உங்கள் போதனை திறம்பட்டதா?
பெற்றோர், மூப்பர்கள், நற்செய்தியை பிரசங்கிப்போர் ஆகிய அனைவருமே போதகர்களாக இருக்கும்படி எதிர்பார்க்கப்படுகின்றனர். பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கும், மூப்பர்கள் கிறிஸ்தவ சபையின் அங்கத்தினர்களுக்கும், நற்செய்தியைப் பிரசங்கிப்போர் அக்கறை காட்டும் புதியவர்களுக்கும் போதிக்கிறார்கள். (உபாகமம் 6:6, 7; மத்தேயு 28:19, 20; 1 தீமோத்தேயு 4:13, 16) போதிப்பதில் நல்ல பலன்களைப் பெற்றுக்கொள்வதற்கு நீங்கள் என்ன செய்யலாம்? அதற்கு ஒரு வழி, கடவுளுடைய வார்த்தையில் குறிப்பிடப்பட்டுள்ள திறம்பட்ட போதகர்களின் உதாரணத்தையும் மாதிரியையும் பின்பற்றுவதாகும். அப்படிப்பட்ட போதகர்களில் ஒருவர் எஸ்றா.
எஸ்றாவின் முன்மாதிரியிலிருந்து கற்றுக்கொள்ளுதல்
எஸ்றா என்பவர் ஆரோனின் வம்சத்தில் வந்த ஆசாரியன். இவர் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு பாபிலோனில் வாழ்ந்து வந்தார். பொ.ச.மு. 468-ல் எருசலேமில் இருந்த யூதர்களின் மத்தியில் உண்மை வணக்கத்தை முன்னேற்றுவிப்பதற்கு அங்கு சென்றார். (எஸ்றா 7:1, 6, 12, 13) எனவே அவர் ஜனங்களுக்கு கடவுளுடைய நியாயப்பிரமாணத்தைப் போதிப்பது அவசியமாக இருந்தது. தன்னுடைய போதனைகள் நல்ல பலன்மிக்கதாய் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள அவர் என்ன செய்தார்? அதற்கு தேவையான பல படிகளை அவர் எடுத்தார். எஸ்றா 7:10-ல் உள்ள இந்தப் படிகளை கவனியுங்கள்.
‘எஸ்றா தன் இருதயத்தை [1] பக்குவப்படுத்தி கர்த்தருடைய வேதத்தை [2] ஆராயவும், அதின்படி [3] செய்யவும், இஸ்ரவேலருக்கு கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் [4] உபதேசிக்கவும் செய்தார்.’ இந்தப் படிகள் ஒவ்வொன்றையும் நாம் சுருக்கமாக ஆராய்ந்து அதிலிருந்து பயனடையும் வழியைப் பார்க்கலாம்.
‘எஸ்றா தன் இருதயத்தை பக்குவப்படுத்தியிருந்தார்’
விதை விதைப்பதற்கு முன்னால் விவசாயி நிலத்தை உழுது பண்படுத்துவது போல, எஸ்றா கடவுளுடைய வார்த்தையை பெற்றுக்கொள்வதற்கு உருக்கமாக ஜெபித்து தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தினார். (எஸ்றா 10:1) வேறு வார்த்தையில் சொன்னால், அவர் யெகோவாவின் போதனைக்குத் தன் ‘இருதயத்தைச் சாய்த்தார்.’—நீதிமொழிகள் 2:2.
அதேவிதமாகவே, யோசபாத் ராஜாவும் ‘தேவனைத் தேட தம்முடைய இருதயத்தை நேராக்கினார்’ என்று பைபிள் சொல்கிறது. (2 நாளாகமம் 19:3) இதற்கு நேர்மாறாக, “இருதயத்தைச் செவ்வைப்படுத்தாத” இஸ்ரவேலரின் சந்ததி “முரட்டாட்டமும் கலகமுமுள்ள” சந்ததி என்று பைபிளில் விவரிக்கப்பட்டுள்ளது. (சங்கீதம் 78:8) யெகோவா “இருதயத்தில் மறைந்திருக்கிற குண”த்தையே பார்க்கிறார். (1 பேதுரு 3:4) ஆம், அவர் “சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்.” (சங்கீதம் 25:9) ஆகவே இன்றைய போதகர்கள் முதலில் ஜெபசிந்தையோடு தங்கள் இருதயத்தை பக்குவப்படுத்துவதன் மூலம் எஸ்றாவின் முன்மாதிரியை பின்பற்றுவது எவ்வளவு முக்கியம்!
‘யெகோவாவின் வேதத்தை ஆராய்ந்தார்’
திறம்பட்ட போதகராவதற்கு கடவுளுடைய வார்த்தையை எஸ்றா ஆராய்ந்து பார்த்தார். நீங்கள் ஒரு டாக்டரிடம் சென்றால், அவர் சொல்வதை கூர்ந்து கேட்டு, அவர் மருந்து சீட்டில் எழுதிக்கொடுப்பது எல்லாம் தெளிவாக புரிகிறதா என நிச்சயப்படுத்திக் கொள்ள மாட்டீர்களா? உங்களுக்கு ஆரோக்கியம் முக்கியம் என்றால் நீங்கள் நிச்சயமாகவே அதற்குக் கவனம் செலுத்துவீர்கள். அப்படியென்றால் யெகோவா அவருடைய வார்த்தையாகிய பைபிளின் மூலமாகவும் ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையின்’ மூலமாகவும் நமக்கு சொல்லும் காரியங்களுக்கு அதைவிட எந்தளவு அதிக கவனம் செலுத்த வேண்டும்? நம்முடைய உயிரே அதன்மீது சார்ந்திருக்கிறதே! (மத்தேயு 4:4; 24:45-47, NW) ஒருவேளை மருத்துவர் தவறு செய்ய நேரிடலாம், ஆனால் ‘யெகோவாவின் சட்டம் பரிபூரணமானது.’ (சங்கீதம் 19:7, NW) அதில் உள்ளவை சரிதானா என்பதை உறுதிப்படுத்த இன்னொருவரின் அபிப்பிராயம் தேவையில்லை.
பைபிளிலுள்ள நாளாகம புத்தகங்கள், (எஸ்றா இதை முதலில் ஒரே புத்தகமாக எழுதினார்) எஸ்றா மிகச் சிறந்த மாணாக்கராக இருந்ததைக் காட்டுகின்றன. இந்தப் புத்தகங்களை எழுதுவதற்கு அவர் பல்வேறு புத்தகங்களை படித்துப் பார்த்தார்.a சமீபத்தில் பாபிலோனிலிருந்து தாயகம் திரும்பிய யூதர்களுக்கு தேசத்தின் வரலாறு சுருக்கமாக தெரிந்திருப்பது அவசியமாக இருந்தது. அவர்கள் தங்கள் மத சம்பந்தப்பட்ட பழக்கவழக்கங்களை, ஆலய சேவையை, லேவியர்களின் பணியைப் பற்றி முழுமையாக அறியாதிருந்தார்கள். வம்சாவளி பதிவுகள் அவர்களுக்கு முக்கியமானவையாய் இருந்தன. எஸ்றா இந்த விஷயங்களுக்கு விசேஷித்த கவனம் செலுத்தினார். மேசியா வரும் வரை யூதர்கள் தங்களுக்கென்று சொந்த தேசத்தையும் ஆலயத்தையும் ஆசாரியத்துவத்தையும் அதிபதியையும் கொண்ட ஜனமாக இருப்பது அவசியமாக இருந்தது. எஸ்றா சேகரித்த தகவல்கள் ஐக்கியத்தையும் உண்மை வணக்கத்தையும் காத்துக்கொள்ள பெரிதும் உதவின.
எஸ்றாவின் படிப்பு பழக்கங்களோடு ஒப்பிட, உங்கள் பழக்கங்களைக் குறித்து என்ன சொல்லலாம்? பைபிளை ஊக்கமாக படிப்பது அதைத் திறம்பட்ட விதமாக போதிப்பதற்கு உங்களுக்கு உதவும்.
குடும்பமாக ‘யெகோவாவின் வேதத்தை ஆராய்தல்’
தனிப்பட்ட படிப்பில் மட்டுமே நாம் யெகோவாவின் வேதத்தை ஆராய வேண்டும் என்றில்லை. இதற்கு குடும்ப படிப்பு மிகச் சிறந்த வாய்ப்பளிக்கிறது.
நெதர்லாந்தைச் சேர்ந்தவர்கள் யான், யூல்யா தம்பதியினர். இவர்கள் தங்கள் இரண்டு மகன்களும் பிறந்த அன்றே பைபிளை சப்தமாக வாசித்து காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். இன்று ஈவோவுக்கு 15 வயது, ஏடோவுக்கு 14 வயது. அவர்கள் இப்போதும் வாரத்திற்கு ஒருமுறை குடும்ப படிப்பு படிக்கிறார்கள். யான் இவ்வாறு சொல்கிறார்: “ஒவ்வொரு படிப்பு நேரத்திலும் நிறைய படிக்க வேண்டும் என்பதில்லை, ஆனால் நாங்கள் படிப்பதை பிள்ளைகள் புரிந்துகொள்வதே எங்கள் முக்கிய குறிக்கோள்.” அவர் மேலும் கூறுகிறார்: “பிள்ளைகள் நிறைய ஆராய்ச்சி செய்கிறார்கள். புரியாத வார்த்தைகள், பைபிள் கதாபாத்திரங்கள் ஆகியவற்றின் பேரில் ஆய்வு செய்கிறார்கள்; அவர்கள் யார், எப்பொழுது வாழ்ந்தார்கள், என்ன தொழில் செய்தார்கள் போன்றவற்றை தெரிந்துகொள்கிறார்கள். வாசிக்க ஆரம்பித்தது முதற்கொண்டு, வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, அகராதிகள், கலைக்களஞ்சியங்கள் ஆகியவற்றை உபயோகிக்க கற்றுக்கொண்டார்கள். இதனால் குடும்ப படிப்பு ரொம்பவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. குடும்ப படிப்புக்காக பிள்ளைகள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.” அதோடு, இப்பொழுது இரு பையன்களும் வகுப்பில் மற்றவர்களைவிட மொழித்திறனில் சிறந்து விளங்குகிறார்கள்.
நெதர்லாந்தை சேர்ந்த மற்றொரு தம்பதியினர் ஜானும் டீனியும். தங்களுடைய மகன் எஸ்லியோடும் (தற்போது 24 வயது, வேறொரு சபையில் பயனியராக இருக்கிறார்) மகள் லின்டாவோடும் (தற்போது 20 வயது, அருமையான இளம் சகோதரரை மணந்திருக்கிறாள்) இவர்கள் பைபிள் படித்தார்கள். ஏதாவது ஒரு பிரசுரத்தை தேர்ந்தெடுத்து கேள்வி பதில் முறையில் அதைப் படிப்பதற்கு பதிலாக பிள்ளைகளின் வயதுக்கும் தேவைக்கும் ஏற்ப தங்களுடைய குடும்ப படிப்பை மாற்றி அமைத்தார்கள். அவர்கள் என்ன முறையை பின்பற்றினார்கள்?
(காவற்கோபுரம் பத்திரிகையிலிருந்து) “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்,” (விழித்தெழு! பத்திரிகையிலிருந்து) “பைபிளின் கருத்து” இதில் எதையாவது அவர்களுடைய மகனும் மகளும் தேர்ந்தெடுத்தார்கள். அதன் பிறகு அவர்கள் தயாரித்திருப்பதை கலந்தாலோசித்தார்கள். இதனால் குடும்ப படிப்பு அதிக சுவராஸ்யமாக இருந்தது என்று ஜான் விளக்குகிறார். படிப்பை இப்படி நடத்தியதால் ஆய்வு செய்வதிலும் அதன் பலன்களை கலந்தாலோசிப்பதிலும் இளைஞர்கள் அனுபவத்தைப் பெற்றுக்கொண்டார்கள். நீங்கள் உங்கள் பிள்ளைகளோடு ‘யெகோவாவின் வேதத்தை ஆராய்ச்சி செய்கிறீர்களா?’ இதனால் தனிப்பட்ட விதத்தில் உங்கள் போதிக்கும் திறமை மேம்படுவதோடு, பிள்ளைகள் பலன் தரும் போதகர்களாக ஆவதற்கும் வழி செய்யும்.
‘அதின்படி செய்தார்’
எஸ்றா கற்றுக்கொண்டதைக் கடைப்பிடித்தார். உதாரணமாக, பாபிலோனிலேயே அவர் நிரந்தரமாக தங்கியிருந்திருக்கலாம். ஆனால், வேறு தேசத்திலுள்ள தன் ஜனத்தாருக்கு உதவ முடியும் என்பதை அவர் உணர்ந்தபோது, பாபிலோனில் இருந்த சகல சௌகரியங்களையும் விட்டுவிட்டு, தொலைதூரத்தில் இருந்த எருசலேம் நகருக்குச் சென்று அங்கே அசெளகரியங்களையும் பிரச்சினைகளையும் ஆபத்துக்களையும் சந்திக்க தயாரானார். பைபிள் அறிவை அவர் பெருக்கிக் கொண்டதோடு, அதன்படி நடக்கவும் அவர் தயாராக இருந்தது தெளிவாக உள்ளது.—1 தீமோத்தேயு 3:13.
பின்னால் எருசலேமில் வாழ்ந்தபோது, தான் கற்றுக்கொண்டதையும் போதித்ததையும் தானே பின்பற்றுவதை எஸ்றா மறுபடியும் வெளிக்காட்டினார். இது, இஸ்ரவேல ஆண்கள் புறமத பெண்களை திருமணம் செய்வதைப் பற்றிய செய்தி அவருடைய காதை எட்டியபோது மிகவும் தெளிவாக தெரிந்தது. அவர் ‘தன் வஸ்திரத்தையும் தன் சால்வையையும் கிழித்து, தன் தலையிலும் தன் தாடியிலுமுள்ள மயிரைப் பிடுங்கித் திகைத்தவராய் உட்கார்ந்திருந்தார்’ என்று பைபிள் பதிவு நமக்குச் சொல்கிறது. யெகோவாவுக்கு முன்பாக அவர் முகத்தை நிமிர்த்தவும் துணியாமல் ‘வெட்கி கலங்கவும்’ செய்தார்.—எஸ்றா 9:1-6.
கடவுளுடைய நியாயப்பிரமாணத்தைக் கற்றிருந்தது எவ்வளவு தாக்கத்தை அவர்மீது ஏற்படுத்தியது! மக்கள் கீழ்ப்படியாமல் போகையில் ஏற்படும் பயங்கரமான விளைவுகளை எஸ்றா தெளிவாக அறிந்திருந்தார். தாயகம் திரும்பியிருந்த யூதர்கள் எண்ணிக்கையில் சொற்ப பேராக இருந்தார்கள். அவர்கள் கலப்பு திருமணம் செய்துகொண்டால், சுற்றிலுமிருந்த புறமத தேசங்களோடு காலப்போக்கில் ஐக்கியமாகிவிடலாம்; உண்மை வணக்கமும் எளிதில் பூமியிலிருந்து முற்றிலும் மறைந்துவிடலாம்!
பயபக்தியிலும் வைராக்கியத்திலும் எஸ்றா வைத்த முன்மாதிரி, இஸ்ரவேலர் தங்கள் வழிகளைத் திருத்திக்கொள்ள அவர்களைத் தூண்டியது. அவர்கள் தங்கள் அந்நிய மனைவிகளை அனுப்பிவிட்டார்கள். மூன்றே மாதங்களில் எல்லாம் சரி செய்யப்பட்டது. கடவுளுடைய நியாயப்பிரமாணத்திடம் எஸ்றா தனிப்பட்ட விதத்தில் காட்டிய பற்றுறுதி அவருடைய போதனையைப் பலனுள்ளதாய் ஆக்குவதில் பெரும் பங்கு வகித்தது.
இன்றும் இதுவே உண்மை. ஒரு கிறிஸ்தவ தந்தை இவ்வாறு சொன்னார்: “பிள்ளைகள் நீங்கள் சொல்வதை செய்ய மாட்டார்கள்; நீங்கள் செய்வதை செய்வார்கள்!” கிறிஸ்தவ சபையிலும் இதுவே பொருந்தும். நல்ல முன்மாதிரியை மூப்பர்கள் வைக்கையில் தங்கள் போதனைகளுக்கு சபையார் நன்கு கீழ்ப்படிவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
‘இஸ்ரவேலருக்கு கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசித்தார்’
எஸ்றாவின் போதனை பலனளிப்பதாய் இருந்ததற்கு இன்னும் ஒரு காரணமுண்டு. அவர் தன் சொந்த கருத்துக்களை போதிக்கவில்லை, ஆனால் அவர் “கட்டளைகளையும் நீதிநியாயங்களையும்” கற்பித்தார். அதாவது யெகோவாவின் கட்டளைகளை அல்லது நீதிநியாயங்களை கற்பித்தார். ஆசாரியனாக இது அவருடைய பொறுப்பாக இருந்தது. (மல்கியா 2:7) அவர் நீதிநியாயத்தையும் போதித்தார், கட்டளைகளை நியாயமாகவும் பாரபட்சமில்லாமலும் முறையாக கடைப்பிடிப்பதன் மூலம் முன்மாதிரி வைத்தார். அதிகாரத்தில் உள்ளவர்கள் நியாயமாக நடந்துகொள்ளும்போது ஸ்திரத்தன்மை இருக்கும், நிரந்தர நன்மைகள் கிடைக்கும். (நீதிமொழிகள் 29:4) அதேவிதமாகவே, கடவுளுடைய வார்த்தையை நன்கு அறிந்திருக்கிற கிறிஸ்தவ மூப்பர்களும், பெற்றோரும், ராஜ்யத்தை அறிவிப்போரும் சபையாருக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் ஆர்வமுள்ளோருக்கும் யெகோவாவின் கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் போதிக்கையில் ஆன்மீக ஸ்திரத்தன்மையை உருவாக்குகிறவர்களாக இருப்பர்.
உண்மையுள்ள எஸ்றாவின் முன்மாதிரியை முழுமையாக பின்பற்றினால், உங்கள் போதனையும் அதிக பலனளிப்பதாக இருக்கும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் அல்லவா? ஆகவே ‘உங்கள் இருதயத்தைப் பக்குவப்படுத்தி, யெகோவாவின் வேதத்தை ஆராய்ந்து, அதின்படி செய்து, யெகோவாவின் கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசியுங்கள்.’—எஸ்றா 7:10.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகள் வெளியிட்டுள்ள வேதாகமத்தின்பேரில் உட்பார்வை, (ஆங்கிலம்) தொகுதி 1, பக்கங்கள் 444-5-ல் 20 புத்தகங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
[பக்கம் 22-ன் பெட்டி/படம்]
எஸ்றாவின் போதனையை திறம்பட்டதாக ஆக்கியது எது?
1. அவர் தன் இருதயத்தை பக்குவப்படுத்தினார்
2. அவர் யெகோவாவின் வேதத்தை ஆராய்ந்தார்
3. கற்றுக்கொண்டதை கடைப்பிடித்து, சிறந்த முன்மாதிரி வைத்தார்
4. வேதத்தைக் கற்றுக்கொடுக்க முதலில் அதை ஊக்கமாக படித்தார்