபிளை பரிசளித்தான். அட்டையைத் திருப்பியதும் உட்பக்கத்தில், “அன்புள்ள அப்பா, யெகோவாவின் வார்த்தை என்றும் நம்மை குடும்பமாக ஜீவ பாதையில் வழிநடத்தட்டும். நன்றியுடன், உங்கள் மூத்த மகன்” என்று எழுதியிருந்தான். அவ்வரிகளை படிக்கையில் என் இதயம் சந்தோஷத்தாலும் மகிழ்ச்சியாலும் எப்படி துள்ளியது என்பதை பெற்றோராக இருப்பவர்கள் புரிந்துகொள்வர். ஒரு குடும்பமாக இன்னும் என்னவெல்லாம் எதிர்ப்படப் போகிறோம் என்பது எனக்கு அப்போது தெரியாதிருந்தது.
ஜெர்மனியில் ஹாம்பர்க் துறைமுகத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஹால்ஸ்டன்பெக் என்ற இடத்தில் 1924-ல் நான் பிறந்தேன். என் அம்மாவும் தாத்தாவும் என்னை வளர்த்தார்கள். ஆயுத தயாரிப்பாளராக தொழில் பயிற்சியை முடித்த பிறகு 1942-ல் வேர்மாக்ட் என்றழைக்கப்படும் ஆயுதப் படையில் சேர்ந்தேன். இரண்டாம் உலகப் போரில், ரஷ்யப் படையில் முன்னணியில் நின்று போரிட்ட சமயத்தில் நான் பட்ட பாடுகள் எழுத்தில் விவரிக்க முடியாதளவுக்கு பயங்கரமானவை. எனக்கு டைபாய்ட் காய்ச்சல் வந்துவிட்டது; சிகிச்சைக்குப் பிறகு மறுபடியும் படையின் முன்னணிக்கே அனுப்பப்பட்டேன். ஜனவரி 1945-ல் போலந்திலுள்ள லோட்ஜில் இருந்தேன்; படுகாயமடைந்ததால் அங்கிருந்த ராணுவ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டேன். போர் முடிவடைந்த பிறகும் அங்கேயே இருந்தேன். ஆஸ்பத்திரியில் இருக்கையிலும் பிறகு நாலன்காமா தடுப்புக் காவலில் இருக்கையிலும் நிறைய நேரம் கிடைத்ததால் பல விஷயங்களை என்னால் எண்ணிப் பார்க்க முடிந்தது. உண்மையிலேயே ஒரு கடவுள் இருக்கிறாரா? இருந்தால், இவ்வளவு கொடுமையை ஏன் அனுமதிக்கிறார்? போன்ற கேள்விகள் என்னை துளைத்தெடுத்தன.
தடுப்புக் காவலிலிருந்து விடுதலை பெற்றதும் விரைவிலேயே செப்டம்பர் 1947-ல் கார்லாவை திருமணம் செய்தேன். நாங்கள் ஒரே ஊரில் வளர்ந்தவர்கள்; கார்லா கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவள்; நானோ எனக்கென்று எந்த மதமுமின்றி வளர்ந்தவன். தினமும் இரவு நேரத்தில் பரமண்டல ஜெபத்தையாவது இருவரும் சேர்ந்து செய்யுமாறு எங்கள் திருமணத்தை நடத்தி வைத்த பாதிரியார் சொன்னார். அவர் சொன்னவாறே நாங்கள் செய்தோம்; ஆனால் எதற்காக ஜெபிக்கிறோம் என்று உண்மையில் எங்களுக்கே தெரியவில்லை.
ஒரு வருடம் கழித்து ஹான்ஸ் வெர்னர் பிறந்தான். கிட்டத்தட்ட அதே சமயத்தில், என்னுடன் வேலை பார்த்து வந்த வில்ஹெம் ஆரென்ஸ் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி என்னிடம் சொன்னார். போர்களுக்கெல்லாம் ஒரு நாள் முடிவு வரப்போகிறது என்பதை பைபிளிலிருந்து காட்டினார். (சங்கீதம் 46:9) 1950-ல் இலையுதிர் காலத்தில் என் வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற்றேன். ஒரு வருடம் கழித்து என் அருமை மனைவியும் முழுக்காட்டுதல் எடுத்தபோது நான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை!
பிள்ளைகளை யெகோவாவின் வழியில் வளர்த்தல்
திருமணத்தை ஆரம்பித்து வைத்தவர் யெகோவா என்பதை பைபிளிலிருந்து வாசித்தேன். (ஆதியாகமம் 1:26-28; 2:22-24) பிள்ளைகள்—ஹான்ஸ் வெர்னர், கார்ல் ஹைன்ஸ், மிக்காயேல், காப்ரியேலா, டோமாஸ்—பிறந்தபோது பக்கத்திலேயே இருந்தது, நல்ல கணவனாகவும் தகப்பனாகவும் இருப்பதற்கான என் பொறுப்புணர்வை இன்னும் பலப்படுத்தியது. ஒவ்வொரு பிள்ளை பிறந்த போதும் நானும் கார்லாவும் குதூகலம் அடைந்தோம்.
நூரெம்பர்க்கில் 1953-ல் நடந்த யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாடு எங்கள் குடும்பத்தாருக்கு மிக முக்கியம் வாய்ந்ததாக அமைந்தது. வெள்ளிக்கிழமை பிற்பகல், “புதிய உலக சமுதாயத்தில் பிள்ளைகளை வளர்த்தல்” என்ற பேச்சைக் கொடுத்தவர் சொன்ன ஒரு விஷயத்தை நாங்கள் மறக்கவே இல்லை; “பிள்ளைகளுக்கு நம்மால் கொடுக்க முடிந்த மிகச் சிறந்த சொத்து, கடவுளுக்கு சேவை செய்யும் ஆசையை அவர்களில் பதிய வைப்பதே” என சொல்லப்பட்டது. யெகோவாவின் உதவியுடன், நானும் கார்லாவும் அதைச் செய்யவே விரும்பினோம். ஆனால் எப்படி செய்வது?
முதலில், ஒவ்வொரு நாளும் குடும்பமாக சேர்ந்து ஜெபிப்பதை பழக்கமாக்கினோம். அது ஜெபத்தின் முக்கியத்துவத்தை எங்கள் பிள்ளைகளின் மனதில் பதிய வைத்தது. ஜெபம் செய்துவிட்டுத்தான் சாப்பிட வேண்டும் என்பதை சின்னஞ்சிறு வயதிலேயே ஒவ்வொரு பிள்ளையும் கற்றுக்கொண்டது. மழலைகளாய் இருக்கையிலேயே தங்கள் பாட்டிலைக் கண்டவுடன் அவர்கள் குட்டித் தலைகளைத் தாழ்த்தி பிஞ்சுக் கைகளை கூப்பினர். ஒரு சந்தர்ப்பத்தில், சாட்சிகளாய் இராத என் மனைவியின் உறவுக்காரர் வீட்டு திருமணத்துக்குச் சென்றிருந்தோம். திருமணம் முடிந்ததும் பெண்ணின் பெற்றோர் வந்திருந்தவர்களை தங்கள் வீட்டுக்கு சிற்றுண்டி சாப்பிட அழைத்தனர். அங்கு வந்திருந்த ஒவ்வொருவரும் சாப்பாடு தங்கள் கையில் கிடைத்தவுடனே சாப்பிட துடித்தனர். எங்கள் ஐந்து வயது மகன் கார்ல் ஹைன்ஸுக்கு இது சரியாகப் படாததால், “ப்ளீஸ், முதலில் ஜெபம் செய்யுங்கள்” என்றானே பார்க்கலாம்! வந்திருந்தவர்கள் அவனைப் பார்த்தனர், பிறகு எங்களைப் பார்த்தனர், கடைசியில் விருந்துக்கு அழைத்தவர்களைப் பார்த்தனர். அவர்களை தர்மசங்கடப்பட விடாமல், உணவுக்காக நான் ஜெபிக்கட்டுமா என்று வலியக் கேட்ட போது விருந்துக்கு அழைத்தவர்கள் ஒப்புக்கொண்டார்கள்.
இந்த சம்பவம், “குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர்” என்ற இயேசுவின் வார்த்தைகளை எனக்கு நினைப்பூட்டின. (மத்தேயு 21:16) நாங்கள் தவறாமல் இருதயப்பூர்வமாக ஜெபங்களை செய்தது, யெகோவாவை தங்கள் அன்பான பரம தகப்பனாக கருத பிள்ளைகளுக்கு உதவியது என்று எங்களால் உறுதியாக சொல்ல முடியும்.
யெகோவாவிடம் எங்கள் பொறுப்பு
கடவுளை நேசிக்க பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்பதற்கு, அவருடைய வார்த்தையை தவறாமல் வாசிக்கவும் படிக்கவும் வேண்டும். இதை நினைவில் வைத்து, ஒவ்வொரு வாரமும் பெரும்பாலும் திங்கட்கிழமை மாலையில் குடும்ப பைபிள் படிப்பை நடத்தினோம். பிள்ளைகளில் மூத்தவனுக்கும் கடைக்குட்டிக்கும் இடையே ஒன்பது வயது வித்தியாசம் இருந்ததால், அவர்களுக்கு வெவ்வேறு தேவைகள் இருந்தன; ஆகவே எல்லாரோடும் சேர்ந்து ஒரே விஷயத்தைப் படிக்க முடியவில்லை.
உதாரணமாக, பள்ளி வயதை எட்டாத பிள்ளைகளுக்கு மிக எளிய படிப்பை நடத்தினோம். அவர்களோடு ஒரே ஒரு பைபிள் வசனத்தை மட்டும் கார்லா கலந்துரையாடினாள்; அல்லது பைபிள் பிரசுரங்களில் இருக்கும் படங்களைக் காட்டி படிப்பு நடத்தினாள். புதிய உலகம் (ஆங்கிலம்) புத்தகத்தில் தங்களுக்குப் பிடித்த படங்களைக் காட்டுவதற்காக சின்னஞ்சிறுசுகள் விடியற்காலையில் எங்கள் கட்டிலில் ஏறியபோது கண்விழித்த ஞாபகம் இப்போதும் எனக்கு பசுமையாக இருக்கிறது.a
யெகோவாவை நேசிக்க நம்மெல்லாருக்கும் அநேக காரணங்கள் உள்ளன; அவற்றை பிள்ளைகளுக்கு பொறுமையாக கற்பிக்கும் உத்தியை கார்லா வளர்த்துக்கொண்டாள். அது கேட்பதற்கு சாதாரணமாகவும் சுலபமாகவும் தெரியலாம்; ஆனால் அது உடல் ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் கிட்டத்தட்ட முழுநேர வேலையாகவே இருந்தது. என்றாலும் நாங்கள் சோர்ந்துவிடவில்லை. யெகோவாவைத் தெரியாத மற்றவர்கள் எங்கள் பிள்ளைகளின்மீது செல்வாக்கு செலுத்துவதற்கு முன்பே, நாங்கள் அந்தப் பிஞ்சு உள்ளங்களில் எழுத விரும்பினோம். இதற்காகவே எங்கள் பிள்ளைகள் உட்காருவதற்கு கற்றுக்கொண்டது முதலே குடும்பப் படிப்பிலும் எப்படியாவது அவர்களை உட்கார வைத்தோம்.
பெற்றோராக நானும் கார்லாவும் வணக்கத்தைப் பொறுத்தமட்டில் எங்கள் பிள்ளைகளுக்கு நேர்த்தியான முன்மாதிரியை வைப்பதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டோம். நாங்கள் சாப்பிட்டாலும்சரி, தோட்டத்தில் வேலை செய்தாலும்சரி, காலார நடந்தாலும்சரி, யெகோவாவுடன் ஒவ்வொரு பிள்ளையின் உறவையும் பலப்படுத்த முயன்றோம். (உபாகமம் 6:6, 7) மிகச் சிறிய வயதிலிருந்தே ஒவ்வொரு பிள்ளைக்கும் தனித்தனியாக ஒரு பைபிள் இருக்கும்படி பார்த்துக்கொண்டோம். மேலும் பத்திரிகைகள் கிடைத்தவுடன், ஒவ்வொருவரின் பெயரையும் அவரவர் பிரதியில் எழுதினேன். இவ்வாறு அவர்களது பிரசுரம் எதுவென்று அடையாளம் கண்டுகொள்ள பிள்ளைகள் கற்றுக்கொண்டார்கள். விழித்தெழு! பத்திரிகையில் குறிப்பிட்ட கட்டுரைகளை வாசிக்கும்படி பிள்ளைகளுக்கு நியமிக்கும் ஐடியா எங்களுக்கு உதித்தது. ஞாயிறு மதிய உணவுக்குப் பிறகு அந்தக் கட்டுரையிலிருந்து என்ன புரிந்துகொண்டார்கள் என்பதை எங்களுக்கு அவர்கள் விளக்கினார்கள்.
பிள்ளைகளுக்கு தேவையான கவனத்தை செலுத்துதல்
நிலைமை எப்பொழுதுமே சீராக இருக்கவில்லை. பிள்ளைகள் வளர வளர, அவர்கள் இதயத்தில் அன்பை பதிய வைப்பதற்கு ஏற்கெனவே அவர்கள் இதயத்திலுள்ளதை தெரிந்திருக்க வேண்டும் என்பதை கண்டுபிடித்தோம். அவர்கள் சொல்வதை காதுகொடுத்து கேட்பதை இது அர்த்தப்படுத்தியது. சில சமயங்களில், எதைக் குறித்தோ எங்களிடம் புகார் செய்ய வேண்டுமென பிள்ளைகள் நினைத்தார்கள். ஆகவே நானும் கார்லாவும் அவர்களோடு கலந்து பேசித் தீர்த்து வைத்தோம். இதற்கென்றே குடும்ப படிப்பிற்குப் பிறகு அரை மணிநேரத்தை ஒதுக்கினோம். அப்போது யாரானாலும் சரி, தாங்கள் நினைப்பதை மனந்திறந்து சொல்லலாம்.
உதாரணமாக, பெற்றோராகிய நாங்கள் மூத்த பையனை மட்டும் வேறு விதமாக நடத்தி, பாரபட்சம் காட்டுவதாக எங்கள் கடைசிப் பிள்ளைகளான டோமாஸும் காப்ரியேலாவும் நினைத்தார்கள். குடும்பப் படிப்பிற்குப் பின் ஒதுக்கிய நேரத்தில் ஒரு நாள், அவர்கள் மனம் திறந்து: “அப்பா, நீங்களும் அம்மாவும் ஹான்ஸ் வெர்னரை மட்டும் எப்பொழுதும் இஷ்டப்படி நடந்துகொள்ள விடுவது போல் எங்களுக்கு தெரிகிறது” என்றார்கள். முதலில் நான் அதிர்ந்து போனேன். என்றாலும், அதை கவனமாக சிந்தித்துப் பார்த்த பிறகு, பிள்ளைகள் சொல்வதிலும் ஏதோ நியாயம் இருப்பதை நானும் கார்லாவும் ஒத்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஆகவே எல்லா பிள்ளைகளையும் சரிசமமாக நடத்த இன்னும் முயற்சி செய்தோம்.
சில சமயங்களில், அவசரப்பட்டோ நியாயமில்லாமலோ பிள்ளைகளை நான் தண்டித்ததுண்டு. அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் பெற்றோராக நாங்கள் மன்னிப்பு கேட்க கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அதற்குப் பிறகு யெகோவாவிடம் ஜெபித்தோம். யெகோவாவிடமும் பிள்ளைகளிடமும் அப்பா உடனே மன்னிப்பு கேட்க தயாராய் இருப்பதை பிள்ளைகள் உணருமாறு நடந்துகொள்ள வேண்டியிருந்தது. இதனால், அவர்களோடு கனிவான, சிநேகப்பான்மையான ஓர் உறவை காத்துக்கொள்ள முடிந்தது. “நீங்கள்தான் எங்கள் பெஸ்ட் பிரெண்ட்ஸ்” என அவர்கள் அடிக்கடி எங்களிடம் சொன்னார்கள். இது எங்களை மிகவும் சந்தோஷமடையச் செய்தது.
குடும்பமாக ஒன்று சேர்ந்து உழைப்பது ஐக்கியத்தை வளர்க்கிறது. இந்நோக்கத்துடன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலையை ஒதுக்கினோம். ஹான்ஸ் வெர்னரின் வேலை, வாராவாரம் கடைக்குப் போய் மளிகை சாமான்கள் வாங்கி வர வேண்டும்; அதற்காக சாமான் லிஸ்ட்டையும் கொஞ்சம் பணத்தையும் அவனிடம் கொடுத்தோம். ஒரு முறை சாமான் லிஸ்ட்டையோ பணத்தையோ நாங்கள் கொடுக்கவில்லை. ஏன் என்று அவன் அம்மாவிடம் கேட்டபோது, கையில் சல்லி காசுகூட இல்லாததை அவள் சொன்னாள். பிள்ளைகள் தங்களுக்குள் குசுகுசுவென்று ஏதோ பேசினார்கள். பின்னர் தங்கள் உண்டியல்களை எடுத்து வந்து அதில் உள்ளவற்றை டேபிளில் கொட்டினார்கள். “அம்மா, இப்போ கடைக்குப் போகலாமில்லையா!” என்று எல்லாரும் விழிகள் விரிய சொன்னார்கள். ஓர் ஆத்திர அவசரத்திற்கு உதவுவது எப்படியென்பதையும் பிள்ளைகள் கற்றுக்கொண்டார்கள்; அது குடும்பத்தை இன்னும் நெருங்கிவர வைத்தது.
பையன்கள் வாலிப வயதை அடைகையில் இளம் பெண்களிடம் அவர்கள் கவனம் சென்றது. உதாரணமாக, டோமாஸுக்கு, சாட்சியாயிருந்த 16 வயது பெண்ணை ரொம்ப பிடித்துப் போனது. அவனுக்கு உண்மையிலேயே அந்தப் பெண்ணைப் பிடித்திருந்தால், அவளை திருமணம் செய்துகொள்ளவும் மனைவி மக்களை வைத்து காப்பாற்றும் பொறுப்பேற்கவும் தயாராக இருக்க வேண்டும் என்று விளக்கி கூறினேன். அவனுக்கோ அப்போது 18 வயதுதான்; எனவே திருமணத்திற்கு இன்னும் தயாராகவில்லை என்பதை அவன் புரிந்துகொண்டான்.
குடும்பமாக முன்னேறுதல்
அவர்கள் சிறுவர்களாக இருக்கையிலேயே, தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் ஒருவர் பின் ஒருவராக சேர்ந்துகொண்டனர். அவர்கள் பேச்சு கொடுக்கும் போதெல்லாம் நாங்கள் கவனமாக கேட்டோம்; கடவுளிடம் அவர்களுக்கு இருக்கும் இதயப்பூர்வமான அன்பைக் கண்டபடியால் நாங்கள் அதிக உற்சாகமடைந்தோம். அவ்வப்போது எங்கள் வீட்டில் தங்க வந்த வட்டார, மாவட்ட கண்காணிகள் தங்கள் வாழ்க்கையில் பெற்ற அனுபவங்களை சொன்னார்கள், அல்லது பைபிளிலிருந்தே எங்களுக்கு வாசித்து காட்டினார்கள். இந்த சகோதரர்களும் அவர்களது மனைவிகளும் எங்கள் குடும்பத்தாரின் இதயங்களில் முழுநேர ஊழியத்திற்கான ஆசையை வளர்க்க உதவினார்கள்.
மாநாடுகள் எப்போது வரும் என்று நாங்கள் ஆவலுடன் காத்திருந்தோம். கடவுளுக்கு சேவை செய்யும் ஆசையை எங்கள் பிள்ளைகளின் இதயத்தில் பதிக்க நாங்கள் எடுத்த முயற்சிகளில் அவை முக்கிய பங்கு வகித்தன. மாநாடு நடக்கும் இடத்திற்குப் போவதற்கு முன்பு பேட்ஜ் கார்டுகளை குத்திக்கொள்வதென்றால் பிள்ளைகளுக்கு ஒரே கொண்டாட்டம்தான். ஹான்ஸ் வெர்னர் பத்து வயதில் முழுக்காட்டுதல் பெற்றபோது அது எங்கள் உள்ளத்தைத் தொட்டது. யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பதற்கு அவனுக்கு வயது போதாது என்றே அநேகர் கருதினார்கள்; ஆனால் இப்போது அவனுக்கு 50 வயது; 40 வருடங்களாக யெகோவாவை சேவித்து வருவதற்கு அதிக நன்றியோடு இருப்பதாக அவன் என்னிடம் தெரிவித்தான்.
யெகோவாவோடு தனிப்பட்ட உறவை வைத்திருப்பது அவசியம் என்று நாங்கள் பிள்ளைகளுக்கு விளக்கினோம்; ஆனால் ஒப்புக்கொடுக்க அவர்களை அவசரப்படுத்தவில்லை. இருந்தாலும், மற்ற பிள்ளைகளும் அவரவர் முழுக்காட்டுதல் பெறுவதற்கான சமயம் வந்தபோது அந்தளவுக்கு அவர்கள் முன்னேறியதைக் கண்ட எங்களுக்கு அளவில்லா ஆனந்தம் ஏற்பட்டது.
யெகோவாவின் மேல் எங்கள் பாரங்களை வைக்க கற்றுக்கொள்ளுதல்
1971-ல், ஹான்ஸ் வெர்னர் 51-வது உவாட்ச் டவர் பைபிள் கிலியட் பள்ளியில் பட்டம் பெற்று ஸ்பெய்னில் மிஷனரியாக சேவை செய்ய அனுப்பப்பட்ட போது நாங்கள் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தோம். ஒவ்வொருவராக, மற்ற பிள்ளைகளும் முழுநேர ஊழியர்களாக கொஞ்ச காலம் சேவை செய்தனர்; அதுவும் பெற்றோராகிய எங்களுக்கு அதிக மகிழ்ச்சி அளித்தது. இந்தச் சமயத்தில்தான் ஹான்ஸ் வெர்னர் இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட பைபிளை எனக்கு பரிசளித்தான். எங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி குறைவற்றிருந்ததாகவே தோன்றியது.
யெகோவாவிடம் இன்னும் நெருங்கி வரவேண்டிய தேவையை பிறகு நாங்கள் கண்டுபிடித்தோம். ஏன்? ஏனென்றால் எங்களுடைய வாலிபப் பிள்ளைகளில் சிலர், அவர்களுடைய விசுவாசத்தை பெரிதும் சோதித்த பிரச்சினைகளை எதிர்ப்படுவதைக் கண்டோம். உதாரணமாக, எங்கள் அருமை மகள் காப்ரியேலாவும் சோதனைகளிலிருந்து தப்பவில்லை. 1976-ல் அவள் லோடார் என்பவரை திருமணம் செய்தாள். திருமணத்திற்குப் பின் சீக்கிரத்திலேயே அவர் நோய்ப்பட்டார். அவர் படிப்படியாய் பலவீனமடைந்து கடைசியில் இறக்கும் வரை காப்ரியேலா அவரை பக்கத்திலிருந்து பராமரித்தாள். குடும்பத்தில் திடகாத்திரமாய் இருந்த ஒருவர் திடீரென நோய்ப்பட்டு இறப்பதைக் கண்டபோது, யெகோவாவின் அரவணைக்கும் கரம் எங்களுக்கு எவ்வளவு தேவை என்பதை உணர்ந்தோம்.—ஏசாயா 33:2.
யெகோவாவின் அமைப்பில் சேவைக்கான வாய்ப்புகள்
(இன்று நடத்தும் கண்காணி என்று அழைக்கப்படும்) சபை ஊழியராக நான் 1955-ல் நியமிக்கப்பட்டபோது, அந்தப் பொறுப்பிற்கு தகுதியுள்ளவனாக நான் உணரவில்லை. செய்ய வேண்டிய வேலையோ அதிகமாக இருந்தது; எனவே சபை பொறுப்புகளை சரிவர செய்வதற்காக சில நாட்கள் காலையில் நான்கு மணிக்கு எழுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. என் மனைவியும் பிள்ளைகளும் பக்க பலமாய் இருந்தனர்; ஏதாவது வேலை இருந்தாலும் மாலையில் என்னை தொந்தரவு செய்யாதபடி பார்த்துக்கொண்டனர்.
இருந்தபோதிலும் ஒரு குடும்பமாக முடிந்தளவுக்கு ஒன்றாக சேர்ந்து இனிதாய் நேரத்தை செலவிட்டோம். சில சமயங்களில் குடும்பத்தோடு எங்காவது வெளியில் சென்று வருவதற்கு என் முதலாளியே தன் காரை எடுத்துச்செல்ல எனக்கு அனுமதி அளித்தார். மரங்களடர்ந்த காட்டுப் பகுதியில் காவற்கோபுரம் பத்திரிகையை நாங்கள் சேர்ந்து படித்த சந்தர்ப்பங்களை பிள்ளைகள் அனுபவித்து மகிழ்ந்தார்கள். நாங்கள் ஹைக்கிங் சென்றதும் உண்டு; சில சமயங்களில் என் ஹார்மோனிக்காவின் இசைக்கேற்ப பாட்டு பாடிக்கொண்டே காட்டுப்பாதையில் நடந்தோம்.
1978-ல் உதவி வட்டார கண்காணியாக (பயண ஊழியர்) நியமிக்கப்பட்டேன். உணர்ச்சிப் பெருக்கால், “யெகோவாவே, அதைச் செய்ய முடியுமென்று எனக்குத் தோன்றவில்லை; ஆனால் நான் அதை முயன்று பார்க்க நீர் விரும்பினால், என்னால் முடிந்தளவுக்கு சிறப்பாக செய்வேன்” என்று ஜெபித்தேன். இரண்டு வருடம் கழித்து, 54-ம் வயதில் நான் நடத்திய சிறு தொழிலை எங்கள் கடைசி பையன் டோமாஸிடம் ஒப்படைத்தேன்.
எங்கள் பிள்ளைகள் எல்லாருமே வளர்ந்துவிட்டார்கள்; அதனால் யெகோவாவுக்கு இன்னும் அதிக சேவை செய்ய எனக்கும் கார்லாவுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதே வருடத்தில், ஹாம்பர்க்கில் ஒரு பகுதிக்கும் ஷ்லெஸ்விக் ஹோல்ஸ்டைன் முழுவதற்கும் நான் வட்டார கண்காணியாக நியமிக்கப்பட்டேன். பிள்ளைகளை பெற்று வளர்த்த அனுபவம் எங்களுக்கு இருந்ததால், பெற்றோரையும் பிள்ளைகளையும் விசேஷித்த வகையில் புரிந்துகொண்டு நடத்த முடிந்தது. அநேக சகோதரர்கள் எங்களை அவர்களது வட்டார பெற்றோர் என்று அழைத்தனர்.
வட்டார ஊழியத்தில் பத்து வருடத்தை என்னோடு கழித்த பின்பு கார்லாவுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதே வருடத்தில், எனக்கு மூளையில் கட்டி இருப்பதையும் டாக்டர்கள் கண்டுபிடித்தனர். எனவே இனிமேலும் வட்டார கண்காணியாக என்னால் சேவை செய்ய முடியவில்லை; மூளையில் அறுவை சிகிச்சை நடந்தது. மூன்று வருடங்களுக்கு முன்பு தான் என்னால் மறுபடியும் உதவி வட்டார கண்காணியாக சேவை செய்ய முடிந்தது. நானும் கார்லாவும் இப்போது 70 வயதை தாண்டிவிட்டோம்; இப்போது நாங்கள் பயண ஊழியம் செய்வதில்லை. என்னால் செய்ய முடியாத ஓர் ஊழிய வாய்ப்பை பிடிவாதமாக செய்வதில் அர்த்தமில்லை என்பதை யெகோவா எங்களுக்குப் புரிய வைத்தார்.
நடந்தவற்றையெல்லாம் இப்போது எண்ணிப் பார்க்கையில், எங்கள் பிள்ளைகளின் இதயங்களில் சத்தியத்திற்கான பிரியத்தை பதிக்க உதவினதற்காக நானும் கார்லாவும் யெகோவாவுக்கு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். (நீதிமொழிகள் 22:6) இத்தனை காலமும் எங்கள் பொறுப்புகளை சரிவர செய்வதற்கு யெகோவாவே உதவியிருக்கிறார், வழிநடத்தியிருக்கிறார், பயிற்றுவித்திருக்கிறார். முதுமையால் நாங்கள் தளர்ந்துவிட்ட போதிலும் யெகோவாவிடம் உள்ள எங்கள் அன்பு ஒருபோதும் மாறாமல் என்றும் வாழ்கிறது.—ரோமர் 12:10, 11.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது, இப்போது கிடைப்பதில்லை.
[பக்கம் 26-ன் படம்]
1965-ல் எங்கள் குடும்பம், ஹாம்பர்க்கில் எல்ப் நதிக்கரையில் காலார நடக்கையில்
[பக்கம் 28-ன் படம்]
1998-ல் பெர்லின் சர்வதேச மாநாட்டில் குடும்பத்தில் ஒரு சிலரோடு
[பக்கம் 29-ன் படம்]
என் மனைவி கார்லாவுடன்