வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
கடவுளுடைய தயவைப் பெறுவதற்கு மிருக பலி தேவை என்பது ஆபேலுக்கு தெரிந்திருந்ததா?
காயீனும் ஆபேலும் பலி செலுத்தியதைப் பற்றிய வெகு சுருக்கமான விவரப்பதிவே பைபிளில் காணப்படுகிறது. ஆதியாகமம் 4:3-5-ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “சிலநாள் சென்றபின்பு, காயீன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான். ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளில் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தார். காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கிகரிக்கவில்லை.”
இந்தச் சம்பவத்துக்கு முன்பு, பலிகளைப் பற்றியோ அல்லது எப்படிப்பட்ட பலிகளை அவர் ஏற்றுக்கொள்வார் என்பதைப் பற்றியோ யெகோவா திட்டவட்டமாக தகவல் எதுவும் கொடுத்ததாக பைபிளில் எந்தக் குறிப்பும் இல்லை. ஆகவே காயீனும் ஆபேலும் முழுக்க முழுக்க தங்கள் விருப்பப்படியே காணிக்கைகளைச் செலுத்தினார்கள். ஆரம்பத்தில் அவர்களுடைய பெற்றோர் குடியிருந்த பரதீஸிய வீட்டுக்குள் செல்ல முடியாதபடி அவர்கள் தடைசெய்யப்பட்டிருந்தார்கள்; பாவத்தின் விளைவுகளை அவர்கள் உணர ஆரம்பித்தார்கள்; கடவுளிடமிருந்து விலகிய நிலையில் இருந்தார்கள். பாவமுள்ள, பரிதாபமான நிலைமையில் அவர்கள் இருந்ததால், கடவுளின் உதவியைப் பெறுவதன் அவசியத்தை நன்கு உணர்ந்திருக்க வேண்டும். கடவுளுக்கு காணிக்கை செலுத்துவது அவர்களுடைய பங்கில் கடவுளுடைய தயவைப் பெற்றுக்கொள்வதற்காக அவர்கள் விரும்பி செய்த ஒரு செய்கையாக இருந்தது.
விளைவு, ஆபேலின் காணிக்கையை கடவுள் ஏற்றுக்கொண்டார், காயீனுடையதையோ ஏற்றுக்கொள்ளவில்லை. ஏன்? ஆபேல் தகுந்த பலியை செலுத்தியதாலும் காயீன் அவ்வாறு செலுத்தாமல் போனதாலுமா? அவர்கள் செலுத்திய காணிக்கைக்கும் அவர் அதை ஏற்றுக்கொள்வதற்கும் சம்பந்தமிருந்ததா இல்லையா என்று நாம் திட்டவட்டமாக சொல்ல முடியாது. ஏனென்றால் எதை கடவுள் ஏற்றுக்கொள்வார், எதை ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று இருவருக்குமே சொல்லப்படவில்லை. ஆனால் இரண்டு விதமான பலிகளுமே ஏற்புடையதாக இருந்திருக்கலாம். ஏனென்றால் பின்னர் இஸ்ரவேலருக்குக் கடவுள் கொடுத்த நியாயப்பிரமாண சட்டத்தில், மிருகங்களும் அவற்றின் உறுப்புகளும் மாத்திரமல்ல, வறுத்த தானியங்களும், வாற்கோதுமை கதிர்களும், மெல்லிய மாவும், வாட்டிய அப்பமும் திராட்சரசமும்கூட ஏற்கத்தக்க பலிகளாக கருதப்பட்டன. (லேவியராகமம் 6:19-23; 7:11-13; 23:10-13) ஆகவே கடவுள் ஒன்றை ஏற்றுக்கொண்டு மற்றொன்றை நிராகரித்தது, காயீனும் ஆபேலும் பலியாக செலுத்திய பொருட்களை மட்டுமே சார்ந்திருக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.—ஏசாயா 1:11; ஆமோஸ் 5:22.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின், அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு கூறினார்: “விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமானென்று சாட்சி பெற்றான். அவனுடைய காணிக்கைகளைக் குறித்து தேவனே சாட்சிகொடுத்தார்.” (எபிரெயர் 11:4) ஆகவே விசுவாசத்தின் காரணமாகவே ஆபேலை கடவுள் நீதிமானாக கருதினார். ஆனால் அவருக்கு எதில் விசுவாசம் இருந்தது? யெகோவா வாக்குறுதி அளித்த வித்துவானவர், ‘சர்ப்பத்தின் தலையை நசுக்கி’ ஒரு காலத்தில் மனிதகுலம் அனுபவித்து மகிழ்ந்த சமாதானத்தையும் பரிபூரணத்தையும் திரும்ப நிலைநாட்டிடுவார் என்பதில் அவருக்கு விசுவாசம் இருந்தது. ‘வித்து குதிங்காலில் நசுக்கப்படும்’ என்று சொல்லப்பட்டதிலிருந்து, இரத்தம் சிந்தப்படுவதை உட்படுத்தும் பலி அவசியமாக இருக்கும் என்று ஆபேல் நினைத்திருக்கலாம். (ஆதியாகமம் 3:15) ஆனால் உண்மையில், ஆபேல் விசுவாசத்தை வெளிக்காட்டியதே அவருடைய பலியை “காயீனுடைய பலியிலும் மேன்மையான பலி”யாக்கியது.
அதேவிதமாகவே, தவறான பலியைச் செலுத்தியதற்காக அல்ல, ஆனால் விசுவாசக் குறைவினாலேயே காயீனின் பலி ஏற்கத்தகாததாக இருந்தது; அவனது விசுவாசக் குறைவை அவன் செயல்களே காட்டின. யெகோவா தெளிவாக காயீனிடம் இவ்வாறு சொல்லியிருந்தார்: “நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ?” (ஆதியாகமம் 4:7) காயீனுடைய காணிக்கையின் மீதுள்ள வெறுப்பால் கடவுள் அவனை நிராகரிக்கவில்லை. பொறாமை, வெறுப்பு, கடைசியாக கொலை என படிப்படியாக வெளிப்பட்ட அவன் செயல்கள், அதாவது ‘கிரியைகள் பொல்லாதவைகளாய்’ இருந்ததால்தான் உண்மையில் காயீனை கடவுள் நிராகரித்தார்.—1 யோவான் 3:12.