இயேசுவின் பிறப்பை பற்றிய பதிவுகளிலிருந்து பாடங்கள்
இயேசுவின் பிறப்பை ஒட்டி நடந்த சம்பவங்கள் கோடிக்கணக்கான ஆட்களின் மனதைக் கவர்ந்திருக்கின்றன. கிறிஸ்மஸ் சமயத்தில் உலகம் முழுவதிலும் காட்சிக்காக வைக்கப்படும் கிறிஸ்மஸ் குடில்களும் நடித்துக்காட்டப்படும் நாடகங்களும் இதற்கு அத்தாட்சி. இவை மனதைக் கவருவதாக இருந்தாலும் இயேசு பிறந்தபோது நடந்த சம்பவங்கள் மக்களை மகிழ்விப்பதற்காக பைபிளில் எழுதி வைக்கப்படவில்லை. மாறாக, போதனைக்காகவும் சீர்பொருந்தப்பண்ணுவதற்காகவும் கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட வேதவாக்கியங்களின் பாகமாக இவை இருக்கின்றன.—2 தீமோத்தேயு 3:16, 17.
கிறிஸ்தவர்கள் இயேசுவின் பிறப்பை கொண்டாட வேண்டும் என்று கடவுள் விரும்பியிருந்தால், பைபிளில் சரியான அந்தத் தேதியைக் கொடுத்திருப்பார். அவ்வாறு கொடுத்திருக்கிறாரா? மேய்ப்பர்கள் இராக்காலங்களில் தங்கள் மந்தைகளை காவல் காத்துக்கொண்டு வெளியே தங்கியிருந்த சமயத்தில் இயேசு பிறந்தார் என்று சொன்ன பின், 19-வது நூற்றாண்டைச் சேர்ந்த பைபிள் கல்விமான் ஆல்பர்ட் பார்ன்ஸ் இந்த முடிவுக்கே வந்தார்: “இதிலிருந்து நம்முடைய இரட்சகர் டிசம்பர் 25-க்கு முன்பே பிறந்தார் என்பது தெளிவாக உள்ளது . . . அந்தச் சமயம், விசேஷமாக பெத்லகேமுக்கு அருகே உயரமான மலைப்பாங்கான இடங்களில் மிகவும் குளிராக இருக்கும். [இயேசு] பிறந்த அந்தச் சமயத்தை கடவுள் மறைத்து வைத்திருக்கிறார். . . . அந்தச் சமயத்தைத் தெரிந்திருப்பது ஒன்றும் அவ்வளவு முக்கியமுமில்லை. அப்படியிருந்தால், அதைப் பற்றிய பதிவை அவர் பத்திரப்படுத்தியிருப்பார்.”
இதற்கு நேர் மாறாக, நான்கு சுவிசேஷ எழுத்தாளர்களும் இயேசு மரித்த நாளைப் பற்றி நமக்கு தெளிவாக எழுதி வைத்துள்ளனர். பஸ்கா அன்று அவர் மரித்தார், அது வசந்த காலத்தில் யூத மாதமாகிய நிசான் 14-ஆம் தேதியில் சம்பவித்தது. மேலுமாக, இயேசு தம் நினைவாக அந்த நாளை நினைவுகூரும்படி தம்மைப் பின்பற்றுகிறவர்களுக்கு குறிப்பாக கட்டளையும் கொடுத்திருக்கிறார். (லூக்கா 22:19) ஆனால் இயேசுவின் பிறந்த நாளையோ அல்லது வேறு எந்த நபரின் பிறந்த நாளையோ கொண்டாடும்படி பைபிளில் இதுபோன்ற எந்தக் கட்டளையும் இல்லை. இயேசுவின் பிறந்த நாளைப் பற்றிய கருத்து வேறுபாடுகளால், அந்தச் சமயத்தில் நடந்த அதிமுக்கிய சம்பவங்களை நாம் கவனிக்கத் தவறிவிடுவோம் என்பதுதான் வருத்தமான விஷயம்.
கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெற்றோர்
இஸ்ரவேலில் இருந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களில், தம் மகனை வளர்ப்பதற்கு கடவுள் எத்தகைய பெற்றோரை தெரிவு செய்தார்? பிரபலம், செல்வம் போன்ற காரியங்களை அவர் எண்ணிப்பார்த்தாரா? இல்லை, பெற்றோரின் ஆன்மீக குணங்களையே யெகோவா கவனித்தார். லூக்கா 1:46-55-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள மரியாளின் ஸ்தோத்திர பாடலை எடுத்துப்பாருங்கள். மேசியாவின் தாயாக ஆகும் ஈடிணையற்ற கெளரவம் தனக்கு கிடைக்கப்போகிறது என்பதை அறிந்த பின் அவர் பாடிய பாடல் இது. பாடலின் சில வரிகள் இவை: “என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது . . . அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்.” அவர் மனத்தாழ்மையுடன், ‘தாழ்மையுள்ளவராக’ யெகோவாவின் அடிமையாக தன்னைக் கருதினார். அதைவிட முக்கியமாக, மரியாள் பாடிய துதிப்பாடலில் காணப்படும் அழகான வார்த்தைகள், அவர் வேதவாக்கியங்களை நன்றாக அறிந்து வைத்திருந்த ஆன்மீகப் பெண் என்பதை வெளிப்படுத்துகின்றன. ஆதாமின் சந்ததியில் வந்த பாவியாக இருந்தபோதிலும், கடவுளுடைய மகனின் பூமிக்குரிய இலட்சிய தாயாக இருப்பதற்கு அவர் தெரிவு செய்யப்பட்டார்.
இயேசுவின் வளர்ப்பு தகப்பனாக ஆன மரியாளின் கணவனைப் பற்றி என்ன? யோசேப்பு தச்சு வேலையை நன்கு அறிந்திருந்தார். கைகளால் கடினமாக உழைக்க மனமுள்ளவராக இருந்தபடியால் ஐந்து மகன்களையும் குறைந்தபட்சம் இரண்டு மகள்களையும் கொண்ட ஒரு குடும்பத்தை அவரால் காப்பாற்ற முடிந்தது. (மத்தேயு 13:55, 56) யோசேப்பு பணக்காரரும் இல்லை. மரியாள் தன் முதற்பேறான மகனை கடவுளுடைய ஆலயத்திற்கு எடுத்துச்செல்வதற்கான சமயம் வந்தபோது ஓர் ஆட்டை தன்னால் பலியாக கொடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் யோசேப்புக்கு இருந்திருக்கும். இதற்கு பதிலாக ஏழைகளுக்கு இருந்த விதிவிலக்கை அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். புதிதாகப் பிறந்த மகனின் தாயைக் குறித்து கடவுளுடைய சட்டம் இவ்வாறு சொன்னது: “ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவளுக்குச் சக்தியில்லாதிருந்தால், இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்றைச் சர்வாங்க தகனபலியாகவும் மற்றொன்றைப் பாவநிவாரணபலியாகவும் கொண்டுவரக்கடவள்; அதினால் ஆசாரியன் அவளுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவள் சுத்தமாவாள்.”—லேவியராகமம் 12:8; லூக்கா 2:22-24.
யோசேப்பு ‘நீதிமானாயிருந்தான்’ என்று பைபிள் சொல்கிறது. (மத்தேயு 1:19) உதாரணமாக, இயேசு பிறக்கும்வரை கன்னியாக இருந்த அவருடைய மனைவியோடே அவர் உடலுறவு கொள்ளவில்லை. இயேசுவின் உண்மையான தந்தை யார் என்பதில் குழப்பம் ஏற்படுவதை இது தடுத்தது. புதிதாக திருமணம் செய்துகொண்டு ஒரே வீட்டில் வசிப்பவர்கள் நெருக்கமான உறவுகளிலிருந்து விலகியிருப்பது எளிதாக இருந்திருக்காது. ஆனால் கடவுளுடைய மகனை வளர்க்கும் அந்த பாக்கியத்தை அவர்கள் இருவருமே அருமையாக போற்றினார்கள் என்பதை அது காட்டியது.—மத்தேயு 1:24, 25.
மரியாளைப் போலவே யோசேப்பும் ஓர் ஆன்மீக நபராக இருந்தார். ஒவ்வொரு வருடமும் தான் செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு வருடந்தோறும் நடைபெற்ற பஸ்கா பண்டிகையை ஆசரிப்பதற்காக குடும்பத்தையும் அழைத்துக்கொண்டு நாசரேத்திலிருந்து எருசலேமுக்கு மூன்று நாள் பிரயாணத்தை அவர் தவறாமல் மேற்கொண்டார். (லூக்கா 2:41) கடவுளுடைய வார்த்தை வாசிக்கப்பட்டு விளக்கப்பட்ட இடமாகிய உள்ளூர் தேவாலயத்தில் நடந்த ஆராதனையில் பங்குகொள்வதை பழக்கமாக்கிக்கொள்ள இளம் இயேசுவுக்கு யோசேப்பு நல்ல பயிற்றுவிப்பை அளித்திருக்க வேண்டும். (லூக்கா 2:51; 4:16) ஆகவே கடவுள் பூமியில் தம் மகனுக்கு சரியான தாயையும் வளர்ப்பு தந்தையையும் தெரிவுசெய்தார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
தாழ்மையுள்ள மேய்ப்பர்களுக்கு மகத்தான ஆசீர்வாதம்
இப்போது ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்த தன் மனைவிக்கு கஷ்டமாக இருக்கும் என்றாலும், இராயனின் கட்டளைப்படி, தன் முன்னோர்களின் ஊருக்கு சென்று தங்களை பதிவுசெய்வதற்காக யோசேப்பு பயணப்பட்டார். பெத்லகேமுக்கு இந்தத் தம்பதி வந்துசேர்ந்தவுடன், நெரிசலான நகரத்தில் அவர்களுக்குத் தங்குவதற்கு இடமில்லை. சூழ்நிலை காரணமாக ஒரு தொழுவத்தில் தங்குவதற்கு அவர்களுக்கு நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அந்தத் தொழுவத்திலேயே இயேசு பிறந்து கிடத்தப்பட்டார். தாழ்ந்த சிந்தையுள்ள இந்தப் பெற்றோரின் விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்காக, இந்தப் பிறப்பு உண்மையில் கடவுளுடைய சித்தமாயிருப்பதை அவர்களுக்கு கடவுள் உறுதிப்படுத்துகிறார். இந்தத் தம்பதிக்கு நம்பிக்கையூட்டுவதற்கு பெத்லகேமிலுள்ள பிரபலமான மூப்பர்களின் ஒரு குழுவை அவர் அனுப்பி வைத்தாரா? இல்லை. அதற்கு பதிலாக, இரவு முழுவதும் வெளியே தங்கி தங்கள் மந்தைகளை காத்துக்கொண்டிருந்த கடின உழைப்பாளிகளான மேய்ப்பர்களுக்கு இந்த விஷயத்தை யெகோவா தேவன் வெளிப்படுத்தினார்.
தேவதூதன் அவர்களுக்கு முன் தோன்றி, பெத்லகேமுக்குச் செல்லுமாறும், அங்கே புதிதாக பிறந்த மேசியா “முன்னணையிலே கிடத்தியிருக்க” அவர்கள் காண்பார்கள் என்றும் சொன்னார். புதிதாக பிறந்த மேசியா ஒரு தொழுவத்தில் இருக்கிறார் என்பதைக் கேட்டபோது தாழ்ந்த சிந்தையுள்ள இந்த மேய்ப்பர்கள் அதிர்ச்சியடைந்தார்களா அல்லது சங்கடப்பட்டார்களா? நிச்சயமாக இல்லை! சிறிதும் தாமதிக்காமல், அவர்கள் தங்கள் மந்தைகளை விட்டுவிட்டு பெத்லகேமுக்குப் பயணப்பட ஆரம்பித்தார்கள். இயேசுவை கண்டபோது, கடவுளுடைய தூதன் தங்களுக்கு என்ன சொன்னார் என்பதை யோசேப்புக்கும் மரியாளுக்கும் தெரிவித்தார்கள். இதிலிருந்து, எல்லா காரியங்களும் கடவுளின் நோக்கப்படியே நடக்கின்றன என்பதை அந்த தம்பதி புரிந்துகொண்டதால் அவர்களின் விசுவாசம் பலப்பட்டது. ‘மேய்ப்பர்கள்’ தங்கள் பங்குக்கு “கேட்டு, கண்ட எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள்.” (லூக்கா 2:8-20) ஆம், காரியங்களை வெளிப்படுத்துவதற்கும் தேவ பயமுள்ள மேய்ப்பர்களை யெகோவா சரியாகவே தெரிவுசெய்திருந்தார்.
மேலே சொல்லப்பட்டவற்றை எண்ணிப்பார்க்கையில், யெகோவாவின் தயவைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் எப்படிப்பட்ட ஆட்களாக இருப்பது அவசியம் என்பதைக் கற்றுக்கொள்கிறோம். நாம் பிரபலத்தையோ செல்வத்தையோ நாட வேண்டியதில்லை. அதற்கு பதிலாக, யோசேப்பு, மரியாள், மேய்ப்பர்கள் ஆகியோரைப் போல, நாம் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து, பொருளாதார காரியங்களுக்கு மேலாக ஆன்மீக அக்கறைகளை வைத்து நம்முடைய அன்பை அவருக்கு நிரூபித்துக் காட்ட வேண்டும். ஆம், இயேசு பிறந்த சமயத்தில் நடந்த சம்பவங்களைப் பற்றிய பதிவை தியானிப்பதன் மூலம் நல்ல பாடங்களை நாம் கற்றுக்கொள்ளலாம்.
[பக்கம் 7-ன் படம்]
மரியாள் இரண்டு புறாக்களை காணிக்கையாக செலுத்தியது எதைக் காட்டுகிறது?
[பக்கம் 7-ன் படம்]
இயேசுவின் பிறப்பைப் பற்றி தெரிவிப்பதற்கு தாழ்ந்த சிந்தையுள்ள மேய்ப்பர்கள் சிலரை கடவுள் தெரிந்துகொண்டார்