உங்கள் கைகளை திடப்படுத்திக் கொள்ளுங்கள்
கையைப் பற்றி பைபிள் நூற்றுக்கணக்கான தடவை குறிப்பிடுகிறது. கையோடு சம்பந்தப்பட்ட உவமைகள் பல்வேறு விதங்களில் உபயோகிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, சுத்தமான கை என்பது குற்றமற்ற தன்மையை குறிக்கும். (2 சாமுவேல் 22:21; சங்கீதம் 24:3, 4) கையை திறப்பது என்றால் மற்றவர்களிடம் தாராள மனப்பான்மை காட்டுவதாகும். (உபாகமம் 15:11; சங்கீதம் 145:16) தன் பிராணனை தன் கையில் வைத்தல் என்பது ஒருவர் தனது உயிரை ஆபத்திற்கு உள்ளாக்குவதைக் குறிக்கும். (1 சாமுவேல் 19:5) கைகளை நெகிழவிடுதல் என்பது உற்சாகமிழப்பதைக் குறிக்கிறது. (2 நாளாகமம் 15:7) கைகளை திடப்படுத்துவது என்றால் செயல்படுவதற்கு தயாராவதையும் அதிகாரமளிக்கப்படுவதையும் குறிக்கும்.—1 சாமுவேல் 23:16.
இன்று நம் கைகளை திடப்படுத்திக்கொள்ள அவசரமான தேவை உள்ளது. ஏனெனில், ‘கையாளுவதற்குக் கடினமான கொடிய காலங்களில்’ நாம் வாழ்கிறோம். (2 தீமோத்தேயு 3:1, NW) உற்சாகமிழக்கையில் விட்டுக்கொடுத்துவிடுவதே அல்லது கைகளை தளரவிடுவதே மனித இயல்பு. டீனேஜர்கள் பள்ளிப் படிப்பை பாதியில் விட்டுவிடுவதையும், கணவன்மார்கள் தங்கள் குடும்பங்களை கைவிடுவதையும், தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை புறக்கணிப்பதையும் சர்வசாதாரணமாக பார்க்கிறோம். நாம் கிறிஸ்தவர்களாக இருப்பதால், கடவுளை சேவிப்பதில் எதிர்ப்படும் சோதனைகளை சமாளிக்க நம் கைகளை திடப்படுத்திக்கொள்ள வேண்டும். (மத்தேயு 24:13) அவ்வாறு செய்கையில் யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்துகிறோம்.—நீதிமொழிகள் 27:11.
கைகளை எவ்வாறு திடப்படுத்துவது
எருசலேமிலிருந்த யெகோவாவின் ஆலயத்தை மீண்டும் கட்டி முடிப்பதற்காக எஸ்றாவின் நாளிலிருந்த யூதர்கள் தங்கள் கைகளை திடப்படுத்த வேண்டியிருந்தது. அவர்கள் கைகள் எவ்வாறு திடப்படுத்தப்பட்டன? “புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஏழுநாளாகச் சந்தோஷத்துடனே ஆசரித்தார்கள்; கர்த்தர் அவர்களை மகிழ்ச்சியாக்கி, அவர்கள் கைகளை இஸ்ரவேலின் தேவன் என்னும் தேவனுடைய ஆலயத்தின் வேலையிலே பலப்படுத்தத்தக்கதாய் அசீரியருடைய ராஜாவின் இருதயத்தை அவர்கள் பட்சத்தில் சார்ந்திருக்கப் பண்ணினார்” என பதிவு கூறுகிறது. (எஸ்றா 6:22) யெகோவா தமது செயல் நடப்பிக்கும் சக்தியின் மூலம், தம்முடைய ஜனங்கள் திரும்பிச் செல்ல அனுமதிக்கும்படி ‘அசீரியருடைய ராஜாவை’ ஏவியதும், அவர்கள் ஆரம்பித்திருந்த வேலையை செய்து முடிக்க அவர்களுடைய மனப்பான்மையை தூண்டியதும் தெளிவாக தெரிகிறது.
பின்னர், எருசலேமின் மதிற்சுவர்கள் பழுதுபார்க்கப்பட வேண்டிய சமயத்தில் அந்த வேலையை செய்ய நெகேமியா தன் சகோதரர்களின் கைகளை திடப்படுத்தினார். “என் தேவனுடைய கரம் என் மேல் நன்மையாக இருக்கிறதையும், ராஜா என்னோடே சொன்ன வார்த்தைகளையும் அவர்களுக்கு அறிவித்தேன்; அப்பொழுது அவர்கள்: எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி, அந்த நல்ல வேலைக்குத் தங்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள்” என்று வாசிக்கிறோம். கைகள் திடப்படுத்தப்பட்டதால் நெகேமியாவும் உடன் யூதர்களும் எருசலேமின் மதிற்சுவர்களை 52 நாட்களுக்குள் கட்டி முடித்தது குறிப்பிடத்தக்கது!—நெகேமியா 2:18; 6:9, 15.
அதைப்போலவே, ராஜ்ய நற்செய்தியை பிரசங்கிக்கவும் யெகோவா நமது கைகளை திடப்படுத்துகிறார். (மத்தேயு 24:14) அவருடைய சித்தத்தின்படி செய்ய நம்மை சகலவித நற்செயல்களிலும் தயார்படுத்துவதன் மூலம் அதை செய்கிறார். உயர்தரமான கருவிகளை அவர் நம் கைகளில் கொடுத்திருக்கிறார். உலகம் முழுவதிலும் உள்ள மக்களை சென்றெட்ட உபயோகிப்பதற்காக பைபிள், பைபிள் அடிப்படையிலான புத்தகங்கள், பத்திரிகைகள், சிற்றேடுகள், துண்டுப்பிரதிகள், ஆடியோ, வீடியோ கேஸட்டுகள் போன்றவற்றை நமக்கு கொடுத்திருக்கிறார். உண்மை என்னவென்றால், நமது பிரசுரங்கள் 380-க்கும் அதிகமான மொழிகளில் கிடைக்கின்றன. மேலுமாக, இந்த அருமையான கருவிகளை உபயோகித்து நம் ஊழியத்தை நிறைவேற்ற சபை கூட்டங்கள், அசெம்பிளிகள், மாநாடுகள் மூலமாக யெகோவா தேவராஜ்ய கல்வியும் பயிற்சியும் அளிக்கிறார்.
யெகோவா, பல்வேறு வழிகளில் நம் கைகளை திடப்படுத்தினாலும் நாமும் கடினமான முயற்சி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். படையெடுத்து வந்த சீரியர்களை எதிர்த்து போரிட எலிசாவின் உதவியைக் கோரிய யோவாஸ் ராஜாவிடம் அந்தத் தீர்க்கதரிசி கூறியதை நினைத்துப் பாருங்கள். சில அம்புகளை எடுத்து தரையிலே அடிக்கும்படி ராஜாவிடம் எலிசா கூறினார். பைபிள் பதிவு இவ்வாறு கூறுகிறது: “அவன் மூன்றுதரம் அடித்து நின்றான். அப்பொழுது தேவனுடைய மனுஷன் அவன் மேல் கோபமாகி: நீர் ஐந்து ஆறு விசை அடித்தீரானால், அப்பொழுது சீரியரைத் தீர முறிய அடிப்பீர்; இப்பொழுதோ சீரியரை மூன்று விசை மாத்திரம் முறிய அடிப்பீர் என்றான்.” (2 இராஜாக்கள் 13:18, 19) யோவாஸ் வைராக்கியத்தோடு கடின முயற்சி செய்ய தவறியதால் சீரியர்களுக்கு எதிரான யுத்தத்தில் ஓரளவு வெற்றியே பெற்றார்.
யெகோவா நம்மிடம் ஒப்படைத்திருக்கும் வேலையை செய்து முடிக்க விரும்புகிறோம் என்றால் அதே நியமம் நமக்கும் பொருந்தும். நம் பாதையில் எதிர்ப்படும் தடை கற்களைப் பற்றியோ நியமிப்பு எவ்வளவு கடினமானதாக இருக்கலாம் என்பதைப் பற்றியோ கவலைப்படுவதற்கு பதிலாக அதை வைராக்கியத்தோடும் முழு இருதயத்தோடும் செய்ய வேண்டும். நம் கைகளை திடப்படுத்திக்கொண்டு உதவிக்காக யெகோவாமீது சார்ந்திருக்க வேண்டும்.—ஏசாயா 35:3, 4.
யெகோவா நம் கைகளை திடப்படுத்துவார்
யெகோவா, தமது சித்தத்தை செய்ய நமக்கு உதவியளித்து நம் கைகளை திடப்படுத்த தவறமாட்டார். ஓர் அற்புதத்தை நிகழ்த்தி நமக்காக கடவுளே எல்லாவற்றையும் செய்துவிட மாட்டார். நம் பங்கை செய்யும்படி நம்மிடம் எதிர்பார்க்கிறார். தினந்தோறும் பைபிளை வாசிப்பது, கூட்டங்களுக்காக தயாரித்து தவறாமல் செல்வது, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஊழியத்தில் பங்குகொள்வது, இடைவிடாமல் அவரிடம் ஜெபிப்பது போன்றவை அதில் அடங்கும். நமக்கு வாய்ப்பு இருக்கும்போது நம் பங்கை உண்மையோடும் கவனத்தோடும் செய்து வந்தால் யெகோவா நம்மிடம் எதிர்பார்ப்பவற்றை பூர்த்தி செய்ய அவரே நமக்கு பலத்தைக் கொடுப்பார்.—பிலிப்பியர் 4:13, NW.
ஒரே வருடத்தில் தன் மனைவியையும் தாயையும் மரணத்தில் பறிகொடுத்த ஒரு கிறிஸ்தவரின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அவருடைய ரணம் ஆறுவதற்கு முன், மருமகள் அவருடைய மகனைவிட்டு பிரிந்துசென்று கிறிஸ்தவ வாழ்க்கை முறையையும் உதறிவிட்டாள். “நமக்கு என்ன சோதனைகள் வரும், எப்போது வரும், எவ்வளவு அடிக்கடி வரும் என்பதெல்லாம் நம் கையில் இல்லை என்பதை கற்றுக்கொண்டேன்” என்று அந்தச் சகோதரர் கூறினார். தொடர்ந்து தாக்குப்பிடிக்க அவருக்கு எங்கிருந்து பலம் கிடைக்கிறது? “ஜெபமும் தனிப்பட்ட படிப்பும்தான் எனக்கு பலத்தைத் தந்து உதவுகின்றன. எனது ஆவிக்குரிய சகோதர, சகோதரிகளின் ஆதரவும் பெருமளவு ஆறுதலை அளித்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, கடினமான காலங்கள் வருவதற்கு முன்பே யெகோவாவோடு நல்ல, அன்னியோன்னியமான உறவை வளர்த்துக்கொள்வது மிக மிக முக்கியம் என்பதை உணர ஆரம்பித்திருக்கிறேன்” என்றார்.
வாழ்க்கையில் நீங்கள் எதை அனுபவித்தாலும் சரி, யெகோவா மீது முழு நம்பிக்கை வைக்கவும் உங்கள் கைகளை திடப்படுத்த அவர் செய்யும் அனைத்து ஏற்பாடுகளையும் நன்கு பயன்படுத்திக் கொள்ளவும் திடதீர்மானமாயிருங்கள். அப்போது, மிகவும் உயர்தரமான சேவையை உங்களால் யெகோவாவுக்கு செய்ய முடியும்; இவ்வாறு அவருடைய அருமையான பெயருக்கு மகிமையையும் கனத்தையும் சேர்ப்பீர்கள்.—எபிரெயர் 13:15.
[பக்கம் 31-ன் படம்]
யோவாஸ் வைராக்கியத்தோடு கடின முயற்சி செய்ய தவறியதால் சீரியர்களுக்கு எதிரான யுத்தத்தில் ஓரளவு வெற்றியே பெற்றார்