‘சத்திய உதடுகள் என்றும் நிலைத்திருக்கும்’
சிறிய நெருப்பு முழு காட்டையும் தீக்கிரையாக்குவதுபோல, ஒருவரின் முழு வாழ்க்கையையும் நாசமாக்க வல்லது அது. விஷம் நிறைந்ததாகவும் அது இருக்கலாம், ‘ஜீவ விருட்சமாகவும்’ அது இருக்கலாம். (நீதிமொழிகள் 15:4) மரணமும் ஜீவனும் அதன் அதிகாரத்தில் உள்ளன. (நீதிமொழிகள் 18:21) இதுவே நம் உடல் முழுவதையும் கறைப்படுத்த வல்ல சிறிய உறுப்பாகிய நம் நாவின் வல்லமை. (யாக்கோபு 3:5-9) இந்த நாவை அடக்கினால் நாம் ஞானமுள்ளவர்கள்தான்.
நீதிமொழிகள் என்ற பைபிள் புத்தகத்தின் 12-ம் அதிகாரத்தினுடைய பிற்பகுதியில், நம் பேச்சைக் கட்டுப்படுத்த உதவும் மதிப்புமிக்க ஆலோசனையை பூர்வ இஸ்ரவேல் அரசராகிய சாலொமோன் வழங்குகிறார். ஒருவர் பேசும் வார்த்தைகளுக்கு பின் விளைவுகள் ஏற்படும் என்றும் பேசுபவரின் குணங்களைப் பற்றி அவருடைய வார்த்தைகள் அதிகத்தை வெளிப்படுத்தும் என்றும் சுருக்கமான, நடைமுறையான நீதிமொழிகள் மூலமாக ஞானமுள்ள அரசன் காண்பிக்கிறார். தன் ‘உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ள’ விரும்புகிறவர்கள் கடவுளால் ஏவப்பட்ட சாலொமோனின் புத்திமதியை அலட்சியப்படுத்த மாட்டார்கள்.—சங்கீதம் 141:3.
‘கண்ணியாகிவிடும் பாவம்’
“துன்மார்க்கனுக்கு அவன் உதடுகளின் துரோகமே [“வாயின் பாவமே,” திருத்திய மொழிபெயர்ப்பு] கண்ணி; நீதிமானோ நெருக்கத்தினின்று நீங்குவான்” என்கிறார் சாலொமோன். (நீதிமொழிகள் 12:13) உதடுகள் செய்யும் பாவம் பொய் சொல்லுதல்; பொய் சொல்லுகிறவருக்கு இது சாவுக்கேதுவான கண்ணியாகிவிடுகிறது. (வெளிப்படுத்துதல் 21:8) தண்டனைக்கு தப்பவோ தர்மசங்கடமான சூழ்நிலையிலிருந்து தப்பிக்கவோ நேர்மையற்ற வழியில் போவது சுலபமாக தோன்றலாம். ஆனால், ஒரு பொய் சொல்லுவது பெரும்பாலும் பல பொய்களுக்கு வழிநடத்துகிறது அல்லவா? ஆரம்பத்தில் கொஞ்ச பணம் மட்டுமே வைத்து சூதாட ஆரம்பித்தவர் பிற்பாடு இழந்த பணத்தை சரிக்கட்ட மேலும் மேலும் அதிக பணம் வைத்து ஆடுவதுபோல, பொய் சொல்லுகிறவரும் ஒரு நச்சு சுழற்சிக்குள் சிக்கிக் கொள்கிறார்.
மற்றவர்களிடம் பொய் சொல்லும் ஒருவர் கடைசியில் தனக்குத்தானே பொய் சொல்லும் நிலைக்கு வந்துவிடலாம்; இதன்மூலம், உதடுகள் செய்யும் பாவம் கண்ணியாகிவிடலாம். உதாரணத்துக்கு, உண்மையில் மிகக் குறைவான அறிவுள்ள ஒரு பொய்யன் மிகவும் அறிவாளியாகவும் திறமைசாலியாகவும் இருப்பதாய் தன்னைத் தானே எளிதில் நம்ப வைத்துக் கொள்ளலாம். இதனால் அந்தப் பொய்க்கு இசைவாக வாழ்ந்து காட்டவும் முயலுகிறான். உண்மையில், “அவன், தன் அக்கிரமம் அருவருப்பானதென்று காணப்படுமளவும், தன் பார்வைக்கேற்றபடி தனக்குத்தானே இச்சகம் பேசுகிறான்.” (சங்கீதம் 36:2) பொய் சொல்லுதல் எப்பேர்ப்பட்ட கண்ணியாக இருக்கிறது! மறுபட்சத்தில், நீதிமான் இப்படிப்பட்ட இக்கட்டான ஒரு சூழ்நிலைக்குள் சிக்கிக்கொள்ள மாட்டான். துயர்மிக்க சந்தர்ப்பங்களிலும், பொய் சொல்லவே மாட்டான்.
‘திருப்தியான பலன்’
“மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்” என பவுல் எச்சரிக்கிறார். (கலாத்தியர் 6:7) நம்முடைய சொல்லுக்கும் செயலுக்கும்கூட இந்த நியமம் நிச்சயமாகவே பொருந்துகிறது. சாலொமோன் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “அவனவன் தன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்; அவனவன் கைக்கிரியையின் பலனுக்குத்தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும்.”—நீதிமொழிகள் 12:14.
‘ஞானத்தை உரைக்கும்’ வாய் திருப்தியான பலனைத் தருகிறது. (சங்கீதம் 37:30) ஞானத்திற்கு அறிவு தேவைதான், ஆனால் எல்லா அறிவும் நிறைந்த அறிவுக் களஞ்சியமாக எந்தவொரு மனிதனும் இல்லை. எல்லோருமே சிறந்த ஆலோசனைக்கு செவிகொடுத்துக் கேட்டு அதை கடைப்பிடிப்பது அவசியம். “மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயிருக்கும்; ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்” என்கிறார் அந்த இஸ்ரவேல் அரசர்.—நீதிமொழிகள் 12:15.
“உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பார் கொடுக்கும் பிரசுரங்களை பயன்படுத்தி, யெகோவா தம் வார்த்தையின் மூலமாகவும் தம் அமைப்பின் மூலமாகவும் நமக்கு சிறந்த ஆலோசனைகளை அளிக்கிறார். (மத்தேயு 24:45, NW; 2 தீமோத்தேயு 3:16, 17) நல்ல புத்திமதியை ஏற்க மறுத்து சொந்த இஷ்டத்துக்கு நடப்பது எவ்வளவு முட்டாள்தனம்! ‘மனுஷனுக்கு அறிவைப் போதிக்கிறவராகிய’ யெகோவா தாம் வைத்திருக்கும் ஏற்பாட்டின் மூலமாக ஆலோசனை வழங்கும்போது நாம் ‘கேட்கிறதற்குத் தீவிரமாய்’ இருக்க வேண்டும்.—யாக்கோபு 1:19; சங்கீதம் 94:10.
புண்படுத்தப்படுகையில் அல்லது அநியாயமாக குறைகூறப்படுகையில் ஞானிகளும் மூடர்களும் எப்படி பிரதிபலிக்கிறார்கள்? சாலொமோன் இவ்வாறு பதிலளிக்கிறார்: “மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் [“அதே நாளில்,” NW] வெளிப்படும்; இலச்சையை மூடுகிறவனோ விவேகி.”—நீதிமொழிகள் 12:16.
ஏளனமாக அசட்டை செய்யப்பட்டால், மூடன் உடனே—“அதே நாளில்”—கோபப்படுவான். ஆனால் விவேகமானவரோ தன்னை கட்டுப்படுத்திக் கொள்வதற்காக கடவுளுடைய ஆவியின் உதவிகேட்டு ஜெபிப்பார். கடவுளுடைய வார்த்தையிலுள்ள புத்திமதியை நேரமெடுத்து தியானித்து, இயேசுவின் இந்த வார்த்தைகளை கவனமாக யோசித்து பார்க்கிறார்: “ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக்கொடு.” (மத்தேயு 5:39) விவேகமானவர், “ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்ய” விரும்பாதிருப்பதால் யோசனையின்றி பேசாமல் தன் உதடுகளை கட்டுப்படுத்துகிறார். (ரோமர் 12:17) இவ்வாறு நாம் கனவீனமாக நடத்தப்படும்போது அதை பெரிதுபடுத்தாமல் விட்டால் பிரச்சினை வளருவதை தவிர்ப்போம்.
‘காயமாற்றும் நாவு’
நீதி விசாரணை நடத்தும் சூழலில் உதடுகள் செய்யும் பாவம் பெருஞ்சேதத்தை ஏற்படுத்தலாம். இஸ்ரவேல் அரசர் சொல்கிறார்: “சத்தியவாசகன் நீதியை வெளிப்படுத்துவான்; பொய்ச்சாட்சிக்காரனோ வஞ்சகத்தை வெளிப்படுத்துவான்.” (நீதிமொழிகள் 12:17) சத்தியவாசகன் உண்மையைச் சொல்லுவான், ஏனென்றால் அவனுடைய சாட்சி உண்மையானது, நம்பகமானது. நீதியைச் செய்வதற்கு அவனுடைய சாட்சி உதவும். மறுபட்சத்தில், பொய்ச்சாட்சிக்காரனோ வஞ்சகம் நிறைந்தவனாய் நியாயத்தை திரித்துக்கூறுவதற்கே வழி செய்வான்.
“பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஔஷதம்” என்பதாக சாலொமோன் தொடர்ந்து சொல்கிறார். (நீதிமொழிகள் 12:18) வார்த்தைகள் பட்டயம் போல் குத்தி, நட்புறவுகளை அழித்து பிரச்சினைகளை கிளப்பிவிடலாம். அல்லது அவை இனிதானவையாக இன்பமூட்டுபவையாக இருந்து நட்புறவுகளை கட்டிக்காக்கலாம். இழிவுபடுத்தும் பெயர்களை வைத்து கூப்பிடுவது, கத்தி கூச்சலிடுவது, சதா குறைகூறுவது, தரக்குறைவாக பேசி புண்படுத்துவது ஆகியவை ஆழமான உணர்ச்சிப்பூர்வ காயங்களை ஏற்படுத்தும் குத்துகள் என்றுதானே சொல்ல வேண்டும்? இந்த விஷயத்தில் நாம் தவறவிட்டிருக்கும் அம்சங்களுக்காக காயமாற்றும் இதமான வார்த்தைகளால் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டு நிலைமையை சரிசெய்வது எவ்வளவு இனிதாக இருக்கும்!
நாம் வாழ்ந்துவரும் இந்த கடினமான காலங்களில், அநேகர் ‘நொறுங்குண்ட இருதயத்தோடும் நருங்குண்ட ஆவியோடும்’ இருக்கிறார்கள்; இதில் ஆச்சரியமேதுமில்லை. (சங்கீதம் 34:18) ‘திடனற்றவர்களைத் தேற்றி, பலவீனரைத் தாங்கும்போது’ நாம் சொல்லும் வார்த்தைகளுக்கு இருக்கும் குணப்படுத்தும் சக்தியை செயல்படுத்துகிறோம் அல்லவா? (1 தெசலோனிக்கேயர் 5:14) கெடுதல் விளைவிக்கும் சகாக்களின் அழுத்தத்துடன் போராடிக்கொண்டிருக்கும் டீனேஜர்களுக்கு நிச்சயமாக இந்த வார்த்தைகள் ஆறுதலாக இருக்கும். வயதானவர்களிடம் கொஞ்சம் யோசித்து பேசும்போது, அவர்களும் தேவையானவர்கள், அன்பிற்குரியவர்கள் என்ற உறுதியை அவர்களுக்கு அளிக்கலாம். நோயுற்றிருப்பவர்களிடம் தயவாக நாலு வார்த்தை பேசினால், அவர்கள் பொழுதை நிச்சயமாகவே இதமானதாக்கலாம். சீர்திருந்துவதற்கான ஆலோசனையைக்கூட ‘சாந்தமுள்ள ஆவியுடன்’ கொடுத்தால், அதைக் கேட்பவர் சுலபமாக ஏற்றுக்கொள்ளலாம். (கலாத்தியர் 6:1) செவிசாய்த்து கேட்பவர்களிடம் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை சொல்வதற்கு பயன்படுத்தும் நாவு எந்தளவுக்கு காயமாற்றும் தன்மை உடையது!
‘என்றும் நிலைக்கும் உதடு’
‘உதட்டையும்’ ‘நாவையும்’ இணையாக பயன்படுத்தி சாலொமோன் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய் நாவோ ஒரு நிமிஷமாத்திரம் இருக்கும்.” (நீதிமொழிகள் 12:19) எபிரெய மொழியில் “சத்திய உதடு” என்ற சொற்றொடர் ஒருமையில் உள்ளது; உண்மை பேசுவது என்று மட்டும் அதற்கு அர்த்தமல்ல; அதைவிட ஆழமான அர்த்தம் உண்டு. நிலையானது, நம்பகமானது போன்ற மற்ற பண்புகளையும் அது உள்ளடக்குகிறது என ஒரு புத்தகம் குறிப்பிடுகிறது. “இந்த பண்பை உடைய பேச்சு நித்தியத்திற்கும் நிலைத்திருக்கும், . . . ஏனென்றால் அது நம்பகமானதாக இருக்கும்; ஆனால் பொய் நாவோ . . . ஒரு நிமிடம் ஏமாற்றினாலும் சோதித்து பார்க்கையில் வெற்றி பெறாது” என்பதாகவும் அந்த புத்தகம் சொல்கிறது.
“தீங்கைப் பிணைக்கிறவர்களின் இருதயத்தில் இருக்கிறது கபடம்; சமாதானம் பண்ணுகிற ஆலோசனைக்காரருக்கு உள்ளது சந்தோஷம்” என்கிறார் ஞானமுள்ள அந்த அரசர். அவர் தொடர்ந்து சொல்கிறார்: “நீதிமானுக்கு ஒரு கேடும் வராது; துன்மார்க்கரோ தீமையினால் நிறையப்படுவார்கள்.”—நீதிமொழிகள் 12:20, 21.
தீங்கைப் பிணைக்கிறவர்கள் வேதனையையும் துயரத்தையுமே ஏற்படுத்த முடியும். மறுபட்சத்தில், சமாதானம் பண்ணுகிற ஆலோசனைக்காரர் சரியானதைச் செய்வதன்மூலம் மனநிறைவை அடைகிறார்கள். நல்ல பலன்களைக் கண்டடையும் சந்தோஷமும் அவர்களுக்கு கிடைக்கிறது. அதிமுக்கியமாக, கடவுளுடைய அங்கீகாரத்தையும் அனுபவிக்கின்றனர்; ஏனென்றால், “பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம்.”—நீதிமொழிகள் 12:22.
‘அறிவை அடக்கிவைக்கும் பேச்சு’
தான் பயன்படுத்தும் வார்த்தைகளைக் குறித்து கவனமாக இருப்பவருக்கும் அலட்சியமாக இருப்பவருக்கும் வேறொரு வித்தியாசத்தை இஸ்ரவேல் அரசர் இவ்வாறு விளக்குகிறார்: “விவேகமுள்ள மனுஷன் அறிவை அடக்கிவைக்கிறான்; மூடருடைய இருதயமோ மதியீனத்தைப் பிரசித்தப்படுத்தும்.”—நீதிமொழிகள் 12:23.
விவேகமுள்ள அல்லது புத்திக்கூர்மையுள்ள ஒருவருக்கு எப்போது பேச வேண்டும் எப்போது பேசக் கூடாது என்பது தெரியும். தான் அறிந்திருப்பவற்றைக் குறித்து தம்பட்டம் அடிக்காமல் தன்னைக் கட்டுப்படுத்தி வைப்பதன்மூலம் அறிவை அடக்குகிறார். அப்படியானால் எப்போதுமே தன் அறிவை மறைத்து வைக்கிறார் என்பதை இது அர்த்தப்படுத்தாது. ஆனால் அதை வெளிக்காட்டுவதில் அவர் விவேகமாக இருக்கிறார். மாறாக, மூடன் உடனுக்குடன் பேசுகிறான்; அவ்வாறு தன் மதியீனத்தை வெளிப்படுத்துகிறான். ஆகவே நாம் அதிக வார்த்தைகளை கொட்டிவிடாமல், பெருமையடித்துக் கொள்வதைக் கட்டுப்படுத்துவோமாக.
தொடர்ந்து இப்படி வேறுபடுத்திக் காட்டி வருகையில், ஊக்கமான உழைப்பையும் சோம்பேறித்தனத்தையும் பற்றி சாலொமோன் ஒரு முக்கிய குறிப்பை எடுத்துரைக்கிறார். அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “ஊக்கமுடையோரின் கை ஆட்சி செய்யும்; சோம்பேறிகளோ அடிமை வேலை செய்வர்.” (நீதிமொழிகள் 12:24, பொது மொழிபெயர்ப்பு) முன்னேறுவதற்கும் சொந்தக்காலில் நிற்பதற்கும் கடின உழைப்பு உதவும்; சோம்பேறித்தனமோ கட்டாய உழைப்புக்கும் அடிமைத்தனத்துக்கும் வழிநடத்தும். “காலப்போக்கில், சோம்பேறியோ உழைப்பாளிக்கு அடிமையாவான்” என்கிறார் ஓர் அறிஞர்.
‘மகிழ்விக்கும் நல்வார்த்தை’
அரசனாகிய சாலொமோன் மீண்டும் பேச்சைப் பற்றிய விஷயத்துக்கே வருகிறார். மனித இயல்பைப் பற்றிய அக்கறையூட்டும் ஒரு குறிப்பை சொல்கிறார். “மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்.”—நீதிமொழிகள் 12:25.
இதயத்தை கவலையால் பாரமடையச் செய்யும் வருத்தங்களும் வேதனைகளும் ஏராளம், ஏராளம். புரிந்துகொள்ளும் ஒருவரிடமிருந்து வரும் இதமான நல்வார்த்தையே பாரத்தை இலகுவாக்கி இதயத்தை மகிழ்ச்சியாக்குவதற்குத் தேவை. ஆனால் நம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி அவற்றைப் பற்றி நாம் பேசாவிட்டால், நம் இதயத்தில் புதைந்திருக்கும் துயரத்தின் ஆழத்தை மற்றவர்கள் எப்படி தெரிந்துகொள்வார்கள்? ஆம், நாம் வேதனையையோ மனச்சோர்வையோ அனுபவிக்கையில், நம்மை அவர் நிலையில் வைத்து புரிந்து உதவும் ஒருவரை நம்பி கவலையை பகிர்ந்துகொள்வது அவசியம். மேலும், உணர்ச்சிகளை வார்த்தைகளில் வடிப்பது இருதயத்தின் துயரத்தை ஓரளவுக்கு குறைக்கும். ஆகவே, மணத்துணைவரிடமோ பெற்றோரிடமோ ஆவிக்குரிய முதிர்ச்சியுள்ள கரிசனைகாட்டும் நண்பரிடமோ மனம்விட்டுப் பேசுவது நல்லது.
பைபிளில் உள்ளதைவிட மிகச் சிறந்த உற்சாகமளிக்கும் வார்த்தைகளை வேறு எங்கே காண முடியும்? கடவுளுடைய வார்த்தையை போற்றுதலோடு தியானிப்பதன் மூலம் நாம் அவரிடம் நெருங்கி வர வேண்டும். அவ்வாறு ஆழ்ந்து சிந்திக்கும்போது சோர்வுற்ற இதயத்திற்கு சந்தோஷமும் ஒளியிழந்த கண்களுக்கு வெளிச்சமும் கண்டிப்பாக கிடைக்கும். இதை ஆதரிப்பவராய் சங்கீதக்காரர் சொல்கிறார்: “கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது.”—சங்கீதம் 19:7, 8.
பயன்தரும் பாதை
நீதிமானின் வழியையும் துன்மார்க்கனின் வழியையும் வேறுபடுத்தி காட்டி அந்த இஸ்ரவேல் அரசன் இப்படி சொல்கிறார்: “நீதிமான் தன் சொந்த மேய்ச்சல் நிலத்தைக் குறித்து கவனமாய் இருக்கிறான்; துன்மார்க்கருடைய வழியோ அவர்களை அலைந்து திரிய வைக்கும்.” (நீதிமொழிகள் 12:26, NW) நீதிமான் தன் சொந்த மேய்ச்சல் நிலத்தைக் குறித்து, அதாவது தான் தெரிந்துகொள்ளும் கூட்டாளிகளையும் நண்பர்களையும் குறித்து கவனமாய் இருக்கிறான். அவர்களை ஞானமாக தேர்ந்தெடுக்கிறான்; ஆபத்தான கூட்டாளிகளை தவிர்க்க முயலுகிறான். துன்மார்க்கரைப் பொருத்தவரை அப்படியல்ல; அவர்கள் ஆலோசனையை மறுத்து தங்கள் இஷ்டப்படி செயல்படுகிறார்கள். மோசம்போக்கப்பட்டவர்களாய் அவர்கள் அலைந்து திரிகிறார்கள்.
அடுத்ததாக, சோம்பேறிக்கும் ஊக்கமாய் உழைப்பவருக்கும் உள்ள வித்தியாசத்தை வேறொரு கோணத்திலிருந்து நோக்குகிறார் சாலொமோன் ராஜா. “சோம்பேறி தான் வேட்டையாடிப் பிடித்ததைச் சமைப்பதில்லை; ஜாக்கிரதையுள்ளவனுடைய [“ஊக்கமாக உழைப்பவனின்,” NW] பொருளோ அருமையானது.” (நீதிமொழிகள் 12:27) சொல்லப்போனால், சோம்பேறி, தான் தொடங்கின காரியத்தை முடிப்பதில்லை. மறுபட்சத்தில், ஊக்கமாக உழைப்பவருக்கே பொருட்செல்வங்கள் வந்து குவியும்.
சோம்பேறித்தனம் அந்தளவுக்கு கேடு விளைவிப்பதால், அப்போஸ்தலனாகிய பவுல் தெசலோனிக்கேயாவிலிருந்த உடன் கிறிஸ்தவர்களுக்கு சோம்பேறித்தனத்தை பற்றி எழுதுவதை அவசியமாகக் கண்டார். அங்கு சிலர் ‘ஒழுங்கற்று நடந்தார்கள்’; அதாவது, வேலையே செய்யாமல் தங்களுக்கு சம்பந்தமில்லாத காரியங்களில் தலையிட்டுக் கொண்டிருந்தார்கள். இப்படிப்பட்டவர்கள் மற்றவர்களுக்கு அதிக செலவு வைத்தார்கள், பாரமாகவும் இருந்தார்கள். ஆகவே பவுல் வெளிப்படையாக அவர்களுக்கு புத்திமதி அளித்தார்; “அமைதலோடே வேலைசெய்து, தங்கள் சொந்தச் சாப்பாட்டைச் சாப்பிடவேண்டுமென்று” அறிவுறுத்தினார். இந்த உறுதியான அறிவுரைக்கு அவர்கள் செவிகொடுக்காவிட்டால், சபையிலுள்ள மற்றவர்கள் அவர்களை “விட்டு விலக வேண்டுமென்று” அறிவுரை கூறினார்; அநேகமாக சமூக காரியங்களில் அவர்களுடன் கூட்டுறவு கொள்ளாமல் தவிர்க்கும்படியே பவுல் சொல்லியிருக்க வேண்டும்.—2 தெசலோனிக்கேயர் 3:6-12.
கடின உழைப்பைக் குறித்து சாலொமோன் வழங்கிய அறிவுரையை மட்டுமல்லாமல், நாவை சரியாக பயன்படுத்துவது பற்றி அவர் கொடுத்த அறிவுரையையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். உதடுகளின் பாவத்தை தவிர்த்து நேர்மையான வழியில் நடப்பதன் மூலம் காயத்தை ஆற்றுவதற்காகவும் மகிழ்விப்பதற்காகவும் இந்த சிறிய உறுப்பை பயன்படுத்த முயலுவோமாக. “நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை” என சாலொமோன் நமக்கு உறுதி அளிக்கிறார்.—நீதிமொழிகள் 12:28.
[பக்கம் 27-ன் படங்கள்]
“ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன்”
[பக்கம் 28-ன் படங்கள்]
“ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஔஷதம்”
[பக்கம் 29-ன் படம்]
நம்பகமான நண்பரிடம் மனம்விட்டுப் பேசுவது ஆறுதல் அளிக்கலாம்
[பக்கம் 30-ன் படம்]
கடவுளுடைய வார்த்தையை போற்றுதலுடன் தியானிப்பது இருதயத்தை மகிழ்விக்கும்