உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w02 5/15 பக். 4-7
  • கடவுள் யார்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடவுள் யார்?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பண்புகளற்ற சக்தியா நிஜமான நபரா?
  • கடவுளின் தனிச்சிறப்புமிக்க பெயர்
  • இயேசு​—⁠கடவுளா?
  • கடவுளை நன்கு அறிதல்
  • கடவுள்—அவர் யார்?
    நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம்
  • கடவுளுடைய பெயர் என்ன?
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2019
  • இயேசு கிறிஸ்து யார்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • கடவுளுடைய பெயர்
    விழித்தெழு!—2017
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
w02 5/15 பக். 4-7

கடவுள் யார்?

“பிரபஞ்சத்தில் மிக உன்னத மூலகாரணரும் சக்தியுமானவருக்கே பொதுவாக கடவுள் என்ற பெயர் சூட்டப்படுகிறது; அவருக்கே பக்தியும் செலுத்தப்படுகிறது” என தி என்ஸைக்ளோப்பீடியா அமெரிக்கானா கூறுகிறது. கடவுள் என்ற வார்த்தை பரம்பொருள் என அர்த்தப்படுத்துகிறது. அத்தகைய பிரமிக்கத்தக்க பரம்பொருளின் இயல்பு என்ன?

கடவுள்​—⁠பண்புகளற்ற ஒரு சக்தியா அல்லது நிஜமான ஒரு நபரா? அவருக்கு பெயர் இருக்கிறதா? அநேகர் நம்புவதுபோல் அவர் ஒரு திரித்துவமா? கடவுளை நாம் எப்படி அறிய முடியும்? இக்கேள்விகளுக்கு பைபிள் நம்பகமான, திருப்தியான பதில்களைத் தருகிறது. சொல்லப்போனால், கடவுளைத் தேடும்படி அது நம்மை உற்சாகப்படுத்துகிறது; “அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்ல” என அது கூறுகிறது.​—⁠அப்போஸ்தலர் 17:27.

பண்புகளற்ற சக்தியா நிஜமான நபரா?

கடவுள் நம்பிக்கையுடைய பலரும் கடவுள் ஒரு நபரல்ல, வெறும் சக்தியே என நினைக்கிறார்கள். உதாரணமாக, சில கலாச்சாரங்களில் இயற்கை சக்திகளை கடவுட்களாக பூஜிக்கிறார்கள். பிரபஞ்சத்தின் அமைப்பையும் பூமியிலுள்ள ஜீவராசிகளின் இயல்பையும் பற்றிய அறிவியல் ஆய்வு கண்டறிந்த உண்மைகளை சீர்தூக்கிப் பார்த்திருக்கும் சிலர் ஒரு காரணகர்த்தா இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இருந்தாலும், இந்தக் காரணகர்த்தாவிற்கு பண்புகள் இருப்பதாக சொல்ல அவர்கள் தயங்குகிறார்கள்.

ஆனாலும், சிக்கலான படைப்புகள் அவற்றின் காரணகர்த்தா புத்திக்கூர்மையின் பிறப்பிடமாக இருக்க வேண்டும் என்பதை காட்டுவதில்லையா? புத்திக்கூர்மை இருந்தால் ஒரு மனமும் இருக்க வேண்டும். எல்லா படைப்புகளுக்கும் காரணமான அந்த மகத்தான மனம் கடவுள் என்ற நபருடையது. அந்தக் கடவுளுக்கு ஒரு சரீரமும் உண்டு, அது நம்முடையதைப் போன்றதல்ல, ஆனால் அது ஆவி சரீரம். “ஜென்ம சரீரமுமுண்டு, ஆவிக்குரிய சரீரமுமுண்டு” என பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 15:44) கடவுளுடைய இயல்பை விளக்குகையில், “தேவன் ஆவியாயிருக்கிறார்” என பைபிள் தெளிவாக குறிப்பிடுகிறது. (யோவான் 4:24) ஆவியாயிருப்பது மனித வாழ்க்கையிலிருந்து பெரிதும் வேறுபடுகிறது. அது மனித கண்களுக்கு புலப்படாதது. (யோவான் 1:18) அப்படிப்பட்ட காண முடியாத ஆவி ரூபத்தில் சிருஷ்டிகளும் இருக்கின்றனர். அவர்களே தூதர்கள்​—⁠“தேவ புத்திரர்.”​—⁠யோபு 1:6; 2:1.

கடவுள் சிருஷ்டிக்கப்படாதவர், ஆவி சரீரம் உடையவர்; எனவே அவர் வசிப்பதற்கு ஓர் இடம் இருப்பதும் நியாயமானதே. ஆவி ஆட்களின் இருப்பிடத்தைப் பற்றி குறிப்பிடுகையில் பரலோகமே கடவுளுடைய “ஸ்தாபிக்கப்பட்ட வாசஸ்தலம்” என பைபிள் சொல்கிறது. (1 இராஜாக்கள் 8:43, NW) பைபிள் எழுத்தாளர் பவுலும் இவ்வாறு குறிப்பிடுகிறார்: ‘கிறிஸ்துவானவர் பரலோகத்திலேதானே நமக்காக தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்திருக்கிறார்.’​—⁠எபிரெயர் 9:24.

“ஆவி” என்ற இந்த வார்த்தை மற்றொரு கருத்திலும் பைபிளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கடவுளிடம் ஜெபம் செய்கையில், “நீர் உம்முடைய ஆவியை அனுப்பும்போது, அவைகள் சிருஷ்டிக்கப்படும்” என சங்கீதக்காரன் சொன்னார். (சங்கீதம் 104:30) இங்கு சொல்லப்படுகிற ஆவி கடவுளைக் குறிப்பதில்லை, ஆனால் விரும்புகிற காரியங்களை செய்து முடிப்பதற்கு அவர் அனுப்பும் அல்லது பயன்படுத்தும் சக்தியைக் குறிக்கிறது. இதன் மூலமாகவே, வானத்தையும் பூமியையும் சகல ஜீவராசிகளையும் கடவுள் படைத்தார். (ஆதியாகமம் 1:2; சங்கீதம் 33:6) அவரது ஆவி, பரிசுத்த ஆவி என அழைக்கப்படுகிறது. பைபிளை எழுத மனிதரை ஏவுவதற்கு கடவுள் இந்தப் பரிசுத்த ஆவியையே பயன்படுத்தினார். (2 பேதுரு 1:20, 21) ஆகவே, பரிசுத்த ஆவி என்பது தம் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு கடவுள் பயன்படுத்துகிற காண முடியாத, செயல் நடப்பிக்கும் சக்தியாகும்.

கடவுளின் தனிச்சிறப்புமிக்க பெயர்

ஆகூர் என்ற பைபிள் எழுத்தாளர் இவ்வாறு கேட்டார்: “காற்றைத் தமது கைப்பிடிகளில் அடக்கினவர் யார்? தண்ணீர்களை வஸ்திரத்திலே கட்டினவர் யார்? பூமியின் எல்லைகளையெல்லாம் ஸ்தாபித்தவர் யார்? அவருடைய நாமம் என்ன? அவர் குமாரனுடைய நாமம் என்ன?” (நீதிமொழிகள் 30:4) சொல்லப்போனால், ‘இவைகளை எல்லாம் செய்த எந்தவொரு மனிதனின் பெயராவது வம்ச பரம்பரையாவது உங்களுக்குத் தெரியுமா?’ என்றே ஆகூர் கேட்டார். இயற்கை சக்திகளை அடக்கியாளும் வல்லமை கடவுளுக்கு மட்டுமே இருக்கிறது. கடவுள் இருக்கிறார் என்பதற்கு இந்தப் படைப்புகள் வலிமையான ஆதாரத்தை அளித்தாலும் அவை கடவுளுடைய பெயரை தெரிவிப்பதில்லை. சொல்லப்போனால், கடவுளே தம் பெயரை வெளிப்படுத்தாவிட்டால் நம்மால் அதை அறியவே முடியாது. ஆனால் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். “நான் யெகோவா, இதுவே என் பெயர்” என்று படைப்பாளர் சொல்கிறார்.​—⁠ஏசாயா 42:8, NW.

யெகோவா என்ற இந்தத் தனிச்சிறப்புமிக்க பெயர் மூல எபிரெய வேதாகமத்தில் மட்டுமே சுமார் 7,000 தடவை காணப்படுகிறது. இப்பெயரை இயேசு கிறிஸ்து பிறருக்கு தெரியப்படுத்தினார், அவர்களுக்கு முன்பாக அதை துதித்துப் போற்றினார். (யோவான் 17:6, 26) பைபிளின் கடைசி புத்தகத்தில், “அல்லேலூயா” என்ற வார்த்தையின் ஒரு பாகமாக இப்பெயர் காணப்படுகிறது, அவ்வார்த்தையின் அர்த்தம் “யாவைத் துதி” என்பதாகும். “யா” என்பது “யெகோவா” என்ற பெயரின் சுருக்கமாகும். (வெளிப்படுத்துதல் 19:1-6) ஆனாலும் நவீன பைபிள் மொழிபெயர்ப்புகள் பலவும் இப்பெயரை அரிதாகவே பயன்படுத்துகின்றன. சில மொழிகளில் அவை பெரும்பாலும் “கர்த்தர்,” “ஆண்டவர்” என்ற வார்த்தைகளையே பயன்படுத்துகின்றன; “கர்த்தர்,” “ஆண்டவர்” என்ற பொதுவான பட்டப் பெயர்களிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுவதற்காக தடித்த அல்லது பெரிய எழுத்துக்களை பயன்படுத்துகின்றன. கடவுளின் பெயர் யாவே என உச்சரிக்கப்பட்டிருக்கலாம் என சில கல்விமான்கள் சொல்கின்றனர்.

இப்பிரபஞ்சத்திலேயே மிகப் பெரியவரின் பெயரைக் குறித்ததில் ஏன் இத்தனை கருத்து வேறுபாடுகள்? இந்தப் பிரச்சினை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்து விட்டது; மூடநம்பிக்கையின் காரணமாக யூதர்கள் கடவுளுடைய பெயரை உச்சரிப்பதை நிறுத்திவிட்டு, வேத எழுத்துக்களில் அப்பெயர் வரும் இடங்களிலெல்லாம் “பேரரசராகிய கர்த்தர்” என்பதற்கு இணையான எபிரெய வார்த்தையை சொல்ல எப்போது துவங்கினார்களோ அப்போதே ஆரம்பித்து விட்டது. பைபிள் சார்ந்த எபிரெய மொழி உயிரெழுத்துக்களின்றி எழுதப்பட்டதால், பூர்வ காலத்தில் வாழ்ந்த மோசே, தாவீது, இன்னும் பலர் கடவுளுடைய பெயரை எப்படி உச்சரித்தார்கள் என்பதை அறிவதற்கு வழியே இல்லை. ஆனாலும், ஜெஹோவா என்ற ஆங்கில உச்சரிப்பு பல நூற்றாண்டுகளாகவே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது; அதற்கு இணையான உச்சரிப்பு இன்று பல மொழிகளில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.​—⁠யாத்திராகமம் 6:3; ஏசாயா 26:4.

பூர்வ எபிரெயுவில் கடவுளுடைய பெயர் எப்படி உச்சரிக்கப்பட்டது என்பது திட்டமாக தெரியாவிட்டாலும், அதன் அர்த்தம் புரிந்துகொள்ளவே முடியாத இரகசியமாக இல்லை. அவருடைய பெயரின் அர்த்தம் “ஆகும்படி செய்பவர்.” அதன்படி, யெகோவா தேவன் தம்மை மகத்தான நோக்கமுள்ளவராக அடையாளம் காட்டுகிறார். அவர் எப்போதுமே தம் நோக்கங்களையும் வாக்குறுதிகளையும் மெய்மையாக்குகிறார். இப்படிச் செய்வதற்கு சக்தி படைத்த மெய்க் கடவுளுக்கு மட்டுமே இப்பெயர் பொருந்தும்.​—⁠ஏசாயா 55:11.

யெகோவா என்ற இப்பெயர் மற்ற கடவுட்களிலிருந்து சர்வவல்லமையுள்ள கடவுளை தனிப்படுத்திக் காட்டுவதில் சந்தேகமில்லை. அதன் காரணமாகவே அப்பெயர் பைபிளில் அடிக்கடி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அநேக மொழிபெயர்ப்புகள் கடவுளுடைய பெயரை பயன்படுத்தாத போதிலும் சங்கீதம் 83:17 இவ்வாறு தெளிவாக குறிப்பிடுகிறது: “யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின் மேலும் உன்னதமானவர்.” இயேசு கிறிஸ்து தம்முடைய ஊழிய காலத்தில், “நீங்கள் ஜெபம்பண்ண வேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக” என ஜெபிக்கும்படி தம் சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். (மத்தேயு 6:9) அப்படியானால், நாம் கடவுளிடம் ஜெபிக்கும்போதும், அவரைக் குறித்து பேசும்போதும், மற்றவர்களுக்கு முன்பாக அவரைப் போற்றிப் புகழும்போதும் அவருடைய பெயரை பயன்படுத்த வேண்டும்.

இயேசு​—⁠கடவுளா?

தம்முடைய குமாரன் யார் என்பதை யெகோவா தேவனே தெளிவாக அடையாளம் காட்டுகிறார். இயேசு முழுக்காட்டுதல் பெற்ற பின்பு, “வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது” என மத்தேயுவின் சுவிசேஷப் பதிவு விவரிக்கிறது. (மத்தேயு 3:16, 17) இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன்.

ஆனாலும், சில மதத்தவர் இயேசுவை கடவுள் என கூறுகிறார்கள். மற்றவர்களோ கடவுள் ஒரு திரித்துவம் என கூறுகிறார்கள். இந்தப் போதனையின்படி, “பிதாவும் கடவுள், குமாரனும் கடவுள், பரிசுத்த ஆவியும் கடவுள், எனினும் மூன்று கடவுட்களல்ல ஒரே கடவுள்.” இந்த மூவரும் “சரிசம-நித்தியரும் சரிசமமானோருமாவர்.” (த கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா) இப்படிப்பட்ட கருத்துக்கள் சரியானவையா?

ஏவப்பட்ட வேத எழுத்துக்கள் யெகோவாவைப் பற்றி இவ்வாறு கூறுகின்றன: “ஆதியந்தமில்லாத சதாகாலங்களிலும் நீரே கடவுள்.” (சங்கீதம் 90:2, திருத்திய மொழிபெயர்ப்பு) அவர் ‘நித்தியத்தின் ராஜா’​—⁠ஆரம்பமோ முடிவோ இல்லாதவர். (1 தீமோத்தேயு 1:17, NW) மறுபட்சத்தில், இயேசுவோ ‘சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறும்,’ ‘தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிறார்.’ (கொலோசெயர் 1:13-15; வெளிப்படுத்துதல் 3:14) கடவுளை தம் பிதாவென இயேசு குறிப்பிட்டு இவ்வாறு கூறினார்: “என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.” (யோவான் 14:28) சில விஷயங்கள் கடவுளைத் தவிர தமக்கோ தூதர்களுக்கோ தெரியாது எனவும் இயேசு விளக்கினார். (மாற்கு 13:32) அதுமட்டுமல்ல, இயேசு பிதாவிடம் ஜெபத்தில், “என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” என்று சொன்னார். (லூக்கா 22:42) தமக்கு மேலான ஒருவர் இல்லையெனில் அவர் யாரிடம்தான் ஜெபம் செய்திருப்பார்? அதோடு இயேசுவை மரணத்திலிருந்து உயிர்த்தெழுப்பியவரும் கடவுளே, இயேசு தாமாகவே உயிர்த்தெழவில்லை.​—⁠அப்போஸ்தலர் 2:32.

அப்படியானால், பைபிளின்படி, யெகோவா சர்வவல்லமையுள்ள தேவன், இயேசு அவருடைய குமாரன். இயேசு பூமிக்கு வருவதற்கு முன்போ அவரது பூமிக்குரிய ஊழியத்தின்போதோ தம் பிதாவுக்கு சமமானவராக இருக்கவில்லை; உயிர்த்தெழுப்பப்பட்டு பரலோகத்திற்கு சென்ற பிறகும் அவர் தம் பிதாவுக்கு சமமானவராக ஆகவில்லை. (1 கொரிந்தியர் 11:3; 15:28) நாம் ஏற்கெனவே பார்த்தபடி, திரித்துவத்தின் மூன்றாவது நபராக குறிப்பிடப்படும் பரிசுத்த ஆவி ஓர் ஆளல்ல. மாறாக, இது கடவுள் தம்முடைய விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு பயன்படுத்துகிற ஒரு சக்தி. அப்படியானால், திரித்துவம் வேதப்பூர்வமான போதனையல்ல.a “யெகோவாவே நமது கடவுள், யெகோவா ஒருவரே” என பைபிள் சொல்கிறது.​—⁠உபாகமம் 6:4, தி.மொ.

கடவுளை நன்கு அறிதல்

கடவுளை நேசித்து, அவருக்கே உரிய தனிப்பட்ட பக்தியை செலுத்துவதற்கு உண்மையில் அவர் எப்படிப்பட்டவர் என்பதை அறிவது அவசியம். அவரை நாம் எப்படி நன்கு அறிந்துகொள்ளலாம்? ‘காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானது முதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படுகிறது’ என பைபிள் சொல்கிறது. (ரோமர் 1:20) கடவுளை நன்கு அறிந்துகொள்வதற்கு ஒரு வழி, அவருடைய படைப்புகளை கூர்ந்து கவனித்து அவற்றை போற்றுதலோடு சிந்தித்துப் பார்ப்பதாகும்.

என்றாலும், கடவுளைப் பற்றி நாம் அறிய வேண்டிய அனைத்தையும் பற்றி படைப்புகள் நமக்குச் சொல்வதில்லை. உதாரணமாக, அவர் தனிச்சிறப்புமிக்க பெயரையுடைய உண்மையான ஆவி நபர் என்பதை அறிந்துகொள்வதற்கு நாம் பைபிளை ஆராய்வது அவசியம். சொல்லப்போனால், பைபிளை படிப்பதே கடவுளை நன்கு அறிந்துகொள்வதற்கு மிகச் சிறந்த வழி. அதில் தாம் எப்படிப்பட்ட கடவுள் என்பதைப் பற்றி யெகோவாவே இன்னும் ஏராளமான தகவலை அளிக்கிறார். அவர் தம் நோக்கங்களை தெரியப்படுத்தி, தம் வழிகளையும் நமக்குக் கற்பிக்கிறார். (ஆமோஸ் 3:7; 2 தீமோத்தேயு 3:16, 17) நாம் “சத்தியத்தை அறிகிற அறிவை அடை”வதன் மூலம் தம்முடைய அன்பான ஏற்பாடுகளிலிருந்து பயன் பெற கடவுள் விரும்புவதை எண்ணி நாம் எவ்வளவு ஆனந்தமடையலாம்! (1 தீமோத்தேயு 2:4) ஆகவே யெகோவாவைப் பற்றி கற்றுக்கொள்வதற்கு நம்மாலான அனைத்தையும் செய்வோமாக.

[அடிக்குறிப்பு]

a இந்த விஷயத்தின் பேரில் கூடுதலான விளக்கத்திற்கு யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா? என்ற சிற்றேட்டை காண்க.

[பக்கம் 5-ன் படங்கள்]

பூமியைப் படைப்பதற்கும் பைபிளை எழுதும்படி மனிதரை ஏவுவதற்கும் கடவுள் தமது பரிசுத்த ஆவியை பயன்படுத்தினார்

[பக்கம் 5-ன் படம்]

வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, ‘இவர் என்னுடைய குமாரன்’ என்று சொன்னது

[பக்கம் 7-ன் படம்]

கடவுளிடம்​—⁠தமக்கு மேலான ஒருவரிடம்​—⁠இயேசு ஜெபம் செய்தார்

[பக்கம் 7-ன் படக்குறிப்பு]

கடவுளுடைய பெயரை இயேசு பிறருக்குத் தெரியப்படுத்தினார்

[பக்கம் 7-ன் படக்குறிப்பு]

நாம் கடவுளை நன்கு அறிந்துகொள்ள முடியும்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்