கடவுளுடைய வார்த்தையை படித்து மகிழுங்கள்
“உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து, உம்முடைய செயல்களை யோசிப்பேன்.” —சங்கீதம் 77:12.
1, 2. (அ) தியானிப்பதற்கு நாம் ஏன் நேரம் ஒதுக்க வேண்டும்? (ஆ) தியானிப்பது, ஆழ்ந்து சிந்திப்பது ஆகியவற்றின் அர்த்தம் என்ன?
இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாக, கடவுளுடன் உள்ள நம் உறவுக்கும் அவரை சேவிப்பதற்கான நம் உள்நோக்கத்திற்குமே நாம் அதிக முக்கியத்துவம் தர வேண்டும். என்றாலும் இன்று பெரும்பாலான மக்களின் வாழ்க்கை அவசரகதியில் சுழல்வதால் அவர்கள் தியானிப்பதற்கு நேரமே எடுத்துக் கொள்வதில்லை. சொத்துசுகத்தை சேர்ப்பதிலும் பொருட்களை வாங்கிக் குவிப்பதிலும் உருப்படியான காரணமின்றி இன்பத்தை நாடித் தேடுவதிலுமே அவர்கள் முழுமையாக மூழ்கியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட வீணான முயற்சிகளை நாம் எப்படி தவிர்க்கலாம்? சாப்பிடுவது, தூங்குவது போன்ற அவசியமான செயல்களுக்கு தினமும் நாம் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவதுபோல், யெகோவாவின் செயல்களையும் நடவடிக்கைகளையும் தியானிக்க தினமும் நேரம் ஒதுக்க வேண்டும்.—உபாகமம் 8:3; மத்தேயு 4:4.
2 நீங்கள் எப்போதாவது தியானிக்கிறீர்களா? தியானிப்பது என்றால் என்ன? எண்ணங்களை ஒருமுகப்படுத்தி நினைத்துப் பார்ப்பதும், ஆழ்ந்து சிந்திப்பதும் தியானத்தில் அடங்கும். ஆழ்ந்து சிந்திப்பது என்பது, அமைதலாக, கருத்தாக, பலமாக யோசிப்பதை அல்லது சிந்திப்பதை குறிக்கிறது. இது நமக்கு எதை அர்த்தப்படுத்துகிறது?
3. ஆவிக்குரிய முன்னேற்றம் செய்வது எதனுடன் நேரடியான தொடர்புடையது?
3 இது, அப்போஸ்தலனாகிய பவுல் தன் உடன் ஊழியரான தீமோத்தேயுவுக்கு எழுதிய இந்த வார்த்தைகளை நமக்கு நினைவூட்ட வேண்டும்: “நான் வரும்வரை, பொது வாசிப்பிலும் புத்திசொல்வதிலும் போதிப்பதிலும் தொடர்ந்து உன்னை ஈடுபடுத்திக்கொண்டிரு. . . . நீ முன்னேறுவது அனைவருக்கும் தெரியும்படி இவற்றையே ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டு, இவற்றிலேயே லயித்திரு.” ஆம், அன்று முன்னேற்றம் எதிர்பார்க்கப்பட்டது; அவ்வாறு முன்னேறுவதற்கும் ஆவிக்குரிய காரியங்களை சிந்தித்துக் கொண்டிருப்பதற்கும் நேரடியான தொடர்பு இருந்ததை பவுலின் வார்த்தைகள் சுட்டிக்காட்டின. இன்றும் அதுவே உண்மை. ஆவிக்குரிய முன்னேற்றம் செய்வதால் கிடைக்கும் மன திருப்தியை அனுபவிக்க, கடவுளுடைய வார்த்தை சம்பந்தப்பட்ட விஷயங்களை நாமும் “ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டு” அவற்றில் ‘லயித்திருக்க’ வேண்டும்.—1 தீமோத்தேயு 4:13-15, NW.
4. தவறாமல் யெகோவாவின் வார்த்தையை ஆழ்ந்து சிந்திப்பதற்கு என்ன உபகரணங்களை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்?
4 நீங்கள் தியானிப்பதற்கு மிகச் சிறந்த நேரம், உங்களைப் பொறுத்தது; நீங்கள் குடும்பமாகக் காரியங்களை செய்வதற்காக திட்டமிட்டிருக்கும் நேரத்தையும் சார்ந்தது. அநேகர் அதிகாலை வேளைகளில் தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்தல் புத்தகத்திலிருந்து ஒரு பைபிள் வசனத்தை வாசித்து அதன் பேரில் ஆழமாக சிந்திக்கிறார்கள். சொல்லப்போனால் உலகெங்கும் உள்ள பெத்தேல் வீடுகளில் பணிபுரியும் சுமார் 20,000 வாலண்டியர்கள், அந்நாளுக்குரிய பைபிள் வசனத்தை 15 நிமிடம் சிந்தித்தபின் அந்நாளைத் தொடங்குகிறார்கள். ஒவ்வொரு நாளும் சுமார் நான்கு பேர் மட்டுமே அந்த வசனத்தின் பேரில் குறிப்பு சொல்கிறார்கள் என்றாலும் மற்றவர்கள் வாசிக்கப்படும் குறிப்புகளையும் சொல்லப்படும் விஷயங்களையும் கேட்டு ஆழ்ந்து சிந்திக்கிறார்கள். வேறு சில சாட்சிகள், வேலைக்கு செல்லும்போது யெகோவாவின் வார்த்தையை ஆழ்ந்து சிந்திக்கிறார்கள். பைபிள், காவற்கோபுரம் பத்திரிகை, விழித்தெழு! பத்திரிகை ஆகியவற்றின் ஆடியோகேஸட்டுகளைக் கேட்கிறார்கள்; இவை சில மொழிகளில் கிடைக்கின்றன. அநேக இல்லத்தரசிகள் இவற்றைக் கேட்டுக்கொண்டே வீட்டு வேலைகளை செய்கிறார்கள். இவர்கள் உண்மையில் சங்கீதக்காரனாகிய ஆசாபைப் பின்பற்றுகிறார்கள்; “கர்த்தருடைய செயல்களை நினைவுகூருவேன், உம்முடைய பூர்வகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன்; உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து, உம்முடைய செயல்களை யோசிப்பேன்” என்று அவர் எழுதினார்.—சங்கீதம் 77:11, 12.
சரியான மனப்பான்மை ஏற்ற பலனளிக்கிறது
5. தனிப்பட்ட படிப்பு நமக்கு ஏன் முக்கியமானதாக இருக்க வேண்டும்?
5 டிவியும் வீடியோக்களும் கம்ப்யூட்டர்களும் பிரபலமாகியிருக்கும் இந்தக் காலத்தில், வாசிக்கும் பழக்கம் மிகவும் குறைந்துவிட்டது. யெகோவாவின் சாட்சிகள் விஷயத்திலோ இப்படிப்பட்ட நிலை இருக்கலாகாது. பைபிள் வாசிப்பே யெகோவாவிடம் நம்மை இணைக்கும் உயிர்நாடியாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, மோசேக்குப் பிறகு யோசுவா இஸ்ரவேலர்களை வழிநடத்த ஆரம்பித்தார். யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பெற யோசுவா கடவுளுடைய வார்த்தையை தனிப்பட்ட விதமாக வாசிக்க வேண்டியிருந்தது. (யோசுவா 1:8; சங்கீதம் 1:1, 2) இன்றும் இதுவே எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் அதிக படிப்பு இல்லாததால் சிலருக்கு வாசிப்பது கஷ்டமாக அல்லது சிரமமாக இருக்கலாம். அப்படியென்றால் கடவுளுடைய வார்த்தையை வாசிப்பதிலும் படிப்பதிலும் ஆவலை வளர்த்துக்கொள்ள எது நமக்கு உதவும்? நீதிமொழிகள் 2:1-6-ல் பதிவு செய்யப்பட்டிருக்கும் சாலொமோன் ராஜாவின் வார்த்தைகளில் பதிலைக் காணலாம். தயவுசெய்து உங்கள் பைபிளைத் திறந்து இந்த வசனங்களை முதலில் வாசியுங்கள். பிறகு அவற்றை நாம் கலந்தாலோசிக்கலாம்.
6. கடவுளைப் பற்றிய அறிவின்பேரில் எப்படிப்பட்ட மனப்பான்மை நமக்கு வேண்டும்?
6 முதலாவதாக நமக்கு இந்த அறிவுரை கொடுக்கப்படுகிறது: “என் மகனே நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு என் கட்டளைகளை உன்னிடத்தில் பொக்கிஷம்போல் பத்திரப்படுத்தி, ஞானத்திற்கு செவிசாய்த்து, விவேகத்தின்பால் இருதயத்தை சாய்ப்பாயாகில்; . . . ” (நீதிமொழிகள் 2:1, 2, NW) இந்த வார்த்தைகளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? தனிப்பட்டவர்களாக நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது. ‘நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்வாயாகில்’ என்ற நிபந்தனையைக் கவனியுங்கள். ‘ஆகில்’ என்ற விகுதியை இங்கே அழுத்திக் கூற வேண்டும், ஏனென்றால் பெரும்பாலான மனிதர்கள் கடவுளுடைய வார்த்தைக்கு செவிசாய்ப்பதே இல்லை. கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதில் சந்தோஷத்தைக் காண, இழக்க விரும்பாத பொக்கிஷம்போல் நாம் அவ்வார்த்தைகளை பெற்றுக்கொள்ளவும் கருதவும் மனமுள்ளவர்களாய் இருக்க வேண்டும். தினசரி அலுவல்களிலேயே மும்முரமாக மூழ்கிவிடுவதால் அல்லது கவனம் சிதறப்படுவதால் நாம் கடவுளுடைய வார்த்தையை அசட்டை செய்ய, ஏன் சந்தேகிக்கக்கூட ஆரம்பிக்காதவாறு எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.—ரோமர் 3:3, 4.
7. முடிந்தமட்டும் நாம் ஏன் கிறிஸ்தவ கூட்டங்களுக்கு சென்று கவனம் செலுத்த வேண்டும்?
7 கிறிஸ்தவ கூட்டங்களில் கடவுளுடைய வார்த்தை விளக்கப்படும்போது நாம் உண்மையிலேயே “செவிசாய்த்து,” கவனமாக கேட்கிறோமா? (எபேசியர் 4:20, 21) விவேகத்தைப் பெறும்படி ‘இருதயத்தை சாய்க்கிறோமா’? பேச்சாளர் ஒருவேளை அனுபவசாலியாக இல்லாதிருக்கலாம், ஆனால் அவர் கடவுளுடைய வார்த்தையிலிருந்து பேசுகையில் நம் முழு கவனத்தையும் பெற தகுந்தவராக இருக்கிறார். யெகோவாவின் ஞானத்திற்கு செவிசாய்க்க, நம்மால் முடிந்தமட்டும் கிறிஸ்தவ கூட்டங்களுக்கு செல்வதும் அவசியம். (நீதிமொழிகள் 18:1) பொ.ச. 33, பெந்தெகொஸ்தே தினத்தன்று மேலறையில் நடந்த கூட்டத்தை தவறவிட்டவர்கள் எவ்வளவு ஏமாற்றமடைந்திருப்பார்கள்! இன்றைய கூட்டங்கள் அந்தக் கூட்டத்தின் அளவுக்கு பரபரப்பூட்டுவதாக இல்லை என்றாலும், நம் அடிப்படை பாடப்புத்தகமாகிய பைபிள் அங்கே கலந்தாலோசிக்கப்படுகிறது. ஆகவே நாம் கவனம் செலுத்தி, வாசிக்கப்படும் வசனங்களை நம் பைபிள்களில் திறந்து பார்த்தால் ஒவ்வொரு கூட்டமும் நமக்கு ஆசீர்வாதமாக அமையும்.—அப்போஸ்தலர் 2:1-4; எபிரெயர் 10:24, 25.
8, 9. (அ) தனிப்பட்ட படிப்பு சம்பந்தமாக நம்மிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறது? (ஆ) தங்கத்தின் மதிப்பையும் கடவுளைப் பற்றிய புரிந்துகொள்ளுதலையும் எப்படி ஒப்பிடுவீர்கள்?
8 ஞானமுள்ள அரசரின் அடுத்த வார்த்தைகள் இவை: “மேலும், நீ புரிந்துகொள்ளுதலை வா என கூப்பிட்டு விவேகத்தை சப்தமிட்டு அழைப்பாயாகில்; . . . ” (நீதிமொழிகள் 2:3, NW) இந்த வார்த்தைகள் எப்படிப்பட்ட மனப்பான்மையை அல்லது மனநிலையை தெரியப்படுத்துகின்றன? யெகோவாவின் வார்த்தையை புரிந்துகொள்வதற்கான உள்ளப்பூர்வ ஆவலை அல்லவோ வெளிக்காட்டுகின்றன! விவேகத்தைப் பெறுவதற்காகவும் யெகோவாவின் சித்தத்தைப் புரிந்துகொள்வதற்காகவும் படிப்பில் விருப்பம் காண்பிப்பதை சுட்டிக்காட்டுகின்றன. இதற்கு நிச்சயம் முயற்சி தேவை; இதையே, சாலொமோனின் அடுத்துவரும் வார்த்தைகளும் உவமையும் எடுத்துக் காட்டுகின்றன.—எபேசியர் 5:15-17.
9 அவர் தொடர்ந்து இவ்வாறு சொல்கிறார்: “நீ வெள்ளியைப்போல் அதை [புரிந்துகொள்ளுதலை] நாடுவாயாகில்; புதையல்களைத் தேடுகிறதுபோல் அதை தேடுவாயாகில், . . . ” (நீதிமொழிகள் 2:4, NW) விலைமதிப்புள்ள உலோகங்களாக கருதப்படும் வெள்ளியையும் பொன்னையும் தேடி நூற்றாண்டுகளாக சுரங்கங்களை வெட்டிவந்திருக்கும் மனிதனின் முயற்சிகளை இது நமக்கு நினைவூட்டுகிறது. தங்கத்திற்காக மனிதன் கொலையே செய்திருக்கிறான். அதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தங்கள் வாழ்நாளையே செலவழித்த நபர்களும் உண்டு. ஆனால் தங்கத்தின் உண்மையான மதிப்பு என்ன? நீங்கள் ஒரு காட்டில் தொலைந்து போய்விடுகிறீர்கள், தாகத்தால் துடித்துக்கொண்டிருக்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள்; அந்த சமயத்தில் எதை விரும்புவீர்கள்: ஒரு தங்கக் கட்டியையா அல்லது ஒரு டம்ளர் தண்ணீரையா? ஆனாலும் போலியான, நிலையற்ற மதிப்புள்ள அந்தத் தங்கத்திற்காக மனிதன் எவ்வளவு ஆர்வத்தோடு தேடியலைந்திருக்கிறான்!a அப்படியென்றால் ஞானம், விவேகம், கடவுளையும் அவருடைய சித்தத்தையும் பற்றிய புரிந்துகொள்ளுதல் ஆகியவற்றை இன்னும் எந்தளவு ஆர்வத்தோடு நாம் தேட வேண்டும்! ஆனால் அப்படி தேடுவதால் என்ன நன்மைகள்?—சங்கீதம் 19:7-10; நீதிமொழிகள் 3:13-18.
10. கடவுளுடைய வார்த்தையைப் படித்தால் நாம் எதைக் கண்டடையலாம்?
10 சாலொமோனின் விளக்கம் தொடர்கிறது: “அப்பொழுது யெகோவாவிற்குப் பயப்படுதல் இன்னதென்று அறிந்துகொள்வாய், கடவுளை அறியும் அறிவையும் கண்டடைவாய்.” (நீதிமொழிகள் 2:5, NW) என்னே ஒரு மலைக்க வைக்கும் கருத்து! பாவமுள்ள மனிதர்களாகிய நாம் இந்த சர்வலோகத்தின் உன்னதப் பேரரசராகிய யெகோவாவை “அறியும் அறிவை” கண்டடைய முடியும்! (சங்கீதம் 73:28, NW; அப்போஸ்தலர் 4:24, NW) உயிரையும் இந்த சர்வலோகத்தையும் பற்றிய மர்மங்களைப் புரிந்துகொள்ள இவ்வுலக தத்துவமேதைகளும் ஞானிகளாகக் கருதப்படுபவர்களும் பல நூற்றாண்டுகளாக முயற்சி செய்து வந்திருக்கிறார்கள். இருந்தாலும் “கடவுளை அறியும் அறிவை” கண்டடையத் தவறிவிட்டிருக்கிறார்கள். ஏன்? கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளில் அந்த அறிவு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கிடைக்கிறபோதிலும் அவர்கள் அதை வெகு எளிமையானதென ஒதுக்குகிறார்கள்; அதை ஏற்றுக்கொள்ளாமலும் புரிந்துகொள்ளாமலும் இருக்கிறார்கள்.—1 கொரிந்தியர் 1:18-21.
11. தனிப்பட்ட படிப்பின் சில நன்மைகள் யாவை?
11 சாலொமோன் நம்மைத் தூண்டுவிக்கும் மற்றொரு குறிப்பையும் வலியுறுத்திக் காட்டுகிறார்: “யெகோவாவே ஞானத்தை அருளுகிறார்; அவர் வாயிலிருந்து அறிவும் விவேகமும் புறப்படுகின்றன.” (நீதிமொழிகள் 2:6, NW) ஞானத்தையும் அறிவையும் விவேகத்தையும் தேடிக்கண்டடைய விருப்பமுள்ள எவருக்கும் யெகோவா அவற்றை மனமுவந்து தாராளமாக அளிக்கிறார். கடவுளுடைய வார்த்தையை தனிப்பட்ட விதமாக படிப்பதற்கு முயற்சியும் கட்டுப்பாடும் தியாகமும் தேவை என்றாலும் அப்படிப்பை நெஞ்சார நேசிக்க கண்டிப்பாக நமக்கு நியாயமான காரணமுண்டு. அதுவும் நமக்கு அச்சிடப்பட்ட பைபிள் பிரதிகள் இருக்கின்றன, பூர்வ காலத்தில் சிலர் செய்ததுபோல் இப்போது நாம் அதை கைப்பட பிரதியெடுக்க வேண்டியதில்லையே!—உபாகமம் 17:18-20.
யெகோவாவிற்குப் பாத்திரராய் நடந்துகொள்ள
12. கடவுளுடைய அறிவைப் பெறுவதில் நம் உள்நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்?
12 நாம் என்ன உள்நோக்கத்தோடு படிக்க வேண்டும்? மற்றவர்களைவிட மேலானவர்களென காட்டிக்கொள்வதற்கா? அறிவாளிகளாக விளங்குவதற்கா? நடமாடும் பைபிள் என்ஸைக்ளோப்பீடியாக்கள் என பெயரெடுப்பதற்கா? இல்லவே இல்லை. பேச்சிலும் நடத்தையிலும் கிறிஸ்தவர்களாக விளங்குவதே நம் குறிக்கோள்; கிறிஸ்துவின் புத்துயிரளிக்கும் மனப்பான்மையோடு மற்றவர்களுக்கு உதவ எப்போதும் தயாராயிருப்பதே நம் லட்சியம். (மத்தேயு 11:28-30) “அறிவு இறுமாப்பை உண்டாக்கும், அன்போ பக்திவிருத்தியை உண்டாக்கும்” என அப்போஸ்தலனாகிய பவுல் எச்சரித்தார். (1 கொரிந்தியர் 8:1) ஆகவே யெகோவாவிடம் மோசே இவ்வாறு சொன்னபோது காட்டிய பணிவான மனப்பான்மையையே நாமும் காட்ட வேண்டும்: “நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைப்பதற்கும், உம்முடைய வழியை எனக்கு அறிவியும்.” (யாத்திராகமம் 33:13) ஆம், கடவுளைப் பிரியப்படுத்துவதற்காகவே நாம் அறிவைப் பெற விரும்ப வேண்டும், மனிதர்களை கவருவதற்காக அல்ல. நாம் கடவுளுக்குப் பாத்திரரான, பணிவான ஊழியர்களாக இருக்க விரும்புகிறோம். இந்த இலக்கை எப்படி அடைவது?
13. கடவுளுக்குப் பாத்திரமான ஊழியக்காரராக விளங்க ஒருவர் என்ன செய்ய வேண்டும்?
13 கடவுளை எவ்வாறு பிரியப்படுத்தலாம் என்பதைக் குறித்து தீமோத்தேயுவுக்கு பவுல் இவ்வாறு அறிவுரை வழங்கினார்: “நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நேர்மையாய்ப் போதிக்கிறவனாயும் உன்னை உத்தமனாகக் கடவுளுக்குமுன் நிறுத்திக்கொள்ளும்படி கருத்துள்ளவனாயிரு.” (2 தீமோத்தேயு 2:15, தி.மொ.) ‘நேர்மையாய் போதிப்பது’ என்ற பதம் கிரேக்க கூட்டு வினைச்சொல்லிலிருந்து பெறப்பட்டிருக்கிறது; அதன் மூல அர்த்தம், “நேராக வெட்டுவது” என்பதாகும். (கிங்டம் இன்டர்லீனியர்) தையல்காரர் துணியை ஒரு வடிவத்திற்கேற்ப வெட்டுவது, விவசாயி வயலில் சால் ஓட்டுவது போன்ற கருத்துக்களை இது கொடுப்பதாக சிலர் சொல்கின்றனர். எதுவானாலும் விளைவு கோணல்மாணலின்றி நேராக இருக்க வேண்டும். ஆக, தீமோத்தேயு கடவுளுக்குப் பாத்திரமான உத்தம ஊழியக்காரனாக இருப்பதற்கு, தன் போதனையும் நடத்தையும் நேரான சத்திய வார்த்தைக்கு இசைவாய் இருக்கும்படி நிச்சயப்படுத்திக்கொள்ள ‘கருத்துள்ளவனாயிருக்க’ வேண்டியிருந்தது.—1 தீமோத்தேயு 4:16.
14. தனிப்பட்ட படிப்பு எவ்வாறு நம் சொல்லையும் செயலையும் பாதிக்க வேண்டும்?
14 இதே குறிப்பை கொலோசெயிலிருந்த உடன் கிறிஸ்தவர்களிடமும் பவுல் கூறினார்; “சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து,” இவ்வாறு ‘கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளுமாறு’ அவர்களை உற்சாகப்படுத்தினார். (கொலோசெயர் 1:10) யெகோவாவிற்குப் பாத்திரராக நடந்துகொள்ள ‘சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தர’ வேண்டும் என்றும் ‘தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைய’ வேண்டும் என்றும் இங்கே பவுல் குறிப்பிடுகிறார். வேறு வார்த்தைகளில் சொன்னால், அறிவுக்கு எவ்வளவு மதிப்பு தருகிறோம் என்பதையல்ல, ஆனால் சொல்லிலும் செயலிலும் கடவுளுடைய வார்த்தையை எந்தளவுக்கு பின்பற்றுகிறோம் என்பதையே யெகோவா முக்கியமாகக் கருதுகிறார். (ரோமர் 2:21, 22) ஆகவே நாம் கடவுளைப் பிரியப்படுத்த விரும்பினால் தனிப்பட்ட படிப்பு நம் சிந்தையையும் செயலையும் பாதிக்க வேண்டும்.
15. நம் மனதையும் எண்ணங்களையும் எவ்வாறு பாதுகாக்கலாம், கட்டுப்படுத்தலாம்?
15 இன்று, மனப்போராட்டத்தை உண்டாக்குவதன் மூலம் சாத்தான் நம் ஆவிக்குரிய நலனைக் கெடுக்க தீர்மானமாக இருக்கிறான். (ரோமர் 7:14-25) ஆகவே நம் கடவுளாகிய யெகோவாவிற்கு பாத்திரராக நிரூபிக்கும் வகையில் நம் மனதையும் எண்ணங்களையும் நாம் பாதுகாக்க வேண்டும், கட்டுப்படுத்த வேண்டும். நம்மிடம் இருக்கும் ஆயுதம் ‘தேவனை அறிகிற அறிவாகும்’; அது ‘எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்தும்’ திறன்வாய்ந்தது. தினந்தோறும் பைபிளைப் படிப்பதற்கு கவனம் செலுத்த இது இன்னும் நல்ல காரணத்தை அளிக்கிறது; ஏனென்றால் நம் மனதிலிருந்து சுயநலமான, மாம்சப்பிரகாரமான எண்ணங்களை களைந்தெறிய விரும்புகிறோம்.—2 கொரிந்தியர் 10:5.
புரிந்துகொள்ளுதலுக்கான உபகரணங்கள்
16. யெகோவாவின் போதனையிலிருந்து நாம் எவ்வாறு நன்மை பெறலாம்?
16 யெகோவாவின் போதனை ஆவிக்குரிய நன்மைகளையும் சரீர நன்மைகளையும் தருகிறது. அது சுவாரஸ்யமில்லாத, நடைமுறைக்கு ஒத்துவராத இறையியல் அல்ல. ஆகவேதான், “பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே” என வாசிக்கிறோம். (ஏசாயா 48:17) யெகோவா பிரயோஜனமான தமது வழியில் நம்மை எவ்வாறு நடத்துகிறார்? முதலாவதாக அவரது ஆவியால் ஏவப்பட்ட வார்த்தையாகிய பரிசுத்த பைபிளைப் பெற்றிருக்கிறோம். அதுவே நம் அடிப்படை பாடப்புத்தகம்; உதவிக்காக எப்போதும் அதையே நாடுகிறோம். அதனால்தான் கிறிஸ்தவ கூட்டங்களில் பைபிளைத் திறந்து பார்ப்பது நல்லது. அதனால் வரும் நன்மைகளை எத்தியோப்பிய அதிகாரியைப் பற்றிய பதிவு எடுத்துக் காட்டுகிறது; இது அப்போஸ்தலர் 8-ஆம் அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
17. எத்தியோப்பிய அதிகாரியின் விஷயத்தில் என்ன நடந்தது, இது எதைக் காட்டுகிறது?
17 அந்த எத்தியோப்பிய அதிகாரி யூத மதத்திற்கு மாறியவர். கடவுளை மனதார நம்பினார், வேதவாக்கியங்களையும் படித்தார். தன் ரதத்தில் சென்றுகொண்டிருந்தபோது ஏசாயாவின் பதிவை வாசித்துக் கொண்டிருந்தார்; அப்போது பிலிப்பு அவரருகே ஓடிச்சென்று, “நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா” என்று கேட்டார். அந்த அதிகாரி என்ன பதிலளித்தார்? “ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும் என்று சொல்லி; பிலிப்பு ஏறி, தன்னோடே உட்காரும்படி அவனை வேண்டிக்கொண்டான்.” பிறகு, பரிசுத்த ஆவியால் தூண்டப்பட்ட பிலிப்பு, ஏசாயா தீர்க்கதரிசனத்தைப் புரிந்துகொள்ள அந்த அதிகாரிக்கு உதவினார். (அப்போஸ்தலர் 8:27-35) இது எதைக் காட்டுகிறது? பைபிளை தனிப்பட்ட விதமாக வாசித்தால் மட்டும் போதாது என்பதைக் காட்டுகிறது. யெகோவா தம் ஆவியை உபயோகித்து, உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பாரின் மூலம், ஏற்ற வேளையில் தமது வார்த்தையைப் புரிந்துகொள்ள நமக்கு உதவுகிறார். எவ்வாறு?—மத்தேயு 24:45-47; லூக்கா 12:42.
18. உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பார் நமக்கு எவ்வாறு உதவுகின்றனர்?
18 அடிமை வகுப்பு, ‘உண்மையும் விவேகமுமுள்ளது’ என சொல்லப்பட்டாலும், அது தவறே செய்ய முடியாத ஒன்றென இயேசு குறிப்பிடவில்லை. அபிஷேகம் செய்யப்பட்ட உண்மையுள்ள சகோதரர்கள் அடங்கிய இந்த வகுப்பினர் அபூரண கிறிஸ்தவர்களே. மிகச் சிறந்த உள்நோக்கத்தோடு அவர்கள் செயல்பட்டாலும் தவறு நடக்கலாம்; முதல் நூற்றாண்டிலிருந்த சிலர் எப்போதாவது தவறியதைப் போலவே இவர்களும் தவறலாம். (அப்போஸ்தலர் 10:9-15; கலாத்தியர் 2:8, 11-14) இருந்தாலும் இவர்களது உள்நோக்கம் தூய்மையானது; கடவுளுடைய வார்த்தையிலும் அவரது வாக்குறுதிகளிலும் நம் விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்கு, பைபிள் படிப்புக்குரிய உபகரணங்களை நமக்கு அளிக்க இவர்களை யெகோவா பயன்படுத்துகிறார். தனிப்பட்ட படிப்பிற்கு அடிமை வகுப்பு அளித்திருக்கும் அடிப்படை உபகரணம், பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு ஆங்கில பைபிளாகும். அது இப்போது முழுமையாகவோ பகுதியாகவோ 42 மொழிகளில் கிடைக்கிறது; பல்வேறு பதிப்புகளில் 11.4 கோடி பிரதிகள் அச்சிடப்பட்டிருக்கின்றன. நம் தனிப்பட்ட படிப்பில் இதை எப்படி திறம்பட பயன்படுத்தலாம்?—2 தீமோத்தேயு 3:14-17.
19. தனிப்பட்ட படிப்பிற்கு உதவும் என்ன சில அம்சங்கள் பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு—துணைக்குறிப்புகளுடன் பைபிளில் உள்ளன?
19 உதாரணத்திற்கு, பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு—துணைக்குறிப்புகளுடன் என்ற ஆங்கில பைபிளை எடுத்துக்கொள்ளுங்கள். ஒத்துவாக்கிய வசனங்கள், அடிக்குறிப்புகள், “பைபிள் வார்த்தைகளின் இன்டெக்ஸ்” மற்றும் “அடிக்குறிப்பு வார்த்தைகளின் இன்டெக்ஸ்” உள்ளடங்கிய சுருக்கமான கன்கார்டன்ஸ், வரைபடங்களுடனும் பட்டியல்களுடனும் 43 தலைப்புகளில் விஷயங்களை அலசும் பிற்சேர்க்கை ஆகியவை அதில் உள்ளன. “முன்னுரை” என்ற பகுதியும் உண்டு; தனிச்சிறப்புவாய்ந்த இந்த பைபிள் மொழிபெயர்ப்புக்கு பயன்படுத்தப்பட்ட அநேக மூல பிரதிகளைப் பற்றிய விளக்கம் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்குத் தெரிந்த மொழியில் அது கிடைத்தால் இந்த எல்லா அம்சங்களையும் நன்கு தெரிந்துகொண்டு அவற்றைப் பயன்படுத்துங்கள். எப்படியும் பைபிளே நம் படிப்புத் திட்டத்தில் முதல் இடம் பெறுகிறது; தெய்வீகப் பெயரை சரியாக வலியுறுத்துவதன் மூலம் கடவுளுடைய ராஜ்ய ஆட்சியை சிறப்பித்துக் காட்டும் மொழிபெயர்ப்பே புதிய உலக மொழிபெயர்ப்பு.—சங்கீதம் 149:1-9; தானியேல் 2:44; மத்தேயு 6:9, 10.
20. தனிப்பட்ட படிப்பு சம்பந்தமான என்ன கேள்விகளுக்கு இப்போது பதில் தேவை?
20 ‘பைபிளைப் புரிந்துகொள்ள மேலுமான என்ன உதவி நமக்கு தேவை? தனிப்பட்ட படிப்பிற்கு நாம் எவ்வாறு நேரத்தைப் பெறலாம்? எப்படி இன்னும் திறம்பட படிக்கலாம்? நம் படிப்பு மற்றவர்களை எவ்வாறு பாதிக்க வேண்டும்?’ என்றெல்லாம் இப்போது நாம் கேட்கலாம். நம் கிறிஸ்தவ முன்னேற்றத்தின் இந்த முக்கிய அம்சங்களை அடுத்த கட்டுரை கலந்தாலோசிக்கும்.
[அடிக்குறிப்பு]
a 1979 முதற்கொண்டு தங்கத்தின் மதிப்பு ஏறி இறங்கியிருக்கிறது; 31 கிராம் தங்கத்தின் விலை அதிகபட்சமாக 1980-ல் 850 டாலராக இருந்தது; குறைந்தபட்சமாக 1999-ல் 252.80 டாலராக இருந்தது.
நினைவிருக்கிறதா?
• “தியானிப்பது,” “ஆழ்ந்து சிந்திப்பது” ஆகியவற்றின் அர்த்தம் என்ன?
• கடவுளுடைய வார்த்தையை படிப்பது சம்பந்தமாக நமக்கு என்ன மனப்பான்மை தேவை?
• என்ன உள்நோக்கத்தோடு நாம் தனிப்பட்ட படிப்பில் ஈடுபட வேண்டும்?
• பைபிளைப் புரிந்துகொள்ள என்ன உபகரணங்கள் நமக்கு உண்டு?
[பக்கம் 15-ன் படம்]
ஒவ்வொரு நாளும் முதலில் ஒரு பைபிள் வசனத்தை சிந்திப்பது ஆவிக்குரிய பலமளிப்பதாக பெத்தேல் குடும்பத்தினர் கண்டிருக்கின்றனர்
[பக்கம் 15-ன் படங்கள்]
பயணம் செய்யும்போது பைபிள் கேஸட்டுகளைக் கேட்பதால் பொன்னான நேரத்தை பிரயோஜனப்படுத்திக் கொள்ளலாம்
[பக்கம் 16-ன் படம்]
தங்கத்திற்காக மனிதர்கள் ரத்த வியர்வை சிந்தியிருக்கிறார்கள். கடவுளுடைய வார்த்தையைப் படிக்க நீங்கள் எந்தளவு முயற்சி செய்கிறீர்கள்?
[படத்திற்கான நன்றி]
Courtesy of California State Parks, 2002
[பக்கம் 17-ன் படங்கள்]
பைபிள் நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் ஒரு பொக்கிஷம்