தனக்கின்றி தானம்
“என்னை பிச்சைக்காரன் என்று நீங்கள் சொன்னாலும் பரவாயில்லை, நான் கவலைப்படப் போவதில்லை. இயேசுவுக்காகத்தானே பிச்சை எடுக்கிறேன்.” புராட்டஸ்டன்ட் ஊழியர் ஒருவர் வெளிப்படையாக சொன்ன இந்த வார்த்தைகள், மதத்திற்காக நிதி திரட்டுவது சம்பந்தமான சர்ச்சையை வலியுறுத்திக் காட்டுகின்றன. பிரபல மதங்கள் கணிசமான பண நன்கொடைகளையே சார்ந்திருப்பதாக தெரிகிறது. சம்பளம் கொடுக்க வேண்டும், கோயில்களை கட்ட வேண்டும், அவற்றை பராமரிக்க வேண்டும், பிரசங்கிகளுக்கு பண உதவி செய்ய வேண்டும். இதற்கெல்லாம் பணத்திற்கு எங்கே போவது?
அநேக சர்ச்சுகளுக்கு தசமபாகமே தீர்வாக இருக்கிறது.a “கடவுள் இந்தப் பூமியிலுள்ள தமது ராஜ்யத்திற்கு நிதியுதவி அளிக்கும் வழியே தசமபாகம்” என்கிறார் சுவிசேஷகரான நார்மன் ராபர்ட்சன். “அதுவே அவரது பொருளாதார அமைப்புமுறை, சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட உதவும் அமைப்புமுறை” என்றும் அவர் சொல்கிறார். கொடுக்கும் கடமை இருப்பதை பற்றி தன் ஆதரவாளர்களுக்கு அவர் எவ்வித தயக்கமுமின்றி நினைவூட்டுகிறார்; ‘வசதி இருக்கிறது என்பதற்காக கொடுக்கும் ஒன்றல்ல தசமபாகம். அது கீழ்ப்படிதலுக்குரிய செயல். தசமபாகம் கொடுக்கவில்லை என்றால், கடவுளுடைய கட்டளைகளை நேரடியாக மீறுவதாக அர்த்தம். அது கையாடலுக்கு சமம்’ என்கிறார்.—தசமபாகம்—கடவுளுடைய பொருளாதாரத் திட்டம் (ஆங்கிலம்).
கொடுப்பது, கிறிஸ்தவ வணக்கத்தின் பாகமாக இருக்க வேண்டும் என நீங்கள் பெரும்பாலும் ஒப்புக்கொள்வீர்கள். இருந்தாலும், பணத்திற்காக சதா நச்சரிக்கப்படுவது கவலையளிப்பதாக, ஒருவேளை எரிச்சலூட்டுவதாகக்கூட இருக்கிறதா? பிரேஸிலைச் சேர்ந்த இறையியலாளர் இனாஸ்யூ ஸ்ட்ரிட, சர்ச்சுகள் “தங்களுடைய அமைப்பு சார்ந்த பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளவே” தசமபாகம் வாங்குவதாக அவற்றைக் குற்றம் சாட்டுகிறார்; அப்படிப்பட்ட பழக்கங்களை “சட்டவிரோத பழக்கங்கள், துஷ்பிரயோக செயல்கள், இறையியலுக்கு முரண்பட்ட நடவடிக்கைகள்” என அவர் முத்திரை குத்துகிறார். இவற்றின் விளைவாக, “வேலையில்லாதவர்கள், விதவைகள், குடிசைவாசிகள், பகுத்தறியும் திறனில்லாதவர்கள் ஆகியோர் கடவுள் தங்களை கைவிட்டுவிட்டார் என்ற முடிவுக்கு வருகின்றனர்; ‘பிரசங்கிப்பவருக்கு’ வாரி வழங்க கடமைப்பட்டிருப்பதாகவும் அவர்கள் நினைப்பதால் அவர்களது சொந்த குடும்பத்தார் பசியால் வாடுகின்றனர்” என்று அவர் குறிப்பிடுகிறார்.
‘தசமபாகத்தைக் கேட்கும் சர்ச்சுகள் வேதாகமம் சொல்கிறபடிதான் செயல்படுகின்றனவா? அல்லது சில மதங்கள் தேவபயத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு மக்களை சுரண்டிப் பிழைக்கின்றனவா? தனக்கின்றி தானம் செய்ய வேண்டுமென உண்மையிலேயே கடவுள் எதிர்பார்க்கிறாரா?’ என்றெல்லாம் நீங்கள் யோசிக்கலாம்.
[அடிக்குறிப்பு]
a ஒருவருடைய மொத்த வருவாயில் 10 சதவீதமே தசமபாகம் என வரையறுக்கப்படுகிறது.