ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
ராஜ்ய மன்றத்திற்கு கிடைத்த ‘மெடல்’
“இயற்கைக் காட்சி அமைக்கும் ஆண்டு” என 2000-ம் ஆண்டை பின்லாந்து சுற்றுப்புற சூழல் அமைச்சகம் அறிவித்தது. “பச்சை பசேலென காட்சிதரும் சுற்றுப்புற சூழல் நமது அன்றாட வாழ்க்கையையும் ஆரோக்கியத்தையும் முன்னேற்றுவிக்கிறது என்பதை நம் அனைவருக்கும் நினைப்பூட்டவே இந்த ஆண்டை இயற்கைக் காட்சி அமைக்கும் ஆண்டாக தேர்ந்தெடுத்திருக்கிறோம்” என அமைப்பாளர்களில் ஒருவர் குறிப்பிட்டார்.
ஜனவரி 12, 2001 அன்று பின்லாந்து இயற்கைக் காட்சி தொழில்துறைகள் கழகத்திடமிருந்து பின்லாந்திலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திற்கு ஒரு கடிதம் வந்தது. டிக்குரிலாவில் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்தின் சுற்றுப்புறங்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்ததாலும் அதன் தோட்டம் அழகாக அமைக்கப்பட்டிருந்ததாலும் இயற்கைக் காட்சி அமைக்கும் ஆண்டிற்கான மெடல்களில் ஒன்று அதற்கு வழங்கப்பட்டிருப்பதாக அந்தக் கடிதம் விளக்கியது. “கோடையிலும் சரி குளிர் காலத்திலும் சரி, ராஜ்ய மன்றத்தின் சுற்றுப்புற தோற்றம் ரம்மியமாகவும் கலை நயத்துடனும் உயர் தரமாகவும் இருக்கிறது” என்றும் அந்தக் கடிதத்தில் சொல்லப்பட்டிருந்தது.
பின்லாந்தில் டம்பியரிலுள்ள ரோஸன்டால் ஹோட்டலில் யெகோவாவின் சாட்சிகளுக்கு இந்த மெடல் வழங்கப்பட்டது; இந்நிகழ்ச்சிக்கு 400 தொழில்முறை நிபுணர்களும் தொழிலதிபர்களும் வருகை தந்திருந்தனர். பின்லாந்து இயற்கைக் காட்சி தொழில்துறைகள் கழகம் ஒரு பத்திரிகை செய்தியையும் வெளியிட்டது, அதில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது: “இந்நாட்டில் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிட்டத்தட்ட எல்லா ராஜ்ய மன்றங்களுமே அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் சுற்றுச் சூழலை பராமரிப்பது அந்த வழியாக கடந்துசெல்லும் எவருடைய கண்ணிலும் படாமல் இல்லை. டிக்குரிலாவிலுள்ள ராஜ்ய மன்றத்தில் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ள தோட்டம் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. கட்டிடமும் சுற்றுப்புறமும் அமைதியையும் சமநிலையையும் பறைசாற்றுகின்றன.”
பின்லாந்தில் 233 ராஜ்ய மன்றங்கள் இருக்கின்றன, இவற்றில் பெரும்பாலானவை அழகிய தோட்டங்களால் சூழப்பட்டுள்ளன. ஆனால் இந்த இடங்களுக்கு உண்மையிலேயே அழகு சேர்ப்பது, இவை மெய் வணக்கம் மற்றும் பைபிள் கல்வியின் மையங்களாக இருப்பதே. உலகம் முழுவதிலும் உள்ள 60 லட்சத்திற்கும் மேற்பட்ட யெகோவாவின் சாட்சிகளுக்கு ராஜ்ய மன்றம்—எல்லா வசதியுடன் இருந்தாலும்சரி எளிமையாக இருந்தாலும்சரி—மிகவும் நேசத்திற்குரிய இடமாகும். அதனால்தான் அவர்கள் ஊக்கத்தோடும் அன்போடும் அவற்றை பராமரிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். ராஜ்ய மன்றங்களின் வாசற்கதவுகள் உங்கள் அனைவருக்கும் திறந்தே இருக்கின்றன!