ஒன்றுகூடி வருவதை விட்டுவிடாதிருங்கள்
“சிலர் வழக்கமாகவே நம் சபைக் கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை. நாம் அவ்வாறு செய்யலாகாது; ஒன்றுகூடி ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுவோமாக. இறுதிநாள் நெருங்கி வருகிறதைக் காண்கிறோம்; எனவே இன்னும் அதிகமாய் ஊக்கமூட்டுவோம்” என பைபிள் சொல்கிறது. (எபிரேயர் 10:25, பொது மொழிபெயர்ப்பு) மெய் வணக்கத்தார் “அன்பு செலுத்தவும் நற்செயல்கள் புரியவும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்”பவும் வழிபாட்டு தலத்திற்கு ஒன்றுகூடி வரவேண்டும் என்பது தெளிவாகிறது.—எபிரேயர் 10:24, பொ.மொ.
மேற்கூறப்பட்ட வார்த்தைகளை பொது சகாப்தம் முதல் நூற்றாண்டில் அப்போஸ்தலன் பவுல் எழுதிய சமயத்தில், யூதர்களின் வழிபாட்டு தலமாக எருசலேமில் பிரமாண்டமான ஆலயம் இருந்தது. ஜெப ஆலயங்களும் (synagogues) இருந்தன. “ஜெப ஆலயங்களிலேயும் யூதர்களெல்லாரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் [இயேசு] . . . உபதேசித்”தார்.—யோவான் 18:20.
ஒருவரையொருவர் ஊக்கமூட்டுவதற்கு ஒன்றுகூடி வரும்படி கிறிஸ்தவர்களுக்கு புத்தி சொன்னபோது எப்படிப்பட்ட இடங்களை பவுல் தன் மனதில் வைத்திருந்தார்? எருசலேமில் இருந்த ஆலய ஏற்பாட்டிற்கும் கிறிஸ்தவமண்டலத்தாருடைய பிரமாண்டமான கோயில்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? கிறிஸ்தவர்கள் என உரிமை பாராட்டுகிறவர்கள் மத்தியில் எப்பொழுது முதல் பிரமாண்டமான கட்டட அமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன?
‘கடவுளுடைய நாமத்திற்கு ஓர் ஆலயம்’
கடவுளை வணங்குவதற்குரிய ஓர் இடத்தைப் பற்றி முதன்முதலாக கொடுக்கப்பட்ட அறிவுரைகள் பைபிள் புத்தகமாகிய யாத்திராகமத்தில் இருக்கின்றன. தாம் தேர்ந்தெடுத்த ஜனங்களிடம்—இஸ்ரவேலரிடம்—‘வாசஸ்தலத்தை’ அல்லது ‘ஆசரிப்புக்கூடாரத்தைக்’ கட்டும்படி யெகோவா கட்டளையிட்டிருந்தார். உடன்படிக்கைப் பெட்டியையும் பல்வகை பரிசுத்த பாத்திரங்களையும் அதில் வைக்க வேண்டியிருந்தது. பொ.ச.மு. 1512-ல் அது கட்டி முடிக்கப்பட்டபோது ‘யெகோவாவின் மகிமை ஆசரிப்புக்கூடாரத்தை நிரப்பிற்று.’ நான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாக, அந்தக் கூடாரம் கடவுளை அணுகுவதற்கு அவர் செய்திருந்த ஏற்பாட்டில் ஒரு முக்கிய அம்சமாக விளங்கியது. (யாத்திராகமம், 25-27 அதிகாரங்கள்; 40:33-38) இந்தக் கூடாரத்தை ‘யெகோவாவின் ஆலயம்,’ என்றும் ‘யெகோவாவின் வீடு’ என்றும் பைபிள் குறிப்பிடுகிறது.—1 சாமுவேல் 1:9, 24, NW.
பிற்பாடு, எருசலேமில் தாவீது ராஜாவாக இருந்தபோது, யெகோவாவுக்கு மகிமையாக நிரந்தரமான ஒரு வீட்டைக் கட்ட வேண்டும் என்ற மிகுந்த ஆசையை அவர் தெரிவித்தார். ஆனால் தாவீது யுத்த வீரராக இருந்ததால், யெகோவா அவரிடம், “நீ என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்ட வேண்டாம்” என கூறினார். மாறாக, ஆலயம் கட்டுவதற்கு தாவீதின் குமாரனாகிய சாலொமோனை தேர்ந்தெடுத்தார். (1 நாளாகமம் 22:6-10) ஏழரை ஆண்டுகால கட்டுமானத்திற்குப் பிறகு, பொ.ச.மு. 1026-ல் அந்த ஆலயத்தை சாலொமோன் திறந்து வைத்தார். யெகோவா இந்தக் கட்டடத்தை அங்கீகரித்து, “நீ கட்டின இந்த ஆலயத்தில் என் நாமம் என்றைக்கும் விளங்கத்தக்கதாக, அதைப் பரிசுத்தமாக்கினேன்; என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் அங்கேயிருக்கும்” என்று கூறினார். (1 இராஜாக்கள் 9:3) இஸ்ரவேலர் உண்மைத்தன்மையுடன் நிலைத்திருக்கும் வரையில், அந்த வீட்டின் மீது யெகோவா தமது தயவை காட்டுவார். அவர்கள் நெறிபிறழ்கையிலோ அந்த இடத்திலிருந்து தமது தயவை விலக்கிவிடுவார், அந்தக் “கோவில் இடிந்த கற்குவியல் ஆகும்.”—1 இராஜாக்கள் 9:4-9, பொ.மொ.; 2 நாளாகமம் 7:16, 19, 20.
காலப்போக்கில், இஸ்ரவேலர் மெய் வணக்கத்திலிருந்து வழிவிலகிப் போயினர். (2 இராஜாக்கள் 21:1-5) ஆதலால் “[யெகோவா] அவர்கள்மேல் கல்தேயரின் ராஜாவை வரப்பண்ணினார்; . . . அவர்கள் தேவனுடைய ஆலயத்தைத் தீக்கொளுத்தி, எருசலேமின் அலங்கத்தை இடித்து, அதின் மாளிகைகளையெல்லாம் அக்கினியால் சுட்டெரித்து, அதிலிருந்த திவ்வியமான பணிமுட்டுகளையெல்லாம் அழித்தார்கள். பட்டயத்திற்குத் தப்பின மீதியானவர்களை அவன் பாபிலோனுக்குச் சிறைபிடித்துப் போனான்; . . . அங்கே அவர்கள் அவனுக்கும் அவன் குமாரருக்கும் அடிமைகளாயிருந்தார்கள்.” பைபிள் கூறுகிறபடி, இது பொ.ச.மு. 607-ல் சம்பவித்தது.—2 நாளாகமம் 36:15-21; எரேமியா 52:12-14.
ஏசாயா தீர்க்கதரிசி முன்னுரைத்தபடி, யூதர்களை பாபிலோனியரின் ஆதிக்கத்திலிருந்து விடுவிப்பதற்கு பெர்சிய ராஜாவாகிய கோரேசுவை கடவுள் எழுப்பினார். (ஏசாயா 45:1) 70 வருடகால சிறைவாசத்திற்குப் பிறகு, ஆலயத்தைத் திரும்ப கட்டுவதற்காக பொ.ச.மு. 537-ல் யூதர்கள் எருசலேமுக்குத் திரும்பிவந்தார்கள். (எஸ்றா 1:1-6; 2:1, 2; எரேமியா 29:10) கட்டுமான பணியில் தாமதம் ஏற்பட்டது, பிறகு ஒருவழியாக பொ.ச.மு. 515-ல் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு கடவுளுடைய தூய வணக்கம் மீண்டும் நிலைநாட்டப்பட்டது. இது சாலொமோன் கட்டிய ஆலயத்தின் மகிமைக்கு ஒத்ததாக இல்லாவிட்டாலும், அந்தக் கட்டடம் சுமார் 600 வருடங்களுக்கு நிலைத்திருந்தது. என்றாலும், யெகோவாவின் வணக்கத்தை இஸ்ரவேலர் புறக்கணித்துவிட்டதால் இந்த ஆலயமும் பழுதுபார்க்க முடியாத அளவுக்கு பாழடைந்துவிட்டது. இயேசு பூமிக்கு வந்தபோது, ஏரோது ராஜாவினால் அது படிப்படியாக மீண்டும் கட்டப்பட்டு வந்தது. இந்த ஆலயத்திற்கு என்ன ஏற்படவிருந்தது?
‘ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராது’
எருசலேமில் வீற்றிருந்த ஆலயத்தைக் குறிப்பிட்டு, இயேசு தமது சீஷர்களிடம் இவ்வாறு கூறினார்: “இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும்.” (மத்தேயு 24:1, 2) அந்த வார்த்தைகளுக்கு இசைவாக, நூற்றாண்டுகளாக கடவுளுடைய வணக்கத்திற்கு மையமாக அங்கீகரிக்கப்பட்ட அந்த இடம், யூதர்களுடைய கலகத்தை அடக்குவதற்கு வந்த ரோம சேனைகளால் பொ.ச. 70-ல் அழிக்கப்பட்டது.a அந்த ஆலயம் ஒருபோதும் மீண்டும் கட்டப்படவில்லை. பாறை மாடக்கோயில் என்றழைக்கப்படும் முஸ்லிம் கோயில் ஒன்று ஏழாவது நூற்றாண்டில் அங்கே ஸ்தாபிக்கப்பட்டது, யூதர்களுடைய வணக்க தலமாக விளங்கிய இந்த இடத்தில் இக்கோயிலே இன்று வரை குடிகொண்டிருக்கிறது.
இயேசுவை பின்பற்றியவர்கள் வணக்கத்திற்காக எங்கு செல்வார்கள்? யூத பின்னணியிலிருந்து வந்த ஆரம்பகால கிறிஸ்தவர்கள் சீக்கிரத்தில் அழிக்கப்படவிருந்த அந்த ஆலயத்தில் தொடர்ந்து கடவுளை வழிபடுவார்களா? யூதரல்லாத கிறிஸ்தவர்கள் கடவுளை எங்கே வழிபடுவார்கள்? கிறிஸ்தவமண்டலத்தின் கோயில்கள் அந்த ஆலயத்தை மாற்றீடு செய்யுமா? ஒரு சமாரிய பெண்ணுடன் இயேசு நடத்திய உரையாடல் இந்த விஷயத்தின் பேரில் உட்பார்வை அளிக்கிறது.
பல நூற்றாண்டுகளாக, சமாரியாவில் கெரிசிம் என்ற மலையில் இருந்த ஒரு பெரிய ஆலயத்தில் சமாரியர்கள் கடவுளை வழிபட்டு வந்தார்கள். “எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே தொழுதுகொண்டு வந்தார்கள்; நீங்கள் எருசலேமிலிருக்கிற ஸ்தலத்திலே தொழுதுகொள்ள வேண்டும் என்கிறீர்களே” என அந்த சமாரிய பெண் கூறினாள். அதற்கு இயேசு: “ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு, நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங் காலம் வருகிறது” என கூறினார். யெகோவாவை வழிபட கற்களால் கட்டப்பட்ட ஓர் ஆலயம் இனிமேலும் தேவையில்லை, ஏனென்றால் “தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும்” என இயேசு விளக்கினார். (யோவான் 4:20, 21, 24) அத்தேனே நகரவாசிகளிடம் பிற்பாடு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு கூறினார்: “உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை.”—அப்போஸ்தலர் 17:24.
ஆகவே, கிறிஸ்தவமண்டல கோயில்களுக்கும் கிறிஸ்தவ சகாப்தத்திற்கு முன்னர் இருந்த ஆலய ஏற்பாட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இத்தகைய இடங்களை ஸ்தாபிப்பதற்கு முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கும் எந்த காரணமும் இருக்கவில்லை. என்றபோதிலும், அப்போஸ்தலர்களுடைய மரணத்திற்குப்பின், முன்னறிவிக்கப்பட்டபடியே உண்மையான போதனைகளிலிருந்து விலகிச் செல்லுதல்—விசுவாசதுரோகம்—ஏற்பட்டது. (அப்போஸ்தலர் 20:29, 30) பொ.ச. 313-ல் ரோம பேரரசனாகிய கான்ஸ்டன்டைன் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே கிறிஸ்தவர்கள் என சொல்லிக்கொண்டவர்கள் இயேசு கற்பித்தவற்றிலிருந்து வழிவிலகிச் செல்ல ஆரம்பித்தனர்.
“கிறிஸ்தவ” மதத்தை ரோம புறமதத்துடன் இணைப்பதற்கு கான்ஸ்டன்டைன் அடிகோலினார். தி என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா இவ்வாறு கூறுகிறது: “கான்ஸ்டன்டைன் ரோமில் பிரமாண்டமான அளவில் மூன்று கிறிஸ்தவ ஆலயங்களை, அதாவது செ. பீட்டர், சான் பாவ்லோ ஃபியோரிலி மியூரா, லாட்டேரானோவில் எஸ். ஜோவானி ஆகியவற்றை கட்டுவதற்கு ஒப்புதல் அளித்தார். அவர் . . . கட்டடத்தை சிலுவை வடிவில் வடிவமைத்தார், இடைக்காலங்களில் மேற்கத்திய ஐரோப்பாவில் கட்டப்பட்ட எல்லா சர்ச்சுகளுக்கும் அதுவே தராதரமாக ஆனது.” ரோமில் திரும்ப கட்டப்பட்ட செ. பீட்டர் பேஸிலிக்கா இன்னமும் ரோமன் கத்தோலிக்க சர்ச்சின் மையமாக கருதப்படுகிறது.
“கிறிஸ்தவத்திற்கு முன்னான காலத்தில் [புறமத] ரோமில் சாதாரணமாக நிலவிய சில மத பழக்கவழக்கங்களையும் வணக்க முறைகளையும் இந்த சர்ச் ஏற்றுக்கொண்டது” என சரித்திராசிரியர் வில் டூரன்ட் கூறுகிறார். இதில் “பேஸிலிக்காவின் கட்டட அமைப்பும்” அடங்கும். 10-வது முதல் 15-வது நூற்றாண்டு வரை, சர்ச்சுகளும் கத்தீட்ரல்களும் அதிகமாக கட்டப்பட்டன, கட்டடக் கலைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இப்பொழுது கலைநுட்பமிக்க நினைவுச்சின்னங்களாக கருதப்படும் கிறிஸ்தவமண்டலத்தின் கட்டடங்களில் பெரும்பாலானவை அந்தச் சமயத்தில்தான் கட்டப்பட்டன.
சர்ச்சில் வழிபடுவதால் ஆன்மீக புத்துணர்வையும் ஊக்கமூட்டுதலையும் எல்லா சமயத்திலும் மக்கள் கண்டடைகிறார்களா? “எனக்கு சர்ச் என்றாலே செம அறுவைதான். மாஸ் அர்த்தமற்றதா இருந்துச்சு, அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைத்தாங்க, அதனால எனக்கு தேவைப்பட்ட எதுவுமே அங்கு கிடைக்கல. அது முடியும்போதுதான் அப்பாடான்னு இருக்கும்” என்று பிரேசிலைச் சேர்ந்த ஃபிரான்ஸிஸ்கூ கூறுகிறார். என்றாலும், உண்மையான விசுவாசிகள் ஒன்றாக கூடிவரும்படி கட்டளை கொடுக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் ஒன்றுகூடி வருவதற்குப் பின்பற்ற வேண்டிய ஏற்பாடு என்ன?
“அவர்களுடைய வீட்டிலே கூடிவருகிற சபை”
எவ்வாறு முதல் நூற்றாண்டு விசுவாசிகள் ஒன்றுகூடி வந்தனர் என்பதை ஆராய்வதன் மூலம் கிறிஸ்தவர்கள் ஒன்றுகூடி வருவதற்குரிய மாதிரியை அறிந்துகொள்ளலாம். அவர்கள் பொதுவாக தனிப்பட்டவர்களுடைய வீடுகளில் ஒன்றுகூடி வந்ததாக வேதாகமம் சுட்டிக்காட்டுகிறது. உதாரணமாக, அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “கிறிஸ்து இயேசுவுக்குள் என் உடன் வேலையாட்களாகிய பிரிஸ்கில்லாளையும் ஆக்கில்லாவையும் வாழ்த்துங்கள். அவர்களுடைய வீட்டிலே கூடிவருகிற சபையையும் வாழ்த்துங்கள்.” (ரோமர் 16:3, 5; கொலோசெயர் 4:15; பிலேமோன் 2) “சபை” (எக்லீஸியா) என்பதற்குரிய கிரேக்க வார்த்தை, கிங் ஜேம்ஸ் வர்ஷன் போன்ற ஆங்கில பைபிள்கள் சிலவற்றில் “சர்ச்” என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு பொதுவான நோக்கத்திற்கு தொகுதியாக ஆட்கள் ஒன்றுகூடி வருவதையே இந்தப் பதம் குறிக்கிறது, ஒரு கட்டடத்தை அல்ல. (அப்போஸ்தலர் 8:1; 13:1) மெய்க் கிறிஸ்தவர்களுடைய வழிபாட்டிற்கு கலை வேலைப்பாடுமிக்க கட்டடங்கள் தேவையில்லை.
ஆரம்பகால கிறிஸ்தவ சபைகளில் கூட்டங்கள் எவ்வாறு நடத்தப்பட்டன? கிறிஸ்தவ கூட்டத்தை குறிப்பதற்கு சீஷனாகிய யாக்கோபு சினாகோகென் என்ற ஒருவகை கிரேக்க வார்த்தையைப் பயன்படுத்துகிறார். (யாக்கோபு 2:2) இந்த கிரேக்க வார்த்தையின் அர்த்தம் “ஒன்றுகூடி வரச்செய்தல்” என்பதாகும்; எக்லீஸியா என்ற வார்த்தையும் இதற்கு மாற்றீடாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் காலங்கள் செல்லச் செல்ல, இந்த வார்த்தை கூட்டங்கள் நடைபெறும் இடம் அல்லது கட்டடம் என்ற அர்த்தத்தை கொடுக்க ஆரம்பித்தது. ஜெப ஆலயத்தில் (synagogues) என்ன நடைபெற்றது என்பதை ஆரம்பகால யூத கிறிஸ்தவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள்.b
யூதர்கள் வருடாந்தர பண்டிகைகளுக்காக எருசலேமில் கூடிவந்தபோதிலும், யெகோவாவைப் பற்றி கற்றுக்கொள்வதற்கும் நியாயப்பிரமாண சட்டத்தைப் பற்றிய கல்வியறிவைப் பெற்றுக்கொள்வதற்கும் உள்ளூர்களில் ஜெப ஆலயங்கள் இருந்தன. ஜெப ஆலயங்களில் நடத்தப்பட்ட கூட்டங்களில் ஜெபம் செய்வதும் வேதாகமத்தை வாசிப்பதும் அதற்கு விலாவாரியாக விளக்கம் கொடுப்பதும் புத்திமதி கூறுவதும் உட்பட்டிருந்தன. பவுலும் அவரோடிருந்த மற்றவர்களும் அந்தியோகியாவிலிருந்த ஒரு ஜெப ஆலயத்திற்கு சென்றபோது, “சகோதரரே, நீங்கள் ஜனங்களுக்குப் புத்திசொல்ல விரும்பினால் சொல்லுங்கள் என்று சொல்லும்படி ஜெப ஆலயத் தலைவர்கள் அவர்களிடத்தில் ஆள் அனுப்பினார்கள்.” (அப்போஸ்தலர் 13:15) ஆரம்பகால யூத கிறிஸ்தவர்கள் தனிப்பட்ட வீடுகளில் கூடிவந்தபோது, இதுபோன்ற ஒரு மாதிரியைத்தான் பின்பற்றினார்கள் என்பதில் சந்தேகமில்லை; வேதப்பூர்வமாக அறிவுறுத்தும் விதத்திலும் ஆவிக்குரிய விதத்தில் உற்சாகமூட்டும் விதத்திலும் அவர்கள் கூட்டங்களை நடத்தினார்கள்.
உற்சாகமூட்டுவதற்கு சபைகள்
பூர்வ கிறிஸ்தவர்களைப் போலவே, இன்று யெகோவாவின் சாட்சிகள் பைபிளிலிருந்து போதனையைப் பெறுவதற்கும் ஆரோக்கியமான கூட்டுறவை அனுபவித்து மகிழ்வதற்கும் எளிமையான வழிபாட்டு தலங்களில் ஒன்றுகூடி வருகிறார்கள். அநேக ஆண்டுகளாக அவர்கள் தனிப்பட்ட வீடுகளில்தான் கூடிவந்தார்கள், சில இடங்களில் இன்னமும் அப்படித்தான் செய்கிறார்கள். ஆனால் இப்பொழுது சபைகளின் எண்ணிக்கை 90,000-ஐ தாண்டிவிட்டது, அவர்கள் கூடுகிற முக்கிய இடங்கள் ராஜ்ய மன்றங்கள் என அழைக்கப்படுகின்றன. இந்தக் கட்டடங்கள் தோற்றத்திற்கு பகட்டாகவோ அல்லது சர்ச் போலவோ காணப்படுவதில்லை. அவை டாம்பீகமற்ற எளிமையான கட்டடங்கள், கடவுளுடைய வார்த்தையை செவிகொடுத்துக் கேட்டு கற்றுக்கொள்வதற்காக 100 முதல் 200 பேர் வரை வாராந்திர கூட்டங்களுக்கு கூடுவதற்கு ஏற்றவாறு இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
யெகோவாவின் சாட்சிகளுடைய பெரும்பாலான சபையினர் வாரத்திற்கு மூன்று முறை கூடிவருகிறார்கள். ஒரு கூட்டத்தில் தற்கால விஷயங்களின் பேரில் ஒரு பொதுப் பேச்சு கொடுக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து பைபிள் பொருளின் பேரில் அல்லது தீர்க்கதரிசனத்தின் பேரில் காவற்கோபுரம் பத்திரிகையைப் பயன்படுத்தி படிப்பு நடத்தப்படுகிறது. மற்றொரு கூட்டம், பைபிள் செய்தியை அளிப்பதற்கு பயிற்றுவிப்பை தரும் விதத்தில் வடிவமைக்கப்பட்ட ஒரு பள்ளி. இதற்குப் பிறகு, கிறிஸ்தவ ஊழியத்தை செய்வதற்கு நடைமுறை ஆலோசனைகளை வழங்குவதற்கென்று பிரத்தியேகமாக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கூட்டம் நடைபெறுகிறது. வாரத்திற்கு ஒரு முறை, தனிப்பட்ட வீடுகளில் சிறு தொகுதிகளாக பைபிள் படிப்பதற்கும் சாட்சிகள் ஒன்றுகூடி வருகிறார்கள். இந்தக் கூட்டங்கள் எல்லாவற்றிலும் பொது மக்கள் கலந்துகொள்ளலாம். ஒருபோதும் காணிக்கைகள் வசூலிக்கப்படுவதில்லை.
முன்பு குறிப்பிடப்பட்ட ஃபிரான்ஸிஸ்கூ என்பவர் ராஜ்ய மன்றத்தில் நடத்தப்படும் கூட்டங்கள் மிகவும் பிரயோஜனமாக இருப்பதைக் கண்டார். அவர் கூறுகிறார்: “நகரத்தின் மையத்தில் அமைந்த வசதியான கட்டடத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்திற்கு நான் முதல் தடவையாக சென்றேன், அந்தக் கூட்டம் என்னுடைய மனதைக் கவர்ந்தது. அங்கே ஆஜரானவர்கள் நட்போடு பழகினார்கள், அவர்கள் மத்தியில் அன்பு நிலவுவதை காண முடிந்தது. நான் மறுபடியும் செல்ல ஆவலாக இருந்தேன். சொல்லப்போனால், அது முதற்கொண்டு ஒரு கூட்டத்தையும் நான் தவறவிட்டதில்லை. இந்தக் கிறிஸ்தவ கூட்டங்கள் உற்சாகமூட்டுபவையாக இருக்கின்றன, அவை என்னுடைய ஆவிக்குரிய தேவையை பூர்த்தி செய்கின்றன. ஏதாவது காரணத்தால் சோர்வடைகையிலும் ராஜ்ய மன்றத்திற்கு செல்கிறேன், வீட்டிற்கு திரும்பும்போது உற்சாகத்துடன் வருவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.”
யெகோவாவின் சாட்சிகளுடைய கிறிஸ்தவ கூட்டங்களில் பைபிள் கல்வியும், உற்சாகமூட்டும் கூட்டுறவும், கடவுளைத் துதிப்பதற்கான வாய்ப்பும் உங்களுக்கு காத்திருக்கிறது. உங்களுடைய வீட்டிற்கு அருகிலுள்ள ராஜ்ய மன்றத்திற்கு செல்லும்படி உங்களை அன்புடன் அழைக்கிறோம். அப்படி சென்றால், அதற்காக சந்தோஷப்படுவீர்கள்.
[அடிக்குறிப்புகள்]
a அந்த ஆலயம் ரோமர்களால் முற்றிலும் தகர்க்கப்பட்டது. யூதர்கள் பலர் வெகு தூரத்திலிருந்து புலம்பல் சுவர் (Wailing Wall) என்ற இடத்திற்கு ஜெபிக்க வருவார்கள்; இது அந்த ஆலயத்தின் பாகமல்ல. இது ஆலய பிராகார மதிலின் ஒரு பாகம் மட்டுமே.
b எந்த ஆலயமும் இல்லாத சமயத்தில் 70 வருடகால பாபிலோனிய சிறையிருப்பின்போது அல்லது அங்கிருந்து திரும்பி வந்தப்பின் ஆலயம் மீண்டும் கட்டப்படுகையில் ஜெப ஆலயங்கள் தோன்றியதாக தெரிகிறது. முதல் நூற்றாண்டிற்குள், பாலஸ்தீனாவிலிருந்த ஒவ்வொரு பட்டணத்திலும் ஒரு ஜெப ஆலயமும், பெரிய நகரங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட ஜெப ஆலயங்களும் இருந்தன.
[பக்கம் 4, 5-ன் படங்கள்]
ஆசரிப்புக்கூடாரமும் பிற்பாடு ஆலயங்களும் யெகோவாவின் வணக்கத்திற்கு சிறந்த மையங்களாக விளங்கின
[பக்கம் 6-ன் படம்]
ரோமில் செ. பீட்டர் பேஸிலிக்கா
[பக்கம் 7-ன் படம்]
ஆரம்பகால கிறிஸ்தவர்கள் தனிப்பட்ட வீடுகளில் கூடிவந்தார்கள்
[பக்கம் 8, 9-ன் படங்கள்]
யெகோவாவின் சாட்சிகள் கிறிஸ்தவ கூட்டங்களை தனிப்பட்ட வீடுகளிலும் ராஜ்ய மன்றங்களிலும் நடத்துகிறார்கள்