எரிநரகம் என்ன ஆனது?
“நரகம்” என்ற வார்த்தையைக் கேட்டதும் உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது? அக்கினியும் கந்தகமும் நிறைந்த, சதா வதைக்கப்படும் வேதனைக்குரிய சொல்லர்த்தமான ஓர் இடமா? அல்லது, ஒரு நிலைமையைப் பற்றிய அடையாளப்பூர்வமான விவரிப்பா?
பாவிகள் போய்சேரும் இடமே தாங்கமுடியா சித்திரவதைகள் நிறைந்த அக்கினி நரகம் என கிறிஸ்தவமண்டல மதத் தலைவர்கள் பல நூற்றாண்டுகளாக கற்பனை செய்து வந்திருக்கின்றனர். வேறு பல மதங்களிலும் இந்தக் கருத்தே இன்னும் பிரபலமாக இருக்கிறது. “கிறிஸ்தவ மதம் நரகம் என்ற வார்த்தையை சகஜமாக புழங்கப்படும் ஒரு வார்த்தையாக்கியிருக்கலாம், ஆனால் இந்த மதமே ஏகபோக உரிமை கொண்டாடும் ஒரு கோட்பாடு அல்ல. மரணத்திற்குப் பிறகு வேதனைமிக்க தண்டனை என்ற இந்த அச்சுறுத்தல் கிட்டத்தட்ட உலகிலுள்ள எல்லா பெரிய மதங்களிலும் சிறிய மதங்களிலும் இருக்கிறது” என யூ.எஸ். நியூஸ் & உவர்ல்டு ரிப்போர்ட் கூறுகிறது. இந்து மதத்தவர், புத்த மதத்தவர், இஸ்லாமியர், ஜைன மதத்தவர், தாவோ மதத்தவர் என அனைவரும் ஏதாவது ஒருவகை நரகத்தில் நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.
ஆனால், நவீன காலத்தில் நரகம் என்பது மற்றொரு பரிமாணத்தை ஏற்றிருக்கிறது. “எரிநரகத்தைப் பற்றிய பாரம்பரிய கருத்தை இன்னும் பலர் நம்புகிறபோதிலும், நரகம் என்பது வெப்பமான ஓர் இடமல்ல, நித்திய காலம் தண்டிக்கப்படுகிற மிகவும் வெறுக்கத்தக்க தனிமை சிறை என்ற நவீன கருத்துக்கள் பல முளைக்க ஆரம்பித்திருக்கின்றன” என மேலே குறிப்பிடப்பட்ட பத்திரிகை கூறுகிறது.
ஜெஸ்யூட் பத்திரிகை லா சிவில்ட்டா காட்டாலிக்கா இவ்வாறு கூறியது: “பேய்களைப் பயன்படுத்தி, தண்டனை தீர்ப்பு அளிக்கப்பட்டவர்களை அக்கினி மயமான இடத்தில் கடவுள் பயங்கரமாக சித்திரவதை செய்கிறார் என நினைப்பது . . . தவறாக வழிநடத்துகிறது.” அது மேலும் கூறியது: “நரகம் இருக்கிறது, ஆனால் அது ஓர் இடமல்ல, அது ஒரு நிலைமை, ஒருவர் கடவுளிடமிருந்து பிரிக்கப்பட்டு மனவேதனைப்படும் ஒரு நிலைமை.” 1999-ல் இரண்டாம் போப் ஜான் பால் இவ்வாறு கூறினார்: “நரகம் என்பது ஓர் இடமல்ல, மாறாக அனைத்து உயிர்களுக்கும் சந்தோஷத்திற்கும் ஊற்றுமூலராகிய கடவுளிடமிருந்து தங்களை மனப்பூர்வமாகவும் முழுமையாகவும் பிரித்துக்கொள்கிறவர்கள் அனுபவிக்கும் நிலைமையைக் குறிக்கிறது.” அக்கினி கொழுந்துவிட்டு எரிகிற ஓர் இடம்தான் நரகம் என்ற கருத்துக்களைக் குறித்து அவர் இவ்வாறு கூறினார்: “கடவுள் இல்லாத வாழ்க்கை விரக்தியும் சூனியமுமே உருவானதாக இருப்பதை அவை சுட்டிக்காட்டுகின்றன.” “அக்கினி ஜூவாலைகள், சிவப்பு அங்கி தரித்து கவையுடன் இருக்கும் பிசாசு” போன்ற வார்த்தைகளில் நரகத்தைப் பற்றி போப் வர்ணித்தால், “மக்கள் அதை நம்ப மாட்டார்கள்” என சர்ச் சரித்திராசிரியர் மார்ட்டின் மார்ட்டி கூறினார்.
மற்ற மதப் பிரிவுகளிலும் இது போன்ற மாற்றங்கள் நடந்து வருகின்றன. சர்ச் ஆஃப் இங்லண்டின் கோட்பாட்டுக் குழுவினர் கொடுத்த ஓர் அறிக்கை இவ்வாறு கூறியது: “நரகம் என்பது நித்திய வாதனைக்குரிய இடமல்ல, ஆனால் அது கடைமுடிவான, மாற்ற முடியாத வாழ்க்கைப் போக்கின் தெரிவு, அது அந்தளவுக்கு முற்றிலும் கடவுளுக்கு விரோதமாக இருப்பதால் முழுமையான அழிவுதான் அதன் ஒரே முடிவு.”
நரகம் என்பது “கடவுளை நாம் புறக்கணிப்பதால் வரும் நித்திய மரணம்” என ஐக்கிய மாகாணங்களின் எபிஸ்கப்பல் சர்ச் மத போதனை வரையறுக்கிறது. பெரும் எண்ணிக்கையானோர் இந்தக் கருத்தை முன்னேற்றுவிக்கிறார்கள், அதாவது “பொல்லாதவர்களின் முடிவு அழிவு, நித்திய வாதனை அல்ல. . . . அடிப்படையில், கடவுளை புறக்கணிப்பவர்கள் நரகம் என்ற ‘பட்சிக்கும் அக்கினியில்’ போடப்பட்டு அழிக்கப்படுவார்கள் என [அவர்கள்] வாதாடுகிறார்கள்” என யூ.எஸ். நியூஸ் & உவர்ல்டு ரிப்போர்ட் கூறுகிறது.
அக்கினி, கந்தகம் போன்ற எண்ணத்தை ஒதுக்கித் தள்ளுவது நவீனகால போக்காக இருந்தாலும், நரகம் என்பது சொல்லர்த்தமாக வாதிக்கப்படும் ஓர் இடம் என்றே இன்னும் அநேகர் நம்புகின்றனர். “நரகம் என்பது தகிக்கும் அக்கினியில் வாதிக்கப்படும் ஓர் இடம் என வேதாகமம் தெளிவாக சொல்கிறது” என அ.ஐ.மா., கென்டகி, லூயிவில்லில் அமைந்துள்ள தென்னக பாப்டிஸ்ட் இறையியல் கல்லூரியை சேர்ந்த அல்பர்ட் மோலர் கூறுகிறார். இவாஞ்ஜலிக்கல் அலையன்ஸ் கமிஷன் என்ற நிறுவனம் தயாரித்த த நேச்சர் ஆஃப் ஹெல் என்ற அறிக்கை இவ்வாறு குறிப்பிடுகிறது: “நரகம் என்பது புறக்கணிக்கப்படுவதையும் வதைக்கப்படுவதையும் உணர்வுடன் அனுபவிப்பதாகும்.” அது மேலும் கூறுகிறது: “பூமியில் செய்த பாவங்களைப் பொறுத்து, நரகத்தில் அனுபவிக்கும் தண்டனையில் பல அளவுகள் இருக்கின்றன.”
அப்படியானால், நரகம் என்பது நித்திய வாதனைக்குரிய அக்கினிமயமான ஓர் இடமா அல்லது நித்திய அழிவா? அல்லது, கடவுளிடமிருந்து வெறுமனே பிரிக்கப்பட்ட ஒரு நிலைமையா? உண்மையில் நரகம் என்றால் என்ன?
[பக்கம் 4-ன் பெட்டி/படங்கள்]
எரிநரகத்தைப் பற்றி சுருக்கமான வரலாறு
கிறிஸ்தவர்கள் என சொல்லிக் கொள்பவர்கள் எப்பொழுது எரிநரகத்தில் நம்பிக்கை வைக்க ஆரம்பித்தனர்? இயேசு கிறிஸ்துவும் அவருடைய அப்போஸ்தலர்களும் வாழ்ந்த காலத்திற்கு வெகு நாட்களுக்குப் பின்பு. “அப்போக்கலிப்ஸ் ஆஃப் பீட்டர் (பொ.ச. 2-ம் நூற்றாண்டு) என்ற [ஆதாரமற்ற] கிறிஸ்தவ புத்தகமே நரகத்தில் பாவிகள் அனுபவிக்கும் தண்டனையையும் சித்திரவதைகளையும் விவரித்த முதல் புத்தகம்” என பிரெஞ்சு என்ஸைக்ளோப்பீடியா யுனிவர்சாலிஸ் குறிப்பிடுகிறது.
ஆனால் ஆரம்ப கால சர்ச் ஃபாதர்கள் மத்தியில், நரகத்தைப் பற்றி கருத்து வேறுபாடு நிலவியது. ஜஸ்டின் மார்டர், அலெக்ஸாந்திரியாவைச் சேர்ந்த கிளமென்ட், டெர்டுல்லியன், சிப்ரியன் ஆகியோர் நரகம் என்பது அக்கினி கொழுந்துவிட்டெரியும் ஓர் இடம் என நம்பினர். நரகம் என்பது கடவுளிடமிருந்து பிரிக்கப்பட்ட—ஆவிக்குரிய வேதனையுள்ள—ஓர் இடம் என ஆரஜனும் நிஸாவைச் சேர்ந்த இறையியலாளர் கிரிகோரியும் நினைத்தனர். மறுபட்சத்தில், ஹிப்போவைச் சேர்ந்த அகஸ்டின் என்பவர் நரகத்தில் வேதனைப்படுவது என்பது ஆவிக்குரிய பிரகாரமாகவும் சரீரப் பிரகாரமாகவும் உணரப்படும் நிலை என நம்பினார்; இது அநேகர் ஏற்றுக்கொண்ட ஒரு கருத்து. “இந்த வாழ்க்கைக்குப் பிறகு பாவிகளுக்கு இரண்டாம் வாய்ப்பு ஒன்றுமில்லை, அவர்களைத் தகிக்கும் அக்கினி ஒருபோதும் அணையாது என்ற கண்டிப்பான கோட்பாடு ஐந்தாம் நூற்றாண்டிற்குள் எங்கும் பிரசித்தி பெற்றது” என பேராசிரியர் ஜே.என்.டி. கெல்லி எழுதினார்.
அக்கினியில் வதைக்கப்படும் நரகம் என்பது அடையாள அர்த்தத்தில் கடவுளிடமிருந்து நித்தியமாக பிரிக்கப்படுவதைக் குறிக்கிறது என 16-ம் நூற்றாண்டில் மார்ட்டின் லூத்தர், ஜான் கெல்வின் போன்ற புராட்டஸ்டன்டு சீர்திருத்தவாதிகள் புரிந்துகொண்டனர். ஆனால் நரகம் என்பது வதைக்கப்படும் ஓர் இடம் என்ற கருத்து அடுத்து வந்த இரு நூற்றாண்டுகளில் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்தது. 18-ம் நூற்றாண்டு அமெரிக்க குடியேறிகளின் இருதயத்தில் அச்சத்தை ஏற்படுத்த ஜோனத்தன் எட்வர்ட்ஸ் என்ற புராட்டஸ்டன்டு பிரசங்கியார் நரகத்தை சித்தரிக்கும் தத்ரூபமான படங்களைப் பயன்படுத்தினார்.
ஆனால் அதற்கு சில காலத்திற்குப்பின், நரகத்தின் ஜூவாலைகள் தணிய ஆரம்பித்தன. “கிட்டத்தட்ட 20-ம் நூற்றாண்டில் நரகம் செத்துவிட்டது” என யூ.எஸ். நியூஸ் & உவர்ல்டு ரிப்போர்ட் குறிப்பிடுகிறது.
[படங்கள்]
நரகம் என்பது அக்கினிமயமான ஓர் இடம் என ஜஸ்டின் மார்டர் நம்பினார்
நரகத்தில் வேதனைப்படுவது ஆவிக்குரியது மற்றும் சரீரப்பிரகாரமானது என ஹிப்போவை சேர்ந்த அகஸ்டின் கற்பித்தார்