அயல் நாட்டில் பிள்ளைகளை வளர்த்தல்—சுமைகளும் சுகங்களும்
லட்சக்கணக்கானோர் புது வாழ்க்கை ஆரம்பிக்கும் கனவுகளோடு அயல் நாட்டில் குடியேறுகிறார்கள். வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்து குடியேறியவர்கள் ஐரோப்பாவில் 2 கோடிக்கும் மேற்பட்டோர் உள்ளனர்; எங்கெங்கோ பிறந்து ஐக்கிய மாகாணங்களை சொந்த வீடாக சொந்தம் கொண்டாடுவோர் 2 கோடியே 60 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஆவர்; அதே சமயத்தில் ஆஸ்திரேலியாவின் மொத்த ஜனத்தொகையில் 21 சதவீதத்திற்கும் அதிகமானோர் வேற்று நாட்டு மண்ணில் பிறந்தவர்களே. பெரும்பாலும், அயல் நாடுகளில் குடியேறியிருக்கும் குடும்பங்கள் புதிய மொழியைக் கற்க வேண்டும், அத்துடன் புதிய கலாச்சாரத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளவும் வேண்டும்.
அநேகமாக, புதியதோர் நாட்டில் குடிபுகும் பிள்ளைகள் அந்நாட்டு மொழியை வெகு சீக்கிரம் கற்றுக்கொண்டு அம்மொழியிலேயே சிந்திக்கவும் ஆரம்பித்துவிடுவர். ஆனால் அவர்கள் பெற்றோருக்கோ மொழியைக் கற்றுக்கொள்ள வெகுநாட்கள் ஆகலாம். புதிதான ஒரு நாட்டில் மொழி பிரச்சினைகளால், பெற்றோரும் பிள்ளைகளும் பேச்சுத்தொடர்பு கொள்வதில் இடைவெளி ஏற்படலாம்; இதை சரிக்கட்டுவது கடினம்.
இப்படியாக புதிய மொழி, பிள்ளைகளின் சிந்திக்கும் திறனை பாதிப்பதோடு அந்நாட்டுப் புதிய கலாச்சாரம் அவர்கள் உணரும் விதத்தையும் பாதிக்கலாம். பிள்ளைகள் பேசுகிற, நடந்துகொள்கிற விதத்தை பெற்றோர் புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கலாம். ஆகவே, அயல் நாட்டில் குடியேறியுள்ள பெற்றோர், “கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும்” தங்கள் பிள்ளைகளை வளர்க்க முயலுகையில், புதுப்புது பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்.—எபேசியர் 6:4.
மனதையும் இருதயத்தையும் எட்டுவதில் சிரமம்
பைபிள் சத்தியமெனும் ‘சுத்தமான பாஷையை’ பிள்ளைகளுக்கு கற்பிக்கும் ஆவலும் பொறுப்பும் கிறிஸ்தவ பெற்றோருக்கு உள்ளது. (செப்பனியா 3:9) ஆனால், பிள்ளைகளுக்கு தங்கள் பெற்றோருடைய மொழியில் கொஞ்சம் அறிவு மட்டுமே இருப்பதாகவும், பிள்ளைகளுக்கு நன்கு தெரிந்த மொழியில் பலன்தரும் விதத்தில் அவர்களுடன் உரையாட பெற்றோருக்கு முடியவில்லை என்பதாகவும் வைத்துக்கொள்ளுங்கள்; அப்போது பெற்றோரால் யெகோவாவின் கட்டளைகளை பிள்ளைகளின் இதயத்தில் எப்படி ஆழப் பதிய வைக்க முடியும்? (உபாகமம் 6:7) பெற்றோர் சொல்லும் வார்த்தைகள் பிள்ளைகளுக்குப் புரிந்தாலும் அவர்கள் சொல்ல வரும் விஷயம் பிள்ளைகளின் இருதயத்தை சென்று எட்டாவிட்டால் ஒரு விதத்தில் அவர்கள் தங்கள் சொந்த வீட்டிலேயே அந்நியர் போல் இருப்பர்.
தென் அமெரிக்காவிலிருந்த பேத்ரோவும் சான்ட்ராவும் இப்போது ஆஸ்திரேலியாவில் குடியேறியிருக்கிறார்கள்; டீனேஜிலிருக்கும் தங்கள் இரண்டு பையன்களை வளர்ப்பதில் இதே சிரமத்தை அவர்கள் எதிர்ப்படுகிறார்கள்.a “ஆவிக்குரிய விஷயங்களைக் கலந்து பேசுகையில், உள்ளமும் உணர்ச்சிகளும் அதில் உட்பட்டுள்ளன. ஆழமான, அதிக அர்த்தம் நிறைந்த கருத்துக்களை தெரிவிக்க வேண்டியிருப்பதால், புதிய மொழியில் நிறைய வார்த்தைகளை தெரிந்திருப்பது அவசியம்” என்று பேத்ரோ சொல்கிறார். “தாய்மொழியை தண்ணீர் பட்ட பாடமாய் எங்கள் பிள்ளைகள் தெரிந்திராவிட்டால், அவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கை ரொம்பவே பாதித்துவிடும். சத்தியத்தை ஆழமாகப் புரிந்துகொள்ளவும் அதை போற்றவும் தாங்கள் கற்றுக்கொள்பவற்றின் அடிப்படை நியமங்களை அறிந்துகொள்ளவும் முடியாமல் போகலாம். அப்போது அவர்கள் ஆவிக்குரிய பகுத்தறிவைப் பெறுவது தடைபடும் என்பதால் யெகோவாவுடன் அவர்களது உறவும் பாதிக்கப்படலாம்” என்று சான்ட்ராவும் சொல்கிறார்.
ஞானப்பிரகாசமும் ஹெலனும் இலங்கையிலிருந்து சென்று ஜெர்மனியில் குடியேறியவர்கள்; இப்பொழுது அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். “எங்கள் பிள்ளைகள் ஜெர்மன் மொழியை கற்றுக்கொள்வதோடுகூட தாய்மொழியில் பேசவும் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டுமென நினைக்கிறோம். ஏனெனில் அவர்கள் தங்கள் உணர்ச்சிகளை எங்களிடம் தெரிவிப்பதும் மனந்திறந்து எங்களிடம் பேசுவதும் அவசியம்” என அவர்கள் ஒத்துக்கொள்கிறார்கள்.
மிகல்லும் கார்மெனும் உருகுவேயில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு மாறிச் சென்றவர்கள். அவர்கள் இவ்வாறு சொல்கிறார்கள்: “எங்களைப் போன்ற நிலையிலுள்ள பெற்றோர் கடினமாய் உழைக்க வேண்டும். ஒன்று, புதிய மொழியை பெற்றோர் நன்கு கற்றுக்கொள்ள வேண்டும், அப்பொழுதுதான் அம்மொழியில் ஆவிக்குரிய காரியங்களைப் புரிந்துகொள்ளவும் அவற்றை பிள்ளைகளுக்கு விளக்கவும் முடியும்; அல்லது தங்கள் தாய்மொழியில் பிள்ளைகள் கரைகண்டவர்களாவதற்கு பெற்றோர் அவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.”
குடும்பத் தீர்மானம்
வேறொரு நாட்டிற்குச் சென்று குடியேறியுள்ள எந்தவொரு குடும்பத்தின் ஆவிக்குரிய நலனுக்கும் முக்கியமாக தேவைப்படுவது, அந்தக் குடும்பத்தினர் எந்த மொழியில் ‘கர்த்தரால் போதிக்கப்பட’ விரும்புகின்றனர் என்பதை தீர்மானிப்பதாகும். (ஏசாயா 54:13) குடும்பத்தாரின் சொந்த மொழியில் கூட்டங்கள் நடைபெறும் சபை அருகில் இருந்தால், அதற்கு அவர்கள் செல்ல தீர்மானிக்கலாம். அல்லது அவர்கள் மாறிச் சென்றுள்ள நாட்டின் முக்கிய மொழியில் கூட்டங்கள் நடைபெறும் சபைக்குச் செல்லவும் விரும்பலாம். என்னென்ன அம்சங்களின் அடிப்படையில் தீர்மானம் எடுக்கலாம்?
தீமிட்ரியாஸும் பட்ருலாவும் சைப்ரஸிலிருந்து சென்று இங்கிலாந்தில் குடியேறியவர்கள், ஐந்து பிள்ளைகளை வளர்த்தவர்கள். தீர்மானம் எடுக்க தங்களுக்கு எது உதவியதென அவர்கள் சொல்கிறார்கள்: “ஆரம்பத்தில் எங்கள் குடும்பம் கிரேக்க மொழியில் கூட்டங்கள் நடக்கும் சபைக்கு சென்றது. இது பெற்றோராகிய எங்களுக்கு ரொம்ப வசதியாக இருந்தது என்னவோ உண்மைதான்; ஆனால் அது ஆவிக்குரிய ரீதியில் எங்கள் பிள்ளைகள் வளர முட்டுக்கட்டையாக இருந்தது. அடிப்படையில் அவர்களுக்கு கிரேக்க மொழி தெரிந்திருந்த போதிலும் ஆழமான கருத்துக்களை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. இது அவர்களுடைய ஆவிக்குரிய பின்னடைவிலிருந்து தெளிவானது. ஆங்கில மொழியில் கூட்டங்கள் நடக்கும் சபைக்கு நாங்கள் குடும்பமாக மாறிச் சென்றோம், எங்கள் பிள்ளைகளுக்கு கைமேல் பலன் கிடைத்ததை உடனடியாக காண முடிந்தது. அவர்கள் ஆவிக்குரிய பிரகாரமாய் பலப்படுத்தப்பட்டுள்ளார்கள். வேறொரு சபைக்கு மாறிச் செல்ல தீர்மானிப்பதென்பது சாதாரண விஷயமல்ல; ஆனால் எங்களைப் பொறுத்ததில் அதுவே ஞானமானதாய் இருந்தது.”
என்றாலும் அந்தக் குடும்பத்தில் தாய்மொழியின் மீதும் ஒரு பிடிப்பு இருந்தது; அதனால் கிடைத்த பலன்கள் ஏராளம். அவர்களுடைய பிள்ளைகள் இவ்வாறு சொல்கிறார்கள்: “ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை தெரிந்து வைத்திருப்பதால் நிறைய நன்மையே. எங்களுக்கு நன்கு தெரிந்த மொழி ஆங்கிலம்தான்; ஆனாலும் கிரேக்க மொழியையும் தெரிந்திருப்பது, பலமான, அன்யோன்யமான குடும்ப உறவுக்கு—குறிப்பாக எங்கள் தாத்தா பாட்டியோடு சுமுகமான உறவுக்கு—வழிசெய்திருக்கிறது. அயல் நாட்டிலிருந்து வந்து குடியேறியவர்களிடம் அதிக தயவாய் நடந்துகொள்ள உதவியதோடு நாங்கள் இன்னொரு மொழியைக் கற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையையும் அளித்தது. ஆகவே நாங்கள் பெரியவர்களான போது அல்பேனியன் மொழி பேசும் சபைக்கு உதவுவதற்காக குடும்பமாக குடிமாறிச் சென்றோம்.”
கிரிஸ்டஃபரும் மார்கரீட்டாவும்கூட சைப்ரஸிலிருந்து இங்கிலாந்துக்கு வந்து குடியேறியவர்கள்; அங்கு மூன்று பிள்ளைகளை வளர்த்தார்கள். அவர்கள் கிரேக்க மொழியில் கூட்டங்கள் நடக்கும் சபைக்கு ஆதரவளிக்க தீர்மானித்தார்கள். கிரேக்க மொழியில் கூட்டங்கள் நடக்கும் சபையில் மூப்பராக சேவை செய்யும் அவர்களுடைய மகன் நீக்காஸ் இவ்வாறு சொல்கிறார்: “கிரேக்க மொழி சபை புதிதாக உருவாக்கப்பட்டபோது நாங்கள் அங்கு செல்ல தூண்டுதல் கிடைத்தது. இதை தேவராஜ்ய நியமிப்பாகவே நாங்கள் கருதினோம்.”
மார்கரீட்டா இப்போது குறிப்பிடுவதாவது: “எங்கள் இரண்டு பையன்களில் ஒருவனுக்கு ஏழு வயதும் இன்னொருவனுக்கு எட்டு வயதும் ஆனபோது, தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் இருவரும் சேர்ந்தார்கள். அவர்களுக்கு கிரேக்க மொழி அரைகுறையாக தெரிந்திருப்பது குறித்து எங்களுக்கு ஒரே கவலையாக இருந்தது. என்றாலும் ஒவ்வொரு முறை பேச்சு கொடுக்க நியமிப்பு கிடைக்கையிலும் குடும்பத்திற்கான நியமிப்பாக அதை கருதினோம்; அவர்களுடைய பேச்சுக்களை தயாரிப்பதில் உதவ அநேக மணிநேரம் செலவிட்டோம்.”
அவர்கள் மகள் ஜோஆனா இவ்வாறு சொல்கிறார்: “அப்பா எங்களுக்கு கிரேக்க மொழியை சொல்லிக் கொடுக்கையில், வீட்டில் இருந்த பிளாக்போர்டில் கிரேக்க அட்சரங்களை ஒவ்வொன்றாக எழுதுவார்; நாங்கள் அதை பிழையின்றி கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. ஒரு மொழியைக் கற்பதற்கு அநேகருக்கு பல வருடம் எடுக்கும், ஆனால் அம்மாவும் அப்பாவும் உதவியதால் நாங்கள் சீக்கிரத்திலேயே கிரேக்க மொழியை கற்றுக்கொண்டோம்.”
சில குடும்பங்கள் தங்கள் மொழியில் கூட்டங்கள் நடக்கும் சபைக்கு செல்ல விரும்புகின்றன; ஏனெனில் தாய்மொழியில் கற்பிக்கப்பட்டால்தான் ‘ஆவிக்குரிய விவேகத்தை’ விருத்தி செய்யவும் மேன்மேலும் வளரவும் முடியும் என்று பெற்றோர் உணருகின்றனர். (கொலோசெயர் 1:9, 10; 1 தீமோத்தேயு 4:13, 15) அல்லது அந்நாட்டிற்கு புதிதாக குடியேறியுள்ளவர்கள் சத்தியத்தைக் கற்றுக்கொள்ள உதவுவதில் தங்களுக்கிருக்கும் மொழித்திறமையை தங்களுக்குக் கிடைத்த ஆசீர்வாதமாகவே கருதலாம்.
மறுபட்சத்தில், புதிய நாட்டில் அதன் முக்கிய மொழியில் நடைபெறும் சபை கூட்டங்களுக்கு செல்வது பலன் மிக்கதாக இருப்பதாய் ஒரு குடும்பம் கருதலாம். (பிலிப்பியர் 2:4; 1 தீமோத்தேயு 3:5) சூழ்நிலையை குடும்பத்தினரிடம் கலந்து பேசின பின்பு, ஜெபத்தோடு தீர்மானம் எடுப்பது குடும்பத் தலைவரின் பொறுப்பு. (ரோமர் 14:4; 1 கொரிந்தியர் 11:3; பிலிப்பியர் 4:6, 7) இப்படிப்பட்ட குடும்பங்களுக்கு என்னென்ன ஆலோசனைகள் உதவும்?
நடைமுறையான சில ஆலோசனைகள்
முன்பு குறிப்பிடப்பட்ட பேத்ரோவும் சான்ட்ராவும் சொல்வதாவது: “தாய்மொழியை மறந்துவிடாதிருக்க, வீட்டில் ‘ஸ்பானிஷ் மட்டுமே பேச வேண்டும்’ என்ற நியதியை ஏற்படுத்தியுள்ளோம். அதைக் கடைப்பிடிப்பது கஷ்டம்தான்; ஏனெனில் ஆங்கிலத்தில் பேசினால் பெற்றோராகிய எங்களுக்கு புரியும் என்று எங்கள் பிள்ளைகளுக்குத் தெரியும். ஆனாலும் அந்த நியதியை ஏற்படுத்தாமல் இருந்திருந்தால், ஸ்பானிஷ் மொழியை அவர்கள் சீக்கிரத்தில் அடியோடு மறந்துவிடுவார்கள்.”
முன்பு குறிப்பிடப்பட்ட மிகல்லும் கார்மெனும் இவ்வாறு சிபாரிசு செய்கிறார்கள்: “பெற்றோர் தாய்மொழியில் தவறாமல் குடும்ப படிப்பை நடத்தி, அன்றாடம் தினவசனத்தை கலந்தாலோசித்தால், பிள்ளைகள் அம்மொழியின் அடிப்படை அறிவைப் பெறுவதோடுகூட ஆவிக்குரிய கருத்துக்களை அந்த மொழியில் வெளிப்படுத்தவும் கற்றுக்கொள்வார்கள்.”
ஆலோசனையாக மிகல் மேலும் கூறுவதாவது: “சாட்சி கொடுப்பதை சுவாரஸ்யமானதாக ஆக்க முயலுங்கள். எங்கள் ஊழிய பிராந்தியத்தில் ஒரு பெரிய நகரின் பெரும் பகுதி அடங்கியிருக்கிறது; எங்கள் மொழி பேசுபவர்களை சந்திக்க காரில் நீண்ட நேரம் பயணிக்க வேண்டிருக்கிறது. அந்த நேரத்தை பைபிள் கேம்ஸ் விளையாடுவதற்கும் முக்கிய விஷயங்களை கலந்து பேசுவதற்கும் நாங்கள் பயன்படுத்திக் கொள்கிறோம். பலன்தரும் பல மறுசந்திப்புகளை செய்வதற்கு ஏற்ற வகையில் இந்த பயணங்களை நான் திட்டமிட முயலுகிறேன். அவ்வாறு செய்கையில், அந்த நாளின் முடிவில் பார்க்கையில், எங்கள் பிள்ளைகள் குறைந்தபட்சம் ஒரு சந்தர்ப்பத்திலாவது அர்த்தமுள்ள உரையாடலில் ஈடுபட முடிந்துள்ளது.”
கலாச்சார வேறுபாடுகளை சமாளித்தல்
கடவுளுடைய வார்த்தை இளைஞர்களுக்கு இவ்வாறு ஊக்கமூட்டுகிறது: “என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.” (நீதிமொழிகள் 1:8) என்றாலும், புத்திசொல்லும் அப்பாவின் தராதரமும், அம்மாவின் ‘போதகமும்’ இப்போது பிள்ளைகள் வாழ்ந்துவரும் கலாச்சாரத்திலிருந்து வேறுபட்ட ஒரு கலாச்சாரத்தின் செல்வாக்கை உடையதாக இருக்கலாம்; இதுபோன்ற சந்தர்ப்பங்களில் சிரமங்கள் ஏற்படலாம்.
தன் சொந்தக் குடும்பத்தை சீரும் சிறப்புமாய் நடத்துவது எப்படி என்பதை அந்தந்த குடும்பத் தலைவர் தீர்மானிக்க வேண்டும்; அநாவசியமாக வேறு குடும்பங்களின் செல்வாக்கு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். (கலாத்தியர் 6:4, 5) இருந்தபோதிலும், பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் தங்கு தடையில்லா பேச்சுத்தொடர்பு இருந்தால், புதுப்புது பழக்கங்களை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் சிரமத்தை குறைக்கலாம்.
என்றாலும், வளர்ந்த நாடுகளில் சர்வசாதாரணமாக காணப்படும் அநேக பழக்கவழக்கங்கள் கிறிஸ்தவர்களது ஆவிக்குரிய நலனுக்கு தீங்கை ஏற்படுத்துபவையாக இருக்கின்றன. பாலியல் ஒழுக்கக்கேடு, பேராசை, கலகம் இவையெல்லாம் பிரபல இசைகளிலும் பொழுதுபோக்கு அம்சங்களிலும் பெரும்பாலும் சித்தரிக்கப்படுகின்றன. (ரோமர் 1:26-32) மொழியைப் புரிந்துகொள்வதில் கிறிஸ்தவ பெற்றோருக்கு சிரமம் இருப்பதால் பிள்ளைகள் தேர்ந்தெடுக்கும் இசையையும் பொழுதுபோக்குகளையும் கட்டுப்படுத்தும் பொறுப்பை விட்டுக்கொடுத்துவிட முடியாது. பின்பற்றுவதற்கு வழிகாட்டியாய் அமையும் முக்கிய நியதிகளை அவர்கள் ஏற்படுத்த வேண்டும். என்றபோதிலும், இது ஒரு சவாலை முன்வைக்கலாம்.
கார்மென் இவ்வாறு கூறுகிறார்: “எங்கள் பிள்ளைகள் கேட்கும் பாடல் வரிகள் பெரும்பாலும் எங்களுக்குப் புரியாது. பாட்டின் மெட்டு கேட்க நன்றாக இருப்பதுபோல் தோன்றலாம், ஆனால் அப்பாட்டில் இரட்டை அர்த்தம் தரும் வார்த்தைகளோ, ஒழுக்கக்கேட்டை ஆதரிக்கும் கொச்சை வார்த்தைகளோ இருந்தால் அது எங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.” இந்தச் சூழ்நிலையை அவர்கள் எவ்வாறு சமாளித்திருக்கிறார்கள்? மிகல் சொல்கிறார்: “ஒழுக்கக்கேட்டை ஆதரிக்கும் இசையால் விளையும் அபாயங்களைப் பற்றி எங்கள் பிள்ளைகளுக்கு கற்பிக்க அதிக நேரத்தை செலவிடுகிறோம்; யெகோவா அங்கீகரிக்கும் இசையை அவர்கள் தெரிந்தெடுப்பதற்கு உதவ முயலுகிறோம்.” ஆம், கலாச்சார வேறுபாடுகளை சமாளிக்க விழிப்புணர்ச்சியும் நியாயத் தன்மையும் தேவை.—உபாகமம் 11:19, 20; பிலிப்பியர் 4:5, NW.
கிடைக்கும் பலன்கள்
அயல் நாட்டில் பிள்ளைகளை வளர்ப்பதற்கு அதிக நேரமும் முயற்சியும் தேவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் பெற்றோரும் பிள்ளைகளும் எடுக்கும் முயற்சிக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.
ஆஸாமும் அவர் மனைவி ஸாராவும் துருக்கியிலிருந்து ஜெர்மனிக்கு குடிமாறிச் சென்று அங்கு தங்கள் மூன்று பிள்ளைகளையும் வளர்த்தார்கள். அவர்களின் மூத்த மகன் இப்போது ஜெர்மனியிலுள்ள செல்ட்டர்ஸ் நகரில் யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தில் சேவை செய்கிறார். ஆஸாம் கூறுவதாவது: “இரண்டு கலாச்சாரங்களிலும் பெரிதும் விரும்பப்படும் முக்கிய பண்புகளை பிள்ளைகளால் வளர்க்க முடியும் என்பதே அவர்களுக்கு கிடைக்கும் மிகப் பெரிய பலனாகும்.”
அன்டோன்யோவும் லூடோனாட்யோவும் அங்கோலாவிலிருந்து ஜெர்மனிக்கு குடிமாறியவர்கள். அங்கு ஒன்பது பிள்ளைகளை வளர்க்கிறார்கள். இக்குடும்பத்தினருக்கு லிங்காலா, பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகள் தெரியும். அன்டோன்யோ சொல்வதாவது: “பல பாஷைகளைப் பேச முடிவதால் பல்வேறு நாட்டவருக்கு எங்கள் குடும்பத்தாரால் சாட்சி கொடுக்க முடிகிறது. சொல்லப்போனால் இதில் எங்களுக்கு கிடைக்கும் சுகமே அலாதிதான்.”
ஜாப்பனீஸ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளையும் அறிந்திருப்பது தங்களுக்கு பெரும் உதவியாக இருப்பதாக இங்கிலாந்துக்கு குடிமாறிய ஜப்பானிய தம்பதியரின் இரண்டு பிள்ளைகள் நினைக்கிறார்கள். அவர்கள் சொல்வதாவது: “இரண்டு மொழிகளையும் தெரிந்திருந்ததால் எங்களுக்கு வேலை கிடைத்தது. ஆங்கில மொழியில் நடந்த பெரிய மாநாடுகளிலிருந்து அதிக பலன் அடைந்திருக்கிறோம். அதே சமயத்தில், தேவை அதிகமுள்ள ஜாப்பனீஸ் மொழி சபையில் சேவை செய்யும் விசேஷ வாய்ப்பையும் நாங்கள் பெற்றிருக்கிறோம்.”
நீங்கள் வெற்றி பெறலாம்
வித்தியாசப்பட்ட கலாச்சாரத்தில் வசித்துக்கொண்டு, பிள்ளைகளை வளர்ப்பது பெரும் சவாலே; இதை கடவுளுடைய ஊழியர்கள் பைபிள் காலங்கள் முதற்கொண்டே எதிர்ப்பட்டுள்ளனர். எகிப்தில் வளர்க்கப்பட்டாலும், மோசேயின் பெற்றோர் வெற்றி பெற்றனர். (யாத்திராகமம் 2:9, 10) பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்ட எண்ணற்ற யூதர்கள் பிள்ளைகளை அங்கு வளர்த்தார்கள்; அந்த பிள்ளைகள் மெய் வணக்கத்தை மறுபடியும் ஸ்தாபிக்க எருசலேமுக்கு மனமுவந்து திரும்பி வந்தனர்.—எஸ்றா 2:1, 2, 64-70.
அதைப் போலவே இன்றும் கிறிஸ்தவ பெற்றோர் வெற்றி பெறலாம். “அப்பாவும் அம்மாவும் எங்களை சீராட்டி பாராட்டி வளர்த்ததால்தான் எங்கள் குடும்பம் பாசத்தில் பின்னிப்பிணைந்து உள்ளது; அவர்களுடன் மனம் விட்டுப் பேசி மகிழ்வதுதான் எங்கள் வழக்கம். யெகோவாவை சேவிக்கும் உலகளாவிய குடும்பத்தின் பாகமாக இருப்பது எங்களுக்கு சந்தோஷம்” என்று ஒரு தம்பதியரின் பிள்ளைகள் சொன்னார்கள்; அதைப் போலவே உங்கள் பிள்ளைகளும் சொல்லக் கேட்கும் வாய்ப்பைப் பெறலாம்.
[அடிக்குறிப்பு]
a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
[பக்கம் 24-ன் படம்]
வீட்டில் தாய் மொழியை மட்டுமே பேசினால் பிள்ளைகளுக்கு அம்மொழியின் அடிப்படை அறிவு கிட்டும்
[பக்கம் 24-ன் படம்]
இரு சாராருக்கும் தெரிந்த பொது மொழியில் பேசுவது, தாத்தா பாட்டிகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் இடையே உள்ள பந்தபாசத்தை பலமாக்குகிறது
[பக்கம் 25-ன் படம்]
பைபிளை உங்கள் பிள்ளைகளுடன் படிப்பது அவர்களது ‘ஆவிக்குரிய விவேகத்தை’ வளர்க்கிறது