கர்த்தருடைய இராப் போஜனம் உங்களுக்கு மாபெரும் முக்கியத்துவமுடையது
கர்த்தருடைய இராப் போஜனம் உங்களுக்கு முக்கியத்துவமும் அழியாத அர்த்தமும் நிறைந்த ஒன்றாக இருக்கிறதா? இதைக் கண்டுபிடிக்க, இயேசு கிறிஸ்துவே இந்த விசேஷ நிகழ்ச்சிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதை நாம் முதலில் பார்க்கலாம்.
பொ.ச. 33, நிசான் 14-ஆம் தேதி மாலையில், வருடா வருடம் ஆசரிக்கப்படும் பஸ்காவுக்காக எருசலேமில் ஒரு மேலறையில் இயேசு தமது 12 அப்போஸ்தலர்களுடன் கூடிவந்தார். பஸ்கா போஜனத்தை அவர்கள் சாப்பிட்டு முடித்தவுடன், இயேசுவைக் காட்டிக் கொடுப்பதற்காக நம்பிக்கை துரோகி யூதாஸ் அந்த அறையைவிட்டு வெளியேறினான். (யோவான் 13:21, 26-30) மீதமுள்ள 11 அப்போஸ்தலர்களுக்கு, ‘கர்த்தருடைய இராப் போஜனத்தை’ இயேசு அறிமுகம் செய்துவைத்தார். (1 கொரிந்தியர் 11:20, 21) “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்று இயேசு தம்மைப் பின்பற்றுகிறவர்களுக்குக் கட்டளையிட்டபடியால், இது நினைவு நாள் என்றும் அழைக்கப்படுகிறது. கிறிஸ்தவர்கள் நினைவுகூரும்படி கட்டளையிடப்பட்ட நிகழ்ச்சி இது மட்டுமே.—1 கொரிந்தியர் 11:24.
நினைவு நாள் என்பது “நினைவில் நிறுத்திக்கொள்வதற்கு” அல்லது “நினைவில் பசுமையாக வைத்திருப்பதற்கு” உதவும் ஒன்று என வெப்ஸ்டர்ஸ் அகராதி கூறுகிறது. முக்கியத்துவமுள்ள யாரோ ஒருவரை அல்லது ஏதோ ஒன்றை நினைவுபடுத்திக்கொள்ள நினைவுச் சின்னம் ஒன்று எழுப்பப்படுகிறது அல்லது ஒரு நாள் ஒதுக்கி வைக்கப்படுகிறது. இயேசுவோ நினைவுகூரத்தக்க ஒரு போஜனத்தை ஆரம்பித்து வைத்தார்; இது, ஞாபகப்படுத்திப் பார்க்க உதவும் ஒரு போஜனமாக இருக்கும், அந்த மிக முக்கியமான நாளில் நடந்த கருத்தாழமிக்க சம்பவங்களை சீஷர்கள் நினைவுகூருவதற்கு உதவியாகவும் இருக்கும். இந்த நினைவு நாள் போஜனம், இயேசு அன்றிரவு செய்த கருத்தாழமிக்க காரியங்களை எதிர்கால தலைமுறையினருக்கும் நினைவூட்டும். விசேஷமாக அவர் பயன்படுத்திய அடையாளச் சின்னங்களைப் பற்றி நினைவுபடுத்தும். என்ன அடையாளச் சின்னங்களை இயேசு பயன்படுத்தினார், அவற்றின் அர்த்தம் என்ன? பொ.ச. 33-ல் அன்றிரவு நடந்த சம்பவங்களைப் பற்றிய பைபிள் பதிவை நாம் ஆராய்ந்து பார்க்கலாம்.
பரிசுத்த அடையாள அர்த்தங்கள்
“அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது [“சரீரத்தைக் குறிக்கிறது,” NW]; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.”—லூக்கா 22:19.
இயேசு அப்பத்தை எடுத்து, ‘இது என்னுடைய சரீரத்தைக் குறிக்கிறது’ என்று சொன்னபோது, புளிப்பில்லாத அப்பம் “உலகத்தின் ஜீவனுக்காக” அவர் கொடுத்த பாவமில்லாத சரீரத்துக்கு அடையாளமாக இருப்பதைக் குறிப்பிட்டார். (யோவான் 6:51) சில பைபிள் மொழிபெயர்ப்புகள், ‘இது என்னுடைய சரீரமாக இருக்கிறது [கிரேக்கில், எஸ்டின்]’ என்று குறிப்பிட்டாலும், பெரும்பாலும் இந்த வினைச்சொல்லுக்கு, “குறிக்கிறது, அடையாளப்படுத்துகிறது, பொருள்படுகிறது” என்றே அர்த்தம் என தேயரின் புதிய ஏற்பாட்டு கிரேக்க-ஆங்கில லெக்ஸிக்கன் கூறுகிறது. பிரதிநிதித்துவம் செய்கிறது அல்லது அடையாளமாய் இருக்கிறது என்ற அர்த்தத்தையே இது கொடுக்கிறது.—மத்தேயு 26:26, NW அடிக்குறிப்பு.
திராட்சரசத்தைப் பொறுத்ததிலும் இதுவே உண்மை. இயேசு இவ்வாறு சொன்னார்: “இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தைக் குறிக்கும் புதிய உடன்படிக்கையாயிருக்கிறது.”—லூக்கா 22:20, NW.
மத்தேயுவின் பதிவில் இயேசு திராட்சரசத்தைக் குறித்து இவ்வாறு கூறினார்: “இது பாவமன்னிப்பு உண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற ‘உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தத்தைக்’ குறிக்கிறது.” (மத்தேயு 26:28, NW) இயேசு பாத்திரத்திலுள்ள திராட்சரசத்தை தமது சொந்த இரத்தத்துக்கு அடையாளமாக அல்லது சின்னமாக பயன்படுத்தினார். சிந்தப்படவிருந்த அவருடைய இரத்தமே, ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்ட சீஷர்களுக்கு “புது உடன்படிக்கை”யின் ஆதாரமாக இருக்கவிருந்தது. இவர்களே பரலோகத்தில் அவரோடுகூட ராஜாக்களாகவும் ஆசாரியர்களாகவும் இருந்து ஆளுகை செய்யவிருந்தார்கள்.—எரேமியா 31:31-33; யோவான் 14:2, 3; 2 கொரிந்தியர் 5:5; வெளிப்படுத்துதல் 1:5, 6; 5:9, 10; 20:4, 6.
இயேசுவின் இரத்தமே ‘பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு’ ஆதாரத்தை அளிக்கும் என்பதை பாத்திரத்திலுள்ள திராட்சரசம் நினைப்பூட்டுகிறது; இவ்வாறு அந்த சின்னத்தில் பங்கெடுப்பவர்கள் கிறிஸ்துவின் உடன் சுதந்தரவாளிகளாக பரலோக வாழ்க்கைக்கு அழைக்கப்படுவதற்காக வழியை திறந்து வைக்கும். பரலோக அழைப்பைப் பெற்ற குறிப்பிட்ட எண்ணிக்கையினர் மாத்திரமே நினைவு ஆசரிப்பின்போது அப்பத்திலும் திராட்சரசத்திலும் பங்கெடுக்கிறார்கள்.—லூக்கா 12:32; எபேசியர் 1:13, 14; எபிரெயர் 9:22; 1 பேதுரு 1:3, 4.
ஆனால் புதிய உடன்படிக்கையின் பாகமாக இல்லாத, இயேசுவைப் பின்பற்றும் மற்றவர்களைப் பற்றி என்ன? இவர்கள் கர்த்தருடைய ‘வேறே ஆடுகள்.’ இவர்கள் கிறிஸ்துவோடு பரலோகத்தில் ஆட்சி செய்வதை அல்ல, ஆனால் பரதீஸ் பூமியில் நித்திய ஜீவனை அனுபவித்து மகிழுவதை எதிர்நோக்கி இருக்கிறார்கள். (யோவான் 10:16; லூக்கா 23:43; வெளிப்படுத்துதல் 21:3, 4) இவர்கள் ‘இரவும் பகலும் [தேவனுக்குப்] பரிசுத்த சேவை’ செய்யும் ‘திரள் கூட்டமான’ உண்மையுள்ள கிறிஸ்தவர்கள். எனவே இவர்கள் கர்த்தருடைய இராப் போஜனத்தில் பார்வையாளர்களாக இருப்பதற்கு நன்றியுள்ளவர்களாக இருக்கின்றனர். இவர்கள் சொல்லிலும் செயலிலும் இவ்வாறு அறிவிக்கிறார்கள்: “இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக.”—வெளிப்படுத்துதல் 7:9, 10, 14, 15; NW.
எவ்வளவு அடிக்கடி?
“என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்.”—லூக்கா 22:19.
கிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூரும் பொருட்டு நினைவு ஆசரிப்பை எவ்வளவு அடிக்கடி அனுசரிக்க வேண்டும்? இயேசு இதை திட்டவட்டமாக சொல்லவில்லை. ஆனால் இஸ்ரவேலர் வருடந்தோறும் நிசான் 14-ஆம் தேதி பஸ்காவை கொண்டாடி வந்த மாலைப்பொழுதில் கர்த்தருடைய இராப் போஜனத்தை இயேசு தொடங்கி வைத்தபடியால், நினைவு ஆசரிப்பும் அதேவிதமாகவே அனுசரிக்கப்படுவது அவருடைய எண்ணமாக இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவாக உள்ளது. எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து பெற்ற விடுதலையை வருடத்துக்கு ஒருமுறை இஸ்ரவேலர் கொண்டாடினார்கள்; கிறிஸ்தவர்களோ பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் அடைந்திருக்கும் விடுதலையை வருடத்துக்கு ஒரு முறை நினைவுகூருகிறார்கள்.—யாத்திராகமம் 12:11, 17; ரோமர் 5:20, 21.
முக்கியமான ஒரு நிகழ்ச்சியை வருடத்துக்கு ஒரு முறை நினைவுகூரும் வழக்கம் புதிதல்ல. உதாரணமாக, ஒரு தம்பதி திருமண நாளை நினைவுகூருவதை அல்லது ஒரு தேசம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளை நினைவுகூருவதை எடுத்துக்கொள்ளுங்கள். பொதுவாக வருடத்துக்கு ஒரு முறை, அந்த சம்பவம் நடைபெற்ற நாளில் அது நினைவுகூரப்படுகிறது. கிறிஸ்துவுக்குப்பின் பல நூற்றாண்டுகளுக்கு, தங்களை கிறிஸ்தவர்களென சொல்லிக் கொண்டவர்கள் குவார்டோடெஸிமன்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இதன் அர்த்தம் “பதினாலாம் தேதியினர்.” இவர்கள் இயேசுவின் மரணத்தை வருடத்துக்கு ஒரு முறை நிசான் 14-ஆம் தேதி நினைவுகூர்ந்ததால் இவ்வாறு அழைக்கப்பட்டார்கள்.
எளிமையானது ஆனால் மிக முக்கியமானது
கர்த்தருடைய இராப் போஜனத்தை ஆசரிப்பது ‘கர்த்தருடைய மரணத்தை தெரிவிக்க’ இயேசுவின் சீஷர்களுக்கு உதவும் என்று அப்போஸ்தலன் பவுல் விளக்கினார். (1 கொரிந்தியர் 11:26) ஆகவே இந்த ஆசரிப்பு, கடவுளுடைய நோக்கம் நிறைவேறுவதில் இயேசு தமது மரணத்தின் மூலம் வகித்த அதிமுக்கியமான பங்கின் மீது கவனத்தை ஒருமுகப்படுத்தும்.
இயேசு கிறிஸ்து மரணம் வரை உண்மையுடன் நிலைத்திருப்பதன் மூலம் யெகோவா தேவன் ஞானமும் அன்புமுள்ள கடவுள், நீதியுள்ள ஒரு பேரரசர் என்பதற்கு நிரூபணம் அளித்தார். சாத்தான் கூறியதற்கு நேர் எதிர்மாறாகவும், ஆதாமைப் போல் இல்லாமலும், மட்டுக்குமீறிய அழுத்தத்தின்கீழும் கடவுளுக்கு மனிதர்கள் உண்மையுடன் நிலைத்திருக்க முடியும் என்பதை இயேசு நிரூபித்துக் காட்டினார்.—யோபு 2:4, 5.
கர்த்தருடைய இராப் போஜனம் இயேசுவின் சுய தியாக அன்பை நன்றியோடு எண்ணிப் பார்க்க வாய்ப்பளிக்கிறது. கடுமையான சோதனைகள் மத்தியிலும் இயேசு தமது தந்தைக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தார். இதன் மூலம், ஆதாமின் பாவத்திற்குச் செலுத்த வேண்டிய பெரும் விலையை ஈடுசெய்ய தமது பரிபூரண மனித உயிரை அவரால் அளிக்க முடிந்தது. “அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்க” வந்ததாக இயேசுவே கூறினார். (மத்தேயு 20:28) இதன் காரணமாக, இயேசுவில் விசுவாசம் வைக்கும் அனைவரும் தங்கள் பாவங்களுக்கு மன்னிப்பை பெற முடியும்; மனிதகுலத்திற்காக யெகோவா கொண்டிருந்த ஆதி நோக்கத்துக்கு இசைவாக நித்திய ஜீவனையும் பெற்றுக்கொள்ள முடியும்.—ரோமர் 5:6, 8, 12, 18, 19; 6:23; 1 தீமோத்தேயு 2:5, 6.a
மனிதவர்க்கத்தின் இரட்சிப்புக்கு ஏற்பாடு செய்வதன் மூலம் யெகோவா காட்டிய அளவுகடந்த நற்குணத்தையும் தகுதியற்ற தயவையும் இவை அனைத்தும் சிறப்பித்துக் காட்டுகின்றன. பைபிள் இவ்வாறு சொல்கிறது: “தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதார பலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.”—1 யோவான் 4:9, 10.
ஆம், இந்த நினைவு ஆசரிப்பு எப்பேர்ப்பட்ட மகத்தான ஓர் ஆசரிப்பு! உலகெங்கிலும் எந்த சூழ்நிலையிலும் ஆசரிப்பதற்கு ஏற்ப அது எளிமையாகவும் நடைமுறையாகவும் இருக்கிறது. அதேசமயத்தில், நீண்ட காலத்துக்கு ஆழமான அர்த்தமுள்ள நினைப்பூட்டுதலாக நிலைத்திருப்பதற்கு ஏற்ற விதத்தில் அடையாள அர்த்தமுள்ளதாகவும் இருக்கிறது.
உங்களுக்கு எதை அர்த்தப்படுத்துகிறது?
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தியாக மரணம், அவருக்கும் அவருடைய தந்தையாகிய யெகோவாவுக்கும் மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தியது. இயேசு ஒரு பரிபூரண மனிதராக இருந்ததால், நம் எல்லாரையும் போல அவர் மரணத்தை சுதந்தரிக்கவில்லை. (ரோமர் 5:12; எபிரெயர் 7:26) சாவையே ருசி பாராமல் என்றும் வாழ அவருக்கு உரிமை இருந்தது. அவருடைய அனுமதியில்லாமல், பலவந்தமாகக்கூட யாராலும் அவருடைய உயிரை பறிக்க முடிந்திருக்காது. “ஒருவனும் அதை [என் ஜீவனை] என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ள மாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன்” என்று சொன்னார்.—யோவான் 10:18.
ஆனாலும், தமது பரிபூரண மனித உயிரை இயேசுவே முன்வந்து அளித்தார். எதற்காக? “மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரண பயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலை பண்ணும்படிக்கும் அப்படியானார்.” (எபிரெயர் 2:14, 15) எப்படிப்பட்ட மரணத்தை ருசிபார்க்க கிறிஸ்து முன்வந்தார் என்பதை எண்ணிப் பார்க்கையில், அது அவருடைய சுய தியாக அன்புக்கு மேலுமான அத்தாட்சி அளிக்கிறது. எப்படியெல்லாம் வேதனைப்பட்டு மரிக்கப் போகிறார் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார்.—மத்தேயு 17:22; 20:17-19.
நமது பரலோக தந்தை யெகோவாவுடைய அன்பின் மிகப் பெரிய வெளிக்காட்டைப் பற்றியும் நினைவு நாள் நமக்கு நினைப்பூட்டுகிறது. ‘மிகுந்த இரக்கமும் உருக்கமுமுள்ள’ அவருக்கு, கெத்செமனே தோட்டத்தில் இயேசு ‘பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும்’ ஜெபிப்பதைக் கேட்டதும் பார்த்ததும் எவ்வளவு வேதனை அளித்திருக்கும்! அதோடு, இயேசு சாட்டையால் மூர்க்கமாக அடிக்கப்பட்டு, கழுமரத்தில் கொடூரமாக அறையப்பட்டு, அணு அணுவாக செத்து மடிந்ததை பார்த்து எந்தளவுக்கு துடிதுடித்திருப்பார்! (யாக்கோபு 5:11; எபிரெயர் 5:7; யோவான் 3:16; 1 யோவான் 4:7, 8) பல நூற்றாண்டுகளுக்குப்பின் இன்று அதை நினைத்தாலும் பலரது நெஞ்சம் கசிகிறது.
பாவிகளாகிய நமக்காக யெகோவா தேவனும் இயேசு கிறிஸ்துவும் இத்தனை பெரிய விலையைக் கொடுத்திருப்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள்! (ரோமர் 3:23) நமக்கு பாவ இயல்பும் அபூரணங்களும் நிஜமாகவே இருப்பதை ஒவ்வொரு நாளும் வேதனையோடு உணருகிறோம். ஆனால், இயேசுவின் மீட்கும் பலியில் விசுவாசம் வைப்பதன் மூலம் நாம் மன்னிப்புக்காக கடவுளிடம் மன்றாட முடியும். (1 யோவான் 2:1, 2) இதனால் நம்மால் கடவுளிடம் தடையில்லாமல் தாராளமாக பேசவும் சுத்தமான மனசாட்சியோடு இருக்கவும் முடியும். (எபிரெயர் 4:14-16; 9:13, 14) அதற்கும் மேலாக, நித்திய காலமாய் பரதீஸிய பூமியில் வாழும் நம்பிக்கையையும் பெற முடியும். (யோவான் 17:3; வெளிப்படுத்துதல் 21:3, 4) இவையும் இன்னும் அநேக ஆசீர்வாதங்களும் இயேசுவின் மிகப் பெரிய சுய தியாக செயலின் பலனாக கிடைப்பவை.
கர்த்தருடைய இராப் போஜனத்திற்குப் போற்றுதலைக் காட்டுதல்
கர்த்தருடைய இராப் போஜனம் “மிகவும் விசேஷித்த கிருபை”யின் மகத்தான வெளிப்பாடு என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இயேசுவின் சுய தியாக அன்பினால் சாத்தியமான, யெகோவா தேவன் செய்த கிருபாதார பலி ஏற்பாடு உண்மையிலேயே ‘சொல்லி முடியாத ஈவாகும்.’ (2 கொரிந்தியர் 9:14, 15) இயேசு கிறிஸ்துவின் மூலம் காண்பிக்கப்பட்ட கடவுளுடைய நற்குணத்தின் இந்த வெளிப்பாடுகள், ஆழ்ந்த போற்றுதலையும் நன்றியுணர்வையும் உங்களில் தூண்டிவிடுகின்றன அல்லவா?
அவ்வாறு தூண்டிவிடுகின்றன என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். ஆகவே, இயேசுவின் மரண நினைவு ஆசரிப்புக்கு யெகோவாவின் சாட்சிகளோடு கூடிவரும்படி உங்களை அன்போடு அழைக்கிறோம். இந்த வருடம் ஏப்ரல் 16-ஆம் தேதி, புதன்கிழமை, சூரிய மறைவுக்குப் பின் இது ஆசரிக்கப்படும். இந்த மிக முக்கியமான நிகழ்ச்சி நடைபெறும் இடத்தையும் சரியான நேரத்தையும் தெரிவிக்க உங்கள் ஏரியாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் தயாராக இருக்கிறார்கள்.
[அடிக்குறிப்பு]
a மீட்கும் பொருளைப் பற்றிய கூடுதலான விளக்கத்துக்கு யெகோவாவின் சாட்சிகள் பிரசுரித்துள்ள நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்தை தயவுசெய்து காண்க.
[பக்கம் 6-ன் பெட்டி/படங்கள்]
“என்னுடைய சரீரமாயிருக்கிறது” அல்லது “என்னுடைய சரீரத்தைக் குறிக்கிறது”—இதில் எது சரி?
இயேசு ‘நானே வாசல்’ என்றும் ‘நான் மெய்யான திராட்சச்செடி’ என்றும் சொன்னபோது யாருமே அவரை சொல்லர்த்தமான வாசலாக அல்லது சொல்லர்த்தமான திராட்சச்செடியாக நினைக்கவில்லை. (யோவான் 10:7; 15:1) அதே விதமாகவே, தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பு பைபிள் ‘இந்தப் பாத்திரம் புதிய உடன்படிக்கையாய் இருக்கிறது’ என்று இயேசு சொன்னதாக மேற்கோள் காட்டுகையில், அந்தப் பாத்திரமே சொல்லர்த்தமாக புதிய உடன்படிக்கை என்ற முடிவுக்கு நாம் வருவதில்லை. அது போலவே அப்பம் தம்முடைய சரீரமாய் ‘இருக்கிறது’ என்று அவர் சொன்னபோது, அப்பம் அவருடைய சரீரத்தைக் குறித்தது அல்லது அடையாளப்படுத்தியது என்பது தெள்ளத் தெளிவாக உள்ளது. எனவேதான் சார்லஸ் பி. வில்லியம்ஸ் மொழிபெயர்ப்பு இவ்வாறு கூறுகிறது: “இது என்னுடைய சரீரத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறது.”—லூக்கா 22:19, 20.
[பக்கம் 5-ன் படம்]
புளிப்பில்லாத அப்பமும் திராட்சரசமும் இயேசுவின் பாவமில்லாத சரீரத்துக்கும் அவர் சிந்திய இரத்தத்துக்கும் பொருத்தமான அடையாளங்களே
[பக்கம் 7-ன் படம்]
நினைவு ஆசரிப்பு யெகோவா தேவனும் இயேசு கிறிஸ்துவும் காண்பித்த மாபெரும் அன்பின் நினைப்பூட்டுதல்