வாழ்க்கை சரிதை
ராஜ்யத்தை முதலாவது தேடுதல்—பாதுகாப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கை
ஜெத்தா சுனல் சொன்னபடி
காலை டிஃபன் முடிந்ததுமே ரேடியோவில் ஒரு அறிவிப்பைக் கேட்டோம்: “யெகோவாவின் சாட்சிகள் சட்டத்திற்கு புறம்பானவர்கள், அவர்களுடைய வேலை தடை செய்யப்பட்டிருக்கிறது.”
அது 1950-ம் வருஷம்; நான்கு இளம் பெண்களான நாங்கள்—நால்வருமே இருபதிலிருந்து முப்பது வயதுக்குட்பட்டவர்கள்—டொமினிகன் குடியரசில் யெகோவாவின் சாட்சிகளுடைய மிஷனரிகளாக சேவை செய்து வந்தோம்; அதற்கு முந்தின வருஷம்தான் நாங்கள் அங்கு போயிருந்தோம்.
மிஷனரி சேவை எப்போதுமே என் வாழ்க்கை லட்சியமாக இருந்ததில்லை. வாஸ்தவம்தான், சின்ன பிள்ளையாக இருந்தபோது சர்ச்சுக்கு போயிருக்கிறேன். ஆனால், முதல் உலகப் போர் நடந்த சமயத்தில் என் அப்பா சர்ச்சுக்கு போவதையே விட்டுவிட்டார். 1933-ல் எப்பிஸ்கோப்பல் சர்ச்சில் நான் திடப்படுத்தல் பெற்ற அந்த நாளில், பிஷப் பைபிளிலிருந்து ஒரே ஒரு வசனத்தை மட்டும் படித்துவிட்டு, பிறகு அரசியலைப் பற்றி கதையடிக்க ஆரம்பித்துவிட்டார். இதனால் என் அம்மாவுக்கு பயங்கர எரிச்சலாகிவிட்டது. அன்றிலிருந்து சர்ச்சுக்கு முழுக்கு போட்டு விட்டார்.
எங்கள் வாழ்க்கையே மாறியது
என் பெற்றோருக்கு மொத்தம் ஐந்து குழந்தைகள். அப்பா பெயர் வில்லியம் கார்ல் ஆடம்ஸ், அம்மா பெயர் மேரி ஆடம்ஸ். பையன்கள் டான், ஜோயெல், கார்ல். என் தங்கை ஜாய்தான் கடைக்குட்டி. நான் எல்லாரையும்விட மூத்தவள். ஒரு நாள்—அப்போது எனக்கு 13 வயது இருக்கும் என்று நினைக்கிறேன்—ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்தபோது அம்மா ஒரு புக்லெட்டை படித்துக்கொண்டிருந்ததைப் பார்த்தேன். அது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட புக்லெட். ராஜ்யம்—உலகத்தின் நம்பிக்கை (ஆங்கிலம்) என்பதே அதன் தலைப்பு. அதைப் படித்துவிட்டு, “இதுதான் சத்தியம்” என்று அம்மா என்னிடம் சொன்னார்.
பைபிளிலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்களைப் பற்றி அம்மா எங்கள் எல்லாரிடமும் பேசினார். “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்” என்று இயேசு சொன்ன புத்திமதி எவ்வளவு முக்கியம் என்பதை சொல்லிலும் செயலிலும் அம்மா எங்களுக்கு நன்றாக புரிய வைத்தார்.—மத்தேயு 6:33.
ஆனால், இதைப் பற்றியே எப்போதும் கேட்டுக் கேட்டு எனக்கு அலுத்துவிட்டது. ஒருமுறை, “அம்மா, இப்படி என்கிட்ட எப்போ பார்த்தாலும் பிரசங்கிக்கிறதை கொஞ்சம் நிறுத்தறீங்களா, இல்லேன்னா இனிமே நான் ஒன்னும் பாத்திரங்களையெல்லாம் துடைச்சு தர மாட்டேன்” என்று எரிச்சலோடு சொன்னேன். ஆனாலும், அம்மா எங்களிடம் தொடர்ந்து சாமர்த்தியமாக பேசிக்கொண்டேதான் இருந்தார். அ.ஐ.மா., இல்லினாய்ஸில் உள்ள எல்ம்ஹர்ஸ்ட் நகரத்தில், எங்கள் வீட்டுப் பக்கத்திலேயே க்ளாரா ரையன் என்பவர் வசித்து வந்தார். அவர் வீட்டிலே பைபிள் கூட்டங்கள் நடந்தன. அந்த கூட்டங்களுக்கு எல்லா பிள்ளைகளையும் அம்மா தவறாமல் கூட்டிக்கொண்டு போனார்.
க்ளாரா ஒரு பியானோ டீச்சராகவும் இருந்தார். வருஷா வருஷம் அவருடைய மாணவர்கள் பங்கேற்ற இசைக் கச்சேரி நடைபெற்றது. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றியும் உயிர்த்தெழுதல் நம்பிக்கை பற்றியும் அவர் பேசினார். எனக்கு மியூஸிக் என்றாலே கொள்ளை ஆசை; அதனால்தானோ என்னவோ, ஏழு வயதிலிருந்தே வயலினை வாசிக்க ஆரம்பித்த நான், க்ளாரா சொல்வதையெல்லாம் கவனித்துக் கேட்டேன்.
கொஞ்ச நாளிலேயே, அம்மாவுடன் சேர்ந்து பிள்ளைகளான நாங்களும் சிகாகோவின் மேற்குப் பகுதியில் நடந்த சபைக் கூட்டங்களுக்கு போக ஆரம்பித்தோம். அதற்காக பஸ்ஸிலும் ட்ராமிலும் ரொம்ப தூரம் பிரயாணம் செய்ய வேண்டியிருந்தது. ராஜ்யத்தை முதலாவது தேடுவது என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்வதற்கு எங்களுக்கு கொடுக்கப்பட்ட ஆரம்ப கால பயிற்சியின் முதல் படி இதுவே. அம்மா முழுக்காட்டப்பட்டு மூன்று வருடங்கள் கழித்து, 1938-ல், சிகாகோவில் நடைபெற்ற யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு மாநாட்டிற்கு அவருடன் போனேன். அந்த நிகழ்ச்சி ரேடியோ-தொலைபேசி மூலமாக 50 நகரங்களுடன் இணைக்கப்பட்டிருந்தது. அந்நகரங்களில் சிகாகோவும் ஒன்று. அங்கே நான் கேட்ட விஷயங்கள் என் மனதைத் தொட்டன.
ஆனாலும், நான் ஒரு மியூஸிக் பைத்தியமாக இருந்ததால் என் மனசுபூராவும் அதன் பக்கமாகத்தான் சுண்டி இழுக்கப்பட்டது. 1938-ல் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தேன். பிறகு, சிகாகோவிலுள்ள அமெரிக்கன் இசைப் பள்ளியில் சேருவதற்கு அப்பா ஏற்பாடு செய்தார். அடுத்த இரண்டு வருஷத்திற்கு, நான் இசைக்கலையை கற்றுக்கொண்டேன், இரண்டு இன்னிசைக் குழுக்களிலும் வாசித்தேன். இதையே என் வாழ்க்கைத் தொழிலாக ஆக்கிக் கொள்ளலாமா என்றும்கூட யோசித்தேன்.
என்னுடைய வயலின் டீச்சர், ஹர்பர்ட் பட்லர், ஐரோப்பாவைவிட்டு ஐக்கிய மாகாணங்களில் குடிபோக இருந்தார். அதனால், அகதிகள்a என்ற புக்லெட்டை அவர் படிப்பார் என்று நினைத்து அவரிடம் கொடுத்தேன். அவர் அதைப் படித்தார்; அதற்கடுத்த வாரம், என் வகுப்பை முடித்தவுடன், “ஜெத்தா, நீ அருமையா வாசிக்கர, நீ தொடர்ந்து படிச்சா ஒரு ரேடியோ இசைக்குழுவில நல்ல வேலை கிடைக்கும், இல்லேன்னா மியூஸிக் டீச்சராக்கூட உனக்கு வேலை கிடைக்கும். ஆனா,” ஏதோ சிந்தனை செய்தவாறு, நான் கொடுத்திருந்த புக்லெட்டை சுட்டிக்காட்டி, “உன்னோட மனசு இதிலுள்ள விஷயத்திலதான் இருக்குன்னு நினைக்கிறேன். இதையே உன்னோட வாழ்க்கைபூரா செய்யலாம் இல்லையா?” என்று கேட்டார்.
அவர் சொன்னதைப் பற்றி ஸீரியஸாக யோசித்தேன். அந்த இசைப் பள்ளியில் படிப்பதை நிறுத்திவிட்டு, 1940-ம் வருஷம், ஜூலை மாதம் மிச்சிகனிலுள்ள டெட்ராய்ட் நகரில் நடைபெற்ற யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாட்டிற்கு அம்மாவோடு போனேன். அங்கே அமைக்கப்பட்ட ட்ரெய்லர் சிட்டியில் தற்காலிகமாக போடப்பட்ட கூடாரங்களில் தங்கினோம். நான் எங்கே போனாலும் கண்டிப்பாக என்னுடைய வயலினும் என் கூடவே வரும். இதனால், இந்த மாநாட்டின் இசைக்குழுவோடு சேர்ந்து என்னால் வாசிக்க முடிந்தது. நாங்கள் தங்கியிருந்த அந்த ட்ரெய்லர் சிட்டியில் நிறைய பயனியர்களை (முழுநேர சுவிசேஷகர்களை) சந்தித்தேன். அவர்களெல்லாரும் எவ்வளவு சந்தோஷமாக இருந்தார்கள் தெரியுமா? அப்போதே நான் தீர்மானித்துவிட்டேன், முழுக்காட்டுதல் பெற்று, பயனியர் சேவை செய்ய விண்ணப்பிக்க வேண்டுமென்று. என் வாழ்நாள் பூராவும் முழுநேர ஊழியத்தை நான் தொடர்ந்து செய்வதற்கு உதவுமாறு யெகோவாவிடம் ஜெபித்தேன்.
என்னுடைய சொந்த ஊரில் பயனியர் சேவையை ஆரம்பித்தேன். பிற்பாடு, சிகாகோவில் சேவை செய்தேன். 1943-ல் கென்டகிக்கு மாற்றலாகிப் போனேன். அந்த வருட கோடைக்காலத்தில், மாவட்ட மாநாடு தொடங்குவதற்கு சற்று முன்னர், கிலியட் பள்ளியின் இரண்டாம் வகுப்பில் கலந்து கொள்வதற்கான அழைப்பு எனக்கு கிடைத்தது. அப்பள்ளியில்தான் மிஷனரி சேவைக்கான பயிற்சி கொடுக்கப்படுகிறது. செப்டம்பர் 1943-ல் அந்த வகுப்பு தொடங்க இருந்தது.
அந்த வருடம் நடைபெற்ற மாநாட்டின்போது, ஒரு யெகோவாவின் சாட்சியோடு தங்கினேன். தன் மகளுடைய விதவிதமான துணிமணிகளில் எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளும்படி என்னிடம் சொன்னார். அவருடைய மகள் மிலிட்ரியில் சேர்ந்துவிட்டதால் அவளுடைய எல்லா பொருட்களையும் யாருக்காவது கொடுத்துவிடச் சொல்லிவிட்டாளாம். அவசியத் தேவைகளான இவையெல்லாமே, “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்” என்ற இயேசுவுடைய வாக்குறுதியின் நிறைவேற்றமாகத்தான் எனக்குத் தோன்றியது. (மத்தேயு 6:33) கிலியட்டில் ஐந்து மாதங்கள் உருண்டோடின; ஜனவரி 31, 1944-ல் பட்டம் பெற்றதுமே மிஷனரி சேவையில் காலடி எடுத்து வைக்க என் மனசு துடித்தது.
அவர்களும் முழுநேர ஊழியத்தை தேர்ந்தெடுத்தனர்
1942-ல் அம்மா பயனியர் சேவை செய்ய ஆரம்பித்தார். அந்த சமயத்திலே, என் மூன்று தம்பிகளும் என் தங்கையும் இன்னும் பள்ளியில்தான் படித்துக் கொண்டிருந்தார்கள். பள்ளி முடிந்ததும் அம்மா அவர்களை அங்கிருந்தே தன்னுடன் வெளி ஊழியத்திற்கு அழைத்துப் போவது வாடிக்கையானது. அவர்களுக்கு வீட்டு வேலைகளையும் கற்றுக்கொடுத்தார். எப்போதுமே இரவு ரொம்ப லேட்டாகத்தான் தூங்கப்போவார். அதுவரைக்கும் துணிகளுக்கு இஸ்திரி போடுவார், அதோடு, அடுத்த நாளுக்கான மற்ற வேலைகளையெல்லாம் முடித்துவிட்டுத்தான் படுப்பார், அப்போதுதான் மறுநாள் ஊழியத்திற்கு கிளம்ப முடியும்.
ஜனவரி 1943-ல், நான் கென்டகியில் பயனியர் ஊழியம் செய்துகொண்டிருந்த அதே சமயத்தில் என் தம்பி டானும் பயனியர் செய்ய ஆரம்பித்தான். இது என் அப்பாவிற்கு ஏமாற்றத்தைத் தந்தது. ஏனென்றால், அம்மா அப்பாவைப் போலவே எல்லா பிள்ளைகளும் காலேஜில் படித்து பட்டம் பெறுவார்கள் என்று எதிர்பார்த்தார். அவன் பயனியர் செய்ய ஆரம்பித்து கிட்டத்தட்ட இரண்டு வருஷங்களுக்கு பிறகு, நியுயார்க், புரூக்லினில் யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமைக் காரியாலயத்தில் வேலை செய்ய அழைக்கப்பட்டான். இதன் மூலம் அவனால் முழுநேர ஊழியத்தை தொடர முடிந்தது.
ஜூன் 1943-ல், ஜோயெல் பயனியர் செய்ய ஆரம்பித்தான்; அப்போது அவன் வீட்டிலேயே தங்கியிருந்தான். அந்த சமயத்தில், ஒரு மாநாட்டிற்கு வரும்படி அப்பாவை என்னென்னமோ சொல்லி அழைத்துப் பார்த்தான், ஆனால் அப்பா அசையவில்லை. பிற்பாடு, ஜோயெல் தன் பிராந்தியத்தில் எவ்வளவோ முயன்றும் ஒரு பைபிள் படிப்புக்கூட நடத்த முடியாததைப் பார்த்த அப்பா, தனக்கு அவன் படிப்பு நடத்த சம்மதித்தார். “சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்ற ஆங்கில புத்தகத்திலிருந்து பைபிள் படிப்பை ஆரம்பித்தான். கேள்விகளுக்கெல்லாம் டக் டக் என்று ஈஸியாக அப்பா பதில் சொன்னார்; ஆனால் அந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருந்த விஷயங்களுக்கான ஆதாரத்தை பைபிளிலிருந்து காண்பிக்கும்வரை அவர் ஜோயெலை விடவில்லை. அப்படி அவனை கேள்விகளால் துளைத்தெடுத்ததால்தான் ஜோயெலால் பைபிள் சத்தியங்களை தன் வாழ்க்கையின் உயிர் மூச்சாக்கிக்கொள்ள முடிந்தது.
டான் ஒரு மத ஊழியன் என்று செலக்டிவ் சர்வீஸ் போர்டு தீர்ப்பளித்து இனி அவன் மிலிட்ரியில் சேரத் தேவையில்லையென்று சொல்லியிருந்தது; அதனால், தன்னிடமும் அதே விதமாக சொல்லுவார்கள் என்று ஜோயெல் எதிர்பார்த்தான். ஆனால், ஜோயெல் இளமை மிடுக்குடன் இருந்ததைப் பார்த்த அந்த போர்டின் அதிகாரிகள், அவனை ஒரு ஊழியனாக கருதாமல், மிலிட்ரி வேலையில் சேரச் சொல்லி ஒரு நோட்டீஸை அனுப்பினார்கள். அவன் அதில் சேர மறுத்தபோது அவனை காவலில் வைக்க உத்தரவிட்டார்கள். எஃப்பிஐ அதிகாரிகள், அவனை கண்டுபிடித்தனர்; அதன்பின், மூன்று நாள் குக் கௌன்டி சிறைச்சாலையில் அவன் இருக்க நேர்ந்தது.
வீட்டுப் பத்திரத்தை வைத்து, அப்பா அவனை ஜாமீனில் வெளியே கொண்டு வந்தார். அதற்குப் பிறகு இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இருந்த மற்ற இளம் யெகோவாவின் சாட்சிகளுக்கும் அப்பா இதே போல உதவினார். இந்த அநியாயங்களையெல்லாம் பார்த்த அப்பா கோபமடைந்து, இதன் சம்பந்தமாக மேல் வழக்கு ஒன்றை தொடர முடியுமா என்பதை தெரிந்துகொள்ள வாஷிங்டன், டி.சி.-க்கு ஜோயெலைக் கூட்டிக்கொண்டு போனார். கடைசியில், ஜோயெல் ஒரு கிறிஸ்தவ ஊழியனாக ஏற்கப்பட்டான், அதனால் அந்த வழக்கு தள்ளுபடி ஆனது. மிஷனரி ஊழியம் செய்துகொண்டிருந்த எனக்கு, அப்பா இந்த விஷயத்தைப் பற்றி இப்படியாக எழுதினார், “இந்த வெற்றிக்கு யெகோவாதான் காரணம் என்று நம்புகிறேன்!” 1946, ஆகஸ்ட் கடைசியில் புரூக்லினில் உள்ள தலைமைக் காரியாலயத்தில் சேவை செய்ய ஜோயெலும் அழைக்கப்பட்டான்.
கார்ல், பள்ளி விடுமுறையின்போது பல தடவை பயனியர் ஊழியம் செய்திருந்தான். 1947-ம் வருடத்தின் ஆரம்பத்தில், உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்ததுமே ஒழுங்கான பயனியர் சேவை செய்யத் தொடங்கினான். அப்போது, அப்பாவின் உடல்நிலை மோசமாகிக்கொண்டே வந்ததால், வேறு இடத்திற்குப் போய் பயனியர் ஊழியத்தை செய்வதற்குமுன் கார்ல் கொஞ்ச நாளைக்கு பிஸினெஸில் அப்பாவுக்கு ஒத்தாசையாக இருந்தான். 1947-ம் வருஷத்தின் கடைசியில், டான் மற்றும் ஜோயெலுடன் சேர்ந்து கார்லும் புரூக்லின் தலைமைக் காரியாலயத்தில் சேவை செய்ய ஆரம்பித்தான்.
ஜாய், தன் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்ததும் பயனியர் செய்யத் தொடங்கினாள். பிறகு, 1951-ல், தன் சகோதரர்களோடு சேர்ந்து அவளும் பெத்தேலில் சேவை செய்ய ஆரம்பித்தாள். அங்குள்ள அறைகளை பராமரிக்கும் இலாகாவிலும், சந்தாக்களை கவனிக்கும் இலாகாவிலும் வேலை செய்தாள். 1955-ல், பெத்தேலில் இருந்த ரோஜர் மார்கன் என்பவரை மணம் செய்தாள். சுமார் ஏழு வருடங்கள் கழித்து, தங்களுக்கென்று ஒரு குடும்பம் வேண்டுமென்று தீர்மானித்து அவர்கள் பெத்தேலை விட்டு வெளியே வந்தனர். காலப்போக்கில், அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. அந்தப் பிள்ளைகளும் இப்போது யெகோவாவை சேவிக்கிறார்கள்.
எல்லா பிள்ளைகளுமே முழுநேர ஊழியத்தில் இருந்த சமயத்தில், அப்பாவுக்கு தேவையான உற்சாகத்தை அம்மா கொடுத்தார். அதன் பலனாக, அப்பாவும் தன் வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து 1952-ல் முழுக்காட்டுதல் பெற்றார். அடுத்த 15 வருஷங்களுக்கு, சாகும்வரை, வியாதியின் உபத்திரவத்தையும் பொருட்படுத்தாமல், அப்பா ராஜ்ய சத்தியங்களை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள புத்திசாலித்தனமாக பல வழிகளைக் கண்டுபிடித்தார்.
அப்பாவின் நோய் காரணமாக கொஞ்ச காலத்திற்கு அம்மா பயனியர் செய்வதை நிறுத்தியிருந்தார்; அதன் பிறகு, கடைசி வரைக்கும் பயனியர் செய்வதை விடவேயில்லை. அம்மாவிடம் கார் இருந்ததில்லை; சைக்கிளையும் அவர் ஓட்டினதில்லை. குட்டையான உருவமுள்ள அவர், பைபிள் படிப்பு நடத்துவதற்காக எங்கே போனாலும், அடிக்கடி ரொம்ப தூரமான கிராமப்புறத்திற்கும்கூட, நடந்தேதான் போனார்.
மிஷனரி களத்திற்குள்!
கிலியட் பள்ளியில் பட்டம் பெற்றவுடன், எங்களில் ஒரு சிலர் சேர்ந்து, நியுயார்க் நகரத்தின் மேற்குப் பகுதியில் ஒரு வருடத்திற்கு பயனியர் செய்தோம்; வேறு இடத்திற்கு பயணம் செய்யத் தேவைப்பட்ட சட்ட ரீதியான பேப்பர்கள் கிடைக்கும் வரையில் அங்கேயே இருந்தோம். கடைசியில், 1945-ல், எங்களுக்கு நியமிக்கப்பட்ட கியூபா நாட்டிற்கு போனோம், அங்கே, நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு புது வாழ்க்கைப் பாணியோடு ஐக்கியமானோம். எங்களுடைய பிரசங்கத்திற்கு நல்ல பிரதிபலிப்பு இருந்தது, அதன் விளைவாக, சீக்கிரத்திலேயே நாங்களெல்லாரும் ஏகப்பட்ட பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க முடிந்தது. பல வருஷங்களுக்கு நாங்கள் அங்கே சேவை செய்தோம். அதன்பின், டொமினிகன் குடியரசுக்கு எங்களை மாற்றினார்கள். ஒரு நாள் நான் ஒரு பெண்ணை சந்தித்தேன்; அவளுடைய வாடிக்கையாளரான சூசன் என்ஃப்ரா என்ற பிரெஞ்சு பெண்ணுக்கு பைபிளை புரிந்துகொள்ள உதவி தேவைப்பட்டதால், நான் அந்தப் பெண்ணைப் போய் பார்க்கும்படி வற்புறுத்தினாள்.
சூசன் ஒரு யூதப் பெண்மணி; பிரான்சின் மீது ஹிட்லர் படையெடுத்த சமயத்தில், அவள் கணவர், அவளையும் அவர்களது இரு பிள்ளைகளையும் வேறு நாட்டுக்கு அனுப்பி வைத்திருந்தார். பைபிளிலிருந்து கற்று வரும் காரியங்களை, சூசன் சீக்கிரத்திலே மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தாள். என்னை அவளிடம் அனுப்பி வைத்த பெண்ணிடம்தான் முதலாவதாக பேசினாள், பிறகு, பிரான்சிலிருந்து வந்திருந்த ப்ளான்ஷ் என்ற தன் தோழியிடம் பேசினாள். இவ்விருவருமே முழுக்காட்டுதல் பெறுமளவுக்கு முன்னேறினார்கள்.
“என் பிள்ளைகளுக்கு உதவ நான் என்ன செய்ய வேண்டும்?” என்று சூசன் என்னிடம் கேட்டாள். அவள் மகன் டாக்டருக்கு படித்துக்கொண்டிருந்தான்; மகள், நியுயார்க்கிலுள்ள ரேடியோ சிட்டி மியூஸிக் ஹால் என்ற பெரிய அரங்கத்திலே நடனம் ஆடும் கனவுடன் பாலே டான்ஸ் கற்றுக்கொண்டிருந்தாள். அவர்கள் இருவருக்கும் சூசன் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளுக்கான சந்தாவை அனுப்பி வைத்தாள். விளைவு? அவள் மகன், அவனுடைய மனைவி, அவன் மனைவியின் இரட்டை சகோதரி, இவர்கள் எல்லாரும் யெகோவாவின் சாட்சிகளானார்கள். சூசனின் கணவர், லூவீ, யெகோவாவின் சாட்சிகளிடம் தன் மனைவி அக்கறை காட்டுவதைப் பார்த்து கலக்கமடைந்தார். ஏனென்றால், டொமினிகன் குடியரசின் அரசாங்கம் அப்போது எங்கள் வேலையை தடை செய்திருந்தது. ஆனால், அந்த முழு குடும்பமும் ஐக்கிய மாகாணங்களில் குடியேறிய பிறகு, அவரும் காலப்போக்கில் ஒரு யெகோவாவின் சாட்சியானார்.
தடையுத்தரவின் கீழும் தொடர்ந்து சேவை செய்தல்
நாங்கள் 1949-ல், டொமினிகன் குடியரசிற்குப் போக நியமிக்கப்பட்ட கொஞ்ச காலத்திலேயே யெகோவாவின் சாட்சிகளுடைய வேலை அங்கே தடை செய்யப்பட்டது. ஆனாலும், மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைவிட தேவனுக்கே கீழ்ப்படிய வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தோம். (அப்போஸ்தலர் 5:29) இயேசு தம்மை பின்பற்றுபவர்களுக்கு கட்டளையிட்ட பிரகாரமாக, தேவனுடைய ராஜ்யத்தை முதலாவது தேடுவதற்கு, முதலில், அதைப் பற்றிய சுவிசேஷத்தை எல்லாருக்கும் தெரியப்படுத்தினோம். (மத்தேயு 24:14) என்றாலும், பிரசங்க வேலை செய்யும்போது “சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய்” எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று கற்றுக்கொண்டோம். (மத்தேயு 10:16) உதாரணத்திற்கு, என்னுடைய வயலின் எனக்கு ரொம்ப உதவியாக இருந்தது. நான் பைபிள் படிப்பு நடத்துவதற்கு போகும்போதெல்லாம் அதையும் கூடவே தூக்கிக்கொண்டு போவேன். என்னுடைய மாணவர்கள் வயலின் வித்வான்கள் ஆகவில்லை, ஆனால், நிறைய குடும்பத்தினர் யெகோவாவின் ஊழியக்காரர்களாக ஆனார்கள்!
தடையுத்தரவு அமலுக்கு வந்தவுடன், நான்கு பெண்களான எங்களை—மேரி அன்யால், சஃபீயா சோவீயக், ஈடெத் மார்கன், நான்—சான் பிரான்ஸிஸ்கோ டி மாக்கோரிஸில் இருந்த மிஷனரி ஹோமிலிருந்து, தலைநகரமான சான்டோ டொமிங்கோவிலுள்ள கிளை அலுவலகத்தில் இருந்த மிஷனரி ஹோமிற்கு மாற்றினார்கள். ஆனால் மியூஸிக் பாடம் நடத்துவதற்காக, முதலில் நியமிக்கப்பட்ட இடத்திற்கு ஒவ்வொரு மாதமும் போய் வந்தேன். இப்படி செய்ததால், வயலின் பெட்டிக்குள் ஆன்மீக உணவை வைத்து, அதை அங்குள்ள கிறிஸ்தவ சகோதரர்களுக்கு என்னால் எடுத்துப் போக முடிந்தது. அதோடு, திரும்பி வரும்போது அவர்களுடைய ஊழிய நடவடிக்கைகளைப் பற்றிய அறிக்கைகளையும் இங்கு கொண்டு வர முடிந்தது.
சான் பிரான்ஸிஸ்கோ டி மாக்கோரிஸை சேர்ந்த சகோதரர்கள், கிறிஸ்தவ நடுநிலைமை காரணமாக சாண்டியாகோவிலுள்ள சிறையில் போடப்பட்டிருந்தார்கள்; அவர்களுக்கு பணமும், முடிந்தால், பைபிள்களும் எடுத்துக்கொண்டு போகும்படி என்னிடம் சொன்னார்கள்; அதோடு, அவர்களிடமிருந்து ஏதாவது விஷயங்களை அவர்களது குடும்பத்தாருக்கு வந்து சொல்லவும் என்னை தூது போகச் சொன்னார்கள். என் அக்குளில் பிடித்திருந்த வயலின் பெட்டியைப் பார்த்த சாண்டியாகோ சிறைக் காவலாளிகள், “இது எதுக்கு?” என்று கேட்டார்கள். “அவர்களை குஷிப்படுத்தத்தான்!” என்று பதிலளித்தேன்.
அவர்களுக்காக நான் வாசித்த பாடல்களில் ஒன்று, நாசி சித்திரவதை முகாமில் இருந்தபோது ஒரு சாட்சி எழுதியது. இப்போது, யெகோவாவின் சாட்சிகளுடைய பாட்டு புத்தகத்தில் 29-வது பாட்டு அது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த சகோதரர்கள் அந்தப் பாட்டை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே நான் அதை இசைத்தேன்.
அந்த சாட்சிகளில் பலர், அரசாங்க தலைவராக இருந்த ட்ருஹியோவுக்குச் சொந்தமான ஒரு பண்ணைக்கு மாற்றப்பட்டிருந்தது எனக்கு தெரிய வந்தது. அந்தப் பண்ணை, பஸ் போகும் பாதைக்கு ரொம்ப பக்கத்திலேயே இருப்பதாக சொன்னார்கள். அதனால் பஸ்ஸை விட்டு இறங்கினேன், அது மதிய வேளையாக இருந்தது. அங்கே எப்படி போவது என தெரியாமல், ஒரு பெட்டிக்கடைக்காரரிடம் விசாரித்தேன். அங்கிருந்த மலைகளுக்கு அப்பால் அந்தப் பண்ணை இருப்பதாக சுட்டிக் காட்டினார். என்னுடைய வயலினை நான் பிணையமாக கொடுத்துவிட்டுப் போனால், தன்னுடைய குதிரையையும் வழிகாட்டியாக ஒரு பையனையும் என் கூடவே அனுப்புவதாகவும் சொன்னார்.
அந்த சின்னச் சின்ன மலைகளுக்கு அப்பால் ஒரு ஆறு ஓடிக்கொண்டிருந்தது; குதிரை அந்த ஆற்றிலே நீந்திப்போக, நாங்கள் இருவரும் அதன்மேல் உட்கார்ந்திருந்தோம். அங்கே, கூட்டங்கூட்டமாக கிளிகள் பறப்பதைப் பார்த்தோம், பச்சையும் நீலமும் கலந்த அவற்றின் பல வண்ண இறக்கைகள் சூரிய வெளிச்சத்திலே பளிச்சிட்டபோது, அப்பப்பா, அது கண்கொள்ளா காட்சி! உடனடியாக, “யெகோவாவே, இவற்றை இவ்வளவு அழகாக படைத்ததற்காக ரொம்ப நன்றி” என்று சொல்லி ஜெபித்தேன். எப்படியோ, சாயங்காலம் நான்கு மணியளவில், அந்தப் பண்ணைக்கு போய் சேர்ந்தோம். காவலில் இருந்த ஒரு சிப்பாய் கரிசனையோடு அங்குள்ள சகோதரர்களிடம் என்னைப் பேச விட்டார்; அது மட்டுமல்ல, ஒரு குட்டி பைபிள் உட்பட, அவர்களுக்காக நான் கொண்டு போயிருந்த எல்லா பொருட்களையும் கொடுப்பதற்கு என்னை அனுமதித்தார்.
அங்கிருந்து திரும்பி வரும்போது, ரொம்ப இருட்டாகிவிட்டதால், வழிநெடுக ஜெபித்துக்கொண்டே வந்தேன். மழையிலே சொட்ட சொட்ட நனைந்தவாறு, அந்தக் கடைக்கு வந்து சேர்ந்தோம். அன்றைக்கு இருந்த கடைசி பஸ்கூட ஏற்கெனவே போய்விட்டிருந்தது. நான் கேட்டுக்கொண்டதால், அந்தக் கடைக்காரர் அந்த வழியாக போன ஒரு லாரியை கையைக் காட்டி நிறுத்தினார். லாரியில் இருந்த இரண்டு ஆண்களுடன் போவது பாதுகாப்பாக இருந்ததா? இருவரில் ஒருவன் என்னிடம், “உங்களுக்கு சஃபீயாவைத் தெரியுமா?” என்று கேட்டுவிட்டு, “அவள் என் தங்கையோடு கூடப்படித்தவள்” என்று சொன்னான். நிச்சயம், இது என் ஜெபத்திற்கு யெகோவா கொடுத்த பதில்! அவர்கள் என்னை சான்டோ டொமிங்கோவிற்கு பத்திரமாக கொண்டுபோய் விட்டார்கள்.
1953-ல், நியுயார்க்கிலுள்ள யாங்கி ஸ்டேடியத்தில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டிற்கு டொமினிகன் குடியரசிலிருந்து போனவர்களில் நானும் ஒருத்தி. என் முழு குடும்பமும் அங்கிருந்தது, அப்பாவும்கூட வந்திருந்தார். டொமினிகன் குடியரசில் பிரசங்க வேலை எப்படி முன்னேறி வருகிறது என்பதைப் பற்றி அறிவித்த பிறகு, எனக்கும் என் மிஷனரி தோழியான மேரி அன்யாலுக்கும் அந்த நிகழ்ச்சியில் ஒரு சின்ன பாகம் இருந்தது, தடையுத்தரவின் கீழும் நாங்கள் எப்படி பிரசங்கித்தோம் என்பதை அங்கே நடித்துக் காட்டினோம்.
பிரயாண வேலையில் விசேஷித்த மகிழ்ச்சி
அந்த வருட கோடைக்காலத்தில், ரூடால்ஃப் சுனல் என்பவரை சந்தித்தேன்; அதற்கடுத்த வருடம் அவரை மணந்தேன். பென்ஸில்வேனியாவிலுள்ள அலகெனியில் இருந்த அவர் குடும்பத்தினர், முதல் உலகப் போர் முடிந்த கொஞ்ச நாளிலே யெகோவாவின் சாட்சிகளானார்கள். இரண்டாவது உலகப் போரின் சமயத்தில் கிறிஸ்தவ நடுநிலைமை காரணமாக அவர் சிறிது காலம் சிறையில் இருந்தார்; பின்னர், நியுயார்க் புரூக்லினிலுள்ள பெத்தேலில் சேவை செய்தார். எங்களுக்கு திருமணம் முடிந்து சீக்கிரத்திலேயே ஒரு பயணக் கண்காணியாக சபைகளை சந்திப்பதற்காக நியமிக்கப்பட்டார். அடுத்த 18 வருஷங்களுக்கு வட்டார வேலையில் அவர் போன இடத்திற்கெல்லாம் நானும் கூடவே போனேன்.
இப்படியாக, பென்ஸில்வேனியா, மேற்கு வர்ஜீனியா, நியு ஹாம்ப்ஷயர், மாஸசூஸெட்ஸ் போன்ற இடங்கள் உட்பட பல ஊர்களுக்கு போனோம். பெரும்பாலும், கிறிஸ்தவ சகோதரர்களின் வீட்டில்தான் தங்கினோம். அவர்களைப் பற்றி நன்றாக தெரிந்துகொண்டதும், அவர்களோடு சேர்ந்து யெகோவாவை சேவித்ததும் மட்டில்லா மகிழ்ச்சியைத் தந்தது. அவர்கள் எங்களிடம் எப்போதும் அனலான அன்பையே காட்டினார்கள், உண்மை மனதோடும் உபசரித்தார்கள். ஜோயெல், என் மிஷனரி தோழியான மேரி அன்யாலை கைப்பிடித்தார்; அதன்பின், அவர்கள் மூன்று வருடம் பென்ஸில்வேனியா, மிச்சிகன் ஆகிய இடங்களில் இருந்த சபைகளை சந்திக்கும் பயண வேலையில் ஈடுபட்டார்கள். பிற்பாடு, 1958-ல், ஜோயெலுக்கு பெத்தேல் குடும்ப அங்கத்தினர் ஆவதற்கு மறுபடியும் அழைப்பு வந்தது, இந்த முறை தனியாக இல்லை, மேரியோடு.
கார்ல், பெத்தேலில் சுமார் ஏழு வருஷங்கள் இருந்த பிறகு, கூடுதலான அனுபவம் பெறுவதற்காக, சில மாதங்களுக்கு மட்டும் வட்டார வேலை செய்ய நியமிக்கப்பட்டார். அதற்குப் பிறகு, கிலியட் பள்ளியில் ஒரு போதகராக ஆனார். 1963-ல், பாபீ என்பவரை மணந்தார். அக்டோபர் 2002-ல் சாகும்வரை பாபீ உண்மையுடன் பெத்தேலில் சேவித்தார்.
டான், பெத்தேலில் பல வருடங்களாக இருந்த சமயத்தில், மற்ற நாடுகளுக்கு சென்று அங்குள்ள கிளை அலுவலகங்களில் வேலை செய்பவர்களுக்கும், மிஷனரி களத்தில் இருப்பவர்களுக்கும் உதவுவதற்காக அடிக்கடி பிரயாணம் செய்ய வேண்டியிருந்தது. இந்த வேலைக்காக கிழக்கத்திய நாடுகள், ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா போன்ற பல பகுதிகளுக்கு போயிருக்கிறார். டானுக்கு விசுவாசமாக இருக்கும் அவர் மனைவி, டாலோரஸ், நிறைய தடவை கணவரோடு பயணம் செய்கிறார்.
எங்கள் சூழ்நிலை மாறியது
நீண்ட நாள் வியாதிப்பட்டிருந்த என் அப்பா மரணமடைந்தார்; நாங்களெல்லாரும் யெகோவா தேவனுக்கு சேவை செய்யத் தேர்ந்தெடுத்ததற்காக தான் ரொம்ப சந்தோஷப்பட்டதாக சாவதற்கு முன் அவர் என்னிடம் சொன்னார். எங்களுக்காக அவர் உத்தேசித்திருந்த காலேஜ் படிப்பை நாங்கள் ஒருவேளை தொடர்ந்திருந்தால் கிடைத்திருக்கும் ஆசீர்வாதங்களைவிட இப்போதுதான் எங்களுக்கு அதிகப்படியான ஆசி கிடைத்திருப்பதாகவும் சொன்னார். அப்பாவின் மரணத்திற்கு பின், அம்மாவுடைய சாமான்களை எல்லாம் பேக் செய்து, என் தங்கை ஜாய் வீட்டு அருகில் குடியிருக்க உதவினேன். அதன் பின், என் கணவரின் அம்மாவுக்கு எங்கள் உதவி தேவைப்பட்டதால், அவர் அருகேயே இருப்பதற்காக, நியு இங்கிலாந்தில் பயனியர் நியமிப்புகளை நானும் என் கணவரும் ஏற்றுக்கொண்டோம். அவர் அம்மா இறந்த பிறகு, என்னுடைய அம்மா எங்களோடு வந்து 13 வருஷங்கள் தங்கினார். பின்னர், 1987-ம் வருடம் ஜனவரி 18-ம் தேதி, அம்மா தன் பூமிக்குரிய வாழ்க்கையை முடித்தார்; அப்போது அவருக்கு 93 வயது.
எல்லா பிள்ளைகளையும் யெகோவாவை நேசிப்பதற்கும் சேவிப்பதற்கும் கற்றுக்கொடுத்து வளர்த்ததற்காக நண்பர்கள் அடிக்கடி அவரைப் பாராட்டும் போதெல்லாம், அம்மா அடக்கத்துடன் இப்படி பதிலளித்தார்: “நான் வேலை செய்த நிலம் நல்ல நிலமா அமைஞ்சுபோச்சு, அவ்வளவுதான்.” (மத்தேயு 13:23) ஆர்வத்திலும் மனத்தாழ்மையிலும் முன்மாதிரிகளாக இருந்த தெய்வ பக்தியுள்ள பெற்றோர் எங்களுக்கு கிடைத்தது எவ்வளவு பெரிய ஆசீர்வாதம்!
இன்னமும் ராஜ்யத்திற்குத்தான் முதலிடம்
கடவுளுடைய ராஜ்யத்தை எங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து முதலிடத்தில்தான் வைத்திருக்கிறோம்; மேலும், மற்றவர்களோடு எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளும்படி இயேசு கொடுத்த ஆலோசனையைப் பொருத்திப் பிரயோகிக்கவும் முயற்சித்திருக்கிறோம். (லூக்கா 6:38; 14:12-14) அதற்கு பிரதிபலனாக, யெகோவா அபரிமிதமாக எங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்திருக்கிறார். எங்கள் வாழ்க்கை பாதுகாப்பானதாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் இருக்கிறது.
என் கணவர் ரூடிக்கும் எனக்கும் இன்னமும் மியூஸிக் மீதுள்ள பற்று கொஞ்சமும் குறையவில்லை. மியூஸிக்கில் ஆர்வமாக இருப்பவர்கள், எப்போதாவது மாலைப் பொழுதில் எங்கள் வீட்டிற்கு வரும்போது, நாங்கள் எல்லாரும் சேர்ந்து எங்கள் இசைக் கருவிகளை வாசிப்போம், அந்த நேரம் ரம்மியமான இனிய நேரம். ஆனால் மியூஸிக் என் வாழ்க்கைத் தொழில் இல்லை. அது வாழ்க்கைக்கு இன்பத்தைக் கூட்டுகிறது, அவ்வளவுதான். இப்போது நானும் என் கணவரும் எங்கள் பயனியர் ஊழியத்தின் பலன்களை, அதாவது, இத்தனை வருஷங்களாக நாங்கள் உதவி செய்த ஆட்களை, கண்கூடாக பார்த்து அகமகிழ்கிறோம்.
தற்போது உடல்நலக் கோளாறுகள் இருந்தாலும், முழுநேர ஊழியத்தில் 60 வருடங்களுக்கு மேலாக செலவிட்டிருந்த என் வாழ்க்கை ரொம்ப ரொம்ப சந்தோஷமாகவும் பாதுகாப்பாகவும்தான் இருந்திருக்கிறது என்று என்னால் சொல்ல முடியும். ஒவ்வொரு நாளும் காலையில் நான் கண் விழிக்கும்போது, எத்தனையோ வருஷங்களுக்கு முன்னால், நான் முழுநேர ஊழியத்தில் காலடி எடுத்து வைத்தபோது செய்த ஜெபத்துக்கு யெகோவா பதிலளித்ததற்காக அவருக்கு நன்றி சொல்கிறேன், அடுத்ததாக “இன்னைக்கு நான் ராஜ்யத்தை எந்த விதத்தில முதல்ல தேடுறது?” என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது, தற்போது அச்சில் இல்லை.
[பக்கம் 24-ன் படம்]
1948-ல் எங்கள் குடும்பம் (இடமிருந்து வலம்): ஜாய், டான், அம்மா, ஜோயெல், கார்ல், நான், அப்பா
[பக்கம் 25-ன் படம்]
ஊழியத்தில் அம்மா ஒரு வைராக்கியமான முன்மாதிரியாக இருந்தார்
[பக்கம் 26-ன் படம்]
இப்போது கிட்டத்தட்ட 50 வருஷங்களுக்கு பிறகு, கார்ல், டான், ஜோயெல், ஜாய், நான்
[பக்கம் 27-ன் படம்]
இடமிருந்து வலம்: நான், மேரி அன்யால், சஃபீயா சோவீயக், ஈடெத் மார்கன் மிஷனரிகளாக டொமினிகன் குடியரசில் இருந்தபோது
[பக்கம் 28-ன் படம்]
யாங்கி ஸ்டேடியத்தில் மேரியுடன் (இடது), 1953
[பக்கம் 29-ன் படம்]
கணவருடன், அவர் வட்டார வேலையில் இருந்தபோது