இளைஞர்களே—ஆன்மீகத்தில் முன்னேறி வருகிறீர்களா?
“நான் சபை கூட்டங்களுக்குப் போய்க் கொண்டிருந்தாலும், யெகோவாவை சேவிக்க வேண்டும் என்ற பலமான ஆசை எதுவும் எனக்கு இருக்கவில்லை” என உயர்நிலைப் பள்ளியில் படித்த நாட்களை பின்னோக்கிப் பார்க்கும் ஹிடியோ சொல்கிறான். “சக மாணவர்கள் மத்தியில் ஹீரோவாக இருப்பதையும், என் காதலியோடு பெருமையாக தெருவில் வலம் வருவதையுமே நான் கற்பனை செய்து கொண்டிருந்தேன். எனக்கு திட்டவட்டமான இலக்குகள் எதுவும் இருக்கவில்லை, ஆன்மீகத்தில் முன்னேற வேண்டும் என்ற எண்ணமும் துளிகூட இருக்கவில்லை.” ஹிடியோவைப் போலவே, இளைஞர்கள் பலர் எந்தக் குறிக்கோளும் இல்லாமல், பயனுள்ள இலக்குகளை எட்டுவதிலோ முன்னேற்றம் செய்வதிலோ எந்த ஆர்வமும் இல்லாமல் காலத்தை ஓட்டலாம்.
நீங்கள் ஓர் இளைஞரா? அப்படியானால் ஏதோ ஒரு விளையாட்டில் அல்லது விருப்ப வேலையில் ஈடுபட்டிருக்கும்போது உற்சாகம் கரைபுரண்டோடலாம். ஆனால் ஆன்மீக நடவடிக்கைகள் என்று வரும்போதோ அதே உற்சாகம் உங்களுக்கு ஒருவேளை இருக்காது. ஆன்மீக இலக்குகள் என்றதும் உங்கள் மனதில் உற்சாக வெள்ளம் பெருக்கெடுப்பது சாத்தியமா? சங்கீதக்காரனின் இந்த வார்த்தைகளை கவனியுங்கள்: “கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. . . . கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது.” (சங்கீதம் 19:7, 8) கடவுளுடைய வார்த்தை ‘பேதையாக இருப்பவனை’ ஞானமாக செயல்பட வைத்து, அவனுடைய ‘கண்கள் பிரகாசிக்கும்படி’ செய்யலாம். ஆம், ஆன்மீக காரியங்களால் நீங்கள் பரவசமும் பூரிப்பும் அடையலாம். ஆனால் அதற்கு உங்களுக்கு என்ன தேவை? நீங்கள் முதலில் என்ன செய்ய வேண்டும்?
கடவுளை சேவிக்க தூண்டப்படுங்கள்
முதலாவது உங்களுக்குத் தூண்டுதல் தேவை. யூதாவின் இளம் அரசனாகிய யோசியாவை எடுத்துக்கொள்ளுங்கள். கர்த்தருடைய நியாயப்பிரமாணப் புஸ்தகம் ஆலயத்தில் கண்டெடுக்கப்பட்ட போது, யோசியா அதை வாசித்துக் காட்டும்படி சொன்னார். அப்போது அவர் கேட்ட விஷயங்கள் அவருடைய இருதயத்தை ஆழமாகத் தொட்டன. அதன் விளைவாக, “யோசியா இஸ்ரவேல் புத்திரருடைய தேசங்கள் எங்கும் உண்டான அருவருப்புகளையெல்லாம் அகற்றி”னார். (2 நாளாகமம் 34:14-21, 33) கடவுளுடைய வார்த்தையை வாசித்தது மெய் வணக்கத்தை முன்னேற்றுவிக்க இன்னும் பலவற்றைச் செய்வதற்கு அவரைத் தூண்டியது.
நீங்களும் பைபிளை தவறாமல் வாசித்து, வாசிப்பவற்றை தியானித்தால் யெகோவாவை சேவிப்பதற்கான ஆசையை வளர்த்துக்கொள்ளலாம். ஹிடியோவுக்கு தூண்டுதலளித்ததும் அதுவே. யெகோவாவின் சாட்சிகளுடைய முழுநேர ஊழியரான ஒரு பயனியருடன் அவன் நெருக்கமாக பழக ஆரம்பித்தான். இவனைவிட அவர் வயதில் மூத்தவராக இருந்தார். அந்தப் பயனியர் பைபிளை ஊக்கமாக படித்தார், வாழ்க்கையில் அதன் போதனைகளைப் பின்பற்ற கடும் முயற்சி செய்தார். அந்தப் பயனியரின் முன்மாதிரியால் அதிக உற்சாகத்தைப் பெற்ற ஹிடியோ, அவரைப் போலவே செய்ய ஆரம்பித்தான். கடவுளுக்கும் மற்றவர்களுக்கும் ஊழியம் செய்ய பலமான ஆசையை வளர்த்துக்கொண்டான். அவனுடைய ஆன்மீக முன்னேற்றத்தால் அவன் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகியது.
தினந்தோறும் பைபிளை வாசிப்பது இளைஞருக்கு ஊக்கமளிக்கலாம். டாக்காஹிரோ இவ்வாறு விளக்குகிறார்: “படுத்த பிறகு, அன்று பைபிள் வாசிக்காதது நினைவுக்கு வந்தால், உடனடியாக படுக்கையைவிட்டு எழுந்து போய் அதை வாசித்துவிட்டு வந்து படுப்பேன். இதனால் யெகோவா என்னை வழிநடத்துவதை உணர்ந்தேன். தினந்தோறும் பைபிளை வாசிப்பது ஆன்மீகத்தில் முன்னேறுவதற்கு எனக்கு பெரும் உதவியாக இருந்தது. யெகோவாவின் சேவையில் அதிகளவு பங்கெடுக்க தீர்மானித்தேன். ஆகவே உயர்நிலை பள்ளிப் படிப்பை முடித்தவுடன் ஒழுங்கான பயனியராக சேவிக்க ஆரம்பித்தேன். நான் அதை மிகவும் அனுபவித்து மகிழ்கிறேன்.”
பைபிள் வாசிப்பதோடுகூட, யெகோவாவை துதிப்பதற்கு உங்களை ஊக்கப்படுத்தி பலப்படுத்த எது உங்களுக்கு உதவக்கூடும்? டோமோஹிரோவுக்கு அவனுடைய அம்மா பைபிள் சத்தியங்களைக் கற்றுக்கொடுத்தார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “எனக்கு 19 வயதாக இருக்கையில், வாழ்க்கைக்கு ஒரு நோக்கமுண்டு என்ற புத்தகத்தை முழுவதுமாக கவனமாய் படித்து முடித்தேன். அப்போதுதான், யெகோவாவின் அன்பும் இயேசுவின் கிரய பலியும் என் இருதயத்தை உண்மையில் தொட்டன. அந்த அன்பிற்கான நன்றியுணர்வே, அவருடைய சேவையில் அதிகத்தைச் செய்வதற்கு என்னை ஊக்கப்படுத்தியது.” (2 கொரிந்தியர் 5:14, 15) டோமோஹிரோவைப் போல, பைபிளை ஊக்கமாய் தனிப்பட்ட விதத்தில் படிப்பதன் மூலம் அநேக இளைஞர்கள் ஆன்மீக முன்னேற்றத்தை செய்வதற்கு தூண்டப்படுகிறார்கள்.
இதை எல்லாம் செய்தாலும், யெகோவாவை சேவிப்பதற்கான இருதயப்பூர்வமான ஆசை உங்களுக்கு இல்லாமல் இருந்தால் என்ன செய்ய வேண்டும்? நீங்கள் யாரிடமாவது உதவியை நாடிப் போகலாமா? அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “தேவனே . . . விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.” (பிலிப்பியர் 2:13) உதவி கேட்டு யெகோவாவிடம் நீங்கள் ஜெபம் செய்தால், அவர் தமது பரிசுத்த ஆவியை தாராளமாக உங்களுக்குத் தருவார், அப்பொழுது அது ‘செயல்படுவதற்கு’ மாத்திரமல்ல, ‘விருப்பம் கொள்ளவும்’ உங்களுக்கு சக்தியைக் கொடுக்கும். கடவுளுடைய பரிசுத்த ஆவி அவருடைய சேவையில் மிகச் சிறந்ததைச் செய்வதற்கு உங்களைத் தூண்டுவிக்கும், ஆன்மீகத்தில் முன்னேறுவதற்கும் உங்களுக்கு உதவி செய்யும் என்பதே அதன் அர்த்தம். எல்லா விதத்திலும், யெகோவாவின் வல்லமையில் நம்பிக்கை வைத்து உங்கள் இருதயத்தை பலப்படுத்துங்கள்!
தனிப்பட்ட இலக்குகளை வையுங்கள்
யெகோவாவை முழுமையாக சேவிப்பதற்கு நீங்கள் தீர்மானித்துவிட்டால், ஆன்மீகத்தில் முன்னேறுவதற்கு தனிப்பட்ட இலக்குகளை வைப்பது அவசியம். மானா என்ற ஓர் இளம் கிறிஸ்தவ பெண் இவ்வாறு சொன்னாள்: “இலக்குகளை வைத்தது எனக்கு ரொம்ப உதவியாக இருந்தது. பின்னோக்கிப் போவதற்கு பதிலாக என்னால் தைரியத்தோடு முன்னோக்கிச் செல்ல முடிந்தது. என்னுடைய இலக்குகளை மனதில் வைத்து உதவி கேட்டு யெகோவாவிடம் ஊக்கமாக ஜெபித்தபோது, கவனச் சிதறல்கள் இல்லாமல் என்னால் முன்னேற முடிந்தது.”
உங்கள் இலக்குகள் நடைமுறையானதாகவும் எட்ட முடிகிறதாகவும் இருப்பது அவசியம். ஒவ்வொரு நாளும் பைபிளில் ஒரு அதிகாரத்தை வாசிப்பது நியாயமான இலக்காக இருக்கலாம். ஏதாவது ஒரு விஷயத்தில் ஆராய்ச்சி செய்யவும் ஆரம்பிக்கலாம். ஆங்கிலத்தில், உவாட்ச் டவர் பப்ளிக்கேஷன்ஸ் இன்டெக்ஸ்-ல் “ஜெஹோவா” என்ற தலைப்பின்கீழ் “பண்புகளின் பெயர்கள்” என்ற உபதலைப்பில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள யெகோவாவின் பண்புகளை படித்துப் பார்க்கலாம். சுமார் 40 பண்புகளின் பெயர்களை அதில் காணலாம். நீங்கள் செய்யும் ஆராய்ச்சி யெகோவாவிடம் உங்களை நெருங்கி வரச் செய்து, அவருக்காக அதிகத்தைச் செய்வதற்கு ஊக்கப்படுத்தும். ஒவ்வொரு கிறிஸ்தவ கூட்டத்திலும் சபையார் பங்கெடுக்கும் கேள்வி-பதில் பகுதியில் ஒரு பதிலாவது சொல்வது, ஒவ்வொரு கூட்டத்திலும் ஒரு நபரையாவது நன்கு தெரிந்துகொள்வது, ஒவ்வொரு நாளும் யெகோவாவிடம் ஜெபம் செய்வது, நாள்தோறும் மற்றவர்களிடம் அவரைப் பற்றி பேசுவது போன்றவை அடைய முடிகிற மற்ற இலக்குகளாகும்.
தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் நீங்கள் இன்னும் சேரவில்லை என்றால் அது உங்களுக்கு ஒரு நல்ல இலக்கு. வெளி ஊழியத்தில் இன்னும் பங்கெடுக்கவில்லையா? அப்படியென்றால் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபி ஆவதற்காக நீங்கள் முயலலாம். யெகோவாவோடு உங்களுக்கிருக்கும் உறவைப் பற்றி கருத்தாய் சிந்தித்துப் பார்த்து உங்களையே அவருக்கு ஒப்புக்கொடுப்பது இயல்பாகவே உங்களது அடுத்த இலக்காக இருக்கும். முழுநேர ஊழியத்துக்காக முயற்சி செய்வதன் மூலம் பல இளைஞர்கள் தங்கள் ஒப்புக்கொடுத்தலுக்கு ஏற்ப வாழ முயலுகிறார்கள்.
உங்கள் வாழ்க்கையில் இலக்குகளை வைப்பது நல்லதுதான்; ஆனால் அதுவே போட்டியாக மாறிவிடாதிருக்க கவனமாய் இருங்கள். உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்காத வரை உங்கள் சாதனைகளைக் கண்டு பெரிதும் பூரித்துப் போவீர்கள்.—கலாத்தியர் 5:26; 6:4.
ஒருவேளை உங்களுக்கு அனுபவம் போதாது என்றும் நியாயமான இலக்குகளை வைப்பது கடினம் என்றும் உணரலாம். அப்படியென்றால் பைபிளின் இந்த புத்திமதியைப் பின்பற்றுங்கள்: ‘உன் செவியைச் சாய்த்து, ஞானிகளுடைய வார்த்தைகளைக் கேள்.’ (நீதிமொழிகள் 22:17) உங்கள் பெற்றோரிடம் அல்லது முதிர்ச்சியுள்ள மற்ற கிறிஸ்தவர்களிடம் உதவி கேளுங்கள். உண்மையில் பெற்றோரும் மற்றவர்களும் இந்த விஷயத்தில் நியாயமாக நடந்துகொண்டு, உற்சாகப்படுத்த வேண்டும். தங்களுக்காக மற்றவர்கள் இலக்குகளை வைத்து அவற்றை எட்டும்படி இளைஞர்கள் வற்புறுத்தப்பட்டால், அவர்கள் சந்தோஷத்தை இழந்துவிடுவார்கள், இலக்குகளை வைத்து எட்டும் எண்ணத்தையே விட்டுவிடுவார்கள். இதுதான் ஒரு பெண்ணுக்கு சம்பவித்தது. அவள் இவ்வாறு சொன்னாள்: “தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சேருவது, வெளி ஊழியத்தில் பங்குகொள்வது, முழுக்காட்டப்படுவது, பயனியராவது என்று ஒன்றன் பின் ஒன்றாக என் பெற்றோர் அநேக இலக்குகளை என் முன் வைத்தார்கள். அந்த ஒவ்வொரு இலக்கையும் அடைவதற்கு நான் படாதபாடு பட்டேன். ஒரு இலக்கை அடைந்தவுடன் என் பெற்றோரின் பாராட்டு எனக்குக் கிடைக்கவில்லை, ஆனால் அடுத்த இலக்கு என்னவென்று சொன்னார்கள். இதனால் இலக்குகளை அடைய வற்புறுத்தப்படுவதாக உணர்ந்தேன். சோர்வுற்றேன், சாதனை உணர்வு எனக்கு திருப்தி தரவில்லை.” என்ன தவறு நடந்துவிட்டது? எல்லா இலக்குகளுமே நல்ல இலக்குகள்தான். ஆனால் அவை அவளாகவே வைத்த இலக்குகள் அல்ல. ஆகவே வெற்றி பெறுவதற்கு முதலாவதாக உங்களுக்கு நீங்களே இலக்கை வைப்பதற்கு உங்களுக்குள்ளேயே தூண்டுதல் ஏற்பட வேண்டும்!
இயேசு கிறிஸ்துவைப் பற்றி எண்ணிப்பாருங்கள். அவர் பூமிக்கு வந்தபோது, அவருடைய தந்தை யெகோவா அவரிடம் என்ன எதிர்பார்த்தார் என்பதை அவர் அறிந்திருந்தார். யெகோவாவின் சித்தத்தை செய்வது இயேசுவுக்கு ஒரு இலக்காக மட்டும் இருக்கவில்லை, செய்து முடிக்க வேண்டிய முக்கிய பணியும்கூட. இயேசு தம் வேலையை எவ்வாறு கருதினார்? அவர் இவ்வாறு சொன்னார்: “நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.” (யோவான் 4:34) யெகோவாவின் சித்தத்தை இயேசு மகிழ்ச்சியோடு செய்தார், அவருடைய தந்தையின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப வாழ்ந்தார். அது இயேசுவுக்கு போஜனத்தைப் போல இருந்தது; தம்மிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட வேலையை செய்து முடிப்பதில் அவர் சந்தோஷத்தையும் திருப்தியையும் கண்டார். (எபிரெயர் 10:5-10) செய்யும்படி உங்களுடைய பெற்றோர் ஊக்குவிக்கும் காரியத்தை செய்வதற்கு சரியான தூண்டுதல் இருந்தால் நீங்களும்கூட சந்தோஷத்தை அனுபவிப்பீர்கள்.
நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாதே
மனதில் ஒரு இலக்கை நீங்கள் வைத்துவிட்டால், அதை அடைய கடினமாக முயலுங்கள். கலாத்தியர் 6:9 இவ்வாறு சொல்கிறது: “நன்மை செய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்ற காலத்தில் அறுப்போம்.” உங்களுடைய சொந்த பலத்தை அல்லது திறமையை மாத்திரம் நம்பியிருக்காதீர்கள். எப்படியும் சில தடங்கல்களை நீங்கள் சந்திக்க நேரிடும். சில சமயங்களில் தற்காலிகமாக தோல்வி உணர்வைக்கூட நீங்கள் அனுபவிக்கலாம். ஆனால் பைபிள் இவ்வாறு நமக்கு உறுதியளிக்கிறது: “உன் வழிகளிலெல்லாம் அவரை [கடவுளை] நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.” (நீதிமொழிகள் 3:6) உங்களுடைய ஆன்மீக இலக்குகளை அடைய நீங்கள் கடினமாக உழைக்கும்போது யெகோவா உங்களைத் தாங்குவார்.
ஆம், யெகோவாவை சேவிக்க வேண்டும் என்ற ஆசையை வளர்த்துக்கொண்டு, ஆன்மீக இலக்குகளை எட்டிப் பிடிக்கையில் ‘நீங்கள் முன்னேறுவதை யாவருக்கும் விளங்கப்பண்ணுவீர்கள்.’ (1 தீமோத்தேயு 4:15) அப்போது நீங்கள் கடவுளுக்கு சேவை செய்யும் நோக்கமுள்ள ஒரு வாழ்க்கையை அனுபவிப்பீர்கள்.
[பக்கம் 9-ன் படம்]
பைபிளை வாசிப்பதும் வாசித்தவற்றை தியானிப்பதும் யெகோவாவை சேவிக்கும்படி உங்களைத் தூண்டும்
[பக்கம் 10-ன் படம்]
இயேசு தமது தந்தை எதிர்பார்த்தபடியே வாழ்ந்து காட்டினார்