“இரட்சிப்பு யெகோவாவினுடையதே”
தேசத்தில் நெருக்கடி நிலை ஏற்படும்போது அல்லது உலகெங்கும் பதற்ற நிலை ஏற்படும்போது மக்கள் பாதுகாப்பிற்காக தங்கள்தங்கள் அரசாங்கங்களையே எதிர்நோக்குகின்றனர். அரசாங்கங்களோ, மக்களின் ஆதரவை திரட்டுவதற்கு தீவிர திட்டங்களில் இறங்குகின்றன. அப்படிப்பட்ட திட்டங்கள் எந்தளவு தேசப்பற்றைத் தூண்டுகின்றனவோ, அந்தளவு அதிகமாகவும் தீவிரமாகவும் தேசப்பற்று விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
தேசத்தில் அவசர நிலை ஏற்படும்போது, தேசப்பற்றே மக்களுக்கு ஒற்றுமை உணர்வையும் பலத்தையும் பெரும்பாலும் தருகிறது; அதோடு ஒத்துழைப்பு தரவும் சமுதாய நலன் கருதி நடக்கவும் அவர்களை தூண்டலாம். இருந்தாலும், “தேசப்பற்று வேறெந்த உணர்ச்சியையும் போலவே ஆபத்து நிறைந்தது” என குறிப்பிடுகிறது த நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளிவந்த ஒரு கட்டுரை. ஏனெனில் “கட்டுப்பாடு மட்டும் இல்லையெனில் அது மிகக் கோரமாக உருவெடுக்கும்” என்கிறது அக்கட்டுரை. சாதாரண தேசப்பற்று எந்நிமிடமும் ரூபம் மாறி, பொது உரிமைகளையும் நாட்டின் குடிமக்கள் சிலருடைய மத சுதந்தரத்தையும் பறித்துவிடலாம். முக்கியமாக உண்மை கிறிஸ்தவர்கள் தங்கள் நம்பிக்கைகளை விட்டுக்கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்படலாம். தங்களை சுற்றியுள்ள உலகெங்கும் அப்படிப்பட்ட சூழல் நிலவும்போது அவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள்? உட்பார்வையோடு நடந்துகொள்ளவும் கடவுளுக்கு உத்தமத்தைக் காத்துக்கொள்ளவும் என்ன வேதப்பூர்வ நியமங்கள் அவர்களுக்கு உதவுகின்றன?
‘நீ அவைகளை வணங்க வேண்டாம்’
சிலசமயங்களில், தேசியக் கொடியை வணங்குவது தேசப்பற்றை வெளிக்காட்டுவதற்கான முக்கிய வழியாகிவிடுகிறது. ஆனால் வானத்திலும் பூமியிலும் உள்ளவற்றிற்கு ஒப்பான சொரூபங்கள் பொதுவாக கொடிகளில் சித்தரிக்கப்படுகின்றன; உதாரணத்திற்கு நட்சத்திரத்தின் அடையாளத்தை அதில் பார்க்கலாம். அப்படிப்பட்ட சொரூபங்களை வணங்குவதைக் குறித்து கடவுள் தம் நோக்குநிலையை மக்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்: “மேலே வானத்திலும் கீழே பூமியிலும் பூமியின் கீழ் தண்ணீரிலும் உள்ளவைகளுக்கு ஒப்பான எந்தச் சொரூபத்தையும் செய்துகொள்ள வேண்டாம். நீ அவைகளை வணங்கவும் சேவிக்கவும் வேண்டாம். உன் கடவுளாகிய யெகோவா என்கிற நான் எரிச்சலுள்ள [“தனிப்பட்ட பக்தியைக் கேட்கிற,” NW] கடவுள்.”—யாத்திராகமம் 20:4, 5, தி.மொ.
ஒரு நாட்டை பிரதிநிதித்துவம் செய்யும் கொடியை ‘சல்யூட்’ செய்வது அல்லது அதற்கு முன்னால் முழங்காற்படியிடுவது, யெகோவா தேவனுக்கு தனிப்பட்ட பக்தியை செலுத்த வேண்டும் என்ற கட்டளையோடு உண்மையில் முரண்படுகிறதா? பூர்வ இஸ்ரவேலர்கள் ‘கொடிகளை’ வைத்திருந்தது உண்மைதான்; வனாந்தரத்தில் அவற்றை சுற்றியே அவரவரின் மூன்று கோத்திரத்துப் பிரிவுகள் ஒன்றுகூடின. (எண்ணாகமம் 2:1, 2) அப்படிப்பட்ட கொடிகளுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் எபிரெய வார்த்தைகளைப் பற்றி மெக்ளின்டாக், ஸ்ட்ராங் என்பவர்களின் சைக்ளோப்பீடியா இவ்வாறு சொல்கிறது: “‘கொடி’ என்றவுடன் நம் மனதிற்கு வரும் தேசியக் கொடியை இந்த எபிரெய வார்த்தைகள் குறிப்பதில்லை.” மேலும், இஸ்ரவேலில் இருந்த கொடிகள் புனிதமானதாக கருதப்படவுமில்லை, அவற்றின் சம்பந்தமாக எந்த விழாக்களும் கொண்டாடப்படவுமில்லை. அவை மக்கள் எங்கே கூட வேண்டும் என்பதற்கு அடையாளக் கொடிகளாக மட்டுமே நடைமுறையில் பயன்படுத்தப்பட்டன.
ஆசரிப்புக் கூடாரத்திலும் சாலொமோனின் ஆலயத்திலும் இருந்த கேருபீன்களின் உருவங்கள், பரலோக கேருபீன்களை சித்தரிக்கவே உண்டாக்கப்பட்டன. (யாத்திராகமம் 25:18; 26:1, 31, 33; 1 இராஜாக்கள் 6:23, 28, 29; எபிரெயர் 9:23, 24) இந்தக் கலைச் சித்தரிப்புகள் பொது மக்கள் பார்வையில் படாத இடத்தில் இருந்ததும் தூதர்கள் வணங்கப்படக் கூடாது என்ற உண்மையும் இவை வணங்குவதற்காக வைக்கப்படவில்லை என்பதை தெளிவாக்குகின்றன.—கொலோசெயர் 2:19; வெளிப்படுத்துதல் 19:10; 22:8, 9.
இஸ்ரவேலர் வனாந்தரத்தில் இருந்தபோது தீர்க்கதரிசியாகிய மோசே செய்து வைத்த வெண்கல சர்ப்பத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். அந்த உருவம் அடையாளமாகவே சேவித்தது, அதற்கு தீர்க்கதரிசன அர்த்தமும் இருந்தது. (எண்ணாகமம் 21:4-9; யோவான் 3:14, 15) அது பயபக்தியோடு ஏறெடுக்கப்படவும் இல்லை, பூஜிக்கப்படவும் இல்லை. இருந்தாலும் மோசேயின் காலத்திற்கு பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இஸ்ரவேலர் அதே உருவத்தை வணங்கி பாவம் செய்தனர்; அதற்கு தூபமும் காட்டினர். ஆகவே யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா அதை சுக்குநூறாக உடைத்துப் போட வேண்டியதாயிற்று.—2 இராஜாக்கள் 18:1-4.
தேசியக் கொடிகள் ஏதோவொரு பயனுள்ள நோக்கத்தை நிறைவேற்றும் அடையாளக் கொடிகள் மட்டும்தானா? அவை எதற்கு சின்னமாக விளங்குகின்றன? “தேச விசுவாசத்திற்கான முக்கிய சின்னமும் தேசிய வணக்கத்திற்கான மையப் பொருளும் கொடியே” என ஜே. பால் வில்லியம்ஸ் என்ற ஆசிரியர் குறிப்பிட்டார். “சிலுவையைப் போலவே கொடியும் புனிதமானது” என தி என்ஸைக்ளோப்பீடியா அமெரிக்கானா சொல்கிறது. கொடி என்பது நாட்டின் சின்னம். ஆகவே அதை வணங்குவது அல்லது ‘சல்யூட்’ செய்வது, நாட்டிற்கு பக்தி செலுத்தும் மத சடங்காகும். இரட்சிப்பு நாட்டினாலேயே கிடைக்கும் என நம்புவதை அச்செயல் காட்டும்; அது, உருவ வழிபாட்டைப் பற்றிய பைபிளின் கட்டளைக்கு முரணான செயல்.
“இரட்சிப்பு யெகோவாவினுடையதே” என வேதவசனங்கள் தெளிவாக குறிப்பிடுகின்றன. (சங்கீதம் 3:8, தி.மொ.) மனித ஸ்தாபனங்களோ அவற்றின் சின்னங்களோ இரட்சிப்பு தருமென நம்பக்கூடாது. “எனக்குப் பிரியமானவர்களே, விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள்” என அப்போஸ்தலனாகிய பவுல் சக கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை வழங்கினார். (1 கொரிந்தியர் 10:14) ஆரம்பகால கிறிஸ்தவர்கள் தேசிய வணக்கச் செயல்களில் ஈடுபடவில்லை. “கிறிஸ்தவர்கள் . . . [ரோம] பேரரசரின் காக்கும் தெய்வத்திற்கு பலிசெலுத்த மறுத்துவிட்டனர்; இது இன்று கொடியை வணங்க மறுப்பதற்கு சமமென சொல்லலாம்” என இறக்கவிருப்பவர்கள் என்ற புத்தகத்தில் டானியல் பி. மானிக்ஸ் சொல்கிறார். இன்றுள்ள உண்மை கிறிஸ்தவர்களும் அவ்வாறே நடந்துகொள்கிறார்கள். யெகோவாவிற்கு தனிப்பட்ட பக்தி செலுத்துவதற்காக எந்தத் தேசத்து கொடியையும் அவர்கள் வணங்குவதில்லை. இவ்வாறு அரசாங்கங்களுக்கும் அவற்றின் ஆட்சியாளர்களுக்கும் மரியாதை காட்டுகிற அதே சமயத்தில், கடவுளுக்கே அவர்கள் முதல் இடத்தை கொடுக்கிறார்கள். ‘மேலான அதிகாரங்களாகிய’ அரசாங்கங்களுக்கு கீழ்ப்பட்டிருக்க வேண்டும் என்ற கடமையை நிச்சயமாகவே அவர்கள் உணருகிறார்கள். (ரோமர் 13:1-7) என்றாலும், தேசிய கீதங்களைப் போன்ற தேசபக்தி பாடல்களைப் பாடுவதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
தேசிய கீதங்கள் என்றால் என்ன?
“தேசிய கீதங்கள் தேசப்பற்றை வெளிக்காட்டும் பாடல்கள்; தேசத்து மக்களுக்கோ அதன் ஆட்சியாளர்களுக்கோ வழிகாட்டும்படியும் பாதுகாப்பு கொடுக்கும்படியும் இறைவனிடம் செய்யும் வேண்டுதலும் அதில் பெரும்பாலும் இருக்கும்” என தி என்ஸைக்ளோப்பீடியா அமெரிக்கானா கூறுகிறது. அப்படியானால், தேசிய கீதம் என்பது ஒரு தேசத்தின் சார்பாக ஏறெடுக்கப்படும் ஒரு பாடல் அல்லது ஜெபம். தேசம் வளமையும் செழுமையும் கொழித்து பல்லாண்டுகளுக்கு நீடித்திருக்க வேண்டுமென வழக்கமாக வேண்டிக்கொள்ளப்படுகிறது. உண்மை கிறிஸ்தவர்கள் இப்படி தேசத்திற்காக ஏறெடுக்கப்படும் விண்ணப்பங்களில் கலந்துகொள்ளலாமா?
கடவுளை சேவிப்பதாக சொல்லிக்கொண்ட ஜனங்கள் மத்தியில் எரேமியா தீர்க்கதரிசி வாழ்ந்தார். ஆனாலும், “நீ இந்த ஜனத்துக்காக விண்ணப்பம் செய்ய வேண்டாம்; அவர்களுக்காக மன்றாடவும் கெஞ்சவும் வேண்டாம், என்னிடத்தில் அவர்களுக்காகப் பரிந்து பேசவும் வேண்டாம், நான் உனக்குச் செவி கொடுப்பதில்லை” என யெகோவா அவரிடம் கட்டளையிட்டார். (எரேமியா 7:16; 11:14; 14:11) ஏன் எரேமியாவிடம் அவ்வாறு கட்டளையிட்டார்? ஏனென்றால், அப்போதிருந்த சமுதாயத்தில் திருட்டும் கொலையும் விபசாரமும் பொய்யாணையிடுதலும் விக்கிரகாராதனையுமே நிறைந்து காணப்பட்டது.—எரேமியா 7:9.
இந்த விஷயத்தில் இயேசு கிறிஸ்து நமக்கு ஒரு முன்னோடி; “நான் . . . உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்” என அவர் ஜெபித்தார். (யோவான் 17:9) “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும்” அது ‘ஒழிந்து போகிறது’ என்றும் வேத வசனங்கள் சொல்கின்றன. (1 யோவான் 2:17; 5:19) அப்படியானால், அத்தகைய உலகம் செழிக்க வேண்டுமெனவும் நீடிக்க வேண்டுமெனவும் உண்மை கிறிஸ்தவர்கள் எப்படி மனசாட்சியுடன் ஜெபம் செய்ய முடியும்?
தேசிய கீதங்கள் அனைத்திலும் அப்படிப்பட்ட ஜெபங்கள் இடம்பெறுவதில்லை என்பது வாஸ்தவமே. “தேசிய கீதங்களிலுள்ள கருத்துக்கள் பாடலுக்குப் பாடல் வேறுபடுகின்றன . . . மன்னருக்காக செய்யப்படும் ஜெபங்கள் முதல் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த போர்கள் அல்லது கிளர்ச்சிகள் வரையும் . . . தேசபக்தி வரையும் பல கருத்துக்கள் இடம்பெறுகின்றன” என்று என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா கூறுகிறது. ஆனால் கடவுளைப் பிரியப்படுத்த விரும்புகிறவர்கள் எந்தவொரு தேசத்தின் போர்களையோ புரட்சிகளையோ குறித்து மகிழலாமா? உண்மை வணக்கத்தார், “தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்” என்று ஏசாயா முன்னறிவித்தார். (ஏசாயா 2:4) ‘நாங்கள் மாம்சத்தில் நடக்கிறவர்களாயிருந்தும், மாம்சத்தின்படி போர் செய்கிறவர்களல்ல. எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளல்ல’ என அப்போஸ்தலன் பவுல் எழுதினார்.—2 கொரிந்தியர் 10:3, 4.
தேசிய கீதங்கள் பெரும்பாலும் தேசத்தின் பெருமையையும் மேன்மையையுமே பறைசாற்றுகின்றன. வேதவசனங்களோ இப்படிப்பட்ட மனப்பான்மையை ஆதரிப்பதில்லை. ‘[யெகோவா தேவன்] மனுஷஜாதியான சகல ஜனங்களையும் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச் செய்துள்ளார்’ என அப்போஸ்தலன் பவுல் மார்ஸ் மேடையில் பேசியபோது குறிப்பிட்டார். (அப்போஸ்தலர் 17:26) “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல” என்று அப்போஸ்தலன் பேதுரு சொன்னார்; “எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன்” என்றும் குறிப்பிட்டார்.—அப்போஸ்தலர் 10:34, 35.
பைபிளைப் படித்துப் புரிந்திருக்கும் அநேகர், கொடி வணக்கத்திலோ தேசபக்திப் பாடல்களை பாடுவதிலோ கலந்துகொள்வதில்லை என்று தனிப்பட்ட தீர்மானம் எடுக்கின்றனர். ஆனால் இது சம்பந்தமாக அவர்கள் பிரச்சினைகளை நேருக்கு நேர் சந்திக்கையில் எப்படி நடந்துகொள்கிறார்கள்?
மரியாதைக்குரிய விதத்தில் விலகியிருங்கள்
பூர்வ பாபிலோனின் அரசராகிய நேபுகாத்நேச்சார் தன் சாம்ராஜ்யத்தின் ஒற்றுமையை பலப்படுத்த தூரா சமவெளியில் மாபெரும் பொற்சிலையை நிறுத்தினார். அதன்பின் அச்சிலையின் பிரதிஷ்டைக்காக தன் தேசாதிபதிகளையும் அதிகாரிகளையும் தலைவரையும் நியாயாதிபதிகளையும் மற்ற உத்தியோகஸ்தர்களையும் அழைத்தார். கீதவாத்தியங்களின் சத்தம் ஒலிக்கையில் கூடியிருந்த அவர்கள் அனைவரும் அந்த சிலைக்கு முன்பு தாழவிழுந்து வணங்க வேண்டியிருந்தது. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகிய இளம் எபிரெயர்கள் மூவரும்கூட அங்கே வர வேண்டியிருந்தது. அந்த மத சம்பந்தமான நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாததை அவர்கள் எப்படி காட்டினர்? கீதவாத்தியங்கள் ஒலித்தபோது, அனைவரும் பொற்சிலைக்கு முன்பாக தாழ விழுந்தனர்; ஆனால் அந்த மூன்று எபிரெயர்கள் மட்டும் நின்றுகொண்டே இருந்தனர்.—தானியேல் 3:1-12.
இன்று மக்கள் பொதுவாக கையை நீட்டி அல்லது கையை நெற்றியிலோ நெஞ்சிலோ வைத்து கொடிகளை ‘சல்யூட்’ செய்கிறார்கள். சிலசமயங்களில் ஏதோவொரு விசேஷ தோரணையில் கொடி வணக்கம் செய்யப்படுகிறது. சில நாடுகளில் பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் முழங்காற்படியிட்டு கொடியை முத்தமிட வேண்டியிருக்கிறது. மற்றவர்கள் கொடி வணக்கம் செய்கையில் அமைதியாக நிற்பதன் மூலம் தாங்கள் மரியாதைக்குரிய பார்வையாளர்கள் என்பதை மெய் கிறிஸ்தவர்கள் நிரூபிக்கிறார்கள்.
கொடி வணக்கத்தின்போது வெறுமனே எழுந்து நிற்பதே அதில் கலந்துகொள்வதற்கு அத்தாட்சியாக கருதப்படுகிறதென்றால் என்ன செய்வது? உதாரணமாக, பள்ளியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்படுகிற ஒரு மாணவர் மட்டும் வெளியே கம்பத்தில் நிறுத்தப்பட்டுள்ள கொடியை ‘சல்யூட்’ செய்வார்; அதே சமயத்தில் மற்ற மாணவர்களோ வகுப்பிற்குள் அட்டென்ஷனில் நிற்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறதென்று வைத்துக் கொள்வோம். இந்த சந்தர்ப்பத்தில் நாம் நின்றோமென்றால், வெளியில் உள்ள மாணவர் நம் சார்பாக கொடி வணக்கம் செய்வதை ஏற்றுக்கொள்வதாக அர்த்தப்படுத்தும். ஆகவே எப்படி நின்றாலும் நிற்பதுதானே அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதைக் குறிக்கும். இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில், மரியாதைக்குரிய பார்வையாளர்களாக மட்டுமே இருக்க விரும்புகிறவர்கள் அமைதலாக உட்கார்ந்திருப்பார்கள். ஆனால் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி ஆரம்பிக்கையில் வகுப்பினர் ஏற்கெனவே நின்றுகொண்டிருந்தால் என்ன செய்வது? அந்த சந்தர்ப்பத்தில் நாம் தொடர்ந்து நிற்பது அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதைக் குறிக்காது.
ஒருவேளை கொடியை ‘சல்யூட்’ செய்யாமல் வெறுமனே பிடித்திருக்கும்படி கேட்கப்பட்டால் என்ன செய்வது? அதாவது ஓர் அணிவகுப்பிலோ வகுப்பறையிலோ வேறு இடங்களிலோ, மற்றவர்கள் ‘சல்யூட்’ செய்யும்படி நாம் கொடியை தூக்கிப் பிடிக்குமாறு கேட்கப்படுகையில் என்ன செய்வது? அதற்கு சம்மதித்தால், ‘விக்கிரகாராதனையிலிருந்து விலகி ஓடுங்கள்’ என்ற பைபிள் கட்டளைக்கு கீழ்ப்படிவதற்கு பதிலாக, அந்த நிகழ்வின் மையத்திலேயே இருப்பதை அர்த்தப்படுத்தும். தேசபக்திமிக்க அணிவகுப்புகளில் கலந்துகொள்ளும் விஷயத்திலும் இதுவே உண்மை. அவ்வாறு கலந்துகொள்கையில், அணிவகுப்பு எதற்கு மரியாதை செலுத்துகிறதோ அதை ஆதரிப்பதாக அர்த்தப்படுத்தும் என்பதால் உண்மை கிறிஸ்தவர்கள் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு அதிலிருந்து விலகியிருக்கின்றனர்.
தேசிய கீதங்கள் ஒலிக்கையில், அதிலுள்ள உணர்ச்சிகளை தானும் பகிர்ந்துகொள்வதாக காட்டுவதற்கு பொதுவாக ஒரு நபர் செய்ய வேண்டியதெல்லாம் எழுந்து நிற்பதே. அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் கிறிஸ்தவர்கள் எழுந்து நிற்காமல் தொடர்ந்து உட்கார்ந்திருக்கிறார்கள். ஆனால் தேசிய கீதம் ஒலிக்கையில் அவர்கள் ஏற்கெனவே நின்றுகொண்டிருந்தார்கள் என்றால், உட்காருவதற்கு விசேஷ முயற்சி எடுக்க வேண்டியதில்லை. அந்த சந்தர்ப்பத்தில் தேசிய கீதத்திற்காகவே அவர்கள் எழுந்து நின்றதாக அர்த்தப்படுத்தாது. மறுபட்சத்தில், அனைவரும் எழுந்துநின்று பாடும்படி கேட்கப்படுகையில், பாடாமல் மரியாதைக்காக வெறுமனே எழுந்து நிற்கலாம்; அப்போது அப்பாடலின் கருத்துக்களை ஏற்றுக்கொள்வதாக அர்த்தமாகாது.
‘நல்மனசாட்சியுடையவர்களாக இருங்கள்’
பூஜிப்பதற்காக மனிதன் பயன்படுத்தும் பொருட்களுக்கு சக்தி இல்லாததை விவரித்த பிறகு, “அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப் போலவே இருக்கிறார்கள்” என சங்கீதக்காரன் சொன்னார். (சங்கீதம் 115:4-8) அப்படியென்றால், தேசியக் கொடிகள் போன்ற வணக்கத்திற்குரிய பொருட்களை உற்பத்தி செய்வதோடு நேரடியாக சம்பந்தப்பட்டுள்ள எவ்வித பணியிலும் ஈடுபடுவது யெகோவாவின் வணக்கத்தாருக்கு ஏற்றதல்ல என்பதில் சந்தேகமில்லை. (1 யோவான் 5:21) கொடியையோ அதனால் பிரிதிநிதித்துவம் செய்யப்படுவதையோ அல்ல, ஆனால் யெகோவாவை மட்டுமே வணங்குவதாக கிறிஸ்தவர்கள் மரியாதைக்குரிய விதத்தில் காட்ட வேண்டிய மற்ற சூழ்நிலைகளும் வேலை செய்யும் இடத்தில் எழலாம்.
உதாரணமாக, வேலைக்கு அமர்த்தியிருப்பவர் ஒரு கட்டடத்தில் வைக்கப்பட்டிருக்கும் கொடியை ஏற்றுமாறோ இறக்குமாறோ நம்மிடம் கேட்கலாம். அதைச் செய்வதா கூடாதா என்பது தனிப்பட்ட நபர் அந்த சூழ்நிலையை கருதும் விதத்தைப் பொறுத்தது. கூடியிருப்பவர்கள் அட்டென்ஷனில் நிற்கும்படியோ கொடியை ‘சல்யூட்’ செய்யும்படியோ எதிர்பார்க்கப்படும் ஒரு விசேஷ நிகழ்ச்சியில் கொடியை ஏற்றுவதும் இறக்குவதும் அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதைக் குறிக்கும்.
ஆனால் எந்த வித விழாவோ விசேஷ நிகழ்ச்சியோ நடக்காதபோது கொடியை ஏற்றுவதும் இறக்குவதும், கட்டடத்தை உபயோகத்திற்காக ஆயத்தப்படுத்துவது, கதவுகளை பூட்டுவது அல்லது திறப்பது, ஜன்னல்களை மூடுவது அல்லது திறந்துவைப்பது போன்ற சாதாரண செயல்களுக்கு ஒப்பாகவே இருக்கும். இந்த சந்தர்ப்பங்களில் கொடி வெறுமனே நாட்டுச் சின்னமாகவே இருக்கிறது; மற்ற அன்றாட பணிகளை போலவே கொடியை ஏற்றுவதும் இறக்குவதும், பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட மனசாட்சியின் அடிப்படையில் அவரவர் செய்ய வேண்டிய தீர்மானமே. (கலாத்தியர் 6:5) கொடியை ஏற்றுவதும் இறக்குவதுமான பணியை தன்னுடன் வேலை பார்க்கும் வேறொருவரை செய்ய சொல்லும்படி தன் சூப்பர்வைசரிடம் கேட்டுக்கொள்ள ஒரு கிறிஸ்தவரின் மனசாட்சி தூண்டுவிக்கலாம். இன்னொரு கிறிஸ்தவரின் மனசாட்சியோ, எந்த விசேஷ நிகழ்ச்சியும் கொண்டாடப்படாத வரையில் கொடியை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் சம்மதிக்க அனுமதிக்கலாம். மெய் வணக்கத்தார் எந்தத் தீர்மானத்தை எடுத்தாலும், கடவுளுக்குமுன் ‘நல்மனசாட்சியுடையவர்களாக இருக்க’ வேண்டும்.—1 பேதுரு 3:16.
முனிசிப்பல் ஆபீஸுகளையும் பள்ளிகளையும் போன்ற பொது கட்டடங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டிருக்கலாம்; அப்படிப்பட்ட கட்டடங்களில் இருப்பதை அல்லது வேலை செய்வதை பைபிள் ஆட்சேபிப்பதில்லை. ஸ்டாம்ப்புகளில், வாகனங்களின் லைசன்ஸ் ப்ளேட்டுகளில், அல்லது அரசால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் கொடியின் சின்னம் பதிக்கப்பட்டிருக்கலாம். அப்படிப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதுதானே தனி நபர்கள் தேசபக்தி செயல்களில் ஈடுபடுவதாக அர்த்தப்படுத்தாது. இந்தச் சந்தர்ப்பங்களில் கொடியோ அதன் சின்னமோ அவ்விடங்களில் இருப்பதுதானே ஒரு பிரச்சினையல்ல, அதை எப்படி கருதி நடக்கிறோம் என்பதே முக்கியம்.
ஜன்னல்களில், கதவுகளில், கார்களில், மேஜைகளில், அல்லது மற்ற பொருட்களில் நாம் பொதுவாக கொடிகளை பார்க்கலாம். கொடியின் உருவம் பிரிண்ட் செய்யப்பட்ட ஆடைகள் விற்பனை செய்யப்படுகின்றன. சில நாடுகளில் இப்படிப்பட்ட ஆடைகளை அணிவது சட்ட விரோதமானது. அது சட்ட விரோதமானதாக இல்லாவிட்டாலும், அதை அணிவது இந்த உலகத்தோடு நமக்கிருக்கும் உறவைப் பற்றி எதைக் காட்டும்? “நான் உலகத்தானல்லாதது போல, அவர்களும் உலகத்தாரல்ல” என இயேசு கிறிஸ்து தம்மை பின்பற்றியவர்களைக் குறித்து சொன்னார். (யோவான் 17:16) அப்படிப்பட்ட செயல் உடன் விசுவாசிகள் மீது என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கும் கவனம் செலுத்த வேண்டும். சிலருடைய மனசாட்சியை அது புண்படுத்துமா? விசுவாசத்தில் நிலைத்திருக்க வேண்டுமென்ற அவர்களுடைய உறுதியை அது அசைத்துவிடுமா? ‘நீங்கள் குற்றமற்றவர்களாகவும், மற்றவர்களை இடறலடையச் செய்யாதவர்களாகவும் இருக்கும்படி அதிமுக்கியமான காரியங்களை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்’ என கிறிஸ்தவர்களுக்கு பவுல் அறிவுரை வழங்கினார்.—பிலிப்பியர் 1:10, NW.
‘எல்லாரிடத்திலும் சாந்தமாயிருங்கள்’
உலக நிலைமைகள் சீரழிந்துவரும் இந்தக் ‘கொடிய காலங்களில்’ தேசப்பற்று உணர்ச்சிகளும் தீவிரமடையுமென தோன்றுகிறது. (2 தீமோத்தேயு 3:1) யெகோவாவை நேசிப்பவர்கள், இரட்சிப்பு அவராலேயே கிடைக்கும் என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. அவர் தனிப்பட்ட பக்திக்கு பாத்திரர். இயேசுவின் அப்போஸ்தலர்கள், யெகோவாவின் சித்தத்திற்கு முரணாக நடந்துகொள்ளும்படி கேட்கப்பட்டபோது, “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது” என பதிலளித்தார்கள்.—அப்போஸ்தலர் 5:29.
‘கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டை பண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனாக’ இருக்க வேண்டுமென அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (2 தீமோத்தேயு 2:24) இவ்வாறு கிறிஸ்தவர்கள் கொடியை வணங்குவதையும் தேசிய கீதத்தைப் பாடுவதையும் குறித்து தனிப்பட்ட தீர்மானங்கள் எடுக்கையில் பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட தங்கள் மனசாட்சியை சார்ந்திருக்கிறார்கள்; அதோடு சமாதானத்தோடும் மரியாதையோடும் சாந்தத்தோடும் நடந்துகொள்ள முயலுகிறார்கள்.
[பக்கம் 23-ன் படம்]
மூன்று எபிரெயர்கள் உறுதியோடு அதேசமயத்தில் மரியாதையோடு கடவுளைப் பிரியப்படுத்தும் வகையில் நடந்துகொண்டார்கள்
[பக்கம் 24-ன் படம்]
தேசப்பற்றுமிக்க நிகழ்ச்சியில் ஒரு கிறிஸ்தவர் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?