முழு இருதயத்தோடு யெகோவாவில் நம்பிக்கையாயிருங்கள்
“உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்.”—சங்கீதம் 9:10.
இன்று நம் நலனை அச்சுறுத்தும் அநேக காரியங்கள் சூழ்ந்திருப்பதால் நாம் இயல்பாகவே பாதுகாப்புக்காக யாரையாவது அல்லது எதையாவது நாடித்தேடுகிறோம். நிறைய பணம் இருந்தால் போதும் பிற்காலத்தில் பாதுகாப்பாக இருக்கலாம் என சிலர் நினைக்கிறார்கள்; ஆனால் உண்மையைச் சொன்னால், பணம் நிலையற்றது. “தன் ஐசுவரியத்தை நம்புகிறவன் விழுவான்” என பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 11:28) இன்னும் சிலர் மனித தலைவர்கள் மீது நம்பிக்கை வைக்கிறார்கள்; ஆனால் அவர்களில் சிறந்த தலைவர்களும்கூட தவறு செய்து விடுகிறார்கள். காலப்போக்கில் அவர்கள் எல்லாரும் இறந்துவிடுகிறார்கள். ஆகவேதான், “பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள்” என பைபிள் ஞானமாக சொல்கிறது. (சங்கீதம் 146:3) நம் சொந்த முயற்சிகளையே நம்பியிருக்கக் கூடாது என்றும் கடவுளால் ஏவப்பட்ட அந்த வார்த்தைகள் எச்சரிக்கின்றன. நாமும் சாதாரண ‘மனுபுத்திரர்’தானே.
2 ஏசாயா தீர்க்கதரிசி தன் காலத்தில் வாழ்ந்த இஸ்ரவேல் தேசத் தலைவர்களை குற்றம் சாட்டினார். ஏனெனில் அவர்கள் ‘பொய்யை தங்களுக்கு அடைக்கலமாக’ கொண்டிருந்தனர். (ஏசாயா 28:15-17) அவர்கள் பாதுகாப்பைத் தேடி அண்டை தேசங்களுடன் அரசியல் ஒப்பந்தங்களை செய்தனர். அந்த ஒப்பந்தங்கள் நம்பகமானவை அல்ல, வெறும் பொய். அவ்வாறே இன்றும் பல மதத் தலைவர்கள் அரசியல் தலைவர்களுடன் நட்புறவை வளர்த்துக்கொள்கிறார்கள். அந்தக் கூட்டுறவுகளும் கண்டிப்பாக ‘பொய்யாகி விடும்.’ (வெளிப்படுத்துதல் 17:16, 17) அப்படிப்பட்ட கூட்டு ஒப்பந்தங்கள் நிலையான பாதுகாப்பை தர முடியாது.
யோசுவா மற்றும் காலேபின் சிறந்த உதாரணங்கள்
3 அப்படியானால் நாம் பாதுகாப்பை எங்கே கண்டடைவது? மோசேயின் காலத்தில் யோசுவாவும் காலேபும் எங்கே பாதுகாப்பை கண்டடைந்தார்களோ அதே இடத்தில்தான் கண்டடைய வேண்டும். இஸ்ரவேலர் எகிப்திலிருந்து விடுதலையானதுமே வாக்குப்பண்ணப்பட்ட தேசமாகிய கானானுக்குச் செல்ல ஆயத்தமாக இருந்தார்கள். அந்தத் தேசத்தை வேவு பார்க்க 12 பேர் அனுப்பப்பட்டார்கள்; 40 நாட்களின் முடிவில் அவர்கள் திரும்பி வந்து தாங்கள் பார்த்த விஷயங்களை சொன்னார்கள். இரண்டே பேர், அதாவது, யோசுவாவும் காலேபும் மட்டுமே இஸ்ரவேலர் அங்கு வெற்றிகரமாக வாழ முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்கள். மற்றவர்களோ அது நல்ல தேசம் என்பதை ஒப்புக்கொண்டாலும், “அந்த தேசத்திலே குடியிருக்கிற ஜனங்கள் பலவான்கள்; பட்டணங்கள் அரணிப்பானவைகளும் மிகவும் பெரியவைகளுமாய் இருக்கிறது . . . நாம் போய் அந்த ஜனங்களோடே எதிர்க்க நம்மாலே கூடாது; அவர்கள் நம்மைப் பார்க்கிலும் பலவான்கள்” என்று சொன்னார்கள்.—எண்ணாகமம் 13:27, 28, 31.
4 இந்தப் பத்து வேவுகாரர்களும் சொன்னதைக் கேட்டு இஸ்ரவேலர் பயந்துபோய், மோசேக்கு எதிராக முறுமுறுக்கவும் ஆரம்பித்தனர். இதைக் கேட்டு கடைசியில் உள்ளம் கொதித்துப்போன யோசுவாவும் காலேபும் “நாங்கள் போய்ச் சுற்றிப்பார்த்து சோதித்த தேசம் மகா நல்ல தேசம். கர்த்தர் நம்மேல் பிரியமாயிருந்தால், அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார். கர்த்தருக்கு விரோதமாக மாத்திரம் கலகம் பண்ணாதிருங்கள்” என்று சொன்னார்கள். (எண்ணாகமம் 14:6-9) இருந்தாலும், அந்த இஸ்ரவேலர் அதற்கு செவிசாய்க்கவில்லை; அதன் விளைவாக வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் கால்வைக்க அந்த சமயத்தில் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
5 பத்து வேவுகாரர்களும் கெட்ட செய்தியை சொன்னபோது ஏன் யோசுவாவும் காலேபும் மட்டும் நல்ல செய்தியை சொன்னார்கள்? அங்கிருந்த பலத்த பட்டணங்களையும் அங்கேயே குடியிருந்து வந்த ஜனங்களையும் அந்த 12 பேருமே பார்த்தார்கள். அந்த தேசத்தைத் தோற்கடிக்கும் அளவுக்கு இஸ்ரவேலர் பலவான்கள் அல்ல என்று அந்த 10 பேரும் சொன்னது உண்மைதான். யோசுவாவும் காலேபும்கூட அதை அறிந்திருந்தார்கள். என்றாலும், அந்த 10 பேரும் காரியங்களை மனித கண்ணோட்டத்தில்தான் பார்த்தனர். மறுபட்சத்தில், யோசுவாவும் காலேபுமோ யெகோவா மீது நம்பிக்கை வைத்தனர். எகிப்திலும், சிவந்த சமுத்திரத்திலும், சீனாய் மலையடிவாரத்திலும் யெகோவா செய்த பலத்த செய்கைகளை அவர்கள் கண்கூடாக பார்த்திருக்கிறார்கள். ஏன், பல வருடங்களுக்குப் பின்பு எரிகோவைச் சேர்ந்த ராகாபும்கூட அந்த செய்கைகளைக் குறித்து கேள்விப்பட்டதை வைத்துதானே யெகோவாவின் ஜனங்களுக்காக தன் உயிரையே பணயம் வைக்க முன்வந்தாள்! (யோசுவா 2:1-24; 6:22-25) யெகோவாவின் செய்கைகளைக் கண்ணாரக்கண்ட யோசுவாவுக்கும் காலேபுக்கும், கடவுள் தொடர்ந்து தம் ஜனங்களுக்காக யுத்தம் செய்வார் என்பதில் முழு நம்பிக்கை இருந்தது. நாற்பது வருடங்களுக்கு பிற்பாடு, யோசுவாவின் தலைமையில் இஸ்ரவேலரின் புதிய சந்ததி கானானுக்குள் படையெடுத்து அத்தேசத்தை கைப்பற்றியபோது அவர்களுடைய நம்பிக்கை மெய்யென நிரூபணமானது.
யெகோவாவை ஏன் முழுமையாக நம்ப வேண்டும்
6 ‘கையாளுவதற்கு கடினமான இந்தக் கொடிய காலங்களில்’ நாமும் இஸ்ரவேலரைப் போலவே இருக்கிறோம்; நம்மை எதிர்ப்பவர்கள் நம்மைவிட பலசாலிகள். (2 தீமோத்தேயு 3:1, NW) ஒழுக்கப் பிரகாரமாகவும், ஆவிக்குரிய பிரகாரமாகவும் சில சமயங்களில் சரீர பிரகாரமாகவும் நாம் அழுத்தங்களை எதிர்ப்படுகிறோம். அந்த அழுத்தங்களை நம் சொந்த பலத்தில் எதிர்த்து நிற்க முடியாது; ஏனெனில் அவை மனிதனைவிட அதிசக்தி வாய்ந்த பிசாசாகிய சாத்தானிடமிருந்து பிறக்கின்றன. (எபேசியர் 6:12; 1 யோவான் 5:19) அப்படியானால் நாம் உதவியை எங்கிருந்து பெற முடியும்? பூர்வ காலத்தில் வாழ்ந்த விசுவாசமுள்ள ஒருவர் யெகோவாவிடம் ஜெபத்தில், “உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்” என்று சொன்னார். (சங்கீதம் 9:10) நாம் யெகோவாவை உண்மையிலேயே அறிந்து, அவருடைய பெயர் எதைக் குறிக்கிறது என்பதை புரிந்துகொண்டால் யோசுவாவையும் காலேபையும் போல நாமும் சந்தேகமின்றி அவரில் நம்பிக்கை வைப்போம்.—யோவான் 17:3.
7 நாம் ஏன் யெகோவாவில் நம்பிக்கை வைக்க வேண்டும்? யோசுவாவும் காலேபும் அவ்வாறு நம்பிக்கை வைத்ததற்கு ஒரு காரணம், அவர்கள் அவருடைய வல்லமையின் அத்தாட்சிகளை பார்த்திருக்கிறார்கள். நாமும் அந்த வல்லமையின் அத்தாட்சிகளை பார்த்திருக்கிறோம். உதாரணமாக, இந்த அண்டமும் அதிலுள்ள கோடிக்கணக்கான நட்சத்திர மண்டலங்களும் உட்பட யெகோவாவின் படைப்புகளை கவனியுங்கள். யெகோவாவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிற இந்தப் பிரமாண்டமான சேனைகள், உண்மையிலேயே அவர் சர்வவல்லமையுடையவர் என்பதை நிரூபிக்கின்றன. படைப்பின் அற்புதங்களை தியானிக்கையில், யோபு சொன்னதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்; அவர் யெகோவாவைப் பற்றி, “அவரை மறிப்பவன் யார்? நீர் என்ன செய்கிறீர் என்று அவரைக் கேட்பவன் யார்?” என்று சொன்னார். (யோபு 9:12) உண்மையில், யெகோவா நம் பக்கம் இருந்தால், இந்த அண்டத்தில் நாம் யாருக்குமே பயப்படத் தேவையில்லை.—ரோமர் 8:31.
8 யெகோவாவின் வார்த்தையாகிய பைபிளைப் பற்றியும் சிந்தித்துப் பாருங்கள். எடுக்க எடுக்க குறையாத தெய்வீக ஞானத்தின் ஊற்றுமூலமாக விளங்கும் இப்புத்தகம் வல்லமை வாய்ந்தது; தவறான பழக்கங்களைக் களைந்து யெகோவாவின் சித்தத்திற்கு இசைவாக வாழ இது நமக்கு உதவுகிறது. (எபிரெயர் 4:12) இந்த பைபிளின் வாயிலாகவே யெகோவாவின் பெயரையும் அதன் அர்த்தத்தையும் நாம் அறிந்து கொள்கிறோம். (யாத்திராகமம் 3:14) யெகோவா தம் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக ஒரு அன்பான தகப்பனாகவோ, நீதியுள்ள நியாயாதிபதியாகவோ, வெற்றி சிறக்கும் போர்வீரராகவோ தம் விருப்பப்படி எந்த பாகத்தையும் வகிக்க முடியும் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அவருடைய வார்த்தை எப்போதுமே நிறைவேறுகிறதையும் நாம் பார்க்கிறோம். கடவுளுடைய வார்த்தையை படிக்கையில் சங்கீதக்காரனைப் போலவே நாமும், “உம்முடைய வசனத்தை நம்பியிருக்கிறேன்” என்று சொல்வதற்கு தூண்டப்படுகிறோம்.—சங்கீதம் 119:42; ஏசாயா 40:8.
9 யெகோவாவில் நம்பிக்கை வைப்பதற்கு மீட்கும்பொருள் மற்றொரு காரணத்தை அளிக்கிறது. (மத்தேயு 20:28) நமக்காக ஜீவனைக் கொடுப்பதற்கு ஒரு மீட்கும்பொருளாக தம் சொந்த குமாரனையே கடவுள் அனுப்பியிருப்பது எத்தகைய அருமையான ஏற்பாடு! அந்த மீட்கும்பொருள் உண்மையில் வலிமையானது. மனந்திரும்பி நேர்மை இருதயத்துடன் யெகோவாவிடத்தில் சேருகிற அனைவரின் பாவங்களையும் அது மூடுகிறது. (யோவான் 3:16; எபிரெயர் 6:10; 1 யோவான் 4:16, 19) மீட்கும்பொருளை செலுத்துவதற்காக இயேசு உயிர்த்தெழுப்பப்படுவது அவசியமாக இருந்தது. அந்த அற்புதத்தைக் கண்ணாரக்கண்ட நூற்றுக்கணக்கானோர் அதை ஊர்ஜிதப்படுத்தியிருப்பதால் யெகோவாவில் இன்னுமதிக நம்பிக்கை வைப்பதற்கு காரணத்தை அளிக்கிறது. நம்முடைய நம்பிக்கை வீண்போகாது என்பதற்கு இது ஓர் உத்தரவாதம்.—அப்போஸ்தலர் 17:31; ரோமர் 5:5; 1 கொரிந்தியர் 15:3-8.
10 நாம் ஏன் யெகோவாவில் முழுமையான நம்பிக்கை வைக்கலாம், ஏன் வைக்க வேண்டும் என்பவற்றிற்கு இவையெல்லாம் சில காரணங்களே. இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன; அவற்றில் சில தனிப்பட்ட காரணங்கள். உதாரணமாக, அவ்வப்போது வாழ்க்கையில் நெருக்கடியான சூழ்நிலைகளை நாம் எதிர்ப்படுகிறோம். அவற்றை சமாளிப்பதற்கு யெகோவாவின் வழிநடத்துதலை நாடுகையில், அந்த வழிநடத்துதல் எவ்வளவு நடைமுறையானது என்பதை நம்மால் காண முடிகிறது. (யாக்கோபு 1:5-8) நம் அன்றாட வாழ்க்கையில் யெகோவாவை சார்ந்திருந்ததால் வந்த நல்ல பலன்களை எந்தளவுக்கு காண்கிறோமோ அந்தளவுக்கு அவர் மீது நம் நம்பிக்கையும் பலப்படும்.
தாவீது யெகோவாவில் நம்பிக்கை வைத்தார்
11 பூர்வ இஸ்ரவேலரான தாவீது யெகோவாவில் நம்பிக்கை வைத்த ஒருவர். அவரை கொலை செய்ய வகைதேடிக்கொண்டிருந்த அரசனாகிய சவுல் அச்சுறுத்தலாக இருந்தார்; இஸ்ரவேலை கீழ்ப்படுத்த முயன்று கொண்டிருந்த வலிமையான பெலிஸ்திய சேனையும் அச்சுறுத்தலாக இருந்தது. இருந்தாலும், அவர் உயிர்பிழைத்து வெற்றியும் கண்டார். எப்படி? தாவீதுதானே சொல்கிறார்: “கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்?” (சங்கீதம் 27:1) அவ்வாறு யெகோவாவில் நம்பிக்கை வைத்தால் நாமும் வெற்றி சிறப்போம்.
12 ஒரு சந்தர்ப்பத்தில் தாவீது இவ்வாறு ஜெபம் செய்தார்: “தேவனே, என் விண்ணப்பத்தில் என் சத்தத்தைக் கேட்டருளும்; சத்துருவால் வரும் பயத்தை நீக்கி, என் பிராணனைக் காத்தருளும். துன்மார்க்கர் செய்யும் இரகசிய ஆலோசனைக்கும், அக்கிரமக்காரருடைய கலகத்துக்கும் என்னை விலக்கி மறைத்தருளும். அவர்கள் தங்கள் நாவைப் பட்டயத்தைப்போல் கூர்மையாக்கி, மறைவுகளில் உத்தமன் [“குற்றமற்றவன்,” NW] மேல் எய்யும் பொருட்டுக் கசப்பான வார்த்தைகளாகிய தங்கள் அம்புகளை நாணேற்றுகிறார்கள்.” (சங்கீதம் 64:1-4) தாவீது இந்த வார்த்தைகளை எழுதியதன் காரணம் நமக்கு திட்டமாக தெரியாது. ஆனால் இன்றும்கூட எதிரிகள் ‘தங்கள் நாவை கூர்மையாக்குவதை’ அதாவது, தங்கள் வார்த்தையை போராயுதமாக பயன்படுத்துவதை நாம் அறிவோம். பொய்யான தகவல்களாகிய “அம்புகளை” போன்ற வார்த்தைகளைப் பேசியோ எழுதியோ குற்றமற்ற கிறிஸ்தவர்கள் மீது ‘எய்கிறார்கள்.’ அச்சமயங்களில் நாம் தடுமாற்றமின்றி யெகோவாவில் நம்பிக்கை வைத்தால் என்ன நடக்கும்?
13 தாவீது மேலுமாக சொல்வதாவது: “தேவன் சடிதியாய் அவர்கள் மேல் அம்புகளை எய்வார், அவர்கள் காயப்படுவார்கள், அவர்கள் ஒருவரை இடறிவிழச் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் நாவே அவர்களுக்கு எதிராக திரும்புகிறது. . . . நீதிமான் யெகோவாவுக்குள் மகிழ்ந்து, மெய்யாகவே அவரிடம் அடைக்கலம் புகுவான்.” (சங்கீதம் 64:7-10, NW) விரோதிகள் நமக்கு எதிராக தங்கள் நாவை கூர்மையாக்கினாலும் முடிவில் ‘தங்கள் நாவு தங்களுக்கே எதிராக திரும்பிவிடும்.’ முடிவில் யெகோவா காரியங்களை சிறந்த பலன்தரும் வண்ணம் மாற்றிவிடுவார்; அதன்மூலம் அவரில் நம்பிக்கை வைத்தவர்கள் அவருக்குள் மனமகிழ்ச்சியடைவார்கள்.
எசேக்கியாவின் நம்பிக்கை வீண்போகவில்லை
14 யெகோவாவில் நம்பிக்கை வைத்த மற்றொருவர்தான் எசேக்கியா ராஜா. அவருடைய நம்பிக்கை வீண்போகவில்லை. எசேக்கியாவின் ஆட்சியின் போது பலத்த அசீரிய சேனை எருசலேமை அச்சுறுத்தியது. அந்த சேனை அநேக தேசங்களை முறியடித்திருந்தது. எருசலேமைத் தவிர யூதாவின் மற்ற நகரங்களையும்கூட அது வீழ்த்தியிருந்தது; எருசலேமையும் வென்றுவிடுவதாக சனகெரிப் மார்தட்டிக் கொண்டான். உதவிக்காக எகிப்தை நம்புவது வீண் என்பதை ரப்சாக்கே மூலமாக அவன் சரியாகவே குறிப்பிட்டான். ஆனால், அதற்குப் பின்பு அவன், “நீ நம்பிக்கை வைத்துள்ள உன் கடவுள், ‘எருசலேம் அசீரிய மன்னன் கையில் ஒப்புவிக்கப்பட மாட்டாது’ என்று சொல்லி உன்னை ஏமாற்ற விடாதே” என்று சொன்னான். (ஏசாயா 37:10, பொது மொழிபெயர்ப்பு) என்றாலும், யெகோவா ஏமாற்றுகிறவர் அல்ல என்பதை எசேக்கியா அறிந்திருந்தார். ஆகவே, அவர் ‘எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்களெல்லாம் அறியும்படிக்கு, எங்களை [அசீரியன்] கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று’ சொல்லி ஜெபம் செய்தார். (ஏசாயா 37:20) எசேக்கியாவின் ஜெபத்தை யெகோவா கேட்டார். ஒரு தேவதூதன், ஒரே இரவில் 1,85,000 அசீரிய படைவீரர்களை கொன்று போட்டார். எருசலேம் தப்பியது, சனகெரிப்பும் யூதாவை விட்டே போய்விட்டான். இச்சம்பவத்தைக் கேள்விப்பட்ட அனைவரும் யெகோவாவின் மகத்துவத்தை அறிந்துகொண்டனர்.
15 எசேக்கியாவைப் போல நாமும் இன்று ஒரு போரில் ஈடுபட்டிருக்கிறோம். அது ஆவிக்குரிய போர். ஆனால், ஆவிக்குரிய போர்வீரர்களாக நம் உயிரை தக்கவைத்துக் கொள்வதற்கான திறமைகளை நாம் வளர்த்துக்கொள்வது அவசியம். எப்படிப்பட்ட தாக்குதல்கள் நமக்கு வரலாம் என்பதை முன்னறிந்து அவற்றை எதிர்த்துப் போராட நம்மை பக்குவப்படுத்திக் கொள்வதும் அவசியம். (எபேசியர் 6:11, 12, 17) இந்த நிலையற்ற உலகில் சூழ்நிலைகள் திடீரென மாறலாம். எதிர்பாராத விதமாக சமுதாயத்தில் கலவரம் தலைதூக்கலாம். மத சகிப்பு காட்டி வந்த நாடுகள் அதற்கு இடமளிக்காமல் போகலாம். ஆகவே, எசேக்கியாவைப் போல யெகோவாவில் அசைக்கமுடியாத நம்பிக்கையை வளர்த்து நம்மை பக்குவப்படுத்திக் கொள்வதன் மூலம் மட்டுமே நாம் எதையும் எதிர்ப்பட தயாராக இருக்க முடியும்.
யெகோவாவில் நம்பிக்கை வைப்பதன் அர்த்தம் என்ன?
16 நம்பிக்கை இருக்கிறது என வெறுமென சொல்வதுதானே யெகோவா மீது உண்மையான நம்பிக்கையிருப்பதை அர்த்தப்படுத்தாது. அது நம் இருதயத்தில் இருப்பதையும் அதை செயலில் காட்டுவதையும் அர்த்தப்படுத்துகிறது. யெகோவாவில் நம்பிக்கை இருந்தால், அவருடைய வார்த்தையாகிய பைபிளை முழுமையாக நம்புவோம். அதை தினமும் வாசிப்போம், தியானிப்போம், நம் வாழ்க்கைக்கு வழிகாட்டவும் அனுமதிப்போம். (சங்கீதம் 119:105) யெகோவாவில் நம்பிக்கை வைப்பது பரிசுத்த ஆவியின் வல்லமையில் நம்பிக்கை வைப்பதையும் அர்த்தப்படுத்துகிறது. பரிசுத்த ஆவியின் உதவியால் யெகோவாவுக்குப் பிரியமான பண்புகளை வளர்த்துக்கொள்ள முடியும், நம்மில் வேர்கொண்டிருக்கும் கெட்ட பழக்கங்களையும் பிடுங்கி எறிய முடியும். (1 கொரிந்தியர் 6:11; கலாத்தியர் 5:22-24) இவ்வாறு பரிசுத்த ஆவியின் உதவியால் புகைப்பிடிப்பதையும் போதைப் பொருட்களை எடுத்துக்கொள்வதையும் அநேகரால் நிறுத்த முடிந்திருக்கிறது. இன்னும் சிலர் ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை பாணியை விட்டொழித்திருக்கின்றனர். ஆம், யெகோவாவில் நம்பிக்கை வைக்கும் போது, நாம் நம்முடைய சொந்த பலத்தில் அல்ல, அவருடைய பலத்தில் செயல்படுகிறோம்.—எபேசியர் 3:14-18.
17 கூடுதலாக, யெகோவாவில் நம்பிக்கை வைப்பது, அவர் யாரிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறாரோ அவர்கள் மீதும் நம்பிக்கை வைப்பதை அர்த்தப்படுத்துகிறது. உதாரணமாக, பூமியில் ராஜ்யம் சம்பந்தப்பட்ட காரியங்களை கவனிப்பதற்கு ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையை’ (NW) யெகோவா ஏற்படுத்தியிருக்கிறார். (மத்தேயு 24:45-47) நாம் அந்த அடிமை வகுப்பைவிட்டு தன்னிச்சையாக செயல்பட முயலுவதுமில்லை, அவர்களுடைய ஸ்தானத்தை அசட்டை செய்வதுமில்லை; ஏனெனில் யெகோவாவின் ஏற்பாட்டில் நாம் நம்பிக்கை வைக்கிறோம். மேலுமாக, கிறிஸ்தவ சபைகளில் மூப்பர்கள் சேவை செய்து வருகிறார்கள்; அப்போஸ்தலனாகிய பவுல் சொன்ன விதமாகவே அவர்கள் பரிசுத்த ஆவியால் நியமிக்கப்படுகிறார்கள். (அப்போஸ்தலர் 20:28) சபையிலுள்ள மூப்பர்களுடன் ஒத்துழைப்பதன் மூலமும் நாம் யெகோவாவில் நம்பிக்கை வைத்திருப்பதை காட்டுகிறோம்.—எபிரெயர் 13:17.
பவுலின் மாதிரியைப் பின்பற்றுங்கள்
18 நம்மைப் போலவே அப்போஸ்தலனாகிய பவுலும் ஊழியத்தில் பல பிரச்சினைகளை எதிர்ப்பட்டார். அவர் வாழ்ந்த காலத்தில் கிறிஸ்தவத்தைப் பற்றி அதிகாரிகளிடம் தவறாக திரித்து கூறப்பட்டிருந்தது; சில சமயங்களில் அந்தத் தவறான எண்ணங்களை திருத்துவதற்கு அல்லது பிரசங்க வேலையை சட்டப்பூர்வமாக்குவதற்கு அவர் கடும் முயற்சி செய்ய வேண்டியிருந்தது. (அப்போஸ்தலர் 28:19-22; பிலிப்பியர் 1:7, NW) இன்று, கிறிஸ்தவர்களான நாம் அவருடைய மாதிரியைப் பின்பற்றுகிறோம். நம்முடைய பிரசங்க வேலையைப் பற்றி மற்றவர்கள் சரியாக புரிந்துகொள்வதற்கு எல்லா சந்தர்ப்பங்களையும் வழிமுறைகளையும் பயன்படுத்தி அவர்களுக்கு உதவுகிறோம். நற்செய்தியை ஆதரித்து அதை சட்டப்பூர்வமாக்குவதற்கு நாம் பிரயாசப்படுகிறோம். என்றாலும், அத்தகைய முயற்சிகளிலேயே நாம் முழு நம்பிக்கை வைப்பதில்லை; ஏனெனில், நீதிமன்ற வழக்குகளில் கிடைக்கும் வெற்றியின் அடிப்படையிலோ சாதகமான விளம்பரங்களின் அடிப்படையிலோ நம் வெற்றி தோல்வி சார்ந்திருப்பதாக நாம் கருதுவதில்லை. மாறாக, நாம் யெகோவாவையே நம்புகிறோம். “அமைதியிலும் நம்பிக்கையிலுமே நீங்கள் வலிமை பெறுவீர்கள்” என்று பூர்வ இஸ்ரவேலருக்கு அவர் கொடுத்த ஊக்குவிப்பை நாம் நினைவில் கொள்கிறோம்.—ஏசாயா 30:15, பொ.மொ.
19 நமது நவீன கால சரித்திரத்திலும் கிழக்கு மற்றும் மேற்கு ஐரோப்பாவிலும் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் தென் அமெரிக்க வட அமெரிக்க நாடுகளிலும் சிலசமயங்களில் நம்முடைய வேலை தடை செய்யப்பட்டிருக்கிறது அல்லது கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படியானால், யெகோவா மீதுள்ள நம் நம்பிக்கை வீண் போயிற்று என்றா அர்த்தம்? இல்லை. சில சமயங்களில் நல்ல நோக்கத்துடனே கடுமையான துன்புறுத்துதலை யெகோவா அனுமதித்திருக்கிறார்; அதே சமயத்தில் துன்புறுத்துதலுக்கு இலக்கானவர்களை அவர் அன்புடன் பலப்படுத்தியும் இருக்கிறார். இவ்வாறு துன்புறுத்துதலின் மத்தியிலும், கடவுள் மீது விசுவாசமும் நம்பிக்கையும் வைத்தவர்கள் என்ற நற்பெயரை கிறிஸ்தவர்கள் பலர் சம்பாதித்திருக்கிறார்கள்.
20 மறுபட்சத்தில், பெரும்பாலான தேசங்களில் நாம் சட்டப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறோம், சில சமயங்களில் செய்தித்துறையில் நம்மைப் பற்றி நல்ல செய்திகளும் வெளிவருகின்றன. இதற்கு நன்றி சொல்ல நாம் கடமைப்பட்டிருக்கிறோம்; இதுவும் யெகோவாவின் நோக்கத்திற்காகத்தான் என்பதை நாம் ஒப்புக்கொள்கிறோம். அவருடைய ஆசீர்வாதத்துடன், இந்தளவுக்கு கிடைத்திருக்கிற சுயாதீனத்தை நம்முடைய தனிப்பட்ட அக்கறைகளை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தாமல், யெகோவாவை வெளியரங்கமாகவும் முழுமையாகவும் சேவிக்கவே நாம் பயன்படுத்துகிறோம். என்றாலும், உயர் அதிகாரிகள் நம்மை மதிப்பாக கருத வேண்டும் என்பதற்காக நாம் ஒருபோதும் நம்முடைய நடுநிலைமையை விட்டுக்கொடுப்பதோ, வெளி ஊழிய நடவடிக்கையை குறைத்துக்கொள்வதோ அல்லது யெகோவாவுக்கு செய்யும் சேவையின் தரத்தை குறைத்து விடுவதோ இல்லை. நாம் மேசியானிய ராஜ்யத்தின் குடிமக்கள், அதனால் யெகோவாவின் பேரரசுரிமைக்கே முழு ஆதரவையும் கொடுக்கிறோம். நாம் இந்த உலகில் நம்பிக்கை வைக்காமல் புதிய உலகில், அதாவது இந்த பூமி முழுவதையும் ஆளப்போகும் ஒரே அரசாங்கமான பரலோக மேசியானிய ராஜ்யத்தில் நம்பிக்கை வைக்கிறோம். குண்டுகளோ, ஏவுகணைகளோ, அணு ஆயுத தாக்குதல்களோகூட அந்த அரசாங்கத்தை அசைக்கவும் முடியாது, பரலோகத்திலிருந்து நீக்கிவிடவும் முடியாது. யாராலும் அதை வெல்லவும் முடியாது, யெகோவாவின் நோக்கத்தை அது கண்டிப்பாக நிறைவேற்றும்.—தானியேல் 2:44; எபிரெயர் 12:28; வெளிப்படுத்துதல் 6:2.
21 “நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம்” என பவுல் கூறுகிறார். (எபிரெயர் 10:39) அப்படியானால், நாம் அனைவரும் கடைசி வரைக்கும் யெகோவாவை உண்மையோடு சேவிப்போமாக. இன்றும் என்றும் யெகோவாவில் முழு நம்பிக்கை வைக்க நம்மால் நிச்சயம் முடியும்.—சங்கீதம் 37:3; 125:1.
நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
• யோசுவாவும் காலேபும் ஏன் நல்ல செய்தியை கொண்டு வந்தனர்?
• நாம் யெகோவாவை முழுமையாக நம்ப வேண்டும் என்பதற்கு என்ன காரணங்கள் இருக்கின்றன?
• யெகோவாவில் நம்பிக்கை வைப்பது எதை அர்த்தப்படுத்துகிறது?
• யெகோவாவில் நம்பிக்கை வைப்பதால் என்ன நிலைநிற்கையை எடுக்க நாம் திடத்தீர்மானமாய் இருக்கிறோம்?
[கேள்விகள்]
1, 2 பாதுகாப்புக்காக ஜனங்கள் வீணாக நம்பிக்கை வைக்கும் சில காரியங்கள் யாவை?
3, 4 வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திலிருந்து திரும்பி வந்த யோசுவாவும் காலேபும் சொன்ன குறிப்புகள் மற்ற பத்து வேவுகாரர்கள் சொன்ன குறிப்புகளோடு எப்படி முரண்பட்டன?
5 ஏன் யோசுவாவும் காலேபும் நம்பிக்கையூட்டும் செய்தியை அறிவித்தனர்?
6 இன்று கிறிஸ்தவர்கள் எதிர்ப்படும் அழுத்தங்களுக்கு காரணம் என்ன, அவர்கள் யாரில் தங்கள் நம்பிக்கையை வைக்க வேண்டும்?
7, 8 (அ) யெகோவாவில் நம்பிக்கை வைப்பதற்கு படைப்பு நமக்கு என்ன காரணங்களை அளிக்கிறது? (ஆ) யெகோவாவில் நம்பிக்கை வைப்பதற்கு பைபிள் நமக்கு என்ன காரணங்களை அளிக்கிறது?
9 மீட்கும்பொருளும் இயேசுவின் உயிர்த்தெழுதலும் யெகோவாவில் நம் நம்பிக்கையை எப்படி பலப்படுத்துகின்றன?
10 யெகோவாவில் நம்பிக்கை வைப்பதற்கு நமக்கு என்ன தனிப்பட்ட காரணங்கள் இருக்கின்றன?
11 என்ன சூழ்நிலைகளிலும் யெகோவாவில் தாவீது நம்பிக்கை வைத்தார்?
12, 13 விரோதிகள் நமக்கு எதிராக சொற்போரிடுவதற்கு தங்கள் நாவை பயன்படுத்தினாலும் நாம் யெகோவாவில் நம்பிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டுமென தாவீது எப்படி காட்டினார்?
14 (அ) எசேக்கியா எப்படிப்பட்ட ஆபத்தான சூழ்நிலையிலும் யெகோவாவில் நம்பிக்கை வைத்தார்? (ஆ) அசீரியரின் பொய்களை நம்பவில்லை என்பதை எசேக்கியா எப்படி காட்டினார்?
15 நிலையற்ற இந்த உலகில் கஷ்டமான எந்த சூழ்நிலையையும் எதிர்ப்பட நம்மை பக்குவப்படுத்துவதற்கு எது மட்டுமே உதவும்?
16, 17 யெகோவாவில் நம்பிக்கை வைத்திருப்பதை நாம் எப்படி காட்டுகிறோம்?
18 இன்று கிறிஸ்தவர்கள் எப்படி பவுலின் மாதிரியைப் பின்பற்றுகிறார்கள், ஆனால் எதில் தங்கள் நம்பிக்கையை வைப்பதில்லை?
19 துன்புறுத்தப்படுகையில் நம் சகோதரர்களின் நம்பிக்கை வீண் போகவில்லை என்பது எப்படி நிரூபிக்கப்பட்டிருக்கிறது?
20 சட்டப்பூர்வ சுயாதீனத்தால் நன்மையடைந்தாலும் எந்த அம்சங்களில் நாம் ஒருபோதும் விட்டுக்கொடுக்கக் கூடாது?
21 என்ன போக்கை பின்பற்ற நாம் திடத்தீர்மானமுள்ளவர்களாய் இருக்கிறோம்?
[பக்கம் 15-ன் படம்]
யோசுவாவும் காலேபும் ஏன் நம்பிக்கையூட்டும் செய்தியை தெரிவித்தனர்?
[பக்கம் 16-ன் படங்கள்]
யெகோவாவில் நம்பிக்கை வைப்பதற்கு படைப்பு நமக்கு பலமான காரணத்தை அளிக்கிறது
[படத்திற்கான நன்றி]
மூன்று படங்களும்: Courtesy of Anglo-Australian Observatory, photograph by David Malin
[பக்கம் 18-ன் படம்]
யெகோவாவில் நம்பிக்கை வைப்பது, அவர் யாரிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறாரோ அவர்கள் மீதும் நம்பிக்கை வைப்பதை அர்த்தப்படுத்துகிறது