உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w02 5/1 பக். 30-31
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • இதே தகவல்
  • ‘சகல தேசத்தாருக்கும் ஜெபவீடு’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • B11 முதல் நூற்றாண்டு ஆலயம்
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
  • B11 முதல் நூற்றாண்டு ஆலயம்
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • சாலொமோன் ஆலயத்தைக் கட்டுகிறார்
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
w02 5/1 பக். 30-31

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

யெகோவாவுடைய ஆலயத்தின் எந்தப் பகுதியில், ‘திரள் கூட்டத்தார்’ பரிசுத்த சேவை செய்து வருவதாக யோவான் கண்டார்?​—⁠வெளிப்படுத்துதல் 7:9-15.

திரள் கூட்டத்தினர் யெகோவாவின் பெரிய ஆவிக்குரிய ஆலயத்தின் பூமிக்குரிய பிராகாரங்கள் ஒன்றில் அவரை வணங்கி வருகின்றனர் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். அதுவும் குறிப்பாக சாலொமோனின் ஆலயத்து வெளிப் பிராகாரத்துக்கு ஒத்த பிராகாரத்தில் வணங்கி வருகின்றனர் என சொல்லலாம்.

இயேசுவின் காலத்திலிருந்த, புறஜாதியாருக்கான பிராகாரத்திற்குச் சமமான அல்லது இணையான ஆவிக்குரிய பிராகாரத்தில் திரள் கூட்டத்தினர் இருப்பதாக முன்பு சொல்லப்பட்டது. என்றாலும் அது அப்படியல்ல என்பதற்கு ஐந்து காரணங்களாவது இருப்பதை மேலுமான ஆராய்ச்சி வெளிப்படுத்தியிருக்கிறது. முதலாவதாக, ஏரோது புதுப்பித்த ஆலயத்தின் எல்லா அம்சங்களுமே யெகோவாவின் பெரிய ஆவிக்குரிய ஆலயத்திற்கு பொருந்துவதில்லை. உதாரணமாக, ஏரோது புதுப்பித்த ஆலயத்தில் பெண்களுக்கென ஒரு பிராகாரமும் இஸ்ரவேலுக்கென தனி பிராகாரமும் இருந்தன. பெண்களுக்கான பிராகாரத்திற்குள் ஆண்கள் பெண்கள் ஆகிய இரு பாலாருமே வரலாம்; ஆனால் இஸ்ரவேலுக்கான பிராகாரத்தில் ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். யெகோவாவின் பெரிய ஆவிக்குரிய ஆலயத்தின் பூமிக்குரிய பிராகாரங்களில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து வணங்குகின்றனர், அவர்கள் தனித்தனியே பிரிக்கப்படுவதில்லை. (கலாத்தியர் 3:28, 29) எனவே பெண்களுக்கான, இஸ்ரவேலுக்கான பிராகாரங்களுக்கு சமானமானவை ஆவிக்குரிய ஆலயத்தில் இல்லை.

இரண்டாவதாக, சாலொமோன் கட்டிய ஆலயத்திலோ எசேக்கியேல் தரிசனத்தில் கண்ட ஆலயத்திலோ கடவுள் கொடுத்திருந்த கட்டட வரைபட திட்டத்தில் புறஜாதியாருக்கென ஒரு பிராகாரம் இருக்கவில்லை; அதைப் போலவே செருபாபேல் திரும்ப கட்டிய ஆலயத்திலும் அப்படிப்பட்ட ஒரு பிராகாரம் இருக்கவில்லை. எனவே யெகோவாவின் பெரிய ஆவிக்குரிய ஆலயத்தின் வணக்க ஏற்பாட்டில் புறஜாதியாருக்கென ஒரு பிராகாரம் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வர எந்த காரணமுமில்லை; முக்கியமாக அடுத்து வரும் குறிப்பை கவனிக்கையில் அதை ஒப்புக்கொள்வோம்.

மூன்றாவதாக, புறஜாதியாருக்கான பிராகாரம் ஏதோமிய அரசன் ஏரோதுவால் கட்டப்பட்டது; அதுவும் தனக்கு புகழ் சேர்க்கவும் ரோமின் ஆதரவைப் பெறவுமே அவர் அதைக் கட்டினார். செருபாபேல் கட்டியிருந்த ஆலயத்தை ஏரோது ஒருவேளை பொ.ச.மு. 18 அல்லது 17-⁠ல் மீண்டும் புதுப்பிக்க தொடங்கினார். தி ஆங்க்கர் பைபிள் டிக்ஷ்னரி பின்வருமாறு விளக்குகிறது: “அதிகாரத்திலிருந்த மேற்கத்திய [ரோம] பேரரசுக்கு இருந்த பண்டைய கிரேக்க, ரோம கலாச்சார ரசனையால் . . . , கிழக்கத்திய நகரங்களின் ஆலயங்களைவிட பெரியதோர் ஆலயத்தை நிறுவ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.” என்றாலும், ஆலயத்தின் கட்டுமான அளவுகள் மட்டும் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டவை. அந்த டிக்ஷ்னரி விளக்குகிறது: “முன்பிருந்த ஆலயத்தின் [சாலொமோன் மற்றும் செருபாபேல் கட்டியிருந்தவற்றின்] அளவாகவே இதுவும் இருக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டிருந்தது; ஆனாலும் ஆலயம் அமைந்திருந்த மலையின் பரப்பளவோ வரையறுக்கப்பட்டதாக இல்லை.” எனவே ஆலயம் அமைந்திருந்த பகுதியை ஏரோது விரிவாக்கினார்; எப்படியெனில் புறஜாதியாருக்கான பிராகாரம் என்று அழைக்கப்பட்ட பகுதியை ஆலயத்துடன் சேர்த்துக் கட்டினார். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் கட்டப்பட்ட ஒரு பகுதிக்கு யெகோவாவின் ஆவிக்குரிய ஆலய ஏற்பாட்டில் இணையான ஒன்று இருக்குமா?

நான்காவதாக, குருடர், முடவர், விருத்தசேதனம் செய்யப்படாத புறஜாதியார் என எவரானாலும் சரி, புறஜாதியாருக்கான பிராகாரத்தில் நுழைய அனுமதிக்கப்பட்டனர். (மத்தேயு 21:14, 15) கடவுளுக்கு பலி செலுத்த விரும்பிய விருத்தசேதனம் செய்யப்படாத அநேக புறஜாதியாரின் விருப்பத்தை அந்தப் பிராகாரம் தீர்த்து வைத்தது உண்மைதான். மேலும் அந்தப் பிராகாரத்தில்தான் சில சமயங்களில் இயேசு ஜனக்கூட்டத்திற்கு முன்பு உரையாற்றினார்; தம் பிதாவின் வீட்டை அவமதித்துவிட்டதாக சொல்லி காசுக்காரரையும் வியாபாரிகளையும் இரண்டு தடவை துரத்தினார். (மத்தேயு 21:12, 13; யோவான் 2:14-16) இருந்தாலும், த ஜூயிஷ் என்ஸைக்ளோப்பீடியா கூறுகிறது: “மிகச் சரியாக சொன்னால், இந்த வெளிப் பிராகாரம் ஆலயத்தின் பாகமாக இருக்கவில்லை. அந்த நிலம் பரிசுத்தமானதாக இருக்கவில்லை; அங்கு எவரும் போய் வர முடிந்தது.”

ஐந்தாவதாக, புறஜாதியாருக்கான பிராகாரத்தைக் குறிப்பிடுகையில், “ஆலயம்” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை (ஹையிரான்), “ஆலய கட்டடத்தை மட்டும் பிரத்தியேகமாக குறிப்பிடாமல் முழு வளாகத்தையுமே அர்த்தப்படுத்துகிறது” என பார்க்லீ எம். நியூமேனும் ஃபிலிப் சி. ஸ்டைனும் இணைந்து எழுதிய மத்தேயு சுவிசேஷத்தின் பேரில் ஒரு கையேடு என்ற ஆங்கில புத்தகம் தெரிவிக்கிறது. இதற்கு முரணாக, திரள் கூட்டத்தைப் பற்றி யோவான் கண்ட தரிசனத்தை விவரிக்கையில் “ஆலயம்” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தையோ (நாயாஸ்) இன்னும் திட்டவட்டமான அர்த்தம் தருவதாகும். எவ்வாறெனில் எருசலேம் ஆலயம் சம்பந்தப்பட்ட விஷயத்தில், மகா பரிசுத்த ஸ்தலத்தையே, ஆலய கட்டடத்தையே பொதுவாக அது குறிப்பிடுகிறது.​—⁠மத்தேயு 27:5, 51; லூக்கா 1:9, 21; யோவான் 2:20.

திரள் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் இயேசுவின் மீட்பின் பலியில் விசுவாசம் வைக்கின்றனர். அவர்கள் “தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்”திருப்பதால் ஆவிக்குரிய வகையில் சுத்தமாக இருக்கின்றனர். எனவே கடவுளுக்கு சிநேகிதர்களாவதற்கும், மிகுந்த உபத்திரவத்தை தப்பிப்பிழைப்பதற்கும் வாய்ப்பிருப்பதால் நீதியுள்ளவர்கள் என அறிவிக்கப்படுகின்றனர். (யாக்கோபு 2:23, 25) அநேக வழிகளில், அவர்கள் இஸ்ரவேலில், நியாயப்பிரமாண உடன்படிக்கைக்குக் கீழ்ப்பட்டு, இஸ்ரவேலர்களோடு சேர்ந்து கடவுளை வணங்கி வந்த யூத மதத்திற்கு மாறியவர்களை ஒத்திருக்கின்றனர்.

என்றாலும், இவ்வாறு யூத மதத்திற்கு மாறியவர்கள் உட்பிராகாரத்தில் சேவை செய்யவில்லை; அங்கு ஆசாரியர்கள் தங்கள் பணிகளை செய்து வந்தனர். அதைப் போலவே திரள் கூட்டத்தைச் சேர்ந்தவர்களும் யெகோவாவின் பெரிய ஆவிக்குரிய ஆலயத்தின் உட்பிராகாரத்தில் இல்லை; அந்தப் பிராகாரம், யெகோவாவின் “பரிசுத்த ஆசாரிய” வகுப்பைச் சேர்ந்தவர்கள் பூமியில் இருக்கையில் பெற்றிருக்கும் பரிபூரண, நீதியுள்ள மனித குமாரர்கள் என்ற நிலையை குறித்துக் காட்டுகிறது. (1 பேதுரு 2:5) ஆனால், பரலோக மூப்பர் யோவானுக்குச் சொன்ன விதமாக, திரள் கூட்டத்தினர் உண்மையில் அந்த ஆலயத்திலேயே இருக்கின்றனர்; ஆவிக்குரிய விதத்தில் புறஜாதியாருக்கான பிராகாரமாக கருதப்பட்ட, ஆலய பகுதிக்கு வெளியே இருந்த ஒரு பிராகாரத்தில் அவர்கள் இல்லை. எப்பேர்ப்பட்ட சிலாக்கியம் அது! ஒவ்வொருவரும் ஆவிக்குரிய, ஒழுக்கம் சம்பந்தப்பட்ட சுத்தத்தை எல்லா சந்தர்ப்பங்களிலும் காத்துக்கொள்வதன் அவசியத்தை இது எவ்வளவாய் வலியுறுத்திக் காட்டுகிறது!

[பக்கம் 31-ன் படங்கள்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

சாலொமோனின் ஆலயம்

1. ஆலய கட்டடம்

2. உட்பிராகாரம்

3. வெளிப் பிராகாரம்

4. ஆலய பிராகாரத்திற்குச் செல்லும் படிக்கட்டுகள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்