‘கடவுளின் மாபெரும் செயல்களால்’ செயல்பட தூண்டப்படுதல்
“நாம் யாவரும் நம் மொழிகளிலேயே கடவுளின் மாபெரும் செயல்களை அவர்கள் பேசக் கேட்கிறோமே!”—அப்போஸ்தலர் 2:11, தமிழ் கத்தோலிக்க பைபிள்.
1, 2. பொது சகாப்தம் 33 பெந்தெகொஸ்தே நாளன்று எருசலேமில் என்ன ஆச்சரியமான சம்பவம் நிகழ்ந்தது?
பொது சகாப்தம் 33-ஆம் ஆண்டு இளவேனிற்கால முடிவில் ஒரு நாள் காலை ஆச்சரியமான ஒரு சம்பவம் நிகழ்ந்தது. இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாக இருந்த ஆண்களும் பெண்களும் எருசலேமில் ஒரு வீட்டில் கூடியிருக்கையில் இது சம்பவித்தது. “அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள் போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, . . . அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத் தொடங்கினார்கள்.”—அப்போஸ்தலர் 2:2-4, 15.
2 அவர்கள் கூடியிருந்த வீட்டுக்கு முன்னால் ஒரு பெரிய கூட்டம் கூடிவிட்டது. இந்தக் கூட்டத்தில் பெந்தெகொஸ்தே பண்டிகையைக் கொண்டாடுவதற்காக வேறு தேசங்களிலிருந்து எருசலேமுக்கு வந்திருந்த “தேவபக்தியுள்ள யூதர்கள்” இருந்தார்கள். ஒவ்வொருவரும் ‘கடவுளின் மாபெரும் செயல்களை’ (கத்.பை.) அவரவரது சொந்த பாஷைகளில் சீஷர்கள் விவரிப்பதைக் கேட்டு பிரமித்துப்போனார்கள். பேசியவர்கள் யாவரும் கலிலேயர் என்பதால் இது எப்படி சாத்தியமானது?—அப்போஸ்தலர் 2:5-8, 11.
3. பெந்தெகொஸ்தே நாளன்று அப்போஸ்தலன் பேதுரு என்ன செய்தியை ஜனங்களுக்கு சொன்னார்?
3 அப்போஸ்தலன் பேதுரு இந்தக் கலிலேயர்களில் ஒருவர். சில வாரங்களுக்கு முன்பு அக்கிரமக்காரர்களால் இயேசு கிறிஸ்து கொலை செய்யப்பட்டதையும், ஆனால் கடவுள் தம்முடைய குமாரனை உயிர்த்தெழுப்பியதையும் அவர் விளக்கினார். அதன் பிறகு அங்கிருந்த சீஷர்களில் அநேகர் உட்பட பேதுருவுக்கும் மற்றவர்களுக்கும் இயேசு தரிசனமானார். பத்து நாட்களுக்கு முன்புதான் இயேசு பரலோகத்துக்கு சென்றிருந்தார். அவரே சீஷர்கள்மீது இந்தப் பரிசுத்த ஆவியை ஊற்றியிருந்தார். பெந்தெகொஸ்தே நாளை கொண்டாட வந்திருந்தவர்களுக்கு இது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததா? ஆம், இருந்தது. இயேசுவின் மரணம், பாவங்களிலிருந்து மன்னிப்பை பெறுவதற்கும் அவரில் விசுவாசம் வைக்கையில் “பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறு”வதற்கும் வழி வகுத்தது. (அப்போஸ்தலர் 2:22-24, 32, 33, 38) ஆகவே ‘கடவுளின் மாபெரும் செயல்கள்’ பற்றி பேசப்படுவதைக் கேட்டவர்கள் என்ன செய்தார்கள்? இந்தப் பதிவு, யெகோவாவுக்கு நாம் செய்யும் சேவையை மதிப்பிடுவதற்கு எவ்வாறு உதவலாம்?
செயல்பட தூண்டப்பட்டார்கள்!
4. பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாளன்று யோவேலின் என்ன தீர்க்கதரிசனம் நிறைவேறியது?
4 எருசலேமில் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்ட சீஷர்கள், உடனடியாக இரட்சிப்பின் நற்செய்தியை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார்கள். அந்தக் காலைப்பொழுதில் அங்கு கூடியிருந்த கூட்டத்தினரிடம் பேச தொடங்கினார்கள். இவர்களுடைய இந்தப் பிரசங்கிப்பு எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்பாக பெத்துவேலின் குமாரன் யோவேல் எழுதிய முக்கிய தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக இருந்தது: “கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே” “நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள். ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்.”—யோவேல் 1:1; 2:28, 29, 31; அப்போஸ்தலர் 2:17, 18, 20.
5. என்ன அர்த்தத்தில் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்? (அடிக்குறிப்பு காண்க.)
5 தாவீது, யோவேல், தெபோராள் ஆகியோரைப் போன்ற ஆண்களையும் பெண்களையும் கொண்ட தீர்க்கதரிசன சந்ததியை கடவுள் உருவாக்கி, எதிர்கால சம்பவங்களை முன்னறிவிக்க அவர்களை பயன்படுத்துவார் என்று இது அர்த்தப்படுத்துகிறதா? இல்லை. கிறிஸ்தவ ‘குமாரர்களும் குமாரத்திகளும் ஊழியக்காரர்களும் ஊழியக்காரிகளும்’ யெகோவா இதுவரை செய்திருக்கும், இன்னும் செய்யவிருக்கும் ‘மாபெரும் செயல்களை’ அறிவிப்பதற்கு அவருடைய ஆவியால் தூண்டப்படுவார்கள் என்ற கருத்தில் தீர்க்கதரிசனம் சொல்வார்கள். இவ்வாறு அவர்கள் மகா உன்னதமானவரின் சார்பாக பேசுகிறவர்களாக இருப்பார்கள்.a ஆனால் கூடிவந்த அந்தக் கூட்டத்தார் எப்படி பிரதிபலித்தார்கள்?—எபிரெயர் 1:1, 2.
6. பேதுருவின் பேச்சைக் கேட்ட கூட்டத்திலிருந்த அநேகர் என்ன செய்ய தூண்டப்பட்டார்கள்?
6 பேதுருவின் விளக்கங்களை கேட்ட பிறகு, கூட்டத்திலிருந்த அநேகர் செயல்பட தூண்டப்பட்டார்கள். “வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம் பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.” (அப்போஸ்தலர் 2:41) இவர்கள் பிறப்பிலேயே யூதர்களாகவும் யூத மதத்திற்கு மாறியவர்களாகவும் இருந்தபடியால் வேதாகமத்தின் அடிப்படை அறிவை ஏற்கெனவே பெற்றிருந்தார்கள். அந்த அறிவும், பேதுருவிடமிருந்து கற்றுக்கொண்ட விஷயங்களில் வைத்த விசுவாசமும், “பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே” அவர்கள் முழுக்காட்டுதல் பெற அடிப்படையாக அமைந்தன. (மத்தேயு 28:19) அவர்கள் முழுக்காட்டுதல் பெற்ற பின், ‘அப்போஸ்தலருடைய உபதேசத்தில் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.’ அதே சமயம், புதிதாக கண்டறிந்த விசுவாசத்தை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார்கள். ஆம், “அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, . . . தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவு பெற்றிருந்தார்கள்.” இந்தப் பிரசங்க வேலையின் பலனாக, “இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார்.” (அப்போஸ்தலர் 2:42, 46, 47) இந்தப் புதிய விசுவாசிகள் வாழ்ந்து வந்த பல தேசங்களில் கிறிஸ்தவ சபைகள் விரைவில் உருவாக்கப்பட்டன. இவர்கள் வீடு திரும்பியதும் ‘நற்செய்தியை’ வைராக்கியமாக பிரசங்கித்தது இந்த அதிகரிப்புக்கு ஓரளவு பங்களித்தது என்பதில் சந்தேகமில்லை.—கொலோசெயர் 1:23, NW.
தேவனுடைய வார்த்தை வல்லமையுள்ளது
7. (அ) இன்று எல்லா தேசங்களிலுமுள்ள மக்களை யெகோவாவின் அமைப்பினிடம் எது கவர்ந்திழுக்கிறது? (ஆ) உலகம் முழுவதிலும், உள்ளூரிலும் இன்னும் என்ன அதிகரிப்புக்கு வாய்ப்பிருப்பதை நீங்கள் காண்கிறீர்கள்? (அடிக்குறிப்பைக் காண்க.)
7 இன்று கடவுளுடைய ஊழியர்களாக ஆக விரும்புகிறவர்களைப் பற்றி என்ன சொல்லலாம்? அவர்களும்கூட கடவுளுடைய வார்த்தையை ஆர்வத்துடன் படிக்க வேண்டும். அப்போது யெகோவா ‘இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவனாக’ இருப்பதை அறிந்துகொள்கிறார்கள். (யாத்திராகமம் 34:6; அப்போஸ்தலர் 13:48) மீட்பு சம்பந்தமாக இயேசு கிறிஸ்துவின் மூலம் யெகோவா செய்திருக்கும் அன்பான ஏற்பாட்டையும், சிந்தப்பட்ட இவருடைய இரத்தம் சகல பாவங்களிலிருந்தும் அவர்களைக் கழுவ முடியும் என்பதையும் கற்றுக்கொள்கிறார்கள். (1 யோவான் 1:7) ‘நீதிமான்களையும் அநீதிமான்களையும் உயிர்த்தெழுப்புவது’ கடவுளுடைய சித்தம் என்பதை புரிந்துகொள்கையில் அதற்காக நன்றியோடிருக்கிறார்கள். (அப்போஸ்தலர் 24:15) ‘மாபெரும் செயல்களுக்கு’ காரணமானவரிடம் உள்ள அன்பு அதிகரிக்க அதிகரிக்க, இந்த அருமையான சத்தியங்களை மற்றவர்களுக்குப் பிரசங்கிக்க இவர்கள் தூண்டப்படுகிறார்கள். அதன் பிறகு அவர்கள் கடவுளின் ஒப்புக்கொடுத்த, முழுக்காட்டப்பட்ட ஊழியர்களாகி தொடர்ந்து “தேவனை அறிகிற அறிவில் விருத்தியடை”கிறார்கள்.b—கொலோசெயர் 1:10; 2 கொரிந்தியர் 5:14.
8-10. (அ) கடவுளுடைய வார்த்தை ‘வல்லமையுள்ளது’ என்பதை ஒரு கிறிஸ்தவ பெண்ணின் அனுபவம் எவ்வாறு நிரூபிக்கிறது? (ஆ) யெகோவாவையும் தமது ஊழியர்களை அவர் நடத்தும் விதத்தையும் பற்றி இந்த அனுபவத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்? (யாத்திராகமம் 4:12)
8 கடவுளுடைய ஊழியர்கள் பைபிள் படிப்பிலிருந்து பெற்றுக்கொள்ளும் அறிவு மேலோட்டமானதல்ல. இந்த அறிவு அவர்களுடைய இருதயத்தை செயல்பட தூண்டுகிறது, அவர்கள் சிந்திக்கும் விதத்தை மாற்றுகிறது, அவர்களுக்குள் நிலைத்திருக்கிறது. (எபிரெயர் 4:12) உதாரணமாக, கெம்மில் என்ற பெண்மணி வயதானவர்களை கவனித்துக்கொள்ளும் வேலையில் சேர்ந்தாள். அவள் இப்படி கவனித்துக் கொண்டவர்களில் மார்த்தா என்ற யெகோவாவின் சாட்சியும் ஒருவர். மார்த்தா, டெமென்ஷியா எனும் ஞாபக மறதி நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார். அவரை எப்போதும் யாராவது கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். சாப்பிடுகையில் உணவை விழுங்குவதற்கும்கூட அவளுக்கு நினைப்பூட்ட வேண்டும். ஆனால் ஒரு விஷயம் மட்டும் மார்த்தாவின் மனதில் மறக்க முடியாதபடி பதிந்திருந்தது. அது என்னவென நாம் பார்ப்போம்.
9 ஒரு நாள் கெம்மில் என்பவள் தன் சொந்த பிரச்சினைகளை எண்ணி துக்கம் தாங்காமல் அழுதுகொண்டிருந்தாள். இதை மார்த்தா கவனித்தார். மார்த்தா அவளை ஆதரவாக அணைத்துக்கொண்டு, தன்னிடம் வந்து பைபிளை கற்றுக்கொள்ளும்படி அழைத்தார். ஆனால் மார்த்தாவின் நிலைமையிலிருக்கும் ஒருவரால் பைபிள் படிப்பு நடத்த முடியுமா? அவரால் முடிந்தது! அவர் தன்னுடைய ஞாபக சக்தியை பெருமளவு இழந்திருந்தாலும் மகத்துவமுள்ள தன் கடவுளை மறக்கவில்லை; பைபிளிலிருந்து கற்றுக்கொண்ட அருமையான சத்தியங்களையும் அவர் மறக்கவில்லை. படிப்பின்போது, மார்த்தா கெம்மலிடம் ஒவ்வொரு பாராவையும் படிக்கவும், குறிப்பிடப்பட்டிருந்த வசனங்களை பைபிளில் எடுத்துப் பார்க்கவும், பக்கத்தின் கீழுள்ள கேள்விகளை வாசிக்கவும், பிறகு அதற்கு பதிலளிக்கவும் சொன்னார். இது கொஞ்ச காலத்துக்கு தொடர்ந்தது. மார்த்தாவின் குறைபாடுகளின் மத்தியிலும் கெம்மில் பைபிள் அறிவில் முன்னேறினாள். கடவுளை சேவிப்பதில் ஆர்வமுள்ள மற்றவர்களோடு கெம்மில் கூட்டுறவு கொள்வதன் அவசியத்தை மார்த்தா புரிந்துகொண்டார். இதை மனதில் வைத்து, முதன்முறையாக ராஜ்ய மன்றத்திற்குச் செல்லுகையில் அணிவதற்கு பொருத்தமாக ஒரு உடையையும் காலணியையும் கெம்மிலுக்கு கொடுத்தார்.
10 மார்த்தா காட்டிய அன்பான அக்கறையும் அவர் வைத்த முன்மாதிரியும் அவருடைய உறுதியான நம்பிக்கையும் கெம்மிலை நெகிழ வைத்தன. மார்த்தா எல்லாவற்றையும் மறந்துபோன போதிலும் பைபிளிலிருந்து கற்றுக்கொண்டவற்றை மறக்காதிருந்ததால் அவர் பைபிளிலிருந்து தனக்குக் கற்றுக்கொடுக்க முயன்றவை மிகவும் முக்கியமானவையாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு கெம்மில் வந்தாள். அதன் பிறகு கெம்மில் மற்றொரு முதியோர் இல்லத்துக்கு மாறிப்போன போது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய சமயம் வந்துவிட்டதைப் புரிந்துகொண்டாள். கிடைத்த முதல் சந்தர்ப்பத்தில், மார்த்தா கொடுத்த உடையையும் காலணியையும் அணிந்துகொண்டு அவள் ராஜ்ய மன்றத்திற்குச் சென்றாள், தனக்கு பைபிள் படிப்பு நடத்தும்படி கேட்டாள். கெம்மில் நன்கு முன்னேறி முழுக்காட்டுதலும் பெற்றாள்.
யெகோவாவின் தராதரங்களை பின்பற்ற தூண்டப்படுதல்
11. பிரசங்க வேலையில் வைராக்கியமாக இருப்பதோடுகூட, ராஜ்ய செய்தி நம்மைத் தூண்டியிருப்பதை நாம் எவ்வாறு காட்டலாம்?
11 இன்று மார்த்தாவையும் கெம்மிலையும் போலவே உலகம் முழுவதிலும் ‘ராஜ்யத்தின் நற்செய்தியை’ பிரசங்கிக்கும் யெகோவாவின் சாட்சிகள் 60 லட்சத்திற்கும் அதிகமானோர் இருக்கின்றனர். (மத்தேயு 24:14, NW; 28:19, 20) முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் போலவே இவர்களும் ‘கடவுளின் மாபெரும் செயல்களால்’ உள்ளூர தூண்டப்பட்டிருக்கின்றனர். யெகோவாவின் பெயரை தாங்கள் தரித்திருப்பதற்கும் அவர் தங்கள்மீது தம்முடைய ஆவியை பொழிந்திருப்பதற்கும் பாக்கியம் பெற்றிருப்பதால் அவர்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கின்றனர். இதனால் தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அவருடைய தராதரங்களுக்குக் கீழ்ப்படிந்து, “கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ள” எல்லா முயற்சியும் எடுக்கிறார்கள். மற்ற அம்சங்களோடுகூட ஆடையிலும் அலங்காரத்திலும் அவர்கள் கடவுளுடைய தராதரங்களை மதித்து நடப்பதும் இதில் அடங்கும்.—கொலோசெயர் 1:10; தீத்து 2:10.
12. ஆடையையும் அலங்காரத்தையும் பற்றி 1 தீமோத்தேயு 2:9, 10-ல் திட்டவட்டமாக என்ன புத்திமதி கொடுக்கப்பட்டுள்ளது?
12 ஆம், நம்முடைய தோற்றம் எப்படி இருக்க வேண்டும் என்பதில் யெகோவா தராதரங்களை நிர்ணயித்திருக்கிறார். கடவுள் எதிர்பார்க்கிற சிலவற்றை அப்போஸ்தலன் பவுல் இங்கே குறிப்பிடுகிறார்: “ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல், தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்க வேண்டும்.”c இந்த வார்த்தைகளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?—1 தீமோத்தேயு 2:9, 10.
13. (அ) ‘தகுதியான வஸ்திரம்’ என்றால் என்ன? (ஆ) யெகோவாவின் தராதரங்கள் நியாயமானவை என்று நாம் ஏன் சொல்லலாம்?
13 கிறிஸ்தவர்கள் ‘தகுதியான வஸ்திரத்தினால் தங்களை அலங்கரிக்க வேண்டும்’ என்று பவுலின் வார்த்தைகள் காட்டுகின்றன. அவர்கள் பார்ப்பதற்கு ஒழுங்கில்லாமல், ஏனோதானோவென்று உடுத்தியவர்களாக இருக்கக் கூடாது. அனைவரும், ஏழ்மையிலிருப்பவர்களும்கூட, நேர்த்தியாக, சுத்தமாக, அழகாக உடுத்துவதன் மூலம் நியாயமான இந்த தராதரங்களை கடைப்பிடிக்க முடியும். உதாரணமாக, தென் அமெரிக்க நாடு ஒன்றில், ஒவ்வொரு வருடமும் சாட்சிகள் மாவட்ட மாநாட்டில் கலந்துகொள்ள காட்டுப் பகுதி வழியாக பல கிலோமீட்டர் தூரம் நடக்கவும், அதன் பிறகு சிறு படகுகளில் பல மணிநேரம் பிரயாணிக்கவும் வேண்டும். பிரயாணத்தின் போது ஆற்றில் தவறி விழுவதும், ஆடை புதரில் மாட்டி கிழிந்துவிடுவதும் சகஜம். இதனால் மாநாடு நடக்கும் இடத்திற்கு வந்துசேருகையில் அவர்கள் பெரும்பாலும் பார்க்க கொஞ்சம் அலங்கோலமாகவே இருப்பார்கள். ஆகவே பட்டன்களை தைக்கவும் ஜிப்புகளை சரிசெய்யவும் மாநாட்டில் அணியும் ஆடைகளை துவைத்து இஸ்திரீ போடவும் நேரமெடுத்துக் கொள்கிறார்கள். யெகோவாவின் மேசையில் உணவருந்த கொடுக்கப்பட்ட அழைப்பை அவர்கள் மதிக்கிறார்கள், அதற்காக பொருத்தமாக உடுத்தியிருக்க விரும்புகிறார்கள்.
14. (அ) “நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும்” உடுத்துவது எதை அர்த்தப்படுத்துகிறது? (ஆ) “தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற” விதமாக உடுத்துவதில் என்ன உட்பட்டிருக்கிறது?
14 “நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும்” நாம் உடுத்தியிருக்க வேண்டும் என்பதை பவுலின் வார்த்தைகள் மேலும் காண்பிக்கின்றன. அப்படியென்றால் நம்முடைய தோற்றம், எல்லாருடைய கவனத்தையும் இழுப்பதாக, மட்டுக்கு மீறியதாக, காம உணர்ச்சிகளை தூண்டுவதாக, கவர்ச்சியாக அல்லது படுஸ்டைலாக இருக்கக்கூடாது என்பதை இது அர்த்தப்படுத்துகிறது. அதோடு, ‘தேவபக்தியை’ வெளிக்காட்டும் விதமாக நாம் உடுத்த வேண்டும். இது நம்மை யோசிக்க தூண்டவில்லையா? சபை கூட்டங்களுக்கு வரும்போது மட்டுமே நேர்த்தியாக உடுத்திக் கொண்டு மற்ற சமயங்களில் ஏனோதானோவென உடுத்த முடியாது. 24 மணிநேரமும் நாம் கிறிஸ்தவர்களாகவும் ஊழியர்களாகவும் இருப்பதால், நம்முடைய தனிப்பட்ட தோற்றம் கண்ணியத்தையும் மதிப்பையும் எப்போதும் வெளிப்படுத்த வேண்டும். வேலைக்கும் பள்ளிக்கும் செல்லுகையில் நாம் உடுத்தும் உடை நாம் செய்யும் வேலைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்பதை நாம் சொல்லவே தேவையில்லை. அப்போதும்கூட நாம் அடக்கமாயும் கண்ணியமாயும் உடுத்த வேண்டும். கடவுள் நம்பிக்கையை நம்முடைய உடை எப்போதும் படம்பிடித்து காட்டுவதாக இருந்தால், சந்தர்ப்ப சாட்சி கொடுக்க தயங்க மாட்டோம்; நம்முடைய தோற்றத்தின் காரணமாக சங்கடப்பட்டு ஒருபோதும் தயங்க வேண்டியிருக்காது.—1 பேதுரு 3:15.
‘உலகத்தில் அன்புகூர வேண்டாம்’
15, 16. (அ) ஆடையிலும் அலங்காரத்திலும் உலகின் போக்கைத் தவிர்ப்பது ஏன் முக்கியம்? (1 யோவான் 5:19) (ஆ) ஆடையிலும் அலங்காரத்திலும் மாறிவரும் நவீன பாணிகளை என்ன நடைமுறையான காரணத்திற்காக தவிர்க்க வேண்டும்?
15 ஆடையையும் அலங்காரத்தையும் தெரிந்தெடுப்பதன் சம்பந்தமாக 1 யோவான் 2:15, 16-ல் உள்ள புத்திமதியும்கூட வழிகாட்டுதலை கொடுக்கிறது. அங்கு நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.”
16 அந்தப் புத்திமதி எந்தளவு காலத்திற்கேற்றது! சகாக்களின் அழுத்தம் முன்னோருபோதும் இல்லாதளவு அதிகரித்திருக்கும் இக்காலத்தில் நாம் எப்படிப்பட்ட உடையணிய வேண்டும் என்பதை நமக்காக இந்த உலகம் தீர்மானிக்க அனுமதிக்கக் கூடாது. சமீப காலங்களில் ஆடை அலங்கார பாணிகள் சீரழிந்திருக்கின்றன. பிஸினஸ் ஆட்களும் உயர்ந்த உத்தியோகஸ்தர்களும் அணியும் ஆடையும்கூட, கிறிஸ்தவர்கள் பார்த்துப் பின்பற்றுவதற்கு பொருத்தமானதாக எப்போதும் இருப்பதில்லை. நாம் ‘இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்’ இருக்க வேண்டிய தேவையைக் குறித்து எப்போதும் உணர்வுள்ளவர்களாக இருக்க இது கூடுதலான காரணம் அளிக்கிறது; அப்படி உணர்வுள்ளவர்களாக இருக்கையில், கடவுளுடைய தராதரங்களுக்கு ஏற்ப வாழ்ந்து, ‘நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவற்றிலும் அலங்கரிப்போம்.’—ரோமர் 12:2; தீத்து 2:9.
17. (அ) ஒரு உடையை வாங்கும்போது அல்லது ஒரு ஸ்டைலை தேர்ந்தெடுக்கும்போது என்ன கேள்விகளை நாம் சிந்திக்க வேண்டும்? (ஆ) குடும்பத்தாரின் தோற்றத்திற்கு குடும்பத் தலைவர்கள் ஏன் கவனம் செலுத்த வேண்டும்?
17 ஒரு உடையை வாங்குவதற்கு முன்பாக இவ்வாறு நீங்கள் கேட்டுக்கொள்வது நல்லது: ‘இந்த ஸ்டைல் எனக்கு ஏன் ரொம்ப பிடித்திருக்கிறது? நான் விரும்பும் பிரபல நட்சத்திரம் அதை அணிவதாலா? ஒரு தெருக் கும்பலுக்கு அல்லது கலகத்தனமான சுதந்திர மனப்பான்மையை ஊக்குவிக்கும் கும்பலுக்கு உரிய ஸ்டைலாக இது இருக்கிறதா?’ ஆடையை நாம் கவனமாக ஆராயவும் வேண்டும். அது ஃபிராக் அல்லது ஸ்கர்டாக இருந்தால் எவ்வளவு நீளமாக இருக்கிறது? அதன் அமைப்பு எப்படி இருக்கிறது? அந்த உடை அடக்கமானதாக, பொருத்தமானதாக, கண்ணியமானதாக இருக்கிறதா அல்லது அது இறுக்கமாக, கவர்ச்சியூட்டுவதாக அல்லது ஏனோதானோவென்ற தோற்றத்தை அளிப்பதாக இருக்கிறதா? ‘இதை நான் அணிந்தால் மற்றவர்களை இடறலடையச் செய்யுமா?’ என்று உங்களை கேட்டுக்கொள்ளுங்கள். (2 கொரிந்தியர் 6:3, 4) அதைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? ஏனென்றால் பைபிள் இவ்வாறு சொல்கிறது: ‘கிறிஸ்துவும் தமக்கே பிரியமாய் நடக்கவில்லை.’ (ரோமர் 15:3) கிறிஸ்தவ குடும்பத் தலைவர்கள் குடும்பத்தாரின் தோற்றத்திற்குக் கவனம் செலுத்த வேண்டும். மகிமை பொருந்திய கடவுளிடம் அவர்களுக்கிருக்கும் மரியாதையின் பொருட்டு, குடும்பத் தலைவர்கள் தேவைப்படும்போது உறுதியாகவும் அன்பாகவும் புத்திசொல்ல தயங்கக் கூடாது.—யாக்கோபு 3:13.
18. உங்கள் ஆடைக்கும் அலங்காரத்திற்கும் மிகுந்த கவனம் செலுத்த உங்களை எது தூண்டுகிறது?
18 நாம் சொல்லும் செய்தி, கண்ணியமும் பரிசுத்தமும் உருவான யெகோவாவிடமிருந்தே வருகிறது. (ஏசாயா 6:3) “பிரியமான பிள்ளைகளைப்போல” அவரைப் பின்பற்றும்படி பைபிள் நம்மை ஊக்குவிக்கிறது. (எபேசியர் 5:1) நம்முடைய ஆடையும் அலங்காரமும் நம்முடைய பரம தந்தையாகிய யெகோவாவை நல்ல விதமாக அல்லது மோசமாக சித்தரிக்கலாம். நிச்சயமாக நாம் அவருடைய இருதயத்தை சந்தோஷப்படுத்தவே விரும்புகிறோம்!—நீதிமொழிகள் 27:11.
19. மற்றவர்களுக்கு “கடவுளின் மாபெரும் செயல்களை” அறிவிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கின்றன?
19 நீங்கள் கற்றுக்கொண்டிருக்கும் ‘கடவுளின் மாபெரும் செயல்களைப்’ பற்றி எப்படி உணருகிறீர்கள்? சத்தியத்தை கற்றுக்கொள்ளும் பாக்கியம் நமக்கு கிடைத்துள்ளது! இயேசு கிறிஸ்து சிந்திய இரத்தத்தின்மீது நாம் விசுவாசம் வைப்பதால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கின்றன. (அப்போஸ்தலர் 2:38) இதனால் கடவுளுக்கு முன்பாக பேச்சு சுயாதீனத்தை நாம் பெற்றிருக்கிறோம். நம்பிக்கையற்றவர்களைப் போல நாம் சாவைக் கண்டு பயப்படுவது கிடையாது. அதற்கு பதிலாக, ஒருநாள் ‘ஞாபகார்த்த கல்லறையிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்டு வெளியே வருவார்கள்’ என சொன்ன இயேசுவின் வாக்குறுதி நமக்குண்டு. (யோவான் 5:28, 29, NW) இந்த எல்லா காரியங்களையும் நமக்கு வெளிப்படுத்துவதன் மூலம் யெகோவா இரக்கமுள்ளவராய் இருந்திருக்கிறார். அதோடு, அவர் தம்முடைய ஆவியை நம்மீது பொழிந்திருக்கிறார். ஆகவே, அருமையான இந்த எல்லா பரிசுகளுக்கும் நாம் காட்டும் நன்றியுணர்வு, அவருடைய மிக உயர்ந்த தராதரங்களை மதிக்கவும் இந்த “மாபெரும் செயல்களை” மற்றவர்களுக்கு அறிவித்து, அவரை ஆர்வத்துடன் போற்றவும் நம்மைத் தூண்ட வேண்டும்.
[அடிக்குறிப்புகள்]
a யெகோவா தமது ஜனங்களின் சார்பாக பார்வோனிடம் பேசுவதற்கு மோசேயையும் ஆரோனையும் நியமித்த போது, மோசேயிடம் இவ்வாறு சொன்னார்: ‘உன்னை நான் பார்வோனுக்கு தேவனாக்கினேன்; உன் சகோதரனாகிய ஆரோன் உன் தீர்க்கதரிசியாயிருப்பான்.’ (யாத்திராகமம் 7:1) எதிர்கால சம்பவங்களை முன்னறிவிக்கும் அர்த்தத்தில் ஆரோன் தீர்க்கதரிசியாக சேவிக்கவில்லை, ஆனால் மோசேயின் சார்பாக பேசுகிறவர் என்ற அர்த்தத்தில் தீர்க்கதரிசியாக சேவித்தார்.
b 2002, மார்ச் 28-ல் நடைபெற்ற கர்த்தருடைய மரண நினைவு ஆசரிப்புக்கு திரண்டு வந்திருந்தவர்களில் லட்சக்கணக்கானோர் இன்னும் யெகோவாவை சுறுசுறுப்பாக சேவிக்க ஆரம்பிக்கவில்லை. நற்செய்தியை அறிவிக்கும் பிரஸ்தாபிகளாகும் சிலாக்கியத்தை சீக்கிரம் பெறும்படி அந்த ஆர்வமுள்ளவர்களின் இருதயம் தூண்டப்பட வேண்டும் என்பது எங்கள் பிரார்த்தனை.
c பவுல் இந்த வார்த்தைகளை கிறிஸ்தவ பெண்களுக்கு சொன்ன போதிலும், இதே நியமம் கிறிஸ்தவ ஆண்களுக்கும் இளைஞருக்கும்கூட பொருந்தும்.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
• பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாளன்று மக்கள் என்ன “மாபெரும் செயல்களை” பற்றி கேட்டார்கள், அதற்கு அவர்கள் எப்படி பிரதிபலித்தார்கள்?
• ஒருவர் எவ்வாறு இயேசு கிறிஸ்துவின் சீஷராகிறார், சீஷராவதில் என்ன உட்பட்டிருக்கிறது?
• நம்முடைய ஆடைக்கும் அலங்காரத்திற்கும் கவனம் செலுத்துவது ஏன் முக்கியம்?
• ஒரு உடை அல்லது ஸ்டைல் பொருத்தமானதா இல்லையா என்பதை தீர்மானிக்கையில் என்ன காரியங்களை சிந்திக்க வேண்டும்?
[பக்கம் 15-ன் படம்]
இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்பட்டுவிட்டதை பேதுரு அறிவித்தார்
[பக்கம் 17-ன் படங்கள்]
உங்களுடைய தோற்றம் நீங்கள் வணங்கும் கடவுளை நல்ல விதமாக சித்தரிக்கிறதா?
[பக்கம் 18-ன் படங்கள்]
கிறிஸ்தவ பெற்றோர் குடும்பத்தாரின் தோற்றத்திற்குக் கவனம் செலுத்த வேண்டும்