உருவப் படங்கள்—உருவான கதை
“உருவப் படங்கள்தான் கடவுளுக்கும் அவருடைய புனிதர்களுக்கும் இருக்கும் நற்குணத்தோடும் புனிதத்தோடும் நம்மை இணைக்கும் பாலங்கள்.”—ஆஸ்திரேலியாவின் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் ஆர்ச்டையோசிஸ்.
ஆகஸ்ட் மாத புழுக்கத்தில் சூரிய வெப்பத்தால் தகிக்கும் சிமென்ட் படிக்கட்டுகளின் மீது ஏறித்தான் “கடவுளின் புனித அன்னை” துறவி மடத்திற்குச் செல்ல வேண்டும்; அது ஏஜியன் கடலில், டீனோஸ் தீவில் அமைந்திருக்கிறது. அங்கே அலங்கார மயமாக காட்சியளிக்கும் இயேசுவினுடைய அன்னையின் உருவப் படத்திற்கு (icon) அருகில் செல்ல அங்குலம் அங்குலமாக ஊர்ந்து செல்லும் 25,000-க்கும் மேற்பட்ட கிரேக்க ஆர்த்தடாக்ஸ் பக்தர்களின் மனவுறுதியை தகிக்கின்ற வெப்பம் தளர்த்திவிடுவதில்லை.
ஊனமுற்ற இளம் பெண் ஒருத்தி முழங்காலில் இரத்தம் வடிய, வலியில் துடித்துக்கொண்டு, முகத்தில் அத்தனை வேதனையையும் சுமந்தவளாய் தவழ்ந்தே படிக்கட்டுகளில் ஏறிச் செல்கிறாள். அவள் அருகே தேசத்தின் கடைக்கோடியிலிருந்து வந்திருக்கும் மூதாட்டி ஒருவர் சோர்வு வாட்டியெடுக்க பெரும் பாடுபட்டு அடிமேல் அடிவைத்து மெல்ல நகருகிறார். வியர்வை ஆறாய் ஓட நடுத்தர வயதுக்காரர் ஒருவர் கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு முன்னேறுகிறார். எப்படியாவது மரியாளின் உருவப் படத்தை முத்தமிட்டு, அதன் முன் சாஷ்டாங்கமாய் விழுந்துவிட அவர்கள் துடியாய் துடிப்பதைக் காண முடிகிறது.
இவர்கள் எல்லாரும் உண்மையிலேயே ஆழ்ந்த பக்தியுடன் கடவுளை வழிபட இங்கு வந்திருப்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. சொல்லப்போனால், கிறிஸ்தவம் தோன்றுவதற்கு வெகு காலத்திற்கு முன்பிருந்தே உருவப் படங்களிடம் இப்படி பக்தியைக் காண்பிக்கும் பழக்கம் இருந்து வந்தது எத்தனை பேருக்குத் தெரியும்?
திரும்பிய திசையெல்லாம் உருவப் படங்கள்
ஆர்த்தடாக்ஸ் உலகில் உருவப் படங்கள் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன. சர்ச்சுகளில் முக்கிய இடங்களில் இயேசு, மரியாள், “புனிதர்கள்” ஆகியோரின் உருவப் படங்கள் காணப்படுகின்றன. இவற்றை பக்தர்கள் முத்தமிட்டு, இவற்றிற்கு தூபங்காட்டி, மெழுகுவர்த்தி ஏற்றி வணங்குகின்றனர். அதோடு, ஆர்த்தடாக்ஸ் மதத்தாரின் வீடுகளில் சாதாரணமாக உருவப் படங்களை வைத்து பிரார்த்தனை செய்வதற்கென்றே ஓரிடம் ஒதுக்கப்பட்டிருக்கும். உருவப் படங்களை வைத்து வணங்கும்போது, கடவுள் தங்களுக்கு அருகில் இருப்பதுபோல் உணருவதாக ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் சொல்வது சகஜம். இவற்றிற்கு கடவுளின் அனுக்கிரகமும் அற்புத சக்தியும் உண்டு என்பது பலரின் நம்பிக்கை.
முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் உருவப் படங்களை வைத்து வணங்கவில்லை, அவர்களுக்கு அதில் உடன்பாடில்லை என்று தெரிந்துகொள்கையில் இவர்கள் ஆச்சரியப்படலாம். பைசான்டியம் என்ற புத்தகம் இவ்வாறு கூறுகிறது: “விக்கிரக வழிபாட்டை மிகவும் அருவருத்த யூதேய மதத்திலிருந்து வந்த பூர்வ கிறிஸ்தவர்கள், பரிசுத்தவான்களின் படங்களை வணங்குவதை அறவே வெறுத்தனர்.” அதே புத்தகம் இவ்வாறு கூறுகிறது: “ஐந்தாம் நூற்றாண்டு முதற்கொண்டு உருவப் படங்களை அல்லது சிலைகளை . . . பொதுவிலும் தனிப்பட்ட விதத்திலும் மக்கள் பெரிதும் பயன்படுத்த ஆரம்பித்தனர்.” முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் உருவப் படங்களை உபயோகிக்கவில்லை என்றால் அது எப்படி தோன்றியது?
உருவப் படங்கள் உருவானதை கண்டுபிடித்தல்
விட்டாலி இவான்யிச் பெட்ரன்கோ என்ற ஆய்வாளர் இவ்வாறு எழுதினார்: “உருவங்களை பயன்படுத்துவதும் அதன் பாரம்பரியமும் கிறிஸ்தவ சகாப்தத்துக்கு வெகு காலத்திற்கு முன்னரே ஆரம்பமானது, அது ‘புறமதத்தில் தோன்றியது.’” பண்டைய பாபிலோனிய, எகிப்திய, கிரேக்க மதங்களில்தான் உருவப் பட வழிபாடு ஆரம்பமானது என்பதை வரலாற்றாசிரியர்கள் ஒப்புக்கொள்கின்றனர். உதாரணமாக பண்டைய கிரீஸில் உருவங்கள் சிலைகள் வடிவில் இருந்தன. இவற்றிற்கு தெய்வத்தன்மை இருப்பதாக மக்கள் நம்பினர். இவற்றில் சில, மனிதரால் உருவாக்கப்படாமல் பரலோகத்திலிருந்து விழுந்ததாக மக்கள் நம்பினர். விசேஷ விழாக் காலங்களில் இந்த உருவங்களைத் தூக்கிக்கொண்டு அவர்கள் நகர்வலம் வந்தனர். அவற்றிற்கு பலிகள் செலுத்தப்பட்டன. “தெய்வம் வேறு, அதன் உருவம் வேறு என்று அதைப் பிரித்துப் பார்க்க . . . முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் இந்த உருவங்களையே தெய்வமாக பக்தர்கள் நம்பினர்” என்கிறார் பெட்ரன்கோ.
இந்த நம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும் கிறிஸ்தவ மதத்திற்குள் எப்படி நுழைந்தன? கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் மரித்தப்பின், முக்கியமாக எகிப்தில், “எகிப்தியர்கள், கிரேக்கர்கள், யூதர்கள், கிழக்கத்தியர்கள், ரோமர்கள் ஆகியோரின் நம்பிக்கைகளையும் பழக்க வழக்கங்களையும் பின்பற்றிய புறமத கதம்பத்தை கிறிஸ்தவ மதக் கொள்கைகள் எதிர்ப்பட்டன” என அதே ஆய்வாளர் கூறினார். இதனால் “கிறிஸ்தவ கைவினைஞர்கள் [கலப்பு விசுவாசத்தை] ஏற்றுக்கொண்டு, புறமத சின்னங்களின் அடிப்படையில் கிறிஸ்தவத்தோடு சம்பந்தப்பட்ட புதிய உருவங்களை உருவாக்கினர். ஆனால் புறமத செல்வாக்கினால் பாதிக்கப்படுவதிலிருந்து இவற்றை முழுமையாக தடைசெய்யவில்லை.”
விரைவில் தனிவாழ்விலும் பொது வாழ்விலும் உருவப் படங்கள் முக்கிய இடத்தைப் பிடித்தன. தி ஏஜ் ஆஃப் ஃபெய்த் என்ற புத்தகத்தில் வரலாற்றாசிரியர் வில் டூரன்ட் இது எவ்வாறு நிகழ்ந்தது என்பதை விவரிக்கிறார்: “அவர்கள் வணங்கி வந்த புனிதர்களின் எண்ணிக்கை அதிகமானபோது, அவர்களைப் பிரித்தறிவதற்கும், நினைவில் வைப்பதற்கும் அவசியம் ஏற்பட்டது; அவர்களின் படங்களும் மரியாளின் படங்களும் அதிகமான எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டன; கிறிஸ்துவின் விஷயத்தில், கற்பனையில் பிறந்த அவருடைய உருவம் மட்டுமல்ல, அவருடைய சிலுவையும் வழிபாட்டு சின்னங்களாயின. சாதாரண மக்களுக்கும்கூட இவை மந்திர சக்தியுள்ள தாயத்துப் போலானது. இயற்கையில் மக்கள் பெற்ற கற்பனை திறம் புனித உருவங்களையும் படங்களையும் சிலைகளையும் வழிபாட்டுக்குரியதாக மாற்றியது. மக்கள் அவற்றுக்கு முன்னால் சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்கினர், முத்தமிட்டனர், தூபங்காட்டி மெழுகுவர்த்திகளையும் ஏற்றி வைத்தனர், பூக்களால் அலங்கரித்தனர். அவை அற்புதங்களை நிகழ்த்த வேண்டும் என எதிர்பார்த்தனர். மத குருக்களும் சர்ச் குழுக்களும் உருவச்சிலைகள் தெய்வங்கள் அல்ல, அவை தெய்வங்களை நினைவுபடுத்தும் சின்னங்களே என்று திரும்பத் திரும்ப விளக்க முயன்றன(ர்); மக்களோ அப்படி அவற்றை பிரித்துப் பார்க்க துளியும் விரும்பவில்லை.”
இன்று மத சம்பந்தமான உருவப் படங்களை வைத்திருப்பவர்கள் தாங்கள் அதை வணங்குவதில்லை என்றும் அவற்றை மரியாதைக்காக மட்டுமே வைத்திருப்பதாகவும் வாதாடுவார்கள். மத ஓவியங்கள் சரியானவை, கடவுளை வழிபடுவதற்கு அவை அத்தியாவசியமானவை என்றும் அவர்கள் கூறுவார்கள். ஒருவேளை நீங்களும் அப்படி நினைக்கலாம். ஆனால் கேள்வி என்னவென்றால், இதை கடவுள் எப்படி கருதுகிறார்? உருவப் படங்களிடம் காட்டப்படும் ஆழ்ந்த பக்தி அதை வணங்குவதற்கு சமமாக இருக்குமா? இப்படிப்பட்ட பழக்கங்களில் மறைவான ஆபத்துக்கள் இருக்குமா?
[பக்கம் 4-ன் பெட்டி/படம்]
உருவப் படம் என்பது என்ன?
உருவப் படங்கள் (icons) என்பவை ரோமன் கத்தோலிக்க சர்ச்சில் பரவலாக பயன்படுத்தப்படும் சிலைகளை போன்றவை அல்ல; இவை இரு பரிமாணம் கொண்டவை. கிறிஸ்து, மரியாள், “புனிதர்கள்,” தூதர்கள், பைபிள் கதாபாத்திரங்கள் மற்றும் சம்பவங்கள் அல்லது ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் சரித்திரத்தில் நடந்த சம்பவங்கள் போன்றவற்றை இவை சித்தரிக்கின்றன. பொதுவாக, எளிதில் தூக்கிச் செல்லத்தக்க மரப் பலகைகளில் அவை தீட்டப்படுகின்றன.
ஆர்த்தடாக்ஸ் சர்ச் குறிப்பிடுகிறபடி, “புனிதர்களின் உருவப் படங்கள் சாதாரண மனிதரின் படங்களைப் போன்று தெரிவதில்லை.” மேலும், “பின்னால் செல்லச் செல்ல இவை பெரிதாக தெரிகின்றன”—தூரமாக செல்லச் செல்ல அவை குறுகுவதில்லை. சாதாரணமாக “இப்படத்தில் நிழல்கள் இருப்பதில்லை, அல்லது இரவா பகலா என காட்டப்படுவதில்லை.” உருவப் படத்திற்கு பயன்படுத்தப்படும் மரமும் ஓவியமும் “கடவுளுடைய பிரசன்னம் நிரம்பியதாக” ஆகலாம் எனவும் நம்பப்படுகிறது.
[பக்கம் 4-ன் படம்]
உருவங்களை பயன்படுத்துவது புறமதத்திலிருந்து தோன்றிய பழக்கம்
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
© AFP/CORBIS