குடும்பத்தில் பாசத்தை வெளிக்காட்டுங்கள்
“உன்னால் முடிந்தால் எரித்துவிடு! எரித்துவிடு!” டோரூ தன் மனைவி யோக்கோவிடம் சவால்விடுகிறார்.a “கண்டிப்பா அதைத்தான் செய்யப்போறேன்” என்று பதிலடி கொடுத்துவிட்டு அவர்கள் இரண்டுபேரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட ஃபோட்டோவை தீக்குச்சியால் பற்ற வைத்தாள். அதன்பிறகு, “நான் வீட்டையே எரித்துவிடுவேன்!” என்று ஆவேசமாக கூச்சல் போட்டாள். டோரூவும் மனைவியை அறைந்துவிட்டு வன்முறையால் இந்தத் தர்க்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
மூன்று வருடங்களுக்கு முன்புதான் டோரூவும் யோக்கோவும் திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ்க்கையை ஆரம்பித்தார்கள். அவ்வாறிருக்க, தவறு எங்கு நேர்ந்தது? டோரூ பார்ப்பதற்கு இனியவராக தோன்றினாலும், அவர் தன்னிடம் பாசம் காட்டவில்லை, தன் உணர்ச்சிகளை மதிக்கவில்லை என்று அவர் மனைவி குறைப்பட்டுக் கொண்டாள். அவள் காட்டிய பாசத்தை அவரால் திருப்பிக் காட்டமுடியவில்லை என்பது போல தோன்றியது. இதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் யோக்கோவுக்கு அதிகமதிகமாக எரிச்சலும் கோபமும்தான் வந்தது. தூக்கமின்மை, கவலை, பசியின்மை, எரிச்சல், மன உளைச்சல், திடீர் திடீரென சோர்வான உணர்ச்சிகள் எல்லாமாக சேர்ந்து அவளை வாட்டி எடுத்தது. ஆனாலும் தன் வீட்டில் நிலவிய இந்தப் பதற்றமான சூழ்நிலையை டோரூ கண்டுகொண்டதாக தெரியவில்லை. இதெல்லாம் அவருக்கு சாதாரணமாக தோன்றியது.
‘கையாளுவதற்கு கடினமான காலங்கள்’
இந்தப் பிரச்சினைகளெல்லாம் இன்று சர்வசாதாரணமாகும். நம்முடைய காலத்தில் “இயல்பான பாசம் இல்லாத” ஆட்கள் இருப்பார்கள் என்று பவுல் அப்போஸ்தலன் முன்னறிவித்தார். (2 தீமோத்தேயு 3:1-5, NW) “இயல்பான பாசம் இல்லாத” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் மூல கிரேக்க சொல் இங்கே குடும்பத்திலுள்ளவர்களிடம் காணப்படும் இயல்பான பாசத்தோடு நெருங்கிய தொடர்புடைய சொல்லாகும். நாம் வாழும் காலம் நிச்சயமாகவே பாசத்தில் குறைவுபடும் ஒரு காலமே. மனசுக்குள் பாசமிருந்தால்கூட குடும்பத்திலுள்ளவர்கள் ஒருவருக்கொருவர் அதை வெளியே காட்டுவது அபூர்வம்.
பெற்றோர்கள் பலருக்கு இன்று தங்கள் சொந்த பிள்ளைகளிடமே அன்பையும் பாசத்தையும் எப்படி வெளிக்காட்டுவது என்பது தெரிவதில்லை. சிலர் பாசமே இல்லாத குடும்ப சூழலில் வளர்க்கப்பட்டிருக்கிறார்கள். பாசத்தை உணர்ந்து அதை வெளிக்காட்டினால் வாழ்க்கை இன்னும் மகிழ்ச்சியாகவும் எத்தனை இன்பமாகவும் இருக்கமுடியும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளாமல் இருக்கலாம். டோரூவின் வீட்டு நிலைமையும் இப்படித்தான் என்று தோன்றுகிறது. இவர் சிறு பையனாக இருந்தபோது இவருடைய அப்பா எப்போது பார்த்தாலும் வேலை செய்துகொண்டிருப்பார். இரவில் வீட்டுக்கு மிகவும் லேட்டாகவே வருவார். டோரூவிடம் எப்போதாவதுதான் வாயைத் திறந்து பேசுவார். அப்படியே பேசினாலும் அது வசைமொழியாகவே இருக்கும். அவருடைய அம்மாவும் நாள் முழுக்க வெளியில் சென்று வேலை பார்த்துவந்தார். இவரோடு அவளால் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை. டெலிவிஷன்தான் இவருக்கு ஒரே துணை. கனிவோடு இவரிடம் நாலு வார்த்தை பேசுவதற்கோ இவரை பாராட்டுவதற்கோ வீட்டில் யாரும் இல்லை.
இதற்கு காரணம் கலாச்சார பின்னணியாகவும் இருக்கலாம். லத்தீன் அமெரிக்காவின் சில பகுதிகளில், ஒருவர் தன் மனைவியிடம் பாசத்தை வெளிப்படையாகக் காட்ட வேண்டுமானால், அவர்களது கலாச்சார வழக்கத்துக்கு மாறாகவே அவ்வாறு செய்ய வேண்டியிருக்கும். பல கிழக்கத்திய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில், சொல்லாலோ செயலாலோ பாசத்தை வெளிப்படுத்துவது பாரம்பரியத்துக்கு எதிரானது. கணவன்மார் தங்கள் மனைவிகளிடம் அல்லது பிள்ளைகளிடம் ‘நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்’ என்று சொல்ல சங்கடப்படலாம். ஆனால் காலத்தின் சோதனையை வென்று நிற்கும் மிகச் சிறந்த குடும்ப உறவிலிருந்து ஒரு பாடத்தை நாம் கற்றுக்கொள்ள முடியும்.
முன்மாதிரியான குடும்ப உறவு
குடும்பத்துக்கு மிகச் சிறந்த முன்மாதிரியை யெகோவாவுக்கும் அவருடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசுவுக்குமிடையே இருந்த நெருக்கமான உறவில் காணலாம். அவர்கள் ஒருவருக்கொருவர் அன்பை பரிபூரணமாக வெளிப்படுத்தினர். எண்ணிலடங்கா ஆண்டுகளாக ஆவி சிருஷ்டியாயிருந்து பிற்பாடு இயேசு கிறிஸ்துவாக ஆனவர் தம் தகப்பனோடு சந்தோஷமான உறவை அனுபவித்து மகிழ்ந்தார். அந்த பந்தத்தை அவர் இவ்விதமாக வருணித்தார்: “நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன்.” (நீதிமொழிகள் 8:30) தன் தந்தையின் அன்பைப் பற்றி மகனுக்கு எள்ளளவும் சந்தேகமிருக்கவில்லை. ஆகவேதான் யெகோவா தன்னிடமாக நித்தமும் விசேஷ அன்புள்ளவராக இருந்ததாக மற்றவர்களிடம் அவரால் சொல்ல முடிந்தது. தன் தந்தையின் பக்கத்திலிருக்கையில் அவரால் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முடிந்தது.
மனிதனாக பூமியிலிருந்த போதும் கடவுளுடைய குமாரனாகிய இயேசுவிடம் அவருடைய தந்தை வைத்திருந்த ஆழமான அன்பை அவர் திரும்பத் திரும்ப கூறினார். முழுக்காட்டுதல் பெற்ற பிறகு, இயேசு அவருடைய தந்தையின் குரலைக் கேட்டார்: “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்.” (மத்தேயு 3:17) இயேசு பூமியில் தம் வேலையை ஆரம்பிக்கையில் இந்த அன்பான வார்த்தைகளைக் கேட்பது அவருக்கு எத்தனை ஆறுதலாக இருந்திருக்கும்! பரலோகத்தில் அவர் வாழ்ந்த வாழ்க்கை முழுவதுமாக அவர் நினைவுக்கு வந்தபோது தம் தந்தையின் அங்கீகார வார்த்தைகளைக் கேட்டு அவர் இருதயம் நெகிழ்ந்துபோயிருக்கும்.
இவ்விதமாக சர்வலோகத்திலுள்ள தன் குடும்பத்திடமாக முழுமையான அளவில் அன்பைக் காட்டுவதில் யெகோவா மிகச் சிறந்த முன்மாதிரியை வைத்துள்ளார். இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால், நாமும் யெகோவாவின் பாசத்தை அனுபவிக்கலாம். (யோவான் 16:27) பரலோகத்திலிருந்து எந்த வார்த்தைகளையும் நாம் கேட்க மாட்டோமென்றாலும் படைப்புகளிலும் இயேசுவின் கிரய பலி ஏற்பாட்டிலும் மற்ற வழிகளிலும் யெகோவாவின் அன்பு வெளிப்படுவதை நாம் காண்போம். (1 யோவான் 4:9, 10) யெகோவா நம் ஜெபங்களை செவிகொடுத்து கேட்டு, நமக்கு அதிக பிரயோஜனமாக இருக்கும் வகையில் அவற்றுக்கு பதிலளிக்கிறார். (சங்கீதம் 145:18; ஏசாயா 48:17) யெகோவாவோடு நெருக்கமான உறவை வளர்த்துக்கொள்ளும்போது அவருடைய அன்பான கவனிப்பை அதிகமாய் மதித்துணருகிறோம்.
இயேசு ஒற்றுணர்வை, கரிசனையை, தயவை, மற்றவர்களிடம் ஆழ்ந்த அக்கறையை எவ்வாறு காட்டுவது என்பதை தம் தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டார். அவர் இவ்விதமாக விளக்கினார்: “அவர் [தந்தை] எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார். பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருந்து, தாம் செய்கிறவைகளையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார்.” (யோவான் 5:19, 20) பூமியிலிருக்கும்போது இயேசு வைத்த முன்மாதிரியைப் படிப்பதன் மூலம் பாசத்தை வாய்விட்டு வெளிப்படுத்தும் அந்தக் கலையை நாமும்கூட கற்றுக்கொள்ளலாம்.—பிலிப்பியர் 1:8.
குடும்பத்தில் பாசம்—எவ்வாறு?
‘தேவன் அன்பாகவே இருப்பதாலும்’ நாம் ‘அவருடைய சாயலில்’ படைக்கப்பட்டிருப்பதாலும் அன்பை உணர்வதற்கும் அதை வெளிப்படுத்துவதற்கும் நமக்கு திறமை இருக்கிறது. (1 யோவான் 4:8; ஆதியாகமம் 1:26, 27) ஆனால் அன்பை வெளிப்படுத்தும் திறமை நமக்கிருந்தாலும் அது தானாக வந்துவிடாது. பாசத்தை வெளிப்படுத்த வேண்டுமானால், நம் துணைவரிடமும் பிள்ளைகளிடமும் பாசமாக உணர வேண்டும். அவர்களை கூர்ந்து கவனித்து அவர்களில் இருக்கும் நல்ல குணங்களை கண்டுபிடியுங்கள். அவை முதலில் எவ்வளவு அற்பமாக தோன்றினாலும் அவற்றைப் பற்றி ஆழ்ந்து யோசியுங்கள். ‘என் கணவரிடம் [மனைவியிடம் அல்லது பிள்ளைகளிடம்] அப்படி எந்தக் கவர்ச்சியான குணமும் இல்லையே’ என்று நீங்கள் ஒருவேளை சொல்லலாம். பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைத்திருந்தால், துணைவர்களிடம் பாசம் காட்டுவது கடினமாக இருக்கலாம். சிலர் தங்களுக்குப் பிள்ளைகள் வேண்டாம் என்று நினைத்திருக்கலாம். ஆனாலும்கூட, பொ.ச.மு. பத்தாம் நூற்றாண்டில் யெகோவா தம்முடைய அடையாளப்பூர்வமான மனைவியாகிய இஸ்ரவேல் தேசத்தாரைக் குறித்து எவ்வாறு உணர்ந்தார் என்பதை நினைத்துப்பாருங்கள். தீர்க்கதரிசியாகிய எலியா பத்து கோத்திர இஸ்ரவேல் தேசத்தில் யெகோவாவின் வணக்கத்தார் வேறு எவரும் இல்லை என்ற முடிவுக்கு வந்தபோதிலும் யெகோவா அவர்களை மிகவும் கவனமாக சோதித்துப்பார்த்து கணிசமான ஒரு எண்ணிக்கையை—மொத்தத்தில் 7,000 பேரை—கண்டுபிடித்தார். அவருடைய பார்வைக்கு பிரியமான குணங்கள் இவர்களிடம் இருந்தன. உங்கள் குடும்பத்திலுள்ளவர்களிடம் என்ன நல்ல குணங்கள் இருக்கின்றன என்பதை தேடிப்பார்ப்பதன் மூலம் நீங்கள் யெகோவாவை பின்பற்ற முடியுமா?—1 இராஜாக்கள் 19:14-18.
ஆனால் உங்கள் பாசத்தை குடும்பத்திலுள்ளவர்கள் தெரிந்துகொள்வதற்கு அதை நீங்கள் அவர்களிடம் வாய்விட்டு சொல்ல முயற்சி எடுக்க வேண்டும். பாராட்டும்படி நீங்கள் எதையாவது கவனித்தால், அதை வாய்விட்டு சொல்லுங்கள். திறமைசாலியான ஒரு மனைவியை விவரிக்கும்போது அவளுடைய குடும்பத்தாரைப் பற்றி ஒரு சிறப்பான அம்சத்தை கடவுளுடைய வார்த்தை குறிப்பிடுகிறது: “அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப் பாக்கியவதி என்கிறார்கள்; அவள் புருஷனும் அவளைப் பார்த்து . . . புகழுகிறான்.” (நீதிமொழிகள் 31:28, 29) குடும்பத்திலுள்ளவர்கள் ஒருவரையொருவர் எவ்வாறு தாராளமாக வாய்நிறைய பாராட்டினார்கள் என்பதை கவனியுங்கள். தன் மனைவியை வாயார புகழ்வதன் மூலம் ஒரு தந்தை தன் மகனுக்கு சிறந்த முன்மாதிரியை வைக்கிறார். அவன் திருமணம் செய்துகொள்ளும்போது தன் துணையை பஞ்சமில்லாமல் பாராட்டும்படி அவர் அவனை உற்சாகப்படுத்துகிறார்.
அதேவிதமாக, பெற்றோர் தங்கள் பிள்ளைகளையும் பாராட்ட வேண்டும். இதனால் பிள்ளைகளின் இருதயங்களில் சுய மரியாதையை புகட்ட முடியும். ஆம், ஒருவருக்கு தன்னிடமே மரியாதை இல்லாதபோது அவர் எவ்விதமாக ‘தன்னிடத்தில் அன்புகூருவது போல பிறனிடத்திலும் அன்புகூர’ முடியும்? (மத்தேயு 22:39) மறுபட்சத்தில், பெற்றோர் ஒருபோதும் பிள்ளைகளைப் பாராட்டாமல் எப்போது பார்த்தாலும் பிள்ளைகளில் குறை கண்டுபிடித்துக் கொண்டே இருந்தால், பிள்ளைகள் எளிதாக தன்மானத்தை இழந்துவிடுவார்கள், அவர்களால் மற்றவர்களுக்குப் பாசத்தைக் காட்ட முடியாமல் போய்விடும்.—எபேசியர் 4:31, 32.
நீங்கள் உதவியைப் பெறலாம்
அன்பான குடும்ப சூழலில் நீங்கள் வளரவில்லை என்றால் அப்போது என்ன? அப்படியிருந்தாலும், பாசத்தை வெளிக்காட்ட கற்றுக்கொள்ளலாம். பிரச்சினையை கண்டுணர்ந்து இதில் முன்னேற்றம் காண வேண்டும் என்று ஒப்புக்கொள்வதே முதல் படியாகும். கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் இந்த விஷயத்தில் மிகவும் உதவியாக உள்ளது. அதை ஒரு கண்ணாடிக்கு ஒப்பிடலாம். கண்ணாடி போன்றிருக்கும் பைபிள் போதனைகளில் நம்மை நாமே சோதித்துப் பார்த்தால், நம்முடைய சிந்தனையிலுள்ள குறைகள் அல்லது தவறுகள் நமக்கு வெளிப்படுத்தப்படுகின்றன. (யாக்கோபு 1:23) பொருந்தா குணங்களை, பைபிள் போதனைகளுக்கு இசைவாக, நாம் சரிசெய்து கொள்ளலாம். (எபேசியர் 4:20-24; பிலிப்பியர் 4:8, 9) இதை நாம் விடாமல் செய்து, ‘‘நன்மை செய்கிறதில் சோர்ந்துபோகாமல்” இருக்க வேண்டும்.—கலாத்தியர் 6:9.
வளர்ப்பு சூழல் அல்லது கலாச்சாரம் காரணமாக பாசம் காட்டுவது சிலருக்கு கடினமாக இருக்கலாம். ஆனாலும், இதுபோன்ற தடைகளை மேற்கொள்ளலாம் என்றே சமீப ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ‘சிறுவயதில் பயின்று இதயத்தில் மிக ஆழமாக வேரூன்றிய பழக்கங்களைக்கூட திருத்தியமைக்க முடியும்’ என மனநல நிபுணர் டான்யல் கோல்மன் விவரிக்கிறார். இருதயத்தில் மிகவும் உறுதியாக வேர்கொண்ட மனோபாவங்களைகூட கடவுளுடைய ஆவியின் உதவியால் மாற்றியமைக்க முடியும் என பைபிள் 19-க்கும் மேற்பட்ட நூற்றாண்டுகளுக்கு முன்னரே குறிப்பிட்டது. அது இவ்வாறு அறிவுரை கூறியது: ‘பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு, . . . புதிய மனுஷனை தரித்துக்கொள்ளுங்கள்.’—கொலோசெயர் 3:9, 10.
பிரச்சினையை புரிந்துகொண்டுவிட்டால், குடும்பமாக தங்கள் தேவைகளை மனதில் வைத்து பைபிளை படிக்கலாம். உதாரணமாக, ‘பாசத்தைப்’ பற்றி பைபிள் என்னவெல்லாம் சொல்கிறது என்பதை ஏன் ஆராய்ந்து பார்க்கக்கூடாது? ஒருவேளை இதுபோன்ற வேதவசனத்தை நீங்கள் காணலாம்: “யோபின் பொறுமையைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே.” (யாக்கோபு 5:11) அதன் பிறகு யோபுவின் பைபிள் பதிவை வாசித்துவிட்டு யெகோவா எவ்விதமாக யோபுவிடம் மிகுந்த உருக்கமும் இரக்கமுமாயிருந்தார் என்பதை முக்கியமாக யோசித்துப் பாருங்கள். அப்போது உங்கள் குடும்பத்திடமாக மிகுந்த உருக்கமும் இரக்கமுமாய் இருப்பதில் யெகோவாவைப் பின்பற்ற நீங்கள் நிச்சயமாக விரும்புவீர்கள்.
ஆனால் நாம் அபூரணராக இருப்பதால், நாவை பயன்படுத்தும் விஷயத்தில் “நாம் எல்லாருமே அடிக்கடி தவறுகிறோம்.” (யாக்கோபு 3:2) குடும்பத்தினரிடம் பேசும்போது கட்டியெழுப்பும் விதமாக நாம் பேச மறந்துவிடுகிறோம். இங்குதான் நாம் ஜெபம் செய்வதும் யெகோவாவின் மீது சார்ந்திருப்பதும் அவசியமாகிறது. சோர்ந்துவிடாதீர்கள். “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.” (1 தெசலோனிக்கேயர் 5:17) குடும்பத்தில் பாசத்துக்காக ஏங்கிக்கொண்டிருப்பவர்களுக்கும் அதே சமயத்தில் பாசத்தைக் காட்ட விரும்பியும் அதை காட்ட முடியாமல் இருப்பவர்களுக்கும் யெகோவா உதவி செய்வார்.
அதோடு யெகோவா தயவாக கிறிஸ்தவ சபையில் உதவியை அளித்திருக்கிறார். யாக்கோபு இவ்வாறு எழுதினார்: “உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய் பூசி, அவனுக்காக ஜெபம் பண்ணக்கடவர்கள்.” (யாக்கோபு 5:14) ஆம், ஒருவருக்கொருவர் பாசத்தை வெளிக்காட்டுவதில் பிரச்சினை இருக்கும் குடும்பங்களுக்கு யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளிலுள்ள மூப்பர்கள் பெரும் உதவியாக இருப்பார்கள். அவர்கள் மனநல மருத்துவர்கள் இல்லை, ஆனால் உடன் விசுவாசிகளுக்கு அவர்கள் பொறுமையாக உதவி செய்வார்கள். இதைச் செய்யுங்கள், அதைச் செய்யுங்கள் என்று திட்டவட்டமாக அவர்கள் சொல்ல மாட்டார்கள், ஆனால் யெகோவாவின் நோக்குநிலையை அவர்களுக்கு நினைவூட்டி, அவர்களோடு சேர்ந்து அவர்களுக்காக ஜெபம் செய்வார்கள்.—சங்கீதம் 119:105; கலாத்தியர் 6:1.
டோரூ, யோக்கோ ஆகியோரின் விஷயத்தில், கிறிஸ்தவ மூப்பர்கள் அவர்களுடைய பிரச்சினையை காதுகொடுத்து கேட்டு அவர்களுக்கு ஆறுதல் சொன்னார்கள். (1 பேதுரு 5:2, 3) ‘புருஷரிடத்தில் அன்புள்ளவர்களாயிருப்பதற்கு’ புத்தி சொல்கிற முதிர்ச்சிவாய்ந்த ஒரு கிறிஸ்தவ பெண்ணின் தோழமையிலிருந்து யோக்கோ பயனடைவதற்காக சிலசமயங்களில் ஒரு மூப்பரும் அவருடைய மனைவியும் அவரை சந்தித்தார்கள். (தீத்து 2:3, 4) உடன் கிறிஸ்தவர்களின் பாடுகளையும் வேதனைகளையும் புரிந்துகொண்டு அவர்களுக்கு பரிவு காட்டுவதன் மூலம் மூப்பர்கள், “காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும்” இருக்கிறார்கள்.—ஏசாயா 32:1, 2.
உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விஷயத்தில் தனக்குப் பிரச்சினை இருப்பதையும் “கடைசி நாட்களில்” குடும்ப ஏற்பாட்டை சாத்தான் தாக்குகிறான் என்பதையும் தயவுள்ள மூப்பர்களின் உதவியால் டோரூ புரிந்துகொண்டார். (2 தீமோத்தேயு 3:1) டோரூ தன் பிரச்சினையை சமாளிக்க தீர்மானித்தார். வளரும் பருவத்தில் தன்னிடம் யாரும் அன்பு காட்டாதபடியால்தான் தன்னால் இப்போது அன்பை வெளிப்படுத்த முடியவில்லை என்பதை அவர் புரிந்துகொள்ள ஆரம்பித்தார். கருத்தாக பைபிளைப் படித்து ஜெபம் செய்வதன் மூலம் டோரூ படிப்படியாக யோக்கோவின் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு செயல்பட ஆரம்பித்தார்.
டோரூமேல் யோக்கோவுக்கு கோபமிருந்தாலும், அவருடைய குடும்ப பின்னணியைப் புரிந்துகொண்டு தன்னுடைய தவறுகளையும் உணர்ந்து கொண்டபோது, தன் கணவனிடம் இருக்கும் நல்ல குணங்களை தேட பெருமுயற்சி செய்தாள். (மத்தேயு 7:1-3; ரோமர் 5:12; கொலோசெயர் 3:12-14) தன் கணவனை நேசிப்பதற்கு தனக்கு பெலத்தைக் கொடுக்குமாறு யெகோவாவிடம் உண்மையாகவே கெஞ்சினாள். (பிலிப்பியர் 4:6, 7) காலப்போக்கில், டோரூ தன் மனைவியிடம் தன் பாசத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார், அவர் மனைவி அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை.
ஆம், குடும்பத்திலுள்ளவர்களிடம் பாசமாக உணரவும் அதை வாய்விட்டு சொல்லவும் உங்களுக்கு கடினமாக இருந்தால்கூட, அந்தப் பிரச்சினையை நீங்கள் நிச்சயமாக மேற்கொள்ள முடியும். இதற்கு கடவுளுடைய வார்த்தை ஆரோக்கியமான வழிநடத்துதலை அளிக்கிறது. (சங்கீதம் 19:7) இந்த விஷயம் எவ்வளவு முக்கியமானது என்பதை புரிந்துகொள்ள வேண்டும், உங்கள் குடும்பத்திலுள்ளவர்களிடம் இருக்கும் நல்லதைக் காண முயற்சி செய்ய வேண்டும், கடவுளுடைய வார்த்தையைப் படித்து அதை பின்பற்ற வேண்டும், ஊக்கமாக ஜெபம் செய்வதன் மூலம் யெகோவாவை சார்ந்திருக்க வேண்டும், முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவ மூப்பர்களின் உதவியை நாட வேண்டும். இதையெல்லாம் செய்வதன் மூலம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்குமிடையே பெருந்தடங்கல் போல தோன்றும் ஒன்றை தகர்த்தெறிந்துவிடலாம். (1 பேதுரு 5:7) ஐக்கிய மாகாணங்களில் ஒரு கணவன் பெற்ற அதே சந்தோஷத்தை நீங்களும் பெறமுடியும். அவருடைய மனைவியிடமாக பாசத்தை வெளிப்படுத்தும்படி அவர் ஊக்குவிக்கப்பட்டார். கடைசியாக தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அந்தக் கணவன் “நான் உன்னை நேசிக்கிறேன்” என்று வாய்விட்டு சொன்னபோது, அவளுடைய பிரதிபலிப்பில் அவர் அசந்துபோனார். ஆனந்தக் கண்ணீரோடு அவள் இவ்வாறு சொன்னாள்: “நானும் உங்களை நேசிக்கிறேன், ஆனால் இந்த 25 ஆண்டுகளில் இப்போதுதான் நீங்கள் முதல்முறையாக இதை என்னிடம் சொல்லியிருக்கிறீர்கள்” என்று சொன்னாள். உங்கள் துணைவரிடமும் உங்கள் பிள்ளைகளிடமும் உங்களுக்கிருக்கும் பாசத்தை வெளிப்படுத்த அவ்வளவு காலம் காத்திருக்க வேண்டாம்!
[அடிக்குறிப்பு]
a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
[பக்கம் 28-ன் படம்]
யெகோவா அவருடைய வார்த்தையாகிய பைபிளில் உதவியை அளிக்கிறார்